நகர் நீங்கு படலம்

நகர் நீங்கு படலம்

bookmark

அயோத்தியா காண்டம்

இராமன் அயோத்திக்கு அரசனாக முடிசூடத் தேர்ந்தெடுக்கப்படுவதிலிருந்து அயோத்தியா காண்டம் தொடங்குகிறது. இதனால் இதற்கு அயோத்தியா காண்டம் என்று பெயர். அயோத்தியா காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது

நகர் நீங்கு படலம்

(தயரதன் பால் கைகேயி கொண்ட வரத்தால் இராமன் காட்டிற்குச் செல்ல அயோத்தி நகரை விட்டு நீங்கிச் செல்வதைச் சொல்லும் பகுதி ஆதலின் நகர் நீங்கு படலம் எனப் பெயர்பெற்றது. இனி, இராமன் காடு செல்லும்பொழுது அயோத்தி நகர மக்கள் அனைவரும் அவனுடனே சென்றதாகக் கூறுவதால் நகரமே நீங்குகிற படலம் என நயப்பொருள் உரைக்கவும் பெறும்.

கைகேயி வரத்தால் காடுசெல்லப் புக்க இராமன் தன் தாய் கோசலையிடம் விடைபெறச் செல்கிறான். செய்தி அறிந்த கோசலை வருத்தம் உற, அவளை இராமன் தேற்றுகிறான். வனத்திற்கு யானும் உடன் வருவேன்என்ற கோசலையைத் தடுத்துப் பேசுகிறான். பின்னர் இராமன் சுமித்திரை மாளிகைக்குச் செல்கிறான். கோசலை இராமன் வனம் புகுவதைத் தடுக்கத் தசரதன்பால் செல்கிறாள். தசரதன் சோகநிலை கண்டு கோசலை வருந்துகிறாள். கைகேயி மூலம் வஷிஸ்டன் நிகழ்ந்ததை அறிகிறான்.

தயரதனைத் தேற்றி, வஷிஸ்டன் கைகேயிக்கு அறிவுரை கூற, அவள் மறுத்து மொழிய, அவளைக் கடிந்து பேசுகிறான். தசரதன் கைகேயி என் தாரம் அல்லள், பரதன் உரிமைக்கு ஆகான் எனப் பேசுகிறான். தயரதன் மேலும் வருந்த, வஷிஸ்டன் அவனைத்தேற்றி அகல்கிறான். கணவன் நிலை கண்டு வருந்துகிற கோசலையிடம் தயரதன் தன் பழைய சாபவரலாற்றைக் கூறுகிறான். வஷிஸ்டன் அரசவை சேர்ந்து நிகழ்ந்தவற்றைக் கூறுகிறான். இராமன் காடு செல்வது கேட்டமக்கள் துயரம் அடைகிறார்கள். இலக்குவன் சீற்றம் அடைகிறான்; போர்க்கோலம் பூணுகிறான். இலக்குவனுடன் இராமன் உரையாடிச் சீற்றம் தணிக்கிறான். இருவரும் சுமித்திரை அரண்மனையை அடைகின்றனர். அங்கே கைகேயி மூலம் வந்த மரவுரியை இலக்குவன் பெற்றுத் தன் தாயை வணங்க, அவளும் அவனுக்கு அறிவுரை கூறுகிறாள். இராமன் தடுத்தும் வணங்க, அவளும் அவனுக்கு அறிவுரை கூறுகிறாள்.

இராமன் தடுத்தும் கேளாது இலக்குவன் உடன் புறப்படுகிறான். வஷிஸ்டன் இராமனைக் கான் ஏகாது தடுக்க முயல்கிறான். இராமன் மறுத்துப் புறப்படுகிறான். மக்கள் துயரம் மேலிடப் பெறுகிறார்கள் அரசன் தேவியர் அழுகிறார்கள், இராமன் தன் அரண்மனை செல்கிறான். இராமனைக் கண்டார் வருந்துகின்றனர். நகர் பொலிவழிகிறது. இராமன் சீதையைக் காண்கிறான். அவள் நடுக்கம் அடைகிறாள். செய்தி அறிந்த சீதை கானகத்துக்கு யானும் உடன்வருவேன் என்கிறாள். இராமன் தடுக்கவும் கேளாது மரவுரி உடுத்துப் புறப்படுகிறாள். இராமன்,சீதை, இலக்குவன் மூவரும் புறப்படுகிறார்கள், நகர மாந்தர் அனைவரும் இராமனைப் பின் தொடர்ந்து அயோத்தி நகரை நீங்கிக் காடு நோக்கிச் செல்கின்றனர்.

இராமன் தாயரைக் கும்பிட்டு மன்னனைத் தேற்றுமாறு கூறி, அவர்கள் ஆசி பெற்றுத் தம்பியோடும், மனைவியோடும் தேற் ஏறிச் செல்கிறான்.இச்செய்திகள் இப்படலத்துக்கண் கூறப்பெறுகின்றன.)

"இராமன் முடி சூட்டிக் கொண்டு வருவான்" என்று மனதில் மகிழ்ச்சியுடன் காத்துக் கொண்டு இருந்தாள் கோசலை. அவ்வாறு காத்திருந்த கோசலையின் முன்னாள் ராம பிரானும் வந்தார். ஆனால், முடி சூடி அல்ல, தான் காட்டுக்கு செல்லப் போகும் அந்தச் துயரச் செய்தியை சுமந்து கொண்டு அதை விட, அதனைத் தன் தாய் கோசலை எப்படி ஜீரணிக்கப் போகிறாளோ? என்றக் கவலையுடன் வந்து நின்றார்.

ராமனைக் கண்ட கோசலை மிகவும் மகிழ்ந்தாள், என்றாலும் ராமன் இன்னும் திருமுடிச் சூட்டிக் கொள்ளாத காரணத்தை எண்ணி வியந்தாள். அதனை ராமனிடமே கேட்டாள். , " ராமா, சக்கரவர்த்தி நினைத்த காரியம் என்னாவாயிற்று? நீ ஏன் இன்னும் முடி சூட்டிக் கொள்ளவில்லை? உனக்கு முடி சூட்ட தடை ஏதேனும் உண்டா ? சொல் மகனே!" என்று துடி துடித்துக் கேட்டாள்.

ஸ்ரீ ராமர், தாயின் வார்த்தைகளில் ஒளிந்து இருந்த அந்தத் துடிப்பை அறிந்தவராக தாய் கேட்டு மூர்ச்சை அடையாதவாறு, தாய்க்கு ஏதும் நேர்ந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் மெல்ல விஷயத்தை ஒன்றன், பின் ஒன்றாக கூறத் தொடங்கினார் . தாய் கோசலையை பார்த்து," தாயே! இப்போது தந்தையின் கட்டளைப் படி முடி சூடிக் கொள்ளப் போவது நான் அல்ல. தங்களது அன்பு மகனும், எனது ஆருயிர் தம்பியுமான குற்ற மற்ற பரதன் தான் முடி சூடப் போகிறான்!" என்று கூறிப் புன்னகை செய்தார் (ராமர்).

