தாடகை வதைப் படலம்

தாடகை வதைப் படலம்

bookmark

பாலகாண்டம்

பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

தாடகை வதைப் படலம்

(தாடகை என்னும் அரக்கியை இராமபிரான் விசுவாமித்திர முனிவனது விருப்பத்தின்படி கொன்றருளிய கதையைக் கூறும் பகுதி இதுவாகும். அங்க நாட்டிலுள்ள காமன் ஆச்சிரமச் சிறப்பை முனிவன் ராமனுக்குக் கூறுதலும். அங்குத் தங்கி மறுநாள் மூவரும் பாலைவனம் ஒன்றை அடைதலும். பாலையின் வெம்மையைத் தாங்கும் பொருட்டு இராம, இலக்குவர்களுக்கு விசுவாமித்திரன் இரு மந்திரங்களை உபதேசித்தலும் - தாடகையின் வரலாறு கூறுதலும் – தாடகையின் வருகையும் - பெண் என நினைத்த ராமன் கணைதொடாது நிற்றலும். முனிவன் ராமனை வேண்டுதலும் - முனிவன் ஏவலுக்கு இராமன் இசைதலும்-இராமன் அம்பேவித் தாடகையைக் கொல்லுதலும் -வானவர் அதனால் மகிழ்ந்து இராமனை வாழ்த்தலும் இப்படலத்துள் விவரித்துக் கூறப்பட்டுள்ள செய்திகளாகும்.)

விசுவாமித்திரர் இராமபிரானை நோக்கி,"இந்தச் சோலையைப் பற்றிக் கேட்டாய் அல்லவா? இதனை காமன் ஆசிரமம் என்று அழைப்பார்கள். இது சிவபெருமான் யோகாப்பியாசம் செய்த இடமாகும். சிவபெருமானின் யோகாப்பியாசத்தை கெடுக்கும் வகையில் மன்மதன் அவர் மீது மலர் அம்புகளைத் தொடுத்தான். அதனால் தனது யோகாப்பியாசம் கலைந்த சிவ பெருமான் கோபம் கொண்டு, தனது நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்தார். ஆனால், மன்மதன் அமுதம் உண்ட பயனாக அவன் உயிர் இழக்காமல் அரூபியாக (ரூபம் இல்லாதவனாக) மாறினான். அது மட்டும் அல்ல, கஜாசுரன் என்பவன் அருந்தவம் செய்து பெரு வரம் பெற்றவன். பெற்ற வரத்தால் மமதை கொண்ட அந்த அரக்கன் தேவர்களை துன்புறுத்த ஆரம்பித்தான். அவனுக்கு அஞ்சிய தேவர்கள், இந்த இடத்தில் தவம் செய்து வந்த ஈசனை சரணம் அடைந்தார்கள். தன்னை சரணம் அடைந்த அந்த தேவர்களுக்கு அபயம் அளித்தார் சிவபெருமான். கோபமுற்ற கஜாசுரன் சிவனையே எதிர்த்துப் போர் செய்ய இந்த இடத்திற்கு வந்தான். அவனை தோற்கடித்து தனது காலால் உதைத்துத் தள்ளிக் கொன்றார் ஈசன். அத்துடன் அவனது தோலையும் உரித்துப் போர்த்துக் கொண்டார்" என்று பதில் உரைத்தார்.

அப்போது அங்கு வசிக்கும் முனிவர்கள், அம்மூவரும் வருவதைக் கண்டு அவர்களை வரவேற்று உபசரித்தார்கள். அந்த முனிவர்களின் வேண்டுதலை ஏற்று அம்மூவரும் அங்கேயே தங்கி, மறுநாள் தங்கள் பயணத்தை தொடர்ந்தார்கள். அன்றைய நடுப்பகலில் ஒரு பாலை வனத்தை வந்து அடைந்தார்கள்.

