முதற்போர் புரி படலம்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
முதற்போர் புரி படலம்
(இலங்கையில் நடந்த முதல் போரைப் பற்றி இப்படலத்தில் சொல்லப்படுகிறது. முக்கிய அரக்க சேனாபதிகள் சாகவும். இராவணனே போருக்கு வருவதும், பின் இராமபிரானிடம் தோற்றுப் போய் தலைகுனிந்து போவதுமாக அனைத்தையும் கம்பன் அழகுற விவரித்து உள்ளான்)
இராவணனிடம், இராமபிரானின் தூதுவனாகச் சென்று வந்த அங்கதன் கூறிய செய்தியை அடுத்து, இனி போரைத் தவிர வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு வந்தார் இராமபிரான். உடனே இராமன் இதனை சுக்கிரீவனிடத்தில் கூற, வானர வீரர்கள் அனைவரும் மகிழ்ந்து போர் முரசுகளை அறைவித்தார்கள்.
அப்போது ஸ்ரீ இராமர் வானர வீரர்களிடம்," முன்பு மலைகளைப் பெயர்த்து சேது கட்டிய வீரர்களே. இப்போது அதே மலைகளை எறிந்து அரக்கர்களை விருப்பம் போலக் கொன்று குவியுங்கள். நீங்கள் அழிப்பது அரக்கர்களை அல்ல, அதர்மத்தை அதனால் தீரத்துடன் போர் புரியுங்கள்" என்றார்.
உடனே வானர வீரர்கள் முதலில் விரைந்து சென்று மலைகளையும், மரங்களையும் கொண்டு வந்து இலங்கையை அது வரையில் காத்து, அரணாக நின்ற அந்தக் கடல் போன்ற பெரிய அகழியில் இட்டார்கள். அதனால், அந்த அகழியில் வாழ்ந்து வந்த முதலைகள் போன்ற மற்றவர்களின் உயிரைக் குடிக்கக் காத்து இருக்கும் கொடிய பிராணிகள் அனைத்தும், தனது உயிரை இப்போது பாதுகாத்துக் கொள்ள ஓடிப் போய் ஒளிந்து கொண்டன. அவ்வாறாக வானர வீரர்கள் முதல் கட்டமாக அந்த அகழியை முற்றிலும் தூர்த்தார்கள். அப்போது அந்த அகழியில் இருந்து வெளிவந்த வெள்ள நீர், இராமபிரானுக்குத் துணை செய்வது போல இலங்கையின் உட்புகுந்து ஊரை வளைத்துக் கொண்டது. அது கண்ட வானர வீரர்கள் இங்கும், அங்குமாகத் தாவிக் குதித்து மகிழ்ந்தார்கள்.
பிறகு அவ்வாறு அகழியைத் தூர்த்த வானரர்கள், அடுத்த கட்டமாக இலங்கையின் அந்த அகண்ட, பெரிய மதிலின் அருகே காவல் காத்து நின்ற அரக்கர்களை எல்லாம் அழித்து ஒழித்தார்கள். பிறகு, பெரும் எண்ணிக்கையிலான வானர வீரர்கள் ஒருவர் மேல், ஒருவராகத் தாவிப் பாய்ந்து மேருமலையைப் போல உயர்ந்துள்ள மதிலின் மேலேறி நின்றார்கள். அவ்வாறு நின்ற வானரர்களின் எண்ணிக்கை பல கோடி தாண்டும் . மேலும், அவ்வாறு வானரர்கள் ஏறி நின்றதால், அவர்களின் பாரத்தைத் தாங்க மாட்டது இலங்கை நகரத்து மதில், தானே தரையில் அழுந்தி விட்டது. அதனால் அந்த மதிலை இடிக்க வேண்டியது என்பது வானரர்களுக்கு இல்லாமல் போய் விட்டது. வானர வீரர்களின் துணிச்சல் மிக்கப் போர் கோலத்தைக் கண்ட அரக்கர்களும் போருக்குத் தயாரானார்கள். அப்போது அவர்கள் எடுத்து வந்த அரக்க கொடிகள், அகண்ட வானத்தையே மறைத்தன. அது தவிர,அரக்கர்களின் யானைப் படைகள் உட்பட நான்கு வகைப் படைகள் அணிவகுத்துச் செல்லும் போது கிளப்பிய புழுதிப் படலம் மேலே எழும்பி அந்த ஆகாயத்தையே தாக்கியது. பாய்கின்ற மதநீரைக் கொண்ட யானைகளின் இருபக்கங்களிலும் கட்டிய மணிகள் ' கணீர் கணீர்' என்று ஒலித்தன. ஆடும் தன்மையைக் கொண்டு அழகிய குதிரைகள் பூண்டிருந்த கிண்கிணி மாலைகளும் அதற்குத் தாளம் போடுவது போல கூடவே ஒலித்தன.
அப்போது போர் உக்கிரமாகத் தொடங்கியது!
வானர வீரர்கள் பெரும் உக்கிரத்துடன் அரக்கர்களைத் தாக்கினர். அப்போது அதனை உணர்ந்த அரக்க சேனைகள் " இந்தக் குரங்குக் கூட்டத்தை நாம் குறைவாக மதிப்பிட்டு விட்டோமே" என்று நினைத்து வருந்தினர். எனினும், இராவணன் மீது கொண்ட மரியாதை கலந்த பயத்தால் அவர்களும் தனது முழு பலத்தையும் யுத்தத்தில் காட்டினார்கள். அப்போது கொடிய அரக்கர் சேனை விடுத்த அம்புகள், யாவும் வானர வீரர்களின் உடலைத் தாக்கி அவர்கள் மேனி எங்கும் ரத்தம் பீரிட்டு வரச் செய்தது. அப்போது, வானரர்களும் பதிலுக்குப் பெரிய பெரிய பாறைகளையும், மரங்களையும் அரக்கர்கள் மீது தூக்கி எறிந்தார்கள். அந்தப் பெரிய பாறைகளும், மரங்களும் வெகு வேகமாக அரக்கர்களின் மீது வந்து மோதியதால், அரக்கர்கள் சிலர் தலை உடைந்து போனார்கள். சிலருக்கு வாயின் வழியாகவும், காதுகளின் வழியாகவும், மூக்கின் வழியாகவும் அவர்களது மூளைகள் வெளிப்பட்டன. எனினும், பதிலுக்கு அரக்கர்கள் தாக்கியதில் பல வானரர்கள் இறந்தனர்.
