கையடைப் படலம்

கையடைப் படலம்

bookmark

பாலகாண்டம்

பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

கையடைப் படலம் 

(தரசதன் தனது மைந்தர்களான இராமன். இலக்குவன் இருவரையும் விசுவாமித்திர முனி வசம் அடைக்கலமாக ஒப்புவித்த செய்தியைக் கூறும் பகுதியிது ‘கையடை’என்பதற்கு அடைக்கலம் என்பது பொருள். தயரதனிடம் விசுவாமித்திரன் வருதல் – மன்னன் முனிவனை வணங்கி வரவேற்றல். மன்னனை முனிவன் புகழ்ந்து பேசுதல். வேள்வியைக் காக்க இராமனைத் தன்னுடன் அனுப்புமாறு கேட்டல் - தயரதன் துயர் – தானே வேள்வி காக்க வருகிறேன் எனல் – முனிவன் சினம் கொள்ளலும் அதன் விளைவுகளும் –வஷிஸ்டன் உரையால் – தயரதன் தெளிவு அடைதல் - இராம - இலக்குவர்களை

முனிவனிடம் ஒப்படைத்தல் – சினம் நீங்கிய முனிவன் அரசிளங் குமரர்களைத் தன்னுடன் அழைத்தேகல் ஆகிய - செய்திகள் இப்பகுதியில் கூறப்படும்.)

ஒரு நாள் அயோத்தியில் அழகிய மலர் இதழ்களின் ஈரம் காய்ந்தது அந்த அழகான சூரிய உதயத்தால். அச்சமயத்தில், தசரத சக்கரவர்த்தி அழகிய மண்டபம் ஒன்றில், இந்திரன் கொலு வீற்று இருப்பது போன்று, தனக்கே உரிய கம்பீரமான அந்த அழகுடன் சிங்காசனத்தில் அமர்ந்து இருந்தார். அப்பொழுது பெருங் கோப குணத்தைக் கொண்ட கௌசிக முனிவர் அம்மண்டபத்திற்குள் வந்தார். இவரை விசுவாமித்திரர் என்றும் கூறுவார்கள் (விசுவா என்றால் உலகம் ; மித்திரர் என்றால் நண்பர்.அதாவது, இவரது இந்தப் பெயருக்கு இவ்வுலகத்தின் நண்பர் என்றும் ஒரு பொருள் உண்டு. இவருக்கு அவ்வாறு பெயர் சூட்டியது யமன் எனப்படும் கால தேவன் ஆவார்).

கௌசிக முனிவரைக் கண்ட தசரதர் ஒரு புறம் மகிழ்ச்சி அடைந்தாலும்,அவரது கோபமான முகத்தைப் பார்த்து கொஞ்சம் பர பரப்பும் அடைந்தார்.அம்முனிவரைப் பார்த்த மாத்திரத்தில் தனது சிம்மாசனத்தில் இருந்து எழுந்தார். அவர் அருகில் பணிவுடன் சென்றார்.அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினார். பிற்பாடு வரவேற்று இரத்தினங்கள் பதித்த பசும் பொன் ஆசனத்தில் அம்முனிவரை அமரச் செய்தார்.பின்னர் தசரதர் அம்முனிவரிடம் "பிரம்மரிஷி பட்டம் பெற்ற முனிவரே! தாங்கள் இந்நகருக்கு வந்திருப்பது இந்த பூமி செய்த தவத்தாலோ? இல்லை, நான் செய்த தவத்தாலோ? இரண்டுமே இல்லை! எனது முன்னோர் செய்த தவப் பயன் தான்!" என்று உபசார வார்த்தைகளை பேசி மகிழ்ந்தார்.

