இராவணன் சூழ்ச்சிப் படலத்தின் பாடல்கள்

ஆரணிய காண்டம்
இராமனுக்கு அரசுரிமை மறுக்கப்பட்டு கானகம் சென்று வாழும்நிலை ஏற்பட்டது. இக்கானக வாழ்வைக் குறித்து எழுவதனால் இது ஆரணிய காண்டம் எனப்பட்டது. ஆரணியம் என்றால் கானகம் (வனம், காடு) எனப் பொருள்படும். ஆரணிய காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டுள்ளது.
இராவணன் சூழ்ச்சிப் படலம்
அங்கு அடுத்த நிலைமை அறைந்தனம்;
கொங்கு அடுத்த மலர்க் குழல் கொம்பனாட்கு
இங்கு அடுத்த தகைமை இயம்புவாம்.
சீதையின் துயரம்
செயிர் தலைக்கொண்ட, சொல் செவி சேர்தலும்,
குயில் தலத்திடை உற்றது ஓர் கொள்கையாள்,
வயிறு அலைத்து விழுந்து மயங்கினாள்.
முடித்தனென், முதல் வாழ்வு என, மொ�் அழல்
கொடிப் படித்தது என, நெடுங் கோள் அரா,
இடிக்கு உடைந்தது என, புரண்டு ஏங்கினாள்.
மற்று அவ் வாள் அரக்கன் புரி மாயையால்,
இற்று வீழ்ந்தனன் என்னவும், என் அயல்
நிற்றியோ, இளையோய்! ஒரு நீ? என்றாள்.
திண்மையார் உளர் எனச் செப்பற்பாலரோ?
பெண்மையால் உரைசெயப் பெறுதிரால் என,
உண்மையான், அனையவட்கு உணரக் கூறினான்.
சூழும் ஏழ் மலை, அவை தொடர்ந்த சூழல்வாய்
வாழும் ஏழையர் சிறு வலிக்கு, வாள் அமர்,
தாழுமே, இராகவன் தனிமை? தையலீர்!
பேர் எனைத்து, அவை, அவன் முனியின் பேருமால்;
கார் எனக் கரிய அக் கமலக் கண்ணனை
யார் எனக் கருதி, இவ் இடரின் ஆழ்கின்றீர்?
அடைந்த போது அழைக்குமே? அழைக்குமாம் எனின்,
மிடைந்த பேர் அண்டங்கள் மேல, கீழன,
உடைந்துபோம்; அயன் முதல் உயிரும் வீயுமால்.
போற்ற, வன் திரிபுரம் எரிந்த புங்கவன்
ஏற்றி நின்று எய்த வில் இற்றது; எம்பிரான்
ஆற்றலின் அமைவது ஓர் ஆற்றல் உண்மையோ?
மூவகை உலகமும் முடியும்; முந்து உள,
தேவரும், முனிவரும் முதல செவ்வியோர்
ஏவரும், வீழ்ந்துளார்; மற்று அறமும் எஞ்சுமால்.
துரக்க, அங்கு அது, பட, தொலைந்து சோர்கின்ற
அரக்கன் அவ் உரை எடுத்து அரற்றினான்; அதற்கு
இரக்கம் உற்று இரங்கலிர்; இருத்திர் ஈண்டு என்றான்.
சீதை ஏச, இலக்குவன் ஏகுதல்
கொன்றன இன்னலள், கொதிக்கும் உள்ளத்தள்,
நின்ற நின் நிலை, இது நெறியிற்று அன்று எனா,
வன் தறுகண்ணினள், வயிர்த்துக் கூறுவாள்.
பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும், நீ
வெருவலை நின்றனை; வேறு என்? யான், இனி
எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென், ஈண்டு எனா,
தூம வெங் காட்டு எரி தொடர்கின்றாள்தனை,
சேம விற் குமரனும் விலக்கி, சீறடிப்
பூ முகம் நெடு நிலம் புல்லி, சொல்லுவான்;
அஞ்சுவென்; மறுக்கிலென்; அவலம் தீர்ந்து இனி,
இஞ்சு இரும்; அடியனேன் ஏகுகின்றனென்;
வெஞ் சின விதியினை வெல்ல வல்லமோ?
ஆகின்றது; அரசன் தன் ஆணை நீர் மறுத்து,
"ஏகு" என்றீர்; இருக்கின்றீர் தமியிர் என்று, பின்
வேகின்ற சிந்தையான் விடை கொண்டு ஏகினான்.
பொருப்பு அனையானிடைப் போவெனே எனின்,
அருப்பம் இல் கேடு வந்து அடையும்; ஆர் உயிர்
விருப்பனேற்கு என் செயல்? என்று, விம்மினான்.
