திரு அவதாரப் படலம்

திரு அவதாரப் படலம்

bookmark

பாலகாண்டம்

பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

திரு அவதாரப் படலம்

(திருமாலின் அவதாரமான ராமபிரான் அவதாரம் செய்ததைக் கூறும் பகுதியாகும். இதில் தயரத மன்னன் மகப் பேறின்றி இருத்தலை வசிட்ட முனிவரிடம் கூறுதலும். வசிட்டர் தேவர்களுக்குத் திருமால் அருளியதைச் சிந்தித்தலும் புதல்வரை அளிக்கும் வேள்வி செய்யத் தயரதனுக்கு வசிட்டர் கூறுதலும். கலைக்கோட்டு முனிவரால் வேள்வி நடைபெறுதலும் வேள்வித்தீயில் எழுந்த பூதம் பிண்டம் கொண்டுதருதலும் அப்பிண்டத்தைத் தயரதன் தேவியர் மூவருக்கும் பகிர்ந்தளித்தலும் அதன் காரணமாகத் தேவியர் கருவுறுதலும் ராமன் முதலிய நால்வரும் அவதரித்தலும். புதல்வர்களுக்கு வசிட்டர் பெயர் சூட்டுதலும் பிள்ளைகளின் வளர்ச்சியும்-கல்விப் பயிற்சியும்-யாவரும் போற்ற ராமன் இனிதிருத்தலும் விவரிக்கப்படுகின்றன).

அப்படிப் பெருமை பெற்ற தசரதனின் அரசவையில் பிரம்ம தேவனைப் போல பரிசுத்தமான முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரது பெயர் தான் வஷிஸ்டர். ஒரு நாள் தசரதர் அந்த பெரும் தவ யோகியைப் பார்த்து," முனிவருள் தலை சிறந்தவரே, சூரிய வம்சத்தில் பிறந்த நான் என் முன்னோர்களைப் போலவே இவ்வுலகை எந்தக் குறையும் இல்லாமல் பாதுகாத்து வருகிறேன். முனிவர்கள் மற்றும் அந்தணர்களின் துயரைத் துடைத்தேன், ஆனால் எனக்கோ, எனக்குப் பின் இந்த ராஜ்யத்தை ஆள ஒரு வாரிசு இல்லையே?. என் காலத்துக்கு பின் நான் செய்து வந்த தர்மங்களை என் ராஜ்ய பாரத்தை யார் ஏற்பார்? இதை நினைக்கும் போது என் மனம் மிகவும் வருந்துகிறதே" என்றார்.

தசரதரின் கவலை தோய்ந்த வார்த்தைகளை செவிமடுத்த அந்தத் தவயோகி,பிரம்மதேவனது குமாரனும்,சப்த ரிஷிகளுள் ஒருவருமான வசிஷ்ட மா முனிவர், தசரதனின் குறையைத் தீர்ப்பதற்கு ஏற்றதொரு வழியைச் சிந்தித்தார்.திருமால் முன்பு " நல்லோரைக் கொல்லும் தொழிலுடைய இராவணன் முதலிய அரக்கரது உபத்திரவத்தை ஒழிப்பேன் என்று, சொல்லி வருத்தமடைந்த தேவர்களுக்கு அபயமளித்தது, அச்சமயத்தில் அம்முனிவரின் நினைவுக்கு வந்தது.

(நிற்க)

முன்பொரு சமயம், தசரத சக்கரவத்தியின் பிறப்பிற்கு முன் இராவணன் முதலிய அரக்கர்களின் கொடுமை மூன்று உலகத்திலும் அதிகரித்தது. சாதுக்களும் , முனிவர்களும் ரத்துச் சகதியில் மிதந்தனர். பூமியில் எந்த ஒரு நல்ல காரியமும் நடக்காமல் பார்த்துக்கொண்டனர் இராவணன் முதலிய அரக்கர்கள். அவர்களின் கொடுமை இந்திர லோகம் வரையில் அதிகரித்தது. 

யாகத்தில் தேவர்களுக்கு கிடைக்க வேண்டிய அவிர்பாகம் கிடைக்காததால், இந்திரன் முதலிய தேவர்கள் சோர்ந்து போயினர். இராவணன் அத்துடன் நிறுத்த வில்லை, காணும் அழகிய பெண்களை எல்லாம் பத்தினியாக ஆக்க வேண்டும் என்று சித்தம் கொண்டான். அப்போது, தாய் கைகசியின் தூண்டுதலாலும், அசுர குரு சுக்கிராச்சாரியாரின் வழி காட்டுதலாலும், தேவ கன்னிகைகள் மீது கொண்ட ஆசையினாலும் சுவர்கத்தை தாக்க இராவணன் சித்தம் கொண்டான். ஆனால், தனது சுவர்கத்தின் முதல் படையெடுப்பு இராவணனுக்குத் தோல்வியில் தான் முடிந்தது. மேலும், அப்படை எடுப்பின் போது இந்திரனின் ஆக் ரோஷமான தாக்குதலால், ராவணின் பாட்டனார் மால்யவான் (ராவணனுடைய தாய் கைகசியின் தந்தை) வீர மரணம் அடைந்தார். மாலி, சுனாலி போன்ற பெரும் அரக்கர்களும் பலத்த காயங்களுடன் திரும்பினர். ஒட்டு மொத்த அரக்கர் சேனையையும் அஷ்டதிக் பாலகர்களான இந்திரன் உட்பட யமன், அக்னி, வாயு, வருணன், ஈசானன், குபேரன், நிருதி ஆகியோர் துரத்தி அடித்தனர். அரக்கர் சேனை பிறடி மயிர் தெறிக்க ஓடினார்கள். இதனால், முதல் யுத்தத்தில் இந்திரன் வெற்றி அடைந்தான். இராவணன் படுதோல்வியுடன் திரும்பினாலும், இந்திரன் மீது கொண்ட வஞ்சத்தை மறக்க வில்லை.

அப்போது, இந்திரனை பழி வாங்க எண்ணிய இராவணன், தனக்கு ஒரு குமாரனை வேண்டி அசுர குரு சுக்கிராச் சாரியாரிடம் வழி முறை கேட்டான். அவர் காட்டிய வழியில், நவ கிரகங்களை முதலில் வென்றான். இராவணன் விஷ்ரவஸ் என்ற முனிவருக்கு மகனாகப் பிறந்ததாலும், பிராமண வகுப்பில் தோன்றிய அரக்கன் என்பதாலும், அவன் அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்து இருந்தான். அதன் படி ஜோதிஷ சாஸ்திரத்திலும் கை தேர்ந்தவனாக இருந்தான். நவகிரகங்களை போரில் வென்று அடக்கியதால். இப்போது அவனே அக்கிரகங்களின் சுவாமி (அதிபதி) என்று கொக்கரித்தான். அந்த கிரகங்களை தான் சொல்லும் படி நிற்கவைத்து, எந்த ஜாதக கட்டத்தில் ஒரு மகன் பிறந்தால், அவன் உலகத்தை ஜெயிப்பானோ, அந்த ஜாதக கட்டத்தில் ஒரு மகனைப் பிறப்பித்தான். 

