நிகும்பிலை யாகப் படலம்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
நிகும்பிலை யாகப் படலம்
(இந்திரஜித்து நிகும்பலா தேவியை நோக்கிக் கடும் யாகம் ஒன்றை நடத்துகிறான். அந்த யாகம் நிறைவடைந்தால் இந்திரஜித்தை யாராலும் கொல்ல இயலாது. அதனால்,தர்மத்தை தோற்றுவிக்கும் பொருட்டு செய்யப்படும் அந்த யாகத்தை அழிக்குமாறு ஸ்ரீ இராமர் லக்ஷ்மணனை, விபீஷணனுடனும், அனுமனுடனும் அனுப்பி வைக்கிறார். லக்ஷ்மணனும், விபீஷணனும் ஒன்று இணைந்து அனுமனின் துணையுடன் அந்த யாகத்தை அழிக்கின்றனர். இதுவே இப்படலத்தில் காணக் கிடைக்கும் செய்திகள் ஆகும்)
லக்ஷ்மணன் தமையனாரிடம் விடை பெற்றுக் கொண்டு தனது பரிவாரங்கள் தொடர வெகு விரைவாக நிகும்பலை என்னும் இடத்தை அடைந்தான். லக்ஷ்மணன் உடன் வந்த வானர வீரர்கள் அங்கே இந்திரஜித்து பெரிய யாகம் ஒன்றை வளத்ததர்க்கு அடையாளமாக வான் உயர காணப்படும் ஓமப் புகையைக் கண்டார்கள். அத்துடன் அங்கே மிகப் பெரிய அரக்கர் சதுரங்க சேனை காவல் இருப்பதையும் கண்டார்கள். அந்த சேனை அளவில்லாததாக இருந்தது. அந்தச் சேனையைக் கண்ட மாத்திரத்தில் வானர வீரர்கள் வானமே கிழியும் படியாக ஆர்பரித்தனர். அதுகண்ட அரக்கர் சேனையும் மிக பயங்கரமாக ஆர்பரித்தனர். அடுத்த கணம் ஒருவரை, ஒருவர் தாக்கத் தொடங்கினார்கள்.
வானர வீரர்கள் பெரிய கற்கள் கொண்டும், மரங்கள் கொண்டும் தாக்கியதில் அரக்கர்களின் வில், வாள், மழுக்கள், பற்கள் உட்பட அனைத்தும் நொறுங்கியது. பதிலுக்கு, அரக்கர்கள் வானர வீரர்களை சரம், சரமாக பாணங்கள் கொண்டுத் தாக்கியதில் அவர்களுடைய வாலும், தலையும், உடலும், காலும் தனித்தனியாக தரையில் துண்டிக்கப் பட்டு விழுந்து துடித்தது.
அப்போது விபீஷணன் லக்ஷ்மணனை நோக்கி," ஐயனே! இனியும் தாங்கள் இங்கு நின்றபடி தாமதிப்பது முறையான செயல் அல்ல. இப்போதே தாங்கள் இந்திரிஜித்தின் யாகத்தை அழிக்காவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்" என்றான்.
அது கேட்ட லக்ஷ்மணன் விபிஷணன் கூறியதை கேட்டுத் தனது வில்லில் அம்புகளைத் தொடுக்கத் தொடங்கினான். அக்கணம், அரக்கர்களின் சதுரங்க சேனை லக்ஷ்மணனை சூழ்ந்து கொண்டு தாக்கியது. லக்ஷ்மணனும் தன்னை சூழ்ந்து கொண்ட அரக்கரின் சதுரங்கச் சேனையை கோப ஆவேசத்துடன் வேட்டை ஆடினான். அதனால் அரக்கர்கள் பலர் இறந்தனர், யானைகள் மாண்டான, குதிரைகளும் மாண்டன, அத்துடன் தேர்களும் அழிந்தன. பிண மலைகள் எங்கும் குவிந்தது. இரத்த வெள்ளம் பெருகியது. சிதைந்த ஆயுதங்கள் எங்கும் பரவிக் கிடந்தன. அவ்வாறு லக்ஷ்மணன் செய்த கொடிய போரினால் அரக்கர் சேனை வெகுவாகக் குறைந்து போய்விட்டது.
