களியாட்டுப் படலம்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
களியாட்டுப் படலம்
(மேகநாதனின் பிரமாத்திரத்தால் பகைவர் மடிந்தனர் எனக் கேள்வியுற்ற இராவணன் பெருமகிழ்ச்சி கொள்கிறான். அதன்விளைவாக மகளிரைக் கள்ளுண்டு களி வெறியோடு ஆட வைத்துப் பார்க்க விரும்புகின்றான். அங்ஙனம் மகளிர் கள்ளை உண்டு ஆடிய ஆடலைப் பற்றிக் கூறுகின்ற பகுதியாதலின் இது களியாட்டுப் படலம் எனப் பெயர் பெறுகின்றது)
பிரம்மாஸ்த்திரத்தால் பகைவர்கள் இறந்து விட்டார்கள் என்று இந்திரஜித்து கூறியதனால் மகிழ்ச்சி அடைந்த இராவணன், நகரெங்கும் தன் வெற்றியைக் கொண்டாட திருவிழா கோலம் கொள்ளும் படி ஆணையிட்டான் அல்லவா? அவன் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கின்ற தனது வெற்றி விழாவைக் காண ஆசைப்பட்டான். உடனே வாத்தியங்கள் பல முழங்க, நடன அரங்கிற்கு அவன் சென்றான்.அங்கே அழகிய அரக்கியர்கள் தமது அரசனுக்கு ஏற்பட்ட வெற்றியால் உண்டான பெரு மகிழ்ச்சியுடன் கள்ளுண்டு களியாட்டம் ஆடினார்கள். அந்த ஆட்டத்தைக் கண்டு இராவணன் ரசித்து மகிழ்ந்தான்!
பிறகு, அவன் அங்கிருந்து புறப்பட்டு நகரத்தின் வீதி வழியே பவனி சென்றான். அவனோடு தேவலோகத்துப் பெண்களும், வித்தியாதரப் பெண்களும், அரக்கப் பெண்களும், நாக கன்னிகைகளும், யட்ச மங்கையர்களும் நடனம் ஆடியபடிச் சென்றனர். அப்போது அரக்கியர்கள் எல்லோரும் கள்ளுண்டு மகிழ்ந்து மயங்கினார்கள்; ஆடினார்கள். அப்போது அவர்கள் அணிந்து இருந்த நகைகளின் ஒளியும், புன் சிரிப்பில் இருந்து தோன்றிய வெண்ணிலவு போன்ற ஒளியும் சந்திரனையே கவரும் வண்ணம் மிகுதியாக வீசிற்று.
அங்கு திரண்டு இருந்த அரக்கப் பெண்கள் மேலும், மேலும் கள்ளுண்டதால் போதை தலைக்கேறி அதிகமாகச் சிரித்தார்கள். அதிகமாக உடல் வேர்த்தார்கள். சில அரக்கிகள் அழுதார்கள். சிலர் பக்கத்திலே நின்றவர்களை வணங்கினார்கள். சிலர் தூங்கினார்கள். சிலர் தமது செவ்வாயில் இருந்து தேன் போன்ற நீரைச் சொறிந்தார்கள். சிலர் தளர்ந்து தளர்ந்து ஒருவர் மற்றொருவரை கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். சிலர் தமது இரத்தம் போன்ற கண்களை மூடிக் கொண்டு சோமபல் முறித்தார்கள். மேலும், கள் உண்ட இன்னும் சில அரக்கியர்களின் இலவமலர் போன்ற அதரங்கள் துடித்தன. ஆடைங்கள் வழுவி விழுந்தன. ஆனால், இவை எதையும் உணராதபடி கர்ணகடூரமான குரல் கொண்டு உரத்துள்ள பாடலைப் பாடினார்கள்.
இவ்வாறாக இராவணன் இத்தகைய காட்சிகளை எல்லாம் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தான். அவ்வாறு அவன் மகிழ்ந்து கொண்டிருந்த போது, சஞ்சீவி மருந்தினால் உயிர் பெற்று எழுந்த வானர சேனையாகிய கடல் ஆரவாரித்த ஓசை அவனது இருபது காதுகளிலும் சென்று விழுந்தது. அதனால் இராவணன் சற்றே போதை தெளிந்தான்.
அக்கணமே, அவன் கொண்ட மகிழ்ச்சி, அவன் முன்னாள் அரக்கியர்கள் ஆடிய நடனம், அவனுடைய காம இச்சை என அனைத்தும் பொலிவிழந்தன. அதனை மேலும், பொலிவிழக்கச் செய்யுமாறு இராமலக்ஷ்மணர் தங்களது வில்லில் நாண் ஒலியை எழுப்பினார்கள். இடி போன்ற அந்த ஒலியைக் கேட்ட மாத்திரத்தில் அரக்கர்கள் ஓடிங்கினார்கள், அவர்களது களியாட்டங்கள் ஓடிங்கியது. அசோகவனத்தில் இருந்த சீதையோ மகிழ்ந்தாள். ஆனால்,மறுபுறம் இராவணன் மனம் கலங்கி முகவொளி குறையப் பெற்றான்!
இராவணன் அந்நிலையில் இருந்த போது, அவனுடைய ஒற்றர்கள் விரைந்து வந்து வண்டு உருவம் கொண்டவராய், அவனது கழுத்தில் கிடந்த பூமாலையின் மீது மொய்த்துக் கொண்டே, அனுமனால் போர்க்களத்தில் நடந்த செயலை எல்லாம் யாரும் அறியாதவாறு, இராவணனின் காதுகளில் மட்டும் கேட்கும் படி சொன்னார்கள். அது கேட்டு திடுக்கிட்ட இராவணன் அனைத்து மந்திரிகளையும் உடனே மந்திராலோசனை மண்டபத்திற்கு வரச் சொல்லுமாறு பணித்து, தானும் அங்கு சென்றான்.