இவ்வாறு, ராவணனின் அசுரக் குழந்தை உருவாக ஆரம்பித்தது. பூமி எங்கும் அபச குணங்கள் தென்பட்டது. மேகம் சிவந்தது. கடல்கள் ஆர்பரித்துக் கதறியது. நாய்களும், ஓநாய்களும் நகருக்குள் வந்து ஊளை இட்டு அழத் தொடங்கியது. பறவைகள், மிருகங்கள் என அனைத்து ஜீவ ஜந்துக்களும் சித்தம் கலங்கியவாறு வெறிபிடித்து ஓடியது. புவி முழுதும் ரத்த வாடை அடித்தது. இடி முழக்கம், இந்திர லோகம் வரை சென்று, இந்திரனை பயமுறுத்தியது. அரக்கர்களை வெற்றி கொண்ட களிப்பில் அப்போது ஆடல், பாடல்களில் இந்திரன் ஈடுபட்டுக் கொண்டு இருந்தான். இந்திரன் சுதாரிப்பதற்குள் இராவணின் அந்த பலசாலியான மகன், மேகங்கள் எழுப்பிய அபாய இடி முழக்கங்களுக்கு நடுவில் பிறந்தே விட்டான்.

அந்த அசுரக் குழந்தை பிறந்த பொழுது மேகங்கள் இடி முழக்கத்தை கடுமையாக எழுப்பியதால் அக்குழந்தைக்கு இராவணன் " மேக நாதன்" (மேகங்களின் நாதன்) என்று பெயரிட்டான். அசுர வளர்ச்சி என்பார்களே, அது போல அக்குழந்தை பிறந்த க்ஷண நேரத்தில் வாலிபப் பருவத்தை அடைந்ததது. மேக நாதன் அசுர குரு சுக்கிராச்சாரியாரிடம் அனைத்து விதமான மாயக் கலைகளையும் கற்றான். அவரது அறிவுரைப் படி நிகும்பலாதேவியை வணங்கி வரங்கள் பல பெற்றான். சுருங்கச் சொன்னாள், இந்திரனுடனான போருக்கு தன்னை கடுமையாக தயார் செய்து கொண்டு இருந்தான்.

இச்செய்தியை நாரத முனிவரின் புண்ணியத்தில் இந்திரன் கேட்டு அறிந்து கதி கலங்கிப் போனான். அவனுடன் மற்ற தேவர்களும் கலங்கினர். செய்வதறியாது திகைத்தனர். தங்களது இந்த மாபெரும் துன்பத்தை தீர்க்க வேண்டி தேவ குரு பிரகஸ்பதியிடம் சென்றனர். அவரிடம் வேண்டி நின்றனர். வியாழபகவான் (பிரகஸ்பதி) வழிகாட்ட ஈசனிடம் போய் நின்றார்கள். அவர்களது வேண்டுகோளை கேட்ட சிவ பெருமான், தேவர்களிடம் பேசத் தொடங்கினார் "என்னால் அந்த அரக்கர்களை ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் நான் அப்படிப்பட்ட வரத்தை அவர்களுக்குக் கொடுத்து விட்டேன். முன்பு ஒரு சமயம் இராவணன் தன் மீது கொண்ட கர்வத்தால், நான் இருக்கும் இமய மலையை பெயர்க்க முயற்சி செய்தான். அவனது கர்வத்தை பொடியாக்க, நான் எனது கட்டை விரல் கொண்டு இமயத்தை அழுத்தினேன். அப்போது இராவணன் இமய மலைகளுக்கு இடையே மாட்டிக் கொண்டான். அகந்தை தெளிந்த அவன், சிவ தாண்டவம் பாடி என்னை மகிழ்வித்தான். அதற்கு பரிசாக அவன் கேட்டபடி சந்திரகார அஸ்திரத்தையும், பல திவ்ய அஸ்திரங்களையும், அவனுக்கு அளித்து விட்டேன். அத்துடன் இராவணனுக்கு இன்னும் பல ஆண்டுகள் சிரஞ்சீவியாக வாழும் வரத்தையும் கொடுத்து விட்டேன். ஆனாலும், பிரம்மதேவனிடம் சென்று முறையிடுங்கள் " என்று அவர்களுக்கு பதில் கூறினார்.

தேவர்கள் அனைவரும் ஒரு மித்த கருத்துடன் பிரம்மனைக் காண சென்றனர்.மகா மேரு மலையின், நடுவுச்சிச் சிகரத்தில் உள்ள மனோவதியில் பிரம்ம தேவன் வீற்று இருந்தார்.அங்கு சென்ற தேவர்கள் பிரம்ம தேவனிடம் அரக்கர்களால் தங்களுக்கு ஏற்படும் துன்பத்தை விளக்கிக் கூறினர். பிரம்மனோ காக்கும் கடவுளான திருமாலை சென்று காணுமாறு அறிவுறுத்தினார்.பிரம்மனின் அறிவுரைப்படி திருமாலை தேவர்கள் மனதில் எண்ணித் துதித்தனர். அவர்களுடன் பிரம்மனும் துதி செய்தார்.அவர்கள் தியானித்த மாத்திரத்தில் திருமால் அவர்களுக்கு முன்னாள், தாய் மகாலக்ஷ்மியுடன் தனக்கே உரிய கருட வாகனத்தில் கம்பீரமாகத் தோன்றினார். துதித்த மாத்திரத்தில் காட்சி தந்த பெருமாளை எண்ணி தேவர்கள் மிகிழ்ச்சி அடைந்து, தங்கள் பிரச்சனை கண்டிப்பாக தீர்ந்து விடும் என்று நம்பினர்.