அதனால் இலங்கையே பிணங்களை சுமக்கும் மலை போலக் காட்சி அளித்தது, அது அவ்வாறு இருக்க போர் வீரர்களின் பிணங்களை உண்பதற்காகவே பல சாதிப் பறவைகளும் வந்து வானில் வட்டமிட்டுப் பறந்தன. அப்போது அப்பறவைகளின் கூட்டம் வானில் நெருங்கியதனால், அங்கே ஒரு பந்தல் போட்டது போல் இருந்தது. செவ்வானம் போன்ற இரத்தக் கடலிலே, இரவு போன்ற அரக்கர்களின் குறைபட்ட உடல்கள் எழுந்து அங்கும் இங்கும் நின்று ஆடலாயின. பார்க்கிறவர்களுக்கு அச்சத்தைத் தருகின்ற செந்நிறமுள்ள இரத்த வெள்ளத்திலே பறவைகள் மூழ்கி எழுந்து பறப்பதும், திரும்ப மூழ்குவதுமாக இருந்தன. அப்போது அவைகளின் அழகிய சிறகுகளில் படிந்த இரத்தத் துளிகள் சிந்த, அத்துளிகள் இலங்கை நகரத்து மாட மாளிகைகளின் மேலும், கூட கோபுரங்கள் மேலும், மதில்களின் மேலும் நாட்டிய பல வண்ணங் கொண்ட பெருங் கொடிகளின் மீது படிந்தன. அதனால் அக்கொடிகள் செந்நிறக் கொடிகளாக மாறி, தமது முந்தய நிறத்தை இழந்தன.
அது அவ்வாறு இருக்க, ஆரம்பத்தில் போரின் போக்கு வானர வீரர்களுக்கு சாதகமாக இருந்தாலும், போகப் போக அரக்கர்களின் கைகள் ஓங்கத் தொடங்கியது. அரக்கர்களின் தாக்குதாலை சமாளிக்க முடியாத வானர வீரர்கள். அவர்கள் விடுத்த அம்புகள் தூரத்த நான்கு திசைகளிலும் தறி கெட்டு ஓடத் தொடங்கினர். வானர வீரர்கள், வாலுடன் ஓடிய காட்சியைப் பார்த்த அரக்கர்கள் கைகொட்டிச் சிரித்தனர். அப்போது அரக்கத் தளபதிகள்," இந்தக் குரங்குக் கூட்டத்துக்கு இதுவெல்லாம் போதாது, அதனால் இக்கூட்டத்தை பின்னாலேயே துரத்திப் போய்க் கொல்லுங்கள்" என்று ஆணை பிறப்பித்தனர். அதனால், அரக்கப் படைகள் அனைத்தும் இலங்கையின் வாயில்களைக் கடந்து யுத்த களம் புகுந்தனர். அப்படைகளில் காணப்பட்ட யானைகளும், குதிரைகளும், தேர்களும் எண்ணில் அடங்காதது. அப்படி வெளிவந்த சதுரங்கச் சேனையால் எழுப்பப்பட்ட மிக்க தூளிகள், ஆதிசேஷனின் பாரத்தைக் குறைக்கும் படியாக வானத்தில் எழுந்து சூழ்ந்தன.
மறுபுறம், அரக்கர்களின் கொடிய போருக்கு ஈடு கொடுக்க முடியாமல் அஞ்சி நிலைகெட்டு ஓடிய வானரர்கள், போர் புரிய வேண்டும் என்ற விருப்பத்துடன் கர்வம் கொண்டு நின்று இருந்த சூரிய குமாரனான சுக்கிரீவனிடம் போய்ச் சேர்ந்தார்கள். தனது வீரர்கள் பயந்து ஓடி வந்த காட்சியைப் பார்த்த சுக்கிரீவன் கோபமும், வெட்கமும் ஒருங்கே கொண்டவனாக அருகில் இருந்த ஒரு பெரிய மரா மரத்தை வேருடன் பெயர்த்து அரக்கர்களை நோக்கிப் பாய்ந்து சென்று தாக்கினான். அப்போது அவன் கையில் இருந்த மராமரம் யுகாந்த காலத்து புயல் போல விர்விர் என்று சுற்றிச் சுழன்றது. அப்போது தளர்ந்து போன வானர வீரர்களும் சுக்கிரீவனுடன் சேர்ந்து கொண்டார்கள். அதே சமயம் அங்கே கொடிய அரக்கர்களும் போர் செய்வதற்காக வந்து சேர்ந்தார்கள். அதனால், மீண்டும் ஒரு பெரிய போர் மூண்டது.
வானரர்கள் வீசிய கற்களால் தாக்கப்பட்டு கணக்கற்ற அரக்கர்கள் உயிர் நீத்தார்கள். அரக்கர்கள் வில்லில் பூட்டி தொடுத்த அம்புகளால் கணக்கற்ற வானரர்கள் அழிந்தார்கள்! ஆயினும், வானரர்கள் தமது வலிமை முழுவதையும் ஒருங்கே சேர்த்து செய்த போரினால், அவர்களை விட அரக்கர்களே அதிகமாக இறந்து போனார்கள். அப்படி மாண்டு போன அரக்கர்களின் உயிர்கள் யாவும் தென்திசை முழுவதும் நெருங்கி நிறைந்தன. போர்க் களம் எங்கும் அதனால் பேய்கள் நடனமாடி களித்தன. அதற்குத் தகுந்தார் போல அரக்கர்களின் குறைபட்ட உடல்கள் பலவகையாக எழுந்து கூத்தாடுவனவாயின. மறுபுறம், இறந்த அரக்கர்களின் உடலில் இருந்து வழிந்து ஓடிய குருதி நதி வெள்ளம் போலக் கடலில் சென்று கலந்தது. அவ்வாறாக, எதிர்த்து வந்த அரக்கர் சேனை யாவும், வழிய போர் செய்த வானர சேனையின் முன் நிற்க மாட்டாமல் வலி ஒடுங்கிப் போயின.