மேலும், லக்ஷ்மணன் தொடர்ந்து போரிட்டு இந்திரஜித்தின் யாகத்தை கெடுக்கத் தொடங்கினான். அவனது அம்புகளினால் ஓமத்தீ அவிந்தது. ஒமாக்கினியில் ஓமத்திற்கு இறுதியில் பலி இட வைக்கப்பட்டு இருந்த எருமைகளும், ஆடுகளும் லக்ஷ்மணனின் பாணங்களால் இறந்தன, அரக்கர்கள் அஞ்சி நிலை கெட்டு ஓடினார்கள்.
லக்ஷ்மணனின் சீற்றம் மிகுந்த தாக்குதலால் அரக்கர்கள் அஞ்சி ஓடுவதை கண்டான் இந்திரஜித்து. அத்துடன் மேலும் எண்ணற்ற அரக்க வீரர்கள் மடிவதையும் கண்டான். சில அரக்கர்கள் இந்திரஜித்திடமே அடைக்கலம் கேட்டு ஓடி வர, அவர்களையும் கூட வானர வீரர்கள் இந்திரஜித்தின் கண் முன்னாலேயே தூண்டு, துண்டாக வெட்டிப் போட்டார்கள்.
இவ்வாறு தனது கண் எதிராகவே அரக்கர்கள் கொல்லப்படுவதையும். யாகத் தீ அவிந்ததால் யாகம் கெட்டுப் போனதையும் கண்ட இந்திரஜித்து வருத்தம் அடைந்தான். அத்துடன் அவனது மனதினில், " லட்சக்கணக்கான அரக்கர்கள் பாதுகாத்தும் எனது ஓமத் தீ அவிந்து, நான் செய்த ஓமமும் வீணானதே! இதுவே நான் இந்த யுத்தத்தில் தோற்கப் போகிறேன் என்பதற்கான அடையாளம் தான். இருந்தாலும் நான் என்ன செய்ய? சீதையைக் கவர்ந்து தந்தை இப்படி ஒரு வலிமையான பகையை தேடிக் கொண்டாரே! அதனால் நான் இந்த யுத்தத்தின் முடிவைப் பற்றி நன்கு அறிந்திருந்தாலும் போர் செய்ய காலத்தால் நிர்பந்திக்கப்பட்டு இருக்கிறேன் " என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
இராவண மைந்தன் சற்றே கலங்கினான். ஆனால், வானர வீரர்களோ விடாமல் மலைகளையும், மரங்களையும், இறந்த அரக்கர்களின் பிணங்களையும் தேர்கள் மீது வீசி எரிந்து மேலும் பல தேர்களை அழித்தார்கள். மறுபுறம், இந்திரஜித்தின் பாணங்கள் வேறு சரம், சரமாக அரக்கர்களை கொன்று தீர்த்தது. அக்கணம் தருமத்தைக் காக்கப் பிறந்த அனுமானும் அரக்கர்கள் மீதான, வானரப் படையின் அந்தத் தாக்குதலில் கலந்து கொண்டான். அக்கணம் அவனும் பல அரக்கர்களைக் கொன்று குவித்து இறுதியில் இந்திரஜித்தை நெருங்கினான். அப்போது அவன் இந்திரஜித்திடம்," பல கோடி வஞ்சனைகளை செய்யக் கற்றுக் கொண்டவனே! நீ பிராட்டியாரை வாளால் வெட்டியதாகச் சொன்னயே இப்போது என்ன நடந்தது? அத்துடன் அதற்குள் நீ அயோத்தியை சென்று திரும்பி விட்டாயோ? அது சரி. ஒரு வேளை பொய்யிடம் பிறந்து, பொய்யிலே வளர்ந்த நீ அயோத்தியை சென்று அடைந்து இருந்தால் இந்நேரம் உயிருடன் திரும்பி இருப்பாயோ? இல்லை இளையபெருமாளின் தமையன் பரதன் தான் உன்னை விட்டு வைத்து இருப்பாரோ?
வஞ்சகனே! வஞ்சனையாகச் செய்கின்ற உன்னுடைய மாயப் போரின் வலிமை எல்லாம் இன்றோடு மடிந்து விடும் ஏனெனில் உன்னை லக்ஷ்மணன் ரூபத்தில் யமனார் நெருங்கி வந்து விட்டார். இனி நீ சாவது நிச்சயம்" என்று அவனுக்குக் கோபம் உண்டாகும் படிக் கூறினான்.