தேவர்கள் அந்த ஆபத் பாண்டவனை வணங்கிய பின்னர், உலகைக் காக்கும் அந்தப் பரந்தாமனிடம் தங்கள் பிரச்சனையை கூறத் தொடங்கினர். அவர்களது பிரச்சனையை அன்புடன் கேட்ட நாராயணன் அவர்களிடம்,"கவலைப் பட வேண்டாம் நான் ராவணனையும் அவனது பரிவாரத்தையும் அழிக்க விரைவிலேயே ராமாவதாரத்தை எடுக்கக் போகிறேன். தேவ சேனைகள் அனைத்தும் எனக்கு உதவி செய்யும் பொருட்டு குரங்குகளாக காடுகளிலும், மலைகளிலும், சோலைகளிலும் கூட்டங்களாகப் போய் பிறப்பீர்களாக! நமது சங்கு சக்கரங்களும், ஆதிசேஷனும் எனக்குத் தம்பிகளாய்ப் பிறக்க, மறுபுறம் லட்சுமி சீதையாய் ஜனக மகாராஜாவுக்கு மகளாக அவதரிக்க, நான் அயோத்தியில் தசரத சக்கரவர்த்திக்குப் புத்திரனாய் பிறந்து, கொடுஞ் செயல் புரியும் அரக்கர்களை என்னுடைய அம்பால் ஒழிப்பேன்!" இது எனது வாக்குறுதி என்றார்.

இதனைக் கேட்ட தேவர்கள் " திருமாளினால், இந்த முறையும் நாம் காக்கப்பட்டோம்" என்று அக மகிழ்ந்தனர். அவர்களின் மகிழ்ச்சியான அம்முகத்தைக் கண்ட பின்னே திருமால் கருடன் மீது ஏறி தனது இருப்பிடத்தை அடைந்தார்.

பின்பு, பிரம்மன் தேவர்களை நோக்கி, " கரடிகளிற் சிறந்த ஜாம்பவான், திருமால் மானிடராகப் பிறக்கும் பொழுது அவருக்கு உதவி செய்யும் பொருட்டு பிறக்க உள்ளான். அவன் என்னுடைய அம்சமானவன். தேவர்களே! இனியும் நீங்கள் தாமதிக்க வேண்டாம். உடனே சென்று நீங்கள் அனைவரும் திருமால் கூறியபடி வானர ரூபத்தை உங்கள் பரிவாரங்களுடன் அடையுங்கள்!" என்றார்.

பிரம்மன் அவ்வாறு கூறி முடித்ததும் இந்திரன், "பகைவர்க்கு இடி போல விளங்கும் படி வாலியும், அவன் மகனான அங்கதனும் எனது அம்சமாவார்கள் " என்றான்.

அதனைத் தொடர்ந்து சூரிய தேவன், " அந்த வாலிக்கு தம்பி ஆகிய சுக்கிரீவன் எனது அம்சமாவான் !" என்று கூற, அக்கினி தேவனும், "நீலன் என்னும் வானரன் எனது அம்சமாவான்!" என்று சொன்னான்.வாயு தேவன் உடனே, " எனது மகனே வானரக் குலத்தில் தோன்றும் அனுமானாவான்!" என்றார்.

இவ்வாறு, தேவர்கள் ஒன்று இணைந்து பூமியில் அதி அற்புதமான ஒரு நாடகத்தை நடத்த சித்தம் கொண்டு, அதற்கான வேளையை துவங்க மீண்டும் சுவர்க்கம் புறப்பட்டனர்.

சுவர்கத்துக்கு சென்ற இந்திரனுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது, அவன் பயந்த படியே ராவணனின் சேனை சுவர்கத்தை மேகநாதன் தலைமையில் முற்றுகை இட்டு இருந்தன. மும்மூர்த்திகளிடம் மட்டுமே சரணம் அடைந்து பழகிய இந்திரன். மேகநாதனை திறம்பட எதிர்த்தான். ஆரம்பத்தில் அப்போரின் சூழல் என்னமோ இந்திரனுக்கு சாதகமாகத் தான் இருந்தது. ஆனால், பிற்பகுதியில் மேகநாதன் காட்டிய மாய வித்தைகளால், இந்திரன் நிலை குலைந்து போனான். இறுதியில் மேகநாதன் எய்த நாகாஸ்த்திரம் இந்திரனை சிறை பிடித்தது. அத்துடன், தேவர்கள் பலரை அரக்கர் படை சிறை பிடித்தது.அதில் ராவணனின் விருப்பப்படி தேவகன்னிகைகளும் அடக்கம்.

கைது செய்யப்பட அனைத்து தேவர்களையும்( இந்திரன் உட்பட) மேகநாதன் இலங்கைக்கு கொண்டு சென்றான். லங்காதிபதி (இலங்கையின் அதிபதியான) ராவணன் முன் நிறுத்தி, " தந்தையே, இதோ உங்கள் ஜென்மாந்திரப் பகைவர்கள்.இப்போது நம் போர்க் கைதிகள் " என்றான்.இராவணன் மேகநாதனை பெருமை உடன் பார்த்தான், அடுத்த கணம் இந்திரனை துன்புறுத்த விழைந்தான்.

அந்நேரத்தில் ஒரு குரல் ராவணனை நோக்கி " நில் மகனே" என்றது.இராவணன் திரும்பிப் பார்த்தான். அன்னப் பறவையின் மீது பிரஜாபதி பிரம்மா வீற்று இருந்தார். என்ன இருந்தாலும் அவர் ராவணனுக்கு வரங்களை அள்ளி வழங்கியவர். பத்து தலைகளை அவனுக்கு வரமாகக் கொடுத்தவர். அவர், ராவணனை பார்த்து " இது உனக்கு அழகல்ல மகனே, எப்போது உன் மகன், இந்திரனை சிறைபிடித்தானோ அப்போதே நீ வென்றவன் ஆகி விட்டாய். அதுபோல, மேகநாதன் இந்திரனையே போரில் வென்றதால், இன்று முதல் அவனை இந்திரஜித் (இந்திரனையே தோற்கடித்தவன்) என்று அழைப்பார்கள். இத்துடன் நிறுத்தி விடு மகனே" என்றார். மேலும் ராவணனுக்கு பல அறிவுரைகள் கூறினார். அதன் காரணமாக இந்திரன் உட்பட மற்ற தேவர்களை எச்சரித்து விடுவித்தான் ராவணன். தேவர்களும் பிரம்மனுக்கு நன்றி கூறி பகவான் விஷ்ணுவின் சொல்படி ராவணனை அழிக்க தங்கள், தங்கள் ரூபங்களை பூமியில் ஸ்ரிஷ்டித்துக் (உருவாக்கிக்) கொண்டனர். 

(நிற்க)

மேற்கண்ட இந்நிகழ்ச்சிகளை எல்லாம் மனதில் எண்ணிய முக்காலமும் அறிந்த வசிஷ்ட மாமுனிவர்," தேவர்களின் குறை தீரத் தசரதர் குறை தீர வேண்டும்; என்று தீர்மானித்தார். யாகம் செய்வதால் திருமால் திரு அவதரிப்பார் என்று உறுதி கொண்டார்.ஆகவே, தசரதரை நோக்கி," மன்னவா! தாங்கள் வேள்வி ஒன்று செய்து முடித்தால் தங்கள் மனக் குறை நீங்க புத்திரன் பிறப்பான்!" என்றார்.

