சூடாமணிப் படலம்

bookmark

சுந்தர காண்டம்

கம்பராமாயணத்துள் மிகவும் போற்றக்கூடிய பகுதியாக விளங்குவது சுந்தர காண்டமாகும். இங்கு சுந்தரன் என்று குறிக்கப் பெறுபவன் அனுமன் ஆவான். சொல்லின் செல்வன் என்று கம்பர் அனுமனது பெருமையை விளக்குகிறார். இராமனைப் பிரிந்த சீதைக்கும், சீதையைப் பிரிந்த இராமனுக்கும் இடையில் பிள்ளையைப் போலத் தூது சென்று அவர்தம் உள்ளக்கருத்தை உள்ளபடி உரைத்தபாங்கினாலேயே இதற்குச் சுந்தர காண்டம் எனப் பெயர் ஏற்பட்டது. சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். இன்றும் கணவன்-மனைவி ஆகிய தம்பதியரிடையே ஏற்படும் உளவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு சுந்தர காண்டம் படிப்பது வழக்கமாக உள்ளது. சுந்தரகாண்டம் பதினான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

சூளாமணிப் படலம்

(அனுமன் பிராட்டியின் நிலையைத் தெரிந்த கொண்ட பிறகு எப்படியாவது பிராட்டியைச் சிறையிலிருந்து விடுவிக்க எண்ணுகிறான். அவன் 'தாயே! தாங்கள் என் தோளில் அமர்ந்து கொள்ளுங்கள். தங்களை யான் இராமன் பால் சேர்ப்பிப்பேன்' என்று விண்ணப்பித்தான்.

அதுகேட்ட பிராட்டி அது பொருத்தமற்ற செயல் என்று விளக்கி உடன்படாது மறுக்கிறாள். பிராட்டியின் வார்த்தைகளைக் கேட்டு உணர்ந்த அனுமன் தன் கருத்தை விலக்கிக் கொண்டு, 'இராமபிரானுக்கு யான் கூற வேண்டிய செய்தி யாது? கூறுக' என்று கேட்கிறான்.

அனுமன் மொழிகேட்ட பிராட்டி 'நான் இன்னும் ஒரு மாதம் உயிரோடு இருப்பேன்' என்று நாயகன் பால் கூறுக' என்று கூறி அவல நிலையில் பலபடியாகப் பேசினாள். பிறகு தன் ஆடையில் முடித்து வைத்திருந்த சூடாமணியை அனுமனிடம் வழங்குகிறாள். சூடாமணியைப் பெற்ற அனுமன் பிராட்டியை மும்முறை வணங்கித் திரும்பிச் சென்றான்)

ஸ்ரீ ராமரின் வானர சேனையைப் பற்றிப் பெருமையுடன் சீதாதேவியிடம் விளக்கிய அனுமான். "இராமபிரானின் உயிர் போன்ற சீதா பிராட்டியை கொண்டு போய் எப்படியாவது ஸ்ரீ ராமரிடம் சேர்பித்து விட வேண்டும். இதுவே, இப்பொழுது தான் செய்ய வேண்டிய வேலையாகும்!" என்று எண்ணினான்.

