கும்பகர்ணன் வதைப்படலம்

bookmark

யுத்தகாண்டம்

இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

கும்பகர்ணன் வதைப்படலம்

(இராவணன் தான் பெற்ற தோல்வியை எண்ணி சோகம் கொண்டான். அப்போது நாற்றிசைகளிலுள்ள அரக்கர் சேனையைத் திரட்டத் தூதுவரை அனுப்பினான். பின்பு குலமுதல்வனான மாலியவானிடம் மனம் திறந்து பேசினான். இடையில் புகுந்த மகோதரன் கும்பகருணனின் வலிமையை நினைவூட்டிப் போரினைத் தொடர்ந்து நடத்துமாறு கூறினான். இராவணன் கும்பகர்ணனைத் துயிலெழுப்பி மானிடர் இருவர்
கோநகர்ப்புறம் முற்றிப்பெற்ற வெற்றியை அழிக்குமாறு கூறினான். பாசம் அறத்தினும் பெரிதென எண்ணிய கும்பகர்ணன் போர்க்களம் புகுந்தான். பிறகு தமயனையும் தம்பியையும் காப்பாற்ற முனைந்து இராம பாணத்தால் விழுந்தான். இதுவே இப்படலச் செய்திகள் ஆகும்)
முன்பு சுக்கிரீவனால் மகுட பங்கம் அடைந்தது போல, இப்போது ஸ்ரீ இராமபிரானால் மகுட பங்கம் அடைந்த இராவணன் மிகவும் வருந்தினான். தனது தோல்வியை எண்ணி, எண்ணி வெட்கம் அடைந்தான். தான் இதுவரையில் பெற்ற புகழை எல்லாம் போர் களத்திலேயே விட்டு, விட்டு இலங்கை நகருக்குள் நடை பிணம் போல வந்து சேர்ந்தான். அப்போது அவனது கலங்கிய முகத்தைக் கண்டு, சூரியனும் பரிதாபம் கொண்டு மறைந்தான். இருள் உலகை சூழ்ந்தது. அது இராவணனின் மனதிலும் கவ்வியது.
அதனால் அவன் திசைகளைக் கூட கண்ணெடுத்தும் பார்க்காமல், தன்னைப் பார்க்க வந்த புத்திரர்களையும் நோக்காமல், தன்னை வரவேற்க வந்தப் பெரும் சேனையைக் கூடப் பார்க்காமல், அவன் மனைவி மண்டோதரியிடம் கூட பேச விருப்பம் இல்லாமல், பூமியாகிய பெண்ணை தலை குனிந்து பார்த்த படியே தனது அரண்மனைக்குள் நுழைந்தான்.
அப்போது இராவணனின் நிலை கண்டு அவனை சுற்றி இருந்தவர்கள் அனைவரும் திகைத்து நின்றனர். இராவணனோ அரண்மனையின் உட்புறத்தை அடைந்து. நேரே அங்கு இருந்த ஒரு பொற் பீடத்தில் அமர்ந்தான். அவனுடைய நெஞ்சம் சற்றே வருத்தத்தை மறந்தது. ஆனால், அவன் மனம் பெரிதும் சிந்தனையில் இருந்தது. சிறிது நேரம் அதே நிலையில் இருந்த இராவணன், தனது அருகில் இருந்த கஞ்சுகியைப் பார்த்து," நீ போய் இப்பொழுது நமது தூதுவரை இங்கே அழைத்துவா!" என்று கட்டளையிட்டான்.
உடனே கஞ்சுகி இராவணனின் ஆணைப் படியே இலங்கையின் அனைத்து தூதர்களையும் அவனிடம் அழைத்து வந்தான். அவ்வாறு வந்து சேர்ந்த தூதுவர்களை நோக்கி இராவணன்," நீங்கள் நினைப்பதற்குள் பெரிய எட்டுத் திசைகளையும் கடந்து சென்று, நமது அரக்கப் பெரும் சேனைகளை எல்லாம் விரைவில் அழைத்து வாருங்கள்!" என்று ஆணைப் பிறப்பித்தான்.
எள் என்றால் எண்ணெய்யாக நிற்கும் இராவணனின் அந்தத் தூதுவர்களும் அதன் படியே எட்டுத் திசைகள் மட்டும் அல்லாமல் பாதாள லோகம் உட்பட ஈரேழு பதினான்கு உலகத்திலும் இருக்கும் அரக்கர் சேனையைத் திரட்ட விரைந்தனர்.
மறுபுறம் இராவணன் "இதற்கு மேல், நாளைய போரில் நாம் செய்ய வேண்டியது என்ன?" என்று தனது மலர் படுக்கையில் படுத்தபடி சிந்திக்கத் தொடங்கினான். ஆனால், இடையிடையே அவன் இராமனால் அன்றைய முதல் நாளில் பட்ட அவமானங்களை மறக்க முடியவில்லை. அதனால் மனம் வெம்பினான். அதன் காரணமாக அவன் படுத்த அந்த மலர் படுக்கையும் வெம்பியது.
அவனது நினைவுகள் தறிகெட்டு ஓடியது. 'தான் இன்று பெற்ற தோல்வியைக் கண்டு தேவர்களும் நகைத்தார்களே; இனி தன்னால் முன்பு வெற்றி கொள்ளப்பட்ட பகைவர்களும் நகுவார்களே. இதற்கு இராமன் இன்றே என்னை வதைத்து இருக்கலாமே! 'என்று அவன் எண்ணி, மேலும் வெட்கம் அடைந்தான். உறக்கம் இன்றி கலங்கித் தவித்தான்.
அப்போது இராவணனின் பாட்டனாகிய மாலியவான் அங்கே வந்தான். அவன் இராவணனது படுக்கையின் அருகே இருந்த ஓர் ஆசனத்தில் அமர்ந்தான். அவன் தனது பேரனின் நிலை கண்டு வருத்தம் கொண்டு இராவணனிடம் ,"ஒரு பொழுதும் கெடாத தவப் பயனை செய்தவனே. உனது வருத்தம் தோய்ந்த முகத்தைக் காணும் போது, நீ இராமபிரானுடன் இன்று நடந்த போரில் தோல்வி கண்டாய் போலும். உண்மையில் இன்று யுத்த களத்தில் அப்படி நடந்தது தான் என்ன? கூறுவாயாக மகனே!" என்று வினவினான்.
இராவணன் அதற்கு," தவ வேடம் தாங்கிய மானிடருடன் எமக்குப் போர் நிகழ்ந்ததை வேடிக்கைப் பார்க்க தேவர்களும் வானில் வந்து விட்டார்களே ! மேலும், பருந்துகள் வந்து திரியும் படியான செந்நிற குருதி பாயும் போர் களத்திலே, நமது குலத்தவர்கள் மானிடர்களிடம் தோற்றுப் போனார்களே! அதனால் எமக்கு அபகீர்த்தியும் நேர்ந்ததே!" என்றான்.
மீண்டும் இராவணன் மாலியவானை நோக்கி," பெரியோய்! முக்கண் கொண்ட ஈசனும் எனது முழு அரக்கர் படையும் ஒன்று திரண்டு ஒரே பக்கத்தில் நின்றால் கூட அந்த லக்ஷ்மணனை வெல்ல முடியாது! ஆலோசித்துப் பார்க்கையில் அந்தக் கார்த்த வீரியார்ச்சுணனும் இராமனது தம்பியான லக்ஷ்மணனின் கால் தூசுக்கு சமமாக மாட்டான். அப்படி இருக்கும் போது அவனது அண்ணன் இராமனைப் பற்றிக் கேட்கத் தான் வேண்டுமோ! இளமையில் இராமன் எப்படி விளையாட்டாகக் கூனியின் கூனில் படுமாறு வில்லில் மண் உருண்டையை வைத்துத் தொடுத்தானோ, அது போலவே மிக எளிதாக எனது கணக்கற்ற சேனை வீரர்களையும் கொன்றான். அதற்காக அவன் சிரமப்படவே இல்லை. கோபம் கொண்டு பெரும் போரைச் செய்யவும் இல்லை. புன்முறுவல் பூக்கவே யுத்தம் செய்தான். மேலும், அவனது பாணங்கள் குறி தவறாமல் கூட்டமாகப் பாய்ந்து சென்று நமது குதிரைகளையும், ரதங்களையும், யானைகளையும், அரக்கர்களையும் அறுத்து வேட்டை ஆடியது. அது பாணங்களா? இல்லை அந்த விஷ்ணுவின் சுதர்ஷணச் சக்கரமா? என்று எனக்கே ஒரு ஐயம் எழுந்தது.
பேய்களின் பெரும் கூட்டத்தோடு மயானத்தில் வாழ்கின்றவனான சிவபெருமானின் எட்டுத் தோள்களும், இந்திரனது இரண்டு தோள்களும், பூமியை விழுங்கித் தனது வயிற்றிலே அடக்கிக் கொண்டவனான திருமாலின் ஆயிரம் தோள்களும் இராமனது ஒரு அம்பின் வலிமைக்குத் தாங்கமாட்டது. அந்த அம்புகள் அத்தகு வலிமை பொருந்தியவைகள். அதன் வேகத்தைத் தாங்க ஒரு மேருவும், ஒரு வானமும், ஒரு பூமியும், ஏழு கடல்களும் கூட போதாது.முப்புரங்களை எரித்தழித்த சிவபெருமானின் வில்லும் இராமனின் வில்லுக்கு முன்னே சும்மா கொள்வதற்கும் உதவாது. அந்த வில்லுக்கு ஒப்பாகச் சொல்வதற்கு வேறு ஒரு பொருளும் இல்லை. வேதங்கள் கூட பொய்த்துப் போகலாம், ஆனால் இராமனின் வில்லில் இருந்து புறப்படும் பாணங்கள் ஒரு போதும் இலக்கைத் தாக்காமல் பொய்க்காது. அவனது முகத்தை பார்க்க, பார்க்க ஈசன் கொடுத்த வில் எனது கைகளில் இருந்து நழுவியது. எங்கே, அவனது ஒளி பொருந்திய விகல்பம் இல்லாத முகத்தைக் காணும் போது, நானே இரு கை கூப்பி அவனைத் தொழுது விடுவேனோ! என்ற அச்சம் எனக்குள் பிறந்தது. தக்க வீரனைத் தான் நான் இன்று யுத்த களத்தில் சந்தித்து வந்து உள்ளேன்!" என்று கூறி முடித்தான்.
