உண்டாட்டுப் படலம்

உண்டாட்டுப் படலம்

bookmark

பாலகாண்டம்

பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

உண்டாட்டுப் படலம்

(தசரதனது சேனை மதுவினை உண்டு மகிழ்ந்தாடுகிற நிகழ்ச்சிகள் கூறும் பகுதி இது. நிலா எழுந்ததால் அதன் ஒளி எங்கும் பரவுகிறது. அத்தண்ணொளியில் காமனின் ஆட்சி விரவுகிறது. மகளிர் மதுவினைப் பருகிக் காமத்தழலுக்கு நெய் வார்க்கின்றனர். மது மயக்கம் பல மயக்கங்கட்குக் காரணம் ஆகிறது. ஊடலும் கூடலுமாக இரவு கோலாகலமாகக் கழிகிறது. திங்கள் மறைகிறான். காலைக் கதிரவன் எழுகிறான்.)

இசையின் வெள்ளம் இந்த உலகத்தில் பரவியது போலவும். காதலின் போது காதலர்களுக்கு இடையில் காமவேட்கை அவர்களது உள்ளம் முழுவது பரவியது போலவும். அழகிய நிலவின் குளிர் கற்றைகள் எங்கும் எழுந்து பரவிச் சிரித்தன. அந்த வெண்ணிலவின் ஒளிக் கிரணங்கள் பட்ட காரணத்தால் வெவ்வேறு நிறமுள்ள யமுனை, சரஸ்வதி போன்ற நதிகள் யாவும் கங்கையைப் போலவே வெண்ணிற நதிகளாயின. அது போல, மலைகள் எல்லாம் நிலவின் ஒளியால், இமயத்தைப் போலவே அந்த இரவில் வெண்ணிறமாகக் காணப்பட்டது. உவர் கடலும் கூட வெண்மை கொண்டு, அந்த இரவில் திருப்பாற் கடல் போலக் காணப்பட்டது. மொத்தத்தில், இந்த உலகமே அந்த இரவில் வெள்ளணியை அணிந்து கொண்டது போலக் காணப்பட்டது.

பெண்கள் முத்துப் பந்தல்களிலும், மேகம் தங்கும் சோலைகளிலும், பளிக் கறைகள் கொண்ட தோட்டங்களிலும், மலர்ப் பந்தல்களிலும் போய்த் தங்கினார்கள். அவ்விடங்களில் எல்லாம் படுத்த பெண்கள், தங்கள் கணவர்களுடன் கலவி கொள்ள நினைத்து, அந்த ஆசையையும் நிறைவேற்றிக் கொண்டார்கள். பின்பு மனம் குளிர அப்பெண்கள் மதுவைப் பருகினார்கள்.

அதில் ஒருத்தி கள்ளிருந்த கிண்ணத்தைப் பருக எடுத்தாள்.
அப்போது அவள் கையின் நிறமாகிய செந்நிறத்தை அது பெற்றது.
அவள் தன் வாயில் பருகிய போது மீண்டும் வெண்ணிறத்தைப் பெற்றது.
அதைப் பார்க்கையில் தேன் தான் அப்படி அமுதமாக மாறியதோ என்று நினைக்க வைத்தது.

கள்ளைப் பெண்கள் உண்டதும், ஓம குண்டத்தில் நெய்ச் சொரிந்ததும் கனல் கொழுந்து விட்டு எரிவது போல, அவர்களுக்கு காமவெறி தலைக்கு ஏறியது. உடல்கள் மீண்டும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் தவித்தன. தம் கண்கள், சுழல தனக்குரிய துணையை தேடினார்கள் அப்பெண்கள். துணை ஏதும் கிடைக்காத சில பெண்கள், மேலும் மது குடித்து அந்த உணர்ச்சிகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டதாக நினைத்துக் கொண்டார்கள். மது மயக்கத்தில் ஒருத்தி "மதுக் கிண்ணத்தில் தோன்றிய தனது நிழலை வேறொருத்தி என்று நினைத்து," "தோழி! நீயும் என்னுடன் கள் குடித்து இன்பங் கொள்ள வா!" என்று அழைத்தாள்.

