பொழிலிறுத்த படலம்

சுந்தர காண்டம்
கம்பராமாயணத்துள் மிகவும் போற்றக்கூடிய பகுதியாக விளங்குவது சுந்தர காண்டமாகும். இங்கு சுந்தரன் என்று குறிக்கப் பெறுபவன் அனுமன் ஆவான். சொல்லின் செல்வன் என்று கம்பர் அனுமனது பெருமையை விளக்குகிறார். இராமனைப் பிரிந்த சீதைக்கும், சீதையைப் பிரிந்த இராமனுக்கும் இடையில் பிள்ளையைப் போலத் தூது சென்று அவர்தம் உள்ளக்கருத்தை உள்ளபடி உரைத்தபாங்கினாலேயே இதற்குச் சுந்தர காண்டம் எனப் பெயர் ஏற்பட்டது. சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். இன்றும் கணவன்-மனைவி ஆகிய தம்பதியரிடையே ஏற்படும் உளவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு சுந்தர காண்டம் படிப்பது வழக்கமாக உள்ளது. சுந்தரகாண்டம் பதினான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
பொழிலிறுத்த படலம்
(பிராட்டியி்டம் சூடாமணியுடன் விடைபெற்றுக் கொண்ட அனுமன், மேற்கொண்டு செய்த செயல்களைக் கூறுவது இந்தப் பகுதி.
இதனுள், விடைபெற்ற அனுமன் மனநிலை அவன் அசோகவனத்தை அழித்தல், பிராட்டியிருந்த மரம் மட்டும் அழியாது திகழ்தல், வனத்தை அழித்து நின்ற அனுமன் நிலை, காவலர் இராவணனிடம் சென்று செய்தி கூறுதல், அனுமன் ஆரவாரம் செய்தல் முதலிய செய்திகள் அனைத்தும் இதில் அடங்கியுள்ளன)
சீதாப் பிராட்டியிடம் இருந்து விடைபெற்றுச் சென்று கொண்டு இருந்த அனுமான்,' பிராட்டியை மட்டும் கண்டு பேசிவிட்டு திரும்பிச் செல்லும் ஒரு காரியம் என்பது மட்டும் நமது வலிமைக்கு இழுக்காகும். ஆகவே, பகைவர் நமது வலிமை அறியும்படி ஒரு பெரிய காரியத்தைச் செய்து விட்டுச் செல்ல வேண்டும்' என்று எண்ணினான்.
மேலும் அனுமான் சிந்திக்கத் தொடங்கி," நாம் அன்னையை சிறை மீட்டுச் செல்வதானால் அவர்கள் கூறிய படி, அவ்வாறு செய்வது அன்னைக்கும் ,இராமபிரனுக்கும் இழுக்கைத் தேடித் தரும் அது உண்மை தான். அது போல இராவணனைக் கொன்றாலும், அது ஸ்ரீ இராமருக்கு ஒருவகையில் இழுக்கைத் தான் தரும். மேலும்,நான் அப்படிச் செய்தால், அவர் அவதாரம் எடுத்து வந்த நோக்கமும் வீணாகும். அதே சமயத்தில் இந்த அரக்கர்களுக்கு நமது பலத்தை காண்பித்தே ஆக வேண்டும். அதற்கு ஒரே வழி அரக்கர்களுடன் போர் செய்வதே. ஆனால், அது எவ்வாறு சாத்தியம் ஆகும்? நானோ, ஒரு வகையில் இராமனின் தூதனாக வந்துள்ளேன். தூதுவன் போர் செய்யலாமா? அதனால், இதற்கு ஒரே வழி அரக்கர்களுடன் நான் போர் செய்யவேண்டும் என்றால் அவர்களே நம்முடன் வலிய வந்து போர் செய்யுமாறு ஒரு சூழலை உருவாக்க வேண்டும். அதுவே சிறந்த வழி. சரி அப்படியே செய்வோம். அப்படிச் செய்தால் தான் நம் மீது தவறு இல்லாமல் இருக்கும்" என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான் மாருதி.