இராவணன் கூறியதைக் கேட்ட மாலியவான் அவனை நோக்கி," இது போலத் தான் முன்பு உனக்கு நான் இராமனின் வலிமையை எடுத்துச் சொன்னேன். நான் மட்டுமா? கோபிக்காத குணமும், நல்ல உள்ளமும் கொண்ட உனது தம்பி லக்ஷ்மணனும் எனது கருத்தையே முன் மொழிந்தான். ஆனால், அதை எல்லாம் நீ காது கொடுத்துக் கேட்டாயா? குறைந்த பட்சம் நாங்கள் சொல்லியவற்றை எப்போதாவது யோசித்தாவது பார்த்தாயா? அதன் விளைவு தான் இன்று நீ போர் களத்தில் பட்ட இந்த அவமானம்" என்றான்.
அவ்வாறு மாலியவான் கூறியவுடனே, இராவணன் அருகே நின்று கொண்டு இருந்த மகோதரன் மிகுந்த சினம் அடைந்தான். அவன் கண்களிலே தீப் பொறிகள் பறந்தன. அவன் சினத்தோடு மாலியவானைப் பார்த்துப் பெருத்தக் குரலில்," இப்படி நீ சிறுமையாகச் சொல்லியது என்னே!" என்று அதட்டினான்.
பின்பு, இராவணனைப் பார்த்து மகோதரன்," ஐயனே! இனிய பொருளை விரும்பி, ' இது நல்லது' என்று ஒரு செயலை மேற்கொண்டு விட்டால், அதனால் வெற்றி ஏற்படட்டும். அதுவன்றி மாறாக தோல்வியே ஏற்படட்டும்! அதைப் பற்றிக் கவலை கொள்ளக் கூடாது. தான் விரும்பி ஏற்ற செயலிலேயே கடைசி வரை உறுதியாக நிற்பதே உத்தமம். அதனை விட்டு சாக்கு, போக்கு சொல்லி முன் வைத்த காலை பின் வைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் உலகம் உங்களைப் பழிக்கும். மேலும், நீங்களும் ஒரு மாவீரர் தான் என்பதை அடிக்கடி தாங்கள் மறந்து விடுகின்றீர்கள். இன்னொரு விஷயத்தையும் புரிந்து கொள்ளுங்கள், இன்று ஒரு நாள் யுத்தத்தில் இராமன் வெற்றி பெற்று விட்டான் என்பதற்காக அவன் எல்லா நாளுமே போரில் வெற்றிக் கனியை பறிப்பான் என்பது இல்லை. வெற்றியும், தோல்வியும் மாறி, மாறி வரக் கூடியது. உலகத்தின் சுழற்சியில் தாழ்பவர்கள் உயர்வார்கள், உயர்ந்தவர்கள் தாழ்வார்கள். இதுவே உலகத்தின் இயல்பும் கூட.
புகழுக்கு உடையவரே! இப்படி இருக்க, நீர் அந்த இராம லக்ஷ்மணரை புகழலாமோ? அதன் மூலம் உமக்கு நீரே களங்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாமோ? ஐயனே! சற்றே நான் கூறுவதைக் கேளும், அந்த இராமலக்ஷ்மணர்களை அயோத்திக்கே துரத்த, அல்லது அவர்களை வதம் செய்ய ஒரு வழி உண்டு. அந்த வழியின் பெயர் தான், தங்கள் அன்பு சகோதரர் கும்பகர்ணன். ஆம்...! நீர் , கும்பகர்ணனை அழைத்து போர் செய்யுமாறு கட்டளை பிறப்பித்தால். இந்த யுத்தத்தில் நாம் வென்று விடலாம். அவர் போர்க்களத்தில் நின்றாலே போதும், பகைவர்கள் ஆயுதங்களை போட்டு விட்டு ஓடிவிடுவார்கள்" என்று சொன்னான்.
மகோதரன் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த இராவணன், அவனைப் பாராட்டி பரிசுகள் பல கொடுத்து, தனது ஏவலர்களை அழைத்தான். உடனே இராவணன் அக்கணமே வந்த தனது ஏவலர்களிடம் கும்பகர்ணனை உடனே எழுப்பி அழைத்து வருமாறு கட்டளை பிறப்பித்தான்.
அப்போது அருகில் அதுவரையில் நின்று இருந்த இராவணனின் பாட்டனாரான மாலியவான்," இவன் திருந்த நினைத்தாலும், இவனை சூழ்ந்து உள்ளோர்கள் இவனை விடுவதில்லையே! இது தான் விதியோ? இனி இவனுடன் சொல்வதற்கு என்ன?" என்று தனக்குள் கூறிக் கொண்டு அவ்விடம் விட்டு மெல்ல நகர்ந்தான்.
மறுபுறம் இராவணனின் பணியாட்கள் கும்பகர்ணனின் மாளிகைக்குள் புகுந்தனர். அப்போது பேர் உருவம் கொண்டு பல யோசனை தூரம் நீண்டு கும்பகர்ணன் படுத்து உறங்கிக் கொண்டு இருந்தான். அவன் காதுகளை குகை என்று நினைத்து மலைப் பாம்புகள் சென்று வந்து கொண்டு இருந்தன. தூதுவர்கள் அவன் காதுகள் இருக்கும் இடத்துக்கு பல யோசனை தூரம் நடந்து சென்று உரக்கக் கத்தி ," இளைய அரசனே! துயில் நீங்குவீர்!" என்றார்கள். ஆனால், கும்பகர்ணன் துயில் நீங்கவே இல்லை. பிறகு தூதுவர்கள் கையில் இருந்த ஆயுதம் கொண்டு கும்பகர்ணனை தாக்கினார்கள். அப்போதும் கூட அவனிடம் எந்த ஒரு அசைவும் இல்லை.
பிறகு இராவணனிடம் சென்று," ஐயனே! தங்கள் தம்பி நாங்கள் எழுப்பியும் எழ வில்லை. அவரை எழுப்பும் மார்க்கமும் நாங்கள் அறியோம்" என்றார்கள்.
அதற்கு இராவணன் தனது பணியாளர்களைப் பார்த்து," நீங்கள் என்ன செய்வீர்கள்? ஏது செய்வீர்கள் என்று எனக்குத் தெரியாது? வேண்டும் என்றால், யானைகள் கொண்டும் யாளிகள் கொண்டும் கும்பகர்ணன் மீது ஏறி மிதிக்கச் செய்யுங்கள், ஆயிரம் மல்லர்களை அழைத்துச் சென்று ஒரே நேரத்தில் கும்பகர்ணனை ஓங்கி குத்தச் செய்யுங்கள். பலதரப்பட்ட ஆயுதங்கள் கொண்டு அவனை தாக்கச் செய்யுங்கள். எனக்குக் கும்பகர்ணன் வந்தாக வேண்டும். அவனை நீங்கள் எப்படியாவது எழுப்பி அழைத்து வாருங்கள். அடுத்த முறையும், ' எங்களால் முடியவில்லை' என்று வந்து நீங்கள் நின்றால். அதன் பிறகு, உங்கள் தலை உங்கள் உடம்பில் நிற்காது" என்றான் மிகுந்த கோபத்துடன்.
அது கேட்ட இரவாணனின் பணியாளர்கள், அவன் மீது கொண்ட பயத்தில் மீண்டும் கும்பகர்ணனை எழுப்பும் முயற்ச்சியில் ஈடுபட அவனது மாளிகையை அடைந்தனர். ஆயிரம் குதிரைகளையும், யாளிகளையும் கொண்டு இராவணன் கூறியபடியே பணியாளர்கள் கும்பகர்ணனை மிதிக்கச் செய்தார்கள். ஆனால், அப்படியும் கும்பகர்ணன் துயல் எழவில்லை. பிறகு, ஆயிரம் மல்லர்களை அழைத்து வந்து கும்பகர்ணனை துயல் எழுப்ப ஓங்கி குத்தச் செய்தார்கள். ஆனால், அப்பொழுதும் கும்பகர்ணன் உறக்கத்தில் இருந்து எழுந்திருக்க வில்லை. மாறாக, அந்த மல்லர்கள் குத்திய குத்து அவனுக்கு இதமாக இருக்கவே, இன்னும் நன்றாக உறங்கினான். கடைசியில் அந்த ஆயிரம் மல்லர்களும் சோர்ந்து விழுந்தனர். பிறகு பணியாளர்கள், இராவணனின் பெரும் படையில் உள்ள வீரர்களைக் கொண்டு சூலம், ஈட்டி முதலிய ஆயுதங்களால் கும்பகர்ணனை குத்தினார்கள். ஆனால், அப்போதும் கும்பகர்ணன் எழுந்திருக்க வில்லை. பிறகு கும்பகர்ணன் இரு காதுகளின் அருகிலும் பலதரப்பட்ட வாத்தியங்களையும், மேளங்களையும் இராவணனின் பெரும் படை முழங்கச் செய்தது. அது கேட்டும் கும்பகர்ணன் சுகமாகத் தூங்கினானே தவிர எழுந்திருக்க வில்லை.
