
அரசியற் படலம்

பால காண்டம்
பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
அரசியற் படலம்
(அந்தக் கோசல நாட்டின் மன்னனான தயரதச் சக்கரவர்த்தியினது ஆட்சிச் சிறப்பைக் கூறும் பகுதி இது. தயரதனின் பெருமை- குடைச்சிறப்பு - அரசு செய்யும் திறம் ஆகியவைகளை இந்தப் படலத்தில் காணலாம். முதல் ஆறு பாடல்களால் தயரத வேந்தனது தனிப்பெருஞ்சிறப்பைக் கூறுகிறார்)
அழகும், செல்வமும் நிரம்பிய அயோத்தியா புரியை நீதி தவறாத அரசர் ஆண்டு வந்தார். அவர் அரசர்க்கு எல்லாம் அரசராக விளங்கினார். ஏழு உலகங்களிலும் அவரது புகழ் ஓங்கி இருந்தது. இந்த ராமாயணக் கதைக்கு ஒப்பற்ற தலைவராகிய இராமபிரானைக் குமாரனாகப் பெற்ற தரும சிந்தையுடையவர் அவர். உலகில் உள்ள அனைத்து அரசர்களின் நற்குணங்களை ஒன்று சேர்த்தாலும், அவரது நற் குணங்களுக்கு ஒரு போதும் ஈடாகாது. அவரிடம் தானம் வாங்காத அந்தணரும் இல்லை, அவரால் செய்யப்படாத யாகங்களும் இவ்வுலகத்தில் இல்லை. பெற்ற தாயைப் போல உலகில் உள்ள எல்லா உயிர்களின் மீதும் அன்பைப் பொழிந்தவர் அவர். எல்லா உயிர்களையும் ஏற்றத் தாழ்வு இல்லாமல், சரி சமமாகக் கருதி ஆட்சி நடத்தியவர் அவர். வீரம் என்பதின் விலை நிலம் அவர். அவர் பெயர் தான் தசரத சக்கரவர்த்தி.
ஒரு நகரத்தை ஆள்வது போல, இந்த பூமியின் பெரும் பகுதியை மிக எளிதாக ஆளுகை செய்தவர் அவர். பகை அரசர்களை தனது பாதங்களில் எளிதாக விழச் செய்யும் ஆற்றல் கொண்டவர் அவர். வானத்துச் சந்திரன் கூட தேய்ந்து போகும். ஆனால், தசரதச் சக்கரவர்த்தியின் நீதியும், புகழும் தேயாமல் வளர்ந்தது. அவற்றைக் கொண்டு மக்களின் மனதில் உள்ள இருளைப் போக்கினார். அரசன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி என்பது போல, தசரதச் சக்கரவர்த்தி நீதி தவறாமல் இருந்ததால், அந்நாட்டு மக்களும் நீதி தவறாமல் நல் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டனர்.
உலகம் முழுவதுக்கும் சூரியன் ஒருவன் தான். அது போலத் தான் உலகம் முழுவதையும் தசரதரின் செங்கோல் காத்து வந்தது. பொருள் இல்லாத ஒருவன் தனக்கு உள்ள சிறிது நிலத்தை மிக்க கருத்துடன் காப்பது போல, நீதி தவறாத தசரதச் சக்கரவர்த்தி உலகம் முழுவதையும் நன்றாக நாளும் காத்து வந்தார்!
அரசியற் படலம்
(இராமன் சுக்கிரீவனுக்கு அரசியல் பற்றிய அறிவுரைகளைக் கூறும் பகுதியை முதன்மையாகக் கொண்டு விளங்குவதால் இப்படலம் அரசியல் படலம் எனப்பட்டது. பால காண்டத்தில் தசரதனின் ஆட்சியைப் பற்றிக் கூறும் பகுதியும்அரசியல் படலம் எனப் பெயர் கொண்டது.