உடனே கௌசிகர்,"பகைவரைப் போரில் வென்றவனே! வேல் ஆயுதங்களை உடையவனே! தேவர்களுக்கும் என்னைப் போன்ற ரிஷிசிரேஷ்டர்களுக்கும் துன்பம் ஏற்பட்டால் புகலிடமாவது உனது நகரமல்லவா? அயோத்தியே அமரவாதிப் பட்டணம் ஆகும்; சுவர்க்கலோகமாகும்; இப்போது இராமனின் பிறப்பிற்குப் பிறகு இந்நகரம் திருப்பாற்க்கடலுக்கு ஒப்பாகும்! சக்கரவர்த்தியே! முன்பு ஒரு காலத்தில் இந்திரன் அரக்கர்களிடம் தோல்வி அடைந்து உன்னிடம் வந்து முறையிட்டான். அப்போது நீ அந்த அரக்கர்களின் தலைவனான சம்பரனை அழித்து, திரும்பவும் தேவேந்திரனுக்கே அந்த இந்திர லோகத்தை மீட்டுக் கொடுத்தாய். இன்று இந்திரன் நீ அவனுக்கு மீட்டுக் கொடுத்த அரசை அல்லவா ஆண்டு கொண்டு இருக்கிறான்!" என்று பலவாறு தசரதனை புகழ்ந்து உரைத்தார்.

முனிவரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தசரத சக்கரவர்த்தி அக மகிழ்ந்தார். கைகளை குவித்து வணங்கியபடி அம்முனிவரின் முகத்தைப் பார்த்து," தேவரீர், தாங்கள் வந்ததால் நான் பெரும் பயனைப் பெற்றேன். நான் தங்களுக்குச் செய்ய வேண்டியது ஏதேனும் உண்டோ? அப்படி இருந்தால் சொல்லுங்கள், தாங்கள் காலால் இட்டப் பணியை, நான் எனது தலையால் முடிக்கிறேன்" என்றார்.

"யாம் காட்டிலே ஒரு பெரும் யாகத்தை நடத்த சித்தம் கொண்டு இருக்கிறோம். அந்த யாகத்திற்க்குக் கொடிய அரக்கரால் தீங்கு நேராமல் காப்பதற்காக, உன்னுடைய புதல்வன் இராமனை என்னுடன் அனுப்பி வைப்பாயாக!"என்று தான் வந்த காரணத்தை எடுத்துச் சொன்னார் கௌசிக முனிவர். அம்முனிவரின் அந்த வார்த்தைகள், தசரதனுக்கு மார்பில் பட்ட காயத்தை வேல் கொண்டு குத்துவது போல இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சொல்ல முடியாத துன்பத்தை தசரதன் அக்கணம் அனுபவித்தான்.

உடனே மறுமொழியாக அம்முனிவர் பெருமானிடம் தசரத மகா சக்கரவர்த்தி "ரிஷிகளுள் ராஜ ரிஷியே, இராமன் இளம்பிராய முடையவன். ஆயுதத்தேர்ச்சியும் அந்த அளவுக்கு இல்லாதவன். ஆதலால் அவன் வேண்டாம். அரக்கர்களால் தங்கள் யாகத்திற்கு எந்தத் தடையும் இல்லாமல் நான் காத்துத் தருகிறேன். மும்மூர்த்திகள் கூட உங்கள் யாகத்திற்க்குத் தடை ஏற்படுத்தாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து உடனே யாகத்தை செய்வதற்கு எழுந்தருள்க!" என்று கூறினார்.

தம் வார்த்தைகளை மறுத்து தசரதர் பேசியதால் விசுவாமித்திரர் பெருங் கோபங்கொண்டு ஆசனத்தை விட்டு எழுந்தார். அவரது கோபத்தைக் கண்ட தேவர்கள் " இம்முனிவரால் உலகத்துக்கே ஆபத்து ஏற்பட்டு விடுமோ" என்று கவலை அடைந்தார்கள். சூரியன் மறைந்தான்; உலகங்கள் நிலை பெயர்ந்து சுழன்றன;அப்பொழுது அப் பெரும் முனிவர் தனது புருவத்தை நெறித்துப் பெருஞ் சிரிப்பு சிரித்துக் கண் சிவந்தார். அதனால் திசைகள் எல்லாம் இருண்டன.