கடைசியாக இராவணனின் பணியாளர்கள் ஒரு உபாயத்தை மேற்கொண்டனர். அது யாதெனில், பல ஆயிரம் பெரிய தட்டுக்களில் சுவையான பலதரப்பட்ட பலகாரங்கள், மற்றும் குடம், குடமாக கள், மேரு மலை போல நன்கு சமைத்த இறைச்சி வகைகள், ஆறு நூறு வண்டிச் சோறுகள் எனக் கும்பகர்ணனுக்குப் பிடித்த அனைத்தையும் கொண்டு வந்து அவன் அருகில் வைத்தார்கள். அதில் இருந்து புறப்பட்ட மனம், அவனது நாசி வழியே புகுந்து அவனுக்கு மிகுந்த பசியைத் தூண்டியது. உடனே உறக்கம் களைந்து, எழுந்து அமர்ந்தான். அவ்வாறு எழுந்தவன் முதலில் கேட்ட வார்த்தை " எனது அருமை அண்ணன் இராவணன் நலமா?" என்பது தான். ஆனால், அரக்கர்கள் அனைவரும் அவன் மீது கொண்ட பயத்தால் அவன் கேட்ட கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் அஞ்சி நடுங்கி அமைதியாக அவன் உணவு உண்ணும் வரை காத்துக் கொண்டு இருந்தனர். ஒரு வழியாக கும்பகர்ணன் சில மணித்துளி நேரத்திலே ஒரு கோடி அரக்கர்கள் சாப்பிடும் உணவை, ஒருவனாக சாப்பிட்டு ஏப்பம் விட்டான்.
இராவணனின் பணியாளர்கள் கும்பகர்ணன் எழுந்து உணவு உண்டதைக் கண்டதும் அவனிடம்," ஐயனே! உமது தமையனார் உம்மைக் கூப்பிட்டார்!" என்று கூறினார்கள். அது கேட்ட மாத்திரத்தில், வெகு நாட்கள் கழித்து அண்ணன் இராவணனை சந்திக்க போகும் மகிழ்ச்சியில் இலங்கை நகரமே நடு, நடுங்க ஆர்பரித்துச் சென்றான் கும்பகர்ணன். அப்படிச் சென்றவன் அண்ணனின் அரண்மனையை அடைந்தான். மலை போல நின்ற கும்பகர்ணனைக் கண்ட இராவணன் மிகவும் மகிழ்ச்சி கொண்டான். அது போல இராவணனைக் கண்டு கும்பகர்ணன் மிகவும் மகிழ்ந்து வணங்கினான். பிறகு அண்ணனிடம் நலம் விசாரித்தான். இருவரும் சகோதர பாசத்தில் சில நிமிடங்கள் தங்களையே மறந்தனர்.
பிறகு தம்பியைத் தன்னருகே உட்கார வைத்துக் கொண்டு, இரத்தத்துடனேயே சிறந்த கள்ளையும் பல கோடி குடங்களில் வர வழைத்து அவனைக் குடிக்கச் செய்தான் இராவணன். மாமிசத்தையும் வரவழைத்து உண்ணச் செய்தான். கடல் நுரை போன்ற வெண் பட்டாடையை அவனது இடுப்பிலே அணியச் செய்தான் இராவணன். சூரியனுக்கு நிகரான இரத்தின ஆபரணங்களைக் கொண்டு வரச் சொல்லி கும்பகர்ணனுக்கு அணிவித்தான். அவனுடைய நெற்றியிலே வீரப்பட்டத்தைக் கட்டினான். வாசனை கொண்ட சந்தனக் குழம்பை கொண்டு வரச் சொல்லி அவனது மேனி எங்கும் பூசினான். கும்பகர்ணனின் மார்பிலே சிவ பெருமான் அளித்த போர் கவசத்தை அணிவித்தான். அவனது இடையில் உடை வாளை சொருகினான். அம்புராத் தூணியை அவனது முதுகில் கட்டினான். கைகளில் சக்தி வாய்ந்த தனுஷை அளித்தான்.
கும்பகர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு, அவன் இராவணனிடம் ," அண்ணா, இப்போது எனக்கு எதற்காக இந்தப் போர்க் கோலத்தை தருகின்றீர்? என்று கேட்டான்.
அதற்கு இராவணன்," தம்பி! மனிதர் இருவர் வானரப் பெரும் சேனையுடன் நம்முடைய சிறந்த நகரத்தை முற்றுகை செய்து, இது வரையில் நம்மிடத்தில் எவரும் பெறாத வெற்றியையும் பெற்று இருக்கின்றார்கள். நீ போய் அவர்களுடைய இனிய உயிரை உண்கின்ற செயலை முடிப்பாய்!" என்று, கும்பகர்ணனிடம் அவன் செய்ய வேண்டியதை சுருக்கமாகக் கூறி முடித்தான்.
உடனே கும்பகர்ணன் இராவணனை நோக்கி," அண்ணா! நான் அஞ்சியபடியே கொடிய போர் தோன்றிவிட்டதோ? உவமையற்ற கற்புடைய ஜானகியின் சிறைத் துயரம், இன்னும் நீங்கிய பாடு இல்லையோ? விண்ணுலகிலும் மண்ணுலகிலும் வளர்ந்த உமது பெரும் புகழ் நீங்கிவிட்டதோ? அரக்கர்களுக்கு அழிவு வந்து சேர்ந்து விட்டதோ? போர் தொடங்கிவிட்டதோ? அந்த போர் சீதையின் பொருட்டாக ஏற்பட்டதோ? நாங்கள் எல்லோரும் முன்பு அவ்வளவு சொல்லியும், நீர் சீதையை துறக்க மனம் இல்லாமல் இருந்து விட்டீரோ? நீ அப்படி இருந்தது விதியின் செயலோ? அதர்மத்தில் நடக்கின்ற உமக்கு இனி வெற்றி தான் கிட்டுமோ? உமக்கு அஞ்சி இப்போது அறமும் ஓடி ஒளிந்து கொண்டதோ? அல்லது இராம பாணத்தால் அரக்கர்கள் இனி மடியப் போவது தான் பிரமன் எழுதிய இறுதித் தீர்ப்போ?" என்றான். பிறகு கும்பகர்ணன் மேலும் இராவணனிடம் தொடர்ந்து பேசத் தொடங்கினான்," அண்ணா! போர் சூழ்ந்து இருந்தால் என்ன? இப்போதும் கூட ஒன்றும் கெட்டுப் போகவில்லை. சீதையை இராமனிடம் கொண்டு போய் விட்டு விடு. ஸ்ரீ இராமனிடம் மன்னிப்புக் கேள். அதில் தவறு ஒன்றும் இல்லை. அவர் அவதார புருஷன். தெய்வத்தின் அவதாரமான அவரிடம் மன்னிப்பு வேண்டுவதால் நாம் ஒன்று குறைந்து போய் விடமாட்டோம்” என்றான்.
கும்பகர்ணனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட இராவணன் மிகுந்த சினம் கொண்டான். அச்சினத்துடன் கும்பகர்ணனை நோக்கி," இப்போது நான் அழைத்தது, உன்னிடம் இருந்து அறிவுரையை கேட்க அல்ல. அவ்வாறு அறிவுரையை சொல்வதற்கு நீ ஒன்றும் எனது அமைச்சனும் இல்லை. நீ என்னிடம் கூறிய வார்த்தைகளின் மூலமாக உனது வீரம் வீணானது என்பதை நிரூபித்து விட்டாய். நீ அந்த இராமனைக் கண்ட அச்சம் கொண்டதால் தான், இது போன்ற வார்த்தைகளை பேசுகின்றாய் போலும்! எப்போது அந்த இராமனைப் புகழ்ந்தாயோ, அப்போதே நீ போர் செய்வதற்கு உரிய வலிமையை இழந்தாய். இனி உனக்கு ஆக வேண்டியது என்ன இருக்கிறது. உனது மாளிகைக்குச் சென்று இரவும், பகலும் கண்களை மூடிக் கொண்டு போய் தூங்கு" என்றான்.
பின்பு இராவணன் தனது பணியாளர்களிடம்," எனது தேரையும் ஆயுதங்களையும் கொண்டு வாருங்கள். இவர்களைப் போன்ற தம்பிகளைப் பெற்றதால் என்ன பயன்? சரி. மீண்டும், இப்போது நானே போர் களம் செல்கிறேன்" என்று கூறி போருக்கு புறப்படத் தயாரானான்.
இராவணன், தானே போருக்கு செல்வதைக் கண்ட கும்பகர்ணன் அவனது பாதங்களைப் பற்றினான். பிறகு இராவணனை நோக்கி," ஐயனே! என்னை மன்னித்து விடுங்கள். நானே , தங்கள் சார்பாக போருக்குச் செல்கிறேன். ஆனால், தம்பி என்ற முறையில் கடைசியாகத் தங்களிடம் சில வார்த்தைகளைக் கூறக் கடமைப் பட்டு இருக்கிறேன். தயவு கூர்ந்து அதனைத் தாங்கள் என் பொருட்டு கேட்டு அருள வேண்டுகிறேன். நான் எத்தனையோ போரில் வெற்றி அடைந்து உள்ளேன். ஆனால், இப்போரிலே வெற்றி என்பது எனக்குக் கிடைக்கப் போவதில்லை. காலம் என்னை காலனிடம் அனுப்பத் துடிக்கிறது. விதியோ, என்னை பின் புறத்தில் இருந்து கொண்டு தள்ளுகிறது. இந்தப் போரில் நான் இறப்பது என்னமோ உறுதி.
