படைத் தலைவர் வதைப் படலம்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
படைத் தலைவர் வதைப் படலம்
(இப்படலத்தில் இராவணனின் படைத் தலைவர்கள் அனைவரும் லக்ஷ்மணனின் நாணொலி கேட்டு யுத்தத்தைக் செய்ய அனுமதி வேண்டி நிற்கின்றனர். அதன் படி இராவணனும் அவர்களுக்கு அனுமதி அளித்தான். அவர்கள் அனைவரும் லக்ஷ்மணனை எதிர்த்துப் போர் செய்து இறுதியில் மடிவதே இப்படலத்தில் காணக் கிடைக்கும் செய்திகள் ஆகும். எனவே தான் இது படைத் தலைவர் வதைப் படலம் என்று அழைக்கப் படுகிறது. மேலும், இதில் கம்பர் மிகவும் அழகாக லக்ஷ்மணனின் போர் திறனை விவரித்து உள்ளார்)
இளைய பெருமாளும் வானரர்களும் நாகாஸ்த்திரத்தில் இருந்து விடுபட்டுப் பிழைத்து எழுந்ததும் மிக்க ஆரவாரம் செய்ததை, இராவணன் கேட்டான் அல்லவா? அவனைப் போலவே மற்ற அரக்கர்களும் அந்த ஆரவாரத்தை கேட்டு மிகுந்த கோபம் கொண்டார்கள். அவர்கள் உடனே இராவணனிடம் விரைந்து வந்து," மன்னர் மன்னவா! எங்காளால் இதன் பிறகும் பொறுத்துக் கொள்ள முடியாது உடனே நாங்கள் அனைவரும் போருக்குப் புறப்பட்டு, அந்த மனிதர்களைக் கொல்ல உத்தரவு அளிக்க வேண்டுகிறோம்" என்றார்கள்.
அது கேட்டு இராவணன் சிறிதே மகிழ்ந்தான். அப்போது அனுமநிடத்தில் தோற்று, இந்திரஜித்தைப் போர்க்களத்தில் தனித்து விட்டு விட்டு ஓடி வந்த தூமிராட்சன், மாகாபாரிசுவனுடன் இராவணனை நெருங்கி," ஐயனே! நாங்கள் போர் செய்ய விரும்புகின்றோம். எங்களை இப்போருக்கு அனுப்புக!" என்று சொன்னார்கள்.
உடனே இராவணன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களும் போருக்கு செல்ல அனுமதி அளித்தான்.
இராவணன் அவ்வாறு அந்த இரு அரக்கர்களுக்கும் அனுமதி அளித்ததைக் கண்ட மற்ற அரக்கர்கள் அவனைப் பார்த்து," இவர்கள் இரண்டு பேரும் போர் செய்த விதத்தைக் கேளுங்கள்!" என்று கூறி, தூமிராட்சனும் மகாபாரிசுவனும் செய்த போர்ச் செயலை விளக்கமாக அவனுக்கு எடுத்துக் கூறினார்கள்.
இராவணன் அதனைக் கேட்டு பெரும் சினம் கொண்டான் பிறகு தனது சேவகர்களை உடனே அழைத்தான். அவர்களும் உடனுக்குடன் இராவணனின் ஆணையை நிறைவேற்ற சபைக்கு வந்தனர். அப்போது அவர்களிடம் இராவணன்," வீரம் என்றால் என்ன விலை? என்று கேட்கும்படி போரில் இருந்து ஓடி வந்த இந்த அரக்கர்கள் இருவரது மூக்கையும் அறுத்து,இலங்கையின் வீதி வழியே ஊர்வலம் அழைத்துச் சென்று. 'போர்க்களத்தில் இருந்து ஓடி வந்த அரக்கர்களின் நிலையைக் காணுங்கள்' என்று சொல்லிக் கூடவே பறை அடியுங்கள்" என்றான்.
அதன் படி இராவணனின் சேவகர்கள் தூமிராட்சனையும், மகா பாரிசுவனையும் கைது செய்தனர். பிறகு, அவர்களது மூக்கை இராவணனின் சொற்படி அறுக்க முற்பட்ட போது." நிறுத்துங்கள்" என்று ஒரு குரல் கேட்டது. இராவணன் அக்குரல் வந்த திசையை நோக்கினான், அவ்வாறு குரல் எழுப்பியவன் தனது பாட்டன் முறையைச் சேர்ந்த மாலி என்ற அரக்கன் என்பதை அறிந்து கொண்டான். உடனே மாலியை அரசவைக்கு வரவேற்றான்.