உடனே பிராட்டியை நோக்கி," அன்னையே! அடியேன் வார்த்தையை சினம் கொள்ளாமல் கேட்டு அருள வேண்டுகிறேன். இப்போது பேசிக் கொண்டு இருப்பதால் என்ன பயன் உள்ளது?. அதனால், நான் தங்களை இராமபிரானிடம் உடனே சேர்த்து விடுகிறேன். அதன் பொருட்டு, என்னுடைய மென்மையான மயிர்கள் நெருங்கி இருக்கப் பெற்ற தோள் மீது ஏறி, துன்பம் நீங்கி இனிமையாக தூக்கங் கொண்டு இனிது இருப்பீராக. நான் தங்களைச் சுமந்து கொண்டு, நடுவில் தங்காமல் ஓர் இமைப்பொழுதுக்குள் ஸ்ரீ ராமர் எழுந்தருளியுள்ள மலையின் மேல் குதிப்பேன்! ஒரு வேளை, நான் தங்களை தூக்கிக் கொண்டு செல்லும் போது, எனது வழிகளில் அரக்கர்கள் குறிக்கிட்டால் நான் அவர்களைக் கொன்று குவிப்பேன். அதன் மூலம், எனது கோபமும் தனியப்பெரும். ஆனால், நான் தங்களைக் கண்ட பிறகும், உங்களை இந்தக் கொடிய அரக்கர்களிடம் விட்டுவிட்டுச் செல்ல மாட்டேன். ஒருவேளை, தாங்கள்," இந்த இலங்கையுடன் என்னையும் கொண்டு போகமாட்டாயோ?" என்று கேட்டால், அப்படியே இந்த இலங்கையைப் பெயர்த்து எடுத்து எனது ஒரு கையில் வைத்துக் கொண்டு, வழியில் என்னைப் போகாமல் தடுக்க வருகின்ற அரக்கர்களை எல்லாம் மற்றொரு கையால் பொடியாக்கி விட்டு இராமலக்ஷ்மணரிடம் செல்வேன். அவர்களிடம் தங்களைச் சேர்த்து விட்டு, அவர்களின் திருவடிகளில் தண்டனிட்டு வணங்குவேன்" என்று சீதா பிராட்டியைக் கைகூப்பி தொழுது தன் தோள் மீது அமரும் படிக் கூறி நின்றான் அனுமான்.

அதுகேட்டு சீதை அனுமனை நோக்கி," பெரியோனே! நீ சொன்னபடி செய்வது ஒன்றும் முடியாத காரியம் இல்லை! உனது வலிமைக்கு ஏற்றதை தான் நீயும் சிந்தித்து உள்ளாய். செய்வதாக நீ சொன்ன காரியங்களை எல்லாம் செய்தே முடிப்பாய். ஆனால்,நீ என்னை கொண்டு செல்வதாகச் சொன்ன காரியம், எனது பெண்மை புத்திக்குச் சரி என்று தோன்றவில்லை. ஒரு வேளை, அப்படியே நீ என்னை சுமந்து செல்கிறாய் என்று வைத்துக் கொண்டாலும், வழியில் கடல் நடுவே உன்னை வளைத்துக் கொண்டு அரக்கர்கள் கொடிய போர் செய்தால், அவர்களிடம் இருந்து நீ என்னைக் காப்பாற்ற முயற்சி செய்வாயா? இல்லை அவர்களுடன் போர் செய்வதில் ஈடுபடுவாயா? அப்போது தர்மசங்கடமான நிலையில் அல்லவா நீ தள்ளப்படுவாய்? மேலும், நான் உன்னுடன் வர முடியாததற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது என்னவென்றால், ஒரு வேளை உனது வார்த்தைக்கு உடன் பட்டு நான் வந்தாள். எனது கணவரின் வெற்றி பொருந்திய கொடிய வில், மனைவியை மீட்கவில்லை என்ற அழியாத பழிச்சொல்லை அவருக்கு கொண்டு சேர்த்து விடும் என்பதே ஆது. ஆக, இப்படி எல்லா வகையிலும் நீ சொன்ன காரியம் குற்றத்தை ஏற்படுத்த வல்லது. மேலும், பக்குவமாகச் சமைத்த சோற்றை வஞ்சனையாகக் கவர்ந்த இராவணனைப் போல, வஞ்சனைத் தொழிலை நீயும் மேற்கொள்ள வேண்டாம்! எனது கணவர் இங்கு வந்து இராவணனுடம் செய்யும் போரில் அவனது பத்து தலைகளையும் அவர் தமது பாணம் கொண்டு துண்டிக்க வேண்டும். அப்போது அந்தக் காட்சியைக் காணும் தேவர்கள் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து , எனது கணவர் மீது பல வண்ண மலர்களைப் பொழிய வேண்டும். கற்புடையவளான என் மேனியைக் காமத்தீ சுடர்விட பார்த்த அந்த அரக்கனின் கண்களைக் காக்கைகள் குத்தித் தின்ன வேண்டும். அக்காட்சியைக் கண்ட பின்பே, என் மனத்துயர் தணிந்து மன நிறைவு பெறும். அப்படி அது நடக்காத வரையில் எனது மனதினில் உள்ள கொதிப்பு அடங்காது. வெற்றி பொருந்திய வில்லை சுமந்து நிற்கும், எனது கணவரும், இளையபெருமாளும் இலங்கைக்கு வர வேண்டும். அவர்கள் அரக்கர்களுடன் போரிட்டு, அவர்களைக் கொன்று குவிக்க வேண்டும்.

