பிரமாத்திரப் படலத்தின் பாடல்கள்

bookmark

யுத்தகாண்டம்

இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

பிரமாத்திரப் படலம்

தூதரால் செய்தி அறிந்த இராவணன் இந்திரசித்தை அழைத்தல்
 
கரன் மகன் பட்டவாறும், குருதியின்கண்ணன் காலின்
சிரன் தெரிந்து உக்கவாறும், சிங்கனது ஈறும், சேனைப்
பரம் இனி உலகுக்கு ஆகாது என்பதும், பகரக் கேட்டான்;
வரன்முறை தவிர்ந்தான், வல்லைத் தருதிர், என் மகனை! என்றான்.
 
இந்திரசித்து விரைந்து வருதல்
 
கூயினன், நுந்தை என்றார்; குன்று எனக் குவிந்த தோளான்,
போயின நிருதர் யாரும் போந்திலர் போலும்! என்றான்;
ஏயின பின்னை, மீள்வார் நீ அலாது யாவர்? என்னா,
மேயது சொன்னார், தூதர்; தாதைபால் விரைவின் வந்தான்.
 
தந்தையைத் தேற்றி, இந்திரசித்து போர்க்களம் செல்லுதல்
 
வணங்கி, நீ, ஐய! "நொய்தின் மாண்டனர் மக்கள்" என்ன
உணங்கலை; இன்று காண்டி, உலப்பு அறு குரங்கை நீக்கி,
பிணங்களின் குப்பை; மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை
கணங் குழைச் சீதைதானும், அமரரும் காண்பர் என்றான்.
 
வலங்கொண்டு வணங்கி, வான் செல் ஆயிரம் மடங்கல் பூண்ட
பொலங் கொடி நெடுந் தேர் ஏறி, போர்ப் பணை முழங்கப் போனான்;
அலங்கல் வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம், யானைக்
குலங்களும், தேரும், மாவும், குழாம் கொளக் குழீஇய அன்றே.
 

தடித்து மீன்குலம் விசும்பிடைத் தயங்குவ-சலத்தின்
மடித்த வாயினர், வாள் எயிற்று அரக்கர், தம் வலத்தின்
பிடித்த திண் படை விதிர்த்திட விதிர்த்திடப் பிறழ்ந்து,
பொடித்த வெம் பொறி புகையொடும் போவன போல்வ.

சொன்ன நூறுடை வெள்ளம், அன்று இராவணன் துரந்த
அன்ன சேனையை வாயிலூடு உமிழ்கின்ற அமைதி,
முன்னம் வேலையை முழுவதும் குடித்தது, முறை ஈது
என்ன, மீட்டு உமிழ் தமிழ்முனி ஒத்தது, அவ் இலங்கை.

சங்கு பேரியும், காளமும், தாளமும், தலைவர்
சிங்க நாதமும், சிலையின் நாண் ஒலிகளும், சின மாப்
பொங்கும் ஓதையும், புரவியின் அமலையும், பொலந் தேர்
வெங் கண் ஓலமும், மால் என, விழுங்கிய உலகை.

அரக்கர்க்கும் வானரர்க்கும் நிகழ்ந்த பெரும் போர்

புக்கதால் பெரும் போர்ப் படை, பறந்தலைப் புறத்தில்;
தொக்கதால், நெடு வானரத் தானையும் துவன்றி,
ஒக்க ஆர்த்தன, உறுக்கின, தெழித்தன, உருமின்
மிக்க வான் படை விடு கணை மா மழை விலக்கி.

வான நாடியர் வயிறு அலைத்து அழுது, கண் மழை நீர்
சோனை மாரியின் சொரிந்தனர்; தேவரும் சோர்ந்தார்;
ஏனை நிற்பவும் திரிபவும் இரங்கின, எவையும்
ஞான நாயகன் உருவமே ஆதலின், நடுங்கி.

அண்ணலும், சிறிது உணர்வினோடு அயாவுயிர்ப்பு அணுகக்
கண் விழித்தனன்; தம்பியைத் தெரிவுறக் கண்டான்;
விண்ணை உற்றனன்; மீள்கிலன் என்று, அகம் வெதும்பி,
புண்ணின் உற்றது ஓர் எரி அன்ன துயரினன் புலம்பும்: 
 
இராமன் இலக்குவனைக் குறித்துப் புலம்புதல்
 
"எந்தை இறந்தான்" என்றும் இருந்தேன்; உலகு எல்லாம்
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன்; தனி அல்லேன்;
உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன்; உரை காணேன்;
வந்தனென், ஐயா! வந்தனென், ஐயா! இனி வாழேன்!
 