மாருதியின் அந்த வார்த்தைகளைக் கேட்ட இராவண மைந்தன் கோபமும், ஆணவமும் கலந்து இடி போல நகைத்தான். பிறகு மாருதியிடம் கோப ஆவேசத்துடன் ," என்னால் செத்து, செத்து பிழைத்தவர்களே! இப்போதோ நீங்கள் என்னை எதிர்க்க வந்து விட்டீர்களோ? நீங்கள் என்னால் மாண்டு, எழுந்த வரலாற்றை எல்லாம் மறந்து விட்டீரோ? இல்லை சஞ்சீவி மலை இருக்கும் தைரியத்தால் என்னுடன் மீண்டும் யுத்தம் செய்ய வந்து இருக்கின்றீர்களோ? இல்லை துஷ்ட தேவர்களின் துணையால் என்னை எதிர்க்கத் துணிந்தீர்களோ? அதுவும் இல்லை என்றால் எங்கள் சோற்றை தின்று, எங்களுக்கே குழிபறிக்கும் இந்த அயோக்கியன் விபீஷணனின் பேச்சைக் கேட்டு என்னை எதிர்க்க வந்தீர்களோ? அப்படியானால் வாருங்கள். நானும் உங்களை ஒரு கை பார்க்கத் தயார் தான். இனி நீங்களா, நானா என்று பார்த்து விடலாம். நீங்கள் உங்கள் வானர சேனையுடன் அழியப் போவதையும், அதனால் ஏற்படும் துன்பத்தையும் தேவர்களும், முனிவர்களும் காணத் தான் போகின்றார்கள். கண்டு அவர்களும் அந்த துக்கத்தில் வேகத் தான் போகிறார்கள். புறமுதுகிட்டு அஞ்சி ஓடிப் போகாமல் நிற்க முடியும் ஆனால், என் எதிரே துணிவோடு போருக்கு நில்லுங்கள்" என்று கூறி நொடியில் கவசம் அணிந்து போர் கோலம் பூண்டு தனது வில்லில் நாண் ஒலி ஏற்படுத்தினான். இந்திரஜித்து போர் கோலம் பூண்டு நாணொளியை ஏற்படுத்தி விட்டான் என்றதுமே சிதறி ஓடிய அரக்க சேனைகள் மீண்டும் வானர வீரர்களை எதிர்த்துக் கடுமையாக யுத்தம் செய்யத் தொடங்கின.
இந்திரஜித்தின் போர் கோலத்தையும் அவனது ஆவேசத்தையும் கண்ட தேவர்கள் " இவன் இனி என்ன செய்வானோ? லக்ஷ்மணனிடம் இவனை எதிர்க்கும் அளவுக்கு பாணங்கள் உள்ளதோ?" என்று கூறிக் கவலை கொண்டார்கள். ஆனால் அதே சமயத்தில் அந்த தேவர்கள்," நாம் செய்த தவப் பயனின் காரணம் தான், இந்த அரக்கனின் தவம் பாதியில் நின்றது" எனக் கூறி ஆறுதலும் அடைந்தார்கள்.
ஏற்கனவே இராவண மைந்தன் எழுப்பிய நாண் ஒலியால் தனது பராக்கிரம செயலை மறந்து திகைத்து நின்று இருந்த வானர வீரர்கள் " இனியும் நாம் இங்கு நின்றால் இந்த அரக்கனின் கைகளால் மடிவது நிச்சயம் அதனால், நாம் இப்போதே இங்கு இருந்து ஓடி விடுவதே நல்லது" என்று தீர்மானித்து சிதறி ஓடத் தொடங்கினார்கள். அனுமானும், சுக்கிரீவனும், லக்ஷ்மணனும், அங்கதனும், விபீஷணனும் மட்டுமே அப்போது போர்க்களத்தில் இருந்தனர்.