எல்லாப் புத்திரர்களையும் பாகு பாடு இல்லாமல் சரி சமமாகக் கருதுபவள் கோசலை, மகனின் பதிலைக் கேட்டு கோசலை ," இராமா, பரதன் முடி சூடப் போவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் தான். அவன் உன்னைக் காட்டிலும் நல்லவன் ஆயிற்றே! ஆனால், மூத்தவனிருக்க இளையவன் அரசாளுதல் ராஜ நீதி அல்ல, என்ற ஒரு குறை மாத்திரம் உண்டு. அதைத் தவிர பரதன் அரசை ஆள்வதில் எனக்கு வேறு குறை இல்லை. அவனும் என் மகன் தானே!" என்று கூறி முடித்தாள்.

பின்பு கோசலை இராமனிடம் மீண்டும் பேசத் தொடங்கினாள்," மகனே, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. அதனால், தந்தையின் கட்டளை சரியா? தவறா? என்று ஆராய்ச்சி செய்யாமல் மனம் மகிழ அதனை ஏற்றுக் கொள்வது தான் தருமம்" என்று கூறி முடித்தாள்.

அது கேட்ட ராமன்," தாயே! தந்தை இன்னொரு கட்டளையையும் பிறப்பித்து உள்ளார்" என்றார். "அது என்ன கட்டளை மகனே?" என்றாள் கோசலை. ராமன் பதில் கூறத் தொடங்கினார், " தாயே, தந்தை எனது நல் ஒழுக்கம் மேலும் சிறக்க, பதினான்கு ஆண்டுகள் கானகத்தில் நல்ல தவங்களைச் செய்து, புகழ் பெற்று கழித்த பிறகு, மீண்டும் அயோத்தியை திரும்பி வருமாறு பணித்துள்ளார்" என்றார்.

இராமபிரானின் வார்த்தைகளைக் கேட்ட கோசலை மனம் கலங்கினாள், துடித்துப் போனாள், வருந்தினாள், ஏங்கினாள், அழுதாள். பிறகு ராமனிடம்," மகனே! நீ இந்த நாட்டை ஆள்வாய் என்று மன்னர் சொன்ன வார்த்தை வஞ்சனையோ? உன்னைப் பிரிந்து நான் உயிர் வாழ்வேனோ?" என்றாள். பிறகு ராமரை சுமந்த பெற்ற வயிறை வளையல்கள் அணிந்த தனது கைகள் கொண்டு பிசைந்தாள். பித்துப் பிடித்தவள் போல," சக்கரவர்த்தியின், அருள் நன்றாய் இருக்கிறதே" என்று கூறிச் சிரித்தாள். பின்பு தான் வணங்கிய தெய்வங்களை நோக்கி ," தெய்வங்களே! என் உயிர் போகும் படி நான் கொண்ட தீவினை தான் என்ன?" என்று கூறிக் கன்றைப் பிரிந்த தாய்ப் பசுவைப் போல மனமுருகிக் கலங்கினாள்.

உண்மையில், தான் காடு செல்லவிருக்கும் துயரம் ராமனுக்கு துயரமாகவே தெரியவில்லை. ஆனால், தான் காடு செல்ல இருப்பதால் தனது தாய் படும் துயரம் தான் இப்போது ராமனுக்குப் பெரிதாகத் தெரிந்தது, உடனே தாயின் துயரை கரைக்க சித்தம் கொண்ட ராமன். தனது அன்புத் தாய் கோசலையை நோக்கி," தாயே,என்னை விடச் சிறந்த பரதன் நாடாளவும், நான் காடு சென்று தவம் புரிந்து பல நன்மைகளைப் பெறவுமே, தந்தை இவ்வாறு கட்டளை பிறப்பித்து இருக்கிறார். அவரின் கட்டளையை, தமையன் நான் மறுப்பது சரியோ?.ஆதலால், தாங்கள் மனம் வருந்தாமல், முக மலர்ச்சியுடன் நான் காடு செல்ல விடை கொடுங்கள். பதினான்கு வருடங்கள் என்பது கணப் பொழுதில் கரைந்து விடும். அத்துடன் நான் வன வாசம் முடித்து மீண்டும் அயோத்தியை திரும்புவேன் கவலை வேண்டாம்" என்று வாக்களித்தார் இராமபிரான்.

இது கேட்ட கோசலை இராமனிடம்," குழந்தாய் ! தந்தையின் கட்டளைப் படி போகாதே என்று நான் உன்னைத் தடுக்க மாட்டேன். ஆனால், உன்னை பிரிந்து நான் எப்படி இருப்பேன்? அதனால் என்னையும் உடன் அழைத்துச் செல் என்று தான் கூறிகிறேன்" என்று கண்களில் கண்ணீர் பெருக ராமனிடம் வேண்டினாள்.

அதற்கு ராமர் கோசலையிடம்," தாயே! என்னைப் பிரிந்து வாழும் தந்தைக்கு ஆறுதல் சொல்லவும், பணிவிடைகள் செய்யவும் உங்களை விட ஏற்ற துணை உண்டோ? அதை விடுத்து என்னுடன் தாங்கள் வரத் துடிப்பது தருமமோ?" என்று உரைத்தார்.

தன் மகன் கூறியதைக் கேட்ட கோசலை, ராமன் காட்டுக்கு செல்ல தீர்மானம் எடுத்து விட்டதை, அவன் வார்த்தைகளில் இருந்து நன்கு உணர்ந்தாள். ஆனாலும், மகனின் மீது இருந்த அந்தப் பாசப் பிணைப்பின் காரணமாக, மகனை கானகம் போகாமல் தடுக்க முடிவு செய்தாள், அதன் பொருட்டு," பரதனே நாட்டை ஆண்டு கொண்டு போகட்டும், ஆனால் ராமனை கானகம் செல்ல விடமாட்டேன்" என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவளாக, தசரதச் சக்கரவர்த்தி இருக்கும் இடம் தேடிச் சென்றாள் கோசலை.