தாயோ நீயே; தந்தையும் நீயே; தவம் நீயே;
சேயோ நீயே; தம்பியும் நீயே; திரு நீயே;
போயோ நின்றாய்; என்னை இகந்தாய்; புகழ் பாராய்,
நீயோ; யானோ, நின்றனென்; நெஞ்சம் வலியேனால். 
 
ஊறாநின்ற புண்ணுடையாய்பால் உயிர் காணேன்;
ஆறாநின்றேன், ஆவி சுமந்தேன்; அழிகின்றேன்;
ஏறே! இன்னும் உய்யினும் உய்வேன்; இரு கூறாக்
கீறா நெஞ்சம் பெற்றனென் அன்றோ, கெடுவேனே? 
 
பயிலும் காலம் பத்தொடு நாலும் படர் கானத்து
அயில்கின்றேனுக்கு ஆவன நல்கி, அயிலாதாய்!
வெயில் என்று உன்னாய், நின்று தளர்ந்தாய்! மெலிவு எய்தி,
துயில்கின்றாயோ இன்று? இவ் உறக்கம் துறவாயோ? 
 
அயிரா நெஞ்சும் ஆவியும் ஒன்றே எனும் அச் சொல்
பயிரா எல்லைப் பாதகனேற்கும் பரிவு உண்டோ?
செயிரோ இல்லா உன்னை இழந்தும், திரிகின்றேன்;
உயிரோ, நானோ, யாவர், உனக்கு இங்கு உறவு? அம்மா!
 
வேள்விக்கு ஏகி, வில்லும் இறுத்து, "ஓர் விடம் அம்மா
வாழ்விக்கும்!" என்று எண்ணினென், முன்னே வருவித்தேன்;
சூழ்வித்து, என்னைச் சுற்றினரோடும் சுடுவித்தேன்;
தாழ்வித்தேனோ, இத்தனை கேடும் தருவித்தேன்? 
 
மண்மேல் வைத்த காதலின், மாதா முதலோர்க்கும்
புண்மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தேன்;
பெண்மேல் வைத்த காதலின், இப் பேறுகள் பெற்றேன்;
எண்மேல் வைத்த என் புகழ் நன்றால்! எளியேனோ! 
 
மாண்டாய் நீயோ; யான் ஒரு போதும் உயிர் வாழேன்;
ஆண்டான் அல்லன் நானிலம், அந்தோ, பரதன் தான்!
பூண்டார் எல்லாம் பொன்றுவர், துன்பப் பொறையாற்றார்;
வேண்டாவோ, நான் நல் அறம் அஞ்சி, மெலிவுற்றால்? 
 
அறம், தாய், தந்தை, சுற்றமும், மற்றும், எனை அல்லால்,
துறந்தாய்! என்றும் என்னை மறாதாய்! துணை வந்து
பிறந்தாய்! என்னைப் பின்பு தொடர்ந்தாய்! பிரிவு அற்றாய்!
இறந்தாய்; உன்னைக் கண்டும் இருந்தேன், எளியேனோ? 
 
சான்றோர் மாதைத் தக்க அரக்கன் சிறை தட்டால்,
ஆன்றோர் சொல்லும் நல் அறம் அன்னான் வயமானால்,
மூன்று ஆய் நின்ற பேர் உலகு ஒன்றாய் முடியாவேல்,
தோன்றாவோ, என் வில் வலி வீரத் தொழில் அம்மா?
 
வேலைப் பள்ளக் குண்டு அகழிக்கும், விராதற்கும்,
காலின் செல்லும் கவந்தன் உயிர்க்கும், கரனுக்கும்,
மூலப் பொத்தல் செத்த மரத்து ஏழ் முதலுக்கும்,
வாலிக்கும்மே ஆயினவாறு என் வலி அம்மா!
 
இருந்தேனானால், இந்திரசித்தே முதலாய
பெருந் தேராரைக் கொன்று பிழைக்கப் பெறுவேனேல்,
வருந்தேன்; "நீயே வெல்லுதி" என்னும் வலி கொண்டேன்;
பொருந்தேன், நான், இப் பொய்ப் பிறவிக்கும் பொறை அல்லேன்! 
 
மாதாவும், நம் சுற்றமும், நாடும் மறையோரும்,
"ஏது ஆனாரோ?" என்று தளர்ந்தே இறுவாரை,
தாதாய்! காணச் சால நினைந்தேன்; தளர்கின்றேன்;
போதாய், ஐயா, பொன் முடி என்னைப் புனைவிப்பான்! 
 
பாசமும் முற்றச் சுற்றிய போதும், பகையாலே
நாசம் உஞற்றிய போதும், நடந்தேன், உடன் அல்லேன்;
நேசமும் அற்றோர் செய்வன செய்தேன்; தனி நின்றேன்;
தேசமும் மற்று, என் கொற்ற நலத்தைச் சிரியாரோ? 
 