வெட்கம் கெட்ட அரக்கியர்கள் எல்லாம் அதனைக் கண்டு பத்தினியான என்னைத் துன்புறுத்தியதன் பயனாகத் தாலியறுத்து, சூர்ப்பணகைப் போலவே அவர்களும் தவிக்க வேண்டும். இந்த இலங்கை மாநகரமே அரக்கர்களின் எலும்புக் குவியல்களால் பெரும் மலை போலக் காணப்பட வேண்டும். அப்படிப்பட்ட நாள் வராமல் போனால், நான் கொண்ட பெண்மைக்குரிய நாணமும் பெருமையுடையதாகுமோ?" என்று அனுமனிடம் கூறிய சீதை, மேற்கொண்டு தொடர்ந்தாள்," சிரஞ்சீவியே! இன்னும் என்னை நீ எடுத்துச் செல்லக் கூடாது என்பதற்கு வேறொரு காரணமும் உள்ளது. அதனையும் சொல்கிறேன். கேள்! அது என்னவென்றால் ஐம்பொறிகளையும் அடக்கியவன் ஆனாலும் உன்னையும் ஒரு ஆண்மகன் என்று தான் இந்த உலகம் சொல்லும். ஆகவே ,"உன்னை நான் தீண்டினேன்" என்ற குற்றம் எனக்கு ஏற்படும் படி, உனது தோளின் மீது ஏறுதல் தகுதியான செயல் ஆகாது. மேலும், உனக்கு ஒன்றைக் கூறிக்கொள்ள ஆசைப் படுகிறேன். அற்பகுணம் கொண்ட இராவணன், ஒரு வேளை என்னைத் தீண்டி இருந்தால் இந்நேரம் அவன் உயிருடன் இருந்து இருப்பானோ? முன்பு அவன் என்னை வஞ்சகமாக சிறையெடுக்க வரும் பொழுது," இவளைத் தொட்டால், இமைப் பொழுதில் மரணித்து விடுவோம்" என்ற பயத்தால் தான், தனது வலிய கைகளைப் பயன்படுத்தி தரையுடன் என்னைப் பெயர்த்து எடுத்து வந்தான். ஏனெனில், அவன் செய்த பாவத்தின் பலனாய், அவன் பெற்ற சாபம் அப்படி," அவன் தன்னை இச்சிக்காதப் பெண்ணைத் தொட்டால், அவனது பத்து தலைகளும் ஒன்றாய் வெடித்து விடும்!" என்று முன்னொருகாலத்தில் தனது மனைவியை இராவணன் பலாத்காரம் செய்ததால் குபேரனின் மகன் நல்குபேரன் அவனுக்குச் சாபம் கொடுத்தான். அன்று நல்குபேரன் கொடுத்த சாபம் தான் இன்று வரையில் என்னையும், எனது மானத்தையும் காப்பாற்றி வருகிறது. இராவணன் பெற்ற இந்த சாபத்தை, நல்லவளும், சத்தியத்தையுடைய விபீஷணனின் மகளும் என்னிடம் அன்பு கொண்டவளுமான திரிசடை, எனது அச்சத்தைப் போக்க வேண்டி முன்பொரு நாள் கூறினாள். நல்குபேரன், இராவணனுக்கு அந்தச் சாபத்தை அளிக்காமல் இருந்து இருந்தால் நான் எப்போதோ இறந்து இருப்பேன். தண்டகாரணியத்தில் இளையபெருமாள் அமைத்துத் தந்த பர்ணசாலையுடனே என்னை இலங்கையில் இந்த இடத்துக்கு இராவணன் கொண்டு வந்தான். ஐயனே! இதோ அவன் கொண்டு வந்த அந்த பர்ணசாலை. நான் இதில் தான் இப்போது தங்கி இருக்கிறேன். இந்த இடத்தை விட்டும் நான் ஒரு பொழுதும் நீங்கிச் செல்லவில்லை. சிற்சில சமயங்களில் உயிர் போகாமலிருக்க நீர்ப் பருகுவதற்கும், இளைப்பாறுவதற்கும் இதோ பக்கத்தில் இருக்கின்ற தடாகத்துக்குச் சென்று வருவேன். அத்தடாகத்தின் நீர் என் கணவரின் திருமேனி நிறத்தைக் காட்டி, என்னைச் சற்றே தேற்றி எனது துன்பத்தை ஒருவாறு போக்கும். நான் சொல்லிய இந்தக் காரணங்களால், நீ என்னை எடுத்துச் செல்வது சரியில்லை என்பதை உணர்வாய்! ஐயனே! இனி, எனது கணவரிடம் திரும்பிச் செல்வதே, இப்பொழுது நீ செய்ய வேண்டிய காரியமாகும்!" என்று கூறி முடித்தாள்.