அப்படி மன்னரைத் தேடித் போனவள், இறுதில் கைகேயியின் அரண்மனையில், மூர்ச்சித்துக் கிடந்த தனது காவலனைப் பார்த்தாள். அந்த கணத்தில் உயிர் பிரிந்து போகும் போது உடல் விழுந்தது போல அறிவு மயங்கி அவளும் விழுந்தாள். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த கோசலை பித்துப் பிடித்தவள் போலப் புலம்பினாள். பின்பு தசரதரைப் பார்த்து, "எல்லோரிலும் சிறந்தவரே, இது உமக்குத் தகுமோ? நீதியோ?. இராமன் உலகத்துக்கு உயிர் போன்றவன் ஆயிற்றே. அவன் காட்டுக்குச் சென்றால், அயோத்தியை அழிவடைந்து அல்லவா போகும்? நீங்கள் செய்த இக்காரியம் அருள் கொண்டு செய்ததோ? இல்லை அருள் கொண்டார் இக்காரியத்தை என்ன சொல்வர்? அருளுக்கு இருப்பிடமனாவரே! அந்த அருள் இதுதானோ?" என்று பலவாறு அழுது துடித்தாள் கோசலை.

ஆனால், தசரதர் பேச்சு மூச்சு இல்லாமல், பிணம் போலக் கிடந்தார். ஆனால், அவர் பிணமாக இன்னும் சில நாழிகைகள் இருந்ததால், காலன் அவர் காலடியில் காத்துக் கொண்டு இருந்தான். மன்னரின் இந்நிலை கண்ட கோசலை அலறித் துடித்தாள், இராமனை அழைத்தால்," மகனே சக்கரவர்த்தியின் நிலை காண வாராய்!" என்றாள்.

கோசலையின் கூக்குரலிடும் அந்த அவல ஒலி, பட்டாபிஷேக மண்டபம் வரைக் கேட்டது. அங்கு திரண்டு இருந்த அரசர்கள், மக்கள், முனிவர்கள் என எல்லோரது காதுகளையும் அது எட்டியது. " மங்களகரமான இந்த வேலையில்,ஏன் இந்த அமங்கலகரமான கூக்குரல்?" காரணம் தெரியாமல் தவித்தனர் மண்டபத்தில் திரண்டு நின்ற மக்கள். உடனே, நடப்பதை அறிந்து கொள்ள, இனி நடக்கப் போவதை தெரிந்து கொள்ள, முனிவர்களில் சிறந்த வசிஷ்டரிடம் இது பற்றிக் கேட்டனர் மக்கள். வஷிஸ்டர் அம்மக்களை சமாதானப் படுத்தினார், கூக்குரல் வந்த இடமான கைகேயியின் மாளிகை நோக்கி விரைந்தார் .அங்கு மன்னரின் நிலை கண்டு அஞ்சினார். மன்னர் இது வரை இறக்க வில்லை.ஆனால், இனி பிழைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து கொண்டார் வஷிஸ்டர்.

அருகே கோசலை அழுது புலம்பிக் கொண்டு இருந்தாள், அது கண்ட வஷிஸ்டருக்கு ஏதோ நடக்கக் கூடாதது ஆனால் அது இப்போது நன்றாக நடந்து உள்ளது என்பது மட்டும் புரிந்தது. ஆனால், என்ன நடந்தது என்பதை கூறும் நிலையில் கோசலையும் இல்லை, (மயங்கிய நிலையில் கிடந்த) தசரதரும் இல்லை. ஆனால், கைகேயி மட்டும் அருகில் எந்த வித உணர்வுகளும் இல்லாமல் நின்று இருப்பதைக் கண்டார் வஷிஸ்டர். அவளிடம் நடந்ததை விசாரித்தார், கைகேயி கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் நடந்த எல்லா விவரத்தையும் சொன்னாள். அதைக் கேட்ட வஷிஸ்டர் தான் செய்ய வேண்டியவற்றை ஒருவாறு உணர்ந்தார்.

பின்னர் மயங்கிக் கிடந்த தசரதர் முகத்தில் குளிர்ந்த கமண்டலத் தண்ணீரை தெரித்தார் வஷிஸ்டர் . பின்னர், காற்று வரும் படி நன்றாக வீசினார். அதனால் தசரதர் சற்று மயக்கம் தெளிந்தார். வஷிஸ்டரைக் கண்ட தசரதர் தன் நிலை சொல்லி வருந்தினார். அது கேட்ட வஷிஸ்டர்," கவலைப் பாடாதீர்கள் அரசே, ராமன் காட்டுக்குப் போகாமல் தடுத்து விடலாம். நான் கைகேயியி அம்மையாரிடம் பேசுகிறேன்" என்று தசரதரை சமாதனப்படுத்தினார்.

பிறகு கைகேயியின் கொடிய எண்ணம் உணராத வஷிஸ்டர் அவளை நோக்கி "அம்மா நீங்கள் இராமருக்கு அரசைத் தந்து அவரைக் காட்டுக்குச் செல்லா வண்ணம் செய்தால், அதனால் இந்த உலகத்திற்கு ஒளி தந்தவர் ஆவீர்கள். பழியும் உங்களை வந்து சேராது. மன்னரும் உயிர் பெறுவார். ஆகாவே, செய்த தீச் செயலை விட்டு புகழ் பெரும் செயலைச் செய்யுங்கள்" என்றார்.

அது கேட்ட கைகேயி பதில் எதுவும் கூறாமல் வஷிஸ்டரை தனது அலட்சியம் கொண்ட பார்வையால் பார்த்தாள், " நீ ஒரு முனிவன்,நானோ ஒரு ராணி, நீ என்ன சொல்வது? நான் என்ன கேட்பது" என்ற அவளது பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்டார் வஷிஸ்டர். கைகேயியின் அந்த அலட்சிய பார்வையும், மௌனமும் வசிஷ்ட மாமுனிவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது." கணவரின் உயிர் போகும் இந்தத் துன்பத்தையும் நினைக்காமல் நிற்கிறாயே? உனது மனம் என்ன கல்லா? உன் நினைவுகள் யாவும் நஞ்சா? அல்லது நீ தான் ஒரு மானிடப் பெண்ணா? இல்லை , பேயோ?கொடுமை செய்யும் இயல்பு கொண்டவளே, உனக்கு வந்த பழிச் சொல் இனி தீரப் போவதே இல்லை. ராமனை , காட்டுக்குப் போ, என்று தசரதர் தனது வாய் திறந்து சொல்லவில்லை. ஆனால் நீயோ மன்னர் சொன்னதாக சொல்லிவிட்டாய். இதோ, ராமனும் கானகம் செல்லத் தயார் ஆகிவிட்டான். இனி அவன் நிற்கப் போவதில்லை. மன்னரோ,ராமனின் பிரிவாள் அமர லோகம் அடையப் போகிறார். ஆனால் ,நீயும், உன் மகன் பரதனும் வாழ்நாள் முழுக்க பழியைச் சுமந்து கொண்டுதான் வாழப் போகின்றீர்கள்" என்று மேலும் சினங் கொண்டு உரைத்தார்.

