மாயாஜனகப் படலத்தின் பாடல்கள்

bookmark

யுத்தகாண்டம்

இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

மாயாஜனகப் படலம்

மகோதரனிடம் சீதையை அடையும் வழி குறித்து இராவணன் வினவுதல்

அவ்வழி, கருணன் செய்த பேர் எழில் ஆண்மை எல்லாம்
செல்வழி உணர்வு தோன்றச் செப்பினம்; சிறுமை தீரா
வெவ் வழி மாயை ஒன்று, வேறு இருந்து எண்ணி, வேட்கை,
இவ்வழி இலங்கை, வேந்தன் இயற்றியது இயம்பலுற்றாம்: 

மாதிரம் கடந்த தோளான், மந்திர இருக்கை வந்த
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி,
சீதையை எய்தி, உள்ளம் சிறுமையின் தீரும் செய்கை
யாது? எனக்கு உணர்த்தி, இன்று, என் இன் உயிர் ஈதி என்றான். 

மருத்தனைச் சனகனாக உருமாற்றிக் காட்டுமாறு மகோதரன் கூறுதல்

உணர்த்துவென், இன்று நன்று; ஓர் உபாயத்தின் உறுதி மாயை
புணர்த்துவென், சீதை தானே புணர்வது ஓர் வினையம் போற்றி;
கணத்து, வன் சனகன் தன்னைக் கட்டினென் கொணர்ந்து காட்டின்-
மணத் தொழில் புரியும் அன்றே-மருத்தனை உருவம் மாற்றி? 

என அவன் உரைத்தலோடும், எழுந்து மார்பு இறுகப் புல்லி,
அனையவன் தன்னைக் கொண்டு ஆங்கு அணுகுதி, அன்ப! என்னா,
புனை மலர்ச் சரளச் சோலை நோக்கினன், எழுந்து போனான்,
வினைகளைக் கற்பின் வென்ற விளக்கினை வெருவல் காண்பான். 

மின் ஒளிர் மகுட கோடி வெயில் ஒளி விரித்து வீச,
துன் இருள் இரிந்து தோற்ப, சுடர் மணித் தோளில் தோன்றும்
பொன்னரி மாலை நீல வரையில் வீழ் அருவி பொற்ப
நல் நெடுங் களி மால் யானை நாணுற, நடந்து வந்தான். 

இம் மொழி அரக்கன் கூற, ஏந்திழை இரு காதூடும்
வெம்மை சேர் அழலின் வந்த வே........................
.........ல் வஞ்சி நெஞ்சம் தீய்ந்தவள் ஆனாள்; மீட்டும்
விம்முறும் உளத்தினோடும் வெகுண்டு, இவை விளம்ப லுற்றான்:

மங்கையை, குலத்துளாளை, தவத்தியை முனிந்து, வாளால்
சங்கை ஒன்று இன்றிக் கொன்றான், குலத்துக்கே தக்கான் என்று
கங்கை அம் சென்னியானும் கண்ணனும் கமலத்தோனும்
செங்கைகள் கொட்டி உன்னைச் சிரிப்பரால், சிறுமை என்னா. 

அம் தாமரையின் அணங்கு அதுவே ஆகி உற,
நொந்து, ஆங்கு அரக்கன் மிக நோனா உளத்தினன் ஆய்,
சிந்தாகுலமும் சில நாணும் தன் கருத்தின்
உந்தா, உளம் கொதித்து, ஆங்கு ஒரு வாசகம் உரைத்தான்.