சீதா பிராட்டியின் வார்த்தைகளைக் கேட்ட அனுமான் பிராட்டியின் கற்பு நிலை தவறாத தவத்தை தமது மனதிற்குள் பாராட்டிய படி, பிராட்டியிடம்," தாயே! தாங்கள் கவலை கொள்ள வேண்டாம்! ஸ்ரீ ராமர், வானர வீரர்களுடன் இங்கு நிச்சயம் வருவார். தங்கள் எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றுவார்.அவர் வரும் வரையில் அதுவரையில் உயிருடன் இனிது இங்கு பொறுமையுடன் இருப்பீர்! அத்துடன் தங்களைப் பிரிந்ததால் துன்பத்துடன் வாடியிருக்கும் பெருமானுக்கு, நான் போய்ச் சொல்ல வேண்டிய வார்த்தைகளை எனக்குக் கூரியருள்வீர்!" என்று கேட்டு, அவள் திருவடிகளைத் தொழுதான்.

மாருதியின் வார்த்தைகளைக் கேட்டு சிறிது மகிழ்ந்தாள் சீதை. உடனே அவனுக்குப் பதில் சொல்லத் தொடங்கினாள். "சொல்லில் சிறந்தவனே! இனி ஒரு மாத காலம் தான் இந்த இலங்கையில் நான் உயிருடன் இருக்கப் போகிறேன். அதற்குள் எனது கணவர் வர வேண்டும். அப்படி வராமல் போனால், நான் நிச்சயம் உயிரை விட்டு விடுவேன். இது எனது கணவர் மேல் ஆணை! நான் கூறிய இந்த வார்த்தைகளை உனது மனத்தில் நன்றாகப் பதிய வைத்துக் கொள்! என் கணவருக்கு ஏற்ற மனைவியாக நான் இல்லாவிட்டாலும், என்னிடத்தில் அவருக்கு தயை என்னும் இரக்க குணம் இல்லாவிட்டாலும், தமது வீரம் தவறாகாமல் காப்பதையாவது விரும்பும் படி நான் சொன்னதாகச் சொல்லி அவரிடம் வேண்டுவாய்! இளைய பெருமாளுக்கு நான் சொல்லும் வார்த்தையையும் சொல்! அந்த வார்த்தை என்னவென்றால்,' பஞ்சவடியில் என்னைக் காத்து வந்த அவர், பின் எனது வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு மாயமானைப் பிடிக்கச் சென்ற அண்ணலைத் தேடிச் சென்றார். அதனால் அவருடைய காத்தல் தொழிலுக்குப் பழி ஏற்படும் படி ஆயிற்று. இப்போது அதனைப் போக்கிக் கொள்ள, இங்கு வந்து என்னைச் சிறை மீட்பதே அவரது கடமையாகும்!' என்று, அவரிடம் சொல்லி வேண்டுவாய்! ஒரு மாத காலமே நான் இங்கு உயிருடன் வாழ்வேன். அதற்குள் என் கணவர் வராமல் போவாரானால், தமது சிவந்த கைகளினால் அவருடைய அடியவளாகிய எனக்குச் செய்ய வேண்டிய அந்திமக் கிரியைகளைக் கங்கையின் அழகிய கரையிலே செய்யும்படிச் சொல்வாய்!" என்றாள்.