அப்பாலைவனத்தின் வெப்பம் பூவைக் காட்டிலும் மென்மையான இராமபிரானையும், அவன் தம்பி லக்ஷ்மணனையும் தாக்காமல் இருக்க, பிரம்ம தேவனால் தனக்கு உபதேசிக்கப் பட்ட " பலை, அதிபலை " என்னும் இரண்டு வித்தைகளையும் அவர்களுக்குச் சொல்லித் தந்தார் கௌசிக முனிவர். அக்கணமே அவர்கள் இருவருக்கும் அந்த மந்திரம் நன்றாக அவர்கள் மனதிலே பதிந்தது. அந்த மந்திரத்தின் பயனாக சூரிய வெப்பத்தால் சுட்டெரிக்கும் அந்தப் பாலைவனம் அவர்களுக்குக் குளிர்ந்த சோலையாகத் தோன்றியது. என்றாலும், ஸ்ரீ ராமர் மனதில் அந்தப் பாலைவனம் இதற்கு முன்னர் வெப்பமாக இருந்த காரணம் என்ன என்று அறியத் துடித்தார். தனது சந்தேகத்தை கௌசிக முனிவரிடத்திலேயே கேட்டு விட விளைந்தார்.

பிறகு, ஸ்ரீ ராமர் கௌசிக முனிவரிடத்தில்," இந்த நிலம் வெப்பமாவதற்கு என்ன காரணம்? காமனை எரித்த சிவபெருமானுடைய விழித் தீ இங்கே பட்டதா? இல்லை, வேறு எதனால் இந்த வெப்பம் ஏற்பட்டது?" என்று கேட்டார்.

கௌசிக முனிவர் அதைக் கேட்டு இராமனைப் பார்த்து, "அதற்கு உரிய காரணத்தை சொல்கிறேன், கேள்.சுகேது என்னும் ஒருவன் யட்ச குலத்தில் தோன்றினான்.அவன் யானை போன்ற கம்பீரத் தோற்றம் உடையவன்.மிக்க வலியவன்.அதே போல, மிகுந்த கோபத்தை உடையவனும் கூட.அவனுக்கு புத்திர பாக்கியம் கிடைக்க வில்லை. அதனால் புத்திர பாக்கியம் வேண்டி பிரம்மனை நோக்கிக் கடும் தவம் புரிந்தான்.அவனது தவத்தைக் கண்டு மகிழ்ந்து பிரம்மதேவனும் அவனுக்கு முன் தோன்றி,அவனது விருப்பப்படி "பேரழகியும் ஆயிரம் மத யானைகளின் பலத்தையும் கொண்ட ஒரு பெண் உனக்குத் தோன்றுவாள்" என்று கூறி மறைந்தார். பிரம்மனின் வாக்குப் படி சுகேதுவுக்கு ஒரு பெண் பிறந்தாள். அவளுக்கு, அவன் தாடகை என்று பெயரிட்டான்.அப்பெண் மணப்பருவம் அடைந்ததும் அவளைத் தனது இனத்தைச் சேர்ந்த யட்சர் தலைவனான சுந்தனுக்கு மணம் செய்து கொடுத்தான். சுந்தனும், தாடகையும் இரவும் பகலும் முடிவில்லாமல் இன்பம் அனுபவித்தார்கள். அநேக நாட்கள் கழித்துத் தாடகை மலை போன்ற மாரீசனையும் மற்போரில் சிறந்த சுபாகுவையும் பெற்றெடுத்தாள். அக்குமாரர்கள் இருவரும் மாயை முதலியவற்றுடன் வளர்ந்தார்கள்.

அப்போது அவர்களின் தந்தையான சுந்தன் செருக்குடன் தனது பலத்தின் மீது கர்வம் கொண்டு அகத்திய முனிவரின் ஆசிரமத்துக்குள் அத்துமீறி நுழைந்ததுடன் மட்டும் இல்லாமல், அங்கு சுகந்திரமாக சுற்றித் திரிந்த மான்களை எல்லாம் உண்ணத் தொடங்கியதுடன் ஆசிரமத்தை சூழ்ந்து இருந்த அழகிய மரங்களை எல்லாம் பிடுங்கி எறிந்தான். இதனைக் கண்ட அகத்திய முனிவர் கோபம் கொண்டு கண்களில் தீப்பறக்க சுந்தனை நோக்கினார். அந்தக் கணத்திலேயே சுந்தன் எரிந்து சாம்பல் ஆனான். தன் கணவன் இறந்து விட்ட செய்தி கேட்டத் தாடகை கோபத்துடன் "நான் அந்த முனிவரை கொன்று உண்பேன்" என்று சபதம் செய்தபடி அகத்திய முனிவரின்ஆசிரமத்தை நோக்கி விரைந்தாள்.