அவ்வாறு இராவணின் வரவேற்ப்பை ஏற்று அவனது சபைக்கு வந்த மாலி, இராவணனிடம்," புகழில் சிறந்தவனே! நீ செய்யும் காரியம் உமக்குத் தகுமோ? வெற்றியும், தோல்வியும் மாறி, மாறி வீரர்களின் வாழ்வில் வரக் கூடியது. தவிர ஆண்மையைத் தடுத்துத் தம்மிடத்தில் நிலையாக இருக்கும் படி வைத்துக் கொள்ளுதல் எவருக்கும் இயலாது. ஏன்? நாம் எத்தனை முறை தேவர்களுக்கு தோல்வியைப் பரிசு அளித்து உள்ளோம். தேவர்கள் நம்மைக் கண்டு ஓடி ஒழிந்தது இல்லையா? அதுபோலவே, தேவர்களும் நமது அரக்கர் குலத்து அரசர்களை விரட்டிய வரலாறுகள் உண்டு.அப்படி இருக்க நீர் இவர்களை தண்டிப்பது சரியோ? இவர்களும் நமது இனத்தை சேர்ந்தவர்கள் தானே?
மேலும், அரசே நான் சொல்வதைத் தவறாக நினைக்க வேண்டாம். நீரும் கூட ஒருமுறை இராமலக்ஷ்மணர்களுடன் போர் செய்து வெற்றி பெற முடியாமல் திரும்பி இலங்கைக்கு வந்தவர் தானே. கைலாய மலையை ஆட்டிப் படைத்த உம்மையே இராம லக்ஷ்மணர்கள் போரிட்டுத் தோற்கடித்தால், மற்ற அரக்கர்கள் அவர்களுக்கு எம்மாத்திரம்! அது போலவே, வருண தேவன் உட்பட கடல் அரசன் வரையில் அனைவரும் இராமனுக்கு அஞ்சுகின்றனர். தேவர்களே, இராமனைக் கண்டு அஞ்சும் போது, இந்த சாமான்ய அரக்கர்கள் எம்மாத்திரம்! மேலும், அன்று அனுமான் இலங்கையை எரித்தான், அந்த நாளில் இருந்து 'அனுமான்' என்ற அந்தப் பெயரைக் கேட்டாலே இலங்கை வாசிகள் அனைவரும் நடுங்குகின்றனர். இப்போது நீர் சொல்லும் தீர்ப்பின் படிப் பார்த்தால் அவர்களது மூக்கையும் சேர்த்து நாம் அறுக்க வேண்டும். அறுக்கலாமா அரசே! சொல்லுங்கள் அவர்களது மூக்கையும் அறுக்கலாமா! அப்படிச் செய்தால் இலங்கையில் ஒருவருக்கும் மூக்கு இருக்காது.
தவிர அன்று அசோகவனத்தில் அனுமனின் இடி, போன்ற அடியை தாங்கமுடியால் உயிர் பிச்சை கேட்ட அரக்கர்கள் எத்தனையோ பேர் இன்னும் கூட இலங்கையில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஏன்? நமது சபையிலேயே பலர் இருக்கின்றனர். அவர்களை என்ன செய்ய? மேலும், ஒரு வகையில், கொடிய இராம லக்ஷ்மணர்கள் இன்னும் போரில் இறக்க வில்லை என்றால் நீ அனுப்பிய வீரர்கள் அனைவரும் தோல்வி கண்டவர்களே. ஆனால், நீரோ அவர்கள் அனைவரது மூக்கையும் அறுக்கச் சொல்லவில்லையே! இவ்வளவு ஏன்? தங்களது மகன் இந்திரஜித்து கூட போர்க்களத்தில் தோற்கும் நிலையில் தான் மாயப் போர் செய்து லக்ஷ்மணனை நாக பாசம் கொண்டு வீழ்த்தினான். இதனை நீரும் மறுக்க இயலாது, காரணம் உமக்கும் கூடப் போர் களத்தில் நடந்தவை அனைத்தும் ஒற்றர்கள் மூலமாகத் தெரியும். ஆகவே, இந்த இரு அரக்கர்களையும் நீர் இப்போது மூக்கை அறுத்துத் தண்டிப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. அதற்கு மேலும் உங்கள் விருப்பம் " என்றான்.