அக்கணம் லக்ஷ்மணன் மேற்கொண்டு பாணங்களைத் தொடுத்து அரக்கர்களை கொன்று குவிக்க, மறுபுறம் அனுமான் ஒரு பெரிய மலையை கையில் பெயர்த்து எடுத்துக் கொண்டு இந்திரஜித்தை நெருங்கினான். அது கண்ட இந்திரஜித்து அனுமனைப் பார்த்து நகைத்து," ஏ குரங்கே! நீ தூக்கிய இப்பெரும் மலை எனது கணைகளுக்கு முன்னாள் எம்மாத்திரம்? மேலும் இவ்வாறு மரங்களாலும், மலைகளாலும் உன்னால் என்னை அழித்து விட முடியுமோ? என்ன செய்ய, உன்னைப் பெரும் வீரன் என்று நினைத்தேன், ஆனால் உண்மையில் நீ செய்யும் செயல்களைப் பார்க்கும் பொழுது உனது குரங்குக் கூட்டத்தின் சபல புத்தி தான் உன்னிடமும் உள்ளது " என்றான்.
அக்கணமே அனுமான் தேவர்களும் வியக்க அந்த மா மலையை இந்திரஜித்தின் மீது தூக்கி எறிந்தான். ஆனால், கண் மூடித் திறக்கும் கண நேரத்தில் அந்த மலையை இந்திரஜித்து தனது பாணங்கள் கொண்டு பொடிப், பொடியாக மாற்றி காற்றில் தூசு போலப் பரவச் செய்தான். அத்துடன், உயிரைக் கொல்லும் ஆற்றல் கொண்ட சில கணைகளைப் பக்குவமாகத் தேர்ந்தெடுத்து அனுமானின் மார்பின் மீது எய்தான். அது, அனுமானின் உடம்பை சல்லடைக் கணைகளாக துளைத்து இரத்த வெள்ளத்தை ஏற்படுத்தியது. ஆனால், சீதை அன்று கொடுத்த சிரஞ்சீவியாகும் வரத்தால் அனுமான் உயிர் பிழைத்தான். அதே சமயத்தில், இந்திரஜித்தின் பாணங்களால் வலிமை இழந்து சோர்ந்து கீழே விழுந்தான். அவ்வாறு விழுந்த அனுமனின் நிலை கண்டு இந்திரஜித்து நகைத்தான்.
அச்சமயத்தில் மீண்டும் விபீஷணன் லக்ஷ்மணனிடம் இந்திரஜித்தை அழிக்குமாறு கூற. அதன்படி இந்திரஜித்தை தனது பாணங்களால் எதிர் கொண்டான் லக்ஷ்மணன். இந்திரஜித்தும் விடாப்பிடியான போரை லக்ஷ்மணன் மீது மேற்கொண்டான். வலிமையான பிரம்மாஸ்த்திரத்தை மீண்டும் லக்ஷ்மணன் மீது எய்தான். அது கண்ட லக்ஷ்மணன் இன்னொரு பிரம்மஸ்த்திரத்தை தனது வில்லில் ஆவாகனம் செய்து," ஏ பிரம்மாஸ்த்திரமே! நீ இந்திரஜித்து எய்த பிரம்மாஸ்த்திரத்தை மட்டுமே அழித்து விடு. ஆனால், இந்த உலகத்துக்கு ஊரு விளைவித்து விடாதே" என்று கூறி தொடுத்தான்.
அந்த இரு பிரம்மாஸ்த்திரமும் வானில் சென்று மோதிக் கொள்ள, எங்கும் கண்களைப் பறிக்கும் பெரும் ஒளி 'பிரளயம் தான் வந்து விட்டதோ!' என்று நினைக்கும் படித் தோன்றியது. அதுபோல காதுகளை செவிடாக்கும் இடி ஓசை எல்லா திசைகளிலும் இருந்து எதிர் ஒலித்தது. அதனால், வானத்தில் இருந்து தீப் பொறிகள் கடலில் இறங்கியது. அதனால், கடலில் உள்ள உயிர் இனங்கள் சில கருகிய நிலையில் செத்து மிதக்கத் தொடங்கின. அவ்வாறு நடந்த அனர்த்தங்களைக் கண்ட ஸ்ரீ இராமர், எங்கோ இருந்தபடி தனது ஞானத்தால் பிரம்மாஸ்த்திரம் ஏவப்பட்டதை அறிந்தவராக பிரம்மனை வேண்டி நின்றார். அக்கணமே, லக்ஷ்மணன் தொடுத்த பிரம்மாஸ்த்திரம், இந்திரஜித்தின் பிரம்மாஸ்த்திரத்தை அழித்து அவனிடமே திரும்பியது.
