நாக பாசப் படலம்

bookmark

யுத்தகாண்டம்

இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

நாக பாசப் படலம்

(நாகபாசத்தின் செயல் பற்றிக் கூறும் படலம் நாக பாசப் படலம் எனப்பட்டது. நாக அத்திரமாகிய பாசம் என விரிக்க. கயிற்றைப் போல் கட்டிக் கட்டுப்படுத்துதலின் நாகபாசம் எனப்பட்டது. இந்திரஜித்தன் நாகபாசத்தை லக்ஷ்மணன் முதலியோர் மீது எய்த செய்தி இப்படலத்தில் கூறப்படுகிறது.
அரக்கமாதரின் அழுகை ஒலி கேட்ட இந்திரஜித், காரணத்தை அறிய இராவணன் இருக்கும் இடம் சென்றான். நடந்ததை அறிந்து, போருக்கு இராவணனிடம் விடை பெற்றுச் சென்றான். தன் தம்பியாகிய அதிகாயனைக் கொன்ற லக்ஷ்மணனை கொல்வேன் என்று வஞ்சினம் கூறிப் பல்வகைப் படையுடன் போர்க்கோலம் பூண்டு போர்க்களம் சேர்ந்தான்.
லக்ஷ்மணனுக்கு விபீஷணன் இந்திரஜித்தின் வலிமையைக் கூறித் துணையுடன் சென்று போர் செய்தலே நலம் என்று கூறக் கேட்டு, லக்ஷ்மணன் சுக்ரீவன் முதலியோருடன் கூடி அவன் மீது போருக்கு எழுந்தான்.
இலக்ஷ்மணனுடன் போரிட இந்திரஜித்தன் வருவதைக் கண்ட அனுமன், தான் போரிடும் இடத்தை விட்டு அங்குச் சென்றான். சுக்ரீவன் அங்கதன் முதலியோரும் பெரும் படையுடன் சென்றனர். இருதிறப் படைக்கும் போர் தொடங்கியது. அரக்கர் படை குரக்குப் படை வலிமைக்குத் தளர்வது கண்ட இந்திரஜித்தன் தானே தனி ஒருவனாய்ப் பொருது வென்று நின்றான். சுக்ரீவன், அனுமன், அங்கதன், நீலன் ஆகியோர் கடும் போர் செய்தும் குரங்குப் படையின் அழிவைத் தடுக்க முடியவில்லை.
அதைக் கண்ட லக்ஷ்மணன் தானே முதலில் சென்று போரிடாது குரங்குப் படையைப் போரிட அனுப்பியதற்காக வருந்தினான், உடன் அவன், போர்க்களம் வந்தான். லக்ஷ்மணன் இந்திரஜித்தை நெருங்கி அனுமன் தோளின் மீது ஏறிப் போர் தொடங்கினான்.
லக்ஷ்மணன் இந்திரஜித்தின் கவசத்தைப் பிளந்து அவனை மூர்ச்சை அடையச் செய்தான். தொடர்ந்து நடந்த போரில் இந்திரஜித்தன் லக்ஷ்மணன் மீது நாக பாசத்தை எய்தான். லக்ஷ்மணன் முதலியோர் அதனால் கட்டுப் பட்டு விழுந்தனர். அதுகண்ட விபீஷணன் அனலனால் தேற்றப்பட்டு இராமனைச் சந்தித்து நடந்ததைக் கூறினான், இராமன் தீக்கடவுள் அம்பினால் ஒளியை உண்டாக்கிக் கொண்டு இலக்குவனைத் தேடிச் சென்று கண்டு பலவாறு வருந்தினான். இராமனிடம் விபீஷணன் நாகபாசத்தின் வரலாற்றை விளக்கிக் கூறினான். கருடன் வந்து இராமனைத் துதித்து நாகபாசத்தை நீக்கினான். இலக்ஷ்மணன் முதலியோர் விழித்து எழுந்தனர். அனுமனின் யோசனைப்படி குரங்குச் சேனை பேரொலி செய்தது. ஒலி கேட்ட இராவணன் இந்திரஜித்தன் பகைவரை வென்றதாகக் கூறிய கூற்றைப் பொய் என எள்ளி இந்திரஜித்தின் அரண்மனையை அடைந்தான். அங்கு இருந்த இந்திரஜித்திடம், பகைவர் உயிருடன் உள்ளமை கூறினான். அப்போது தூதுவர் நிகழ்ந்தவை கூற, இராவணன் கருடனை இகழ்ந்து, இந்திரஜித்தனை மீண்டும் போருக்குச் செல்க எனக் கூற அவனும் அதை ஏற்றான் என்ற செய்திகள் இப்படலத்தில் கூறப்பட்டுள்ளன)
தனது அரண்மனையில் பூர்ண சந்திரனைப் போல படுத்து இருந்த இந்திரஜித்து இலங்கையில் அரக்கியர்கள் பலர் அழுவதைத் தனது காதுகள் கொண்டு கேட்டான். உடனே அவனது மனத்தில்," ஏன் இலங்கை மாநகரத்தில் உள்ள நமது அரக்கப் பெண்கள் இப்படி ஒப்பாரி வைத்து அழுகின்றார்கள்? நான் இருக்கும் பொழுது இலங்கையில் அப்படி என்ன நேர்ந்து விட்டது?" என்று திகைப்புடன் சிந்தித்தபடி தனது மாளிகையை விட்டு வெளியேறி தேரில் ஏறினான். நேராக இராவணனது அரண்மனையை நோக்கித் தேரைச் செலுத்தினான். அவ்வாறு செல்கையில் வழியில் எதிர்ப் பட்டோரை எல்லாம் அவன்," இப்படியெல்லாம் நீங்கள் அழுது புலம்புகின்றீர்களே! இப்போது இலங்கைக்கு என்ன நேர்ந்து விட்டது? ஒருவேளை மீண்டும் தந்தை யுத்த களம் சென்று தோற்று தனது பெருமையை இழந்தாரோ? இல்லை தந்தைக்கு நடக்கக் கூடாதது ஏதேனும் நடந்து விட்டதா? " என்று வினவினான்.
அவர்கள் துன்பத்தால் வாய் பேச முடியாமல் நாக்கு குழற, இந்திரஜித்திடம் பதில் ஏதும் அளிக்காமல் உடலும், உள்ளமும் சோர்வு பட்டுச் சென்றார்கள். அது கண்டு இந்திரஜித் மேலும் வருந்தி நொடிப் பொழுதில் தந்தையின் அரண்மனையை அடைந்து தேரை விட்டு இறங்கினான். நேராக தந்தையின் எதிரில் போய் நின்றான். தந்தையைக் கண்டதும் அவனது மனம் சிறிதே ஆறுதல் அடைந்தது. தந்தையைத் தொழுத வண்ணம் அவன்," தந்தையே அருள் கூர்ந்து சொல்லுங்கள் இலங்கை நகரம் முழுவதுமே ஏன் இவ்வாறு சோக மயமாகக் காட்சி அளிக்கிறது? எல்லோரும் நலமா? இல்லை நடக்க கூடாத ஏதாவது இலங்கையில் நடந்து விட்டதா?" என்றெல்லாம் பலவாறு வினவினான்.
அதற்கு துக்கம் தாங்காத இராவணன் தனது அருமைப் புதல்வன் இந்திரஜித்திடம்," மகனே! உனது அருமைத் தம்பி அதிகாயன் போரில் வீரமரணம் அடைந்தான். பாவி லக்ஷ்மணன், அவனைக் கொன்று விட்டான். அதற்கு தேவர்களும் துணை நின்றார்கள். மேலும், அந்த லக்ஷ்மணன் கோடானு, கோடி அரக்க சேனைகளையும் வதைத்து ஒழித்தான். அத்துடன் கும்பன், நிகும்பன் ஆகிய அரக்கத் தளபதிகளும் இன்றைய போரில் அனுமனால் கொல்லப் பட்டனர். அதனால், வரலாறு காணாத பின் அடைவை நாம் இன்றைய போரில் சந்தித்து உள்ளோம்" என்றான்.
அதுகேட்டு இந்திரஜித்து அதிகக் கோபமும், வருத்தமும் கொண்டு தந்தையைப் பார்த்து," வலிய சேனையைப் பெற்ற மனிதர்களான இராமலக்ஷ்மணரின் வலிமையை அறிந்து இருந்தும் தாங்கள், அவர்களுடன் போர் புரிய மகா வீரனான என்னை அனுப்பவில்லை. மாறாக, அதிகாயன் முதலிய சிறுவர்களை அனுப்பினீர்கள். அவர்களும் இறந்தார்கள். ஆதலால், அவர்களைக் கொன்றவர்கள் அப்பகைவர்களோ? இல்லை ! அவர்களைக் கொல்லுமாறு தாங்களே பகைவர்களுக்குக் காட்டிக் கொடுத்தீர்களா? மேலும் தந்தையே எனக்கு இராமலக்ஷ்மணர்களை விடத் தங்கள் மீது தான் கோபம் அதிகம் அதற்குக் காரணம் , முன்பு அட்சகுமாரனைத் தரையில் தேய்த்துக் கொன்ற அனுமானை, நான் பிரம்மாஸ்த்திரத்தால் கட்டி உங்கள் முன்னாள் இழுத்து வந்தேன்.நீங்களோ, அவனைக் கொல்லாமல் வாலில் தீ வைத்து அதன் மூலம் இலங்கைக்கே தீ வைத்துக் கொண்டீர்கள்.ஒருவேளை, அப்போதே நீங்கள் அந்த அனுமனைக் கொன்று இருந்தால், இப்படி எல்லாம் நடந்து இருக்குமா?மாறாக நீங்கள் அவனை உயிருடன் அந்த துஷ்ட விபீஷணனின் பேச்சைக் கேட்டு அனுப்பினீர்கள். அதனால் அறிவு இழந்தீர்கள். அவனோ, நமது சேனை பலத்தையும், இலங்கையில் உள்ள பலவீனமான இடங்களையும் அறிந்து கொண்டு அந்த மானிடர்களிடம் சென்று தெரிவித்தான். அதனால், பகைவர்கள் அனைத்தையும் அறிந்து கொண்டார்கள். இதன் காரணமாகத் தான், தாங்கள் போரில் உங்கள் வீரம் மிக்கப் பிள்ளைகளை இழந்தீர். அதனால் தங்களது வாழ்வும் இப்போது பயனற்றுப் போனது! சரி...! நடந்ததை எண்ணிப் பார்ப்பதில் பயனில்லை. இனி நடக்கப் போவதைப் பற்றிச் சிந்திப்போம். அதனால், நானே யுத்த களம் செல்கிறேன். எனது தம்பி அதிகாயனைப் போர் களத்தில் கொன்ற அந்த லக்ஷ்மணனை நான் அதே போர்க்களத்தில் வைத்துக் கொன்று வருகிறேன். நான் கூறியபடி நிச்சயம் செய்வேன். அப்படிச் செய்யாவிட்டால், நானும் இறந்தவனாவேன். மேலும், இந்திரனை வென்ற எனது வீரமும் பழுது படட்டும். பிறகு அது கண்டு தேவர்களும் சிரிக்கட்டும்" என்று ஆவேசத்துடன் வீர சபதம் செய்தான்.