அது அப்படி இருக்க, அரசே! ஒரு வேளை நான் இந்தப் போரிலே இறந்தால், சீதையை விட்டு விடுவதே நமக்கு நல்லது என்று கருதி விட்டு விடுவீர். இல்லையேல் காற்றில் வீசப் பட்ட சாம்பல் போல அரக்கர்களின் சேனையுடன் நீரும் சேர்ந்து அழிந்து விடுவீர். அது எப்படி எனில், பகைவர்கள் என்னை வென்று விடுவார்களானால், உம்மையும் வென்று விடுவார்கள். இது உறுதி. அதனால், மீண்டும் சொல்கிறேன், நீ பெற்றத் தவப் பயனை வீணாக்காமல் சீதையை இரமானிடம் எனது மரணத்திற்குப் பின்னாவது கொண்டு சென்று விட்டு விடு. இத்துடன் நான் போகிறேன் . கடன் தீர்க்க எனக்கு நேரம் வந்து விட்டது. இனி நான் எங்கே மீண்டும் உனது முகத்தில் விழிக்கப் போகிறேன்! " என்று கூறி விட்டுக் கும்பகர்ணன் வேகமாக யுத்த களம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றான். அப்போது இராவணன் கண் கலங்க கும்பகர்ணனை வழி அனுப்பி வைத்தான். மறுபுறம், கும்பகர்ணனின் உறவினர்கள் அனைவரும் அவன் யுத்த களம் புறப்பட்டதை எண்ணி ஏக்கம் கொண்டார்கள்.
இராவணன் ஒரு மிகப் பெரிய அசுர சேனையை வழித் துணையாக கும்பகர்ணன் பொருட்டு அனுப்பி வைத்தான். கும்பகர்ணன் நகர வாயிலை அடைந்து, அவனுக்காகவே செய்யப் பட்ட மலை போன்ற இரதம் ஒன்றில் ஏறிக் கொண்டான். அத்தேரில் ஆயிரம் சிங்கங்களும், ஆயிரம் யாளிகளும், ஆயிரம் மத யானைகளும், ஆயிரம் பூதங்களும் பூட்டப் பட்டு இருந்தன. அந்தத் தேர் போர் களம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.
அக்கும்பகர்ணனைப் பின்பற்றி பெரும் படையும் சென்றது. அப்படையில் அரக்கர்கள் பலதரப்பட்ட ஆயுதங்களையும் வைத்து இருந்தனர். கும்பகர்ணன் போர்க்களம் நோக்கிச் செல்கையில், பணியாளர்கள் கொடுத்த கல்லையும் இறைச்சியையும் இருள் சூழ்ந்த குகையினுள் போடுகின்றது போல, வாயில் எடுத்து உண்ட வண்ணம் யாவரும் திட்டுக்கிடும் படிச் சென்றான். அது கண்ட வானில் நின்ற தேவர்கள் அனைவரும் ," இவனது கொடும் பசி வானரர்களையும் தின்று விடும் போல் உள்ளதே! வாருங்கள் இவன் நம்மையும் தின்று விடப் போகிறான். நாம் இங்கிருந்து சென்று விடலாம் " என்று கூறிக் கொண்டே, மனம் போன திசையில் சிதறி ஓடினார்கள்.
மறுபுறம், கும்பகர்ணன் போருக்கு வருவதை இராமபிரான் கண்டார். அவருடைய நெஞ்சிலே போருக்கு வருபவன் யாராக இருக்கக் கூடும் என்ற எண்ணம் எழுந்தது. அவர் தமக்குள்ளேயே ,' விண்ணைத் தொடுகின்ற மிகவுயர்ந்த இத்தேரின் கொடியிலே வீணையின் சித்திரம் பொறிக்கப் பட்டிருக்கவில்லை. இது சிங்கக் கொடியை கொண்டு இருக்கிறது. காற்றினும் கடிது நோக்கினாலும், ஒரே சமயத்தில் முழுவதையும் பார்பதற்கு முடியாத பெரும் தோற்றத்தைக் கொண்டு இருக்கும் இவன் யாராக இருக்கக் கூடும்?" என்று சிந்தித்தார்.
இராமபிரான் அவ்வாறு சிந்தித்துக் கொண்டு இருந்த போது, அவர் அருகிலே விபீஷணன் வந்து நின்றான். அப்போது அவனை நோக்கி ஸ்ரீ இராமர் எதிரே வந்து கொண்டு இருந்த அரக்கனை கைகாட்டி ," இவனது ஒரு தோளுடன் மற்றொரு தோளுள்ள இடம் முழுவதையும் தொடர்ச்சியாகப் பார்க்கத் தொடங்கினாலும், பல நாட்கள் கழிந்து விடும். பூமியின் நடுவிலே நிற்கின்ற ஒப்பற்ற கால் முளைத்த மேரு மலை இவ்வாறு வந்துள்ளதோ? இவனைப் போருக்கு விரும்பி வந்த ஒரு வீரன் என்று நினைக்க முடியவில்லை. சூரியனின் ஒளிக்கதிர்களும் மலை போன்ற இருக்கும் இவனது உடலால் மறைக்கப்பட்டு இருப்பதால், இப்போது இந்தப் பகலும் கூட இரவு போலத் தோன்றுகிறதே! மேலும், இவனைப் பார்த்த மாத்திரத்தில் நமது வானர சேனை அலறி அடித்து ஓடுவதைப் பார். அவ்வாறு ஓடும் வானர வீரர்களைப் பார்க்கும் பொழுது, ஒரு வேளை, இராவணன் தான் வானர வீரர்களை பயமுறுத்தி ஓடச் செய்ய தனது உருவத்தை மாற்றிக் கொண்டு வந்துள்ளானோ? என்று எனக்குப் படுகிறது. ஏனெனில், இவனது முக ஜாடை இராவணனை போல அல்லவா உள்ளது!" என்றார்.
உடனே விபீஷணன் இராமபிரானின் பாதங்களை வணங்கி," ஐயனே! இவன் பெருமையில் சிறந்த லங்காதிபதியான இராவணனுக்குப் பின் பிறந்தவன். எனக்கோ முன் பிறந்தவன். இவன் கூறிய சூழப் படையைக் கொண்டவன். அது இவனுக்கு ஈசனால் வழங்கப் பட்டது. அதனைக் கொண்டு எண்ணற்ற யுத்தங்களை வென்று உள்ளான் . அப்படிப் பட்ட இவன் கும்பகர்ணன் என்னும் நாமம் கொண்டவன். வரங்கள் பல பெற்ற இவன், அண்ணன் இராவணனின் வலது கை போன்றவன். குழந்தைப் பருவத்திலேயே ஐராவதத்தின் காதுகளை கிழித்து, அதன் தந்தங்களை உடைத்தவன். அதே சமயத்தில் , சீதா பிராட்டியை இராவணன் கடத்தி இலங்கைக்கு கொண்டு சென்ற போது தைரியமாக ' அண்ணா! நீ செய்த காரியம் தவறு. அது நம்மை அழித்துவிடும்' என்று இராவணனிடம் சுட்டிக் காட்டிய நல்லவன். அதே சமயத்தில் நெருப்பையும், காற்றையும் பிழிந்து சாறு எடுக்க வல்ல வலிமை பொருந்தியவன். கடலில் இறங்கி மீன்கள் யாவும் சாகும் படி, அந்நீர் முழுவதையும் எத்தி எறியக் கூடியவன். அதனால், மன உறுதியிலும் எல்லோரையும் காட்டிலும் மேம்பட்டவன்" என்று சொல்லி முடித்தான்.
விபீஷணன் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டு இருந்த சுக்கிரீவன், இராமபிரானை நோக்கி," ஐயனே! இன்று இந்தக் கும்பகர்ணனைக் கொல்வதால் நமக்கு யாதொரு பயனும் விளையப் போவதில்லை. மாறாக, இவனை நாம் நமது பக்கம் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்தால், அதன் படி இவனும் நம்முடன் சேர்ந்து கொண்டால் அதுவே நலமான செயலாக இருக்கும் அல்லவா? அதனால், மித்திரன் விபீஷணன் துயரும் நீங்குமே! " என்றான்.
இராமபிரான் சுக்கிரீவனின் வார்த்தையைக் கேட்டதும், அதுவே நல்லது என்று முடிவு செய்தார். உடனே," கும்பகர்ணனிடத்தில் சென்று இதனைத் தெரிவிப்பவர் யார்?" என்று வினவினார்.
விபீஷணன்," பெருமானே! அப்படி என்றால் நானே கும்பகர்ணனிடத்தில் செல்கிறேன். அவனிடத்தில் எனது அறிவின் வலிமையால் உண்மைகளையும் நல்லவைகளையும் எடுத்துச் சொல்லி, அவனைக் குற்றம் நீங்கத் தெளிவித்து, அவன் இங்கே வந்து சேர விரும்பினால் அழைத்து வருகின்றேன்!" என்றான்.
"நல்லது.போய் வா!" என்று, இராமபிரான் விபீஷணனுக்கு விடை கொடுத்து அனுப்பினார்.
விபீஷணன் அவ்வாறே அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, இடையில் காணப்பட்ட வானர வீரர்களின் பெரும் சேனைக் கடலைத் தாண்டி அண்ணன் கும்பகர்ணனை அடைந்தான்.