தான் கொண்ட சிந்தனையை உடனே செயல்படுத்த பேருருவம் கொண்டான். பிறகு அனுமன், அரக்கர்களை அவனது சித்தப் படியே வழிய போருக்கு அழைக்க, தனது பெரிய கால்களைக் கொண்டு அசோக வனத்தை துவம்சம் செய்தான். அவனது கால்களால் அந்த சோலையில் உள்ள மரங்கள் அனைத்தும் துவம்சம் செய்யப்பட்டன. பாதிரி, கற்பகம், செண்பகம், மராமரம், கொங்கு, சுரபுன்னை, பலா, மா, வாழை, பாக்கு ஆகிய மரங்களை எல்லாம் பிடுங்கி அனுமன் வீசி எறிந்தான். மேலும் பல மரங்கள் அனுமனின் வழிய கைகள் பட்ட மாத்திரத்தில் பிளவுபட்டன, இன்னும் சில வளைந்தன, மேலும் பல நொறுங்கின, மடிந்தன, பொடிந்தன, கிளைகள் மடங்கின, முறிந்தன, இடிந்தன, உதிர்ந்தன, பதிர்ந்தன, வேரோடு சாய்ந்தன. மேலும், அனுமன் சில மரங்களை வீசி எறிந்த வேகத்தில் அவைகள் கடலில் போய் விழுந்தன, இன்னும் பல இலங்கையில் உள்ள அரக்கர்களின் வீடுகளின் மேல் விழுந்து, அந்த வீடுகளைத் தரைமட்டமாக்கின. இன்னும், அனுமனால் பலமாக விசையுடன் வீசப்பட்ட சில மரங்கள், திக்கு யானைகளின் தந்தங்களில் சிக்கிக் கொண்டன. அப்படி சிக்கிக் கொண்ட மரங்கள், அந்தத் திக்கு யானைகள் தமது பெண் யானைக்கு உணவைக் கொடுப்பதற்கு ஏற்ற தழையுணவு போன்றாயின! அதேபோல அனுமனால் வீசியெறியப்பட்டுக் கடலில் வந்து விழுந்த மரங்களில் உள்ள பறவைகளையும், வண்டுகளையும்,நறுமண மலர்களையும், தேனையும், அரும்புகளையும், இனிய காய்களையும், கனிகளையும் அந்தக் கடலில் வாழ்கின்ற மீன் கூட்டங்கள் உண்டு மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தன. கடலில் வந்து விழுந்த மரங்களின் நறுமண மலர்களால், அதன் நீர் புலால் நாற்றம் இழந்து மணம் வீசியது. அதனால் அக்கடல், தேவர்கள் தங்கள் மனைவியர்களுடன் நீராடுவதற்கு ஏற்ற தடாகமாயிற்று!
மறுபுறம் தாம் செய்த பாவத்தால் பூமியில் வந்து பிறந்து தேவர்கள் பாவம் நீங்கி வானுலகைத் திரும்பவும் அடைந்தது போல, இராவணனால் கொண்டு வரப்பட்டு அங்கு நடப்பட்ட தேவலோகத்துக் கற்பக மரங்கள், அனுமன் பிடுங்கி வீசி எறிந்ததால் மீண்டும் தேவலோகத்தை அடைந்தன! மேலும் அனுமன் அங்குள்ள மணி மண்டபங்களை இடித்துத் தள்ளி துண்டு துண்டாக்கி, அருகிலுள்ள தடாகங்கள் தூர்ந்து போகும்படி அவற்றில் எறிந்தான்! அனுமன் அசோகவனத்தில் இருந்து பிடுங்கி எறிந்த சில மரங்களால், இலங்கையில் உள்ள யானை கட்டியுள்ள சாலைகளும், நடன சாலைகளும், மதுபானம் தயாரிக்கும் இடங்களும், குதிரை கட்டியுள்ள இடங்களும் மற்றும் தேர்கள் நிறுத்தியுள்ள இடங்களும் அழிந்தன. அத்துடன் அந்த மரங்களின் அழிவு வேலை நிற்காமல் தொடர்ந்து நடந்ததால், இலங்கையை சுற்றி இருந்த மதில்கள் அனைத்தும் நொறுங்கி விழுந்தன. இலங்கையில் பெரும்பான்மையான இடங்கள் அனுமனால் தூக்கி எறியப்பட்ட மரங்கள் விழுந்து நிலை கெட்டு அழிந்தன. அத்துடன் அசோகவனத்து மரங்களை அனுமன் அரக்கர்களாகவே பாவித்து கோபத்துடன் பிடுங்கி எறிந்த பெரும் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த மிருகங்கள் அனைத்தும் நிலை கெட்டு ஓடின.
ஆனால், அத்தனைக்கும் நடுவில் பிரளய காலத்தில் திருமால் தங்குகின்ற அழியாத ஆலமரம் போன்று, சீதை தங்கியிருக்கின்ற பெரியமரம் மட்டும் அழியாமல் நின்று இருந்தது! மெல்ல மெல்லப் பொழுது விடியத் தொடங்கியது. அசோகவனத்தை முற்றிலும் அழித்து விட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபடி அனுமான் நின்று கொண்டு இருந்தான். அச்சமயம், சீதையைக் காவல் காத்து வந்து, பின் அனுமானின் மாயையில் உறங்கிய அரக்கிகள் உறக்கம் தெளிந்து எழுந்து நின்றார்கள். அப்போது தான், அவர்கள் அசோகவனத்தின் நிலையைக் கண்டார்கள். அதனால் கோபம் கொண்டு சுற்றுமுற்றும் நோக்கினார்கள். பேருருவுடன் நிற்கும் அனுமனைக் கண்டதும் பெரும் அச்சம் கொண்டு நிலைகுலைந்து, மலைகளும் இந்நிலவுலகமும் வானமும் கடலும் நடுங்கும்படி அதிர்ந்து ஓடிப் போனார்கள்!