தமது அரக்கர் சேனை வலி ஒடுங்கிப் போனதைக் கண்டான் கொடிய அரக்கனான வஜ்ஜிரமுஷ்டி. உடனே தனது தேரை வானரர் இருக்கும் திசை நோக்கி விரைவாகச் செலுத்தினான். அக்கணமே திவ்விய அஸ்த்திரங்களைக் கொண்டு வானர வீரர்களைத் தாக்கினான். அதனால், அணியக் கவசம் கூட இல்லாத வீரர்கள் பலர் மாண்டனர். அது கண்ட தேவர்களும் மிகுந்த வருத்தம் கொண்டார்கள். அப்போது தனது கண் முன்னாலேயே கொத்து, கொத்தாக இறந்து கொண்டு இருந்த வானர வீரர்களைக் கண்டான் சுக்கிரீவன். அந்தக் கணமே, கோபம் கொண்டு கண்களில் தீப்பொறி பறக்க வஜ்ஜிரமுஷ்டியின் தேரின் மீது ஏறினான். அப்படி ஏறியவன் சில கணங்கள் கூட தாமதிக்காமல் வஜ்ஜிரமுஷ்டியின் வில்லைப் பிடுங்கி உடைத்து எறிந்தான். அந்த ரதத்தை செலுத்திய தேரோட்டியையும் கொன்றான். அது கண்ட வஜ்ஜிரமுஷ்டி சுக்கிரீவனைத் தாக்க, சுக்கிரீவன் ஓங்கி அறைந்த ஓரே அடியில் சுருண்டு படுத்த வஜ்ஜிரமுஷ்டி மீண்டும் எழ வில்லை. ஆம்... வஜ்ஜிரமுஷ்டி சுக்கிரீவன் அடித்த அந்த ஒரு அடியில் உயிர் நீத்தான். அது கண்ட அரக்கர் சேனை அனைத்தும் புறமுதுகு காட்டி ஓடின. அது கண்ட வானர வீரர்கள் சுக்கிரீவனைத் தூக்கிக் கொண்டாடினார்கள்.
சுக்கிரீவனுடைய வெற்றி அவ்வாறு இருக்க, கிழக்கு வாயிலில் நடந்த போரைப் பார்ப்போம் -
இலங்கையில் உள்ள கிழக்கு வாயிலை கொடிய அரக்கர் சேனை வந்து சூழ்ந்தது. உடனே அங்கு ஏற்கனவே தயாராக இருந்த வானர சேனை அந்த அரக்கர் சேனையைத் தாக்கியது. அரக்கர்களும் வாள், சூலம், தோமரம், பிண்டிபாலம், அம்பு, வில் கதை போன்ற ஆயுதங்களால் வானர வீரர்களைத் தாக்கிக் கொன்றனர். அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களால் பற்பல வானரர்கள் தங்கள் கைகள், கால், வால் போன்ற உறுப்புக்களை இழந்தனர். பதிலுக்கு வானர வீரர்கள் பெரிய பாறைகளையும், மரங்களையும் கொண்டுத் தாக்கியதில் பற்பல அரக்கர்களும் அறுப்புண்டு போனார்கள். அவர்கள் கொண்டு வந்த பல கோடி ரதங்கள் கூட அழிந்தன. ஆனால், வானர வீரர்கள் பகைவரை கொல்லக், கொல்ல அசுர சேனைகள் வந்து கொண்டே இருந்தன. மேலும், அவர்கள் வலு கொண்டு தாக்கியதால் பலம் இழந்த வானார வீரர்கள் ரத்தக் காயங்கள் மேனியில் எங்கும் காணப்பட சிதறுண்டு ஓடினார்கள். அப்போது அரக்கர்கள் முன்னேறும் காட்சியையும், வானரர்கள் பின் வாங்கும் காட்சியையும் கண்டான் அக்கினி தேவனின் ரூபமான நீலன். அது கண்ட மாத்திரத்தில் வருத்தம் கொண்ட கோபத்தினால், அவன் முகம் சிவந்தது. கண்கள் தீப் பொறியைக் கக்கியது. அருகில் இருந்த பெரிய மரா மரத்தையே பெயர்த்து எடுத்தான், அதனையே ஆயுதமாகக் கொண்டு கடும் போர் புரிந்தான். அவன் தாக்கிய வீதம் அரக்கர்களை அச்சம் கொள்ளச் செய்தது. அதனால் அரக்கர்கள் பலர் அவன் கையால் அடிபட்டே இறந்தனர். அரக்கர்கள் மட்டும் அல்ல அவர்கள் கொண்டு வந்த பல கோடி குதிரைகளும், யானைகளும் கூட இறந்து அதனால் பெருகிய ரத்த வெள்ளம், நதி போலக் கடலில் சென்று கலந்தது. அப்போது பின் வாங்கிய வானரர்களும் நீலனின் வீரம் மிக்கச் செயலால், புத்துணர்வு பெற்று அரக்கர்களை தாக்கத் துவங்கினார்கள். அரக்கர்களால் வானர வீரர்களின் அத் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் அவ்விடம் விட்டு ஓடினார்கள். அப்போது, அதனைக் கண்ட அரக்க சேனாபதி கும்பானு மிக உக்கிரத்துடன் போர் முனைக்கு வந்து வானர வீரர்கள் மீது பல ஆயிரக்கணக்கான பாணங்களை ஏவினான். அந்த பாணங்களால் பல்லாயிரம் வானர வீரர்களின் உயிர் சில கணங்களில் உடலை விட்டுப் பிரிந்து சென்றது. எங்கும் வானர வீரர்களின் மரண ஓலம் கேட்டது. அப்போது அக்காட்சியைக் கண்டான் கரடிகளுக்குத் தலைவனும், ஜாம்பவானின் தோழனுமான இடும்பன். அப்போது அரக்கர்கள் வியக்கும் வண்ணம், அவர்களாலேயே தூக்க முடியாத ஒரு பெரிய மலையைப் பெயர்த்து எடுத்து கும்பானு மீது வீசினான். அதனால், கும்பானுவின் வில், தேர், தேர் பாகன் என அனைத்தும் அழிந்தது. நிராயுத பாணியான கும்பானு, இடும்பனுடம் துவந்த யுத்தம் செய்தான். கடைசியில் இடும்பன் அவனது தலையை கோபத்தில் பியித்து எறிந்து விட்டான். அதனால் கும்பானு துடி, துடித்து உயிர் இழந்தான். அதுகண்ட சுமாலியின் புதல்வனான பிரகத்தன் மிக்க கோபம் கொண்டு, கும்பானுவின் மரணத்திற்கு அப்போதே பழி வாங்க எண்ணிக் களம் இறங்கினான்.
மழை போன்று பல ஆயிரக்கணக்கான பாணங்களை வானரர்கள் மீது ஏவினான். அதனால், பயம் கொண்ட வானர வீரர்கள் " இந்த அரக்கன் இன்றே போரை முடித்து விடுவான் போல!" என்று நம்பிக்கை இழந்து கூறிய வண்ணம் அங்கும், இங்கும் ஓடினார்கள். அக்காட்சியைக் கண்டு அதனால், கோபம் கொண்ட நீலன் பெரும் மலைகளை பெயர்த்து பிரகத்தன் உடன் வந்த அரக்கர்கள் மீது வீசி எரிந்து அவர்களை அழித்தான். ஆனாலும், பிரகத்தனும் அதன் பின்னர் நீலன் தூக்கி எறிந்த குன்றுகளை தனது பாணம் கொண்டு பல கோடி கூறுகள் ஆக்கினான். பிறகு நீலன் மரங்களை பெயர்த்துத் தாக்குதல் நடத்தியதால் பிரகத்தன் தனது தேர், வில் என அனைத்தையும் இழந்தான். அவ்வாறு தனது படைக்கலங்களை இழந்த பிரகத்தன் நீலனுடன் தனது கைகளையே ஆயுதம் ஆக்கிக் கடும் போர் புரிந்தான். ஆனால், நீலன் அடித்த ஒவ்வொரு அடியும் அந்த அரக்கனின் மேனி எங்கும் இடி போல இறங்க. அந்த அரக்கன் இறுதியில் துடி, துடித்து இறந்தான்.