குற்றமற்ற முனிவர் சொன்னதைக் கேட்டு தசரதரும் வருந்தினார். அவரும் கைகேயியை கடிந்து கொண்டார். பிறகு தன் அருகே, தன் நிலை கண்டு அழும் கோசலையிடம் தழு தழுத்த குரலில்," கோசலை! "காட்டுக்குச் செல்கிறேன் என்று சொன்னால் நான் எப்படி வருந்துவேனோ? என்று என்னிடம் சொல்லாமலேயே காட்டுக்குப் புறப்பட்ட இராமன், உன்னிடமாவது சொன்னானா?" என்று கேட்டார்.

தசரதர், தன்னை அப்படிக் கேட்ட பின்பே, தான் அவரிடம் நியாயம் கேட்டு வந்த அந்தக் காரணத்தை கூறினாள் கோசலை. அது கேட்ட தசரதர் வருந்தியவராக," கொடுக்கக் கூடாத நேரத்தில், கொடுக்கக் கூடாத இடத்தில், தகுதி இல்லாத ஒருத்திக்கு நான் கொடுத்த அந்த இரு வரங்கள், அது என்னை கட்டிப் போட்டு விட்டது கோசலை" என்று அழுது கூறினார்.

அது கேட்ட கோசலை, அவர் நிலை அறிந்து கொண்டு. மன்னர் மீது எந்தத் தவறும் இல்லை, என்பதைப் புரிந்து கொண்டார். இதற்குப் பிறகும், அவரை கொடுத்த வரத்தை திரும்பப் பெரும் படி சொல்ல அவளுக்குத் துணிவு இல்லை. மாறாக கோசலை தனது கணவரைப் பார்த்து," அன்பு மணாளரே! எந்த நிலையிலும் கொடுத்த வாக்கையும், சத்தியத்தையும் காக்கத் தவறாதீர்கள். நம் மகன், ராமன் அவனை பார்த்துக் கொள்வான், கவலை வேண்டாம்" என்றாள்.

கோசலையின் அந்த வார்த்தைகளில் கூடத் துயரம் சிலந்தி வலையாகக் காணப்பட்டது. ஒரு புறம் மகன் காடு செல்வதால் கணவரின் உயிர் போகுமே என்ற வருத்தம், மறுபக்கம் மகன் காடு செல்லாவிட்டால் கணவரின் புகழுக்கு பங்கம் வருமே என்ற சத்திய நேர்மையும் கோசலையை வாணலியில் போட்ட பச்சிலையாக வருத்தி, அவள் உள்ளத்தைக் கசக்கியது. அந்த இரண்டு வேதனைகளுக்கும் நடுவில் அகப்பட்ட அவளுடைய மனத்துயரை விளக்க வார்த்தைகள் இல்லை.

கோசலை கூறிய வார்த்தைகளில் இருந்து," இராமன் இனி காட்டுக்குச் செல்வானேயன்றி முடி சூட்டிக் கொள்ள மாட்டான்" என்பதை தசரதர் நன்கு புரிந்து கொண்டார். அப்போது ராமரின் உருவெளித் தோற்றம் அவரது கண்களுக்கு முன்பாகத் தெரிந்தது உடனே அவர்,"ராமா நான் உன்னை காட்டுக்கு அனுப்பி விட்டு இந்தக் கைகேயியின் முகத்தில் விழித்தபடி இந்த நாட்டில் உயிர் வாழ்வேனோ? அப்படி நான் வாழ நேர்ந்தால் இந்த உலகத்தில் என்னை விடக் கொடியவன் தான் உள்ளானோ?" என்றார். அப்போது இத்தனைக் கொடுமைக்கும் காரணமான கைகேயியின் நினைவு அவருக்கு வந்தது. அந்த நினைவே பெரும் கசப்பாக அவருக்கு இருந்தது. கசப்பை நெஞ்சம் தனில் வைத்து, மீண்டும் கைகேயியை பழித்துக் கூறினார்.

பின்னர் கோசலையை நோக்கி," கோசலை இராமன் காட்டுக்குப் போகாமல் இருக்க மாட்டான். அதனால் என் உயிரும் போகாமல் இருக்காது. இது எதனால் நேர்ந்தது தெரியுமா? அதைச் சொல்கிறேன் கேள். எனக்கு முன்பு ஒரு முனிவர் இட்ட சாபம் உண்டு!" என்று கூறியவர் தான் பெற்ற அந்த சாப வரலாற்றை கூறத் தொடங்கினார்.

