ஆற்றுப் படலம்

ஆற்றுப் படலம்

bookmark

பாலகாண்டம்

பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

ஆற்றுப் படலம்

(ஆற்றுப்படலம் ஆற்றைப் பற்றிய படலம் என விரியும். இங்குச் சிறப்பித்துப் பேசப்படும் ஆறு சரயு நதியாகும். கோசல நாட்டுக்கு வளமூட்டும் சரயு நதியின் வெள்ளம். தன்மை. போக்கு ஆகியவற்றை இப்படலம் விளக்குகிறது.)

கோசல நாடு பஞ்சம் என்ற வார்த்தை அகராதியிலேயே இல்லாத நாடு. தர்மங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், அந்த தர்மத்தை பெற்றுக் கொள்ள யாச்சகர்களே (பிச்சைக் காரர்களே) இல்லாத நாடு. ஏனெனில் அந்த நாட்டில் எல்லோரும் செல்வந்தர்கள். அதுவும் சோழ நாட்டைப் போல சோறுடைத்த நாடு. அந்த நாட்டை வளங்கொழிக்கச் செய்தது சரயு நதி. அந்நாட்டில் வானில் மிதக்கும் மேகங்கள் சிவ பெருமானின் நிறத்துக்கு ஒப்பாக இருந்தது. அவைகள் திருமாலின் நிறத்துக்கு ஒப்ப விளங்கும் கடலில் சென்று நீரை முகர்ந்து கரு நிறத்துடன் மீண்டன. அக்கருமேகங்கள், இமயமலையின் மீது எல்லா இடங்களிலும் படர்ந்து சென்றன.சூரிய ஒளியால் இமயமலையின் பொன்னிறத்தைக் கண்ட மேகங்களுக்கு, அப்பொன்னைத் தோண்டி எடுக்க வேண்டும் என்ற ஆசை வந்ததால். அவைகள் மழைத் துளிகளை வானில் இருந்து சிதறடித்து தோண்ட ஆரம்பித்தன.

நீதி தவறாத மன்னன் ஒருவன் இருந்தால், அந்நாட்டில் எவ்வாறு அவன் புகழ் பெருகி வளருமோ, அவ்வாறே அம்மழை நீரும் பெருகி வெள்ளமெனத் திரண்டு ஓடியது. ஓடிய அந்த மழை நீர், மயில்களின் தோகைகளையும், மலையிடையே தோன்றிய மணிகளையும், மூலிகைகளையும், அழகிய தேன் கொண்ட வாசனை மலர்களையும், தேன் அடைகளையும் ஒரு வணிகன் சுமந்து செல்வது போல, சுமந்த படி மலையை விட்டு பாய்ந்து இறங்கியது.

அந்த தேன் கொண்ட மலர்களின் காரணமாகவும், தேன் அடைகளின் காரணமாகவும், அந்த நீர் இன்சுவை மிகுந்து இருந்தது. அதனைப் பார்த்த வண்டுகளும், ஈக்களும் தேன் தான் நதி போல ஓடுகிறது போலும் என்று குழம்பி அந்த மழை நீரை மொய்த்தன.

அந்த மழை நீர் ஒன்று சேர இவ்வாறாக சரயு நதி பிரவாகம் எடுக்க, அதன் பிரவாகத்தை சொல்ல வார்த்தைகள் உண்டோ?. அந்த நீரின் வேகம் எப்படி இருந்தது தெரியுமா? யானை, குதிரை, காலாள், தேர் ஆகிய நான்கு படைகளும் ஒன்று திரண்டு ஆர்வத்துடன் ஒரு யுத்தம் செய்ய ஆரவாரத்துடன் பாய்ந்தால் எப்படி இருக்குமோ, அதைக் காட்டிலும் துள்ளிக் குதித்து பாய்ந்து சென்றது சரயு நதி.அந்த அழகைக் காண கண் ஒன்று போதுமோ? ஒரு வேளை, அந்த நதி கடலுடன் போர் செய்யத் தான் அவ்வளவு வேகத்துடன் விரைந்து சென்றதோ?

அந்த சரயு நதி சூரிய குலத்தில் தோன்றிய மன்னர்களின், ஒழுக்கத்துக்கு மாற்று குறையாதது. தாய் பாலூட்டி குழந்தையைக் காத்து, அரவணைப்பது போல. அந்த நதி தனது இனிய நீரால் கோசல நாட்டு மக்களை காத்து, அரவணைத்து வந்தது. அந்த சரயு நதி மலையில் இருந்து வரும் போதே குங்குமப் பூவையும், சந்தனத்தையும், கொன்றைப் பூவையும், பச்சிலையையும்,காலையில் மலர்கின்ற வேங்கைப் பூவையும், நரந்தப் புல்லும், அத்துடன் ஏலக்காயையும்,கோங்கிலவமும், தேனடையையும் ஆகிய இவைகளை எல்லாம் சுமந்து வந்ததால் நறுமணத்துடன் விளங்கியது. அந்த நறுமணத்துடன் குறிஞ்சி நிலத்தில் அச்சரயு ஆறு புகுந்து சென்றது. பல நிறங்கள் கொண்ட பொருள்கள் ஆற்று வெள்ளத்தில் கலந்திருந்த காட்சி வானவில்லைக் கண்டதுபோல் இருந்தது.

சரயு நதியின் வெள்ளம், எயினரின் சிற்றூர்களைத் தன் அம்பு மழையால் நிலை கெடவும், ஆங்காங்கே எயிற்றிப் பெண்களை வயிற்றில் அடித்துக் கொண்டு ஓடவும் செய்து, அவ்வெயினர் வைத்துள்ள கணையையும் வில்லையும் அடித்துக் கொண்டு சென்றது. அந்த நதியின் பெருக்கு அச்சமயத்தில் ஒரு பகை அரசனின் சேனையைப் போல இருந்தது.

முல்லை நிலத்தில் அந்த நதி பாய்ந்த போது, மான் குட்டி போல் மருண்ட பார்வை கொண்ட இடைச்சிகள் அணிந்த ஆடைகளையும் கவர்ந்து சென்றது. அது மட்டுமா? மதம் கொண்ட யானைகளின் கூட்டத்தைப் போல தன் வழியில் இடையூராக இருந்த குருந்த மரத்தையும், மருத மரத்தையும் முறித்துத் தள்ளியது. சரயு நதியின் வெள்ளம் காரணமாக அதில் ஏற்பட்ட நுரை ஒரு புறம் நன் மனமுள்ள தயிரைப் போலவும், மறு புறம் காய்ச்சி வடித்த நெய்யைப் போலவும் காட்சி அளித்தது.

இறுதியாக சரயு நதியின் வெள்ளம் மறுத நிலத்தை அடைந்த போது. மேலும் பல வாய்க்கால்களாகப் பிரிந்து தன் வழியை தானே ஏற்படுத்திக் கொண்டது. அதைப் பார்க்கும் போது, கால்வாய் ஒன்று பலவாகப் பிரியினும் உள்ளுறை நீர் ஒன்றே; உயிர்க்குலம் பல கிளைகளாகப் பிரிந்தாலும் உயிர் ஒன்றே என்ற தத்துவத்தை விளக்கிக் கூறும் வகையில் இருந்தது.