சந்திரசயிலப் படலம்

சந்திரசயிலப் படலம்

bookmark

பாலகாண்டம்

பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

சந்திரசயிலப் படலம்

(இப்படலத்தில் யானை, தேர்களின் செயல்கள் கூறப்பெறுகின்றன. மகளிர் இளைப்பாறித் துயில் கொண்டார்கள். மைந்தரும் மங்கையரும் திரிந்தார்கள். யானைகளும், குதிரைகளும் வருகின்றன; ஊற்றுநீர் சுரந்தது; வீரர்கள் மாடத்தினுள் நுழைந்தார்கள்; யானைகள் நீரைக் கலக்கின; அடியில் புகை எழுந்தது. சேனைகள் பொலிவுபெற்று விளங்கின.)

சந்திரசைல மலையானது சுவர்கத்திற்கு நிகரானது. யானைகளின் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதி அது. அதிலும், குறிப்பாக அங்கு உள்ள ஆண் யானைகள் தங்களின் அன்புள்ள பெண் யானைக்குக் கற்பக மரத்தின் கிளைகளைத் தளிரோடு முறித்துக் கொடுக்கும். அங்கு காணப்படும் வேங்கை மலரில் உள்ள, தேனை எல்லாம் வண்டுகள் உண்டு விட்டதன் காரணமாக தேன் நீங்கிய அம்மலர்களை இப்போது அவைகள் வெறுத்தன. அம்மலையிலே, வானுயர்ந்த மரங்களில் பெரிய தேன் கூடுகள் அளவு இல்லாமல் காணக் கிடைத்தன. அவைகளின் மேல் பிறைச் சந்திரனின் கதிர்கள் படிய, அவை சிதைந்து தேனருவி பெருக்கெடுத்து ஓடியது. அத்தேனருவியை, அங்கு வாழ்ந்து வந்த குறவர்கள் வழி மறித்து தங்கள் செந்தினை வயல்களுக்குப் பாய்ச்சிக் கொண்டு இருந்தார்கள். சந்திரன் கூட அம்மலையைக் கடக்க முடியாமல் உச்சியிலே நின்று விடுவதும் உண்டு. அதன் காரணமாக தாழ்வரையின் கீழ்ப்புறத்தில் அச்சந்திர கண்ணாடியில் தாங்கள் செய்து கொண்டு இருந்த அலங்காரத்தைப் பார்த்து குறத்தியர்கள் மகிழ்ந்தார்கள். அந்தக் குறத்தியரின் நெற்றியுடன் சந்திரனை ஒப்பிட்டு அந்தச் சமயங்களில் மகிழ்ந்தார்கள் குறவர்கள்.