கோசலை," முன்னொரு காலத்தில் எனக்கு வேட்டை ஆடுவது என்றால் மிகவும் விருப்பமான செயல், அடிக்கடி வேட்டை ஆட கானகம் செல்வேன். அப்படி செல்லும் போது ஒருநாள், காட்டில் வில்லும்,கையுமாக வெகு நேரம் அலைந்தேன். அலைந்தும் கூட எந்த மிருகமும் கண்ணில் அகப்படவில்லை. அப்போது, ஒரு நீர் நிலையை அடைந்தேன், நிச்சயம் இங்கு ஏதேனும் ஒரு மிருகம் தண்ணீர் பருக வரும் என்று என் மனதில் பட்டது. நான், அங்கு ஒரு மரத்தின் அருகில் மறைந்து கொண்டேன். இல்லை ...எனது ஊழ்வினை என்னை மறையச் சொல்லித் தூண்டியது. கையில் இருந்த வில்லை நாணேற்றியபடி வெகு நேரம் தயாராக அவ்விடத்தில் காத்துக் கொண்டு இருந்தேன். அப்போது, அந்த நீர் நிலையை அடைந்தான் ஒரு முனி குமாரன், கண்கள் இல்லாத தனது தாய் தந்தைக்கு தண்ணீர் எடுத்துச் செல்லவே அவன் அவ்விடம் வந்து சேர்ந்தான். வந்தவன் அந்த நீர் நிலையில் தனது கையில் இருந்த குடத்தைப் பயன் படுத்தி நீர் எடுத்தான். தண்ணீர் குடத்துக்குள் போன சத்தத்தை வைத்து, ஏதோ யானை தான் தண்ணீர் குடித்துக் கொண்டு இருப்பதாகத் தவறாக நினைத்தேன். தனுர் வேதம் கற்ற ஆணவத்தில், உடனே சப்தவேதி என்னும் பானத்தைப் பிரயோகித்து, தண்ணீர் எடுக்கும் ஓசை எழுந்த இடம் நோக்கி பிரயோகித்தேன். சில கணங்களில்," அய்யோ தாயே" என்ற ஒரு குரல். அப்போது தான் தெரிந்து கொண்டேன். தண்ணீர், எடுக்க வந்தது மிருகம் அல்ல, அது ஒரு பால குமாரன் என்று. உடனே, அவ்விடம் சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த முனிகுமாரனைக் கண்டு துடித்தேன்.பிறகு அவனை நோக்கி, " நீ யார்?" என்று கேட்டேன்.அவன் தனது கதையைக் கூறத் தொடங்கினான்."என்னுடைய தந்தையார் பிரமனது வழியில் தோன்றிய காசியபரது புதல்வராகிய விருத்தசேனன் என்பவருடைய குமாரராகிய சலபோசனன் என்பவர். என் பெயர் சுரோசனன்." தான் யார் என்று கூறிய முனி குமாரன் நான் செய்ய வேண்டிய செயலையும் என்னிடம் கண்ணீர் பெருக வேண்டிச் சொன்னான். "மாமன்னா! எனது பெற்றோர்கள் நீர் வேட்கையால் மிகவும் வருந்திக் கொண்டு இருப்பார்கள். அவர்களுக்குக் குளிர்ந்த நீரைக் கொண்டு போய்க் கொடுங்கள். அப்படியே, அவர்களிடம் எனது மரணத்தையும் சொல்லி," உமது புத்திரன் தேவலோகத்துக்கு உம்மை வணங்கிய படி போய்ச் சேர்ந்தான்" என்று கூறுங்கள்" என்றான். சற்று நேரத்தில் அவன் மாண்டான். அவனது விருப்பப்படியே, தண்ணீரை மொண்டு , அப்படியே அவன் பூத உடலையும் சுமந்து கொண்டு நான் அவன் பெற்றோர்கள் இருப்பிடம் சேர்ந்தேன். என் கால் அடி ஓசையைக் கேட்ட அவன் பெற்றோர்கள், தன் குமாரன் தான் வந்து இருக்கிறான் என்று நினைத்து "குமாரனே! சென்று வெகு நேரம் கழிந்ததால், உனக்கு என்ன தீங்கு ஏற்பட்டதோ என்று மனம் வருந்தினோம். எங்களைத் தழுவிக் கொள்!" என்றார்கள். அது கண்டு மிகவும் வேதனை அடைந்த நான், என்னைப் பற்றிய அறிமுகத்துடன் நடந்த உண்மை முழுவதையும் உள்ளபடி அவர்களிடம் எடுத்துக் கூறினேன். மேலும், இக்காரியம் நான் அறிந்து செய்யவில்லை என்பதையும் கூறி அவர்களின் பாதத்தில் விழுந்து மன்றாடினேன். ஆனால் மகன் இறந்தான் என்பதை அறிந்த அந்த கண் தெரியாத வயோதிகத் தம்பதிகள் இருவரும் கீழே விழுந்து, அழுந்து புரண்டார்கள்." இன்றைக்குத் தான் உண்மையிலேயே கண்கள் தெரியாமல் போயின" என்று மகனை நினைத்துக் கதறினார்கள். பின்னர், மகனை நோக்கி மகனே நாங்களும் உம்மிடத்தில் வந்து சேர்கிறோம் என்றனர். அப்போது அவர்களைத் தடுத்து "தாயே நானே உங்கள் மகனின் இடத்தில் இருந்து உங்களை கவனித்துக் கொள்கிறேன். நானே இன்று முதல் உங்கள் இருவரின் புதல்வன். உங்கள் மகன் உங்களுக்கு செய்யும் பணிவிடைகளை நான் இனி கவனித்துக் கொள்கிறேன். ஆதலால், சிறிதும் மனச் சோர்வு அடைந்து வருந்தாதீர்கள். புத்திர சோகத்தை மறந்து விடுங்கள்! " என்று சொன்னேன். அது கேட்ட அந்த தம்பதியர்கள் வெகுண்டனர்," வலிய வில்லேந்தியவனே! கேள்! கட்டளை இடாமலே குறிப்பறிந்து பணிவிடை செய்பவன் என் மகன். நீ, எனது மகனுக்கு சமமாக முடியுமா? இல்லை எங்கள் மகன் போன பிறகு நாங்கள் தான் இந்த மண்ணில் வாழ்வோம் என்று நினைத்தீரோ? இப்போது நாங்கள் இருவரும் எப்படி புத்திர சோகத்தால் சிறிது சிறிதாக மகனைப் பிரிந்து மாண்டு கொண்டு இருக்கிறோமோ, அது போலவே நீயும், உனது மகனைப் பிரிந்து புத்திர சோகத்தால் இறப்பாய்" என்று கூறிய கணமே அந்த இருவரும் வேதனை தாங்காமல் இறந்தனர். மூவரது மரணத்துக்கும் காரணமான நான். அவர்களுக்கு செய்ய வேண்டிய கருமங்களை, வனத்திலேயே செய்து முடித்தேன். " மாசு இல்லாத சூரிய குலத்தில் பிறந்த நான் இப்படிப் பட்ட ஒரு பெரும் பாதகத்தை செய்து விட்டேனே! " என்று வருந்தினேன். ஆனால், அவர்களது சாபத்திலும் மறைந்து இருந்த வரம் கண்டு மகிழ்ந்தேன். ஆம், கோசலை, அவர்கள் கொடுத்த சாபத்தின் படி வெகு காலமாக பிள்ளை இல்லாத எனக்கு, இனிய மழலை மொழி பேசும் மகன் பிறக்கப் போகிறான் என்று அக மகிழ்ந்தேன். அப்போது, வந்த அந்தப் பெரும் மகிழ்ச்சியில், அவர்கள் எனக்குக் கொடுத்த சாபத்தைப் பற்றி எனக்கு நினைக்கத் தோன்றவில்லை கோசலை. ஆனால், இன்று நான் செய்த அந்த பாபத்தின் பலனை அறுவடை செய்யும் போது தான் அன்று அவர்கள் பட்ட அந்த வலி எனக்குப் புரிகிறது" என்றான் தசரதன்.

தசரத சக்கரவர்த்தியின் சாப வரலாற்றைக் கேட்ட கோசலையும், குல குருவான வஷிஸ்டரும் மிகுந்த துக்கம் அடைந்தார்கள். கோசலை, இது கேட்டு இனி நடக்கப் போவது என்ன? என்பதயும் நன்கு உணர்ந்து கொண்டாள்." ராமன் நிச்சயம் காட்டுக்கு செல்லப் போகிறான், அந்தத் துயரம் தாங்காமல் சக்கரவர்த்தி இறக்கப் போகிறார். நல்ல குணம் கொண்ட பரதன், ஒரு போதும் இந்த இராஜியத்தை ஏற்க மாட்டான். அப்போது அயோத்தியின் எதிர்காலாம்?" இது பற்றி நினைக்கும் போதே கோசலைக்கு தலை சுற்றியது. எனினும், தன் உணர்வுகளை வெளிக் காட்டிக் கொள்ளாமல், மன்னரின் முன்பு தன்னை மிகவும் தைரியமான பெண்மணியாகக் காட்டிக் கொண்டாள்.