தாடகைக்குப் பாதுகாப்பாக அவளது இரு பலசாலியான புத்திரர்களும் உடன் சென்றார்கள். ஆசிரமத்தை அடைந்த அந்த மூவரும் பெரும் அட்டகாசம் செய்தனர். இதனால் கோபம் கொண்ட அகத்திய முனிவர், அம்மூவரையும் " யட்சர் குலத்தில் பிறந்திருந்தும், அரக்கர்கள் போல நடந்து கொண்டீர்கள் அதனால் நீங்கள் அரக்கர்களாக மாறுவீர்களாக" என்று சாபம் கொடுத்தார்.

அகத்திய முனிவரின் சாபத்தின் படியே அம்மூவரும் அரக்கர்களாக மாறினார்கள். அந்த உருவத்துடனேயே அவ்விடத்தை விட்டு நீங்கி இராவணனுடைய தாய் கேகசியைப் பெற்ற அரக்கர் அரசனான சுமாலியிடம் வந்து சேர்ந்தார்கள். அவனிடம்,"உனக்கு நாங்கள் சிறந்த புத்திரர்களாவோம்" என்று கூறி உறவு கொண்டாடினார்கள். சுமாளியுடன் அந்த இரு அரக்கர்களான சுபாகு மற்றும் மாரீசன் பாதாள லோகத்தில் வெகு காலம் தங்கினார்கள். பிறகு குபேரனிடம் இருந்த இலங்கையை இராவணன் கைப்பற்றியவுடன். சுமாலி முதலியோருடன், சுபாகுவும், மாரீசனும் இலங்கைக்கு சென்று விட்டனர். இலங்கை வேந்தன் இராவணன் அவர்களை மாமன் என்று அழைத்து உறவு கொண்டாடினான். அந்த துஷ்ட ராவணனின் தூண்டுதலால்,அந்த தாடகையின் இரு புத்திரர்களான சுபாகுவும், மாரீசனும் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து இன்றும் அக்கிரம செய்கைகளைப் புரிந்து வருகின்றனர்.

மறுபுறம் தாடகையும் "ஒரு முனிவரால் தானே எனது கணவர் இறந்தார்" எனக் கூறிக் கொண்டு அனைத்து முனிவர்களையும் பழி வாங்கக் கிளம்பி விட்டாள். அவள் நிரந்தரமாக வசிக்க ஒரு இடம் தேவைப்பட்டது, நெருப்புப் போல கொதிக்கின்ற மனமுடையவளாய் , வழி முழுவதும் அக்கினி வீசுகின்ற இந்த இடத்துக்கு வந்து சேர்ந்தாள். அவளால், அந்த நிலவைக் கூட பெயர்த்து எடுக்க முடியும், கடல் நீரைக் கூட அவள் பருகி விடும் அளவுக்கு சக்தி படைத்தவள். மேல் உலகத்தைக் கூட இடித்துத் தள்ளி விடுவாள், அத்தனை வல்லமை பொருந்தியவள். அவளது தோற்றம் பார்ப்பவர்கள் மத்தியில் மரண பயத்தை தோற்றுவிக்கும், விஷத்துடனும், இடியோசை போன்ற பெரிய ஒலியுடனும், பிரளய காலத்து அக்கினியுடனும், பெரிய இரண்டு மலைகளையும், இரண்டு பிறைச் சந்திரர்களையும் கொண்டு வரும் கடலைப் போன்ற உடலுடன் அவள் தோன்றுவாள். அந்தப் பொல்லாத தாடகை வசிப்பதால் தான் இந்த இடம் இப்படிப் பாலைவனம் போல மாறியது. மேலும், அவள் இலங்கை மன்னனான இராவணின் கட்டளைப்படி எனது வேள்விக்கும் இடையூறு செய்கிறாள். இந்த பிராந்தியத்தில் வசிக்கும் அப்பாவி உயிர்களை எல்லாம் கொன்று குவிக்கிறாள்.இன்னும் அவளைப் பற்றிக் கூற வேண்டுவதில்லை.அவளை நீ கொல்லாவிட்டால் இந்த தேசம் மட்டும் அல்ல, இந்த உலகமே அழிந்து விடும்!" என்று கூறி முடித்தார் விசுவாமித்திரர்.

