மகரக்கண்ணன் வதைப் படலம்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
மகரக்கண்ணன் வதைப் படலம்
(மகரக் கண்ணனை இராமன் வதைத்தலைப் பற்றிக் கூறும் படலம் என்பது பொருள். 'மகராட்சன்' என்னும் வட சொல் 'மகரக்கண்ணன்' என மொழிமாற்றம் செய்யப் பெற்றுள்ளது. மகரம் போன்ற கண்ணை உடையவன் இவன். கரனுடைய மகன் ஆவான்)
இலங்கேஸ்வரன், தன்னிடம் தூதர்கள் வந்து சேனை வீரர்கள் பலர் வானரப் படையால் இறந்து விட்டார்கள் என்று சொன்ன மாத்திரத்தில் மிக்கத் துன்பம் அடைந்தான். அப்போது இராவணனைக் காண மகரக்கண்ணன் என்னும் பெயர் கொண்ட அரக்கன் வந்தான். அவன் முன்னர் தண்டகாரிணியத்தில் ஸ்ரீ இராமனால் வதைக்கப்பட்ட கரனின் மகன் ஆவான்.
மகரக் கண்ணனைக் கண்ட இராவணன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். ஆனால், மகரக் கண்ணனோ தனது தந்தையைக் கொன்ற இராமனை பழிவாங்கத் துடித்துக் கொண்டு இருந்தான்.அதனால், அவன் இராவணனின் மகிழ்ச்சியை பொருட்படுத்தவில்லை. மாறாக இராவணனிடம் சினந்து," ஐயனே! தாங்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள்? எனது தந்தையின் உயிரை முன்பு உண்டான போரில் உண்டவனின் அறிய உயிர் மேல் முன்பே என்னைச் செலுத்தாது இருந்து விட்டீரே! அதனால் தான், தாங்கள் இப்போது ஒப்பற்ற துன்பத்தைப் பெற்றீர். முன்பே, நீர் என்னை அனுப்பி இருந்தால், இப்போது உமக்கு இந்தத் துன்பம் வந்து இருக்குமா? நானே இராமன் என்னும் அந்தப் பகைவனை அழித்து ஒழித்திருப்பனே! எனது தந்தை இறந்த நாள் முதலாக, எனது தாய் அழுகின்ற கண்களை உடையவளாய்க் கடக்க முடியாத துன்பக் கடலுள் மூழ்கி இருக்கின்றாள். இன்னும் அவள் பெருமை பெற்ற தாலியை அறுப்பதற்குப் பொறுக்காதவளாக இருக்கின்றாள். கணவனைக் கொன்றவனின் தலையாகிய பாத்திரத்திலன்றி, கணவனுக்குத் தான் ஆற்ற வேண்டிய இறுதிக் காரியங்களைச் செய்ய மாட்டேன் என்று கூறினாள்.ஆனால், நானோ இதுவரையில் அந்தத் துக்கத்தைப் போக்காதவன் ஆனேன். இனியும் என்னால் எனது தாயின் துயரத்தைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. அதனால், தாங்கள் இப்போதே என்னை எனது தந்தையின் ஸ்தானத்தில் ஆசிர்வதித்து போர்க்களம் அனுப்புங்கள். நான் போய் அந்த இராமனின் தலையை உடனே கொண்டு வந்து தங்கள் காலடியில் போடுகிறேன்" என்று வேண்டினான்.
மகரக் கண்ணின் வார்த்தைகளைக் கேட்ட இராவணன் மிகவும் மகிழ்ந்தான். அவன் கரனுடைய மகனை நோக்கி," சிறுவனே! வாழ்க உனது தாய்ப் பாசம், கவலை கொள்ளாதே, இன்றோடு உனது துயர் நீங்கியது. நீயே போருக்குச் செல்வாய், சென்று இராமனுடனான உன்னுடைய பழைய பகையைத் தீர்த்துக் கொள்வாய்!" என்று விடை கொடுத்தான்.