மறுபுறம் வஷிஸ்டர், அவ்விடம் விட்டு முடி சூட்டு மண்டபத்திற்கு வந்தார். அங்கு திரண்டு இருந்த மக்கள் அனைவரும் வஷிஸ்டர் என்ன சொல்லப் போகிறாரோ? என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தார்கள். வஷிஸ்டர் வாய் மொழிந்தார், நிலைமையை மக்களுக்கு எடுத்துச் சொன்னார். கைகேயி பெற்றுக் கேட்ட அந்த இரு வரங்கள் உட்பட, இப்போது ராமர் வனவாசம் போகும் வரை அனைத்து விவரங்களையும் உள்ளதை, உள்ளபடி அங்கு இருந்த மக்களிடமும், முனிவர்களிடமும், நட்பு ராஜ்யத்தை சேர்ந்த அரசர்களிடமும் பகிர்ந்து கொண்டார். அது கேட்ட அனைவரும் கார்மேகம் போல கண்ணீர் சிந்தினர், மனம் கசந்தனர். சிலர், தசரதரைப் போலவே மயங்கி விழுந்தனர். பின்பு மயக்கம் தெளிந்தனர். மீண்டும் பலர் அழுதனர், அந்த அழுகுரல் தேவ லோகத்தையே எட்டியது. அது கண்ட தேவர்களும் அழுதனர். அயோத்தியின் மிருகங்கள், பறவைகள் கூட இராமனைப் போன்ற ஒரு உத்தமன், வனவாசம் போகிறானே என்று நினைதத்தோ, என்னமோ?. அவை நின்று இருந்த கோலமும் கூட சோக மயமாகத் தான் இருந்தது.

" சக்கரவர்த்தி கைகேயியின் மேல் கொண்ட காதலால் மனம் மயங்கி வரங் கொடுத்து உள்ளார். ஆனால், அது பற்றி நமக்கு அவசியம் இல்லை, நாம் அனைவரும் செய்ய வேண்டியது யாதெனில் , நாமும் ஸ்ரீ ராமருடன் கொடிய காட்டை அடைவோம்! ஒரு வேளை அந்த வாய்ப்பு நமக்குத் தரப்படாவிட்டால் நாம் அனைவரும் தீ புகுவோம். ராமன் இல்லாத அயோத்தியை, தண்ணீர் இல்லாத ஆறு போன்றது நமக்கு இனி இங்கு என்ன வேலை" என்றனர் மக்களில் சிலர். இன்னும் சில மக்கள்," மேற்கொண்டு அக் கூற்றை ஆமோதித்துப் பேசினார்கள். பரதனையும், கைகேயியையும் இகழ்ந்தனர். மக்களே இல்லாவிட்டால், பரதன் யாரைக் கொண்டு ஆட்சி புரிவான்? வாருங்கள் யாவரும் இராமனுடன் வனம் புகுவோம் " என்றார்கள் அயோத்தியின் மூத்த குடிமக்களில் சிலர். இன்னும் சில நீதி அரசர்கள், உலகம் முழுவதும் உடையவர் இராமரே தான்! ஒருவருக்குக் கொடுத்த பொருளை வேறு ஒருவருக்குக் கொடுத்தல் முறை ஆகாது என்று தரும சாஸ்த்திரம் கூறுகிறது. அதை அறிந்த மன்னர் இரமாருக்குக் கொடுத்த இராஜியத்தை கைகேயிக்கு எப்படிக் கொடுக்கலாம்? இந்தக் கொடையில் ஒருவருக்குக் கொடுத்ததை திரும்பப் பெற்று இன்னொருவருக்குக் கொடுத்தலும், மூத்தவனுக்கு உரியதை இளையவனுக்குக் கொடுத்தலும் ஆகிய இரண்டு குற்றங்கள் உள்ளதே!" என்றனர்.

அயோத்தி மக்கள் இவ்வாறு பல்வேறு விதமான கருத்துக்களை முன் மொழிந்து கொண்டு இருந்தனர். அச்சமயத்தில் இராமன், தனது சிறிய தாய் சும்மித்திரையிடம் தான் கானகம் செல்ல விடை பெறச் சென்று இருந்தான். மறுபுறம் இளைய பெருமாளான லக்ஷ்மணன் தனது உயிருக்கு உயிரான தமையன் ஸ்ரீ ராமரை முடி சூடாமல் செய்து காட்டுக்குப் போகச் சொன்ன கைகேயியின் செயலை அறிந்தான். அந்த கணத்தில் பிரளய காலத்து அக்னி போல வெகுண்டு எழுந்தான். தீப் பொறி கக்கும் கண்களுடன், தனது ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, "சிங்கக் குட்டி உண்ண வேண்டிய இனிய சுவை உள்ள மாமிசத்தை கொடிய சிறு நாய் குட்டியை உண்பிக்க கொடுத்த கைகேயியே உன்னை விட்டேனா பார்" எனக் கிளம்பினான். போர் கோலம் கொண்ட அவன் அயோத்தியின் தெருக்கள் வழியாக கைகேயியின் மாளிகை நோக்கி நடந்த போது, அவனின் விரைந்த நடையின் காரணமாக, லக்ஷ்மணன் அணிந்து இருந்த அந்த வீரக் கழல்களின் பெறும் ஒலி, விண்ணை எட்டியது. பிரளய காலம் தான் வந்து விட்டதோ என்று பிராணிகளும் அந்த நடையின் ஒலி கேட்டு பயந்தன.

அப்போது இராமர் சுமித்திரா தேவியிடம் பேசிக் கொண்டு இருந்தார். அவருக்கு லக்ஷ்மணன் நகரின் நடுவே திரிந்து கொண்டு செய்த நாண் ஒலி கேட்டது. உடனே அவர் தம்பியின் சினத்தைத் தணிக்க விரும்பி, அவனிருந்த இடத்துக்கு இனிய சொற்களை சொல்லிக் கொண்டு விரைந்து வந்தார். தம்பியை நோக்கி," லக்ஷ்மணா! எனது விருப்பத்தை உணர்ந்து செயல்படும் நீயா இப்படி நடக்கிறாய்? என் விருப்பம் இல்லாமல் நீ தனியாக சிறிது சினம் கொண்டதைக் கூட நான் எப்போதும் பார்த்தது இல்லையே! அப்படிப்பட்ட நீ, இப்போது பெருங் கோபத்துடன் போர்க் கோலம் பூண்டு வந்ததன் காரணம் என்ன?" என்று சாந்தம் தவழக் கேட்டார்.

அதற்கு லக்ஷ்மணன், " அண்ணா! உங்களுக்கு முடி சூட்டுகிறேன் என்று சொன்ன சக்கரவர்த்தியை, அது செய்யாது தடுத்து, நமது சிற்றன்னை கைகேயி சத்தியத்தை அழித்து விட்டாள். நான் அந்த சத்தியத்திற்கு உயிர் கொடுக்கப் போகிறேன். ஆம், அண்ணா! நானே உங்களுக்கு முடிசூட்டப் போகிறேன். இதனை யார் தடுப்பார்கள் நான் பார்க்கிறேன்" என்றான்.

