
பரசுராமப் படலம்

பாலகாண்டம்
பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
பரசுராமப் படலம்
(தயரதனும், இராமன் முதலிய அரசிளங் குமரர்களும், தேவியரும், உடன் வந்த படை வீரர்களுடன் மிதிலையிலிருந்து. அயோத்தி மாநகரம் புறப்படுகின்றனர். வழியில் தீய நிமித்தங்களும் நன்னிமித்தங்களும் சேர்ந்து தோன்றுகின்றன. நிமித்திகள், "இன்றே வரும் இடையூறு: அது நான்றாய் விடும்" என்கிறார்கள். அப்போது. தன் தந்தையைக் கொன்ற மன்னர் குலத்தை. இருபத்தொரு தலைமுறை கருவறுப்பேன் என்று சபதம் இட்டுள்ள பரசுராமன் பெருஞ்சினத்தோடு எதிர் நிற்கிறான். அபயம் வேண்டுகிறான் தசரதன்."முன்பே முறிந்துபோன சிவதனுசை ஒடித்த வீரம் என்ன வீரம்? இதனை வளை; உன் வீரம் உணர்வேன்" எனவுரைத்து வில்லின் வரலாறு உரைக்கிறான் பரசுராமன். மிக எளிதாக, இராமன் அவ்வில்லை வளைத்து. வில்லின் கணைக்கு இலக்குக் கேட்க. தான் ஈட்டிய தவத்தையெல்லாம் எடுத்துக் கொள்க என்கிறான் அவன். தவம் அனைத்தும் இழந்த பரசுராமன். நீ துளவ மாலையணிந்த திருமாலே என உணர்ந்தேன் என்று கூறி விடை பெறுகிறான். தயரதன், இராமன் பெருமையினை உணர்ந்து உச்சி மோந்து. ஆனந்தக் கண்ணீர் அருவியாட்டுகிறான். வருணனிடம். பரசுராமன் வில்லை வைத்திருக்கப் பணித்த இராமன், பரிவாரங்களுடன் அயோத்தி எய்துகிறான். கேகய மன்னன் ஓலைப்படி, மாமன் உதாசித்தோடு பரத சத்துருக்கனர் கேகய நாட்டினை ஏழு நாள்களில் சென்றடைகின்றனர்)
சீதையும், ஸ்ரீ ராமரும் தனது திருமண வாழ்க்கையை தொடங்கி நாட்கள் கழிந்தன. விசுவாமித்திர முனிவர் அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக் கூறி விட்டு, தவம் செய்வதற்காக அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு இமயமலைக்குப் போய் விட்டார். தசரதச் சக்கரவர்த்தியும், ஜனக மகாராஜரிடன் விடை பெற்றுக் கொண்டு தனது பரிவாரங்களுடன் அயோத்திக்குப் புறப்பட்டார். உடன், இராமர்-சீதை, பரதன்-மாண்டவி, லக்ஷ்மணன்-ஊர்மிளை, சத்ருக்னன்-சுருதகீர்த்தியை ஆகியோரும், ரிஷிகள், படை வீரர்கள் புடைசூழ அயோத்தியை நோக்கிப் புறப்பட்டனர். அப்பொழுது அவர்கள் செல்லும் வழியில் மயில் முதலிய பறவைகள் தாம் சுப சகுனமாக வலப்பக்கமாகவும், காகம் முதலிய சில பறவைகள் தாம் தீய சகுனமாக இடப்பக்கமாகவும் வந்தன. அது கண்ட தசரத சக்கரவர்த்தி "இது என்ன சுப சகுனமும், தீய சகுனமும் ஒரே நேரத்தில் காணப்படுகிறதே?" என்று கேட்டு ரதத்தை நிறுத்த, மற்றவர்களும் மேலே பயணத்தைத் தொடராமல் நின்றார்கள்.