அது கேட்ட அனுமான்," தாயே, இன்னும் தாங்கள் துன்பத்தை விடவில்லையே! நீங்கள் ஒரு வேளை இந்தக் கொடிய இலங்கையில் இறந்து போக நேரிட்டால், பின் ஸ்ரீ இராமர் மட்டும் இந்தத் தரணியிலே உயிர் வாழ்வார் என்று நினைக்கின்றீர்களா? அவரும் தங்களுடன் இறந்து போவார் என்பதை தயை கூர்ந்து நினைவு கொள்ளுங்கள். அது மட்டும் அல்ல, நான் காற்றின் வேகத்தில் சென்று தாங்கள் இலங்கையில் சிறை வைக்கப்பட்டு இருக்கும் செய்தியை அவரிடம் சொல்லியும், அவர் உங்களை மீட்காமல் இருப்பாரோ? அத்துடன் தாங்கள் கொடிய இராவணனால் சிறை வைக்கப் பட்ட செய்தி அறிந்தும், ஸ்ரீ ராமர் முதலில் இராவணனை உயிருடன் விடுவாரோ? அதனால் இராவணனின் அழிவு இனி நிச்சயம். மேலும், அவர் இராவணன் உங்களைக் கடத்துவதற்கு முன்னமே, பல ரிஷிமுனிவர்கள் வாழும் தண்டகாரணியத்தில் அந்த ரிஷிகளுக்கு முன்னிலையில் அப்போதே அரக்கர்களை வேருடன் அழிப்பேன் என்று சபதம் கொண்டவர். இப்போதோ, இராவணன் தங்களை சிறை மீட்டு தனது முடிவைத் தானே தேடிக் கொண்டான். பல அரக்கர்களைக் கொன்று குவித்த இராமபாணம் பதினான்கு உலகங்களையும் அழிக்கக் கூடியது. அது தங்களுக்கும் தெரியும். அதனால், தாங்கள் இனியும் கவலை கொள்ளாமல், தங்களின் விருப்பப்படி இராமபாணம் இலங்கையில் உள்ள அரக்கர்களை வதைப்பதை மட்டும் களிப்புடன் பாருங்கள். மேலும், இராமபிரானின் பாணங்கள் அரக்கர்களின் உடம்பில் உண்டாக்கிய புண்களில் இருந்து வழியும் இரத்தக் கடல் ஏழு கடல்களும் ஒன்றாகக் கூடி நின்று பேரொலி செய்வதைப் போன்று ஒலி செய்வதைத் தாங்கள் விரைவில் காண்பீர்கள். அத்துடன் அரக்கியர்கள் வயிற்றைப் பிசைந்து கொண்டு அழுதவண்ணம் அறுத்துப் போட்ட தாலிகள் வானுயர்ந்த பெரிய மலைகளாகும். அம்மலையை வாலி போன்ற வீரர்களாலும் தாண்டமுடியாது. அப்படிப் பட்ட, அந்த மலையை விரைவில் தாங்கள் காண்பீர்கள். கழுகுக் கூட்டங்களும், பேய்க் கூட்டங்களும் ஸ்ரீ ராமனால் வதைபட்டு இறந்த அரக்கர்களின் ரத்தக் குருதியில் மூழ்கி, தங்கள் அரக்கக் கணவர்கள் இறந்ததால் கண்ணீர் சிந்தும் அரக்கியரின் கண்ணீர்களில் நீராடுவதைப் பார்ப்பீர்கள். அத்துடன் தங்களது திருமேனியை காமப் பசியுடன் நோக்கிய இராவணனின் இருபது கண்களையும் காக்கைகள் கொத்தித் திண்பதையும் காண்பீர்கள். இன்னும் ஒரு திங்கள் இந்த இலங்கையிலே தாங்கள் இருக்க வேண்டுவது இல்லை. நான் விரைவில் சென்று இராமபிரானைக் காண்பேன். நான் அவரைக் கண்ட பின்பும், தங்களை மீட்பதற்குத் தவணைக் காலமும் வேண்டுமோ? நான் இந்தச் செய்தியைச் சொன்ன பின்பு, அவர் தங்களைச் சிறை மீட்கத் தாமதிப்பாரோ?