அது கண்டு செய்வது அறியாத நின்ற இந்திரஜித்து அடுத்து நாராயண அஸ்த்திரத்தை எய்தான். நாராயண அஸ்த்திரம் நெருப்பை கக்கிக் கொண்டு லக்ஷ்மணனை நோக்கி விரைந்து வந்தது லக்ஷ்மணன் அந்த அஸ்த்திரத்தை எதிர்க்காமல் அதனிடம் தலை வணங்கி ," தர்மத்தின் ஸ்வரூபமான நாராயணனின் அஸ்த்திரமே நீ சத்தியத்தை உணர்வாய். அப்படி இருக்க பாவி ஒருவன் உன்னை ஏவ, நீயும் சீற்றத்துடன் வருவது நியாயமோ?" என்றான்.
அவ்வளவு தான். அக்கணமே, நெருப்பை கக்கிக் கொண்டு வந்த நாராயண அஸ்த்திரம் லக்ஷ்மணன் அருகில் வந்து சற்றே நின்று அனைவரும் பார்த்து வியக்க அவனைச் சுற்றி மூன்று முறை வலம் வந்தது. அது கண்ட இந்திரஜித்தும் கூட ," இவன் ஒரு வேளை அந்த நாராயணன் தானோ?" என்று கூறி வியந்தான். பிறகு சிவனின் பாசு பதாஸ்த்திரத்தை இந்திரஜித்து பிரயோகித்தான். அதற்கு இணையான அதே பாசுபதாஸ்த்திரத்தை லக்ஷ்மணன் பிரயோகித்து, இந்திரஜித்தின் அஸ்த்திரத்தை அழித்தான்.
"இனி எந்த ஒரு திவ்விய அஸ்த்திரமும் இல்லையே" என்று திடுக்கிட்டுப் போனான் இந்திரஜித்து. அந்த நேரத்தில் லக்ஷ்மணன் எய்த பலதரப்பட்ட பாணங்கள் இந்திரஜித்தின் உடலை தைத்து அவனை சோர்வு அடையும் படிச் செய்தது. அதனால் கொடிய இந்திரஜித்து மேலும் சோர்ந்து போனான்.
அக்கணம் லக்ஷ்மணன் அருகில் இருந்த விபீஷணன் லக்ஷ்மணனிடம்," இளைய பெருமாளே, இந்திரஜித்து சோர்ந்து விட்டான் இது தான் சமயம் இவனைக் கொன்று வதைத்து விடுங்கள்" என்றான்.
விபீஷணன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டான் இந்திரஜித்து. அடுத்த கணம் விபீஷணனைப் பார்த்து," குலத் துரோகி விபீஷணா! எனது தந்தை இலங்கேஸ்வரன் இட்ட உப்பைத் தின்றவன் நீ. ஆனால், இப்போதோ பகைவர்களுடன் சேர்ந்து எங்களையே அழிக்கிறாய். நீயும் ஒரு பிறவியோ? இலங்கையின் அரசன் ஆக வேண்டும் என்ற ஆசையில், இந்த மானிடர்கள் கைகளில் அரக்க வீரர்கள் பலரைப் பலி கொடுத்து விட்டு, நீ யாரைக் கொண்டு உனது இராஜ்யத்துக்கு பாதுகாப்பு அளிப்பாய். மேலும், சிங்கம் போன்ற எனது தந்தை இராவணேஷ்வரன் அமர்ந்த சிம்மாசனத்தில் சிறு நரி நீ அமர்வதை இலங்கை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறாயோ! நிச்சயம் மாட்டார்கள். இப்படிப் பட்ட உனக்குத் தான் மானம் ஒரு கேடோ? பிறரைக் கொண்டு பிறந்த குலத்தை இழித்துப் பேசியும், நேராகவே தூற்றியும், தன் தங்கையின் மூக்கினை அறுத்தவர்களைக் கொண்டே தனது தமையனுடன் அவனது மக்களையும் கொல்வித்து நீ வாழ்கின்ற வாழ்வும் ஒரு வாழ்வோ. இதனைக் காட்டிலும் நீ எனது பாணத்தால் இறப்பதே மேல். இதோ உன்னை முடிந்தால் காத்துக்கொள்" என்றான்.