தசரத சக்கரவர்த்தி ஒரு நிமித்திகனை அழைத்து, அதன் காரணத்தை வினவினார். உடனே அவன்," இப்பொழுதே இடையூறு வரப் போகிறது. ஆனால், அது உடனே தீர்ந்து எல்லாம் நல்லதாக முடியும்!" என்றான். அப்பொழுது பரசுராமர் பெரும் சினத்தோடு கண்கள் சிவக்க அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவருடைய பெரும் சினத்தைக் கண்டவர்கள்," கடல் நடுவே இருந்து கொழுந்து விட்டு எரியும் வடவைக் கனல் பூமியில் வந்ததோ!" என்றனர். கோபத்துடன் வந்து கொண்டு இருந்த பரசுராமரின் உடம்பில் இருந்து எழுந்த பேரொளி உலகம் முழுவதும் பரவியது. சர்வ சங்கார காலத்தில் பெரும் சீற்றத்துடன் நடனமாடும் உருத்திரமூர்த்தி போல் அப்போது அவர் தோன்றினார். அவர் கையிலே மழுவார் படை இருந்தது. பரசுராமர் க்ஷத்திரிய குலம் மீதே கோபம் கொண்டு இருந்தார். அந்தக் கோபத்துக்குத் தக்க பலமும் அதற்கான காரணமும் கூட அவரிடம் இருந்தது.
(நிற்க)
முன்னொரு காலத்தில், சந்திர வம்சத்தில் பிறந்தவர் தான் மகாராஜா யாயாதி. அவனுடைய மூத்த குமாரன் யது. அந்த யதுவின் குலத்தவன் கிருதவீரியன். அவனுடைய குமாரன் கார்த்தவீரியார்ச்சுனன். அவன் நாராயணரின் அம்சமான தத்தாத்திரேய மகரிஷியை வணங்கி வரங்கள் பல பெற்றான். அவன் ஆயிரம் தோள்களையும், ஆயிரம் கைகளையும், ஆயிரம் தலைகளையும் உடையவன். தத்தாத்ரேயனின் கருணையால் அவனுக்கு தங்கத்தால் ஆன தெய்வீகத் தேர் ஒன்றும் கிடைத்தது. அவனது ஆட்சி அசையும் தன்மை கொண்ட உலகம் முழுவதும் பரவியிருந்தது. அந்தப் பலம் பொருந்திய ஏகாதிபதி எங்கும் தங்கு தடையின்றிச் சென்று வந்தான். பெற்ற வரத்தின் பெருமையை சோதிக்க எட்டுத் திக்கும் படை எடுத்தான். தேரில் ஏறி எல்லாப் புறங்களிலும் உள்ள தேவர்களையும், யக்ஷர்களையும், தவசிகளையும் நசுக்கினான். பிறந்த அனைத்து உயிர்களும் அவனால் தொந்தரவுக்கு உள்ளாகின.
ஒரு நாள், தத்தாத்திரேய மகரிஷியை மகிழ்வித்து சகல லோகங்களும் கொண்டாடும் மகா புருஷன் ஒருவன் கைகளால் மட்டுமே தான் கொல்லப் பட வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான் கார்த்தவீர்யார்ஜுனன். இப்படி இருக்க, ஒரு நாள் கார்த்தவீர்யார்ஜுனன் நருமதை ஆற்றில் அழகிய மங்கைகளுடன் ஜலக்கிரீடை செய்து கொண்டு, மது பானத்தால் மயங்கிய படி இருந்தான். அப்போது இராவணன் திக்கு விஜயம் செய்து கொண்டு இருந்தவன் அங்கே வந்தான். மாவீரன் கார்த்தவீர்யார்ஜுனன் அரை மயக்க நிலையைப் பார்த்ததும் இராவணன், அவனைச் சுலபமாக வென்று விடலாம் என்று எண்ணி அவனை எதிர்த்தான்.