மேலும், அன்னையே! இராமபிரானும், சுக்கிரீவனும் நான் சென்று சொல்லப் போகும் செய்தி கேட்டு மகிழும் முன்பே, குரங்குகள் பெரிய கடலைத் தூர்த்துவிட்டு இலங்கையை முற்றுகை செய்து ஆரவாரிப்பதைக் கேட்டு, தாங்கள் மகிழ்ந்து இருக்கப் போகின்றீர்கள்! கருடன் மீது ஏறி அசுரர்களுடன் போர் செய்யும் திருமாலைப் போல, ஸ்ரீ ராமபிரான் எனது பிடரியின் மீது அமர்ந்து அரக்கர்களுடன் போர் செய்வதையும் காண்பீர்கள்" என்று கூறி, சீதையைத் தேற்றினான்.

சீதா பிராட்டி, அனுமனின் வார்த்தைகளால் அறிவு தெளிந்தாள்." இவன் விரைவில் போய் இராமபிரானை அடைவதே தனக்கு நன்மை தரும்' என்று எண்ணினாள். பின்பு அனுமனிடம்," ஐயனே! நீ இங்கிருந்து விரைந்து சென்று ஸ்ரீ இராமபிரானை சந்திப்பாயாக. இப்பொழுது நான் அதிகமாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நான் இப்பொழுது சொல்லப் போவது முன்னே நிகழ்ந்த சில அடையாள மொழிகளே! அவற்றை உனக்கு நான் சொல்ல, நீ என்னைக் கண்டதற்கு அடையாளமாக அவரிடம் தெரிவிப்பாயாக " என்றாள்.