முனிவர் கூறிய மார்கத்தை கேட்டு,தேன் துளியைக் கண்ட தேனீ போல உள்ளம் பூரித்துப் போனார் தசரத மகா சக்கரவர்த்தி.மறுமொழியாக குல குரு வசிஷ்டரிடம் "யாகத்திற்கு நான் என்ன செய்ய வேண்டும்? அதனைத் தாங்கள் எனக்கு கூறி அருள வேண்டுகிறேன்" என்று பணிவுடன் கூறினார். வசிஷ்ட முனிவர் உடனேயே தசரதனுக்கு யாகத்தை பற்றிக் கூறத் தொடங்கினார்,".

இராஜாஜி ராஜரே, சூரிய குல விளக்கே.ரிஷிய சிருங்க முனிவர் என்ற மாமுனிவர் உனது ஆருயிர் நண்பனான உரோமபாத மன்னன் தற்போழுது ஆண்டு கொண்டு இருக்கும், அங்க தேசத்தில் உள்ளார்.உன் குறை நீங்க அவரை அழைத்து, அந்த மாமுனிவரின் தலைமையில் புத்திர காமேஷ்டி யாகத்தை நடத்து.அதன் பின், நடப்பது அந்த நாராயணன் செயல்" என்றார். 

அப்போது தசரத சக்கிரவர்த்தி ரிஷியசிருங்க முனிவரின் சிறப்புகளைப் பற்றி வசிஷ்டரிடம் கேட்க நினைத்த போது (ஆனால் கேட்கத் தயங்கிய போது). தசரதனின் முகக் குறியீடுகளை கண்டு, மாமுனிவர் வஷிஷ்டரே, தானாக முன்வந்து ரிஷியசிருங்கரின் வாழ்க்கையைப் பற்றி தசரதரிடம் எடுத்துக் கூறத் தொடங்கினார்.

வசிஷ்டர் கூறத் தொடங்கினார் "உரோமபாத மன்னன் ஆண்டு வந்த அழகிய அங்க தேசத்தில் வெகு காலமாக மழை பெய்யவில்லை. அதனால், அங்கே வறுமை மிகுந்து காணப்பட்டது.மன்னன் ரிஷி ஸ்ரேஷ்டர்களை அழைத்து,"மழை பெய்வதற்கு என்ன செய்யலாம்?" என்று கேட்டான். 

அவர்கள் " ரிஷியஸ்ருங்க முனிவர் இந்நாட்டிற்கு வந்தால் மழை பெய்யும்!" என்றார்கள். அது கேட்டு அரசன்," பூலோகத்து மனிதர்களை எல்லாம் மிருகங்களாய்க் கருதும் அந்தப் பெரும் தவக் கொழுந்தான ரிஷியஸ்ருங்க முனிவரை, இந்த அங்க தேசத்திற்குள் எப்படி அழைத்து வருவது? என்று சிந்தித்தான். தனது மனக் கருத்தை தேசத்தில் உள்ள அனைவருக்கும் தெரிவிக்கச் செய்தான். ஒளி பொருந்திய நெற்றியையும், கருத்து நீண்ட கன்னங்களையும், சிவந்த அதரத்தோடு கூடிய வாயையும், முத்துப் போன்ற பற்களையும், இரட்டையாகவுள்ள மெல்லிய தனங்களையும் கொண்ட விலைமகளிர் சிலர் அதனை அறிந்தார்கள். உடனே மன்னன் உரோம பாதனிடம் சென்று, " நாங்கள் போய், அந்த ரிஷியஸ்ருங்க முனிவரை இந்த நகரத்துக்கு அழைத்துக் கொண்டு வருகிறோம்!" என்று வாக்களித்து வணங்கி நின்றார்கள்.

இதனைக் கேட்ட மாத்திரத்தில் மகிழ்ந்த மன்னன், அவர்களுக்கு நகைகள், சேலைகள், செல்வம் ஆகியவற்றைக் கொடுத்த பின்பு, அவர்களை ரிஷியஸ்ருங்கரை அழைத்து வருமாறு விடை கொடுத்து அனுப்பி வைத்தான். ஆபரணங்களை அணிந்த குளிர்ந்த இளம் சந்திரனை இகழ்ந்த நெற்றியையும், பருத்த மூங்கில் போன்ற தோள்களையும், வாடிய இடையையும், பருத்த தனங்களையும், கருத்த கூந்தலையும், மருட்சி உள்ள பார்வையையும் கொண்ட அவ் விலைமகளிர் பல யோசனை தூர வழியைக் கடந்து சென்றார்கள். வெகு தூரம் பிராயாணம் செய்ததால் மிகவும் களைத்துப் போனார்கள். ரிஷியஸ்ருங்கரின் ஆசிரமத்தை அடைவதற்கு ஒரு யோசனை தூரம் இருக்கும் இடத்தில், முனி பத்தினிகள் வேடம் தரித்து ஒரு பர்ண சாலை அமைத்துக் கொண்டு, அதில் தங்கினார்கள். 

நேரம் பார்த்துக் கொண்டு இருந்த அவ்விளைமகளிர்,அந்த முனிவரின் தந்தையாகிய விபகண்ட முனிவர் இல்லாத சமயம் பார்த்து ரிஷியஸ்ருங்கரை அணுகினார்கள். அது வரையில் பெண்களையே பார்க்காத அம்முனிவரான ரிசியஸ்ருங்கர்,"இவர்களும் நம்மைப் போலவே உலகத்தாரை மிருகமெனக் கருதும் முனிவர்கள்" என்று நினைத்தார்.அவர்களுக்கு தக்க மரியாதையுடன் ஆசனங்கள் கொடுத்து அமரச் செய்து,அவர்களுடன் இனிய மொழியில் உரையாடினார்.முனிவருடன் பேசிக் கொண்டு இருந்த அந்த விலை மகளிருக்கு நேரம் போனதே தெரியவில்லை.பின் அதை உணர்ந்த அவர்கள், அந்த முனிவரை வணங்கி விட்டு விடை பெற்றுக் கொண்டு தங்களுடைய ஆசிரமத்துக்கு விரைந்தனர்.இவ்வாறு சில தினங்கள் கழிந்த பின்பு, தங்களிடம் ரிஷியஸ்ருங்கருக்கு விசுவாசம் மிகும் பொருட்டு அவ்வேசியர்கள் பலவகை சுவை மிகுந்த கனிகளைக் கொண்டு வந்து கொடுத்து அவரது அன்பையும், விசுவாசத்தையும் ஒருங்கே பெற்றார்கள். 

