
நகரப் படலம்

பாலகாண்டம்
பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
நகரப் படலம்
(அயோத்தி நகரின் சிறப்பினைக் கூறும் படலம் என விரியும். அயோத்தி நகரின் அழகு. அதன் அமைப்பு. மதிலின் மாட்சி. அகழியின் பாங்கு. சோலையின் தன்மை. எழுநிலை மாடங்கள் மாளிகைகள் ஆகியவற்றின் தோற்றமும் பொலிவும் ஆகியவற்றை இப்படலப் பாடல்களால் அறியலாம். நாடு, நகரம், காடு, மேடு எதுவாயினும் அங்கு வாழ்வோரின் செயலையும் சீர்மையையும் பொறுத்தே சிறப்புடையதாக முடியும். அதனால் அயோத்தி நகரத்து மக்களைப் பற்றிக் கம்பர் வருணிக்கிறார். நகரத்தாரின் ஆடல் பாடல். மகளிர் மேனியழகு. மாந்தரின் மகிழ்ச்சி ஆகியனவற்றை அறிவதோடு. அங்கு வாழ்வோரின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் அறிகிறோம். செல்வச் செழிப்பின் எல்லையாக அயோத்தியில் கள்வர் இல்லை. இரப்பார் இல்லை என்று வருணிக்கிறார். எல்லோரும் கற்றுத் தெளிந்தோராதலின் எவர் கல்வி வல்லவர். எவர் அவ்வல்லமை இல்லார் என ஆய்தற்கு இடமில்லை. பொதுவாக, எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தியிருந்தனர் என்கிறார் கம்பர். கல்விப் பயனாய் அந்நகரத்தார் பரபோகக் கனியைக் கைப்பொருளாகப் பெற்றிருந்தமையைச் சுட்டி முடிகிறது.)
அயோத்தி மாநகரம் இவ்வளாவு அழகுடன் காணப்படுகிறேதே அதன் காரணம் தான் என்னவோ! ஒரு வேளை அந்நகரம் பூமி தேவியின் திருமுகமாக இருக்குமோ அல்லது அவளது முகத்தில் காணப்படும் திலகமாகத் தான் இருக்குமோ.அதுவும் இல்லை எனில், வளங்கள் பூத்துக் குலுங்கும் அந்த அயோத்தி நகரமே பூமாதேவியின் கண்கள் தானோ? அல்லது அவளது உயிர் இருக்கும் இடமோ? அல்லது திருமாலின் வைகுண்டாமோ? இல்லை, இல்லை மேற்கண்ட எதுவும் இல்லை. ஸ்ரீ இராமபிரான் திரு அவதாரம் செய்ததது தான் அந்த நகரத்தின் அழகிற்கு எல்லாம் காரணம்.
முனிவருக்கும் இல்லறத்தாருக்கும் பாகுபாடு காட்டாமல் புகலிடமாக இருப்பவன் தான் ஸ்ரீ ராமபிரான்.அவனே, அந்நகரத்தில் அவதரித்தான் என்றால், அந்த நகரத்தைப் போல வேறு ஒரு நகரம் தான் உண்டோ? அந்நகரத்தின் உயர்ந்த மதில்கள் தான் எத்தனைஅழகோ?பார்க்கப் பார்க்க திகட்டாது.
வெண்ணிறமுள்ள சந்திரனை வெட்டி வரிசையாக வைத்தது போல ஒளி வீசுகின்ற நகங்களையும், செந்தாமரை மலருக்கு நிகரான பாதங்களையும்.நீர் வஞ்சிக்கொடி போன்ற மிகச் சிறந்த இடையையும்,தென்னை இளநீர் போன்ற தனங்களையும்,வளைகின்ற இல முங்கில்கலைப் போல காணப்படும் தோள்களையும்,அழகிய பற்களின் வரிசைகளும் உடைய பெண்களைக் கொண்ட அயோத்தி மாநகரைக் காட்டிலும், இந்திர லோகம் சிறந்ததோ?
அயோத்தி நகரத்தை சூழ்ந்த மதில்கள் பகைவரை அழிக்கும் தன்மைகளுடன் மிகவும் பாதுக்காப்பாக இருந்தது. அந்த மதில் சுவர்கள் பகைவரை வெல்லும் வேலும், கொலைவாளும், வில்லும், மழுவும், கதையும், சக்கரமும், தோமரமும், உலக்கையும், கவன் கல்லும் ஆகிய பொறிகளை உள் அடக்கிய நிலையில் அந்நகரத்தை காவல் புரிந்தது. அந்த மதில் சுவரின் அழகைக் கண்டு வெளிநாட்டு நகரங்களில் மதிலெடுக்க விரும்பியவர்கள் கூட வந்து அயோத்தியின் மதில் சுவர்களை அளவெடுத்துச் சென்ற படி இருந்தார்கள்.