பிரகத்தன் இறந்த காட்சியைக் கண்ட வானர சேனைகள் துள்ளிக் குதிக்க. அது கண்ட அரக்கர் சேனைகள் அனைத்தும் பயந்து இலங்கைக்கே புற முதுகு காட்டி ஓடினர்.
அதேபோல் தெற்கு வாயிலிலே நின்று இருந்த அங்கதனையும் வானர வீரர்களையும் அழிக்கப் புறப்பட்டு வந்த அரக்கர்களும் சுபாரிசனும், அவர்களோடு மிகுந்த உக்கிரத்துடன் போரிட்டார்கள். ஆனால், இறுதியில் அங்கதனுக்கும் அவனது வீரர்களுக்கும் வெற்றியைத் தந்து விட்டு இறந்து போனார்கள்.
அப்படியே மேற்கு வாயிலில் தங்களை எதிர்த்து வந்த துன்முகனையும் அவனது அரக்க சேனைகளையும், அனுமனும் வானர வீரர்களும் கொன்று வெற்றி வாகைச் சூடினார்கள்.
இலங்கை நகரத்தின் நான்கு வாயில்களிலும் காவலுக்கு நின்ற அரக்கர்கள் அனைவரும் இறந்து போனதைக் கண்டதும், அரக்க ஒற்றர்கள் விரைந்து சென்று அந்தச் செய்தியை இராவணன் இடத்திலே போய் கூறினார்கள். அது கேட்ட இராவணன், கோபத்தால் கண்கள் சிவந்து நிற்க "எனது வலிமை மிக்க படைத் தலைவர்களை போயும், போயும் வானரர்களா கொன்றார்கள்?" என்றான். அவனால், அரக்க ஒற்றர்கள் ஒற்று அறிந்து வந்த செய்தியை நம்பாமல் இருக்க முடியவில்லை. பிறகு ஒற்றனை நோக்கி," இப்போது பிழைத்து இருக்கும் அரக்கர்கள் தான் யார்? யார்?" என்றான். அது கேட்ட ஒற்றன்," மாவீரர் பிரகத்தன் உட்பட போனவர் ஒருவரும் பிழைக்கவில்லை" என்றான்.
அதனால் துன்பம் கொண்டு சிறிது நேரமே அப்படித் துன்பத்துடன் காணப்பட்ட இராவணன், இனி தானே போருக்கு செல்வதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என்ற முடிவுக்கு வந்தான். போர் கோலம் கொண்டான். தேவர்களிடம் இருந்து அபகரித்த இந்திரனின் ஆயிரம் குதிரைகள் பூட்டிய பெரிய தேரில் சிவன் கொடுத்த அஸ்த்திரங்களுடன் ஏறினான். உடன் அவனது நால்வகை பெரிய சேனையும் தொடர்ந்தது. அப்படிப் போனவன் தனது அந்தப் பரிவாரங்களுடன் முரசுகள் கொட்ட, அரக்கர்கள் ஆர்பரிக்க நேராக போர் களத்தை அடைந்தான். அப்போது, இராவணன் நின்ற தோரணையைக் கண்டு தேவர்களும் அச்சம் கொண்டனர்.
அவ்வாறு இராவணன் போர்களத்தை அடைந்தான் என்ற செய்தியை வானர வீரர்கள் சென்று ஸ்ரீ இராமருக்கு அறிவித்தார்கள். அந்தக் கணமே, தனது திவ்ய வில், மற்றும் தெய்வீக அஸ்த்திரங்களுடன் ஸ்ரீ இராமர் போர் கோலம் பூண்டார். அப்போது, போர் கோலம் பூண்ட அவரது அந்த திவ்விய ரூபம் ஊழிக் காலத்து சிவபெருமான் போலக் காணப்பட்டது. அப்போது போர் களத்தில் தனது வரவுக்காக ஏற்கனவே காத்துக் கொண்டு இருந்த லக்ஷ்மணன் அருகில் சென்று இராவணனை எதிர்க்கத் தயாராக நின்று கொண்டார்.
மீண்டும் ஒரு உக்கிரமான போர் தொடங்கியது!
இராவணன் போர் களத்துக்கு வந்ததால் புத்துணர்வு பெற்ற அரக்க வீரர்கள், இன்னும் அதிக வலிமையுடன் வானரர்களின் பெரும் சேனையைத் தாக்கினார்கள். அதனால், முன்பை விட அதிக பிணக் குவியல்களை அந்தப் போர்க்களம் கண்டது. அதனால் அப்போரைக் காண வந்த தேவர்களும் திசைகள் தெரியாது திகைத்து நின்றனர். வானரர்கள் கடுமையாகச் செய்த போரினால் அரக்கரது தலைகள் துண்டு பட்டன; குடல்கள் சிந்தின; தேர்க் கூட்டங்கள் அழிந்தன; அரக்கர்களின் எண்ணற்ற குதிரைகள் கூட இறந்தன; இரத்த வெள்ளம் எங்கும் பரவிற்று!
அப்போது அக்காட்சிகளைக் கண்டு போருக்கு ஆயத்தமான இராவணன் தனது வில்லில் நாணேற்றி பெரும் ஒலியை எழுப்பினான். அந்த ஒலி கேட்டு வானரர்கள் சிதறி எல்லா இடங்களிலும் நிலை கெட்டு ஓடினார்கள். அப்போது வானர வீரர்கள் பேரிடியைக் கேட்டு பதுங்கிய நாகங்கள் போல காணப்பட்டார்கள். இராவணனின் நாணொலி கேட்டே சில வானர வீரர்கள் மாண்டனர்; ஏன்?, அரக்கர்களே கூட இராவணனின் நாணொலியால் அச்சம் கொண்டனர். அரக்கர்களின் நிலையே அப்படி இருக்க, வானில் திரண்டு நின்ற தேவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?