தனது புத்திரனான இந்திரஜித்தின் சபதத்தை கேட்ட இராவணன் அதிகாயன் இறந்த சோகத்தை சற்று நேரம் மறந்தான். அவனை சற்றே மகிழ்ச்சியுடன் நோக்கி," மகனே! நீ சொல்லியபடி விரைந்து யுத்த பூமிக்கு செல்.அங்கே நமது குலப் பெருமையை அழித்த லக்ஷ்மணனை உனது நாக பாசத்தால் கட்டிக் கொன்று விட்டு வா. நான் உன்னைத் தான் இப்போது நம்பி உள்ளேன். எனக்குத் தெரியும் உன்னால் செய்யமுடியாத காரியங்கள் இந்த உலகத்தில் இல்லை என்று. ஆகவே செல் மகனே, அந்த லக்ஷ்மணனை சென்று கொன்று வா!" என்று சொல்லி விடை கொடுத்து அனுப்பினான்.
பின்பு வானவரை வென்ற இந்திரஜித் தந்தையை வணங்கி ஈசனாலும் உடைக்கமுடியாத வரம் பெற்ற திவ்ய கவசத்தை அணிந்தான், பிறகு தனது ஆயுதங்களான சக்திவாய்ந்த வில்,வாள், இந்திரனிடம் இருந்து அபகரித்த அம்புகள் குறையாத அம்பறாத் தூணி, அது தவிர ஈசனிடம் இருந்து பெற்ற திவ்ய அஸ்த்திரங்கள் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு போர் கோலம் புகுந்தான்.
அவ்வாறு போர் கோலம் புகுந்த இந்திரஜித் போர்களத்துக்குச் செல்ல அரண்மனையை விட்டு வெளியேறி வந்தான். லட்சம் யாழிகளின் பலத்தைப் பெற்று, கோடிக்கணக்கான சிங்கங்கள் பூட்டப்பட்ட தனது திவ்ய ரதத்தில் ஏறினான். அந்த திவ்ய ரதத்தின் வலிமையை தேவர்களாலும் அறிய முடியாது. மேலும் இந்திரஜித்தை தாங்கிச் செல்லும் அந்த திவ்விய ரதம் ஈசனின் ரிஷப வாகனத்துக்கும், திருமாலின் கருட வாகனத்துக்கும் எந்த விதத்திலும் தாழ்வு படாதது. இன்னும் சொல்லப் போனால் அவற்றைக் காட்டிலும் உயரந்தது.
அப்படிப் பட்ட தேரில் ஏறிய இந்திரஜித் சதுரங்க சேனைகள் தன்னைப் பின் தொடர போர் களம் சென்றான். அவ்வாறு, இந்திரஜித்துடன் சென்ற சதுரங்க சேனையின் அளவை எண்ணின் இலக்கங்கள் கொண்டும் கூற இயலாது. அதனுடன் ஒப்பிடும் போது கடல் கரையில் உள்ள மண்ணை எண்ணிவிடுவதும் எளிது. ஆனால், இந்திரஜித்துடன் சென்ற சேனை வீரர்களை எண்ணுவது அவ்வளவு கடினம்.
அந்த சேனை வீரர்கள் போதாது என்று இந்திரஜித்து தனது தேருக்குப் பாதுகாப்பாக தூமிராக்ஷனும், மகாபார்சுவனும் தன்னைத் தொடர்ந்து வரவும், மற்றும் ஆயிரம் கோடி தேர்கள் தனது தேரின் அருகே பாதுகாக்கவும் போர்களத்தை அடைந்தான்.
அதே சமயத்தில் இந்திரஜித் "அதிகாயன் இறந்து விட்டான், இனி அடுத்து படைகளுடன் இராவணனோ அல்லது இந்திரஜித்தோ தான் வருவார்கள். வரட்டும்...! அவர்களில் யார் வந்தாலும் சரி. அவர்களை ஒரு கை பார்ப்போம் " என யுத்த களத்தில் பகைவர்களை எதிர்கொள்ளத் தயாராகத் தான் இருந்தான்.
அப்போது தனது திவ்விய தேரில், ஆகாயமே பிளவுபட இராவணின் தரப்பில் வரும் வீரனைக் கண்டான் லக்ஷ்மணன். அக்கணமே, அருகில் இருந்த விபீஷணனிடம்," விபீஷணரே! இப்போது வரும் அந்த வீரன் யார்?" என்று கேட்டான்.
"அவனே இந்திரஜித்! மாயைகளில் கைதேர்ந்தவன். முன்பு பதினாயிரக்கணக்கான தேவர்களைப் பக்க பலமாகக் கொண்டு இந்திரன் இவனோடு போர் செய்தும், கடைசியில் தோற்றுப் போனான். அவன் மட்டும் தேவாமிருதத்தை உண்ணாமல் இருந்திருப்பானாயின், அன்றைக்கே அப்போரில் இவனால் இறந்து போயிருப்பான். இமயமலை போன்ற இந்திரனின் தோள்களில் இவன் கட்டிய நீண்ட மாயக் கையிற்றால் உண்டான தழும்புகள், இன்றும் காணப்படுகிறது. மேலும், இவன் அனுமனை பிரம்மாஸ்த்திரத்தால் கட்டியவனாயிற்றே! அப்படியிருக்கு இவனது தனுர் வித்தையை இன்னும் அறிவதற்குத் தான் சான்றுகள் வேண்டுமோ? இப்படிப் பட்ட இவன் போருக்குப் புறப்பட்டு வந்திருக்கிறான் என்றால், இன்றைய போர் மிகவும் கடுமையாக இருக்கும். ஜாக்கிரதை லக்ஷ்மணா! நீ இவனை தனியே எதிர் கொள்வது சரியல்ல, உடன் அனைத்து வானர வீரர்களையும் அத்துடன் அனுமன், ஜாம்பவான், சுக்கிரீவன், அங்கதன், நளன், நீலன் ஆகியோரையும் அழைத்துச் செல்" என்று விபீஷணன் கூறி முடித்தான்.
விபீஷணன் கூறியவற்றைக் கேட்டு லக்ஷ்மணன் " நல்லது!" என்று சொல்லி உடன்பட்டான். அதேசமயம் மேற்றிசை வாயிலில் போர் செய்து கொண்டு இருந்த அனுமான்,' இளையபெருமாள் மீது இந்திரசித்து போர் செய்யப் புறப்பட்டு வந்துள்ளான்' என்ற செய்தியைக் கேட்டவுடன். அவனது வலிமையை முன்னமே நேரில் கண்டு இருப்பதால் , இளையபெருமாளை காக்க, வாயு வேகத்தில் சென்றான். அக்கணமே, லக்ஷ்மணன் அருகில் வந்து தயாராக நின்று கொண்டான். ஆனால், அனுமன் வருவதற்கு முன்னமே லக்ஷ்மணனுக்கு பாதுகாப்பு அளிக்க அங்கதன் அவ்விடம் வந்து சேர்ந்து இருந்தான். சுக்கிரீவனும் தனது பெரும் சேனையுடன் லக்ஷ்மணன் அருகில் வந்து சேர்ந்தான் அத்துடன் மற்ற வானர வீரர்களும் லக்ஷ்மணனை சூழ்ந்து கொண்டார்கள், அவர்கள் எல்லோரது நோக்கமும் லக்ஷ்மணனை பாதுகாப்பதே.ஏனெனில் அவர்களுக்குத் தெரியும் லக்ஷ்மணன் இல்லை என்றால் இராமபிரான் இருக்கமாட்டார். லக்ஷ்மணன் இடத்தில் தான் ஸ்ரீ இராமரின் உயிர் உள்ளது. அதனால் தான் லக்ஷ்மணனை காக்கும் பொருட்டு மிகப் பெரும் யுகத்தை வானரத் தளபதிகள் அமைத்தார்கள்.
