
நாட்டுப் படலம்

பாலகாண்டம்
பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
நாட்டுப் படலம்
(கோசல நாட்டின் வளத்தை / சிறப்பைக் கூறும் படலம் இது. கோசலநாட்டு மக்களின் பொழுதுபோக்கு. உழவர்களின் உயர்ந்த வாழ்க்கை. செல்வப் பொலிவு. பெண்டிர் பெருமை. நல்லன கொண்டுஅல்லன நீக்கி வாழும் மக்களின் பண்பு நலம். கலை வளர்ச்சி ஒழுக்க நெறி பேணும் ஆடவர் மற்றும் மகளிரால் அங்கு அறம் நிலைபெற்றிருத்தல் போன்ற பல செய்திகள் இப்படலத்தில் விவரிக்கப்படுகின்றன)
கோசல நாட்டின் சிறப்பை சொல்ல வேண்டும் எனில் செந்நெல் வயல்களில் அன்னப் பறவைகளும், அழகிய சோலைகளிலே மது மயக்கம் கொண்ட வண்டுகள் நடனமாடவும், மதகுகளில் சங்குகளுமாக இருந்தது. சரயு நதி பாயும் ஓசை கரும்பாலைகளில் இருந்து கரும்புச் சாறு பாய்ந்து ஓடும் ஓசையைப் போலவும், மதகு நீரில் காணப்படும் சங்குப் பூச்சிகள் எழுப்பும் ஓசையைப் போன்றும் இருந்தது. அங்கே மேகங்கள் மத்தளம் போல ஒலித்தன. அந்த நாடே மருத நிலத்தின் பகுதியாக விளங்கியது. எப்போதும் தேனை உண்ட வண்டுகள் ரீங்காரம் இட. தாமரைக் கொடிகள் மலர்களாகிய விளக்குகளை ஏந்தி நிற்க. செந்தாமரை மலர்கள் பூத்துக் குலுங்க, அழகுக்கு மறுபெயருடன் கோசல நாடு விளங்கியது. இந்த அழகுக்குக் காரணம் சரயு நதி மட்டும் அல்ல, அந்நாட்டு மன்னன் செங்கோல் தவறாமல் அரசாட்சி செய்தததும் தான்.
கோசல நாட்டின் வாலிபர்கள் மன்மதனைப் போலவும், கன்னிப் பெண்கள் ரதியைப் போலவும் அழகுடன் காணப்பட்டனர். பொன் மாளிகைகளுக்கும் அந்நாட்டில் குறைவில்லை. அதன் மாடங்களில் கன்னிப் பெண்கள் உலாவ, அவர்கள் செய்யும் செயல்களும் கூட அழகு தான். அவர்கள் படுத்துறங்கும் பொன்னிறக் கட்டிலின் பொலிவு சூரிய ஒளியை ஒத்து இருக்கும். அதில் அப்பெண்கள் படுத்துறங்கும் அழகைக் காண, காண்போரின் கண்கள் இமைக்காது.
அந்நாட்டில் பாயும் சரயு நதியின் வெள்ளத்தில் தான் அப்பெண்கள் நாள்தோறும் நீராடுவார்கள். அத் தேனினிமை கொண்ட மழலைச் சொற்களைப் பேசக் கூடிய அந்த இளம் பெண்களின் காற் குந்தலில் இருந்த மலர்கள் சரயு நதியிலே கலக்க, அந்நீர் மேலும் வாசனை பெரும்.
சோலைகளில் குயில்கள் திருமணம் செய்ய, மயில்கள் நடனமாட எல்லா உயிரினங்களும் சந்தோஷித்து களித்தன. சிலர் புதிதாய் மணந்த மனைவியருடன் காதல் உறவாடி இன்பம் காண, சிலர் யக்ஷ கானத்துக்கு நிகரான சிறந்த கானத்தைக் கேட்டும், வேறு சிலரோ அதிதிகளுக்கு உணவளித்து மகிழ்ந்தும், இன்னும் சிலர் பண்டிதர்களுடன் உரையாடியும் தங்கள் பொழுதை இன்பத்துடன் கழித்தனர்.
இளம் பெண்களின் அழகிய கண்களில் காணப்படும் அந்த கரு மையைப் பார்த்த வண்டுகள், அது பெண் வண்டோ என நினைத்து சுற்றி, சுற்றி வந்தன. அப்பெண்களில் செந்நிற இதழ்களைப் போல எங்கும் செந்தாமரை வளர்ந்து காணப்பட்டன. அந்நாட்டிலே சோற்றுப் பஞ்சம் கிடையாது, அதற்குக் காரணம் பருவம் தவறாமல் செந்நெல்கள் மிகுதியாக வளர்ந்து இருந்தன. வளங்கள் மிகுத்து, எங்கும் வேள்விகள் நடந்தபடி இருக்க, அந்நாடே எப்போதும் திருவிழாக் கோலம் பூண்டு இருக்கும். அம்மக்கள் இதன் மூலம் இன்னொரு சொர்கத்தை பூவியிலேயே கண்டனர்.