விசுவாமித்திரர் சொன்ன விவரங்களை எல்லாம் இராமபிரான் இடக்கையில் வில்லைத் தாங்கிய படி பொறுமையுடன் கேட்டு முடித்துப் பிற்பாடு விசுவாமித்திரரை நோக்கி," தேவரீர் ! இந்தக் கொடும் செயலைப் தொழிலாகச் செய்து வரும் அந்தத் தாடகை சரியாக எந்த இடத்தில் இப்பிரதேசத்தில் வசிக்கிறாள்?" என்று கேட்க.

இராமபிரானின் கேள்விக்கு முனிவர் பதில் சொல்லத் தொடங்கிய போது தாடகையே அந்த இடத்திற்கு வந்தாள். அவள் அங்கே வந்த பொழுது, தனது கால்களை ஊன்றி வைக்க, அக்கால்களின் பாரத்தை தாங்க மாட்டாமல் நிலம் குழிபட்டது.

கோபத்துடன் அவர்களுக்கு அருகில் வந்த தாடகை தன் சிவந்த கண்களால் நெருப்புப் பொறி பறக்க அவர்களை விழித்துப் பார்த்தாள். மேலும் எரிமலை போலவும், புயல் சூழ்ந்த கடல் போலவும், இடியின் ஓசை போலவும், ஏழு உலகங்களும் பயப்பட அப்படி ஒரு ஆரவாரத்தை செய்தாள் தாடகை. பிறகு, அம்மூவரையும் பார்த்து மிகவும் ஏளனமாகச் சிரித்தாள். பின்னர் பெருங்குரலில், " அற்ப மானிடப் பதர்களே, நீங்கள் இங்கு வந்ததன் நோக்கம் தான் என்ன? இங்கு வந்து மரணம் அடைய வேண்டும் என்ற உங்கள் ஊழ்வினை காரணமாக வந்தீர்களா? இல்லை, இங்குள்ள உயிர்களை எல்லாம் கொன்று தின்று விட்டு, மேற்கொண்டு உணவு கிடைக்காமல் பசி உடன் வாடும் எனக்கு உணவாக இங்கே வந்தீர்களா?" என்று ஆணவமாக அவர்களைப் பார்த்துக் கேட்டாள் தாடகை.

மேலும், அவள் தனது கூறிய வேலினை அவர்களது மார்புக்கு முன்னாள் நீட்டி, "இந்த வேலால் உங்கள் மார்புகளைப் பிளந்து விடுவேன்" என்று கூறிய படி பற்களை நற, நற வென்று கடித்தாள். தாடகையின் அட்டகாசங்களை எல்லாம் பொறுமையுடன் பார்த்துக் கொண்டு இருந்தார் இராமபிரான். தம்பி லக்ஷ்மணனுக்கோ தாடகையின் சொல் கேட்டுப் பெரும் கோபம், ஆனால் ஸ்ரீ ராமரின் பொறுமை தம்பி லக்ஷ்மணனுக்கு புரியாத புதிராகத் தான் இருந்தது. ஆனால், ஸ்ரீ ராமர் பொறுமையுடன் இருந்த காரணத்தை விசுவாமித்திரர் நன்கு அறிவார். ஸ்ரீ ராமரின் எண்ணம் யாதெனில்,தாடகை ஒரு அரக்கியாகவே இருந்தாலும், அவளும் ஒரு பெண்தானே, பெண் கொலை பெரும் பாவமாயிற்றே என்று கொஞ்சம் பொறுமை காத்தார் அவ்வளவு தான்.