அது கேட்ட இராமர்," அப்பா லக்ஷ்மணா! உனது அறிவு, நீதி முறை தவறாத நன்னெறியில் செல்லக் கூடியது. அப்படி இருக்க, தருமத்துக்கு கேடு உண்டாகும் படி நீதி முறைக்கு மாறாக உன் மனத்திலே இப்போது எப்படிக் கோபம் பிறந்தது?" என்று கேட்டார். அதற்கு லக்ஷ்மணன்," உங்களுக்குக் கொடுத்த இராஜியத்தை, பின்பு இல்லை என்று சக்கரவர்த்தியை சொல்லும்படிச் செய்த கைகேயியின் செயல் மட்டும் வெகு நன்றோ?" என்றான். அதற்கு இராமபிரான்," இராஜியத்தை ஆள முதலில் நான் ஒப்புக் கொண்டேன். அந்த என் தவறால் தான் நீ இப்போது கோபம் கொண்டு நிற்கிறாய். அப்படிக் குற்றம் செய்தவரைத் தண்டிப்பதானால் , என்னையே முதலில் நீ தண்டிக்க வேண்டும். அது மட்டும் அல்ல, இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்பது விதியின் செயல், விதியை யாரால் தான் வெல்ல முடியும். விதி வலியது. அதன் காரணமாகத் தான் நான் இப்போது கானகம் செல்ல நேர்ந்தது. மற்றபடி, தந்தை, தாயிடம் ஒரு குற்றத்தையும் நான் காணவில்லை. அது போல,நீ கோபம் கொண்டும், இனி நடப்பதற்கு ஒன்றும் இல்லை. மேலும் தம்பி, நான் தரும சாஸ்திரத்துக்குக் கட்டுப் பட்டு நடப்பவன். ஆதலால்,தந்தை, அன்னைக்கு கொடுத்த வாக்கை நான் மீறப் போவது இல்லை. நான் கானகம் புகுவது, புகுவதே" என்றார்.

இராமபிரான் மொழிந்த மொழிகள் லக்ஷ்மணன் நெஞ்சிலே ஆழப் பதிந்தன. அவன் சிந்தித்துப் பார்த்தான். தன் கோபம் வீணானது என்பதை நன்கு புரிந்து கொண்டான். அக்கணமே, தமையனின் கட்டளையைக் கேட்டு கோபத்தை விடுத்தான். பின்பு அரியும், சிவனும் சேர்ந்தாற் போல லக்ஷ்மணனை அணைத்தபடி அழைத்துச் சென்ற ராம சந்திர மூர்த்தி, அன்னை சுமத்திராதேவியின் மாளிகையை அடைந்தார். சுமித்திரை ராமன் கானகம் செல்லப் போவதை நினைத்து மிகவும் வருந்தினாள், தனது சிறிய தாயின் நிலை கண்ட ராமன், "தாயே! நம்முடைய அரசரைச் சத்திய சீலராக ஆக்க வேண்டுவது நமது கடமை. ஆகவே, காடு சென்று கழிக்க வேண்டிய நாளை ஒரு நொடி போல் கழித்து விட்டுத் திரும்பி வருவேன். வருந்தாதீர்கள்" என்று ஆறுதல் கூறினான்.

அச்சமயத்தில் கைகேயியின் தோழிப் பெண்கள்,கைகேயி கொடுத்து அனுப்பிய மரவுரி உடன் இராமன் முன், வருத்தத்துடன் வந்து நின்றார்கள். அவர்கள் இராமரைப் பார்த்து,"இறைவா! கொடிய நெஞ்சம் கொண்ட கைகேயி தந்த மரவுரியைக் கொண்டு வந்துள்ளோம்!" என்றார்கள். உடனே லக்ஷ்மணன் ஆறாத்துயர் உடன்," பணிப் பெண்களே! கைகேயி தேவியார் கொடுத்தவை அனைத்தையும் பொறுமையோடு அணியப் பிறந்த ஸ்ரீ ராமபிரான் இதோ நிற்கிறார். அவற்றை வில்லுடன் இருந்தே பார்க்கப் பிறந்த நானும் நிற்கின்றேன். அவற்றைக் காட்டுங்கள்!" என்றான். அவர்கள் காட்ட அவற்றை அன்புடன் பெற்றுக் கொண்டான் லக்ஷ்மணன். பின்பு தமையனுடன் தானும் காடு செல்ல தாயிடம் விடை கேட்டு நிற்க. சுமித்திரையும் அதற்கு சம்மதம் கொடுத்தாள். அத்துடன் சுமித்திரை லக்ஷ்மணனைப் பார்த்து " லக்ஷ்மணா உன் பணி, ராமனுக்கு பணி செய்து கிடப்பதே. இனி உனது தாயும், தந்தையும் இந்த ராமனும், சீதையும் தான். மேலும், வனத்தில் ஒரு வேளை இராமனுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் உனது உயிரைக் கொடுத்து அதனை தடுத்து நிறுத்து, அதன்படி அவன் உயிர் போகும் முன், நீ உன் உயிரைக் கொடுத்து விடு " என்றாள்.

பிறகு தனது தாய் சுமித்திரா தேவியின் வார்த்தைகளைக் கேட்ட லக்ஷ்மணன், தானும் ஆபரணங்களையும், பட்டாடைகளையும் துறந்து மரவுரி தரித்து , தனது ஆயுதங்கள் தாங்கி ராமனைப் பின் தொடர்ந்தார். இராமன் லக்ஷ்மணனிடம்"தம்பி கானகம் செல்வது எனக்கு மட்டுமே விதிக்கப் பட்டு உள்ளது" எனக் கூறி தடுத்துப் பார்த்தார். ஆனால், லக்ஷ்மணன் அண்ணனிடம், உடன் கானகம் வரும் இந்த ஒரு வரத்தை தனக்குத் தரும் படி கண்ணீர் மல்க வேண்டினான்.தம்பி லக்ஷ்மணன் தன் மீது கொண்ட பாசத்தை நினைத்து ஸ்ரீ ராமர் திகைத்து நின்றார்.தன்னாலும் லக்ஷ்மணனைப் பிரிந்து இருக்க முடியாது, அதனால் லக்ஷ்மணன் விருப்பப்படியே தன் கண்கொண்டு உடன் வருமாறு பணித்தார் ராமர். அது படி, குறிப்பறிந்து பின்தொடர்ந்தான் லக்ஷ்மணன்.