தன்னை எதிர்த்த ராவணனை கார்த்தவீர்யார்ஜுனன் அந்த மயங்கிய நிலையிலும் அடித்து துவம்சம் செய்தான். இறுதியில் இராவணை சிறைபிடித்து இழுத்துச் சென்றான். பின்னர் அவனுடைய மூதாதையராகிய புலஸ்திய மகா முனிவரின் வேண்டுகோளை ஏற்று இராவணனை விடுவித்தான். இராவணனை தோற்கடித்து வெற்றி கொண்டதால் அவனுக்கு "ராவணஜீத்" என்ற பட்டத்தை வழங்கினார் மகரிஷி புலஸ்தியர்.
இவ்வளவு பலசாலியான கார்த்தவீர்யார்ஜுனன் ஒரு நாள் காட்டுக்கு தனது பரிவாரங்களுடன் வேட்டையாடச் சென்றான். பின்பு வேட்டையாடி முடித்து திரும்பும் போது பரசுராமரின் தந்தையான ஜமதக்கினி மகா முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான். அந்த முனிவரின் அனுமதியால், தனது பரிவாரங்களுடன் விருந்து உண்டு மகிழ்ந்தான். பின்பு, அங்கிருந்து திருப்பும் போது அம்முனிவருக்கு காமதேனு என்கிற தேவலோகத்துப் பசு பல வளங்களை எளிதில் சுரந்தளிப்பதைக் கண்டான். உடனே அந்தப் பசுவின் மீது ஆசை கொண்டான், அதனால் முனிவரிடம் அனுமதி பெறமால் அதனைப் பலாத்காரமாகக் கவர்ந்து சென்றான். அதனை அறிந்த பரசுராமர் கார்த்தவீர்யார்ஜுனன் செய்த அந்தத் தவறுக்காக பெருங் கோபம் கொண்டு தனது ஆயுதங்களுடன் சென்று அவனுடன் கடும் போர் புரிந்தார். அந்தப் போரில் அவனுடைய ஆயிரங் கைகளையும், ஆயிரந் தோள்களையும், தலையையும் தனது கோடாலிப் படையால் வெட்டி வீழ்த்தினார். இறுதியில் கார்த்தவீர்யார்ஜுனன் அப்போரில் வீர மரணம் அடைந்தான்.
பரசுராமர் கார்த்தவீரியார்சுனனைக் கொன்றதும், அவனது குமாரர்கள் இதற்கு பரசுராமரை பழி தீர்க்க நினைத்தனர். எனவே, பரசுராமர் இல்லாத சமயம் பார்த்து பர்ண சாலையினுள் சென்று அவரின் தந்தையாரின் தலையை வெட்டி விட்டுச் சென்றனர். பின்பு இதனை அறிந்த பரசுராமர் பெரும் சினம் கொண்டார். அந்த கோபத்துடன் கார்த்தவீரியார்ச்சுன குமாரர்களைக் கொன்றார். ஜமதக்கினி முனிவரின் மனைவியான ரேணுகாதேவி இருபத்தொரு முறை தன் மார்பில் அடித்துக் கொண்டு அழுது புலம்பினாள். எனவே, பரசுராமர் அரசர்களை இருபத்தொரு தலைமுறை ஒழித்தார். அவர் தாம் முதலில் வீர ஆவேசமாக சத்தியம் செய்தபடி, அந்த அரசர்களின் இரத்த வெள்ளத்தால் ஸ்யமந்தபஞ்சகம் என்று ஐந்து தடாகங்களை ஏற்படுத்தி, அவற்றில் தந்தைக்குத் தருப்பணஞ் செய்தார்.