அப்போது, அது கண்டு ஆத்திரம் அடைந்த சுக்கிரீவன் "இந்த இராவணனை நாம் விடக் கூடாது" என்று சிந்தித்த வண்ணம். ஏற்கனவே, முன்பு அவன் இராவணனை மகுட பங்கம் செய்த போது கிடைத்த வெற்றிக் களிப்பை மனதில் எண்ணியபடி அக்கொடிய அரக்கனுடன் போரில் குதித்தான். அப்போது, சுக்கிரீவன் இராவணனைத் தாக்க பெரிய மரம் ஒன்றை பூமி பிளக்கப் பெயர்த்து எடுத்து அவனது தேர் மீது வீசினான். ஆனால், அந்த மரம் இராவணனின் பாணங்களுக்கு முன்னாள் எம்மாத்திரம்? ஒரு அம்பினால் அப்பெரிய மரத்தை மிகவும் எளிதாகத் தகர்த்து எறிந்தான் இராவணன். பிறகு இராவணன் தனது இருபது கைகளால் விடுத்த இருபது வலிமையான பாணங்கள் சுக்கிரீவனின் வலிய மார்பில் தைத்தது. அதனால், உயிர் போகும் அவஸ்தையைப் பெற்றான் சுக்கிரீவன். அவனது கண்கள் கண்ணீரை சொரிந்தன. துடி துடித்துப் போனான். முன்பு இராவணன் ஜடாயுவின் சிறகுகளை அறுத்த போது, அந்த ஜடாயு அக்கணம் எவ்வாறு துடித்துப் போனானோ! அவ்வாரே இப்போது சுக்கிரீவன் துடித்து அலறினான். அதனைக் கண்ட அனுமான், சுக்கிரீவனை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்று தானே இராவணனுடன் போருக்கு ஆயத்தமானான். அது கண்டு நகைத்த இராவணன்," அனுமான் வா! வா! முன்பு இலங்கையை நீ தீக்கு இறையாக்கினாய் அல்லவா, நான் அதற்கு தகுந்த கைமாறை உனக்கு இப்போது இக்காலத்தில் செலுத்துகிறேன்" என்றான்.
அவ்வாறு இராவணன் கூறியதும் அனுமன் மிக்க உக்கிரத்துடன் மலைகளைப் பெயர்த்து இராவணன் மீது வீசினான். ஆனால், அம்மலைகளை இராவணன், அனுமனே கண்டு வியக்கும் படிப் பந்தாடினான். அதுபோல, இராவணன் தொடர்ச்சியாக விடுத்த உயிர் பறிக்கும் கொடிய இருபது பாணங்களை அனுமன் அலட்டிக் கொள்ளாமல் முறித்து எறிந்தான். அது கண்ட தேவர்கள் அனுமனின் வீரச் செயலைப் புகழ்ந்தனர். பிறகு அனுமன் மரங்களை வேறுடன் பிடுங்கி இராவணன் மீது எறிந்தான், அதில் இராவணனின் தேர் பாகன் இறந்தான்.
உடனே பதிலுக்கு இன்னொரு சாரதி இராவணனின் தேரில் ஏறிக் கொண்டு அவனுக்குத் துணை புரிந்தான். அப்போது, இராவணன் கொடிய நூறு பாணங்களை அனுமன் மீது ஏவ, அவை அனைத்தும் அனுமனின் மார்பை தொலைத்து காயத்தை ஏற்படுத்தியது. அதனால், அனுமனின் உடலில் இருந்து ஆறு போல இரத்தம் கொட்டியது. அது கண்ட இராவணன் மகிழ்ச்சி அடைந்தான். பிறகு வானரர்களை நோக்கி," கற்களையும், மரங்களையும், மலைகளையும் ஆயுதமாக்கி இழிந்த தோள்களைக் கொண்டு போராடும் வனத்தில் வாழும் அற்பக் குரங்குகளே! நான் இது வரையில் யுத்த களம் வராத காரணம் யாதெனில், தேவர்களுடனும், மும்மூர்த்திகளுடனும் போர் செய்து வெற்றி கொண்ட நான். போயும், போயும் அற்பக் குரங்குகளான உங்களுடனே போர் செய்ய வேண்டுமா? எனக் கருதினேன். மற்றபடி, நீங்கள் எனது வீரத்துக்கு முன்னாள் எம்மாத்திரம்?" என்றான். பிறகு ஆயிரக்கணக்கான பாணங்களை வானர சேனை மீது ஏவினான் இராவணன். அதனால், வானர சேனை முழுவதும் நிலை குலைந்து போனது.
அப்போது வானர வீரர்களின் துன்பத்தை எல்லாம் கண்ட லக்ஷ்மணன் தானே களத்தில் இறங்கினான். தனது வில்லில் நாணேற்றி பெரும் ஒலியை பதினான்கு உலகமும் நடுங்கும் படி கேட்கச் செய்தான். அது முன்பு இராவணன் எழுப்பிய நாணொலியை விட பயங்கரமாக இருந்தது. அப்போது, அசோக வனத்தில் இருந்த சீதை அந்த நாணின் ஒலியைக் கேட்டு ," இது, இளைய பெருமாள் லக்ஷ்மணனின் நாணொலி தான்" என்று திரிசடையிடம் கூறி சந்தோஷம் கொண்டாள்.
மறுபுறம் யுத்த களத்துக்கு வீரத்துடன் வந்த லக்ஷ்மணன் இராவணனிடம்," பிராட்டியைக் காத்துக் கொண்டிருந்த என்னுடைய பெருங்காவலின் வலிமையைக் கடந்து சென்ற வஞ்சகனே! இன்று நீ என்னிடம் இருந்து தப்பிப் போவது என்பது முடியாது!" என்று கூறி, தீ உமிழும் அம்புகளை அவன் மேல் எய்தான். லக்ஷ்மணன் பிரயோகித்த அந்தக் கொடிய பாணங்களை இராவணன் தனது வலிய பாணங்கள் கொண்டு மிக எளிதாகத் தடுத்தான். அவ்வாறு லக்ஷ்மணன் பிரயோகித்த பல பாணங்களை இராவணன் அழித்தும் ஒழித்தான். அது கண்டு லக்ஷ்மணனே செய்வதறியாது சற்றே திகைத்தான். அக்கணம், இராவணன் பிரமனிடம் பெற்ற மிகவும் வலிமை கொண்ட உயிர் குடிக்கும் வல்ல, திவ்ய பாணம் ஒன்றை லக்ஷ்மணன் மீது ஏவினான். அது அவனது மார்பை வேகமாகச் சென்று தாக்கியது. அக்கணமே, இளைய பெருமாளான லக்ஷ்மணன் மயங்கிக் கீழே விழுந்தான். அது கண்ட இராவணனும் மற்ற அரக்க வீரர்களும் கூத்தாடினார்கள். ஆனால், மறுபுறம் வானர வீரர்களோ," இளைய பெருமாளாலேயே, இராவணனை மேற்கொள்ள முடியாவிட்டால் நாம் எம்மாத்திரம்?" என்று கூறி அலறிய படி ஓடி ஒளிந்தனர்.