இதனை அறிந்த கௌசிக முனிவரான, விசுவாமித்திரர் இராமபிரான்டம்" இராமா! தசரதன் பெற்றத் திருமகனே! எவ்வளவு தீங்கு விளைவிக்க முடியுமோ அத்தனை தீங்கையும் என்னைப் போன்ற ரிஷிகளுக்கு விளைவித்து விட்டாள் இந்தத் தாடகை. நீ நினைப்பது போல் பெண்களைக் கொலை செய்வது பாவம் தான்; பலரும் கேலி செய்யக் கூடிய காரியம் தான். ஆனால், தாடகையோ பெண் என்ற ரூபத்தில் இருக்கும் ஆண்மை உள்ள பிசாசு. தனது பெயரை இவள் சொன்ன மாத்திரத்தில் பெரும் வீரர்கள் கூட சண்டையிடப் பயந்து பின்வாங்கிப் போவார்கள். இந்திரன் உட்பட ஏனைய தேவர்களுடனும் இவள் ஒரே நேரத்தில் சண்டையிட்டு வெற்றிக் கொள்ளக் கூடியவள். அப்படிப்பட்ட இவள் ஆண்மை நிறைந்து உள்ளவள் தானே? தவிர மந்திர மலை போன்ற பருத்த தோள்களை இந்தத் தாடகை பெற்று இருக்கிறாள். அப்படி என்றால், ஆடவர்களுக்கும், இவளுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?" என்றார்.

மேலும் கௌசிக முனிவர் தொடர்ந்தார்," சக்கரவர்த்தித் திருமகனே! வேறு ஒரு செய்தியையும் நான் உனக்குக் கூறக் கடமைப் பட்டு இருக்கிறேன். அது யாதெனில், முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கடுமையான போர் நடந்தது. அப்போது போரில் அசுரர்கள் தோற்று, திருமால் அவர்களைத் துரத்த, அவர்கள் ஓடிப் போய் பிருகு முனிவரின் ஆசிரமத்தில் நுழைந்து, அம்முனிவரின் பத்தினியான கியாதி என்பவளிடம் அடைக்கலம் கேட்டனர். அவளும் அவர்களுக்கு அபயம் கொடுத்துத் தனது ஆசிரமத்தில் மறைத்துக் காத்து வந்தாள். அதனை அறிந்த திருமால் பகைவரான அசுரரைக் காட்டும் படி அவளிடம் கேட்டார். எவ்வளவு வற்புறுத்தியும் அவள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் திருமால் அவளது தலையை தனது சுதர்ஷன சக்கரம் கொண்டு வெட்டினார். பின்பு, அந்த அசுரர்களையும் கொன்று ஒழித்தார். அதைப் போலத் தான் உலகங்களை எல்லாம் பாழடையச் செய்ய வேண்டும் என்று கருதிய விரோசனனுடைய மகளாகிய மந்தரை என்பவளைத் தேவேந்திரன் கொன்று ஒழித்தான். இவ்வாறு பெண் கொலையால் திருமாலுக்கும், தேவேந்திரனுக்கும் புகழ் தான் உண்டாயிற்று. பழி உண்டாகவில்லை.

அது போலத் தான், இந்த தாடகை என்ற அரக்கியை, நீ வதம் செய்தால் உனக்குப் புகழ் தான் உண்டாகும். சூரிய குலத்தில் தோன்றிய செல்வனே! தருமத்தை ஒழித்த இந்தத் தாடகைக்கு இதை விட வேறு ஆண்மை வேண்டுமா? யம தர்ம ராஜன் கூட பெண் என்று எல்லாம் பேதம் பார்க்காமல், அனைத்து உயிர்களையும் சமமாகக் கருதி வினைப் பயனுக்கு தகுந்த படி கொண்டு செல்கிறான். அந்த வகையில் நீயும் உனது கடமையை செய். நீ இவளிடம் கொண்ட கோபம் தணிந்தது அருளாகாது. எனவே, நீ உடனே இந்த அரக்கியைக் கொள்வாயாக" என்று விவரமாகக் கூறி முடித்தார் கௌசிக முனிவர்.