மறுபுறம், இந்திரஜித்துக்கும் லக்ஷ்மணனுக்கும் போர் விரைவில் தொடங்கப் போவதை அறிந்த தேவர்கள் அந்தப் போரைக் காண ஆவலுடன் வானத்தில் திரண்டு நின்றார்கள். இது இப்படி இருக்க,மறுபுறம் வானர சேனையும் அரக்கச் சேனையும் இரண்டு திசைகளில் இருந்தும் போர் செய்வதற்கு உற்ச்சாகத்துடன் எழுந்து வந்து இரண்டு கடல்கள் போல ஆரவாரித்து எதிர் எதிராக நின்றன. அப்போது இரு தரப்பு வீரரகள் செய்த ஆரவாரத்தால் இந்திரன் முதலான தேவர்களும் சற்றே நடுக்கம் கொண்டார்கள். போர் முரசு அடிக்கப் பட்டதும், போர் இருதரப்புக்கும் இடையே மூண்டது. வானர சேனை பெரும் வீரத்துடன் முன்னேறிச் சென்றது. எங்கும் " அடியுங்கள்" ," கொல்லுங்கள்" ," பிடியுங்கள்", "அழியுங்கள் " என்ற வார்த்தைகளே அதிகம் கேட்டது. வாள் ஒலியும், வில்லின் நாண் ஒலியும் இடைவிடாது கேட்டுக் கொண்டே இருந்தது. அரக்கர்கள் எண்ணற்ற ஆயுதங்களால் இரக்கமின்றி வானர வீரர்களை அறுத்து சிதைத்தனர். பதிலுக்கு வானர வீரர்களும் கொடுமையாக மரங்களையும், மலைகளையும், கற்களையும் கொண்டு போர் புரிந்தார்கள். பல அரக்கர்களைப் பாய்ந்து கடித்துக் கொன்றார்கள்.
அவ்வாறு போர்க்களத்தில் அரக்கர்களும் வானரர்களும் இதுவரையில் யாருமே கண்டு இருக்க முடியாதபடி கடுமையான யுத்தத்தை செய்தார்கள். அப்போது இறந்த வீரர்களின் பிணக்குவியல்களில் இருந்து வெளிப்பட்ட இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து நதிபோலக் கடலில் சென்று சேர்ந்தது. அதனால், கடல் செந்நிறமாக மாறியது.
அப்போது வானத்தில் நின்று யுத்தத்தைப் பார்த்துக் கொண்டு இருந்த தேவரிஷிகள்," முன்பு நடந்த தேவாசுர யுத்தம் இந்த யுத்தத்தின் முன்னே எம்மாத்திரம்?" என்று கூறினார்கள்.
இளையபெருமாளுடன் சேர்ந்து அவருக்குத் துணையாகப் போர் செய்ய வந்த அனுமான், அரக்கர் கூட்டத்தில் புகுந்து மலையெனத் திரிந்தான். அவன் கையில் அகப்பட்ட அரக்கர்களை எல்லாம் கொன்று கூவித்தான். அதனால், அரக்கர்களின் நான்கு வகை சேனைகளும் திக்கு முக்காடிப் போனது. அங்கதனும், அனுமானுக்குத் தோள் கொடுத்து, யுத்தகளத்தில் தனது வலிமையைக் காட்டினான். அதனால், அரக்கர்கள் பின்வாங்கி ஓடினார்கள். அவ்வாறு ஓடிய அவர்களை இடை மறித்துத் தாக்கினான் நீலன். சிவபெருமானைப் போல அரக்கர்களின் படைக் களங்களை எல்லாம் அழித்து ஒழித்தான். போதா குறைக்கு, அரக்கர்கள் சற்றும் எதிர் பாராத விதமாக குமுதணும், இடபனும், ஜாம்பவானும், பனசனும், மயிந்தனும், துவிவிதணும், கவயனும், கேசரியும் அரக்க சேனையை எட்டு திசைகளிலும் சூழ்ந்து நின்று தாக்கி ஒழித்தார்கள். அவர்களின் ஆற்றல் மிக்கத் தாக்குதலால் அரக்கர் சேனை மிகுதியாகக் குறைந்து விட்டது. எஞ்சி இருந்த அரக்கர்களும் தப்பிப் பிழைக்க வழி தேடினார்கள்.
இந்திரஜித்து அந்த நிலையைக் கண்கூடாகப் பார்த்தான். எளிய வானர சேனையிடம், அரக்கர் சேனை படும் பெரும் பாட்டை அவன் கண்ட மாத்திரத்தில் ருத்திர மூர்த்தியாகக் கண்களில் தீப்பொறி பறக்க வானர சேனை குவிந்து இருக்கும் இடம் வந்தான். அக்கணமே, எளிய வானர வீரர்கள் மீது தனது உக்கிரமான பாணங்களைத் தொடுத்துக் கடும் போர் புரிந்தான். இந்திரஜித்தின் பாணங்கள் பட்டு இறந்தவர்கள் பலர் என்றால், அவனது வில்லின் நாணொலி கேட்டு அதிர்ச்சியில் இறந்த வானரர்கள் பலர்.
இந்திரஜித்தின் தேர் சென்ற இடமெல்லாம், பெரு வாரியான வானர வீரர்களின் பூத உடல் மண்ணில் சாய்ந்தது. " இந்த இந்த்ரஜித்து விடுத்தவை பாணங்களா இல்லை வானர வீரர்களின் உயிரைக் குடிக்கும் விஷ நாகங்களா!" என்று வானில் நின்ற தேவர்களும் கூட ஒருவரை, ஒருவர் கேட்டுக் கொண்டனர்.
இந்திரஜித் லட்சக்கணக்கான பாணங்களை பிரயோகிக்க, வானரப்படை மரங்களையும், பாறைகளையும், மலைகளையும் தான் இந்திரஜித்து மேல் தூக்கிப் போட்டனரே தவிர அவர்களால் அதனைத் தாண்டி வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. அவர்கள் தூக்கி எறிந்த அந்த பாறைகளும், மரங்களும் இந்திரஜித்து போன்ற மாவீரனின் முன் எம்மாத்திரம்?
மேலும், இந்திரஜித்து விடுத்த பாணங்கள் ஆகாயத்தில் விர்விரென்று சென்று வானரர்களின் உடலை துண்டாடியது, தலையைக் கொய்து வானம் வரை எடுத்துச் சென்று எறிந்தது. இவ்வாறு ஒரு முகூர்த்த காலத்திற்குள் ஒருவெள்ளம் வானர சேனையை இந்திரஜித்து கொன்று ஒழித்தான். ஆயினும், வானரர்கள் சளைக்காமல் தங்களுக்குத் தெரிந்த முறையில் மரங்களையும், பாறைகளையும், இந்திரஜித்தின் மேல் எறிந்தார்கள். ஆனால், அவை எல்லாவற்றையும் கணப் பொழுதில் இந்திரஜித்து தூள், தூளாக அழித்து ஒழித்தான். மேலும், அவன் அத்தனை வேகமாக பிரயோகித்த அம்புகள் சென்ற திசையையும், செய்த செயலையும் இமைக்காத கண்களைக் கொண்ட தேவர்களாலும் அறிந்து கொள்ள இயலவில்லை.
இவ்வாறு வானர சேனை அழிந்தது கண்ட எஞ்சிய வானர வீரர்கள் இந்திரஜித்தை தங்களால் வெல்ல முடியாது என்ற உண்மையை அறிந்து கொண்டார்கள். அக்கணமே தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வெகு விரைவாக ஓடத் தொடங்கினார்கள். வானர வீரர்கள் பயம் கொண்டு ஓடுவதைப் பார்த்த சுக்கிரீவன், மிகவும் கோபம் கொண்டு ஒரு பெரும் மரத்தைப் பெயர்த்துக் கொண்டு இந்திரஜித்தின் முன்னாள் வந்தான். அவன் தாக்குவதற்குள், இந்திரஜித்து பிரயோகித்த சக்தி வாய்ந்த அஸ்த்திரம் சுக்கிரீவன் கைகளில் இருந்த அந்த பெரும் மரத்தை , பெரும் பொடியாக்கி சிதறடித்தது. அத்துடன், இந்திரஜித்து பிரயோகித்த வலிமை வாய்ந்த பாணங்கள் சுக்கிரீவனையும் தாக்கி பல இடங்களில் காயப்படுத்தியது. சுக்கிரீவன் உடல் ரத்தக் காடாக மாறியது.
அது கண்ட அனுமான் ஆலகால விஷம் போன்ற கோபத்துடன் இந்திரஜித்தை எதிர்த்துப் போர் புரிய அவ்விடம் வந்தான். இது வரையில் வானரர்கள் பயன் படுத்தாத பெரியதொரு மலையை எங்கிருந்தோ பெயர்த்துக் கொண்டு வந்து " இத்துடன் இந்திரஜித்து இறந்தான்" என்று தேவர்களும் சொல்லும் படி அவன் மீது கடும் விசை கொண்டு வீசினான். தன்னைத் தாக்க வந்த அந்தப் பெரும் மலையை மிகவும் எளிதாக இந்திரஜித்து தனது வலிமை வாய்ந்த அஸ்த்திரத்தால் பொடிப் பொடியாக ஆக்கினான். அத்துடன் அவன் விடுத்த பல அம்புகள் அனுமனை தாக்க, அனுமனே இந்திரஜித்தின் வீரத்திற்கு முன்னாள் சோர்ந்து போனான். அப்போது இந்திரஜித்து அனுமனைக் கண்டு," எனது வில்லில் இருந்து புறப்படும் பாணத்தின் வலிமையை அறியாத குரங்கே. நீ எனக்கு எம்மாத்திரம்? உன்னை வெற்றி கொண்டாலும், அது எனக்கு புகழைத் தருமோ? அதனால் உயிர் விடமால் ஓடிப் போய், எனது தம்பி அதிகாயனைக் கொன்ற துஷ்ட லக்ஷ்மணனை, காலன் அவனுடன் போர் செய்ய வந்துள்ளான் என்று கூறி. உடனே அழைத்து வாடா!" என்றான்.