பிறகு ஒரு காலத்தில் பரசுராமர் தான் வென்ற பூலோகம் முழுவதையும் காசியப முனிவருக்குத் தானம் செய்தார். அதனை அதனைப் பெற்ற அந்த முனிவர் பின்னொரு காலத்தில் பரசுராமரைக் கர்வபங்கம் செய்வதற்காக," எமக்கு தானம் செய்த இடத்திலேயே நீ வசித்திருத்தல் உமக்குத் தகுதியோ?" என்று அவரைக் கேட்டார். உடனே பரசுராமர் வருணபகவான் அனுமதியின் மேல் சைய மலையில் இருந்து கோடாலிப் படையை வீசி எறிந்தார். அது விழுந்த அவ்வளவு இடத்தையும் விட்டுக் கடல் ஒதுங்கிச் சென்றது. கடல் நீங்கிச் சென்று தனக்கென்று அளிக்கப் பெற்ற இடத்தில் தங்கி பரசுராமர் வசித்து வந்தார். அவ்விடமே பிற்காலத்தில் கேரளம் என்று அழைக்கப்பட்டது. மறுபுறம் "சத்திரிய அரசர்கள் இல்லாவிட்டால், இந்தப் பூமியில் சட்டம், ஒழுங்குகள் சீர் குலையுமே!" என்று சிந்தித்த காசியப முனிவர், பரசுராமர் முன்பு தனக்குத் தானமாகத் தந்த பூமியை சத்திரியர்களுக்கே திரும்பவும் தந்தார்.
இதுவே பரசுராமர் பற்றிய கதை. இப்போது இதே சிறப்பு வாய்ந்த பரசுராமர் தான், பெருங்கோபத்துடன், கண் சிவக்க, புருவம் நெற்றியில் வில் போல் வளைந்து மேலே செல்ல, இராமபிரான் முன் வந்து நின்று இராமனை நோக்கிப் பேசத் தொடங்கினார், "தசரத குமாரனே! நீ முறித்த சிவனுடைய வில்லைப் பற்றி நாம் அறிவோம்.இப்பொழுது உனது தோள் வலிமையைச் சோதிக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.
இது கேட்ட தசரதர் அஞ்சி நடுங்கினார். உடனே பரசுராமரின் முன் வந்து நின்று," ஐயனே! தயை கூர்ந்து கோபம் தணிக! உலகம் முழுவதையும் வென்று காசியப முனிவருக்கு தானம் அளித்த வள்ளலே! மும்மூர்த்திகள் கூட உங்களுக்கு முன் ஒரு பொருள் அல்லர். அப்படி இருக்கும் போது அற்பர்களாகிய மனிதர்கள் உமக்கு ஒரு பொருள் ஆவாரோ? இந்த இராமச்சந்திரனும், என்னுடைய பிராணனும் இப்பொழுது உமது அடைக்கலப் பொருள்! பல பராக்கிரமங்களை உடையவரே! சரண் புகுந்த எங்களை அழிக்க முயலும் வலிமை, ஒரு சிறந்த வலிமை ஆகுமோ? என் மகன் உம்மோடு பகை கொண்டவன் அல்லன். அவன் உயிர் உம்மால் பிரிந்தால் நான், என் சுற்றத்தாருடனும் நாட்டாருடனும் அக்கணமே உயிர் விடுவேன்! உமக்கு அடிமை பூண்ட நான் குலத்தோடு அழியச் செய்யாதீர். இதுவே நான் வேண்டும் வரம், "என்று பலவாறு தழு தழுக்கும் குரலில் சொல்லி, தாய் முகம் பார்க்கும் சேய் போல் பரசுராமரைப் பார்த்து நின்றார்.