மாலியின் வார்த்தையில் இருந்த நியாயத்தைப் புரிந்து கொண்டான் இராவணன். அதனால் சற்றே கோபம் தணிந்தான். அக்கணமே அந்த இரு வீரர்களையும் விடுவித்தான். உடனே, மகா பாரிசுவனும், தூமிராட்சனும் சற்றே மனக்கலக்கம் தணிந்து தாங்கள் முன்பு செய்த செயலுக்காக இராவணனிடம் மன்னிப்பு வேண்டி நின்றனர். பின்னர் இலங்கேஸ்வரனிடம் ," அரசே! இனி இதுபோல ஒரு காரியத்தை நாங்கள் வாழ்நாளில் செய்யவே மாட்டோம். மீண்டும் எங்களுக்கு ஒரு வாய்ப்பைத் தாருங்கள். இராமலக்ஷ்மணரின் வாழ்வை இப்போதே அழித்து வருகிறோம். இல்லை, அவர்கள் கைகளால் போர்களத்திலேயே உயிரை இழக்கிறோம். இன்றே, இதில் இரண்டில் ஒன்றை நடப்பித்துக் காட்டுகிறோம்! " என்று வீரசபதம் செய்தார்கள்.
அதனால், அந்த அரக்கர்கள் மீது முழுவதுமாகக் கோபம் தணிந்தான் இராவணன். உடனே அவர்களுடன் பத்து வெள்ளம் கொடிய அரக்க சேனையை போருக்கு அனுப்பி வைத்தான். அதில் சதுரங்க சேனைகளும் அடக்கம். மேலும், யஜ்ஞசத்துரு, சூரியச்சத்துரு, மாலி, வஜ்ஜிரதம்ஷ்ட்ரன் ஆகியவர்களுடன் தூமிராட்சனும் மாகாபாரிசுவனும் போருக்குப் புறப்பட்டு விரைந்து சென்றார்கள்.
அப்படிப் புறப்பட்ட அசுரசேனை கடல் போல விளங்கிற்று. அதனால், கடல் அலை போலவே பேரிகைகள் முழங்கின. மேகங்கள் இடி, இடிப்பது போல யானைகள் பிளிறின. மேலும் அந்த யானைகள் வானளவு நீண்டுள்ள தமது துதிக்கையினால் ஆகாய மேகங்களில் உள்ள நீரைக் குடித்துக் கொண்டே சென்றன. மறுபுறம் வீரர்கள் ஏந்திய ஆயுதங்களின் ஒளி, இன்னொரு சூரியன் பூமியில் உதித்ததுபோலக் காணப் பட்டது. அதனால், தேவர்களின் கண்களும் கூசியது.
அவ்வாறு சென்ற சேனை போர்களத்தை அடைந்தது. ஸ்ரீ இராமர் அந்தப் பெரும் சேனையைக் கண்டார். பின்னர் விபீஷணனிடம்," இந்தச் சேனையை வழி நடத்திக் கொண்டு வருவது யார்? ஒருவேளை மாயையில் கை தேர்ந்த இந்திரஜித்து தானோ?ஆனால், எனக்கு அப்படித் தோன்றவில்லையே! ஒருவேளை அப்படி இந்திரஜித் இல்லை எனில் இவர்கள் வேறு யார் ?யார்? "என்றார்.
உடனே விபீஷணன் இராமனைப் பார்த்து அந்த அரக்க சேனையின் விவரத்தைப் பற்றியும் வந்துள்ள அரக்கப் படைத் தலைவர்கள் பற்றியும் கூறத் தொடங்கினான் ,"ஸ்ரீ இராமா! கருணைக் கடலே நான் அந்த அரக்க சேனையின் விவரத்தை சொல்கிறேன் கேளும்! குகையில் வாழ்கின்ற சிங்கம் போரை விரும்பி வருவது போல, கைகளில் ஓளி மிகுந்த ஆயுதங்களுடன் ஆர்பரித்துக் கொண்டு வருகிறானே, அவன் தான் மாகாபாரிசுவன். கண்களில் நெருப்புப் பொறி பறக்க, கோரைப் பற்கள் வெளியில் தெரிய எக்கால சிரிப்புடன் வருகிறானே அவனே தூமிராட்சனாவான். ரத்தக் கரைப் படிந்த முத்தலைச் சூலம் ஏந்தி, வலிய தேரில் கோபத்துடன் வருகிறானே. அவன் தான் வஜ்ஜிரதம்ஷ்ட்ரன் என்னும் கொடிய அரக்கன். காற்றினும் மனத்தினும் விரைந்து செல்ல வல்ல குதிரையின் மீது ஏறிக் கொண்டு வருகிறானே, அவன் தான் தேவர்கள் அனைவரையும் ஓட, ஓட விரட்டி அடித்த பிசாசன். கடலை விட அதிக ஆரவாரத்தைச் செய்து, மலை போன்ற தோற்றத்துடன் பொற் தேரில், நர மாமிசத்தை உண்டபடி வருகிறானே அவன் தான் சூரியசத்துரு. அத்துடன் அறிய தவம் பல செய்து, மிக்க வரத்தைப் பெற்றவனும், அதிகமான குதிரைச் சேனையையும் கொண்டு கம்பீரமாக வருகிறானே, அவன் தான் ஈசனிடம் இருந்து ஏராளமான திவ்விய அஸ்த்திரங்களை கொண்ட அரக்கர்களில் மூத்த மாலி! மேலும் வருகின்ற அரக்க சேனையைப் பார்த்தால் நிச்சயம் பத்து வெள்ளத்துக்குக் குறையாமல் இருக்கும் " என்று கூறி முடித்தான்.