நாட்கள் கழிந்தன,அவர்களை விலை மகளிர் என்று அறியாத ரிஷியஸ்ருங்கர், எப்போது அந்த தவயோகிகள் வருவார்கள் என்று அவரே அனுதினமும் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் படி செய்து விட்டனர் அந்த விலை மகளிர்.முனிவர் எதிர்பார்த்த படி அவருடைய ஆசிரமத்துக்கு மீண்டும் ஒரு முறை வந்த அந்த விலை மகளிர், அவரது உபசாரத்தை ஏற்ற பின்,அவரிடம் பேசத் தொடங்கினர் "குற்றமற்ற சிறந்த தவத்தைக் கொண்ட தவ சீலரே,நாங்கள் உமது ஆசிரமத்துக்கு வருவது போலவே தேவரீரும் , எங்கள் ஆசிரமத்துக்கு எழுந்தருளுதல் வேண்டும்" என்று சொல்லி அம்முனிவரிடம் வேண்டுகோள் விடுத்து நின்றனர்.முனிவரும் அதற்கு சம்மதித்தார்.தாங்கள் வந்த காரியம் நிறைவேறப் போவதை நினைத்த அந்த விலை மகளிர் மனதிற்குள் மகிழ்ந்தாலும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தனர்.

ரிஷிய ஸ்ருங்கரும் அவர்களை தொடர்ந்து சென்றார், பாவம் அவருக்கு அவர்களது திட்டம் தெரியாது. தங்களைத் தொடர்ந்து வந்த அந்த முனிவரிடம், "இதோ, இதோ இருக்கிறது எங்கள் ஆசிரமம்" என்று கூறியபடியே முனிவரை அங்க தேசம் வரை அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள். அந்த தவ முனிவர் அங்க தேசத்தின் எல்லைகளை மிதித்த மாத்திரத்தில், மேகங்கள் இருண்டன, வெள்ளமென மழை பெருக்கெடுத்து பூமியின் தாகத்தை போக்கின. தடாகங்கள் நிரம்பின, ஆறுகளும், பொய்கைகளும் நிறைந்தன. மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைத்தனர். இதனை எல்லாம் கண்ட அந்நாட்டு அரசன் உரோமபாதன், ரிஷியஸ்ருங்க முனிவர் நகருக்குள் வந்து விட்டார் என்பதை அனுமானத்தால் உணர்ந்து கொண்டான். உடனே தனது பரிவாரங்களுடன் வேதத்திற் சிறந்த முனிவர்களை அழைத்துக் கொண்டு, ரிஷியசிருங்கரை வரவேற்க்கக் கிளம்பினான். தன் நாட்டின் எல்லையைக் கடந்து வந்து கொண்டு இருந்த ரிஷிய ஸ்ருங்கரை, தவ யோகிகள் போல வேடம் அணிந்து நின்ற வேசியர்கள் மத்தியில் கண்டான். கண்ட மாத்திரத்தில் அந்த மகா முனிவரை அன்புடன் வேதங்கள் முழங்க வரவேற்றான். ." பெண்களே! என்னுடைய துன்பத்தை, இம்முனிவர் பெருமானை அழைத்து வந்து தீர்த்து விட்டீர்கள்!" என்று சந்தோஷத்தில் களித்தான் உரோமபாதன். அந்த விலை மகளிருக்கும் நன்றி சொல்லி பொன்னையும், பொருளையும் அவர்களுக்கு போதும், போதும் என்று அள்ளிக் கொடுத்தான். 

மன்னன் தம்மிடம் வந்ததின் காரணத்தை அறிந்த ரிஷியஸ்ருங்க முனிவர், "தாம் வஞ்சனையால் இங்கு அழைத்து வரப்பட்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்தார். தம்மை பர்ண சாலைக்கு அழைத்துக் கொண்டு போவதாகச் சொல்லி மாதர் வஞ்சித்ததை அறிந்தார். அந்தக் கணத்தில் கோபத்தின் உச்சிக்கே போனார் அந்த முனிவர். அந்த முனிவரின் கோபத்தைக் கண்டு அஞ்சிய உரோமபாத மன்னன். அவரது கால்களில் அப்படியே விழுந்து வணங்கினான். தான் முனிவரை அழைத்து வந்த காரணத்தை விவரித்தான், அவருக்கு புரிய வைத்தான், கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டி, அவருக்கு முன்னாள் கை கூப்பி நின்றான் . அழைத்து வந்த முறை தவறாக இருந்தாலும், அழைத்து வந்த நோக்கம் தவறில்லை என்பதை ரிஷிய ஸ்ருங்க முனிவரும் இப்போது புரிந்து கொண்டு கோபம் தணிந்தார்.

பிறகு அரசனின் வேண்டுதலுக்கு இணங்கி, அவரது அரண்மனைக்கு ரதத்தில் ஏறி விருந்தினராகச் சென்றார். முனிவரின் வருகையை அறிந்த மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளைப் பூ பந்தல்கள், மாவிலைத் தோரணங்கள் எனக் கட்டி அலங்கரித்தனர். அம்முனிவரை அரசன், அரண்மனையில் உள்ள ஒரு மாளிகையிற் செம்பொற் சிங்காசனத்தின் மீது அமரச் செய்து உபசரித்தான். மனதிற்குள் " இப்படிப் பட்ட மாமுனிவர் தனது நாட்டிலேயே இருந்து விட்டால், பஞ்சத்தின் நிழல் கூட தனது நாட்டை அணுகாது அல்லவா?. இவரை நமது நாட்டிலேயே இருக்கச் செய்ய வேண்டுமே" என்று யோசித்துக் கொண்டே, அம்முனிவரை அழகிய வார்த்தைகளாலும், உபசாரத்தாலும் நொடிக்கு, நொடி மகிழ்வித்துக் கொண்டே இருந்தான். உரோமபாத மன்னனுக்கு மனதில் தோன்றிய யோசனைப் படியே தன் மகள் சாந்தையை முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க அம்முனிவருக்கு திருமணம் செய்து கொடுத்தான். இவ்வாறு அம் முனிவரை வேறு எங்கும் செல்ல விடாமல், அவ்விடத்திலேயே தங்கி வாழும் படி செய்து வருகிறார்." என்று வஷிஸ்டர் தசரதரிடம் ரிஷிய சிருங்கரின் கதை மற்றும் அவரது சிறப்புக்கள் பற்றிக் கூறி முடித்தார்.