அக்கணம் விபீஷணனைக் கண்ட குமபகர்ணன் மிகவும் மகிழ்ந்து சகோதர பாசத்தால் தன்னையும் மீறி தாரை, தாரையாகக் கண்ணீரை வடித்தான். தம்பியை தூக்கி இருகக் கட்டி அணைத்துக் கொண்டான். சிறிது நேரம் அவ்விருவரும் சகோதர பாசத்தால் கட்டுண்டு கிடந்தார்கள். பிறகு கும்பகர்ணன் தம்பி விபீஷணனை நோக்கி," தம்பி! நீ எங்களை விட்டு விலகிச் சென்றதால் நீ ஒருவனாவது பிழைத்தாய் என்று சந்தோஷம் கொண்டேன். என்னுடைய அந்த மகிழ்ச்சி கெடுவது போல, ஏனடா? இப்போது நீ வந்தாய்? இராமபிரான், உனக்கு அடைக்கலத்துடன், அரச செல்வத்தையும் அளித்தார் என்று கேட்டவுடன் நான் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன் தெரியுமா? ஆனால், இப்போது எமனது வாயில் படியில் நிற்கும் என்னிடம், நீ ஏனடா வந்தாய்? அண்ணன் இராவணன் மாற்றான் ஒருவனது மனைவியை தூக்கி வந்து இலங்கையில் சிறை வைத்ததால் புலஸ்திய மாமுனிவரின் குலப் பெருமை அழிந்து விட்டதே என்று எண்ணி இருந்த எனக்கு, எப்போது நீ இராமன் பக்கம் சேர்ந்தாய் என்று தெரிந்ததோ, அப்போதே அந்த மகரிஷியின் குலம் தளைத்து ஒங்கப் போகிறது என்ற பெரும் சந்தோஷத்தில் இருந்தேன். ஆனால், இப்போது நீ இங்கு வந்ததால் அந்த சந்தோஷம் பறி போய் விடுமோ எனத் துக்கம் கொள்கிறேன். எனது நெஞ்சமும் நீ இங்கு வந்ததால் மிகவும் வருந்துகிறது. நாங்கள் அனைவரும் இறந்து விட்ட பிறகு, எங்களுக்குப் பிண்டம் போட நீ ஒருவனாவது பிழைத்து இருக்க வேண்டாமோ?
மேலும், எல்லோருக்கும் தலைவராகிய இராமபிரான் எங்களைக் கொள்ளும் பொருட்டு, நாணேற்றி வில்லை ஏந்தியவராகக் காத்துக் கொண்டு இருக்கிறார். பெருவலி படைத்த அவரது தம்பியும் அவருக்குத் துணையாக நிற்கிறான். மற்றும் வானரர்களும் அவருக்குத் துணையாக நிரம்ப இருக்கின்றார்கள். இவற்றுக்குத் தகுந்தாற்போல கூற்றுவனும் தயாராக இருக்கிறான். விதியும் அவர்கள் எல்லோருக்கும் துணையாக நிற்கிறது.விபீஷணா! அப்படி இருக்க உனது சிறந்த வலிமை அழிவு பெறவா எங்களிடம் வந்தாய்?. நான் சொல்வதை நீயாவது கேள், பழமையான இலங்கை நகருக்கு இப்போது நீ வர வேண்டியது இல்லை. இழிவுள்ள அரக்கர் கூட்டம் முழுவதும் அழிந்த பின்னர், இலக்குமி வாழ்கின்ற மார்பையுடைய இராமபிரானுடம் இலங்கையில் நுழைந்து அரச செல்வத்தை அனுபவிப்பாய். அப்போது தான் இலங்கைக்கு நீ மீண்டும் வர வேண்டியவன். ஆகவே, இப்போது நீ விரைவாகத் திரும்பி இராமரிடத்தில் செல்வாய்!" எனக் கூறினான்.
கும்பகர்ணனின் வார்த்தைகளைக் கேட்ட விபீஷணன்," அண்ணா! உம்மிடம் சொல்ல வேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது. அதற்காகத் தான் வந்தேன்" என்றான்.
அது கேட்டு," அப்படியா? வந்த காரியத்தைச் சொல்!" என்றான் கும்பகர்ணன்.
"அண்ணா! அறியாமையுடைய என்னிடத்தில் அருள் பாலித்த இராமபிரான், அங்ஙனமே நீர் வந்தாலும் உமக்கு அருள் செய்வார். இது மட்டும் அல்ல. உமக்கு எவராலும் தீங்கு நேராத வண்ணம் அபயமும் கருணையும் செய்வார். மேலும்,அவர் அறியாமை நிரம்பிய பிறவி நோய்க்கு மருந்துமாவார். இன்பத்தையும், துன்பத்தையும் கடந்து மோட்சம் என்னும் நிலையைத் தருவார். நீர், என்னைப் போல அவரிடத்தில் வந்தால் அது ஒன்றே எனக்குப் போதும். இலங்கையின் அரச செல்வத்தையும், ராஜ்ஜியத்தையும் கூட உம்மிடத்தில் நான் அளித்து விடுகிறேன். எனது அண்ணன், நீ மட்டும் எனக்குப் போதும். மேலும், அண்ணா நாம் கற்ற வேதங்களின் சாரம் என்ன சொல்கிறது, தீயவைச் செய்பவர் உடன் பிறந்தவர்கள் ஆனாலும், அறநோக்குக் கொண்டவர்கள் அவரைக் கைவிடுதலே சிறப்பாகும். அதன்படி, உலகத்தவர் உடம்பில் தோன்றியதாயினும் கட்டியை அறுத்தெடுத்து, அதில் அசுத்த இரத்தம் இல்லாதபடி போக்கிக் காரமிட்டு ஆற்றுவார்கள். அதே போல இராவணனை நம்முடையவர் என்று எண்ணாது, அவரை வேறுபடுத்தி அழிக்க வேண்டும். அதுவே அறிவுடையோர் செய்யும் செயல் ஆகும். ஆதலால், தருமத்தை கடைப்பிடித்து நீரும் ஸ்ரீ இராமரின் பாதம் சேருவீர். மேலும், இராமபிரானது அருளால், உமது பெரும் நித்திரையும் ஒழிந்து போக செல்வமும் சிரஞ்சீவித் தன்மையும் பெற்று வாழ்வீர். யம பயமும் உமக்கு என்றும் வராது. மேலும், நீ ஸ்ரீ இராமருடன் சேர்வதால், தேவர்களும் முன்பு உன்னுடன் கொண்ட பகையை மறப்பர். அதனால், நீ இப்போதே ஸ்ரீ இராமருடன் நட்பு கொள். அதனை விடுத்து, மரத்தில் கனிகள் காய்க்கும் நேரம் பார்த்து அந்த மரத்தையே வெட்டுவது போல, முக்தியைக் கொடுக்க வல்ல ஸ்ரீ இராமபிரான் இருக்கும் போது, இராவணனின் பொருட்டு நரகத்தை அடையாதே! எனது ஐயனைக் காண இப்போதாவது வா " என்று விபீஷணன் கும்பகர்ணனிடத்தில் சொல்ல வேண்டியனவற்றை கூறி முடித்தான்.
விபீஷணனின் வார்த்தைகளைப் பொறுமையுடன் கேட்டான் கும்பகர்ணன், பிறகு விபீஷணனைப் பார்த்து," தம்பி! நீ சொல்லிய வார்த்தைகள் எதையும் நான் மறுக்க வில்லை. ஸ்ரீ இராமர் திருமாலின் அவதாரம் என்பது எனக்கு எப்போதோ தெரியும். ஆனால், நீயும் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். என்னை இத்தனை நாட்களாகப் பேணி வளர்த்தவர் அருமை அண்ணன் இராவணன். அவர் மற்றவர்களுக்கு எப்படியோ! ஆனால், எனக்கு இதுவரையில் நல்ல அண்ணனாகத் தான் நடந்து உள்ளார். அவர் எனக்குத் தாயும், தந்தையுமானவர். அவர் இல்லாத இந்த உலகத்தை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க இயலாது. அவர் எனது கண் முன்னாலேயே இராமனின் கையால் மடிவதை நான் பார்த்துக் கொண்டு இருக்க இயலாது. அவரைத் தவிர எனக்கு உலகத்தில் எதுவுமே பெரிதல்ல. எனவே அவர் பொருட்டு எனது உயிரைக் கொடுப்பதே சாலச் சிறந்தது, அதனை விடுத்து நீரில் எழுதிய கோலத்துக்கு ஒப்பான நிலையில்லாத செல்வ வாழ்க்கையை விரும்பி இராமபிரானிடம் ஒரு போதும் நான் சேர மாட்டேன். இதனை நீயே உன்னை இங்கு தூது அனுப்பிய இராமனிடத்தில் போய் சொல்வாயாக. அப்படியே, நான் சொன்னதாக அந்த லக்ஷ்மணனிடத்தில் சொல், ‘ தங்கை சூர்ப்பணகையின் உறுப்புக்களை சேதப்படுத்திய அவனை வீழ்த்த அவளது அண்ணன் கும்பகர்ணன் வந்துள்ளான்’ என்று. அத்துடன் சுக்கிரீவனிடத்தில் போய் சொல்,'இன்றுடன் வானரப் படையின் பெரும்பான்மையான சேனா வீரர்கள் மடியப் போகிறார்கள்' என்று. மேலும், விபீஷணா எனக்கே தெரியும் ஸ்ரீ இராமனை எதிர்த்து நான் இந்த யுத்தத்தில் ஜெயிக்கப் போவது இல்லை என்று. ஆனால் அதே சமயத்தில் அண்ணன் இராவணனின் சோற்றைத் தின்ற நான், எனது பெரும் பலத்தைக் கொண்டு, இராமனின் வெற்றியை தாமதப்படுத்த முடியும். ஆகவே, இப்போது நீ உனது இருப்பிடம் செல், வானர வீரர்கள் என்னால் இன்று அலறப் போகும் காட்சியைப் பார்" என்று கூறி விபீஷணனை கும்பகர்ணன் தரையில் இறக்கி இராமனிடமே அனுப்பி வைத்தான்.
விபீஷணன் ஸ்ரீ இராமனிடத்தில் சென்றான், கும்பகர்ணனின் மனநிலையை அவரிடம் விரிவாக எடுத்துச் சொன்னான். அது போல, அவன் சொன்ன வார்த்தைகளையும் கவலையுடன் உள்ளது, உள்ளபடியே சொன்னான்.
விபீஷணன் கூறியதைக் கேட்டு புன்னகை செய்தார் ஸ்ரீ இராமர். பிறகு விபீஷணனிடம்," அருமை விபீஷணா! உனது அண்ணனை நான் கொல்வது ஒன்றும் கடினமான காரியம் இல்லை. ஆனால், உனது கண் முன்னாள், கும்பகர்ணனை எவ்வாறு கொல்வது என்று தான் யோசித்துக் கொண்டு இருந்தேன். சரி...! விதி வலியது என்று அடிக்கடி நிரூபித்துக் காட்டுகிறது. அப்படி இருக்கும் போது நாம் என்ன செய்ய?" என்று கூறிக் கொண்டார்.