அப்போது ஸ்ரீ இராமர் அது கேட்டு அமைதியாக தலையை அசைத்தார். பின்னர் சுக்கிரீவனைப் பார்த்தார். ஸ்ரீ இராமரின் எண்ணத்தைக் குறிப்பால் அறிந்த சுக்கிரீவன் உடனே சற்றும் தாமதிக்காமல் யுத்தத்தை தொடங்கினான். அக்கணம் வானர வீரர்கள் ஆர்பரித்து அரக்கர்கள் மீது மலைகளையும், மரங்களையும் பிடுங்கி எறிந்தனர். அதனால், அரக்கர் படையில் இருந்த யானைகளும், குதிரைகளும், தேர்களும் போரின் முதல் தாக்குதலிலேயே பெரும் பாலும் அழிந்தன. அது கண்ட அரக்கப் படைத் தலைவர்கள் அனைவரும் சுதாரித்துக் கொண்டு, ஒரே சமயத்தில் கோடிக் கணக்கான பாணங்களை வானர வீரர்கள் மீது விடுத்தார்கள். அந்த அம்புகள் அனைத்தும் பல கோடி வானரர்களின் தலையை துண்டித்தது. இப்படியாக அரக்கர்களுக்கும், வானரர்களுக்கும் இடையே பெரும் போர் கணப் பொழுதில் மூண்டது.
அதனால் இலங்கை மண் பல வீரர்கள், மற்றும் விலங்குகளின் ரத்தம் பாய செம்மண் போலக் காட்சி அளித்தது. அதுபோல நீலக் கடலும், இறந்த அரக்கர்கள் மற்றும் வானரர்களின் பிணக் குவியலில் இருந்து வழிந்து சென்ற குருதியின் காரணமாக செந்நிறமாக மாறியது. அக்கணம் சூரியன் உதயமானதால், வானமும் கடலின் அந்த செந்நிறத்தை பிரதிபலிக்கும் படியாக செவ்வானமாகக் காட்சி அளித்தது.
போர்க்களம் எங்கும் யானைகளும் குதிரைகளும் இறந்து துண்டுகலாகிச் சிதறிக் கிடந்தன. அதுபோல அரக்கர்களின் தேர்களும் சின்னாபின்னமாகிக் கிடந்தன. இறந்த அரக்கர்களின் மனைவிமார்கள், போர்களத்துக்குப் புலம்பிக் கொண்டே தலைவிரி கோலமாக வந்தார்கள். அவர்களின் கண்கள் மடை திறந்த வெள்ளமாயின. அவ்வாறு வந்த அரக்கிகள் தமது கணவர்களைத் தழுவிக் கொண்டு ஆறாத்துயருடன் கதறித் துடித்தார்கள்.
பிறகு, மீண்டும் போர் தொடங்கிற்று. அனுமனும் தூமிராட்சனும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போர் செய்தார்கள். விரைவில் அனுமான் அந்த அரக்கனின் தலையை கைகளால் திருகி எடுத்து அத்தலையை கடலில் விட்டெறிந்தான். அவ்வாறு தூமிராட்சன் அனுமனால் வதம் செய்யப்பட்டான். அங்கதன் தன்னை எதிர்த்த மகாபாரிசுவனைக் கொன்றான். பின்பு நீலனுக்கும், மாலிக்கும் இடையே கடும் போர் ஏற்பட்டது. அதில் வீரம் கொண்ட நீலனின் தாக்குதலால் மாலி கொல்லப்பட்டான்.