இறந்துபாடு இவர்க்கு உறும் இதனின் இவ் வழித்
துறந்து போம் இதனையே துணிவென்; தொல் வினைப்
பிறந்து, போந்து, இது படும், பேதையேன் எனா.
காவல்செய் எருவையின் தலைவன் கண்ணுறும்;
ஆவது காக்கும் என்று அறிவித்து, அவ் வழி,
தேவர் செய் தவத்தினால் செம்மல் ஏகினான்.
இராவணன் தவக் கோலத்தில் தோன்றுதல்
வளை எயிற்று இராவணன், வஞ்சம் முற்றுவான்,
முளை வரித் தண்டு ஒரு மூன்றும், முப் பகைத்
தளை அரி தவத்தர் வடிவம், தாங்கினான்.
சேண் நெறி வந்தது ஓர் வருத்தச் செய்கையன்;
பாணியின் அளந்து இசை படிக்கின்றான் என,
வீணையின் இசைபட வேதம் பாடுவான்.
தீப் பொதிந்தாமென மிதிக்கும் செய்கையன்;
காப்பு அரு நடுக்குறும் காலன், கையினன்;
மூப்பு எனும் பருவமும் முனிய முற்றினான்.
ஆமையின் இருக்கையன்; வளைந்த ஆக்கையன்;
நாம நூல் மார்பினன்; நணுகினான் அரோ-
தூ மனத்து அருந்ததி இருந்த சூழல்வாய்.
நா முதல் குழறிட நடுங்கும் சொல்லினான்;
யாவர் இவ் இருக்கையுள் இருந்துளீர்? என்றான் -
தேவரும் மருள்தரத் தெரிந்த மேனியான்.
சீதை இராவணனை வரவேற்றல்
சேகு அறு நோன்பினர் என்னும் சிந்தையால்,
பாகு இயல் கிளவியாள், பவளக் கொம்பர் போன்று,
ஏகுமின் ஈண்டு என, எதிர்வந்து எய்தினாள்.
அற்பின் நல் திரை புரள் ஆசை வேலையன்,
பொற்பினுக்கு அணியினை, புகழின் சேக்கையை,
கற்பினுக்கு அரசியை, கண்ணின் நோக்கினான்.
ஓங்கிய அழகினாள் உருவம் காண்டலும்,
ஏங்கினன் மன நிலை யாது என்று உன்னுவாம்?
வீங்கின, மெலிந்தன, வீரத் தோள்களே.
சுனை மடுத்து உண்டு இசை முரலும் தும்பியின் -
இனம் எனக் களித்துளது என்பது என்? அவன்
மனம் எனக் களித்தது, கண்ணின் மாலையே.
மேயவன் மணி நிறம் மேனி காணுதற்கு
ஏயுமே இருபது? இங்கு இமைப்பு இல் நாட்டங்கள்
ஆயிரம் இல்லை! என்று, அல்லல் எய்தினான்.
புரை தபு தவத்தின் யான் படைத்த போதுமே,
நிரை வளை முன் கை இந் நின்ற நங்கையின்
கரை அறு நல் நலக் கடற்கு? என்று உன்னினான்.
தேவரும், அவுணரும், தேவிமாரொடும்,
கூவல்செய் தொழிலினர், குடிமை செய்திட,
மூஉலகமும் இவர் முறையின் ஆள, யான்
ஏவல் செய்து உய்குவென், இனி என்று உன்னினான்.
உளைவுறு துயர் முகத்து ஒளி இது ஆம் எனின்,
முளை எயிறு இலங்கிடும் முறுவல் என்படும்?
தளை அவிழ் குழல் இவட் கண்டு தந்த என்
இளையவட்கு அளிப்பென், என் அரசு என்று எண்ணினான்.
ஆண்டையான் அனையன உன்னி, ஆசை மேல்
மூண்டு எழு சிந்தனை, முறை இலோன் தனைக்
காண்டலும், கண்ணின் நீர் துடைத்த கற்பினாள்,
ஈண்டு எழுந்தருளும் என்று, இனிய கூறினாள்.
இயற்கை நடுங்க இராவணன் இருந்தான்
ஏத்தினள்; எய்தலும், இருத்திர் ஈண்டு என,
வேத்திரத்து ஆசனம் விதியின் நல்கினாள்;
மாத் திரிதண்டு அயல் வைத்த வஞ்சனும்,
பூத் தொடர் சாலையின் இருந்த போழ்தினே.
நடுங்கின, மலைகளும் மரனும்; நா அவிந்து,
அடங்கின, பறவையும்; விலங்கும் அஞ்சின;
படம் குறைந்து ஒதுங்கின, பாம்பும்;-பாதகக்
கடுந் தொழில் அரக்கனைக் காணும் கண்ணினே.