உடனே மகரக்கண்ணன் வில்லேந்தித் தேரில் ஏறிக் கொண்டான். தனது ஐந்து கோடி சேனையும் உடன் வரவும்,அத்துடன் இராவணனுடைய இருபது வெள்ளம் சேனையும் மழை போல் பொங்கிப் பின்னே வரவும், அலைகடல் போன்று போர் வாத்தியங்கள் ஒலி செய்யவும் புறப்பட்டான். அதனால், அப்போது எழுந்த மிகுதியான தூளிப்படலம் திரிகூடமலையின் சிகரங்களில் போய் படிந்தது. அதனால் அந்த மலை மறைந்தது.
அத்துடன், மகரக்கண்ணனின் பின்னே இராவணனுடைய கட்டளையினால், இராக்தாட்சனும் சிங்கனும் தொடர்ந்து சென்றார்கள். அவர்களுடனே நால்வகைச் சேனையும் தொடர்ந்தது. அப்படிச் சென்ற அந்தப் பெரும் சேனை போர்களத்தை அடைந்ததும். அப்படையில் உள்ள யானைகள் அனைத்தும் அச்சுறுத்தும் விதமாக முழங்கின; அக்கணமே அரக்க வீரர்களும் ஆரவாரித்தார்கள். அது கேட்ட உயிர்கள் யாவும் வேர்த்தன.
உடனே வானர வீரர்களும் போர்முரசு கொட்ட அக்கணமே போர் தொடங்கிற்று!
இரண்டு வகை சேனைத் தலைவர்களும் ஒருவரை ஒருவர் நெருங்கிப் போரிட ஆரம்பித்தார்கள். சேனைகள் கையோடு கைகள் பொருந்திக் கலந்தன. அப்போது பெருகிய குருதி வெள்ளம், யானைகளையும் இழுத்துச் சென்றது. வானரர்கள் அரக்கர்களின் மேல் வழக்கம் போல மலைகளை எறிந்தார்கள். அம்மலைகளை அரக்கர்கள் தங்கள் புஜ பலத்தாலேயே தூள், தூளாக ஆக்கினார்கள். மறுப்பக்கம் அரக்க சேனைகள், வானரர்கள் மேல் எறிந்த ஆயுதங்களை வானர வீரர்கள் பிடித்துப் பிசைந்து அழித்தார்கள்.
மகரக்கண்ணன் இராமபிரான் இருக்கும் திசை நோக்கித் தனது தேரைச் செலுத்தினான். அவ்வாறு செல்கையில் தன்னை எதிர்த்து வந்த வானர வீரர்கள் அனைவரையும் அழித்தான். பிறகு ஸ்ரீ இராமரின் முன்னால் சென்று தனது தேரை நிறுத்தினான். அக்கணம் ஸ்ரீ இராமனை நோக்கி அவன்," மும்மூர்த்திகளையும் வெல்லும் ஆற்றல் கொண்டவன் நான், என்றாலும் அவர்களுடனும் நான் பகைமை பாராட்டவில்லை. உன்னிடத்தில் நான் பகைமை பாராட்டினேன். காரணம் நீ எனது தந்தையான கரனின் உயிரைப் பறித்தவன். அதனால், இப்போது நான் உன்னைப் பழி வாங்கவே வந்து இருக்கிறேன்!" என்றான் ஆவேசத்துடன்.
அவ்வார்த்தைகளைக் கேட்ட கோசலை மைந்தன் ஸ்ரீ இராமன்," நெடிய பகையைப் போக்க வந்தவனே! நீ கரனுடைய புதல்வனா? எனில் நீ சொன்னது சரியானதே! உண்மையில் நீ வீரராகப் பிறந்தவர்க்கு ஏற்ற வார்த்தைகளையே சொன்னாய்!" என்று மகரக் கண்ணனைப் பாராட்டினார்.
பிறகு மேற்கண்ட வார்த்தைகளைச் சொன்ன ஸ்ரீ இராமர் மகரக் கண்ணனுடன் போர் செய்யும் பொருட்டுத் தனது நாணில் ஒலியை ஏற்படுத்தினார். அந்த ஒலி அண்டத்தையே அச்சுறுத்தியது. அதன் படியே, மகரக் கண்ணனும் தனது வில்லில் நாணொலியை ஏற்படுத்தினான். அவ்வாறு இருவருக்கும் இடையே கடும் போர் நடந்தது.