மதிலைச் சூழ்ந்து இருந்தது அப் பெரும் அகழி.மேகங்கள் அந்த அகழியை கடல் என்று மயங்கி நீரை முகர்ந்தன.அது மட்டும் அல்ல, அம்மதிலை மலையென நினைத்து அதில் தங்கி, மழையைப் பொழிந்தன.அகழியில் பூத்த தாமரை மலர்களை காணக் கண் கோடி வேண்டும், என்றாலும் அந்தத் தாமரை மலர்கள் கூட அயோத்தியின் இளம் பெண்களின் முகத்தைக் கண்டு வெட்கப்பட்டு, அவர்கள் முன் நிற்க முடியாமல் தோற்றோடின.தங்களின் தோல்வியால் எழுந்த பொறாமை காரணமாக அவைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, தமது முழு வலிமை கொண்டு,அப்பெண்களின் முகங்களோடு சண்டை செய்ய எண்ணி அந்த நகரத்து மதிலை முற்றுகைச் செய்தார் போல விளங்கின.
அந்த அகழியில் காணப்பட்ட முதலைகள் அடிக்கடி தங்களுக்குள் முரட்டுத்தனமாகச் சண்டையிட்டுக் கொண்டு நீரில் அமிழ்வதைப் பார்க்கும் போது பெரிய கடலில் யானைகள் மூழ்கி எழுவதைப் போல காண்பவர்கள் அனைவர்க்கும் தோன்றியது. அகழியைச் சுற்றி சோலைகளும் அமைந்து இருந்தன. அத்துடன் எட்டுத் திசையிலும் அழகிய பல சித்திரங்கள் வரையப்பட்ட கோபுர வாயில்கள் உயர்ந்து விளங்கின.
அந்நகரம் ஓங்கி உயர்ந்த வெண்ணிற மாளிகைகளால் நிறைந்து அழகாகக் காட்சி அளித்தது. வெள்ளி மழையின் மீது கதிரவனின் இளவெயில் விழுந்து ஒளிக் கீற்றுகள் சிதறுவது போல அம்மாளிகையும் கதிரவனின் ஒளிக்கீற்றால் நிறைவூட்டப்பட்டு இருந்தது. இத்துடன் வச்சிரத் தூண்களும், மரகத ரத்தினத்தாலான உத்தரங்களும், சிற்பங்கள் செதுக்கிய வாயிற் கதவுமாக அம்மாளிகை நிறைந்து அழகுடன் காணப்பட்டது.
நகரத்திலே எங்குப் பார்த்தாலும் பொன் மண்டபங்களும், மலர்கள் விளங்கும் கொடி மண்டபங்களும்,மாட மாளிகைகளும்,கூட கோபுரங்களும்,முத்துப் பந்தருமாகக் காணப்பட்டன. நகரமெங்கும் உள்ள அழகிய கொடிக் கம்பங்களில் பட்டுக் கொடிகள் கட்டப் பட்டு இருந்தன. பட்டுச் சிறகை படபடத்து அடித்த பறவைகள் போலவே, அங்கு காணப்பட்ட பட்டுக் கொடிகளும் காற்றில் படபடத்தது. செல்வத்தில் குறைவு இல்லாமல் சிறந்து விளங்கிய அந்நகரத்துப் பெண்கள் பந்தாடும் பொழுது, அதிர்ச்சியால் அவர்கள் அணிந்து இருந்த விலை உயர்ந்த முத்துக்கள் சிதறி ஓட. அம்முத்துக்களை அங்கு வேலை செய்யும் பெண்கள் குப்பைகளாக குவித்து வைத்தனர். அவ்வாறு குவிக்கப்பட்ட முத்துக்கள் காண்போரின் கண்கள் கூச வெள்ளொளி வீசித் திகழ்ந்தன.
மேலும், நடன சாலையில் பெண்கள் நடனமாடும் ஓலி எப்போதும் கேட்டுக் கொண்டே இருந்தது. அதற்குக் காரணம், அவர்களுக்கு கவலை என்பதே இல்லாதிருந்த நிலையே. அவர்களது கருமையான கடைக் கண்களாகிய வேலாயுதங்களைக் கண்டு காம இச்சையுடைய ஆடவர்களின் உடல்கள், அப்பெண்களின் இடை போலவே மெலிந்தன.
அந்நகரத்தில் தண்டனைக் கருவிகள் அனைத்தும் புத்தம் புதிதாகக் காட்சி அளித்தன. (அதாவது) அந்நகரத்தில் பொருட் செல்வம் மிகுந்து இருந்ததால் திருடர்கள் என்று யாரும் அங்கு இல்லை. பிச்சை எடுப்போர் இல்லாததால் தருமம் செய்யவும் அங்கு ஆளில்லை. வீண்பொழுது கழிக்கவும் அங்கு யாருக்கும் நேரமில்லை. எல்லோரும் பண்டிதர்களாக நூல்களைக் கற்று விவாதித்துக் கொண்டு இருந்தார்கள். வறுமை என்பதே அந்நகரத்தில் சிறிதும் இல்லை. சுருங்கச் சொன்னாள், அந்நகரம் பல்வகை வளங்களையும் பெற்று இன்ப பூமியாக விளங்கியது. அப்பேற்பட்ட அயோத்தி நகரத்தை கண்டு இந்திரனும் பொறாமை கொண்டானாம்.