துந்துபிப் படலம்

கிட்கிந்தா காண்டம்
சீதையைப் பிரிந்த இராம இலக்குவர்கள் தேடியலைந்தனர். வழியில் கிட்கிந்தை எனும் வானரங்கள் ஆளும் நாட்டைச் சென்று சேர்ந்தனர். அங்கே அனுமன், சுக்கிரீவன் ஆகியோரின் நட்பைப் பெற்றனர். பிறகு சுக்கிரீவனின் சகோதரனான வாலியைக் கொன்று கிட்கிந்தையின் ஆட்சிப் பொறுப்பை சுக்கிரீவனுக்கு அளித்தனர். அதனால் இது கிட்கிந்தா காண்டம் எனப்படுகிறது. கிட்கிந்தா காண்டம் பதினேழு படலங்களைக் கொண்டுள்ளது.
துந்துபிப் படலம்
(வாலியால் கொல்லப்பட்ட துந்துபி என்னும் அரக்கனின் உலறிய உடம்பை இராமன் தம்பி இலக்குவன் கால் விரலால் உந்திய செய்தியை இப்படலம் உரைக்கிறது. மயன் மைந்தனாகிய துந்துபி வாலியிடம் வலிந்து சென்று போரிட்டு மாண்டான். வாலி அவன் உடலை வீசி எறிய, அது ருசியமூக மலையில் மதங்க முனிவர் இருக்கையருகே விழுந்தது. தாம் வாழும் இடம் மாசுற்றதாகக்கருதி வாலிக்கு அம்முனிவர் சாபமளிக்க வாலி அதனால் அந்த எல்லைக்கு வர இயலாமல் போயிற்று.
சுக்கிரீவனுடன் நட்புக் கொண்ட இராமன் அந்த மரா மரங்களை துளைத்த பின்னர் அவ்வரக்கனது எலும்புக் கூட்டருகே வந்தார். அந்த எலும்புக்கூடுகள் பற்றி சுக்கிரீவனிடம் கேட்கிறார். சுக்கிரீவன் துந்துபியின் வரலாற்றைக் கூற, பின் அது கேட்டு இராமன் ஏவ இலக்குவன் தன் கால் விரலால் அவ்வுடலை உந்தினான். அது பிரமலோகத்தை அடைந்து திரும்பி வந்து விழுந்தது. இலக்குவனுடைய திறமையினையும் இப்பொழுது நேரில் கண்டதால், வானரக் கூட்டம் பெரிதும் மகிழ்ந்தது. இவையே இப்படலத்தில் காணப்படும் செய்திகள்)
சுக்கிரீவன் கூறிய துந்துபியின் கதை:
" எருமைக் கடாவின் வடிவத்தைக் கொண்டவன் துந்துபி என்னும் அரக்கன். அவன் இயற்கையாகப் பெற்று இருந்த வலிமையாலும், வரபலத்தாலும் மிகுந்த செருக்குக் கொண்டவனாக இருந்தான். அந்தச் செருக்கால் துந்துபி திருமாலுடன் போர் செய்ய ஆசைப்பட்டான். அதனால், தவம் செய்து திருமாலை வழிய அழைத்து அவரையே வம்புக்கு இழுத்தான். ஆனால், திருமாலோ அவனிடம் போர் புரிய மறுத்து, ஈசனிடம் அவனது கோரிக்கையை வைக்குமாறு கூறினார்.
உடனே ஈசனிடம் போர் புரிய ஆசைப்பட்டு இமய மலை சென்று தவம் செய்து ஈசனை அழைத்தான். ஈசனும் வந்தார், அவரிடமும் அவன் போருக்கு அரை கூவல் விடுத்தான். ஆனால், அவனிடம் போர் புரிய விரும்பாத ஈசன்," நீ முதலில் இந்திரனை தோற்கடித்து விட்டு என்னிடம் வா. அப்போது நாம் இருவரும் மோதிப் பார்க்கலாம்" என்று துந்துபியை இந்திரனிடம் அனுப்பி வைத்தார்.
உடனே எரிச்சலுடன் துந்துபி சொர்கத்தை அடைந்தான், இப்போது இந்திரனை வம்புக்கு இழுத்தான். இந்திரனும் துந்துபியின் அரை கூவலை ஏற்று சுவர்கத்தின் வாயிலுக்கு வந்தான், துந்துபி, இந்திரனிடம் " வா என்னுடம் நேருக்கு நேர் போர் செய்" என்றான்.
அதற்கு இந்திரன்," நீ உண்மையில் அதீத பலம் உள்ள வீரன் என்றால், முதலில் கிஷ்கிந்தையில் எனது மகன் வாலியுடன் யுத்தம் செய்து ஜெயித்து விட்டுப் பிறகு என்னிடம் வா. பார்க்கலாம் " என்றான். இந்திரன் கூறிய வார்த்தைகளால் கோபம் கொண்ட துந்துபி," அந்த வாலி என்ன அவ்வளவு பெரிய பலசாலியா? அவனைக் கொன்று விட்டு உன்னை ஒரு கை பார்க்கிறேன்" என்று இந்திரனிடம் சவால் விடுத்தான். துந்துபி விடுத்த சவாலை கண்டு இந்திரன் நகைத்தபடி அவனை சுவர்கத்தில் இருந்து கிஷ்கிந்தைக்கு வழி அனுப்பினான்.