அப்படிச் சொல்லிய சீதை மேலும் தொடர்ந்தாள்," முன்பு சித்திரக் கூடப் பருவதத்தில் நாங்கள் தங்கியிருந்த போது, அருகில் வந்து என் மார்பைத் தனது நகத்தினால் குத்திய ஒரு காக்கையைக் கோபித்துப் புல்லை அம்பாக அதன் மேல் எய்த சம்பவத்தை நீ என்னைக் கண்டதற்கு அடையாளாமாக ஸ்ரீ இராமபிரானிடம் சொல்வாயாக. அப்பொழுது தன்னைத் துரத்திய ஸ்ரீ ராமரின் அந்த பாணத்தைக் கண்ட அந்தக் காகம், பிரமலோகம் போய் தஞ்சம் கேட்டு நின்றது. அதனைப் பார்த்த பிரமன், அந்தக் காகத்தை " இங்கு ஏன் நீ வந்தாய்? பிரமலோகம் நன்றாக இருக்க உடனே இவ்விடம் விட்டுச் செல்" என்று துரத்தினார். உடனே, அந்தக் காகம் இந்திரலோகம் போய், இந்திரனிடம் தஞ்சம் கேட்டு நின்றது. ஆனால், இந்திரனோ," நீ செய்தது தவறு, சுவர்க்கமும், நீயும் நன்றாக இருக்க, உடனே போய் ஸ்ரீ இராமனின் கால்களில் விழுந்து உனது தவறுக்காக மண்டியிடு. அவர் கருணைக் கடல். உனக்கு உயிர் பிச்சை அளிப்பார்" என்றான். அதன் படி அந்தக் காகம் மீண்டும் ஸ்ரீ இராமனின் பாதத்தில் வந்து தான் செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டி நின்றது. ஸ்ரீ இராமர் அந்தக் காகத்தை மன்னித்தாலும் குறைந்த பட்ச தண்டனையாக ஒரு கண் மட்டும் பழுது படும் படிச் செய்தார். அந்தக் காகத்தின் வடிவம் கொண்டு வந்தவன் தான் இந்திரனின் மகன் ஜெயந்தன். அன்று முதல், அந்த ஜெயந்தன் காக்கை வடிவம் எடுத்து வந்ததால், அனைத்து காக்கைகளுக்கும் ஒரு கண் பழுதாகக் காணப்பட்டு வருகிறது. இராம பாணத்தின் முன் இந்திரனாலேயே, தனது மகன் ஜெயந்தனைக் காப்பற்ற முடியாததால் தான், மீண்டும் ஸ்ரீ இராமனிடம் தஞ்சம் கொள்ளுமாறு தனது மகனிடம் கட்டளையிட்டான். அப்படி என்றால் இராமபாணம் எவ்வளவு வலிமை உடையது? மேலும், இந்தச் சம்பவம் எனக்கும் ஸ்ரீ இராமனுக்கும் மட்டும் தான் தெரியும். இந்தச் சம்பவத்தை, நீ என்னைக் கண்டதற்கு அடையாளாமாக ஸ்ரீ இராமனிடம் தெரிவிப்பாயா?" என்று கேட்க. அனுமன் ஸ்ரீ இராமனின் தனுர் வித்தையையும், கருணையையும் எண்ணி வியப்படைந்தான். அப்படியே "நான் அவசியம் ஸ்ரீ ராமனிடம் இதனைத் தெரிவிப்பேன்" எனக் கூறி சீதா பிராட்டியின் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தான்.

மேலும் அனுமனிடம் அடையாள மொழிகள் சொல்ல வேண்டுவதில்லை என்று சிந்தித்து முடிவுக்கு வந்தால் சீதை. உடனே, தான் உடுத்தியுள்ள அழகிய ஆடையில் முடிந்து வைத்து இருந்த சூளாமணியைத் தனது மென்மையான கைகளால் அனுமனிடம் கொடுத்து ஸ்ரீ இராமரிடம் சேர்பிக்குமாறு கூறினாள். சீதையின் கைகளில் இருந்து அந்தச் சூளாமணியைப் பெற்ற அனுமான். அதன் பேரொளியால் திகைத்து நின்றான். அந்தச் சூளாமணி மூவுலகத்தையும் தனது ஒளிக் கிரணத்தால் மறைத்துவிடும் படி மிகவும் பிரகாசமாகக் காணப்பட்டது. அதன் ஒளியைக் கண்டு சூரியனும் கூசி நின்றான்.

பிறகு அனுமான் அந்தச் சூளாமணியை பயபக்தியுடன் கண்களில் ஒத்திக் கொண்டு, அதற்கு ஒரு பழுதும் உண்டாகாத படி, அதனைத் தனது ஆடையில் சுற்றி முடித்து பத்திரப்படுத்திக் கொண்டான்! பிராட்டியின் நிலையை எண்ணி அழுது கொண்டே அவளை மூன்று முறை வலம் வந்து கீழே விழுந்து வணங்கி எழுந்தான். பிறகு அனுமன் சீதா பிராட்டியிடம் விடை பெற்றுச் சென்றான்.