அப்போது யஞ்ஞஹா லக்ஷ்மணனுடன் கடும் போர் புரிந்தான். இருவரும் ஆயிரக்கணக்கான பாணங்களை விண்ணில் ஏவினார்கள். அவைகள் ஒன்றுடன், ஒன்று மோதியதில் மின்னல் போல பிரகாசித்தது. அதனால், தேவர்களுக்கும் கண்கள் கூசியது. இறுதியில் லக்ஷ்மணின் வலிய பாணங்களால் யஞ்ஞஹா கொல்லப்பட்டான். பிறகு இடபனுக்கும், வஜ்ஜிரதம்ஷ்ட்ரனுக்கும் போர் ஏற்பட, அதில் இடபனை வஜ்ஜிரதம்ஷ்ட்ரன் கொடுமையாகத் தாக்கினான், அதனால் இடபன் மயங்கி விழுந்தான். மயங்கி விழுந்த இடபனை வஜ்ஜிரதம்ஷ்ட்ரன் கொல்ல முற்பட்ட போது, அனுமான் இடையில் புகுந்து வஜ்ஜிரதம்ஷ்ட்ரனின் கபாலத்தை, அவன் தலையில் ஓங்கி அடித்து உடைத்தான். அதனால், வாய் மற்றும் காதுகளில் இருந்து ரத்தமும், மூளையும் சிதற வஜ்ஜிரதம்ஷ்ட்ரன் இறந்தான்.
இவ்வாறு தனது துணைவர்கள் அனைவரும் இறந்ததைக் கண்டான் பிசாசன். அவனது நெஞ்சம் ஆத்திரத்தால் குமுறியது. அவன் அப்போது அரக்கர்களுடன் போர் செய்து கொண்டு இருந்த பனசன் என்னும் வானரத் தளபதியை மார்பில் ஓங்கி அடித்தான். அந்த அடியில் பனசனின் மார்பில் இருந்து இரத்த வெள்ளம் பெருகியது. பனசன் விழுந்தான். வானர வீரர்கள் தங்கள் தளபதிகளுள் ஒருவர் விழுந்ததும், மேய்ப்பவன் இல்லாத ஆடுகள் போல சிதறி ஓடினார்கள். அவர்கள் அனைவரையும் பிசாசன் மாயப் போர் செய்து கொன்றான். அவனது குதிரை தீடீர் என்று ஆகாயத்தில் இருக்கும், பிறகு பூமியில் வேறு ஒரு திசை வழியே வந்து வானர வீரர்களைத் தாக்கும். அதில் இருந்து வானர வீரர்கள் ஒரு வழியாக சமாளித்து வருவதற்குள், போர்க்களத்தில் உள்ள பல திசைகளிலும் இருந்து அக்குதிரை ஒரே நேரத்தில் பிசாசனை சுமந்து கொண்டு வந்து வானர வீரர்களைத் தாக்கிக் கொல்லும். இதனால், வானர வீரர்கள் குழம்பிப் போனார்கள். அந்தக் குழப்பத்தை பயன்படுத்தியே பல வானர வீரர்களை பிசாசன் கொன்றான்.
அவ்வாறு வானர வீரர்கள் பிசாசனால் மாண்டு போவதைக் கண்ட லக்ஷ்மணன் விரைந்து சென்று வாயு அஸ்த்திரத்தைப் பயன்படுத்தி பிசாசனைக் கொன்றான். பின்னர் லக்ஷ்மணனின் கோடிக் கணக்கான பாணங்களால் கொடிய பல அரக்கர் சேனைகள் கூட்டம், கூட்டமாகக் கொல்லப்பட்டனர். அன்று ஒரே நாளில் லக்ஷ்மணனால் அரக்கர்களின் பத்து வெள்ளம் கொண்ட சேனையும் அழிக்கப்பட்டு. வெற்றித் திருமகள் இராமனுக்கு மாலை அணிவித்தாள்.
போர்க்களத்தில் இவ்வாறான நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கையில், அசோகவனத்தில் தங்கியிருக்கும் சீதா பிராட்டியாரிடத்தில் இன்றைக்கு நலமுண்டாகும் என்று தெரிவிக்கும் படி நற்சகுனமாக வண்டுகள் சென்று ஊதின. தென்திசைப் பாலனான யமனுடைய வலிய தூதர்களும் போரில் இறந்த உயிர்களைக் கொண்டு தமது நகருக்குச் சென்றார்கள்.
இராவணனின் ஒற்றர்களும் வானர வீரர்களின் கண்களில் படாதவாறு ஒளிந்து சென்று இராவணனின் மாளிகையை அடைந்து அன்றைய தினத்தில் அரக்கர் சேனை அழிந்த செய்தியையும். போரில் வானர வீரர்கள் பெற்ற அபார வெற்றியையும் மிக்க வருத்தத்துடன் அவனுக்கு எடுத்துக் கூறினார்கள்!