கொடுத்தேன் அன்றே, வீடணனுக்குக் குலம் ஆள
முடித்து ஓர் செல்வம்; யான் முடியாதே முடிகின்றேன்;
படித்தேன் அன்றே, பொய்ம்மை? குடிக்குப் பழி பெற்றேன்;
ஒடித்தேன் அன்றே என் புகழ் நானே, உணர்வு அற்றேன்?
 
புலம்பிய இராமன் அறிவு சோர்ந்து துயில்தல்
 
என்று என்று ஏங்கும், விம்மும், உயிர்க்கும், இடை அஃகி,
சென்று ஒன்று ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்த,
பொன்றும் என்னும் தம்பியை ஆர்வத்தொடு புல்லி,
ஒன்றும் பேசான்; தன்னை மறந்தான், துயில்வுற்றான்.
 
தேவர்கள் இராமனுக்கு உண்மையை உணர்த்துதல்
 
கண்டார் விண்ணோர்; கண்கள் புடைத்தார், கலுழ்கின்றார்;
கொண்டார், துன்பம்; என் முடிவு? என்னாக் குலைகின்றார்;
அண்டா! ஐயா! எங்கள் பொருட்டால் அயர்கின்றாய்;
உண்டோ , உன்பால் துன்பு? என அன்போடு உரை செய்தார். 
 
உன்னை உள்ளபடி அறியோம்; உலகை உள்ள திறம் உள்ளோம்;
பின்னை அறியோம்; முன் அறியோம்; இடையும் அறியோம், பிறழாமல்;
நின்னை வணங்கி, நீ வகுத்த நெறியில் நிற்கும் இது அல்லால்,
என்னை, அடியோம் செயற்பால? - இன்ப-துன்பம் இல்லோனே! 
 
"அரக்கர் குலத்தை வேரறுத்து, எம் அல்லல் நீக்கியருள்வாய்" என்று
இரக்க, எம்மேல் கருணையினால், ஏயா உருவம் இவை எய்தி,
புரக்கும் மன்னர் குடிப் பிறந்து போந்தாய்! அறத்தைப் பொறை தீர்ப்பான்,
கரக்க நின்றே, நெடு மாயம் எமக்கும் காட்டக்கடவாயோ?
 
ஈன்றாய்! இடுக்கண் துடைத்து அளிப்பான் இரங்கி, அரசர் இல் பிறந்தாய்!
"மூன்று ஆம் உலகம் துயர் தீர்த்தி" என்னும் ஆசை முயல்கின்றோம்;
ஏன்றும் மறந்தோம், "அவன் அல்லன்; மனிதன்" என்றே; இம் மாயம்
போன்றது இல்லை; ஆளுடையாய்! பொய்யும் புகலப் புக்காயோ?
 
அண்டம் பலவும், அனைத்து உயிரும், அகத்தும் புறத்தும் உள ஆக்கி,
உண்டும் உமிழ்ந்தும், அளந்து இடந்தும், உள்ளும் புறத்தும் உளை ஆகிக்
கொண்டு, சிலம்பி தன் வாயின் கூர் நூல் இயையக் கூடு இயற்றி,
பண்டும் இன்றும் அமைக்கின்ற படியை ஒருவாய்-பரமேட்டி! 
 
துன்ப விளையாட்டு இதுவேயும், நின்னைத் துன்பம் தொடர்பு இன்மை,
இன்ப விளையாட்டு ஆம்; எனினும், அறியாதோருக்கு இடர் உறுமால்;
அன்பின் விளைவும், அருள் விளைவும், அறிவின் விளைவும், அவை எல்லாம்,-
முன்பு, பின்பு, நடு, இல்லாய்!-முடிந்தால் அன்றி, முடியாவே. 
 
வருவாய் போல வாராதாய்! வந்தாய் என்று மனம் களிப்ப,
வெருவாதிருந்தோம்; நீ இடையே துன்பம் விளைக்க, மெலிகின்றோம்;
கரு ஆய் அளிக்கும் களைகண்ணே! நீயே இடரைக் காவாயேல்,
திரு வாழ் மார்ப! நின் மாயை எம்மால் தீர்க்கத் தீருமோ? 
 
அம்பரீடற்கு அருளியதும், அயனார் மகனுக்கு அளித்ததுவும்,
எம்பிரானே! எமக்கு இன்று பயந்தாய் என்றே ஏமுறுவோம்;
வெம்பு துயரம் நீ உழக்க, வெளி காணாது மெலிகின்றோம்;
தம்பி துணைவா! நீ இதனைத் தவிர்த்து, எம் உணர்வைத் தாராயோ?
 