மேலும், வஷிஸ்டர் தொடர்ந்தார் "தசரத சக்கரவர்த்தியே ! இத்தகைய பெருமையுடைய முனிவரால் நீ செய்யும் புத்திர காமேஷ்ட்டி யாகம் நிச்சயம் வெற்றி பெரும்" என்று கூறி முடித்தார். இதனைக் கேட்ட தசரதன்," இப்பொழுதே நான் போய் அந்த முனிவரை அழைத்து வருகிறேன்" என்று கூறி விட்டு, அமைச்சர்கள் வணங்கி நிற்க, மற்ற அரசர்கள் போற்ற தனக்கே உரிய கம்பீரத்துடன், தனது பெரிய ரதத்தின் மீது ஏறி அமர்ந்தார். தேர் விரைந்து அங்க தேசத்தை அடைந்தது. 

அயோத்தியின் அரசர், முன்பு தேவாசுர யுத்தத்தில் தேவர்கள் பக்கம் நின்று தீரத்துடன் போர் புரிந்த தசரத மகா சக்கரவர்த்தி, தனது தேசமான அங்க தேசத்திற்கு வருகிறார் என்ற செய்தி கிடைத்த மாத்திரத்தில் அங்க அரசன் உரோமபாத மன்னன் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தான். அது மட்டும் அல்ல, வயதில் தன்னை விட முதிர்ந்த, அனுபவமிக்க அந்த தசரதச் சக்கரவர்த்தியை தானே சென்று வரவேற்க வேண்டும் என்று நினைத்தான். அப்படியே, தனது தேரில் ஏறி அந்த மகா சக்கரவர்த்தியான தசரதரை மிக்க மரியாதையுடன் சந்தித்து தனது அரண்மனைக்கு அழைத்து வந்தான் (அந்த உரோமபாதன் என்கிற) அங்க அரசன்.

தசரத சக்கரவர்த்தியை விருந்து உபசாரம், ஆடல் பாடல்கள் என மகிழ்வித்தான் அங்க அரசன். அயோத்தியின் அரசரான தசரதர் சற்று ஓய்வெடுத்த பின்னர்.அவர் அங்க தேசம் வந்த விவரத்தை உரோமபாதனிடம் தெரிவிக்கத் தொடங்கினார் "உயிர் நண்பரே! நான் ஒரு யாகம் புரிய விரும்புகிறேன். தங்கள் அரண்மனையில் தங்கியிருக்கும் ரிஷியஸ்ருங்க முனிவர் தான் அதனை ஏற்று நடத்தித் தர வேண்டும்" என்று உரோமபாதனிடம் கூறினார்.

சமூகம் கடைந்தேற எப்படிப் பட்ட தியாகத்தையும் செய்ய தயங்காத உரோமபாதன் தசரதரின் வேண்டுகோளை ஏற்றான். தசரதரிடம் "நிச்சயம் நான் ரிஷியஸ்ருங்கரை அனுப்பி வைப்பேன்" என்று வாக்களித்து மரியாதையுடன் அவரை வழி அனுப்பியும் வைத்தான்.

பிற்பாடு தசரதர் சென்றதும் உரோமபாதன் ரிஷிய ஸ்ருங்க முனிவரிடம் சென்று, அம்முனிவரை வணங்கி விட்டு " முனிவர் பெருமானே! தாங்கள் எனக்கு ஒரு வரம் தந்தருள வேண்டும்!" என்று வேண்டி நின்றான்.

" மன்னவா! நீர் விரும்பும் வரம் தான் என்னவோ?" என்று அன்புடன் கேட்டார் முனிவர். நீதி தவறாத அயோத்தி அரசர் தசரதனின் வேண்டுகோளை, அந்த முனிவரிடம் எடுத்துக் கூறினான் அங்க மன்னன். உரோமபாதனின் வேண்டுதலை கேட்ட அம்முனிவர் நடப்பது அனைத்தும் திருமாலின் விருப்பப்படி தான் நடக்கிறது என்பதை புரிந்து கொண்டாலும். அதனை வெளிக் காட்டிக் கொள்ளாமல். அங்க அரசனின் வேண்டுகோளை ஏற்று, தனது மனைவியான சாந்தையுடன் அயோத்தி செல்ல சம்மதித்தார். அவருக்கென சகல வசதிகளுடன் ரதம் தயார் ஆனது. லக்ஷ்மி போன்ற தனது மனைவி சாந்தையுடன் ரிஷியஸ்ருங்கர் தேரில் ஏறி அமர, மற்றும் சில முனிவர்கள் அவரைப் பின் தொடர, அங்க தேசம் வழி அனுப்ப, அயோத்தி தேசத்தை நோக்கிய தனது பயணத்தை தொடர்ந்தார் ரிஷியஸ்ருங்கர்.

ரிஷியஸ்ருங்க முனிவர் தமது நகர் நோக்கி வரும் செய்தியை தூதர்களின் மூலம் அறிந்த தசரதர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.உடனே முனிவரை எதிர்சென்று வரவேற்க, தேரில் ஏறிப் புறப்பட்டார்.முனிவரைக் கண்ட தசரத மன்னர் அவரையும், அவரைப் பின் தொடர்ந்து வந்த மற்ற முனிவர்களையும் வணங்கி வரவேற்றார்.தசரதரை வாழ்த்திய ரிஷியஸ்ருங்க முனிவர் அவரது அழைப்பை ஏற்று அயோத்தியின் அரண்மனைக்குள் சென்றார்.அந்நேரத்தில், பெண்கள் வாழ்த்துப் பாடல்கள் பாடினர்,சங்குகள் முழங்கின,கோயில்களில் மணிகள் ஓசையிட்டன, அயோத்தி நந்தவனத்தில் மலராத முற்றுகள் கூட மலர்ந்து அதில் வண்டுகள் மொய்க்கத் தொடங்கின.ஆயோத்தி ராஜ்யத்தின் பசு மடத்தில் பசு மாடுகள் சில கன்று ஈன்றன. மொத்தத்தில் அந்நகரமே சுபச் சகுனங்கலால் சூழப்பட்டது. குல குரு வஷிஸ்டர், வரவேற்க ரிஷியஸ்ருங்க முனிவர் இராஜ சபையை நோக்கி விரைந்தார். பிற்பாடு தசரத சக்கரவர்த்தியின் வேண்டுதலுக்கு இணங்க இரத்தினத்தால் இழைத்த ஆசனத்தில் அமர்ந்தார். பின்னர் தசரதர் தனது வேண்டுகோளை சொல்லத் தொடங்கினார்," முனிவர்களில் தலை சிறந்தவரே, உமது கருணையால் எனது தொன்று தொட்டு வரும் வம்சமானது, இனியும் தொடர்ச்சி பெற்று அரசாட்சியில் நிலை பெற உம்மை வேண்டுகிறேன் அய்யனே" என்றார். 