சுக்கிரீவனுக்கு முடிசூட்ட இராமன் இலக்குவனுக்குக் கட்டளையிட, முடிசூட்டு விழாவிற்கு வேண்டுவன கொணருமாறு இலக்குவன் அனுமனுக்கு உரைத்தனன். அங்ஙனமே அனுமன் கொணர, இலக்குவன் சுக்கிரீவனுக்கு முடி சூட்டினான். நல்லரசு புரிதற்கு வேண்டிய அறிவுரைகளை இராமன் சுக்கிரீவனுக்கு எடுத்துரைத்தான். அவற்றைச் செவிமடுத்த பின் சுக்கிரீவன் இராமனைக் கிஷ்கிந்தைக்கு அழைக்க, இராமன் மறுத்து,நான்கு திங்கள் சென்றபின் படையொடு வருக எனக் கூறினன். அதனை ஏற்ற சுக்கிரீவனும் விடைபெற்று நீங்கினான். தன்னை வணங்கிய அங்கதனுக்கும் இராமன் அறிவுரை புகன்றான்.
மாருதி இராமனுடன் இருந்து பணி செய்ய விரும்புவதாகக் கூற, அவனையும் கிஷ்கிந்தை செல்லுமாறு இராமன் பணிக்க, மாருதியும் போனான். இராமலக்குவர் வேறொரு மலையை அடைந்தனர். கிஷ்கிந்தையில் சுக்கிரீவன் செம்மையாக ஆட்சி புரிந்தான். அங்கதனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டிச் சுக்கிரீவன் இனிதாக வாழ்ந்து வந்தான்)
வாலியின் மரணத்திற்குப் பிறகு கிஷ்கிந்தாபுரி இனி அரசன் இல்லாமல் இருப்பது நல்லதில்லை என்று எண்ணினார் இராமபிரான். எனவே, அவர் லக்ஷ்மணனிடம் சுக்கிரீவனுக்கு முடி சூட்டும் படிக் கூறினார். அண்ணனின் கட்டளையை ஏற்றுக் கொண்ட லக்ஷ்மணன், அனுமனிடம் முடி சூட்டு விழாவுக்கு வேண்டியவற்றை உடனே கொண்டு வருமாறு கூறி அனுப்பினான்.
அனுமன் விரைந்து சென்று முடி சூட்டுவதற்குத் தேவையான அனைத்தையும் நொடிப் பொழுதில் கொண்டு வந்து லக்ஷ்மணனிடம் கொடுத்தான். லக்ஷ்மணன் அவைகளைக் கொண்டு முறைப்படி செய்ய வேண்டியவற்றைச் செய்த பின், சுக்கிரீவனுக்கு முடி சூட்டினான்!
அவ்வாறு முடி சூட்டிக் கொண்ட சுக்கிரீவன் இராமபிரானை வணங்கி அவரது வாழ்த்துக்களைப் பெற்றான். அக்கணம் சுக்கிரீவனை நோக்கி," வீரனே! நீ கிஷ்கிந்தைக்குச் சென்று செய்ய வேண்டிய காரியங்களை முறைப்படி செய்து, நீ ஏற்றுக் கொண்ட ஆட்சியை சிறப்புற நடத்து, எக்காலத்திலும் நேர்மையும், சத்தியமும் தவறாதே. அரசன் எந்த வழியில் நடப்பானோ, அதே வழியில் தான் மக்களும் நடப்பார்கள். அதனால் மறந்தும் அதர்ம வழியில் சென்று விடாதே. ஒவ்வொரு உயிரும் செய்யும் கருமங்களாலேயே அவ்வுயிருக்குப் பிறப்பும், இறப்பும் அமைகிறது. இது ஆன்றோர் கருத்து, அதனால் தருமத்தைக் கடக்காமல் நல்ல நெறியில் நடந்து வந்தால் நல்ல பிறப்பும், அதே தருமத்தை மீறி நடந்தால் தாழ்ந்த பிறப்பும் அமைந்து விடும். அதனால்,நீ உயர் பிறப்பு அமையும் மார்கத்தை தேடுவாயாக. நல்வினைகள் செய். உலகத்தவர் காட்சியளவையன்றி அனுமானத்தையும் மேற்கொள்கின்றார்கள். ஆதலால், பகைவரிடத்திலும் வெளிக்கு நட்பு கொண்டு சில சமயங்களில் வஞ்சனையாக நடத்தல் வேண்டும் என்று நீதி நூல்கள் கூறுகின்றன. எனவே, நீ பகைவரிடத்திலும் முகம் மலர நட்பு கொண்டு, அவர்களுடன் பழகியபடியே அவரவர் தகுதிக்கு ஏற்ப இன்னுரையையும் வழங்கு.