ஆனால் பரசுராமர், தசரதரின் வேண்டுகோளைப் பொருட்படுத்தவில்லை. அவர் ஸ்ரீ ராமனிடம் தான் மீண்டும் பேசத் தொடங்கினார்." இராமனே! உமாதேவி மணாலரான சிவன் முற்காலத்தில் கொண்டிருந்த அந்த வில் மிகவும் வலிமை குறைந்தது. அந்த வில்லைப் பற்றிச் சொல்கிறேன், கேள். முன்னொரு காலத்தில் விசுவகர்மா இரண்டு தனுசுகளைச் செய்தார்.அவற்றில் ஒரு வில்லை சிவனும், மற்றொரு வில்லை திருமாலும் எடுத்துக் கொண்டார்கள். அதனை அறிந்த தேவர்கள் பிரமனிடம்," இந்த இரண்டு வில்லில் எது வலிமை உடையது?" என்று கேட்டார்கள். தேவர்கள் எழுப்பிய அந்த கேள்வியின் பலனாய், பிரம்மனுக்கும் அந்த வில்லில் எது சிறந்தது என்று அறிந்து கொள்ளும் ஆவல்ஏற்படவே. ஹரிக்கும், ஹரனுக்கும் இடையே தந்திரமாக சண்டை மூட்டி விட்டார் பிரம்மன். அதனால், இரண்டு பேரும் தங்கள் வில்லை நாணேற்றிப் போர் புரிந்தார்கள்.
அப்போது பதினான்கு உலகமும் அதிர்ந்தன. அவர்கள் போர் வெகு காலம் நடந்தது. அச்சமயத்தில் சிவபெருமானின் வில் சற்றே முறிந்தது. அதனால், கோபம் கொண்ட சிவ பெருமான் மீண்டும் தனது அந்த யுத்தத்தைத் தீவிரப் படுத்தினார். அப்போது இது கண்டு அச்சம் அடைந்த தேவர்கள், போரை நிறுத்துமாறு வேண்ட, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன் போரை நிறுத்தி விட்டு, தனது அந்த வில்லை இந்திரனிடம் கொடுத்தார். அந்த வில்லை ஜனகரின் மூதாதையர்களிடம், இந்திரன் ஒப்படைத்து பாதுகாக்கச் சொன்னான். பின்னர், அது வழி, வழியாகப் பாதுகாக்கப் பட்டு ஜனகர் வசம் வந்தது.
திருமால் தம்முடைய வில்லை இரிசிக முனிவருக்குக் கொடுத்து விட்டுச் சென்றார். அந்த முனிவர் எமது தந்தையாகிய ஜமதக்கினி முனிவருக்குக் கொடுத்தார், பின்னர் அது என் வசம் வந்து சேர்ந்தது. சிறுவனே! இதோ, அந்த வில்! இதனை நீ சுலபமாக எடுத்து வளைத்து விட்டால், உலகத்தில் உன்னைப் போன்ற வலிமையுடைய அரசர் வேறு யாருமே இல்லை என்று உலகிற்கு பறை சாற்றி. உன்னோடு நான் செய்ய நினைத்திருக்கும் போரையும் கை விடுவோம்! "என்று கூறினார்.
பின்பு மீண்டும் பரசுராமர் ராமனை நோக்கி," மனுகுலத்தவனே! இன்னும் நான் சொல்வதைக் கேட்பாயாக! பழுதுபட்ட சிவ வில்லை முறித்ததை நீ பெருமையாகக் கருதாதே. எனக்கு ஆசிரியராக இருந்து வில் வித்தையை சொல்லிக் கொடுத்த சிவ பெருமானின் வில்லை உடைத்த சத்திரிய குமாரனே, நீ வல்லமை உடையவனாக இருந்தால், இந்த வில்லை வளைப்பாயாக!" என்று சொல்லி, இராமனிடம் தான் கொண்டு வந்து இருந்த அந்த விஷ்ணுவின் வில்லை நீட்டினார். ஸ்ரீ ராமர் உடனே அந்த வில்லைக் கையில் வாங்கினார். அடுத்த கணம் அந்த வில்லை வளைத்துக் காட்டினார்.
அந்த வில் இராமனால் வளைக்கப்பட்டதைக் கண்டதும் பரசுராமர் ஏதும் பேசாதவரானார். இராமர் அவரை நோக்கி," க்ஷத்திரிய குலத்தையே பூண்டோடு அழிக்க எண்ணி உள்ள உம்மை வதைத்து பழிக்குப் பழி வாங்க வேண்டும். ஆனால், நீர் வேதிய மகன்; நல்லொழுக்கம் உடையவர். ஆதலால், உம்மை உயிருடன் விடுகிறோம்!" என்று சொன்னார்.