தீய இராவணன் வினவ சீதை விடையளித்தல்
இருந்தவன், யாவது இவ் இருக்கை? இங்கு உறை
அருந்தவன் யாவன்? நீர் யாரை? என்றலும்,
விருந்தினர்; இவ் வழி விரகு இலார் என,
பெருந் தடங் கண்ணவள் பேசல் மேயினாள்;
தயரதன் தொல் குலத் தனையன்; தம்பியோடு
உயர் குலத்து அன்னை சொல் உச்சி ஏந்தினான்,
அயர்வு இலன், இவ் வழி உறையும்; அன்னவன்
பெயரினைத் தெரிகுதிர், பெருமையீர்! என்றாள்.
கேட்டனென், கண்டிலென்; கெழுவு கங்கை நீர்
நாட்டிடை ஒரு முறை நண்ணினேன்; மலர்
வாள் தடங் கண்ணி! நீர் யாவர் மா மகள்,
காட்டிடை அரும் பகல் கழிக்கின்றீர்? என்றான்.
அனக மா நெறி படர் அடிகள்; நும் அலால்
நினைவது ஓர் தெய்வம் வேறு இலாத நெஞ்சினான்
சனகன் மா மகள்; பெயர் சனகி; காகுத்தன்
மனைவி யான் என்றனள், மறு இல் கற்பினாள்.
சீதையின் கேள்விக்கு இராவணன் விடையளித்தல்
அவ்வழி அனையன உரைத்த ஆயிழை,
வெவ் வழி வருந்தினிர், விளைந்த மூப்பினிர்,
இவ் வழி இரு வினை கடக்க எண்ணினிர்,
எவ் வழி நின்றும் இங்கு எய்தினீர்? என்றாள்
இந்திரற்கு இந்திரன்; எழுதல் ஆகலாச்
சுந்தரன்; நான்முகன் மரபில் தோன்றினான்;
அந்தரத்தோடும் எவ் உலகும் ஆள்கின்றான்;
மந்திரத்து அரு மறை வைகும் நாவினான்.
ஈசன் ஆண்டு இருந்த பேர் இலங்கு மால் வரை
ஊசி-வேரொடும் பறித்து எடுக்கும் ஊற்றத்தான்;
ஆசைகள் சுமந்த பேர் அளவில் யானைகள்
பூசல் செய் மருப்பினைப் பொடி செய் தோளினான்.
நிற்பவர், கடைத்தலை நிறைந்து தேவரே;
சொல் பகும், மற்று, அவன் பெருமை சொல்லுங்கால்;
கற்பகம் முதலிய நிதியம் கையன;
பொற்பு அகம், மான நீர் இலங்கைப் பொன் நகர்.
பொன்னகரத்தினும், பொலன்கொள் நாகர்தம்
தொல் நகரத்தினும், தொடர்ந்த மா நிலத்து
எந் நகரத்தினும், இனிய; ஈண்டு, அவன்
நல் நகரத்தன நவை இலாதன.
தாளுடை மலருளான் தந்த, அந்தம் இல்
நாளுடை வாழ்க்கையன்; நாரி பாகத்தன்
வாளுடைத் தடக் கையன்; வாரி வைத்த வெங்
கோளுடைச் சிறையினன்; குணங்கள் மேன்மையான்.
வெம்மை தீர் ஒழுக்கினன்; விரிந்த கேள்வியன்;
செம்மையோன்; மன்மதன் திகைக்கும் செவ்வியன்;
எம்மையோர் அனைவரும், "இறைவர்" என்று எணும்
மும்மையோர் பெருமையும் முற்றும் பெற்றியான்.
அனைத்து உலகினும் அழகு அமைந்த நங்கையர்
எனைப் பலர், அவன் தனது அருளின் இச்சையோர்;
நினைத்து, அவர் உருகவும், உதவ நேர்கிலன்;
மனக்கு இனியாள் ஒரு மாதை நாடுவான்.
ஆண்டையான் அரசு வீற்றிருந்த அந் நகர்,
வேண்டி, யான் சில் பகல் உறைதல் மேவினேன்;
நீண்டனென் இருந்து, அவற் பிரியும் நெஞ்சிலேன்,
மீண்டனென் என்றனன், வினையம் உன்னுவான்.
சீதை-இராவணன் வாக்குவாதம்
வேதமும் வேதியர் அருளும் வெஃகலா
சேதன மன் உயிர் தின்னும், தீவினைப்
பாதக அரக்கர்தம் பதியின் வைகுதற்கு
ஏது என்?-உடலமும் மிகை என்று எண்ணுவீர்!