தேவர்களும் மயங்கத் தக்க அழகிய கிஷ்கிந்தை நகரத்தை பெற்றவனே, இன்னும் நான் சொல்வதைக் கேள். பிறர் உன்னை வைதாலும், அந்த வசைச் சொற்களை நீ கேட்டாலும் அவர்களிடம் இனிய சொற்களையே பேசு. இரப்பவர்களுக்கு உன்னால் முடிந்த அனைத்தையும் கொடு. பிறருடைய பொருளை என்றுமே அவரிடம் இருந்து பறிக்க நினைக்காதே. இது போன்ற நல்ல காரியங்களை கவனமுடன் செய்பவனே நற்கதியை அடைவான். மேலும், ஒரு அரசன் என்பவன் குடிமக்களை குழந்தையாக பாவித்து நடத்த வேண்டும். ஆனால், அதே சமயத்தில் அந்தக் குடி மக்கள் பாவ காரியங்களை செய்ய முற்படும் போது, ஒரு அரசன் என்பவன் இறக்கம் இன்றி நீதி தவறாமல் அவர்களை தண்டித்தலும் வேண்டும். உனது அதிகாரிகள், மந்திரிகள் என அனைவரும் நீ செய்யும் நன்மையைக் கண்டு உன்னை தேவர்களுக்கு நிகராக மதிக்க வேண்டும். இதுவே அரசர்களுக்கு உரியவை எனப் பெரியோர்கள் வகுத்து உள்ள சில நியதிகள். இவற்றை எல்லாம் ஆலோசித்து உனது ஆட்சியை குறை இல்லாமல் செம்மையாக நடத்துவாயாக! இனி வருவது கார் காலம். இந்த மழைக் காலம் நீங்கி, கூதிர் காலமான கார்த்திகையில் உனது சேனைகளுடன் எனது செயலைச் செய்ய வருவாயாக! இப்பொழுது செல்வாயாக!" என்று கூறினார்.
இராமபிரானின் சொற்களை கவனமுடன் கேட்ட சுக்கிரீவன்." ஐயனே! தாங்களும் என்னுடன் கிஷ்கிந்தைக்கு வருகை தர வேண்டுகிறேன்" என்றார். அது கேட்ட இராமபிரான் புன்னகையுடன் ," சுக்கிரீவா! உனது அன்புக்கு நன்றி. ஆனால், நான் நீ கேட்டுக் கொண்ட படி கிஷ்கிந்தையில் வந்து தங்கினால் என்னை உபசரிப்பதிலேயே நீ கவனம் செலுத்துவாய். உன்னால் அரசாட்சியை ஒழுங்காக கவனிக்க முடியாது.அது மட்டும் அல்ல, நான் எனது மனைவி சீதையை பறிகொடுத்து நிற்கிறேன், நான் முன் ஜென்மத்தில் செய்த வினை தான் அது. அந்த வினைகள் அனைத்தையும் நான் தவம் செய்து கழிக்க விரும்புகிறேன். இனியும் என்னை அந்த ஊழ்வினைகள் தொடர்வது நன்றோ?
மேலும் சுக்கிரீவா, சீதையைக் கொண்டு சென்ற இராவணன் அவளை எவ்வாறெல்லாம் வருத்தி வருகிறானோ! அப்படியிருக்க எனக்கு அரண்மனை சுக வாசம் தேவையா? ஒருவேளை நான் அதனை அனுபவித்தால் இந்த உலகம் என்னை பழிக்காதா? அப்படித் தான் நான் நடப்பேனோ? மேலும் எனது சிறிய தாய்க்கு, நான் பதினான்கு ஆண்டு காலமும் வன வாசத்தில் கழிப்பதாக வாக்கு அளித்து இருக்கிறேன். அப்படி இருக்கும் போது, நான் கிஷ்கிந்தையின் ராஜ வாழ்க்கையை அனுபவிப்பது நன்றோ?" என்றார்.
