சீதை களம் காண் படலம்

bookmark

யுத்தகாண்டம்

இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

சீதை களம் காண் படலம்

(இந்திர ஜித்தின் பிரமாத்திரத்தினால் வீழ்ந்து கிடக்கும் இராம லக்ஷ்மணர்களை போர்க்களத்தில் கண்ட சீதை வருந்துகின்ற பகுதியாதலின் இது "சீதை களங்காண்படலம்" எனப்பட்டது. 'களங்காட்டு படலம்' எனவும் 'சானகி களங்காண்படலம்' எனவும், 'சனகி களங்காண்படலம்' எனவும் பல்வேறு விதத்தில் இப்படலம் அழைக்கப்படுகிறது)

இராமபிரானும் அவருடன் இருந்த அவரது உயிர் போன்ற சகாக்களும் இறந்த செய்தி கேட்ட இராவணன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். அந்த செய்தியைச் சொன்ன ஒற்றர்கள் அனைவருக்கும் போதும், போதும் என்று சொல்லும் படி செல்வத்தை வாரி இறைத்தான். பிறகு இராமலக்ஷ்மணர்கள் இறந்த செய்தியை முரசு கொட்டி இலங்கையின் வீதிகளில் அறிவிக்க உத்தரவு பிறப்பித்தான். அதன் படியே பறை அடிப்போரும் அந்தச் செய்தியை பறை அடித்து இலங்கை மக்களுக்குத் தெரிவித்தனர். அதனால், இலங்கையே விழாக் கோலம் பூண்டது.

ஆனால், இவ்விஷயம் சீதா பிராட்டியின் காதுகளுக்குச் சென்ற போது, பிராட்டி இதுவும் இராவணனின் பொய் தான் என்று கூறி, ராமபிரானும், லக்ஷ்மணனும் உயிருடன் இருப்பதாக திரிசடையிடம் கூற, அக்கணம் அங்கு இருந்த அரக்கிகள் சீதை கூறியதை ஒட்டுக் கேட்டு வந்து இராவணனிடம் கூறினார்கள் . அந்தச் செய்தியை கேட்டு சீதையின் மீது ஒரு புறம் கோபமும், மறுபுறம் பரிதாபமும் கொண்ட இராவணன். உடனே தனது புஷ்பக விமானத்தில் சீதையை ஏற்றிக் கொண்டு, போர்க்களம் அழைத்துச் சென்று இராம லக்ஷ்மணர்களின் பூத உடலை அவளுக்கு காட்டுமாறு அரக்கிகளைப் பணித்தான்.

இராவணனின் உத்தரவுப் படியே சீதையை புஷ்பக விமானத்தில் ஏற்றிக் கொண்டு திரிசடை உட்பட அனைத்து அரக்கிகளும் போர்க்களம் நோக்கிப் புறப்பட்டனர் . அப்போது இராவணன் மருத்தன் என்னும் அரக்கனை அழைத்தான். மருத்தனும் இலங்கேஸ்வரனின் கட்டளையை ஏற்று வந்தான். அக்கணம் இராவணன் மருத்தனிடம்," மருத்தனே! சீதை போர்க்களம் காணப் போய்க் கொண்டு இருக்கிறாள். நீ உடனே சென்று நமது வீரர்களின் இறந்த சடலங்கள் அனைத்தையும் கடலில் தூக்கி எறிந்து விடு. அங்கு வெறும் வானர வீரர்களின் உடலை மட்டும் விட்டு வை. அப்போது தான் சீதை இறந்த அரக்கர்களை விட, வானர வீரர்களின் எண்ணிக்கை தான் அதிகம் என எண்ணி நமது பாராக்கிரமத்தை உணர்ந்து கொள்வாள்" என்றான்.

மருத்தனும் மன்னனின் கட்டளையை ஏற்று தனது துணைவர்களுடன் போர்க்களத்தில் இறந்த அரக்கர்களின் உடல்களை எல்லாம் அகற்றி கடலில் தூக்கி எறிந்தான். பிறகு சீதை புஷ்பக விமானத்தில் வருவதற்குள் அவ்விடம் விட்டு வேகமாக புறப்பட்டுச் சென்றான்.