ஆனால், அனுமான் "உன்னை வீழ்த்த நான் ஒருவனே போதுமடா! முதலில் என்னை சமாளி" என்று கூறி எண்ணற்ற மலைகளைப் பெயர்த்து இந்திரஜித்தின் மேல் எரிந்தபடி இருந்தான். ஆனால், அவைகளை இலகுவாக இந்திரஜித்து தனது பாணங்களால் தடுத்தான். அனுமானின் கர்வத்தை அக்கும் பொருட்டு, இந்திரஜித்து " அனுமான் இனி பிழைக்காமாட்டனோ!" என்று தேவர்களும் கருதும் படி அவன் மீது பதினாறாயிரம் கணைகளைத் தொடுத்து காயப்படுத்தினான். அதனால், அனுமான் அதிக சோர்வுற்று செய்வதறியாது திகைத்தான்.
அனுமனை வீழ்த்த இதுவே சமயம் என்று தூமிராட்சனும், மகா பார்சுவனும் பெரும் அரக்கர் படையுடன் அவனைத் தாக்கினர். அப்போது அனுமான் மீண்டும் சோர்வு நீங்கி அவர்களை பதிலுக்குக் கடுமையாகத் தாக்கினான். அந்தத் தாக்குதலை சமாளிக்க முடியாத அந்த இரு அரக்கர்களும். இந்திரஜித்தை தனியே விட்டு, விட்டு தாங்கள் பிழைத்தால் போதும் என்று ஓடி ஒளிந்தார்கள். அவர்களுடன் வந்தப் பெரும் படையை அனுமான் தனி ஒருவனாக நின்று போரிட்டு அழித்தான். தொடர்ந்து அரக்கர்களுடன் போராடிப், போராடி அனுமான் உடலில் ஏற்பட்ட புண்களில் இருந்து அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டது. அதனால், அனுமன் முன்பை விட இன்னும் அதிகம் சோர்ந்தான்.
அப்போது அனுமானுக்கு ஆதரவாக நீலன், இந்திரஜித்துடன் போர் செய்து இறுதியில் அவனும் தோற்று, இந்திரஜித்தால் எண்ணற்ற பாணங்கள் உடலில் தைக்க குருதி வெள்ளத்தில் விழுந்தான். அதனால், நீலன் உடல் வியர்த்து நடுங்கினான்.
அப்போது நீலனைப் பாதுகாக்க அங்கதன் வந்தான், மீண்டும் இந்திரஜித்துடன் கடும் போரை அங்கதன் மேற்கொண்டான். போர் செய்வதையே தனது பொழுது போக்காகக் கொண்ட இந்திரஜித்து இது வரையில் தேவாசுர யுத்தத்திலும் பயன் படுத்தாத பல ஆயிரம் திவ்ய அஸ்த்திரங்களால் வாலியின் மகன் அங்கதனை தாக்கி அவன் உடலை குருதி வெள்ளமாக மாற்றி மயக்கம் அடையும் படிச் செய்தான்.
இந்திரஜித்தின் பாணங்களால் எண்ணற்ற வானர வீரர்களும், தளபதிகளும் படாத பாடு பட்டனர். தன்னை எதிர்த்த வானரர்கள் அனைவரும் இறந்து போய், எதிர்த்து வரும் வானரர்கள் ஒருவரும் இல்லாததைக் கண்டான் இந்திரஜித்து. எனவே, அவன் அம்புகளைத் தொடுக்க முடியாமல் போரை தற்காலியமாக கைவிட்டு நின்றான்.
மறுபுறம், எண்ணற்ற வானர வீரர்கள் இறந்ததையும். வானரத் தலைவர்கள் பலர், பலவிதத்திலும் இந்திரஜித்தின் பாணங்களால் படு காயம் அடைந்ததையும் கேள்விப்பட்டு, அதனை நேரிலும் கண்ட லக்ஷ்மணன், விபீஷணனை நோக்கி," நான் பெரும் தவறு செய்து விட்டேன் விபீஷணரே! இந்திரஜித்தின் ஆற்றலைக் கேள்விப்பட்டும், நானே போருக்கு செல்லாமல், வானர வீரர்களை முன் சென்று போரிடுமாறு அனுமதித்து அவர்கள் உயிர் போக நானே காரணம் ஆகி விட்டேன்! இப்போது அதனால் நமது வானரப் படையில் மூன்றில் இரண்டு பங்கு சேனை அழிந்து விட்டதே! ஐயோ, இனியும் நான் தாமதிப்பது எஞ்சி இருக்கிற சேனையையும் இந்திரஜித்து அழிக்க வழி வகை செய்யுமே! அதனால் அது கூடாது. நானே இனி இந்திரஜித்தை வதைத்து ஒழிக்கப் புறப்படுகிறேன். இதில் தங்கள் கருத்து என்ன?" என்றான்.
லக்ஷ்மணன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட விபீஷணன் " அது தான் சரி இளையபெருமாளே! இவனை நீர் வதைக்கா விட்டால், இவன் இன்றே யுத்தத்தை முடித்து விடுவான். அதனால், விரைந்து செல்லுங்கள். இவனும் பாவத்தின் நிழல் தான். அதனால், இவன் மீது கருணை காட்ட வேண்டாம். ஒழியுங்கள் இவனை " என்று லக்ஷ்மணனின் கூற்றை ஆதரித்துப் பேசினான்.
தனது கருத்தை விபீஷணன் ஆதரித்துப் பேசியதும். உடனே லக்ஷ்மணன் இந்திரஜித்துடன் போர் செய்யப் புறப்பட்டு, வீரத்துடன் அவன் முன்னே நின்றான். அவனைக் கண்ட இந்திரஜித் தனது ஒற்றனை நோக்கி," இவன் தான் லக்ஷ்மணனோ?" என்றான்.
அதற்கு அந்த ஒற்றன் " ஆம்" என்று பதில் உரைத்தான்.
லக்ஷ்மணன் மீது இந்திரஜித் போர் தொடுக்க முற்படும் முன்னரே, இந்திரஜித்துடன் இருந்த அசுரர் படை," இவன் தான் நமது தலைவர் அதிகாயனைக் கொன்றான். இவன் இப்போது நம்மிடம் வலிய வந்து அகப்பட்டுக் கொண்டான். இவனை விடாதீர்கள், தாக்குங்கள், கொல்லுங்கள்" எனக் கூறிக் கொண்டே இலக்ஷ்மணனை நோக்கி முன்னேறி வந்தார்கள்.
அவ்வாறு கோடிக்கும் மேலான அரக்கர்கள் கொண்ட பெரும் சேனை தன்னை எதிர்த்துப் போர் செய்ய நெருங்கியதைக் கண்ட லக்ஷ்மணன் அவர்கள் எல்லோர் மீதும் அம்பு மலைகளைப் பொழிந்தான். அப்போது லக்ஷ்மணனது அம்புகளால் இறக்கின்ற அரக்கர்களின் தொகையைக் கணக்கிடத் தொடங்கிய தேவர்கள், தங்களாலேயே ஒரு அளவுக்கு மேல் கணக்கிட முடியாத படி வெகு விரைவிலேயே பல கோடி அரக்கர்கள் இறந்ததைக் கண்டு வியப்பும், திகைப்பும் கொண்டு, கணக்கிட முடியாத கண் பார்வையை உடையவர்கள் ஆனார்கள். மற்றும் அவர்கள், " ஏழு மேகங்களும் விடாது மழை பொழிகின்ற வித்தையைப் பழகியது, லக்ஷ்மணனுடைய வில்லிடத்தில் தானோ?" என்று வியந்து பேசினார்கள்.
அவ்வாறு போர்க்களத்தில் ஒவ்வொரு யானையும், லக்ஷ்மணனுடைய ஒவ்வொரு அம்பை உடம்பிலே தாங்கி இறந்து மலையெனக் குவிந்து கிடந்தன. அதேபோல் அவனது அம்புகளால் இறந்த அரக்கர்கள், கடல் மணல்களின் தொகையை விட அதிகமாகக் காணப்பட்டார்கள். மற்றும் குதிரைகள் அளவற்று இறந்து கிடந்தன; கணக்கற்ற தேர்கள் சிதைந்து கிடந்தன; அரக்கர் பலர் லக்ஷ்மணனின் பாணங்களால் கைகள் அறுபட்டனர்; குடல்கள் அறுபட்டனர்; வேகம் ஒழிந்தார்கள்; உயிருடன் இருந்த எஞ்சிய அரக்கர்களோ, உயிர் பிழைத்தால் போதுமென்று புறமுதுகிட்டு ஓடினார்கள்.
அரக்கசேனைகள் அனைத்தும் தோல்வி அடைந்ததைக் கண்டு இந்திரஜித்து வெகுண்டு எழுந்தான். அவன் தனது தேருடன் லக்ஷ்மணனை நெருங்கினான். அதேசமயம் அனுமன் அதனைக் கண்டு விரைவாக ஓடிவந்தான். உடனே அவன் லக்ஷ்மணனைப் பார்த்து," தலைவனே! எனது தோளின் மேலே ஏறிக் கொள்வாய்! " என்று சொல்லி, அவனுடைய திருவடிகளில் வணங்கி நின்றான்.
லக்ஷ்மணனும், அனுமனின் வேண்டுகோளுக்கு இணங்கி அவனது தோளில் ஏறிக் கொண்டான். அது கண்ட வானர வீரர்கள் ஆராவாரம் செய்தார்கள். ஒரு மேகத்தின் மீது மற்றொரு மேகம் போர் செய்ய வந்தது போல, இந்திரஜித்தும் லக்ஷ்மணனும் போர் செய்யத் தொடங்கினார்கள். யமனைப் போன்ற உயிரைக் கொல்லக் கூடிய கொடிய அம்புகளை ஒருவர் மேல் ஒருவர் சாரை, சாரையாகப் பிரயோகித்தனர். அவர்கள் இருவருடைய வில்லின் நாணொலி போர்க்களத்தில் ஓயாமால் கேட்டுக் கொண்டே இருந்தது. அந்த ஒலியால் மலைகளும் பெயர்ந்து விழுந்தது. அவ்வாறு, இருவரும் சளைக்காமல் போர் செய்தார்கள். ஒருவர் எறிந்த அம்பு மற்றவர் அம்பைக் கவ்விச் சீறிக் கடித்தன. ஒன்றோடு, ஒன்று அம்புகள் மோதி தீயாய்க் கருகின. தேவர்களும் அது கண்டு அறிவு மயங்கினர். மேலும், அவ்விருவருடைய பாணங்கள் மோதுவதால் ஏற்பட்ட பெரும் ஒலி பூமியையே அசைத்தது. அவர்கள் தொடுத்த அம்புகள் எங்கும் குவிந்ததால் வானம், கடல், மலைகள் என அனைத்தும் அம்புகளாகத் தான் காணப்பட்டன. ஏன் அந்த அம்புப் போர்வையில் தேவர்களால் பூமியில் நடக்கும் லக்ஷ்மணன் - இந்திரஜித் யுத்தத்தை கூட சரியாகப் பார்க்க முடியவில்லை.