மகரக்கண்ணன் தனது வில்லில் இருந்து ஏராளமான அம்புகளை ஸ்ரீ இராமன் மீது தொடுத்தான். அதனைத் தனது ஏராளமான பாணங்களால் ஸ்ரீ இராமர் தடுத்தார். இராமர் மீது அம்புகளை எய்யும் அதே நேரத்தில், லக்ஷ்மணன் மீதும் பல அம்புகளை எய்தான். மேலும், இளையபெருமாளின் கவசத்தை தனது அம்புகளால் உடைத்தான். அத்துடன் மகரக்கண்ணன் அனுமானையும் விட்டு வைக்கவில்லை. அவன் அனுமனையும் தனது பாணங்களால் தாக்கினான். மேலும், வானர வீரர்கள் மீதும் அம்புகளின் மலையைப் பொழிந்தான். இவ்வாறு ,அவன் ஒரேசமயத்தில் பலருடன் போர் செய்த வேகத்தைக் கண்டு வானவர்களும் வியந்தார்கள்.
மீண்டும் ஸ்ரீ இராமர் மீது அம்புகளைப் பொழிந்தான். அக்கணம் ஸ்ரீ இராமர் மகரக் கண்ணனின் அம்புகளை எல்லாம் நொடியில் அழித்தார். அவன் மார்பில் குறி தவறாத பாணத்தை செலுத்தினார். அந்த அம்பு அவனது மார்பில் பட்டு ரத்த வெள்ளத்தை ஏற்படுத்தியது. ஆனால், மகரக் கண்ணன் கணப் பொழுதில் அந்த வேதனையில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டான். அது கண்டு தேவர்களும் வியந்தார்கள். ஸ்ரீ இராமரும் வியந்தார். அவ்வாறு ஸ்ரீ இராமரின் பாணத்தால் ஏற்பட்ட வேதனையில் இருந்து மீண்ட மகரக்கண்ணன் வெகுண்டு எழுந்து ஸ்ரீ இராமனின் மீது ஆயிரம் பாணங்களைப் பொழிந்தான். எனினும், மகரக்கண்ணனை விட சிறந்த வில்லாளியான ஸ்ரீ இராமர், மகரக் கண்ணன் எய்த அந்த ஆயிரம் அம்புகளையும் தனது ஆயிரம் பாணங்களால் முறித்தார் .
உடனே மகரக்கண்ணன் இனி ஸ்ரீ இராமனை பாணம் கொண்டு வெல்வது இயலாது என்ற முடிவுக்கு வந்தான். அக்கணமே, தனது பெரும் தவ வலிமையை எல்லாம் ஒன்று திரட்டி யுகாந்த காலம் தான் வந்து விட்டதோ என்று சொல்லும் படி மேகத்தில் பேரிடியை ஏற்படுத்தி பூமியெங்கும் பலத்த காற்றை வீசச் செய்தான். அந்த பலத்த காற்றால், வானரப் படையில் இருந்த பெரும்பாலான வீரர்கள் கடலில் வீசப்பட்டு மீன்களுக்கு இரை ஆகினார்கள். போர்க்களம் எங்கும் பல கோடி இடிகள் முறையாக விழுந்தன; அதனால் வானர வீரர்கள் நடப்பதை அறியாது நிலைகெட்டு ஓடினார்கள்.
மகரக் கண்ணனுடைய செயலையும், அதனால் தம் படைக்கு நேர்ந்த விளைவையும் கண்டார் ஸ்ரீ இராமர். அவர் விபீஷணனைப் பார்த்து," இது மாயத்தால் நிகழ்ந்ததா? அல்லது அவன் பெற்ற வரத்தின் பயனால் நிகழ்ந்ததா?" என்று வினவினார்.
விபீஷணன் அதற்கு," இவையாவும் மகரக் கண்ணன் செய்த தவத்தின் பயனாக வருண பகவானும், வாயு பகவானும் அவனுக்கு அளித்த வரத்தின் காரணமாக உண்டானவை" என்றான். உடனே ஸ்ரீ இராமர்," ஒரு நொடிப் பொழுதில் இதனை நான் போக்குவேன்!" என்றார்.