மறுபக்கம் அரக்கியர்களால் போர்களத்துக்கு அழைத்து வரப்பட்ட சீதாபிராட்டி, மயங்கிக் கிடந்த ஸ்ரீ இராமபிரானை இறந்து கிடப்பதாக எண்ணி புஷ்பக விமானத்தில் இருந்த படி கதறி அழுதாள். அத்துடன் நஞ்சை உண்டவள் போல துடித்தாள். அந்த துன்பத்தை அவளால் தாங்க முடியவில்லை. யாரோ தன்னை நெருப்பிலே போட்டது போல உடல் வெந்தாள். துன்பத்தில் நெஞ்சம் விம்மினாள். உடல் முழுவதும் வியர்க்கப் பெற்றாள். தாமரை மலர் போன்ற தனது கைகளை நெரித்தாள். அவளது நிலையைக் கண்ட தேவ மகளிரோ, அதிக வருத்தம் கொண்டு அவள் பொருட்டுப் புலம்பினர். இன்னும் சில தேவ மகளிர் சீதையின் துயர் துடைக்க அவளிடம் சென்று "உனது கணவர் ஸ்ரீ இராமன் இறக்க வில்லை ஆழ்ந்த மயக்கத்தில் தான் உள்ளார்" என்னும் உண்மையை சொல்லத் துடித்தனர். ஆனால், அவர்கள் இராவணன் மீது கொண்ட பயத்தின் விளைவாக உண்மையை உணர்ந்தும் சிலை போல வானத்தில் செய்வது அறியாமல் நின்றனர். அதனால், சீதைக்கு இவ்விஷயத்தைப் பற்றிக் கூற யாருமே இல்லாததால் மேலும், மேலும் அழுது மயக்கம் அடைந்தாள்.

சீதை மயக்கம் அடைந்ததைக் கண்ட அரக்கியர்கள் அவள் முகத்தில் குளிர்ந்த நீரைத் தெளித்து, அவளை வாரி எடுத்தார்கள். வெகு நேரத்திற்குப் பிறகு சீதை சுய உணர்வைப் பெற்றாள். அவ்வாறு சுய உணர்வைப் பெற்ற சீதை," தருமதேவதையே! எனது கணவர் உனக்கு எதிராக எந்தச் செயலிலும் ஈடுபட்டதில்லை. அப்படி இருக்க, நீ இவ்வாறு கொடுமை இழைப்பாயோ?அதருமம் மட்டுமே செய்யும் அரக்கர்களுக்கு நீ கட்டுப் படலாமோ? எனது கணவரை இந்த நிலையில் பார்த்தும் உயிரை விடாத நான் பாவியே! எனக்கு விமோசனமும் கிட்டுமோ! இறைவா விடியாத இருளில் நீ ஏன் என்னைத் தள்ளி விட்டாய்?

எனது உயிருக்கும் உயிரானவரே, தாங்கள் வந்து என்னை மீட்டுக் கொண்டு போவீர்கள் என்ற நம்பிக்கையில் தானே, இதுவரையில் நான் எனது உயிரை வைத்துக் கொண்டு இருந்தேன்! அதை விடுத்துத், தலைவா! நான் உங்களை இந்த நிலையில் காண்பேன் என்று நினைக்கவில்லையே. அன்று மிதிலையில் அவயோர்களுக்கு முன்னாள் எனது பாவம் மிகுந்தக் கரங்களை நீர் பற்றியது இதற்காகத் தானோ! நீர் இப்படி சாய்ந்த செய்தி கேள்விப் பட்டால் அயோத்தியில் இருக்கும் உமது அன்னையர்கள் இதனை எப்படித் தாங்குவார்கள்? உமது சகோதர்களும் உயிரை வைத்துக் கொண்டு இருப்பர்களோ? ஒருவேளை நன்மையைக் காட்டுக்கு அனுப்பியே கொடிய கைகேயியின் எண்ணம் இது தானோ? அய்யோ! அன்று இளையபெருமாளின் சொல்லையும் மீறி மாய மானின் மீது ஆசை கொண்டதால் தானே இன்று நான் இப்படி அனுபவிக்கிறேன்! பெண்புத்தி பின் புத்தி என்பார்களே, எனது விஷயத்தில் அது அவ்வாரே நடந்து விட்டதே! இனியும் நான் இந்த உயிரை வைத்துக் கொண்டு இருக்கக் கூடாது, எனது துன்பம் தணியுமாறு எனது கணவரின் திருமேனியின் மீது இப்போதே விழுந்து இறக்கிறேன்!" என்று பலவாறு சொல்லிப் புலம்பி, தான் நினைத்த செயலை முடிக்க எழுந்தாள் சீதை.

அப்போது சீதையின் எண்ணத்தை உணர்ந்து கொண்ட திரிசடை அவளை தடுத்து நிறுத்தினாள். பிறகு, சீதாபிராட்டியை சூழ்ந்து இருந்த அரக்கியர்கள் எல்லோரும் விலகிய சமயத்தில் அவளை நெருங்கி அவளுடைய காதில் ரகசியமாக திரிசடை ," தாயே! இது முழுக்க, முழுக்க அரக்கர்களின் மாயச் செயல் தான். எவ்வாறு இராவணன் அன்று மாரிச்சனைக் கொண்டு மாய மானை உருவாக்கினானோ! அதுபோல மாயா ஜனகனை அன்று ஒரு நாள் அசோக வனத்தில் உருவாக்கினானோ! அதே போலத் தான் இன்று ஸ்ரீ இராமன் இறந்து விட்டது போல தங்களிடம் காண்பிக்கிறான். இதனைத் தாங்கள் புரிந்து கொள்ளாமல் உயிரை விடப் போவதாக சொல்வது சரியோ? பேதைப் பெண்ணாக அல்லவா இருக்கின்றீர்கள் தாங்கள்.