இராவணனிடத்திற்குத் தூதர் சென்று, உன் பகை முடிந்தது என அறிவித்தல்
 
என்ப பலவும் எடுத்து இயம்பி, இமையாதோரும் இடர் உழந்தார்;
அன்பு மிகுதியால், ஐயன் ஆவி உள்ளே அடங்கினான்,
துன்ப மனிதர் கருமமே புரிய முன்பு துணிந்தமையால்;
புன்கண் நிருதர் பெருந் தூதர் போனார், அரக்கனிடம் புக்கார். 
 
என் வந்தது, நீர்? என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப, எறி செருவில்,
நின் மைந்தன் தன் நெடுஞ் சரத்தால், துணைவர் எல்லாம் நிலம்சேர,
பின்வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கி, பெருந் துயரால்,
முன்வந்தவனும் முடிந்தான்; உன் பகை போய் முடிந்தது என மொழிந்தார்.
 
பண் தரு கிளவிச் செவ்விப் பல்லியத்து ஒழுகு தீம் தேன்,
கண்டினின் குயின்ற வீணை நரம்பொடு கமழும் தேறல்,
வண்டினின் பொலியும் நல் யாழ் வழியுறு நறவம், வானத்து
அண்டர்தம் செவியின் உண்ணும் அமிழ்து எனல் ஆய அன்றே. 
 
இமைப்பதன் முன்னம் வந்த இராக்கத வெள்ளம் தன்னைக்
குமைத் தொழில் புரிந்த வீரர் தனுத் தொழில் குறித்து இன்று எம்மால்
அமைப்பது என்? பிறிது ஒன்று உண்டோ ? மேரு என்று அமைந்த வில்லான்,
உமைக்கு ஒரு பாகன், எய்த புரங்களின் ஒருங்கி வீழ்ந்த. 
 
தலைகளை நோக்கும்; தான் தன் சரங்களை நோக்கும்; தன் கைச்
சிலையினை நோக்கும்; செம் பொன் தேரினை நோக்கும்; செய்த
கொலைகளை நோக்கும்; கொன்ற கொற்றவர் தம்மை நோக்கும்;
அலை பொரும் குருதி என்னும் அளக்கரை அமைய நோக்கும். 
 
ஆர்த்த வானரர் வாய் எலாம் கை எலாம் அசைய,
பார்த்த கண் எலாம் அங்கதன் உடல் எலாம் பாரில்
சீர்த்த வீரியன் இளையவன் இராமன்மேல் செறிய,
தூர்த்த வாளியன் சிலையொடும் விசும்பினைத் தொடர்ந்தான்.
 
இன்னது இவ் வழி நிற்க, மற்று இருஞ் சமர்க்கு உடைந்தே,
துன்னு வான் வழி இலங்கையில் போகின்ற தோன்றல்,
பொன்னின் வார் சிலைக் கரத்தொடும் பொருகெனப் புகுந்து,
தன்னை ஈன்றிடும் ஒரு தனித் தந்தையைக் கண்டான். 
 
மாண்டனன் அகம்பன், மண்மேல்; மடிந்தன, நிருதர் சேனை;
மீண்டனர், குரக்கு வீரர்; விழுந்தன, சினக் கை வேழம்;
தூண்டின, கொடித் தேர்; அற்றுத் துணிந்தன, தொடுத்த வாசி;-
ஆண் தகை இளைய வீரன் அடு சிலை பொழியும் அம்பால்.
 
அருந் திறல் அகம்பன் ஆதி அரக்கரோடு, அளவு இல் ஆற்றல்
பொரும் திறல் களிறு, காலாள், புரவி, தேர், அளப்பு இல் கோடி,
இரிந்திடக் கொன்று, தான் அங்கு ஒரு திசை, யாரும் இன்றிப்
பொருந்திய இருளின் பொம்மல் பொலிய, மாருதியும் நின்றான். 
 
மான வேல் அரக்கர் விட்ட படைக்கலம், வான மாரி
ஆன வன் பகழி சிந்த, திசைதொறும் பொறியோடு அற்று
மீன் இனம் விசும்பின் நின்றும் இருள் உக விழுவ போல,
கானகம் தொடர்ந்த தீயின் சுடுவன பலவும் கண்டான். 
 
தோடு அவிழ் அலங்கல் என் சேய்க்கு உணர்த்துமின் என்னச் சொன்னான்;
ஓடினார் சாரர்; வல்லை உணர்த்தினர்; துணுக்கம் எய்தா,
ஆடவர் திலகன், யாண்டையான் இகல் அனுமன்? ஏனோர்,
வீடணன், யாங்கண் உள்ளார்? உணர்த்துமின், விரைவின் என்றான். 
 
தந்தை இறந்தும், தாயர் பிரிந்தும், தலம் விட்டும்,
பின் தனி மேவும் மாது பிரிந்தும், பிரிவு இல்லா
எம் துணை நீ என்று இன்பம் அடைந்தேன்; இது காணேன்;
வந்தனென், எம்பி! வந்தனென், எந்தாய்! இனி வாழேன்!