அக்கணம் "இந்த லக்ஷ்மணனை நாம் தூக்கிச் சென்றால், இராமனும் தானாக வந்து நம்மிடம் சிறைபடுவான்" என்று சிந்தித்த இராவணன் லக்ஷ்மணன் அருகில் சென்றான். அவனைத் தூக்க முயற்சி செய்தான். ஆனால், பெரிய மலைகளை எல்லாம் பந்து போல உருட்டி விளையாடிய இராவணனால் லக்ஷ்மணனை தூக்க அல்ல, அசைக்கக் கூட முடியவில்லை! அப்போது இராவணன்," இவ்வளவு கணம் கொண்டவனா லக்ஷ்மணன்? ஒரு வேளை, எல்லோரும் சொல்வதைப் போல, உண்மையில் இவன் ஆதிசேஷனின் அவதாரம் தானோ?" என்று தனக்குள் கூறிக் கொண்டான்.
அக்கணம் முன்பு இராவணனின் வலிய பாணம் பட்டதால் சோர்வு அடைந்த அனுமான். இப்போது சோர்வு நீங்கி, மீண்டும் தனது பழைய வலிமையைப் பெற்றான். பின்பு அனுமான் லக்ஷ்மணனை, இராவணன் தூக்க முயற்சி செய்து கொண்டு இருப்பதைக் கண்டான். அக்கணமே, பாய்ந்து சென்று இராவணனை ஒரு தள்ளு, தள்ளிவிட்டு இளையபெருமாலான லக்ஷ்மணனை தோளில் சுமந்து கொண்டு, அவ்விடம் விட்டு அனுமான் பறந்தான், அந்தக் காட்சியைக் கண்ட இராவணன், " இந்த அனுமான், நம்மை விட பலசாலியா? நம்மால் லக்ஷ்மணனை அசைக்கக் கூட முடியவில்லையே!. ஆனால், இவனோ இறகு போல ஆயாசமாக லக்ஷ்மணனை சுமந்து சென்று விட்டானே! சீ ... வெட்கம்!" என்று சொல்லி தன்னையே அவன் நொந்து கொண்டான்.
மறுபுறம் லக்ஷ்மணனை சுமந்து சென்ற அனுமான், நேராக இராமர் இருக்கும் இடத்தை அடைந்தான். ஸ்ரீ இராமரிடம் நடந்த விஷயத்தைக் கூறினான். ஒரு கணம் லக்ஷ்மணனுக்கு என்ன நேர்ந்ததோ? என்று துடித்துப் போனார் இராமபிரான், பிறகு தனது கைகளால் லக்ஷ்மணனை தொட அவன் மெதுவாக இராமனின் தாமரை போன்ற ஸ்பரிசங்கள் பட்டுக் கண் விழித்தான். அதனால், இராமபிரான் ஒரு கணம் போன உயிர் தனக்குத் திரும்பக் கிடைத்தது போல ஒரு ஆனந்த உணர்வைக் பெற்றார். ஒரு புறம் ஸ்ரீ இராமர் லக்ஷ்மணனை தேற்றிக் கொண்டு இருக்க, மீண்டும் அனுமான் இராவணனை எதிர்க்கக் கிளம்பினான்.
அவ்வாறு யுத்த களம் சென்ற அனுமான், வானத்தில் இருந்து இன்னொரு மேரு மலை இறங்குவது போல, இராவணன் முன் வந்து தோன்றினான். அக்கணம் இராவணனுக்கு அறைகூவல் விடுத்து மீண்டும் துவந்த யுத்தம் செய்ய அழைத்தான். இவ்வளவு துன்பத்தை அடைந்தும், பார்த்தும் கூட தன்னை எதிர்க்க வந்து முன்னால் நிற்கும் அனுமனின் நெஞ்சு உறுதியை இராவணனால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அப்போது அனுமனிடம் இராவணன்," பெரும் பலம் கொண்ட பெருமை பெற்ற மாவீரனே, தனியாக என் முன்னாள் நிற்கின்ற நீ, எந்தவொரு ஆயுதத்தையும் எடுத்து வரவில்லை. இருந்தாலும், எனது அரக்கர் சேனையை அன்றும், இன்றும் அழித்தாய். அதனால், எனக்குக் கோபத்தை உண்டாக்கினாய்.இப்போது கூட உன்னை ஆயுதங்களால் தாக்கி வலு இழக்கச் செய்தேன் இருந்தும் என்னை மீண்டும் நீ துவந்த யுத்தத்திற்கு அழைக்கிறாய். என்னை என்ன சாதரணமானவன் என்று நீ நினைத்து விட்டாயோ? எனது ஒரு குத்தை நீ தாங்குவாயா?" என்றான்.
அது கேட்ட அனுமான் மிகவும் உக்கிரம் கொண்டு," நீ என்னைக் குத்துவது இருக்கட்டும், இப்போது நான் உன்னை குத்துவதைப் பார்" என்று கூறி இராவணனின் தேரில் ஏறிக் கொண்டு அவனது மார்பில் தனது பலம் எல்லாவற்றையும் திரட்டி ஓங்கி ஒரு குத்து குத்தினான். அதனால், இராவணன் ஒரு கணம் கலங்கி நின்றான். ஆனால், அது சில கணங்கள் தான். அதன் பின், சூதாரித்துக் கொண்ட இராவணன், இப்போது அனுமனை தனது வரம் பெற்ற இருபது கைகள் கொண்டு ஓங்கி ஒரு குத்து குத்தினான். அக்கணம், அனுமன் நிலை தடுமாறி இராவணனின் தேரில் இருந்து கீழே விழுந்தான். இராவணன் அனுமனைக் குத்திய அந்த ஒரு குத்தின் ஒலி பதினான்கு உலகத்துக்கும் சென்று கேட்டதால், சிறந்த பெரிய மலைகள் கூட பெரும் கற்களைச் சிந்தின; அதுபோல, மத யானைகள் கூடத் தங்களது தந்தங்களை இழந்தன; வீரர்கள் அனைவரும் அச்சம் கொண்டு, போரை ஒரு கணம் நிறுத்தி தங்கள், தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டார்கள்.