இராமர் கூறிய வார்த்தைகளில் இருந்து வானர சேனை, அன்றும் யுத்தம் தொடங்கப் போவது உறுதி என்று அறிந்து மிகவும் மகிழ்ந்தது. அதனால், வானர வீரர்கள் பூமியே அதிரும் படியான மிகப் பெரும் ஆரவாரத்தை செய்தனர். கும்பகர்ணனின் அரக்கப் படையும் போர் முரசுகளைக் கொட்டியது. அரக்கரின் நால்வகை சேனையும் முன்னேறியது. வானர சேனையும் முன்னேறியது. அக்கணமே பெரும் யுத்தம் தொடங்கியது, அதனால் தனக்கு நிறைய புது மாமிசம் கிடைக்கப் போவதை எண்ணிப் பேய்கள் மிகவும் மகிழ்ந்தன.
மறுபுறம் புயல் மழையில் மழை நீரை ஓட்டுகின்ற காற்றும், காற்றை எதிர்த்து நிற்கின்ற மழை நீரும் போல அரக்க சேனையும், வானர சேனையும் ஒருவரை ஒருவர் எதிர்த்து கடுமையான யுத்ததத்தை மேற்கொண்டனர். கும்பகர்ணனும் எப்போதும் இரத்தம் படிந்து இருக்கும் தனது சூலாயுதத்தைக் கொண்டு தனக்கே உரிய ரதம் தனில் முன்னேறி தீரத்துடன் தனது எதிரிகளான வானர வீரர்களைத் தாக்கத் தொடங்கினான். அவன் வரும் வேகத்திலேயே எண்ணற்ற வானர வீரர்கள் சிதறி ஓடினர். கூட்டம், கூட்டமாக கையில் அகப்பட்ட வானர வீரர்களின் தலைகளை எல்லாம் தனது நகங்கள் கொண்டே கிள்ளி எறிந்தான். அது கண்ட எண்ணற்ற வானர வீரர்கள் பயத்தில் சிதறி ஓடினார்கள்.
போர்க்களத்தில் கும்பகர்ணன் தனது வீரத்தை முழுவதுமாகக் காண்பித்தான். அவன் தன்னை எதிர்க்க வந்த வானர கூட்டத்தை பிடித்து மலையில் கொத்தாக மோதினான். அதன் மூலம் ஒரே சமயத்தில் ஆயிரத்திற்கும் மேற் பட்ட வானர வீரர்கள் துடிதுடித்து மடிந்தனர். இன்னும் பலரை பூமியில் அடித்தான், கால்களால் புதைத்தான், ஒருவர் தலையை மற்றவருடன் மோதினான், சிலரை வானத்தில் தூக்கி எறிந்தான். இன்னும் பல வானர வீரர்களை தனது கைகள் கொண்டே பிசைந்தான். அப்போது அவர்கள் உடலில் இருந்து வெளி வந்த இரத்தத்தை தனது உடம்பில் சந்தனம் போலப் பூசிக் கொண்டான். அவ்வாறு கும்பகர்ணனால் கொல்லப்பட்டு இறந்த வானர வீரர்களின் சடலங்கள் ஒரு வெண் மலைபோலக் காணப்பட்டது. அப்படி இறந்தவர்களின் எண்ணிக்கையும் கணக்கில் அடங்காது.
போர் தொடங்கிய சில நேரத்திலேயே, கும்பகர்ணன் போர் செய்த விதத்தை ஒற்றர்கள் மூலம் அறிந்த இராவணன்," எனது தம்பி கும்பகர்ணன் இன்றே போரை முடித்து விடுவான். இனி நான் இராமலக்ஷ்மணர்களைப் பற்றிக் கவலை படத் தேவை இல்லை" என்று கூறி மகிழ்ந்தான். மறுபுறம் தம்மைத் தாக்கிய கும்பகர்ணனை வானர வீரர்கள் எப்போதும் போல பெரிய, பெரிய பாறைகளைக் கொண்டு தாக்கினார்கள். ஆனால், அவற்றால் கும்பகர்ணனுக்கு ஒரு சேதாரமும் ஏற்பட வில்லை. அவ்வாறு அங்கிருந்த அனைத்து மலைகளையும் பெயர்த்து கும்பகர்ணன் மீது வானர வீரர்கள் எறிந்ததால், இனி எறிவதற்கு அங்கு மலைகள் இல்லாமல் போயின. அது போல, மரங்களும் இல்லாமல் போயின.
அப்போது கும்பகர்ணனை வானரத் தளபதிகளுள் ஒருவனான நீலன் தடுக்க எண்ணிப் போர் புரிந்தான். ஆனால், நீலனை அடித்து துவம்சம் செய்தான் கும்பகர்ணன். நீலனைக் காப்பாற்றும் பொருட்டு அங்கதன் வந்தான். அங்கதனைக் கண்ட கும்பகர்ணன், நீலனை ஒரு பொம்மை போல தரையில் தூக்கி வீசினான். மயங்கிய நிலையில் இருந்த நீலனை வானர வீரர்கள் மருத்துவச் சாலைக்கு எடுத்துச் சென்றனர்.
அங்கதனைப் பார்த்த கும்பகர்ணன், "குரங்கே யாராடா? நீ!" என்றான்.
அதற்கு அங்கதன்," ஒரு காலத்தில் உனது அண்ணன் இராவணனை மண்ணில் புரட்டி எடுத்ததும் கூட வாலி என்னும் நாமம் கொண்ட ஒரு குரங்கு தான். அதனால், குரங்கு என்பதால் இங்கு உள்ளவர்களை ஏளனம் செய்யாதே. மேலும், நான் அந்த வாலியின் மைந்தன் அங்கதன் ஆவேன்" என்றான்.
அது கேட்ட கும்பகர்ணன்," எனது அண்ணனை உனது தந்தை அன்று அவமானப் படுத்தியதற்கு இன்று உன்னைக் கொன்று பழி தீர்த்துக் கொள்கிறேன்" என்று சீறினான். அக்கணமே அங்கதனை தனது கைகளால் தூக்க முயற்சி செய்தான். ஆனால், அங்கதன், அதில் இருந்து நழுவி தனது வலிமையான கதை கொண்டு கும்பகர்ணனைத் தாக்கினான். ஆனால், கும்பகர்ணனின் வலிமை முன்னாள், அந்தக் கதை எம்மாத்திரம்? ஒரு கணத்தில் அதனைப் பிடிங்கி முறித்துப் போட்டான் கும்பகர்ணன். மேலும், அங்கதனின் கால்களைப் பிடித்து லாவகமாகத் தூக்கி, அவனை குத்தத் தொடங்கினான். அதனால் , வலி தாங்க முடியாமால் அங்கதன் கத்தினான்.
"பலம் கொண்ட நமது இளவரசர் அங்கதனுக்கே, இந்தக் கதியா?" என்று சொல்லிக் கொண்டு வானர சேனையின் வீரர்கள் பின்வாங்கி ஓடினார்கள். அதனைக் கண்ட அரக்கர்கள் சிரித்தார்கள். தேவர்கள் வருந்தினார்கள். அப்போது, இந்தக் காட்சியைக் கண்டான் மாவீரன் லக்ஷ்மணன், " எனது பாணத்தால் இந்த அரக்கனை வதைப்பேன்" என்று கூறி கும்பகர்ணன் முன் சென்று நின்றான். அதைக் கண்ட கும்பகர்ணன் அங்கதனை தூக்கி எறிந்து விட்டு," நீதான் இராமனா? உன்னைத் தான் எதிரபார்த்துக் கொண்டு இருந்தேன். இனி தாமதம் ஏன்? வா மோதலாம்" என்றான்.
அதுகேட்ட லக்ஷ்மணன்," நான் ஸ்ரீ இராமன் இல்லை, அவருக்கு இளையவன் லக்ஷ்மணன். உன்னைப் போன்ற கொடியவனை அழிக்க அவர் தான் வர வேண்டும் என்பது இல்லை. நான் ஒருவனே போதும். உனக்கு வீரம் இருந்தால் என்னுடைய அம்புகளுக்கு இப்போது பதில் சொல்" என்று கூறி. கும்பகர்ணன் மீது சக்திவாய்ந்த பாணத்தை எய்த்தான். அதனால், அவனது கையில் இருந்த, வெற்றியை மட்டுமே அதுவரையில் கண்டு, குருதிக் கடலில் எப்போதும் குளிக்கும் சூலாயுதம் பல துண்டுகளாக உடைந்தது. சிவன் தனக்கு அளித்த சூலாயுதம் உடைந்தது கண்டு," இந்த வீரன், நமக்கு நிகரானவன் தான்" என்று கூறிக் கொண்டான் கும்பகர்ணன். பிறகு, அண்ணன் இராவணன் தனக்கு அளித்த சக்திவாய்ந்த வில்லில் பல கொடிய உயிர் கொல்லும் அம்புகளைப் பூட்டி லக்ஷ்மணன் மீது எய்தான். அதில் பல அம்புகளை லக்ஷ்மணன் வானில் வைத்தே தனது பாணங்கள் கொண்டு முறித்தான். இருந்தாலும், சில அம்புகள் லக்ஷ்மணன் உடலை காயப்படுத்தியது. அதனால், அவனது உடலில் இருந்து இரத்தம் வெகுவாக வெளியேறியது.
எனினும் அதற்கெல்லாம் வருந்தாத லக்ஷ்மணன், தனது வில்லில் பல பாணங்களைத் தொடுக்க முற்பட்ட போது, அனுமன் ஓடி வந்து லக்ஷ்மணனிடம்," இளைய பெருமாளே, அவன் ரதத்தில் இருந்து யுத்தம் செய்கிறான். தாங்களோ தரையில் நின்ற படி யுத்தம் செய்கின்றீர்கள். இது சமமான யுத்தம் அல்ல. அதனால், என் தோளின் மீது ஏறிக் கொள்ளுங்கள். பிறகு இந்த அரக்கனின் மீது பாணங்களைப் பிரயோகியுங்கள்" என்றான்.