சூரிய குமாரனான சுக்கிரீவன் ஸ்ரீ இராமனுடைய வார்த்தைகளில் இருந்த நியாத்தைப் புரிந்து கொண்டான். எனினும் அவனது கண்கள், இராமரை அக்கணத்தில் பிரிய வேண்டியதை எண்ணிக் கலங்கின. அவ்வாறு நீர் சிந்திய கண்களுடன் இராமபிரானிடம் இருந்து சுக்கிரீவன் விடைபெற்றுக் கொண்டான்.
பிறகு அங்கதனும் இராமபிரானைத் தொழுது நின்றான். அவர் கருணையுடன் அவனை நோக்கி," நீ நல்லொழுக்கம் உடையவனாதல் வேண்டுமெனில், சுக்கிரீவனை உனது சிறிய தந்தையாகக் கொள்ளாமல் உன்னைப் பெற்ற தந்தையாகவே கருதி, அவன் சொல்லும் கட்டளையைச் செய்து வாழ வேண்டும். இதனை நீ தவறாது கைக்கொண்டு வாழ்வாயாக!" என்றார். இராமபிரானின் இந்த வார்த்தைகளைத் தனது மனதில் நன்கு பதிய வைத்துக் கொண்டான் அங்கதன். அவனும், பிறகு ஸ்ரீ ராமனிடம் இருந்து விடைப்பெற்றுக் கொண்டு கிஷ்கிந்தைக்குச் சென்றான்.
பின்பு அனுமானைப் பார்த்து இராமர்," மிக்க அழகுடைய வீரனே! நீயும் சென்று உனது அறிவினால் சுக்கிரீவனின் அரசாட்சிக்கு வேண்டிய காரியங்களைச் செய்து வாழ்வாயாக" என்றார்.
அதற்கு அனுமான், " பிரபுவே, நான் தங்களை விட்டு எப்படிப் பிரிவேன். பேசாமல் தங்களுடனேயே இருந்து, தங்களுக்கு வேண்டிய பணி விடைகளைச் செய்து மகிழ்கிறேனே" என்றான்.
அது கேட்ட ஸ்ரீ ராமர் அனுமனிடம்," அனுமான் ஒரு ராஜ்யத்தை திறம் பட நடத்துவது சாதராண விஷயம் அல்ல. அதுமட்டும் அல்ல அறிவு, ஆண்மை, பெருமை ஆகிய மூன்று திறைமைகளும் கொண்ட ஒருவனது அரசை மற்றொருவன் தனது வலிமையால் பெற்றால், அங்கே நன்மைகள் மட்டும் அல்லாமல் தீமைகளும் விளையும். அவ்வரசு உன்னைப் போன்ற பேரறிவு படைத்தவர்களாலேயே நிலை பெற்று இருக்கும். ஆகவே, நீ சென்று சுக்கிரீவனுக்குத் துணையாக அவனது அரசை பாதுகாப்பாயாக! பின்பு நான் சொல்லிய காலத்தில் எனது செயல் முடிக்க வருவாயாக! உன்னைப் போன்ற தருமன் யாருமே இல்லை!" என்றார்.
அது கேட்ட அனுமான், இராமனின் கட்டளையை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக அவரை வணங்கி விடை பெற்று கிஷ்கிந்தைக்கு சென்றான். அனுமன் சென்றதும், இராமபிரான் தம்பி லக்ஷ்மணனுடன் அங்கிருந்து புறப்பட்டு வேறொரு மலைக்குச் சென்று சேர்ந்தார். வாலியும், இராமரும் கூறிய அறிவுரைப்படி சுக்கிரீவன் கிஷ்கிந்தையை நன்கு ஆட்சி செய்தான்!
இராமர் சென்று சேர்ந்த மலையின் ஒரு பக்கத்தில் மாலியவான் என்னும் இடத்தில் அவர் லக்ஷ்மணனுடன் வசித்து வந்தார்!