சில வார்த்தைகள் வெல்லும், சில வார்த்தைகள் கொல்லும் என்பார்களே, அது போல தசரத சக்கரவர்த்தியின் பணிவான அந்த வார்த்தைகளை கேட்ட ரிஷியஸ்ருங்க முனிவர் மனம் இளகினார். மறுமொழியாக தசரதரிடம், " சூரிய குலத்தில் தோன்றிய ரத்தினமே, நீர் வஷிஸ்டர் போன்ற மகா முனிவரையே புரோகிதராகப் பெற்றவர். குற்ற மற்ற செய்கைகளைக் கொண்ட உமக்கு நடப்பது அனைத்தும் நல்லதாகத் தான் நடக்கும். உமது நல் நோக்கத்தை நான் நன்கு அறிவேன். நீர் வருத்தப்படாதீர், இந்தப் பூலோகத்தை மட்டும் அல்ல, பதினான்கு உலகத்தையும் காப்பதற்குரிய, மிக்க வல்லமையுடைய குமாரர்களை நீர் விரைவில் பெறுவீர். அதற்கு நீர் உடனே ஒரு புத்திர காமேஷ்டி யாகத்தை நடத்துவீராக" என்றார்.

ரிஷியஸ்ருங்க முனிவர், உதிர்த்த அவ் வார்த்தைகளை கேட்ட தசரத சக்கரவர்த்தி உடனே யாகத்திற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்தார். யாகத்திற்கு வேண்டிய பொருட்கள் அனைத்தும் ஏவலர்கள் மூலம் விரைவாகக் கொண்டு வரப்பட்டது. ரிஷியஸ்ருங்க முனிவர் குறித்துக் கொடுத்த அந்த நன்னாளில் சக்கிரவர்த்தி தசரதர் சரயூ நதியில் நீராடி, யாக சாலையை அடைந்தார். 

தசரதர் அவருடைய நான்கு மனைவிகள் மற்றும் பரிவாரங்கள் கூடி இருக்கக் கூடவே வஷிஸ்டர் உட்பட மற்ற முனிவர்கள் சூழ, ரிஷியஸ்ருங்க முனிவர் தன் தலைமையில் புத்திர காமேஷ்டி யாகத்தை முறைப்படி நடத்தினார். சுமார் ஒரு வருட காலம் அந்த யாகம் தொடர்ந்தது. அதுவரையில் வேள்வித் தீ அணையாமல் ஏவலர்களும், முனிவர்களும் பாதுகாத்து வந்தனர்.

அந்த வேள்வியும் வெற்றி அடையும் சமயம் வந்தது, அச்சமயத்தில் வேள்விக் குண்டத்தில் இருந்து பொன் தட்டை ஏந்திக் கொண்டு ஒரு பூதம் வெளியே வந்தது. அப்படி வந்த பூதம், தான் கொண்டு வந்த அமுதத் தட்டினைப் பூமியிலே வைத்து விட்டு, மீண்டும் அக்கினியில் குதித்து மறைந்தது. ரிஷியஸ்ருங்க முனிவர் அந்தச் சுதையை எடுத்து தசரதரிடம் கொடுத்து, பட்ட மகிஷியருக்கு முறைப்படித் தருமாறு கூறினார். முறைப்படி அவ்வமுதத்தை அளிக்குமாறு முனிவர் கட்டளை இட்டதால், தசரதர் மூத்தவளான கௌசலைக்கு ஒரு பாகத்தை முதலில் கொடுத்தார். தசரதர் கைகேயிக்கும் அந்தச் சுதையில் கையில் மிச்சமாக உள்ளதில் பாதியை அளித்தார்.சக்கரவர்த்தி முன்னிருவருக்கும் போலவே சுமித்திரைக்கும் அவ்வமுதத்தை அளித்தார். மேலும், பகுத்துக் கொடுத்த போது தட்டில் சிந்திக் கிடந்த மீதி சுதையையும் அவளுக்கே அளித்தார். 

இவ்வாறாக வேள்வி நல்ல படியாக முடிந்தது. யாக சாலையை விட்டுப் புறப்பட்டு நேரடியாக சபா மண்டபத்தை அடைந்த தசரதர் அனைத்து முனிவர்கள் மற்றும் அந்தணர்களுக்கும் தட்சிணைகளை அளவில்லாமல் அள்ளிக் கொடுத்தார். வந்தவர்கள் அனைவரது மனமும் அதனால் நெகிழ்ந்து போனது. பின்னர், அனைவருக்கும் விடை கொடுத்து அனுப்பினார் தசரதர். பின்பு சரயூ நதியில் நீராடி விட்டுத் திரும்பியவர், தனது குல குருவான வஷிஸ்டரை வணங்கி நின்றார், வஷிஸ்டரின் அறிவுரைப் படி ரிஷியஸ்ருங்க முனிவரின் கால்களில் விழுந்து வணங்கினார். தசரத சக்கரவர்த்தியை வாழ்த்திய ரிஷியஸ்ருங்க முனிவர், மன்னரிடம் விடை பெற்றுக் கொண்டு தம்முடன் வந்த முனிவர்களுடன் தேரின் மீது ஏறி, உரோமபாத மன்னரின் அங்க தேசத்தை நோக்கிப் புறப்பட்டார். 

காலங்கள் மெல்ல நகர்ந்தன, தசரதச் சக்கரவர்த்திகளின் மூன்று தேவிமார்களும், அந்தச் சுதையை உண்டதன் காரணமாகக் கருவுற்றார்கள். அயோத்தி நகரமே மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. தசரதர் மனம் மகிழ்ந்தார். எங்கும் மங்கள வாத்தியங்கள் இசைத்தபடி இருந்தன. ஏற்ற பருவம் வந்தது, கௌசல்யா தேவி பூனர்பூச நக்ஷத்திரத்தில் கடக லக்னத்தில் திருமாலின் அம்சமான ஸ்ரீ ராமபிரானை புதல்வனாகப் பெற்றாள். தேவர்கள் வாழ்த்துக் கூற, வானுலகில் இருந்து வண்ண மலர்கள் பொழிந்தன. கைகேயி பூச நக்ஷத்திரத்தில், மீன லக்னத்தில் சுதர்ஷன சக்கிரத்தின் அம்சமான பரதனை புதல்வனாகப் பெற்றாள். சுமித்திராதேவி ஆயில்ய நக்ஷத்திரத்தில் கடக லக்னத்தில் ஆதிசேஷனது அம்சமான லக்ஷ்மணனை புதல்வனாகவும், மக நக்ஷத்திரத்தில் சிம்ம ராசியில் பாஞ்சசன்னியம் என்னும் சங்கத்தின் அம்சமான சத்ருக்கனன் என்ற புதல்வனையும் பெற்றெடுத்தாள். 