அதனால் தேவர்கள் ," இவர்கள் இருவரும் செய்யும் விற்போரின் ஆற்றலை இதுவரையில் மகேஸ்வரனிடத்திலும் நாம் கண்டதில்லையே! மேலும், இவர்கள் இருவரின் வில்வித்தைப் பயிற்சியும் ஓர் எல்லைக்கு உட்பட்டது இல்லையே! இவர்களின் உடல் வலிமை வானத்தைக் காட்டிலும் உயர்ந்தது!" என்று வியந்து போற்றினார்கள்.
போரிட்டுக் கொண்டு இருந்த இந்திரஜித் தீடீர் என்று ஆயிரம் கோடி பாணங்களை லக்ஷ்மணன் மீது ஏவ, அந்த ஆயிரம் கோடி பாணங்களை லக்ஷ்மணன் தனது ஆயிரம் கோடி பாணங்களைக் கொண்டே முறித்தான். இவ்வாறு இருவருக்கும் இடையே ஒரு முற்றுப் புள்ளி இல்லாதவாறு யுத்தம் நீண்டு கொண்டே இருந்தது. லக்ஷ்மணன் இந்திரஜித் பிரயோகித்த கொடிய பாணங்களில் இருந்து தன்னை மிக எளிதாக இந்திரஜித்தே வியக்கும் வண்ணம் பாதுகாத்துக் கொண்டான். இந்திரஜித்தை விட அதிக போர் குணத்துடன் பாணங்களை எய்து அவனுடன் வந்த அனைத்து அரக்கர்களையும் கொன்று குவித்தான். அத்துடன் இந்திரஜித்தின் உடலைப் படுகாயாப் படுத்தினான்.
அது கண்ட இந்திரஜித்," இவன் மும்மூர்த்திகளில் ஒருவனோ? இவன் வில் ஆற்றலை அளவிட முடியவில்லையே எம்முடன் போர் செய்யும் அதே நேரத்தில் எம்முடன் இருக்கும் அரக்கர்களையும் கொன்று அழிக்கிறானே! இவனைப் போன்ற சிறந்த வீரனும் உலகத்தில் இருப்பானோ! சரியான வீரனைத் தான் சந்தித்து உள்ளேன் " என்று மனதினில் கூறிக் கொண்டு யுத்தத்தை தொடர்ந்தான்.
அப்போது இந்திரஜித், லக்ஷ்மணனை தாங்கி நிற்கும் அனுமனின் மீது ஏராளாமான அம்புகளைத் தொடுத்தான். அதனால், அனுமனின் உடல் முழுக்க கணைகள் பட்டு குருதி வெள்ளமெனப் பெருக்கெடுத்து ஓடியது. அது கண்டு லக்ஷ்மணன் மிகுந்த கோபம் கொண்டு பல கோடி கணைகளைக் கொண்டு இந்திரஜித்தின் திவ்ய ரதத்தை அழித்தான். அப்போது அது பற்றி எறியும் போது, இந்திரஜித் அதில் இருந்து குதித்து வேறு ஒரு ரதத்தில் ஏறிக் கொண்டான்.
அவ்வாறு யாராலும், அழிக்க முடியாத தனது திவ்ய ரதம் அழிந்ததைக் கண்ட இந்திரஜித் அதீத கோபம் கொண்டான், லக்ஷ்மணன் மீது கோடிக்கணக்கான கங்கபத்திரமென்னும் அம்புகளைப் பிரயோகித்தான். அந்த அம்புகளை கணப்பொழுதில் தனது பாணங்களால் அழித்தான் லக்ஷ்மணன். அதே சமயத்தில் இந்திரஜித் ஏறிய அந்த மற்றொரு இரதத்தையும் அழித்தான். பிறகு எண்ணற்ற பாணங்களை தொடுத்து இந்திரஜித்து அணிந்து இருந்த கவசத்தை அழித்தான். மீண்டும் இந்திரஜித்துக்குப் படு காயத்தை ஏற்படுத்தினான் அச்சமயம் மெல்ல சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கினான். வெகுவாக இருள் உலகத்தை கவ்வத் தொடங்கியது. அதனை உணர்ந்த விபீஷணன் லக்ஷ்மணன் அருகில் ஓடி வந்தான். பிறகு லக்ஷ்மணனிடம்," ஐயனே! சூரியன் அஸ்தமிக்க சில மணித்துளிகளே உள்ளது. அவ்வாறு சூரியன் அஸ்தமித்தால் இரவு வந்துவிடும். அப்படி இரவு வந்து விட்டால், அடுத்த நொடியில் அரக்கர்களின் பலம், இப்போது இருப்பதை விட கோடி மடங்கு பெருகிவிடும். அதனால், அதற்குள் நீங்கள் இந்திரஜித்தை கொன்று விடுங்கள். இல்லையேல், இந்திரஜித்தின் பலம் பெருகிவிடும். அதன் பிறகு அடுத்த நாள், சூரிய உதயம் வரையில் அவனை தங்களால் ஒன்றுமே செய்ய இயலாது" என்றான்.
அது கேட்ட லக்ஷ்மணன் இன்னும் அதிக கொடிய அம்புகளை அதிவேகமாக இந்திரஜித்தின் மீது ஏவினான். அக்கணம் சூரியன் அஸ்தமித்து இரவு பிறந்தது. அதனால், இந்திரஜித்தின் வலிமையும் அதிகமானது. மறுபுறம் இந்திரஜித்து லக்ஷ்மணன் விடுத்த அந்த பாணங்கள் தன்னை தாக்குவதற்குள், ரதத்தில் இருந்து மறைந்து ஆகாயத்துக்கு சென்றான். வானில் நின்றான். ஆனால், அதனை அறியாத வானரக் கூட்டம் இந்திரஜித்து பயந்து போய் விட்டான் என்று ஆராவாரம் செய்தனர். அதனை, லக்ஷ்மணனும் நம்பினான். அதனால், அதுவரையில் அமர்ந்து இருந்த அனுமனின் தோளை விட்டு இறங்கினான். பின்பு தனது கைகளில் இருந்த வில்லை ஒரு இடத்தில் வைத்து. சந்தியாவந்தனம் செய்யப் புறப்பட்டான்.
அக்கணம் மேகங்களுக்கு இடையில் சென்று மறைந்த மேகநாதன் என்னும் இந்திரஜித்து நுண்ணிய வடிவம் கொண்டு ," நமது அரக்கர்களை கொன்று குவித்த இந்த லக்ஷ்மணனையும் வானர சேனைகளையும் விடக் கூடாது. லக்ஷ்மணா இன்றோடு நீ ஒழிந்தாய்!" என்று கூறிக் கொண்டு நாக பாசம் என்னும் சக்திவாய்ந்த அம்பை லக்ஷ்மணன் மீது தொடுத்தான்.
சந்தியாவந்தனம் செய்யப் புறப்பட்ட லக்ஷ்மணன் மீது ஏவப்பட்ட நாகபாசம் என்னும் கொடிய அம்பு சீறிப் பாய்ந்து லக்ஷ்மணனை தாக்கியது. அக்கணமே இது இந்திரஜித்தின் மாயச் செயல் என்று அறியாமலேயே லக்ஷ்மணன் வலிமை குன்றி கீழே விழுந்தான். அவ்வாறு, அப்படியே மயங்கி விழுந்தவன் தான். பின்னர் எழுந்திருக்கவே வில்லை.
இவ்வாறு நாகாஸ்த்திரத்தால் லக்ஷ்மணன் கட்டுண்டு மயங்கி வீழ்ந்ததைக் கண்டதும் அனுமன்," இப்படி மாயச் செயல் புரிந்த கள்ளனைக் கணப் பொழுதில் வானத்தில் வேகமாகக் கிளம்பிச் சென்று தேடிப் பிடிப்பேன்!" என்று சொல்லி, உக்கிரம் கொண்டு வானத்தில் கிளம்பத் தொடங்கினான். அக்கணமே, லக்ஷ்மணன் மீது படிந்து இருந்த நாகாஸ்த்திரம் இன்னும் நீளமாக நீண்டு அருகில் நின்று இருந்த மற்ற வானர வீரர்களையும் சூழ்ந்தது. அதனால், அவர்களும் விழுந்து போனார்கள்.
அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த நாகாஸ்த்திரத்தின் வலிய கட்டுகளில் இருந்து விடுபட முடியாமல் தவித்தனர். இன்னும் அந்த நாகாஸ்த்திரம் அவர்களை அதிகமாக இருக்க, வலி தாங்க முடியாமல் எண்ணற்ற வானர வீரர்கள் தரையில் புரண்டார்கள், அழுதார்கள், துடித்தார்கள், உதடுகளை கடித்தார்கள். இறுதியில் அவர்களும் லக்ஷ்மணனைப் போலத் தரையிலே சாய்ந்தார்கள். அந்நிலையிலேயே மயங்கினார்கள். அப்போது, நாகாஸ்த்திரத்தால் கட்டுண்டு கிடந்த வானர வீரர்களின் உடம்பில், அந்த அஸ்த்திரத்தின் தாக்கத்தால் புண்கள் ஏற்பட்டு அப்புண்களில் இருந்து இரத்தம் பெருகி வழியத் தொடங்கியது.