அப்போது அச்சமயத்தில் அங்கு வந்தார் வசிஷ்ட மாமுனிவர். மரவுரி தரித்த அந்த சகோதரர்கள் நடந்து வந்த காட்சியைக் கண்டார். கண்ட மாத்திரத்தில் மிகவும் மனம் வருந்தினார். ஆனால், எல்லாம் கை மீறி போய் விட்ட நிலையில், இனி என்ன சொல்ல?. ஜோதிடர்கள் ஜாதகம் பார்த்துக் கணித்துக் கொடுத்த அதே வேளையில், அதே லக்னத்தில் ராமர், கானகம் நோக்கி நடக்கப் போவது குறித்து ஊழ்வினையை நொந்தார் வஷிஸ்டர் பெருமான். அவர் எவ்வளவு தடுத்துப் பார்த்தும் சத்ய சீலனான இராமபிரானை வனப் பிரவேசத்தில் இருந்து தடுக்க அவராலும் முடியவில்லை. வஷிஸ்டரை வணங்கி விடை பெற்றுக் கொண்ட ராமர். இறுதியாக தனது மாளிகைக்கு சென்று சீதா தேவியிடமும் விடை பெறச் சென்றார்.

ராமனின் பாதுகை ஒலி கேட்ட சீதை, விஷயம் அறியாது ஓடி வந்தாள். ராமனையும், உடன் லக்ஷ்மணனையும் மரவுரி தரித்த கோலத்தில் கண்ட சீதைக்கு ஒன்றும் புரியவில்லை. இராமானை நோக்கினாள், அவள் பார்வையின் அர்த்தம் புரிந்த ராமன் அவளிடம்," சீதா! பரதன் நாட்டை ஆள, நான் பதினான்கு ஆண்டுகள் காடு சென்று அதனைக் கண்டு இங்கே திரும்பி வருவேன். நீ வருத்தப்படாதே!" என்றார். கணவரின் மொழி கேட்ட சீதை வருந்தினாள். கணவன் அரசாளவில்லையே என்றில்லை. தன்னை விட்டு பதினான்கு ஆண்டுகள் நீங்குவேன் என்று சொன்னதால் தான் அவள் வருந்தினாள். ஆம், எந்த நிலையிலும் கணவனை விட்டுப் பிரியாதிருப்பது அல்லவா கற்புடைய பெண்களுக்கு அழகு!

பிறகு கணவனிடம் சீதை," தலைவா ! என்ன காரணத்திற்க்காக என்னை அழைத்துச் செல்லாமல் நீங்கள் மட்டும் கிளம்பி விட்டீர்கள்" என்றாள். ராமன் மறுமொழியாக," சீதா, நீ மிகவும் மென்மை ஆனவள், காடோ சுடும். கொடிய விலங்குகள் நடமாடும். அதனால் தான் உன்னை அழைத்துச் செல்லாமல் நான் மட்டும் தம்பியுடன் செல்ல சித்தம் கொண்டேன்" என்று கூறி முடித்தார். அதற்கு சீதை," என் பாதங்களைக் காடு சுடும் என்கிறீர்களே. அதை விட உங்களைப் பிரிந்து இருக்கும் துன்பம் என் நெஞ்சை அதிகமாகச் சுடுமே. அந்தச் சூட்டை என்னால் தாங்க முடியாது. எனக்குத் தாங்கும் வலிமையும் இல்லை!" என்றாள்.

உண்மை தான் சீதையை பிரியும் அந்த நிலையை இராமனும் விரும்பவில்லை. அவன் அந்தப் பிரிவுத் துயரை ஏற்கனவே அடைந்துள்ளான். என் செய்ய?. இராமன் யோசித்தான்," இவளோ காட்டில் வாழ்வதற்கு உரியவள் இல்லை. அதே சமயத்தில் இவளை விட்டு, விட்டு எவ்வாறு தனியாகப் போவது?" .இவ்வாறு ராமன் தனக்குள்ளே சொல்லிக் கொண்ட சமயத்தில் சீதை தன்னறைக்குள் விரைந்து சென்றாள். பின்னர் சிறிது நேரம் கழித்து அறையை விட்டு வெளியில் வந்தாள். அக்கோலத்தில் சீதையை பார்க்க ராமனின் மனம் பதறியது. ஆம்,சீதை மரவுரி தரித்துக் காணப்பட்டாள்." அய்யோ சீதா இதற்காகவா நான் உன் கரம் பிடித்தேன்? பட்டாடையை உடுத்தினாலே உனது மென்மையான மேனி தாங்காதே. இப்போதோ மரவுரி அல்லவா தரித்து இருக்கிறாய்" என்று ஒரு கணம் ராமபிரான் கண்ணீர் சிந்தினார்.

சீதையின் செய்கையைப் பார்த்த முனிவரும், சீதையின் மாமியார்களும் இறந்தவர்கள் போல் தரையில் விழுந்தார்கள். ஆனால், இறக்கவில்லை! என் செய்ய அவர்களுக்கு இன்னும் வாழ வேண்டிய நாட்கள் எஞ்சி உள்ளதே. இன்னும் எவ்வளவோ அவர்கள் பார்க்க வேண்டியது உள்ளதே. அவர்களால் அச்சமயம் அழத் தான் முடிந்தது. ராமபிரான் சீதையை தடுக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டார் பிறகு சீதையுடன்," சீதா, நீ என்னுடன் காட்டுக்கு வருவதால் தீமை தான் அதிகம் ஏற்படப் போகிறது. உனது வருகை எனக்கு பெருந் துயரை தர இருக்கிறது" என்று தன்னை அறியாமல் சீதையை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் மட்டுமே ராமர் மேற்கண்ட வார்த்தைகளை உச்சரித்தார். ஆனால், சீதை அதனை உணராதவளாக, மேலும் கோபம் கொண்டவளாக ," உங்களுக்கு துயரமெல்லாம் என்னொருத்தியால் தான். என்னைத் துறந்து காட்டுக்குச் சென்றால் இன்பம் அடைவீர்கள்!" என்று வேதனையுடன் இராமனிடம் தெரிவித்தாள்.

இது கேட்ட ராமன், " இதற்கு மேல் இனி என்ன பேச?" என்று விதியை நொந்து கொண்டு ஒரு வழியாக சீதை வருவதற்கு சம்மதம் தெரிவித்தார். சீதை, ராமன், லக்ஷ்மணன் என அம்மூவரும் பிறகு எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டனர். வஷிஸ்டர் " காடு வரையிலாவது ரதத்தில் செல் மகனே" என்று வேண்ட. அவரின் விருப்படி தேரில் ஏறிக் கொண்டனர் அம்மூவரும். தேர் அதோ..அதோ.. காட்டை நோக்கிப் போகிறது. மக்கள் அனைவரும் கண் கலங்க மக்களின் நாயகர் வனவாசம் புறப்பட்டார்.