வனத்திடை மாதவர் மருங்கு வைகலிர்;
புனல் திரு நாட்டிடைப் புனிதர் ஊர் புக
நினைத்திலிர்; அற நெறி நினைக்கிலாதவர்,
இனத்திடை வைகினிர்; என் செய்திர்! என்றாள்.
மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு இலான், "மறுவின் தீர்ந்தார்,
வெங் கண் வாள் அரக்கர்" என்ன வெருவலம்; மெய்ம்மை நோக்கின்
திங்கள் வாள் முகத்தினாளே! தேவரின் தீயர் அன்றே;
எங்கள் போலியர்க்கு நல்லார் நிருதரே போலும் என்றான்.
சேயிழை-அன்ன சொல்ல,-தீயவர்ச் சேர்தல் செய்தார்
தூயவர் அல்லர், சொல்லின், தொழ் நெறி தொடர்ந்தோர் என்றாள்;
மாய வல் அரக்கர் வல்லர், வேண்டு உரு வரிக்க என்பது,
ஆயவள் அறிதல் தேற்றாள்; ஆதலின், அயல் ஒன்று எண்ணாள்.
அயிர்த்தனள் ஆகும் என்று, ஓர் ஐயுறவு அகத்துக் கொண்டான்;
பெயர்த்து, அது துடைக்க எண்ணி, பிறிதுறப் பேசலுற்றான்;
மயக்கு அறும் உலகம் மூன்றின் வாழ்பவர்க்கு, அனைய வல்லோர்
இயற்கையின் நிற்பது அல்லால், இயற்றல் ஆம் நெறி என்? என்றான்.
திறம் தெரி வஞ்சன், அச் சொல் செப்பலும், செப்பம் மிக்காள்,
அறம் தரு வள்ளல், ஈண்டு இங்கு அருந் தவம் முயலும் நாளுள்,
மறம்தலை திரிந்த வாழ்க்கை அரக்கர் தம் வருக்கத்தோடும்,
இறந்தனர் முடிவர்; பின்னர், இடர் இலை உலகம் என்றாள்.
மானவள் உரைத்தலோடும், மானிடர், அரக்கர்தம்மை
மீன் என மிளிரும் கண்ணாய்! வேர் அற வெல்வர் என்னின்,
யானையின் இனத்தை எல்லாம் இள முயல்கொல்லும்; இன்னும்,
கூன் உகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லும் என்றான்.
மின் திரண்டனைய பங்கி விராதனும், வெகுளி பொங்கக்
கன்றிய மனத்து வென்றிக் கரன் முதல் கணக்கிலோரும்,
பொன்றிய பூசல் ஒன்றும் கேட்டிலிர் போலும் என்றாள்-
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி, மழைக் கண் நீர் அருவி சோர்வாள்.
வாள் அரி வள்ளல்; சொன்ன மான் கணம் நிருதரானார்;
கேளொடு மடியுமாறும், வானவர் கிளருமாறும்,
நாளையே காண்டிர் அன்றே; நவை இலிர், உணர்கிலீரோ?
மீள அருந் தருமம் தன்னை வெல்லுமோ பாவம்? என்றாள்.
மாய வேடம் சிதைய இராவணன் சீற்றத்துடன் எழல்
தேனிடை அமுது அளாய அன்ன மென் சில சொல் மாலை,
தானுடைச் செவிகளூடு தவழுற, தளிர்த்து வீங்கும்
ஊனுடை உடம்பினானும், உரு கெழு மானம் ஊன்ற,
மானிடர் வலியர் என்ற மாற்றத்தால், சீற்றம் வைத்தான்.
சீறினன், உரைசெய்வான், "அச் சிறு வலிப் புல்லியோர்கட்கு
ஈறு, ஒரு மனிதன் செய்தான்" என்று எடுத்து இயம்பினாயேல்,
தேறுதி நாளையே; அவ் இருபது திண் தோள் வாடை
வீறிய பொழுது, பூளைவீ என வீவன் அன்றே?
மேருவைப் பறிக்க வேண்டின், விண்ணினை இடிக்க வேண்டின்,
நீரினைக் கலக்க வேண்டின், நெருப்பினை அவிக்க வேண்டின்
பாரினை எடுக்க வேண்டின், பல வினை-சில சொல் ஏழாய்!
யார் எனக் கருதிச் சொன்னாய்?-இராவணற்கு அரிது என்? என்றான்.
கம்பராமாயணம் - சீதையின் துயர்
இராவணன் பேச்சு
இராவணன் மேலும் பேசுதல்
சீதையின் கற்பு
சீதை இலக்குவனை அழைத்தல
சீதை அரற்றுதல்
இராவணன் கூற்றுக்கு சீதை எதிர்மொழி கூறல்