கௌசிக முனிவரின் வார்த்தைகளை கேட்ட ஸ்ரீ ராமர் தெளிவடைந்தார். விசுவாமித்திரரிடம் "முனிவர்களுள் தலை சிறந்தவரே, உமது வார்த்தைகளே எமக்கு வேத வாக்கியம். உமது சொல்படி இந்தத் தாடகை என்ற அரக்கியை நான் நிச்சயம் எனது அஸ்த்திரங்கள் கொண்டு கொல்வேன்" என சூளுரைத்தார்.

இவர்கள் இருவரது உரையாடலையும் கேட்டுக் கொண்டு இருந்த தாடகை மிகவும் கோபம் கொண்டாள். ஒரு சூலாயுதத்தை வரவழைத்து ஸ்ரீ ராமர் மீது அதி வேகமாக வீசினாள். விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமர் அந்தக் கணத்திலேயே பாணத்தை எடுத்துப் பிரயோகித்தார்.அவர் அழகிய வில்லின் குதையை வளைத்ததை எவரும் காணவில்லை. அதே போல பாணம் எடுத்துப் பிரயோகித்ததையும் கூட யாரும் காணவில்லை. எல்லாம் கண நேரத்தில் நடந்து முடிந்து விட்டது. ஆனால், அதே சமயத்தில் தாடகை எறிந்த சூலாயுதம் மட்டும் இராம பாணம் பட்டு துண்டுகளாகி விழுந்தததை எல்லோரும் பார்த்தார்கள்.

தாடகையின் கோபம் எல்லை மீறியது, தனது முழு அசுர சக்தியையும் பிரயோகித்து கல் மலையை ஸ்ரீ ராமர் மீது பெய்தாள். ஸ்ரீ ராமர் வில்லை வளைத்து அம்பு மலை பெய்யச் செய்து, அக்கல்மழை தம் மேல் விலாதபடிக்குத் தடுத்தார். தாடகை செய்வதறியாது திகைத்து நின்றாள், இப்படி ஒரு எதிர்ப்பை அவள் தனது வாழ் நாளில் பார்த்தது கூட கிடையாது. அக்கணத்தில் ஸ்ரீ ராமர் ஒரு சக்தி வாய்ந்த பாணத்தை தாடகை மீது ஏவினார். அந்த அம்பு வச்சிர மலையில் உள்ள கல்லைப் போன்ற உறுதியான அவளது மார்பில் தைத்தது. பின்பு, அங்கே தங்கியிராமல் அவளது முதுகுப்புறமாக உருவிக் கொண்டு, போய்விட்டது.

அடுத்த கணம் தாடகை தனது நெஞ்சில் பாய்ந்த இராம பாணத்தின் வேகத்தைத் தாங்க மாட்டாமல் கீழே விழுந்தாள். புழுதி பறந்த அந்தக் காட்டில் தாடகையின் ஆவி பிரிந்தது. அவளுடைய அழிவே, இராவணின் அழிவுக்கு உறுதி கூறுவதாக அமைந்தது.

வானுலகில் இருந்தபடி ராம, தாடகை யுத்தத்தைக் கண்டு கொண்டு இருந்த தேவர்கள். தாடகை இறந்த மாத்திரத்தில் ஸ்ரீ ராமர் மீது பூ மழை பொழிந்தனர். அத்துடன் விசுவாமித்திரர் முன் தோன்றிய தேவர்கள் அவரிடம் " இனி அசுரர்களின் அழிவு நிச்சயம், தாங்கள் தேவர்களாகிய எங்களின் பொருட்டு உங்களிடம் இருக்கும் திவ்ய அஸ்த்திரங்கள் அனைத்தையும் ராம, லக்ஷ்மனரிடம் தயை கூர்ந்து தந்து விடுங்கள்" என்று கூறி விட்டுச் சென்றனர்.