பிறகு ஸ்ரீ இராமர் ஒரே சமயத்தில் வருண மந்திரத்தையும், வாயு மந்திரத்தையும் ஜபித்து தனது பாணத்தை ஆகாயத்தில் செலுத்தினார். அவ்வாறு ஸ்ரீ இராமரின் பாணம் தொடுக்கப் பட்டவுடன், போர்க்களத்தில் முன்பு ஏற்பட்டு இருந்த மழையும், காற்றும் வானத்தில் இருந்து விலகி ஓடி மிகப் பெரிய கடலிலே வீழ்ந்து மறைந்தன.
தனது தவ வலிமை அனைத்தும் ஸ்ரீ இராமனின் பாணத்தால் வீண் ஆனதைக் கண்டான் மகரக் கண்ணன். அக்கணமே, தனது அரக்க மாயையை பயன்படுத்தி எண்ணற்ற ரூபங்களை எடுத்தவாறு வானத்தில் நின்றான். வானர வீரர்கள் ஆகாயத்தில் பார்க்கும் திசை எல்லாம் மகரக் கண்ணனே தெரிந்தான். அதனால், அனைவரும் பதட்டம் அடைந்தனர். ஆனால், வானில் நின்றபடி எண்ணற்ற மாயத் தோற்றத்தை எடுத்த மகரக் கண்ணன் தொடர்ந்து பாணங்களை வானரர்கள் மீது செலுத்திக் கொண்டே இருந்தான். அதனால், எண்ணற்ற வானர வீரர்கள் உயிர் இழந்தனர்.
ஸ்ரீ இராமரோ, உண்மையான மகரக் கண்ணனை எவ்வாறு இதில் கண்டு பிடித்து பாணம் எய்து கொல்வது என்று திகைத்தார். அப்போது,ஞானத்தின் ஸ்வரூபமான ஸ்ரீ இராமர் , பலகோடி ரூபம் கொண்ட மகரக் கண்ணனில் இருந்து ஒரே ஒரு மகரக்கண்ணன் மட்டும் சற்றே வித்தியாசமாக இருப்பதைக் கண்டார். மேலும், அவர் கண்ட அந்த மகரக் கண்ணனின் உடலில் இருந்து இரத்தம் வெளி வருவதையும், வியர்வை பெருகுவதையும் கண்டார். அவனே உண்மையான மகரக் கண்ணன் என்று தீர்மானித்து திவ்விய அஸ்த்திரத்தை அவன் மீது ஏவினார். அவ்வளவு தான், அடுத்த கணம் ஸ்ரீ இராமரின் வில்லில் இருந்து தொடுக்கப் பட்ட அந்த திவ்ய அஸ்த்திரம் மகரக்கண்ணனின் தலையை கொய்தது. அவனது தலை இல்லா முண்டம் பூமியில் விழுந்தது. அத்துடன் மகரக் கண்ணன் இறந்தான், அவனால் முன்பு உண்டாக்கப் பட்ட மாயத் தோற்றங்களும் அழிந்தது.
மகரக் கண்ணன் இறந்ததைக் கண்ட இராக்தாட்சன் கடும் கோபம் கொண்டு வானரப் படைக்குள் புகுந்து அனைத்து வானர வீரர்களையும் கண்டம், துண்டமாக வெட்டினான். அது கண்ட நளன் இராக்தாட்சனுடன் கடுமையாக யுத்தம் செய்து அவனைக் கொன்றான். அதேபோல சிங்கனை நீலன் கொன்று வெற்றி வாகை சூடினான்.
மற்ற வானர வீரர்கள் முழு அரக்க சேனையையும், அனுமான் துணை நிற்கக் கொன்று தீர்த்தார்கள். இவ்வாறாக மகரக் கண்ணனுடன் இராவணனின் கட்டளையை ஏற்று வந்த அனைத்து அரக்கர் சேனையும் வானர வீரர்களால் ஒழிக்கப் பட்டது. அக்காட்சியைக் கண்ட இராவணனின் ஒற்றர்கள், உடனே படை வீரர்கள் அனைவரும் இறந்த செய்தியை சொல்ல, இராவணனின் மாளிகை நோக்கி ஓடினார்கள்!