இந்திரனின் கேலிச் சிரிப்பால் இன்னும் ஆத்திரம் அடைந்த துந்துபி நேராக கிஷ்கிந்தை வந்தான். வாலியின் அரசவை வாயிலில் வந்து எமனை பெயர் சொல்லி அழைப்பது போல வாலியை அழைத்தான். வாலி அரசவையில் இருந்து தனது அரண்மனை வாயிலுக்கு வருவதற்குத் தாமதமாகவே, தகாத வார்த்தைகள் சொல்லி வாலியை கோபப்படுத்தினான். அந்த வார்த்தைகளால் வெகுண்ட வாலி துந்துபியைத் தாக்க, துந்துபியும் பதிலுக்கு வாலியைக் கடுமையாகத் தாக்கினான். அவர்களுக்குள் யுத்தம் தீவிரம் அடைந்தது. ஒரு கட்டத்தில் வாலியை சமாளிக்க முடியாத துந்துபி ஓடத் தொடங்கினான். அவனை துரத்தி, துரத்தி அடித்துக் கொண்டே ஓடினான் வாலி. இறுதியாக, இருவரும் ருசியமூக பர்வதத்தை அடைந்தனர். இனி வாலியிடம் இருந்து உயிருடன் செல்ல இயலாது என்பதை உணர்ந்த துந்துபி, மீண்டும் பலம் கொண்ட மட்டும் வாலியை தாக்கத் தொடங்கினான். அந்த சமயம் வாலிக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இவ்வாறு, அவர்களுக்குள் மூண்ட அந்த யுத்தம் சுமார் ஒரு வருட காலம் தொடர்ந்தது.
இறுதியில், வாலி துந்துபியின் தலையில் பலம் கொண்ட தனது கைகளால் அடித்து அவனது கபாலத்தை நொறுக்கினான். அப்போதும் துந்துபி அரை உயிருடன் இருந்தான். அது கண்ட வாலி, அவனை தனது ஒரே கையால் தூக்கி சுற்றி விட்டெறிந்தான். வாலி சுற்றிய சுற்றிலேயே துந்துபி இறந்து விட்டான். அவன் தூக்கி எறிந்த சடலம், அப்போது இந்த ருசியமூக பர்வதத்தில், ஆசிரமம் அமைத்துத் தவம் செய்து வந்த மதங்க முனிவரின் இருக்கை அருகே போய் விழுந்தது. அப்போது துந்துபியின் உடல் சிதறியது. ரத்தமும்,சதையும் ஆசிரமம் முழுவதும் தெரித்ததால் அந்த ஆசிரமத்தின் புனிதத் தன்மை கெட்டு விட்டதாக உணர்ந்த மதங்க முனிவர், அந்த அரக்கனின் உடல் எவ்வாறு அங்கு வந்து விழுந்தது என்பதை தனது ஞான திருஷ்டி மூலம் அறிந்து கொண்டு, அதற்குக் காரணமான வாலியை," வாலி, இதெற்கெல்லாம் காரணம் நீயா?.உனக்கு நான் சாபமிடுகிறேன். இன்னொரு முறை நீ ருசியமூக பர்வதத்தில் காலடி எடுத்து வைத்தால், உனது தலை சிதறி வெடிக்கட்டும். அது மட்டும் அல்ல, உனக்கு மிகவும் வேண்டியவர்கள் அல்லது நண்பர்கள் இந்த மலையை அடைந்தால், அவர்கள் அப்போதே கல்லாக மாறி விடுவார்கள் " என்று கூறி சபித்தார்.
அன்று அந்த மகாத்மாவான மதங்க முனிவர் வாலியை சபித்ததால் தான், இன்று என்னால் இந்த ருசியமூக மலையில் தஞ்சம் அடைய முடிந்தது. அதனால் இன்றும் அந்த முனிவரை நான் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்" என்று சொல்லி முடித்தான் சுக்கிரீவன். மேலும் தொடர்ந்தவன் ஸ்ரீ ராமனிடம்," அப்படி இறந்த துந்துபியின் எலும்புக் குவியல்கள் தான் இவை" என்பதையும் தெரிவித்தான்.
சுக்கிரீவன் கூறிய கதையைக் கேட்ட இராமர், லக்ஷ்மணனை நோக்கி," வீரனே! இந்தத் துந்துபியின் உடற் கூட்டை அப்பால் தள்ளு!" என்று கட்டளையிட்டார்.
உடனே லக்ஷ்மணன் அந்தக் கட்டளைக்குக் கீழ்படிந்து அந்தக் கூடுகள் அனைத்தையும் தனது கால் விரலினால் தள்ளி எறிந்தான். அந்த எலும்புக்குவியல் அனைத்தும் அந்தக் கணத்திலேயே மறுபடியும் ஆகாயத்தை அடைந்து மீண்டும் திரும்பி வந்து பூமியில் விழுந்தது.
அப்போது லக்ஷ்மணனின் வலிமையைக் கண்ட வானரர்கள் எல்லோரும் மகிழ்ந்து ஆராவாரம் செய்தனர். பிறகு எல்லோரும் அழகிய ஒரு சோலையில் வந்து தங்கினார்கள். சுக்கிரீவன் அந்தச் சமயத்தில் ஸ்ரீ ராமபிரானை நெருங்கி," ஐயனே! நான் சொல்ல வேண்டுவது ஒன்றுண்டு!" என்றான்.