அப்போது அந்தக் குத்தினால் நிலை தடுமாறிய அனுமனைக் கண்ட வானர வீரர்கள்," இப்போது நாம் செய்ய வேண்டிய செயல் இதுவே" என்று கூறி ஆளுக்கு ஒரு பெரும் மலையைப் பெயர்த்து எடுத்து இராவணன் மீது வீசி எறிந்தார்கள். அவைகள் அனைத்தும் ஒன்று திரண்டார் போல, வானில் பறந்து வந்ததால், சூரியனின் ஒளிக் கிரணங்கள் தடைபட்டு பூமியில் எங்கும் இருள் சூழ்ந்தது. ஆனால், இமயத்தையே ஆட்டிப் படைத்த இராவணன் என்னும் பெரு வீரனுக்கு, அந்த மலைகளும் ஒரு பொருட்டா? அதனைத் தனது பாணங்கள் கொண்டு தூள், தூளாக ஆக்கினான். அப்போது அந்த மலைகள் தூள், தூளாகப் பெயர்வதால் ஏற்பட்ட நெருப்புப் பொறி கடலில் சென்று பாய்ந்தது. அதனால் கடலில் வாழ்ந்த மீன்களும் கூட கருகின. கருகிய அந்த மீன்களைப் பார்க்கும் பொழுது, "அரக்கர்களின் கண்களோ அது!" என்று கூறும் படியாக இருந்தது.
இராவணன் அத்துடன் விடவில்லை, மிகுந்த கோபம் கொண்டவனாக " இந்தக் குரங்குக் கூட்டத்தை இன்றே அழிப்பேன். அற்ப மானிடர்கள் இருவரையும் பிடித்துத் தண்டிப்பேன்" என்று கூறியபடி பல கோடி பாணங்களை பிரயோகித்தான். அதனால், எட்டு திசைகளும் இராவணனின் அம்புகளால் நிறைந்தன. கடல் கூட இராவணனின் அம்புகளால் மூடப்பட்டு இன்னொரு சேது போல காட்சி அளித்தது. இராவணன் தொடர்ச்சியாக விடுத்த பாணத்தால் எண்ணற்ற வானரர்கள் அழிந்தனர். வானரர்களின் பிணக் குவியல் வெண்ணிறம் கொண்ட இமயத்தைப் போலக் காணப்பட்டது.
அக்கணம் ஸ்ரீ இராமர் அவ்விடம் வந்தார், தனது வில்லில் நாணேற்றி இராவணனிடம்," இராவணா! ஏன் இந்த அப்பாவி வானர வீரர்களுடன் போர் புரிகிறாய். உனக்கே இது அழகா? என்னுடன் யுத்தம் செய்" என்றார். அது கேட்டு வானர வீரர்கள் ஆரவாரம் செய்தனர். அப்போது அனுமான் இராமபிரானை கண்டு," ஸ்ரீ இராமா, இந்த அரக்கனான இராவணன் பெரும் தேரின் மீது ஏறி நின்று போர் புரிகிறான். அப்படி இருக்கையில் தாங்கள் தரையில் நின்று போரிடுவது சரியோ? அதனால் தயை கூர்ந்து நான் சொல்வதைக் கேட்பீராக, தாங்கள் வலிமை மிக்க எனது தோளின் மீது ஏறிக் கொள்ளுங்கள். பிறகு, இந்தக் கொடிய அரக்கனை நாம் வெல்வது மிகவும் சுலபமான காரியம்" என்றான்.
அதன் படியே ஸ்ரீ இராமனும் அனுமனின் வேண்டுகோளுக்கு இசைந்தார். அக்கணமே அனுமன் பெரிய ரூபத்தை எடுத்தான். ஸ்ரீ இராமர் அவனது தோள் மீது ஏறிக் கொண்டார். அது கண்ட கருடன்," எப்போதும் திருமாலைத் தாங்கும் பெருமை எனக்குத் தான் கிடைத்துக் கொண்டு இருந்தது. ஆனால், இப்போது அந்தப் பெரும் பேரு அனுமனுக்குக் கிடைத்து விட்டதே" என்று கூறி பொறமை கொண்டான். அப்போது தேவர்கள் " பெரிய திருவடி கருடன் என்றால்,சிறிய திருவடி இனி இந்த அனுமான் தான்" என்று கூறி களிப்படைந்தனர். சப்த ரிஷிகளும் கூட அனுமனின் செயலை வெகுவாகப் பாராட்டினார்கள். தரும தேவதையும் அது கண்டு மகிழ்ந்து நின்றாள்.
ஸ்ரீ இராமர் இராவணனுடன் யுத்தத்தை தொடங்கினார், தனது வில்லில் இருந்து பல தரப்பட்ட பாணங்களை இராவணன் மீது ஏவினார். இராவணனும் தீரத்துடன் போர் புரிந்தான்.மறுபுறம், நடுக்கத்துடன் இராம, இராவண யுத்தத்தை வானில் நின்ற தேவர்கள் கண்டனர். இராவணனுடன் அரக்கர்களும் சேர்ந்து கொண்டு " ஒருவருக்கு, ஒருவரே போர் புரிய வேண்டும்" என்றப் போர் விதியை மீறி தங்களது வலிய ஆயுதங்களை ஸ்ரீ இராமர் மீது ஏவினார்கள். ஆனால், ஸ்ரீ இராமர் இராவணனின் பாணங்களுடன் அந்த அரக்கர்களின் ஆயுதங்களையும் சேர்த்துத் தனது அம்புகளால் பொடிப், பொடியாக ஆக்கினார்.
அதுபோல அரக்கர்கள் சிலர், அப்பாவி வானர வீரர்கள் மீது தொடுத்த பாணங்களையும் ஸ்ரீ இராமர் இராவணனுடன் போர் செய்து கொண்டே முறித்து எறிந்தார். இராமர், கண்ணிமைக்கும் நேரத்தில் எண்ணற்ற பாணங்களைத் தொடுத்தார். அவர் வில்லில் பாணங்களை பூட்டிய வேகத்தையும், நாணேற்றி விடுத்த வேகத்தையும் வானில் திரண்டு நின்ற தேவர்களாலும் காண முடியவில்லை. காற்றின் வேகமும்,தோன்றி மறையும் மின்னலின் வேகமும் கூட இராமர் பாணங்களைச் செலுத்திய அந்த வேகத்தின் முன் குறைவு தான்.