அதன் படியே லக்ஷ்மணன், அனுமனின் தோள் மீது ஏறிக் கொண்டு யுத்தம் செய்யத் தொடங்கினான். லக்ஷ்மணன் விடுத்த அம்புகளை கும்பகர்ணன் லாவகமாகத் தடுத்து நிறுத்தினான். அப்போது கும்பகர்ணன் லக்ஷ்மணனிடம்," லக்ஷ்மணா! நீ இராமனின் தம்பி, நான் இராவணனின் தம்பி. இனி நம் இருவரில் பிழைக்கப் போவது ஒருவர் தான். உன்னை ஒரு கை பார்க்கிறேன். முடிந்தால் இந்த பாணத்தைத் தடுத்து பார், என்று கூறி மீண்டும் திவ்ய அஸ்த்திரம் ஒன்றை வேகமாக லக்ஷ்மணன் மீது ஏவினான். ஆனால், லக்ஷ்மணன் அதனைத் தனது பாணம் கொண்டு மிகவும் சாதாரணமாகத் தடுத்தான். பிறகு, முன்பு விசுவாமித்திரரிடம் இருந்து பெற்ற சக்திவாய்ந்த அஸ்த்திரமான பலே, அதிபலே என்னும் அஸ்த்திரத்தை கும்பகர்ணன் மீது ஏவினான். அந்த அஸ்த்திரம் பல கோடி அஸ்த்திரங்களாக ரூபம் பெற்று, கும்பகர்ணனின் இரதத்தை செலுத்தி நின்ற ஆயிரம் சிங்கங்களையும் , ஆயிரம் யாளிகளையும் , ஆயிரம் மத யானைகளையும் , ஆயிரம் பூதங்களையும் கொன்றது. அத்துடன், கும்பகர்ணனின் ரதத்தையும் அழித்தது.
அவ்வாறு இரதத்தை இழந்த கும்பகர்ணன் வானில் இருந்து கீழ் இறங்கி யுத்தம் செய்தான். இனியும், அனுமனின் தோலின் மீது ஏறி அமர்ந்து யுத்தம் செய்வது சரி சமமமாக இருக்காது என்று கருதிய லக்ஷ்மணனும் கீழே இறங்கி போர் புரியத் தொடங்கினான். அப்போது,லக்ஷ்மணனிடம் கும்பகர்ணன்," லக்ஷ்மணா! எனது அனைத்து பாணங்களையும் அழித்து விட்டாய். பொறுத்தேன். போகட்டும் என்று இருந்தேன். ஆனால், இனியும் உன்னை விடுவது முறையல்ல, இதோ இந்த பாணம் சிவபெருமானின் அருளால் அரக்கர்களுக்கு கிடைத்தது. இதில் இருந்து தேவர்களும் கூட இன்று வரையில் தப்பித்தது இல்லை. முடிந்தால் உன்னை காப்பாற்றிக் கொள்" என்று கூறி ஈசனிடம் இருந்து பெற்ற அந்த வலிய அஸ்த்திரத்தை லக்ஷ்மணன் மீது ஏவினான். அது தன் மீது பட்ட மாத்திரத்திலேயே லக்ஷ்மணன் மயங்கினான்.
அது கண்ட அனுமான், லக்ஷ்மணனை பத்திரமான இடத்தில் கொண்டு போய் சேர்த்தான். பிறகு மீண்டும் கும்பகர்ணன் இருக்குமிடம் திரும்பி கும்பகர்ணனிடம்," ஏ! அரக்கனே இது வரையில் நான் தோல்வி காணாதவன்.அப்படிப் பட்ட என்னை, நீ இப்போது தோற்கடித்து விட்டால், இனி உனது வழியில் நான் எப்போதுமே குறிக்கிட மாட்டேன். முடிந்தால் என்னை வெற்றி கொள் பார்ப்போம்" என்றான்.
அது கேட்ட கும்பகர்ணன்," வானரனே! உன்னை நான் நன்கு அறிவேன். உன்னை நான் மறக்கவும் மாட்டேன். எனது அண்ணனின் அழகிய நகரத்தை கொளுத்திய குரங்கே. நானும் உன்னுடம் மோத ஆவலாகத் தான் இருக்கிறேன். வா மோதலாம் " என்றான்.
கதாயுதத்தில் சிறந்து விளங்கிய அனுமனுக்கும், கும்பகர்ணனுக்கும் இடையே தேவர்களே அஞ்சும் படியாகப் பெரிய யுத்தம் ஒன்று நடந்தது. அப்போது இருவர் கதையும் உராயும் போது ஏற்பட்ட தீப் பிழம்பு, மின்னல் போலக் காணப்பட்டது. வெகு நேரம் இருவருக்கும் இடையில் கடும் போர் நடந்தது. வாழ்க்கையில் சோர்வு என்றால் என்னவென்றே அறியாத மாருதிக்கு, முதல் முறையாக கும்பகர்ணனுடன் ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக சோர்வின் அர்த்தம் புரிந்தது. துவண்டு போனான். ஆனால், கும்பகர்ணனோ சலிக்க வில்லை. சோர்ந்து போகவும் இல்லை. அனுமனின் கதையை, தனது கதையால் அடித்து வீசினான். கதையை, இழந்த அனுமனனையும் தாக்கினான். அனுமன் முதல் முறையாகத் தோல்வியை கும்பகர்ணனால் ருசித்தான். அது கண்ட சுக்கிரீவன் பாய்ந்து சென்று கும்பகர்ணனைத் தாக்கினான்.
தீடீர் என்று தன்னைத் தாக்கிய இந்தக் குரங்கு யாராக இருக்கும் என்று சிந்தித்தான். அக்கணமே, சுக்கிரீவன் ," என்னை யார் என்று அறியவில்லையா! மூடனே. நானே கிஷ்கிந்தையின் அரசன் சுக்கிரீவன் என்னும் நாமம் கொண்டவன். நான் உனக்குப் பரிட்சயம் ஆனவன் இல்லை என்றாலும், உனது அண்ணன் இராவணன் என்னை எப்போதும் மறக்க மாட்டான் காரணம், ஒரு முறை அவனது மகுடத்தில் இருந்த ஒளி வீசும் மணிகளை பறித்துச் சென்று அவனுக்குப் பாடம் கற்பித்து உள்ளேன். கவலைப்படாதே, இப்போது உனக்கும் கற்பிக்கிறேன்" என்றான்.
அது கேட்டு கும்பகர்ணன் கும்பகர்ணன்," ஒ...! மாற்றானுடன் சேர்ந்து, சொந்த சகோதரனையே கொன்ற அந்த உத்தம வீரன் நீதானோ? நீ அன்று எனது உயிருக்கு, உயிரான அண்ணனை மகுட பங்கம் செய்து அவமானப் படுத்தியதற்கு நிச்சயம் நான் தான் இன்று உனக்கு ஒரு பாடத்தை கற்பிக்கப் போகிறேன் பார்!" என்று கூறினான். மறுகணமே, தனது கைகளில் இருந்த கடுமையான ஆயுதங்கள் கொண்டு சுக்கிரீவனை அவன் அலறும் படித் தாக்கினான். சுக்கிரீவன், கும்பகர்ணனைப் பதிலுக்குத் தாக்கினாலும், அந்தத் தாக்குதலை அவன் ஒரு பொருட்டாகவே கருத வில்லை. மாறாக, கும்பகர்ணன் அடித்த அடி, இடி போல சுக்கிரீவனின் உடலில் இறங்கியது. அதனால், அவன் வலி தாங்க முடியாமல் கதறி இறுதியில் மயங்கினான்.
அப்போது கும்பகர்ணன்," இந்தச் சுக்கிரீவனை நான் கொண்டு போய் அண்ணனிடம் பரிசாகக் கொடுப்பேன். அதனால் தலைவனை இழந்த வானர வீரர்கள் சோகத்தாலும், சுக்கிரீவனை சிறைபடுத்தப் போவதால் இனி அரக்கர்கள் மீது அவர்களுக்கு உருவாகப் போகும் பயத்தாலும், யுத்தம் செய்வதை நிறுத்திக் கொள்வார்கள். அதனால், யுத்தமும் இன்றுடன் நின்றுவிடும்" என்று தனக்குள் சொல்லிக் கொண்டு மகிழ்ச்சியுடன் சுக்கிரீவனை தனது மலை போன்ற கைகளுக்குள் அழுத்தி வைத்து நசுக்கிய படி இலங்கை நகரத்தை நோக்கிச் சென்றான்.
அப்போது வானர வீரர்கள் அக்காட்சியைக் கண்டு துடித்துப் போய் ஸ்ரீ இராமபிரானிடத்தில் அதனைச் சொன்னார்கள். தனது நண்பன் சுக்கிரீவன், கும்பகர்ணனால் தூக்கிச் செல்லப்பட்டதை அறிந்த ஸ்ரீ இராமர் கொதித்துப் போனார். அனுமனின் துணையுடன் கும்பகர்ணன் இலங்கை நகரத்தை நெருங்கும் முன்னமே அவனைத் தனது பாணங்களால் தடுத்தார். தன்னை எந்தத் திசையிலும் போகாதவாறு தடுத்து நிறுத்திய பாணங்களை ஸ்ரீ இராமர் தான் ஏவி இருக்க வேண்டும் என்று அனுமானித்துக் கொண்டான் கும்பகர்ணன். அப்போதே தனக்கு ஏற்படப் போகும் முடிவை நினைத்து மகிழ்ந்தான்.