அரக்கர்களின் மாயையைப் பற்றித் தெரிந்தும் இப்படித் தாங்கள் புலம்புவது சரியோ? ஸ்ரீ இராமன் திருமாலின் அவதாரம் ஆயிற்றே, அவர் இராவணனை அழிக்காமல் இறப்பாரோ? அன்று தண்டகாரிணியத்தில் தங்களுக்கு முன்னாள் தானே அத்தனை அரக்கர்களை வதைத்தார். அப்படி இருக்க அவர் இங்கு அரக்கர்களால் மாண்டு கிடக்கிறார் என்று சொன்னால் அதையும் தாங்கள் அப்படியே நம்பலாமா? அங்கு பாருங்கள் இராமலக்ஷ்மணர்களின் முகத்தையும், விழுந்து கிடக்கும் வானர வீரர்களின் முகத்தையும், அவர்கள் எல்லோர் முகத்திலும் இவ்வளவு நேரம் கழித்தும் கூட சவக் களை தெரியவில்லையே! அப்படி இருக்க அனைவரும் சப்த நாடியும் அடங்கி இறந்து விட்டதாக நீர் எவ்வாறு கூறுகின்றீர்? மேலும், நான் சத்தியத்தை சொல்கிறேன் கேளுங்கள், இன்னும் அங்கு விழுந்து கிடக்கும் யாருடைய நாடியும் ஒரேடியாக அடங்கவில்லை. அவர்கள் அனைவருமே ஆழ்ந்த மயக்கத்தில் தான் உள்ளனர். இது நிச்சயம். அதனால் தாங்கள் வீணே கலங்க வேண்டாம். தருமம் இன்னும் அழியவும் இல்லை, அதர்மத்திடம் அது தோற்க்கவும் இல்லை. இனி எக்காலத்திலும் தருமம் தோற்கவும் தோற்காது.

தவிர நீர் அனுமனுக்கு சிரஞ்சீவியாக இருக்குமாறு வரம் அளித்து இருந்தீர், அப்படி இருக்க உமது கற்பின் மீது நீர் நம்பிக்கை இல்லாமல், அனுமனும் கூட இறந்து கிடக்கிறான் என்பது போல பேசலாமா?ஆதலால், நான் மீண்டும் சொல்கிறேன் பிரம்மாஸ்த்திரத்தால் வானரர்களும், இராமலக்ஷ்மணரும் இறந்து விட்டதாகக் கூறுவது முழுக்க, முழுக்கப் பொய்யே. மேலும், அதோ நமக்கும் மேலே, வானத்தில் நின்று இருக்கும் தேவர்களை என்னால் காண முடிகிறது. அவர்களது முகத்தைப் பார்த்தால் அதில் சிறிதும் வருத்தத்தின் நிழல் அசைவாடவில்லை. மேலும், அந்த தேவர்கள் இராமலக்ஷ்மணர்களை கைகூப்பி துதித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆதலால், தான் தாயே மீண்டும், மீண்டும் சொல்கிறேன், இராமலக்ஷ்மணர்களுக்கு எந்தக் கேடும் ஏற்படவில்லை. ஆதலால், தாங்கள் சத்தியத்தை உணர்ந்து துக்கத்தை கை விடுவீர்களாக" என்று சொல்லி முடித்தாள்.

தன்னிடம் திரிசடை சொல்லியதை எண்ணிப் பார்த்து சீதை சற்றே தன்னுடைய சந்தேகம் நீங்கப் பெற்றாள். அதனால் அவள் சிறிதளவாகப் பிராணனைத் தாங்கினாள்.

பின்பு சீதை திரிசடையைப் பார்த்துத்," தாயே! இதுவரையில் தாங்கள் கூறிய எந்த ஒரு வார்த்தையும் பொய்த்துப் போனதில்லை. ஆகையால், உம்மையே தெய்வமாகக் கருதி இது நாள் வரையில் வாழ்ந்து வந்து இருக்கிறேன். மேலும், நான் இலங்கை வந்தது முதல் பற்றற்ற நிலையில் உள்ளேன் என்பதைத் தாங்களே அறிவீர். என்றாவது ஒருநாள் நான் எனது கணவனுடன் சேருவேன் என்ற அந்த ஒரே எண்ணத்தில் தான் இது வரையில் நான் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இப்போது நீ கூறிய வார்த்தைகளில் இருந்து நான் மீண்டும் உயிர் வாழும் ஆசையைக் கொண்டேன்!" என்று கூறியபடி தனது கணவரை கண் இமைக்காமல் நோக்கிக் கொண்டு இருந்தாள்.

அப்போது உயிரைக் கொண்டு போகும் யமனைப் போல, அரக்கியர்கள் புஷ்பக விமானத்தை சீதா தேவியுடன் இலங்கையின் அசோக வனத்தை நோக்கிச் செலுத்தினார்கள்!