விசுவாமித்திரரின் மகிமைகள் எல்லாம் முன்பே அறிந்தவர் வசிஷ்டர் பெருமான். ஆதலால், "அம்முனிவரின் கோபம் சக்கரவர்த்திக்கும், அவரது திருமகனுக்கும் என்ன தீங்கு ஏற்படுத்தி விடுமோ?" என்று சந்தேகித்த வசிஷ்டர் விசுவாமித்திரரிடம் சமாதானம் கூறினார். பின்பு சக்கரவர்த்தியிடம்," இம்முனிவர் பெருமான் இராமனைத் தரும்படிக் கேட்பதெல்லாம் இராமனுடைய நன்மைக்காகத் தான். இந்த முனிவர் பெருமானால் உனது குமாரனுக்கு வருங்காலத்தில் ஏற்பட இருக்கும் நன்மைகளை நீயே தடுக்காதே! எனது ஆலோசனை யாதெனில் உடனே உனது குமாரனை இவருடன் அனுப்பி வைப்பாயாக!" என்று கூறி முடித்தார்.

குல குரு வசிஷ்டர் பெருமானே இவ்வாறு கூறிய பின்னர், தசரதனுக்கு இனி மறுத்துப் பேச என்ன இருக்கிறது. இராமனை அழைத்து வரும் படி ஏவலர்களிடம் பணித்தார் தசரதர், அதன்படி இராமபிரானும் அழைத்து வரப்பட்டார். இராமபிரானை பின் தொடர்ந்து நிழல் போல லக்ஷ்மணனும் அவைக்கு வந்து சேர்ந்தான்.

தவ யோகியும், ராஜ ரிஷியுமான விசுவாமித்திரரிடம் இராம, லக்ஷ்மணனை சுட்டிக் காட்டியபடி "தவக் கொழுந்தே! இந்த இளங் குமாரர்களுக்கு இனி தந்தையும் தாங்கள் தான், தாயும் தாங்கள் தான், இவர்களை தங்களிடம் ஒப்படைக்கிறேன். இவர்களுக்கு வேண்டிய நன்மைகளை செய்து அருள்வீராக!" என்று அவரிடம் தனது குமாரர்களை ஒப்புவித்தார் தசரத சக்கரவர்த்தி.

கௌசிக முனிவர், தசரத குமாரர்களை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டார். அவரது மனதில் முன்பு தோன்றிய பெரும் சினம் தணிந்து, தசரதரை வாழ்த்தினார். பிறகு தசரத மைந்தர்களைப் பார்த்து," புறப்படுவோம் குமாரர்களே, கடமை நம்மை அழைக்கிறது. உடனே சென்று யாகத்தை செய்து முடிப்போமாக !" என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.

இராமபிரான் இடையில் உடை வாளைக் கட்டிக் கொண்டார். இடக்கையில் ஒரு வில், தோள்களில் அம்புறாத் தூணி, அது நிறைய அம்புகள் என விசுவாமித்திரரை பின் தொடர்ந்தார். அண்ணன் காட்டியே அதே வழியில் லக்ஷ்மணனும் தனது வில், அம்பு உட்பட அனைத்து ஆயுதங்களுடன் அண்ணனைப் பின்தொடர்ந்து சென்றான். மூவரும் அயோத்தியின் எல்லையைக் கடந்து ஒன்றரை யோசனை தூரம் வழி நடந்து சரயூ ஆற்றின் தென் கிழக்கே வந்து சேர்ந்தார்கள். அப்போது சூரியன் அஸ்தமித்து விட்டதால், அம்மூவரும் ஆற்றங்கரையில் இயற்கையாக காணப்பட்ட சோலையில் தங்கினார்கள். மீண்டும் அடுத்த நாள் காலையில் சூரியன் உதயமானதும் தங்களது பிரயாணத்தைத் தொடர்ந்தனர். இப்போது அந்த ஆற்றுக்கு வடகரைக்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது இராமர், விசுவாமித்திர முனிவரைப் பார்த்து," நாம் தங்கி இருந்த சோலையைப் பற்றிச் சொல்லியருளுதல் வேண்டும்!" என்று வேண்டி நின்றார்.