அப்போது இந்திரஜித்தை தேடி, அவன் கிடைக்காததால் வானத்தில் இருந்து மீண்டும் பூமிக்கு இறங்கிய அனுமான். லக்ஷ்மணனின் நிலை கண்டு மிகவும் வருந்தினான். முன்பு இந்திரஜித்தின் பாணங்களால் மாருதி தாக்கப்பட்ட போதும் கூட, அவன் அப்படியான ஒரு வருத்தத்தை அடைய இல்லை. மேலும், பல எண்ணற்ற வானர வீரர்களும் நாகாஸ்த்திரத்தால் மயங்கிக் கிடந்ததையும் அனுமான் கண்டு, இன்னும் அதிகமாகவே வருந்தினான். அப்போது இந்தச் செய்தி சுக்கிரீவனின் காதுகளுக்கும் போக, அவன் அவ்விடம் வந்த இளைய பெருமாளும், வானர வீரர்கள் பலரும் நாகாஸ்த்திரத்தால் கட்டப்பட்டு இருக்கும் காட்சியைக் கண்டு மனம் நொந்தான். " இதனை ஸ்ரீ இராமரிடம் எவ்வாறு தெரிவிக்கப் போகிறோம்!" என்று நினைத்த போது, அவன் கண்கள் குளமாகின.
இது இப்படி இருக்க ....
மறுபுறம், வானர வீரர்களையும் லக்ஷ்மணனையும் தனது நாகாஸ்த்திரத்தால் கட்டி வருத்தம் அடையச் செய்த இந்திரஜித்து, ' சொன்ன வார்த்தையை நிறைவேற்றி விட்டேன். என் உடம்பின் தளர்ச்சியைப் போக்கிக் கொண்டு, நாளைக்கு மற்றதையும் நிறைவேற்றுவேன்' என்று நினைத்து,' மனிதனது வாழ்வு இன்றோடு அழிந்து போயிற்று. குரங்குச் சேனை ஒழிந்து விட்டது!' என்று, தனது இருபக்கங்களிலும் வெற்றி முரசு கொட்ட இராவணனின் மாளிகைக்குச் சென்றான். போர்க்களத்தில் நடந்த விவரங்கள் அனைத்தையும் இராவணனிடம் கூறினான். லக்ஷ்மணன் நாகாஸ்த்திரத்தால் வீழ்ந்த செய்தியைக் கேட்ட மாத்திரத்திலேயே இராவணன் மகிழ்ந்தான்.
அவ்வாறு, இராவணனை மகிழ்வித்த இந்திரஜித்து, போர்க்களத்தில் லக்ஷ்மணன் பிரயோகித்த பாணங்களின் தாக்கத்தால் மிகவும் களைப்புற்று காணப்பட்டதால் தந்தையின் அனுமதி பெற்றுத் தனது மாளிகைக்குச் சென்றான்.
அதேசமயம் போர்க்களத்தில் லக்ஷ்மணன் நாகாஸ்த்திரத்தால் கட்டுண்டு கிடக்கும் நிலையைப் பார்த்து விபீஷணன், செய்வது அறியாது மத்தினால் கடையப்பட்ட தயிர் போல மனம் கலங்கினான். அதனால், அக்கணமே தரையில் செத்தவன் போல விழுந்தான். அவ்வாறு விழுந்தவன்," ஸ்ரீ இராமபிரானது திருத்தம்பியாகிய இளைய பெருமாள் நாகாஸ்த்திரத்தால் கட்டுண்டதைக் கண்டதும், அவனிடத்தில் உள்ள பேரன்பினால் வானரர்களும் விழுந்து விட்டார்கள். நான் மட்டும் சாகாமல் தனியவனாக நிற்கின்றேன். இப்படிப்பட்ட என்னைப் பற்றி உலகத்தவர்கள் என்ன நினைப்பார்களோ?" என்று எண்ணி மனம் வாடினான்.
பிறகு மீண்டும் விபீஷணன்," நான் யாருக்குத் தான் உறவாக இருக்கிறேன்? எதிர்ப்பக்கத்துக்கும் நான் ஆகாதவன் ஆனேன். அதேபோல, நான் சரணம் அடைந்த இந்தப் பக்கத்துக்கும் இப்போது ஆகாதவன் போல் மாறிவிட்டேனோ? இந்திரஜித்தைப் பற்றித் தெரிந்தும் நான் ஸ்ரீ இராமபிரானிடம் இன்னும் அதிக எச்சரிக்கைக் கொடுக்காமல் போனேனே! இல்லை இந்திரஜித்து போர் செய்து கொண்டு இருக்கும் போதே, எனது தண்டாயுதத்தால் அவனைத் தேருடனே புரண்டு விழும்படிச் சிதறடித்து, இப்போது மனம் சொல்கின்றவாறு வீரச் செயலை முன்பே நான் செய்து காட்ட வில்லையே! ஆக, அவனை நான் வெற்றி கொள்ளவும் இல்லை. அவனால் இறக்கவும் இல்லை. அதனால், இப்போது இரு பக்கத்திலும் நெருப்பை உடைய கொள்ளிக் கட்டையைப் போன்றவனாகி விட்டனே!" என்று சொல்லிப் புலம்பினான்.
விபீஷணன் துன்பத்தால் கதறி அழுவதைக் கண்ட அவனுடைய அமைச்சன் அனலன், அவனைப் பார்த்து," வீரனே! இந்த நிலைக்கு பரிகாரம் செய்வதற்கு உண்டான செயல்கள் இப்போது பல இருக்கின்றன. அவற்றைச் செய்ய முயற்சிக்காமல், அறிவுடைய நீயும் அறிவற்றவர்கள் போல் மனம் தளர்ந்து வாடுகின்றாயே. உடனே உனது அந்த வருத்தத்தை விட்டு விடுவாய்" என்று சொல்லித் தேற்றினான்.
பின்பு அனலன் விபீஷணனிடம்," இங்கேயே நீ வருந்தாமல் இனிதாக இருப்பாய். நான் சென்று இந்தச் செய்தியை ஸ்ரீ இராமபிரானிடம் சொல்லிவிட்டு வருகின்றேன்!" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
பிறகு ஸ்ரீ இராமபிரானை அடைந்த அனலன் நடந்த விஷயத்தை அவரிடம் பக்குவமாகக் கூறினான். தனது தம்பி லக்ஷ்மணன் நாகாஸ்த்திரத்தால் கட்டுண்டான் என்ற செய்தியைக் கேட்ட மாத்திரத்திலேயே ஸ்ரீ இராமபிரான் துடித்துப் போனார். அப்போது போர்களம் எங்கும் இருள் சூழ்ந்து இருந்தததைக் கண்ட ஸ்ரீ இராமன் ஆக்னேயே அஸ்த்திரத்தைப் பிரயோகித்தார். அந்தக் கணமே போர்க்களம் ஆக்னேய அஸ்த்திரதால் வெளிச்சம் பெற்றுத் திகழ்ந்து. பிறகு, எண்ணற்ற பிணக் குவியல்களைத் தாண்டிச் சென்று ஸ்ரீ இராமர் லக்ஷ்மணன் போர் செய்து மயங்கிக் கிடந்த இடத்தை அடைந்தார். அக்கணமே லக்ஷ்மணன் நிலையைக் கண்டு துடித்துப் போனார். கண்களில் நீர் மல்க, வானத்தில் விளங்கும் சூரியனைச் சேர்ந்த நீல மேகம் போலத் தம்பியை கட்டி அணைத்துக் கொண்டார். தம்பியை அணைத்தபடி மிகவும் வருந்தினார். வெம்மையாகப் பெருமூச்சு விட்டார். உயிர் கரைந்தார். அறிவு நீங்கித் தளர்ந்தார். செய்வது அறியாது திகைத்தார். தனது கையைக் கொண்டு லக்ஷ்மணனுக்கு மூச்சுக் காற்று இருக்கின்றதா என்று அவனுடைய மூக்கிலும் வாயிலும் வைத்துப் பார்த்து துன்பம் அடைந்தார். " ஐயனே! பிழைப்பாயோ?" என்று வாய் விட்டுப் புலம்பினார். தாமரை மலர் போன்ற தமது கைகளினால் அவனுடைய கால்களைத் தடவினார். அவனது துடையைத் தட்டினார். லக்ஷ்மணனின் தாமரை போன்ற தூயக் கண்களை இமைகள் பிரித்துப் பார்த்தார். சிலசமயம் அவனுடைய மார்பு படபடவென்று அடித்துக் கொள்வதைக் கண்டு, தம்பிக்கு உயிர் இருக்கிறது என்பதை உணர்ந்து மகிழ்ந்தார். வானத்தைப் பார்த்தார். தம்பியைத் தூக்கி எடுத்துத் தமது மார்பிலே சார்த்திக் கொண்டார். பூமியில் தம்பியைக் கிடத்தி அருகில் உட்கார்ந்து கொண்டார். பின் தனது கைகளில் உள்ள வில்லைப் பார்த்தார். 'இது என்னிடம் இருந்தும் என்ன பிரயோஜனம்' என தனக்குள் சொல்லிக் கொண்டார். பின் விடியாத இரவைப் பார்த்தார். அத்துடன், தனக்காகப் போரிட்டு நாக பாசத்தால் கட்டுண்டு கிடந்த சேனா வீரர்கள் அனைவரையும் பார்த்தார். அதனால், தனது விதியை நொந்தார்.