அசோகவனத்தை முற்றிலும் அழித்து விட்டு இன்னும் ஏதேனும் கூடுதலாகச் செய்ய வேண்டும் என்று யோசித்த அனுமனின் கண்களில் பட்டது செய்குன்றம். அந்தக் குன்றம் மேரு மலைக்கு ஒன்றும் சளைத்தது அல்ல. அதனை பலம் கொண்ட தனது கைகளால் வேரோடு பிடுங்கி எடுத்த அனுமான் கோபத்துடன் இலங்கையில் காணப்பட்ட அரக்கர்களின் வீடுகள் மற்றும் மாளிகைகள் மீது எறிந்தான். அந்த மலை அரக்கர்களின் மாளிகைகளுடன் மோதிய போது ஏற்பட்ட நெருப்புப் பொறிகள் பக்கங்களிலுள்ள பொருள்களை எல்லாம் சுட்டெரித்தன! அது கண்டு எதற்கும் கலங்காத அரக்கர்கள் அஞ்சி நடுங்கி நிலை கெட்டு ஓடினார்கள்!
அசோகவனத்தில் அனுமானால் நடத்தப்பட்ட பேரழிவுகளுக்கு சாட்சியாக இருந்து, அந்த வனத்தைப் பாதுகாத்து வந்த ஆறு பருவங்களுக்கு உரிய தேவர்களும் அவற்றைக் கண்டார்கள்; அஞ்சி நடுங்கினார்கள். அவர்களின் மேனியெங்கும் அனுமன் வீசியெறிந்த மரங்கள் பட்டதால் உண்டான புண்களில் இருந்து இரத்த ஆறு பீறிட்டு வழிந்தது. அவர்களின் நடை தளர்ந்த கால்கள் ஒன்றுடன், ஒன்று மோதிக் கொள்ள, தள்ளாடிய படி இராவணனிடம் ஓடினார்கள்!
அப்பருவத் தேவர்கள் இராவணனின் கால்களில் விழுந்து வணங்கி," மூவுலகத்தையும் வெல்லக் கூடிய ஆற்றல் கொண்டவரே, நாங்கள் இப்போது சோலைகளைப் பாதுகாக்கும் வல்லமை இல்லாமல் போனோம்! அதற்குக் காரணம், மலைபோல திரண்ட வலிய தோள்களைப் படைத்த ஒரு குரங்கு அசோகவனத்தில் புகுந்து மரங்களைப் பிடுங்கி வீசி எறிந்ததால், நாங்கள் அது நாள் வரையில் பாதுகாத்து வந்த சோலை நெருப்புப் பட்ட ஆடை போல விரைவில் அழிந்து விட்டது. அந்தக் குரங்கு செய்த அட்டகாசங்களை எல்லாம் சொல்வதற்கு எங்களுக்கு வார்த்தைகள் இல்லை. என்னென்ன அட்டகாசங்களை செய்ய முடியுமோ, அத்தனை அட்டகாசங்களையும் செய்து முடித்து விட்டது அந்தக் குரங்கு. அத்துடன் மட்டும் இல்லாமல் செய்குன்றத்தையும் பெயர்த்து இலங்கையில் உள்ள வீடுகளின் மீது வீசி எறிந்து விட்டது. அம்மலை விழுந்த வேகத்தில் இலங்கையில் உள்ள பல நகரங்கள் அழிந்து விட்டது!" என்றார்கள்.
அவர்களின் வார்த்தைகளைக் கேட்ட இராவணன்," " ஒரு குரங்கு சோலையை அழித்து விட்டு செய்குன்றத்தையும் வேரோடு பிடுங்கி இலங்கையின் பெரும் பகுதியை அழித்து விட்டது! என்ன ஆச்சர்யம்! இப்படிப்பட்ட பேச்சை மூடர்களும் என் எதிரே வந்து சொல்லமாட்டார்கள்!" என்று கூறி, கேலியாகச் சிரித்தான்.
ஆனால், மீண்டும் அந்தப் பருவங்களுக்குரிய தேவர்கள் இராவணனிடம்," மன்னா! அந்தக் குரங்கின் உடம்பை தாங்கிக் கொண்டு இருக்கும் பூவுலகின் வலிமையை அல்லவோ புகழ வேண்டும்! மும்மூர்த்திகளில் ஒருவர் அரக்க பலம் கொண்டு வந்தது போலத் தான் அக்குரங்கு காணப்படுகிறது! ஐயனே! நமக்கு இந்தத் துன்பங்களைத் தந்த அந்தக் குரங்கைத் தாங்கள் பார்த்தாலும் கூட அப்படித் தான் கருதுவீர்கள்!" என்று பணிவுடன் கூறினார்கள்.
அப்போது திசை யானைகளும், தேவர்களும் அஞ்சி நிலைகெட்டு ஓடவும், அரக்கியர்கள் தமது வயிற்றில் உள்ள கருச்சிதைந்து தளரவும், இந்த உலகவுருண்டையே வெடித்துப் பிளவுபட்டது என்று சொல்லும்படியாகவும் அனுமன் ஆரவாரம் செய்தான்!