மறுபுறம் அனுமனோ, இராமபிரானை சுமந்து கொண்டு மனத்தை விட மிகவும் வேகமாகச் சென்றான். அதனால், கொடிய அரக்கர்களின் ஆயுதங்கள் ஸ்ரீ இராமரின் மீது படாதபடி பார்த்துக் கொண்டான். மேலும், அனுமான் அரக்கர்களின் கண்கள் இமைக்கும் நேரத்தில் இடம் விட்டு, இடம் பெயர்ந்து ஸ்ரீ இராமர் அரக்கர் மீது பாணங்களை சரியாகப் பிரயோகிக்க துணை புரிந்தான். அவ்வாறு கண்ணிமைக்கும் நேரத்தில் அனுமான் இடம் விட்டு இடம் இராம பிரானை சுமந்து சென்றதால், அவன் எல்லா இடங்களிலும் நின்று அரக்கர்களுக்கு காட்சி அளித்தான். இராவணனின் இருபது கண்களும் எத்திசை நோக்கினாலும், அனுமன் அங்கு ஸ்ரீ இராமனை சுமந்தபடிக் காணப்பட்டான். அதனால், இராவணனே குழம்பிப் போனான். செய்வதறியாது திகைத்தான்.
ஆனால் மறுபுறம் , ஸ்ரீ இராமர் அசராமல் போர் புரிந்தார், அதனால் அரக்கர்களின் ஆயுதங்கள், யானைகள், அவர்களின் கை, கால்கள் என அனைத்தும் துண்டாடப் பட்டது. தலை அற்ற அரக்க உடல்கள் நர்த்தம் ஆடிய படி மண்ணில் சாய்ந்தன. அது கண்ட பேய்கள் கூத்தாடின. சில கணங்களில் எண்ணற்ற இராமபாணம், அரக்கர்களின் எண்ணற்ற தலைகளை துண்டாடியது. அது கண்ட அவர்களது அரக்க மனைவிகள் முன்பு சீதை கொடுத்த சாபத்தின் படியே தாலிகளை அறுத்து எறிந்து கதறித் துடித்தார்கள். அன்று ஒரே நாளிலே யமனாகிய கொடிய இராமபாணங்கள் நூறாயிரம் அரக்கர்களை அழித்து ஒழித்தன. இறுதியில் இராவணன் ஒருவனே தனது தேரில் உயிருடன் நின்று கொண்டு இருந்தான். அவன் தனது படை வீரர்கள் அனைவரும் பல வகையில் இறந்து போனதைக் கண்டான். அக்காட்சியைக் கண்டதும் அவனது மனதில் கடும் கோபத் தீ எழுந்தது. அவன் கொடிய நாகம் போலச் சீறி எழுந்து ஸ்ரீ இராமர் மீது அம்பு மழைகளைப் பொழிந்தான். அதில் சில பாணங்கள் ஸ்ரீ இராமரின் உடலில் பட்டு, அவரது மரகத மேனியில் பல இடங்களில் காயங்களை ஏற்படுத்தியது. ஆனால், அவர் அதனை பொருட்படுத்தாமல் இராவணனுடன் போர் செய்து தனது சத்திரிய தர்மத்தை நிலை நாட்டினார். அப்போது இராவணன் இருக்கும் இடம் நோக்கி ஸ்ரீ இராமர் ஏவிய பாணத்தால், அவனது வலிமை படைத்த வில் துண்டானது. இராவணன் அது கண்டு இன்னொரு வில்லை எடுத்தான், அதனையும் ஸ்ரீ இராமர் தனது பாணம் கொண்டு உடைத்து எறிந்தார். இவ்வாறு இராவணன் கையில் எடுத்த அனைத்து வில்லையும் ஸ்ரீ இராமர் தனது பாணம் கொண்டே துண்டாக்கினார். அத்துடன் இராமர் விடவில்லை இராவணனின் குடை, கவசம், தேர் பாகன்,அவனது மகுடம், குதிரைகள், அவனது ஆயுதங்கள் இறுதியில் அவன் ஏறி நின்று போர் செய்த ரதம் என அனைத்தையும் தனது பாணத்தால் அழித்தார். இராவணன் வேறு ஒரு இரத்தத்தில் ஏறி நின்று போர் புரிய முற்பட்ட போது அதனையும் ஸ்ரீ இராமர் தமது பாணங்கள் கொண்டு அழித்தார்.
இவ்வாறு, இராவணன் கொண்டு வந்த அனைத்து ரதங்களையும் இராமபாணம் அழித்துத் தாக்கியது. அதனால், வெற்றியை மட்டுமே பெரும் பாலும் ருசி கண்ட இராவணன் மெல்ல, மெல்ல ஸ்ரீ இராமன் மூலமாக கசப்பான தோல்வியை ருசி கண்டான். அதனால், ஒரே சமயத்தில் ஒளிவிடுகின்ற சூரியனையும் சந்திரனையும் இழந்த இரவையும் பகலையும் போல விளங்கினான்.
தான் பெற்ற தோல்வியால் வெட்கி தலை குனிந்தான் இராவணன். அப்போது அது வரையில் இராவணன் மீது இருந்த பயம் நீங்கி, தேவர்களும் வெளிப்படையாகவே அவனைக் கண்டு வானில் நின்றபடி நகைத்தனர். அது கண்ட இராவணன் மேலும் வருந்தினான், கோபம் அடைந்தான். அப்போதும் கூட அவன் மனதினில் ," இந்த துஷ்ட தேவர்கள் சிரிப்பது கூட பெரிதல்ல, நான் இப்போது இராமனிடம் பெற்றத் தோல்வியைக் கேள்விப் பட்டால் சீதை பரிகசிப்பாளே " என்று தான் வருந்தினான்.
அப்போது இராமபிரான், இராவணன் நாணி நிற்கும் தன்மையைக் கண்டார். அது கண்ட ஸ்ரீ இராமர், " இராவணா! இப்போதும் கூட என்னால் உன்னைக் கொல்ல இயலும். ஆனால், நீயோ நிராயுத பாணியாக இருக்கிறாய். என்னைப் போன்ற சத்திரியன், ஒரு போதும் உன்னைப் போன்ற ஆயுதம் இல்லாது நிற்பவனை கொல்லமாட்டான். மேலும், நீ நல்ல கலைஞன், கலா ரசிகன், வித்வான் அதனால் இன்னமும் உனக்கு ஒரு கடைசி வாய்ப்பை அளிக்கிறேன். இப்போதாவது சீதையை என்னிடம் ஒப்படைத்து விட்டு நீ செய்த தவறுக்கு வருந்து. அப்படியே உனது ஆட்சியையும் உனது அருமைத் தம்பி விபீஷணனுக்குக் கொடுத்து விடு அப்படி நீ செய்தால், நான் உன்னைக் கொல்ல மாட்டேன். ஆனால், அப்படி நீ செய்யா விட்டால் உனது கூட்டத்துடன் நீ அழிவது நிச்சயம். ஆதலால், நீயே ஒரு நல்ல முடிவை எடு. உனக்கு சிந்திக்க ஒரு நாள் அவகாசம் தருகிறேன். நீ இன்று போய் நாளை வா! " என்றார்.