அக்கணம் கும்பகர்ணனின் எதிரே ஸ்ரீ இராமனும் வந்தார். இருவருக்கும் இடையில் மீண்டும் ஒரு கடுமையான போர் நிகழ்ந்தது. ஸ்ரீ இராமர் ஏவிய பல பாணங்கள் கும்பகர்ணனின் மார்புகளிலும், தலையிலும் பட்டு குருதியை வெள்ளமெனப் பெருக்கியது. அப்போது செம் மண்ணைக் கொண்ட மலையில் இருந்து ஆறு பெருக்கெடுத்து வரும் போது, எவ்வாறு அந்த செம்மண்ணின் நிறத்தைக் கொண்டே பூமியில் விழுகிறதோ, அதே போல கும்பகர்ணன் என்னும் மலை மீது இராமபாணம் பட்டதால், அவனது குருதியும் அந்த ஆறு போலத் தான் செந்நிறமாகப் பாய்ந்தது. அந்தக் குருதியில் நனைந்தான் கும்பகர்ணனின் கைகளில் அதுவரையில் அகப்பட்டு இருந்த சுக்கிரீவன். அக்கணமே அவன் மயக்கம் நீங்கினான். மறுகணமே , கும்பகர்ணனுக்கும், ஸ்ரீ இராமருக்கும் நடந்த யுத்தத்தைக் கண்ணுற்றான். உடனே "இந்தக் கொடிய அரக்கனின் கைப்பிடியில் இருந்து நாம் தப்பிக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல், நமக்குத் துன்பம் தந்த இவனுக்கு நிச்சயம் ஒரு பெரிய தண்டனையை அளிக்க வேண்டும்" என்று முடிவு செய்தான்.
சுக்கிரீவன், அவ்வாறு முடிவு எடுத்த மறுகணமே, கும்பகர்ணனின் கைகளை தனது கூறிய பற்களால் பல இடங்களில் கடித்து வைத்தான். அதனால், கும்பகர்ணன் அலறினான். சற்றே, அவனது கையில் இறுக்கம் தளர்ந்தது. "இது தான் சமயம்" என்று கூறிக் கொண்டு சுக்கிரீவன், கும்பகர்ணனின் உடம்பின் மீது வேகமாக ஏறி, அவனது இரு காதுகளையும், மூக்கையும் கடித்துக் குதறிக் கொண்டு தப்பிச் சென்றான். அதனால், அன்று தங்கை சூர்ப்பணகை போலவே, இன்று கும்பகர்ணனும் தனது காதுகளையும், மூக்கையும் இழந்தான். அதனால் ஏற்பட்ட வலியில் துடித்தான்.
எனினும் சுதாரித்துக் கொண்ட கும்பகர்ணன் தொடர்ந்து தனது அந்த வலியைப் பொறுத்துக் கொண்டு ஸ்ரீ இராமனின் மீதும், வானரப் படையின் மீதும் அஸ்த்திரங்களை ஒரே கணத்தில் பிரயோகித்தான்.ஆனால், ஸ்ரீ இராமனோ, விபீஷணனின் அண்ணனான அவனைக் கொல்ல விருப்பம் இல்லாமல், "இவனது ஒரு கரத்தை துண்டித்தால் போதும் அடங்கி விடுவான்" எனக் கூறி சக்தி வாய்ந்த அஸ்த்திரத்தால் மலை போன்ற அவனது கைகளைத் துண்டித்தார். அந்தக் கை பூமியே நடுங்கும் படி கீழே விழுந்தது. அப்படி விழுந்த அக்கைகளில் கூட எண்ணற்ற வானர வீரர்கள் அகப் பட்டு இறந்தனர். அப்போது சிறிதும் வருந்தாத கும்பகர்ணன் தனது இன்னொரு கரத்தால், அறுக்கப் பட்டு கீழே விழுந்த அவனது மறு கரத்தை கதை போல ஆயுதமாக்கி எடுத்துக் கொண்டு, " ஸ்ரீ இராமரை தான், நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லை. குறைந்த பட்சம் வானர சேனையை யாவது அழிப்போம்" எனக் கூறிக் கொண்டு வானர வீரர்கள் பலரை கொன்று குவித்தான். அதனால், வானர சேனையைக் காக்கும் பொருட்டு ஸ்ரீ இராமர் கும்பகர்ணனின் இன்னொரு கரத்தையும் வெட்டி வீழ்த்தினார். அதனால், கும்பகர்ணன் தனது இரு கைகளையும் இழந்து துடித்தான். எனினும், தனது கால் கொண்டு வானர சேனையை மிதித்துக் கொன்றான்.
அது கண்ட ஸ்ரீ இராமர்," இப்படிப் பட்ட ஒரு தம்பியை பெறுவதற்கு எப்பேர்பட்ட பாக்கியம் செய்துள்ளான் இராவணன். இந்த கும்பகர்ணனின் ஒவ்வொரு உடல் உறுப்புக்கள் கூட இராவணனுக்காகவே துடிக்கிறதே! " என்று தனக்குள் கூறிக் கொண்டார். எனினும் கும்பகர்ணனின் கால்களால் அப்பாவி வானர வீரர்கள் மிதிக்கப் பட்டு இறப்பதை ஸ்ரீ இராமரால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. அதனால், தனது இன்னொரு பாணத்தால் கும்பகர்ணனின் ஒரு காலைத் துண்டித்தார். ஆனால், அவனோ மறு கால்களைக் கொண்டு தாவித் தாவி வானர வீரர்களை அழித்து ஒழித்தான், மேலும் தனது பெரிய குகை போன்ற வாயினாலும் பல வானரர்களை கூட்டம், கூட்டமாக கடித்துக் கொன்றான்.
அப்போது அக்காட்சியைக் கண்டு, ஸ்ரீ இராமன் அருகில் வந்த வானர அரசன் சுக்கிரீவன்," ஐயனே! இனியும் இந்தக் கொடிய அரக்கனுடன் தாங்கள் விளையாட வேண்டாம். அத்துடன் இவனையும் துன்புறுத்தி, இவன் நம்மையும் துன்புறுத்த நாமே ஏன் இவனுக்கு ஒரு வாய்ப்பை அளிக்க வேண்டும்? பேசாமல் இவனை இத்துடன் வதைத்து விடுங்கள்" என்றான்.
அதுவே சரி என்ற முடிவுக்கு வந்தார் ஸ்ரீ இராமர், " சிவனின் பக்தனான இவனை , சிவனின் அஸ்த்திரம் கொண்டே அழிப்பேன்" என்று சுக்கிரீவனிடம் வாக்களித்து. "பாசுபதம்" என்னும் அஸ்த்திரத்தை பிரயோகம் செய்யும் மந்திரத்தை ஓதினார். அந்தக் கணமே கும்பகர்ணனுக்கு தெரிந்து விட்டது. இப்போது அவனுக்கு மரணம் நிச்சயம் என்று.
உடனே ஸ்ரீ இராமரிடம்," ஐயனே! உமது உண்மை ஸ்வருபத்தை நான் அறிவேன். நான் மரணிக்கப் போகும் இக்கடைசி தருவாயில், எனக்கு இரு வரங்களைத் தந்து அருள வேண்டுகிறேன். அது வரங்கள் மட்டும் அல்ல, எனது கடைசி ஆசையும் கூட" என்றான்.
அது கேட்ட ஸ்ரீ இராமர்," சொல் கும்பகர்ணா! நீ கேட்கப் போகும் அந்த வரங்கள் யாது?" என்றார்.
உடனே கும்பகர்ணன் ஸ்ரீ இராமரிடம்," முதல் வரமாக எனது தம்பி விபீஷணனை நீர் எந்த நிலையிலும் கை விடக் கூடாது. எனது அண்ணன் இராவணன் உம்முடன் சேர்ந்த ஒரே காரணத்துக்காக விபீஷணனை எல்லா வகையிலும் அழிக்க முயற்சி செய்வான். அவனை இராவணனிடம் இருந்து நீர் தான் காப்பாற்ற வேண்டும். காரணம் , அவன் உனது அடைக்கலப் பொருளாக வந்தவன். நீரே அவனுக்கு இனி துணை" என்றான்.
மீண்டும் ஸ்ரீ இராமனை நோக்கியவன் தனது இரண்டாவது வரத்தை கேட்கத் தொடங்கினான்.” பெருமானே! நான் வேண்டும் இரண்டாவது வரம் யாதெனில் காதுகளும், மூக்கும் இல்லாத படி காணப்படும் இந்த முகத்தை இனி யாரும் காணாதபடி, அதுவும் குறிப்பாக தேவர்கள் கண்டு பரிகசிக்காதபடி. இக்கடலின், ஆழத்தில் எனது தலையை நீர் கொய்து முழ்கச் செய்து விடும்" என்றான்.
அந்த இரு வரங்களையும் கும்பகர்ணன் கேட்டத்தும். " கும்பகர்ணா! உனது விருப்பப்படியே அவ்விரு வரங்களையும் தந்தோம்" என்று கூறினார் இராமபிரான் . பிறகு 'பாசுபதம்' என்னும் அந்த பாணத்தால் கும்பகர்ணனின் மலை போன்ற தலையை கொய்து கடலின் ஆழத்தில் அதனை யாரும் காணாத படி புதைத்தார்.
மறுகணமே, கும்பகர்ணன் மாண்டான். வானரர்கள் மட்டும் அல்லாது தேவர்களும் சந்தோஷத்தில் திளைத்தனர். மறுபுறம், அரக்கர்கள் அரண்டனர். அழுது புலம்பினர். பின்னர் இலங்கையின் கோட்டை வாயிலை நோக்கி ஓடினர். அவ்வாறு ஓடிய பெரும்பாலான அரக்கர்களை வானரர்கள் அடித்துக் கொன்றனர். எஞ்சிய அரக்கர்கள் காயங்களுடன் ஆங்காங்கே மறைவில் பதுங்கிக் கொண்டனர்.