பிறகு அருகில் நின்று இருந்த விபீஷணனிடம்," விபீஷணா! இந்திரஜித்துக்கும், லக்ஷ்மணனுக்கும் இடையே கடும் போர் மூண்டபோதே நீ வந்து என்னை அழைத்து இருக்கலாமே. ஏன் வந்து நீ என்னை அழைக்க வில்லை? நீ செய்தது நியாயமா? "என்று கேட்டு வருந்தினார்.
அது கேட்டு விபீஷணன்," ஐயனே! இப்போரில் இந்திரஜித்து இவ்வாறு கபடமாக லக்ஷ்மணனை வீழ்த்துவான் என்பதை நான் அறியாமல் போனேன். மேலும், இந்த தர்ம யுத்தத்தில் துர்மார்கனே இறுதியில் தோற்பான் என்று நம்பி இருந்தேன். அதனால், தான் இந்தப் போரைப் பற்றி நான் தங்களிடம் முன் கூட்டியே சொல்லாதவனானேன். தயை கூர்ந்து என்னை மன்னியுங்கள்" என்று கண்ணீர் மல்க ஸ்ரீ இராமனின் பாதத்தில் விழுந்து அழுதான்.
விபீஷணன் கூறிய வார்த்தைகளில் இருந்து அவனும் குற்றமற்றவனே என்ற முடிவுக்கு வந்தார் ஸ்ரீ இராமர். பிறகு விபீஷணனை நோக்கி ," குற்றமற்றவரே! இந்த நாகாஸ்த்திரத்தை இந்திரஜித்துக்குக் கொடுத்த தேவன் யார்? இதன் தன்மை எப்படிப் பட்டது? இதில் இருந்து தப்பிப் பிழைப்பதற்கு உண்டான வழி என்ன? இந்த அஸ்த்திரத்தைப் பற்றி நீ அறிந்துள்ள செய்தியை எனக்குச் சொல்!" என்று கேட்டார்.
தருமசீலனான விபீஷணன் அதற்கு, " ஐயனே! நான் இந்த அஸ்த்திரத்தைப் பற்றி அறிந்த அனைத்து விஷயங்களையும் சொல்கிறேன் கேட்பீராக! முன்பு, இந்த உலகத்தைப் படைத்த பிரமன் தான் செய்த ஒரு யாகத்தினால், இந்த அஸ்த்திரத்தைப் பெற்றான். பிறகு, பிரமனிடம் இருந்து சிவ பெருமான் இந்த அஸ்த்திரத்தைப் பெற்றார். இதனைக் கொண்டு பல போர்களில் அவர் வெற்றி பெற்றார். பிறகு, இந்திரஜித் சிவனை நோக்கிக் கடும் தவம் புரிய, ஈசன் மகிழ்ந்து இந்த அஸ்த்திரத்தை இந்திரஜித்துக்கு அளித்தார். இந்த அஸ்த்திரத்தைக் கொண்டே இந்திரஜித் பல போர்களில் வெற்றி பெற்றான். முன்பு தேவாசுர யுத்தத்தில் இந்திரனை அவன் கட்டியதும் இந்த அஸ்த்திரத்தினால் தான். இப்போது லக்ஷ்மணன் மீதும் இதே அஸ்த்திரத்தை பிரயோகித்து உள்ளான். இந்த அஸ்த்திரத்தின் தனித்தன்மை யாதெனில், இது ஒருவரது உடலை சென்று தாக்கினால், அவர் இறக்கும் வரையில், அவரது உடலைக் கட்டி இருக்கும். அந்த நபர் இறந்த பிறகே அவரது உடலை விட்டு அகலும். எந்த ஆயுதத்தாலும் அந்தக் கட்டில் இருந்து தாக்கப் பட்டவர்களை விடுவிக்க முடியாது. தானாக, நாகாஸ்த்திரம் விடுபட்டால் தான் உண்டு. ஆனால், அதுவும் நடக்காது" என்றான்.
ஸ்ரீ இராமர், அது கேட்டு அதிகத் துயர் அடைந்தார், பிறகு மீண்டும் விபீஷணனிடம்," இனியும் நான் என்ன செய்வேன்? யார் மீது கோபம் கொள்வேன்? யாரைத் தண்டிப்பேன்? இந்த அஸ்த்திரத்தை இந்திரஜித்துக்கு வழங்கிய தேவர்களை தண்டிப்பேனா ? இல்லை எனது விதியை எழுதிய பிரமனனை தண்டிப்பேனா? ஆனால் ஒன்று எனது தம்பிக்கு ஏதாவது நடக்கக் கூடாதது நடந்தால், நான் இந்த மூவுலகத்தையும் எனது பாணம் கொண்டு அழிப்பேன். அத்துடன் நானும் அழிவேன்" என்று சீற்றத்துடன் கூறினார். பிறகு மீண்டும் அழ்தார், துக்கம் தாங்காமல் புலம்பித் தவித்தார்.
வானத்தில் நின்ற வண்ணம் அவற்றைக் கண்ட தேவர்கள்," இராமர் இப்படி எல்லாம் சொல்கின்றாரே. இப்படியே போனால் இந்த பிரச்சனை எங்கு சென்று முடியுமோ! இதற்குத் தீர்வு தான் என்ன? நாமும் இப்படி அவர் நிலையை வேடிக்கை பார்ப்பது சரியோ? இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் நாமும் அந்த இராவணனுக்கு பயந்து, ஸ்ரீ இராமனுக்கு உதவாமல் இருப்பது" என்றெல்லாம் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
அவர்கள் பேசுவதை அருகில் இருந்த கருட பகவான் கேட்டான். அப்போதே அவனது மனதில்," இந்த நாகாஸ்த்திரத்தில் இருந்து என்னால் ஸ்ரீ இராமரைக் காக்க இயலும். அப்படி இருக்க நானும் வேடிக்கை பார்ப்பது நியாயமில்லை. இதோ உமக்கு உதவ வருகிறேன் ராமா!" என்று கூறிக் கொண்டு வானத்தில் இருந்து இறங்கினான். அக்கணமே ஸ்ரீ இராமரின் திருவடிகளை அடைந்தான்.
பிறகு கருடனை ஆச்சர்யத்துடன் பார்த்த ஸ்ரீ இராமரிடத்தில், கருடன் ," பெருமாளே! அச்சம் கொள்ள வேண்டாம். நான் தங்களுடைய இந்த நிலையில் இருந்து தங்களைக் காக்கவே இங்கு வந்துள்ளேன். தலைவா! ஜெகன்னாதா! தாங்கள் என்னை ஏன் புதிதாகக் காண்பது போலக் காண்கின்றீர்? என்னை உமக்கு அடையாளம் தெரியவில்லையா? நமது பந்தம் ஜன்ம, ஜன்மாந்திர பந்தம் ஆயிற்றே! எத்தனையோ தேவாசுர யுத்தத்தில் நான் தங்களை சுமந்து சென்று உள்ளேன். இன்னுமா என்னை தங்களுக்கு அடையாளம் தெரியவில்லை? நானே கருடன் ஆவேன்!
மேலும் ஐயனே! தாங்கள் உலக நாயகன் ஆயிற்றே, பிரம்மனுக்கும் பிதாவாயிற்றே! அப்படி இருக்க இப்படிக் கலங்குவது ஏனோ? முச்செயலையும் ஒரு ரூபத்தில் இருந்து செய்யும் பெருமானே. உமது திருவிளையாடலை யாரால் தான் அறிந்து கொள்ள முடியும்? அப்படி இருக்க என்னால் மட்டும் அறிய முடியுமோ? வேதங்களால் போற்றப்படுபவரே! குறைவற்று இருப்பவரே! ஆண், பெண் பேதமின்றி இருப்பவரே! முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவரே. பற்றற்று கிடக்கும் ஞானிகளும், உமது திருவடியை பற்றும் பற்றில் உள்ளனர். அப்படி இருக்க நீரே மாயையால் பந்த பாசம் என்னும் பற்றுடன் காணப் படுவது சரியோ!மும்மூர்த்திகளாலும் அளவிட முடியாதவரே! சக்கராயுதம் ஏந்தும் திருக் கைகளைக் கொண்டவரே! உமது துயரை நான் துடைக்க எனக்கு ஒரு வாய்ப்பைத் தாருங்கள்" என்று கருடபகவான் துதித்து விட்டு, நாகபாசத்தால் கட்டுண்டு கிடந்தவர்களின் அருகில் சென்றான்.
கருடபகவான் அவர்களை நெருங்கிய அந்தக் கணத்தில், லக்ஷ்மணனின் உடலில் பிணைந்து இருந்த நாகபாசம் கருடனின் இறகுகளில் இருந்த காற்று பட்ட மாத்திரத்தில் அவனையும் கூடவே மற்ற வானரர்களையும் விட்டு அலறி அடித்துக் கொண்டு மறைந்தது. அவ்வாறு, கருடனின் அருளால் நாக பாசம் அனைவரையும் விட்டு நீங்கிய மறுகணத்தில், ஏதோ உறக்கத்தில் இருந்து எழுந்தது போல, மயங்கிக் கிடந்த அனைவரும் எழுந்து அமர்ந்தனர். மீண்டும், புத்துணர்ச்சி பெற்று தங்களது பழைய நிலையை அடைந்தனர். அது கண்டு ஸ்ரீ இராமர் மகிழ்ச்சிப் பரவசம் அடைந்தார். கருடனை வணங்கினார்.
அது கண்ட கருடன் பதறியபடி, "பெருமாளே! தாங்கள் போய் என்னை வணங்கலாமா? நான் சாதாரணமாவன். தயை கூர்ந்து தங்கள் செயலால் என்னை நாணம் கொள்ளச் செய்யாதீர்கள்" என்று கூறியபடி அவ்விடம் விட்டு விண்ணுலகம் நோக்கிப் பறந்தான்.