இன்னொருத்தி தன் முகம் அந்த மதுக்கோப்பையில் தோன்ற, வேறொருத்தி தான் பருகப் போகும் கள்ளைப் பருகப் போவதாக எண்ணி, "பித்துப் பிடித்தவளே! நீ என்ன காரியம் செய்தாய்? இதோ சாடியிலே நிறைய கள்ளிருக்கிறதே. அதை எடுத்துக் குடிக்காமல் என்னுடைய எச்சில் பட்ட கள்ளைப் பருகுகின்றாயே!" என்று கூறி, மதுக்கிண்ணத்தைப் பார்த்து அவள் முல்லைப் பற்கள் தெரியச் சிரித்தாள்.

இன்னொருத்தி மதுக் கிண்ணத்தில் இருந்த மது தீர்ந்து போனது தெரியாமல். வெகுநேரம், அதில் கள் இருப்பதாக நினைத்துக் கொண்டு பருக முயற்சி செய்து கொண்டு இருந்தாள். பிறகு அது வெற்றுக் கிண்ணம் என்பதை அறிந்து அவள் நாணினாள். கள் உண்ட மயக்கத்தில் இருந்த இன்னொருத்தி கள்ளுள்ள சாடியில் தனது கண்களின் நிழலைப் பார்த்து வண்டென்று கருதி விரட்டினாள். இன்னொருத்தி மலர்பந்தலின் வழியாகக் கீழே வந்து விழுகின்ற நிலவின் ஒளியினைக், கள் என நினைத்து பருகத் துடித்தாள்.

இன்னும் ஒருத்தி கள்ளுண்ட மயக்கத்தில் சாடியில் உள்ள கள்ளினுள் சந்திரனின் பிரதி பிம்பத்தைக் கண்டாள். அந்த பிம்பத்தை நிஜ சந்திரன் என நினைத்துக் கொண்டு "ஏ, சந்திரனே, நீ என்ன கேதுவுக்கு பயந்து இங்கு வந்தாயோ?. கவலைப் படாதே, எந்த கிரகணமும் உன்னைப் பீடிக்காமல் நான் உனக்கு அபயம் அளிக்கிறேன்" என்றாள். இன்னொருத்தி கள் உண்ட மயக்கத்தில் கண்கள் சிவக்க, பேச்சு தடுமாறப் புருவம் வளைய, நெற்றியில் வியர்வை பெருகக் காணப்பட்டாள். இன்னொருத்தி, தன்னுடைய கணவனின் சிறப்புப் பெயர்களை எல்லாம் தான் கற்றபடியே சொல்லுங் கிளியை மனமகிழ்ந்து தழுவிக் கொண்டாள்.

இரு மனைவிகளைக் கொண்ட ஒருவன் மது மயக்கத்தில் இராண்டாவது மனைவியின் பெயரைச் சொல்லி முதல் மனைவியை அழைக்க, அவனுடைய முதல் மனைவி கணவன் மீதும், அவனுடைய இரண்டாம் தாரத்தின் மீதும் கோபம் கொண்டாள். கோபம் கொண்ட அவளால் ஒன்று சாதிக்க முடியாததால், அழுது கொண்டே அவ்விடம் விட்டுப் புறப்பட நினைத்தால் அப்போது, படுத்திருந்த கணவன் அவளைப் பிடித்து இழுக்க, அவளது கையில் அணிந்து இருந்த வளையல்கள் உடைந்து, அதில் உள்ள முத்துக்கள் சிதறின. அது கண்டு ஆத்திரம் அடைந்த அப்பெண், கணவனின் மார்பை தன் கால்கள் கொண்டு எட்டி உதைக்க முற்பட்ட போது, "எங்கே தன் மார்புப் பகுதியை மிதிப்பதாள். தன் மனைவியின் கால்கள் வலிக்குமோ என்று நினைத்து, அந்தக் கால்களை பிடித்துத் தடுத்தான் கணவன். அது கண்ட அவனது முதல் மனைவி, "உமது இதயத்தில் இருக்கும் இளையவள் மேல் உதைபடும்" என்று தானே என்னைத் தடுத்தீர்கள் என்று தனது கணவன் மீது மேலும் ஆத்திரப் பட்டாள். இவ்வாறு, பல தரப்பட்ட ஊடல்களுக்கு இடையில் மெல்லப் பொழுது விடியத் தொடங்கியது. கதிரவன் தனது ஒளிக் கிரணங்களை பூமி மீது மெல்லப் பரப்பினான். அந்நேரத்தில் மெல்ல சந்திரன் மறைந்தான்.