தேவர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள் என வானுலகத்தில் அனைவரும் அநேக வாத்தியங்கள் ஒலிக்க "ஸ்ரீ ராமர் அவதரித்து விட்டார், இனி நமக்கு விடுதலை தான், அரக்கர்கள் ஒழிந்தார்கள்" என ஆடிப் பாடி கொண்டாடினர்.

மறுபுறம், அயோத்தியில் தேவிமார்களின் தோழியர்கள் தசரதரிடம் சென்று அவருக்கு புதல்வர்கள் பிறந்த செய்தியைத் தெரிவித்தனர். உடனே, தசரதர் அச் சுபச் செய்தியைக் கொண்டு வந்த தோழிகளுக்கு பொன்னையும், பொருளையும் பரிசாகக் கொடுத்தார். அடுத்த கணம், அரண்மனை ஜோதிடர்களை வரவழைத்துக் குழந்தைகள் பிறந்த வேளையை சொல்லி ஆருடம் கேட்டார். வந்த ஜோதிடர்கள் அக்குழந்தைகள் பிறந்த நேரத்தைக் கணக்கிட்டு "உலகத்துக்கு நேர்ந்துள்ள வருத்தம் யாவும் இப்புதல்வர்களால் நீங்கும்" என்று அப் புதல்வர்கள் பிறந்த வேளையைப் பாராட்டினார்கள்.

பிறகு தசரதர், தனது குல குருவான வசிஷ்டருடன் தேவிமார்களின் அருகில் சென்று, தமது குமாரர்களின் அழகிய திரு முகத்தைக் கண்டார். மகிழ்சிக் கடலில் மூழ்கினார், அதன் பயனாய் கோயில்களுக்கு கூடுதல் நிலங்களை வழங்கினார், ஏழு வருடங்களுக்கு அயோத்தி மக்களின் வரியை நீக்கினார், தனது பொக்கிஷ சாலைகளைத் திறந்து வறியவர்களுக்கு வாரி வழங்கினார், சிறையில் இருந்த போர்க் கைதிகளை எல்லாம் விடுதலை செய்தார்.

அக்குழந்தைகள் பிறந்த பதிமூன்றாம் நாளில் பெயர் சூட்ட எண்ணி தனது குல குருவான வசிஷ்டரிடம் தெரிவித்தார் தசரதர். வசிஷ்ட முனிவர் மன்னரின் வேண்டுகோளை ஏற்றுத் தானே அக்குழந்தைகளுக்கு பெயர் சூட்டத் தொடங்கினார். கோசலை பெற்ற மைந்தனுக்கு "இராமன்" என்றும், கைகேயியின் மைந்தனுக்குப் "பரதன்" என்றும். சுமித்திரையின் முதல் புதல்வனுக்கு "லக்ஷ்மணன்" என்றும், இரண்டாவது புதல்வனுக்கு "சத்துருக்கன்" என்றும் பெயரிட்டார்.

புதல்வர்களுக்குப் பெயர் சூட்டு விழா முடிந்ததும், வந்தவர்கள் அனைவருக்கும் அறுசுவை விருந்து படைத்தார் தசரதர் .மேலும், தசரத குமாரர்கள் நால்வரும் இனிய மழலைச் சொற்களைப் பேசி எல்லோருடைய மனதையும் மகிழச் செய்தார்கள்; இருள் நீக்கும் சூரியனைப் போல இங்கும் அங்கும் தவழ்ந்தார்கள்; பூமா தேவி அவர்களைத் தாங்கிய பெருமையைப் பெற்றாள். அக்குமாரர்களுக்குத் தகுந்த வயது நெருங்கியவுடன் வேதங்கள் கூறிய முறைப்படி உபநயனத்தை செய்து வைத்தார் வஷிஸ்டர். பிறகு அவர்களுக்கு தனுர் வேதம், ஆயுர் வேதம், மந்திரோபதேஷம், யானை ஏற்றம், குதிரை ஏற்றம், தேர் ஏற்றம் முதலாக க்ஷத்திரியர்களுக்கு உரிய மற்றைய வித்தைகளையும் முறைப்படி கற்றுக் கொடுத்தார். தசரத குமாரர்கள் நால்வரும் வஷிஸ்டர் அருளிய வித்தைகளை ஐயம் இல்லாமல் கற்றுத் தேர்ந்தார்கள். இராமனுக்கு எல்லாத் தம்பியர் மீதும் அன்பு இருந்தாலும், லக்ஷ்மணன் மீது மட்டும் அதிக பாசத்துடன் பழகினான். லக்ஷ்மணனும் அப்படித்தான், ராமன் மீது அதிக பாசத்துடம் இருந்தான். இராமபிரானும்,இளையவன் லக்ஷ்மணனும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் எப்பொழுதும் மேகங்கள் தவழ்கிற சோலைகளிலும், தடாகங்களிலும் கூடி விளையாடித் திரிந்தார்கள்.

அதேபோல மறுபுறம் பரதனும், சத்துருக்கனும் இணை பிரியாமல் இருந்தனர். அவ்விருவரும் தேரின் மீதும், குதிரைகளின் மீதும் ஏறினாலும், வேத சாஸ்திரங்களைக் கற்கும் காலத்திலும் ஒரு கணப் பொழுதும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் இருந்தார்கள். அந்நான்கு புதல்வர்களும் தினந்தோறும் காலைப் பொழுதில் நகரத்துக்கு வெளியே உள்ள சோலைகளில் வசிக்கும் முனிவர்களிடம் சென்றார்கள். அவர்களோடு பேசிப் பல நூற் பொருள்களையும் கேட்டு அறிந்தார்கள். மாலைப் பொழுதில் நகரத்துக்கு மீண்டும் திரும்பி வந்தார்கள். அயோத்தி மக்கள் அனைவரும் அந்த அரச குமாரர்கள் நால்வரும், நல் வாழ்வு வாழ வேண்டும் என தினமும் தங்கள் குல தெய்வங்களைப் பிரார்த்தனை செய்தனர். இவ்வாறு இராம பிரானின் இளமைக் காலம் அயோத்தி மக்களும், தம்பி மார்களும், முனிவர்களும் சூழ்ந்து இருக்க இனிதாகக் கழிந்தது