அவ்வாறு சொல்லிய இந்திரஜித் சக்திவாய்ந்த அஸ்த்திரம் ஒன்றை விபீஷணன் மீது பிரயோகித்தான். அப்போது வானில் நின்று கொண்டு இக்காட்சியைக் கண்ட தேவர்கள்," விபீஷணனுக்கு இந்த பாணத்தால் என்ன கெடுதல் நேரமோ?" என்று கூறி அச்சம் கொண்டார்கள். ஆனால், மறுபுறம் விபீஷணன் அருகில் இருந்த லக்ஷ்மணன், தனது மற்றொரு பாணத்தால், இந்திரஜித்தின் பாணத்தை அழித்தான். விபீஷணனும் காக்கப் பட்டான்.
அது கண்ட இந்திரஜித்து ஆத்திரம் அடைந்தான். அப்போது அவனிடம் விபீஷணன்," இந்திரஜித்து! நான் இது வரையில் தர்மத்தையே கடைப்பிடித்து வந்துள்ளேன். என்னைப் பொறுத்த வரையில் உறவுகளை விட தர்மமே சிறந்தது. அதுபோல, உண்மையை விட்டு, விட்டு ஒரு போதும் நான் பொய்க்குத் துணை போக மாட்டேன். இராவணன் சீதையை கவர்ந்தது பெரும் பாவம். அதற்கு அவன் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். அந்த தண்டனையின் பெயர் தான் மரணம். அதுபோல, உனக்கும் ஒன்று சொல்கிறேன், நீயும் கூட பாவத்தின் நிழலில் இருந்து தான் போர் செய்கிறாய் அதனால் நீ எத்தனை மாயாவித் தனத்தை செய்தாலும், இந்த யுத்தத்தின் இறுதியில் இளையபெருமாளின் அம்புகளால் நீ மரணிக்கப் போவது நிச்சயம். காரணம் அறத்தை பாவம் ஒரு போதும் வெல்லாது. மேலும், அதனால் தான் நானும் கூட அறத்தின் நாயகனான ஸ்ரீ இராமரிடம் சேர்ந்தேன். இதனால், எனக்குப் புகழ் வந்தாலும் சரி. பாவமும், பழியுமே வந்தாலும் சரி. எனக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. அது மட்டும் அல்ல, இந்த யுத்தத்தில் நான் ஆயுதமே எடுக்கக் கூடாது என்று நினைத்து இருந்தேன். ஆனால், எப்போது சிறிய தந்தை என்று கூட பார்க்காமல் நீ நிராயுத பாணியான என் மீது ஆயுதத்தை பிரயோகித்தாயோ, அப்போதே இனி நானும் யுத்த களத்தில் இறங்குகிறேன். உனக்குத் திராணி இருந்தால் பிரம்மனிடம் இருந்து பெற்ற இந்த தண்டத்தை தடுத்துப் பார்" என்றான்.
இவ்வாறு சொன்ன விபீஷணன், அக்கணமே முன்ப� தனக்கு பிரமன் தருமத்தைக் காக்கும் பொருட்டு கொடுத்த தண்டத்தை இந்திரஜித்தின் மீது பிரயோகித்தான். அந்த தண்டமானது நெருப்பைக் கக்கிக் கொண்டு இந்திரஜித்தை நோக்கிக் கடும் வேகமாக வந்தது. இந்திரஜித்து அந்த தண்டத்தில் இருந்து தன்னைப் பாதுகாக்க பலதரப்பட்ட அஸ்த்திரங்களை பிரயோகித்தான். ஆனால், அந்த அஸ்த்திரங்களை பிரம்மதண்டம் விழுங்கியது. அத்துடன் இன்னும் அதிவேகமாக இந்திரஜித்தை நோக்கி வந்தது. அதனால், இந்திரஜித்து தனது தேரை விட்டு மறைந்து ஆகாய மார்க்கமாகவே இராவணனின் அரண்மனையை அடைந்தான் .மறுபுறம், விபீஷணன் பிரயோகித்த பிரம்ம தண்டம் இந்திரஜித்தின் தேரை அதன் தேர் பாகனுடனும், குதிரைகளுடனும் சேர்த்து அழித்தது.