பரசுராமர் தனது ஞானக் கண் கொண்டு, விஷ்ணுவின் அவதாரமான இராமனை அறிந்து கொண்டார், அத்துடன் தனது தவறையும் உணர்ந்து ஸ்ரீ ராமனிடம் மன்னிப்பு வேண்டினார். எனினும் ஸ்ரீ ராமர் தாம் வளைத்து நின்று நாணேற்றிய அந்த வில்லை எப்படியும் பயன் படுத்தியே தீர வேண்டும் என்பதால், பரசுராமரை நோக்கி," உமது தாள்களுக்கு உள்ள நடக்கும் வலிமையை இந்த அம்புக்குக் குறியாக்கவா? இல்லை, உமது தவ வலிமையைக் குறியாக்கவா?" என்று கேட்டார்.
பரசுராமர் அதற்கு," ஸ்ரீ ராமா! நான் மனோ வேகமாக மகேந்திர மலைக்குச் செல்ல வேண்டும். அதனால் என் தவ வலிமையை உமது அம்புக்கு குறியாக்குவீர்!" என்றார்.
அவ்வாறே ஸ்ரீ ராம பிரான் அம்பெய்து பரசுராமரின் தவ வலிமையை எல்லாம் பெற்றார். தனது தவ வலிமையை இழந்த பரசுராமர் இராமனைப் புகழ்ந்து விடை பெற்றுச் சென்றார். இவ்வாறாக, பரசுராமனை வெற்றி கொண்டு அனுப்பி, ஸ்ரீ ராமர், தமது தந்தையை களிப்படையச் செய்தார். பரசுராமரையே வெற்றி கொண்ட தனது மகன் ராமனை அனைத்து உச்சி மோந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார் தசரதர் அத்துடன்" எனது மகனை வெல்ல இனி மூன்று உலகத்திலும் வீரன் தான் ஒருவன் உண்டோ?" என்று பெருமிதம் கொண்டார்.
அப்பொழுது தேவர்கள் அங்கே வந்து இராமரின் மேல் கற்பக மலர்கள் தூவிப் போற்றினார்கள். அக்கணம் வருணதேவனைப் பார்த்து ஸ்ரீ ராமர்," வருண தேவனே பெருமையும் கொடுமையும் உடைய இந்த வில்லை, நன்றாகக் காத்து வருவாயாக!" என்று கூறி பரசுராமரிடம் இருந்து தான் பெற்ற அந்த விஷ்ணு வில்லை வருண தேவனிடம் ஒப்படைத்தார். பின்னர் தனது மனைவி சீதையுடன் அயோத்தியை திரும்பினார். தசரத சக்கரவர்த்தியும் உடன் அயோத்தியை திரும்பி தனது நாட்டை நன் முறையில் ஆட்சி செலுத்தி வந்தார்.
அப்பொழுது ஒரு நாள்...
தசரதர் பரதனை அழைத்து," பரதா! உன்னைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார் கேகய நாட்டின் அரசரான உனது தாத்தா! உடனே நீ கேகய நாட்டுக்குப் புறப்பட்டு செல்" என்று பரதனுக்கு ஆணை பிறப்பித்தார்.
இது கேட்ட பரதன், தனது ஆருயிர் அண்ணன் இராமனிடம் வந்து தந்தை கூறிய செய்தியைக் கூறி விட்டு, விடை பெற்றுக் கொண்டு கேகய நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றான், கூடவே தனது தம்பி சத்ருக்கன்னுடனும், மாமா யுதாசித்துடனும் கேகய நாட்டை நோக்கிப் புறப்பட்ட பரதன் ஏழு நாட்கள் கழித்து கேகய நாட்டை அடைந்தான்!