கருடபகவான் சென்று மறையும் வரையில், அவனை அன்புடன் நோக்கினார் இராமபிரான். கண்களில் இருந்து அவன் மறைந்ததும், அவர் தமது பக்கத்தில் இருந்தவர்களை நோக்கி," நம்மிடத்தில் ஒரு காரியமும் இல்லாதவன், இப்போது நமக்கு வந்து உதவி செய்து விட்டுச் சென்றான். இது தான் பெரியோர்களின் தன்மையாகும்! பெரும் தன்மை உடைய நன்மக்கள் தாம் செய்த உதவிக்குப் பிரதிபலனைப் பெறுவோம் என்று ஒரு நாளும் எண்ண மாட்டார்கள். இவ்வுலகத்தவர் தமக்கு மழை பெய்து உதவுகின்ற மேகத்திற்கு கைம்மாறு செய்ய வல்லவரோ?" என்றார்.
அப்போது அனுமான் ஸ்ரீ இராமபிரானை நோக்கி," அறம் பூத்த நெஞ்சில் அன்புடையவரே! நாம் இப்பொழுது மகிழ்ச்சிக்கு உரிய செயலைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் இருந்தால், இளையபெருமாள் இறந்ததாக எண்ணி பிராட்டி மிகவும் துன்பம் அடைவார். எனவே, நாம் பேராரவாரம் இப்போது செய்தால், மெய்மறந்து தூங்கும் வஞ்ச அரக்கர்களும், நாம் மீண்டும் உயிர் பிழைத்து எழுந்து விட்டோம் என்பதை உணர்ந்து மனம் கலங்கிப் பெரும் அச்சம் கொள்வார்கள். ஆகவே நாங்கள் பேராரவாரம் செய்கின்றோம். அனுமதி தாருங்கள்!" என்று வேண்டினான்.
ஸ்ரீ இராமர் அனுமன் சொல்வதில் உள்ள நியாயத்தை எண்ணி அவர்கள் ஆரவாரம் செய்வதற்கு அனுமதி அளித்தார். அடுத்தகணம் வானர வீரர்கள், கடல்களும் அஞ்சிக் கலங்கவும், ஆதிசேஷனுடைய மலை போன்ற தலைகளில் இருந்து உலகவுருண்டை மேல் எழவும், உலகத்தவர்கள் அனைவரும் அதிகமாக ஏக்கங் கொள்ளவும், மேகங்கள் நிலை குலைந்து சிதறி விழவும், மலைகள் கீறல்படவும், பெரிய திசைகள் பிளவு படவும் பேராரவாரம் செய்தார்கள்!
வானர வீரர்களின் அந்தப் பேராரவார ஒலியானது இலங்கையயே நடுங்கச் செய்ய, அந்த ஒலியானது அசோக வனத்தில் இருந்த சீதையின் காதுகளிலும் சென்று விழுந்தது. அதனால், சீதை வருத்தம் நீங்கி மகிழ்ந்தாள். "இளையபெருமாள் உயிர் பிழைத்தார் போலும், அதனால் தான வானர வீரர்கள் குதூகலிக்கின்றனர்" என்ற முடிவுக்கு வந்தாள். மறுபுறம், அந்தப் பெரும் ஒலியை நன்கு உறங்கிக் கொண்டு இருந்த இலங்கையில் உள்ள அரக்கியர்களும், அரக்கர்களும் கேட்டனர், அக்கணமே புற்றில் இடியின் முழக்கத்தைக் கேட்டு அஞ்சும் பாம்பைப் போல ஆனார்கள்.
பிறகு அந்தப் பேர் ஆரவாரத்தின் ஒலியானது நிம்மதியாக உறங்கிக் கொண்டு இருந்த இராவணின் காதுகளில் விழுந்தது. உடனே உறக்கத்தில் இருந்து எழுந்தான்," தருமதேவதை அவர்கள் பக்கம் இருப்பதால், லக்ஷ்மணன் நாக பாசத்தில் இருந்து விடுபட்டு இருப்பான் போலும்! அதனால் தான் வானர வீரர்கள் கொக்கரிக்கின்றனர். எனில் எங்கே இந்திரஜித்து!" என்று தனது மனதுக்குள் சொல்லிக் கொண்டு இந்திரஜித்தின் மாளிகைக்கு விரைந்தான்.
இந்திரஜித்தின் மாளிகயினுள் நுழைந்த இராவணன் தனது புதல்வனுடைய படுக்கையின் அருகே சென்றான். தந்தையைக் கண்டும் கூட அன்றைய போரில் அவன் பட்ட காயங்களால் எழுந்திருக்க முடியாமல் படுத்தபடியே கைகளைத் தலை மேல் தூக்கி வைத்து தந்தையை வணங்கினான் இந்திரஜித். அவனுடைய அந்த நிலையைக் கண்ட மாத்திரத்தில் இராவணன் திடுக்கிட்டான். மிகுந்து துன்பம் நிறைந்த குரலில் இந்திரஜித்தைப் பார்த்து," மகனே! நீ ஏன் இப்படி வருந்திகிறாய்? உனக்கு என்ன தீங்கு நேர்ந்தது?" என்று பலமுறை கேட்டான்.
அது கேட்ட இந்திரஜித் மெலிந்த குரலில் தந்தையை நோக்கி," தந்தையே! லக்ஷ்மணனுடைய அம்புகள் எனது உடலைக் கீறிக் கிழித்ததால் அதிக ரத்தம் வெளியேறியது. அதனால் தான் இப்போது நான் மிகவும் தளர்ந்து காணப்படுகிறேன். அந்த லக்ஷ்மணனின் பேராற்றல் கண்டு நிச்சயம் நமக்கு வரங்களை அள்ளித் தந்த ஈசனும் வியப்பான். இன்று, சரியான ஒரு வீரனைத் தான் நான் போர் களத்தில் சந்தித்து உள்ளேன்" என்றான்.
இந்திரஜித்தின் வார்த்தையைக் கேட்ட இராவணன்," அது இருக்கட்டும் மகனே! நீ வானரர்கள் பல மணிநேரங்களாக இடைவிடாது செய்யும் மகிழ்ச்சி ஆரவாரத்தைக் கேட்கிறாய் அல்லவா? அப்படி என்றால் லக்ஷ்மணன் பிழைத்து விட்டானா? நீ அவனை நாக பாசத்தால் வீழ்த்தியதாகக் கூறினாயே! அது சத்தியம் என்றால், அதில் இருந்து யாரும் தப்ப இயலாதே! அப்படி இருக்க லக்ஷ்மணன் மட்டும் எப்படித் தப்பிப் பிழைத்தான். இது என்ன அதிசயம் மகனே!" என்றான்.
அது கேட்ட இந்திரஜித்து," தந்தையே! லக்ஷ்மணன் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை. நாக பாசத்தால் லக்ஷ்மணனும், அவனுடன் இருந்த மந்திகளும் மயங்கித் துடித்ததை நான் பல மணி நேரம் எனது கண்களால் கண்டு. அவர்கள் வீழ்ந்தார்கள் என்ற நிலையில் தான் இலங்கையின் மாளிகைக்குத் திரும்பினேன். என்னை நம்புங்கள். ஒருவேளை வலிமை மிகுந்த எனது நாகாஸ்த்திரத்தை வேறு ஒரு பொருள் தாக்கி வலிமை இழக்கச் செய்தது என்றால், இதனை எனக்குக் கொடுத்த தெய்வம் சிறுமைப்பட்டு விடுமன்றோ?" என்றான்.
இந்திரஜித்தும் இராவணனும் அவ்வாறு உரையாடிக் கொண்டு இருக்கையில், போர்க்களத்தில் நடப்பதை அறிந்து வரும்படி இராவணனால் ஏவப்பட்டுச் சென்ற ஒற்றர்கள், விரைவாக அங்கே திரும்பி வந்து சேர்ந்தார்கள்.
அவ்வாறு, வந்து சேர்ந்த ஒற்றர்களை இராவணன் கண்டான். அவர்களிடம் நடந்ததை விசாரித்தான். அந்த ஒற்றர்கள் போர்க்களத்தில் நடந்த விவரங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் உள்ளது, உள்ளபடி இராவணனிடம் கூறினார்கள். இறுதியில் கருடன் வந்து நாகாஸ்த்திரத்தை பலம் இழக்கச் செய்த விவரத்தையும் தெரிவித்தார்கள்.
அவற்றை எல்லாம் கேட்டுத் தெளிந்த இராவணன் இந்திரஜித்தின் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டான். மேலும் அவன்," துஷ்ட கருடனே! நீ செய்த காரியத்துக்கு உன்னை இந்த இலங்கேஸ்வரன் நிச்சயம் தண்டிப்பான். உனக்கும் ஜடாயுவின் கதிதான். இராமனுடனான யுத்தம் முடியட்டும் உன்னையும் ஒரு கை பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறிக் கொண்டான்.
பிறகு இந்திரஜித்திடம்," எனது அருமை மகனே! உடனே செல் அந்த லக்ஷ்மணனை மீண்டும் போர்க்களத்தில் வீழ்த்தி விட்டு வா!" என்றான்.
இந்திரஜித்து உடனே தந்தையிடம்," தந்தையே! இன்று ஒரு நாள் மட்டும் ஓய்வு எடுத்துக் கொண்டு போரிலே நான் கொண்ட தளர்ச்சியைப் போக்கிக் கொண்டு, நாளைப் போர்களத்துக்குப் போய், பிரம்மாஸ்த்திரத்தினால் பகைவரக்ளைக் கொன்று உமது மனத் துன்பத்தை போக்குகிறேன்!" என்றான்.
மகனுடைய வார்த்தைகளைக் கேட்ட இராவணன் அதுவும் சரியே என்று உணர்ந்தான். "சரி, அப்படியே செய்!" என்று மகனிடம் சொல்லிவிட்டு, இராவணன் திரும்பித் தனது அரண்மனைக்குச் சென்று சேர்ந்தான்.