அதிகாயன் வதைப் படலம்

bookmark

யுத்தகாண்டம்

இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

அதிகாயன் வதைப் படலம்

அதிகாயனது இறப்பைக் கூறும் படலம் இது. இராவணன் மக்கள் மூவர். அவர்கள் அட்ச குமாரன், அதிகாயன், இந்திரசித்தன் என்பவர்களே. அதிகாயன் - இராவணனுக்கும் தானிய மாலிக்கும் பிறந்த மகன். அதிகாயன் என்ற சொல்லுக்குப் பெருந்தோற்றம் உள்ள உடல் படைத்தவன் என்ற பொருள். காயம் - உடம்பு. அதி – மிகப்பெரிய என்க.

கும்பகருணன் இறந்தமை கேட்டு அழுது அரற்றிச் சீதை இருக்கும் அசோக வனம் விட்டுப் போன இராவணன் தன் தம்பியைக் காக்க முடியாது சாகவிட்ட அரக்கர்களைப் பார்த்துச் சினந்து பலவாறு பேசுகிறான். உங்களால் முடியாவிடில் சொல்லுங்கள். நானே சென்று என் வேலால் சிறு தொழில் புரிந்து வரும் மனிதரைக் கொல்வேன் என்கிறான். அப்போது அதிகாயன் மானமும் சீற்றமும் மிக்கெழத் தான் சென்று பகை முடித்து வருவதாகக் கூறுகிறான். உன் தம்பியைக் கொன்ற இராமனுக்கு அவன் தம்பியைக் கொன்று அவலத்தை உண்டாக்குவேன் என்று வஞ்சினம் கூறி அரக்கர் பெரும் படை சூழப் போருக்குச் செல்லுகிறான். போர்க்களத்தில் தலையற்றுக் கிடந்த கும்பகருணனைப் பார்த்து அவலித்த அதிகாயன், தன் சபதத்தை நிறைவேற்ற எண்ணி மயிடன் என்பவனைத் தூதுவனாக இராமனிடம் அனுப்பினான். வீடணன் அதிகாயனின் பெருவீரத்தைக் குறிப்பிட்டுப் போருக்குச் செல்லும் இலக்குவனுடன் தானும் போர்க்களம் வந்தான்.

தொடர்ந்து நடந்த பெரும் போரில் இலக்குவன் பிரமாத்திரத்தால் அதிகாயனைக் கொன்றான். அதிகாயன் வீரப் போர் புரிந்த விதத்தை இப்படலம் விளக்குகிறது. அவனது மரணச் செய்தி கேட்ட இராவணனது வருத்தம், சினம், அதிர்ச்சி ஆகியவையும். தாயாகிய தானியமாலியின் அவலப் புலம்பலும், இலங்கையர் துயரமும் இப்படலத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் ஆகும்

அசோகவனத்தை விட்டு வெளியேறிய இராவணன் நேராக கோபத்துடனும், துயரத்துடனும் புறப்பட்டுச் சென்று ஆலோசனை மண்டபத்தை அடைந்து தனது ஆசனத்தில் அமர்ந்தான். அவனோடு பின்னே வந்த அமைச்சர்கள் அவன் முன் தொழுது நின்றார்கள். கோபத் தீ கண்களில் பறக்க தனது அமைச்சர்களை நோக்கிய இராவணன்," அமைச்சர்களே! எனது பெரும் சேனையுடன் உங்கள் பெரும் சேனையும் கலக்கச் சென்று, பகைவர்களின் வில் ஆற்றலை அழித்துத் திரும்பாதவர்கள் ஆனீர்கள்! கோழையாகிய நீங்கள் என் முன்னே நிற்காதீர்கள். எல்லோரும் அப்பால் போங்கள்!' போருக்குச் சென்று இராமலக்ஷ்மணர்களை வெற்றி பெறுமாறு கொன்று மீண்டும் இங்கு வருவோம்' என்று கூறிய வீரப் பண்பு உடையவர்களே! எனது தம்பியைத் தனியே போருக்குச் செல்லாதவாறு தடுக்காதவர்கள் ஆனீர்கள். அவனோடு உடன் இருந்து, அவனுக்குத் தீங்கு நேராதபடி தடுக்கும் வலிமை இல்லாதவர்கள் ஆனீர்கள். அவனுக்குப் பதில் உங்களுடைய உயிரை நீங்கள் கொடுத்து இருக்கலாமே. அதுவும் செய்யாமல் போனீர்கள். இப்படியிருந்தும் நீங்கள் வீரர்களின் வரிசையில் சேர்ந்து இருக்கின்றீர்கள். ஆதிநாள், தொட்டு நான் மூவுலகத்தையும் ஆண்டது, எனது கொடிய வலிமையினாலாகும். எனது வெற்றி ஒன்றாலேயே நீங்கள் இந்தப் பிறவியில் அதிகமான செல்வத்தைப் பெற்று இருக்கின்றீர்கள். இப்போதாவது போருக்குச் சென்று நீங்கள் மாண்டாவது உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள்.

ஒருவேளை அந்தப் பகைவர்களுடன் போர் செய்யும் அளவுக்கு உங்களுக்கு வலிமை இல்லை என்றால் சொல்லி விடுங்கள். நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று தேற்றிக் கொண்டு நானே, தனியே போருக்குச் சென்று எனது பகையை முடித்துக் கொள்கிறேன்!" என்று கூறி முடித்தான்.

அது கேட்ட மாத்திரத்தில், பிரமனாலும் கோபித்து வெல்ல முடியாத அதிகாயன் நதி நீரும் சுடும்படியான அதிக கோபமும் நாணமும் அடைந்தான். அவன் இராவணனை நோக்கி, " நான் இருக்கும் இந்தச் சபையிலே, என்னையும் சேர்த்து நான் போருக்குச் செல்ல அஞ்சினேன் என்று இயம்புவதும் தகுதியுடையதோ ? தேவர்களில் வலிமை பெற்றவரைச் சிறை பிடித்துக் கொண்டு வந்து உம்மிடத்தில் கொடுத்திலேனோ? உம்மையும் நடுங்குமாறு போர் செய்த தேவர்களை எல்லாம் குயவனின் சக்கரம் போல் சுழலடித்திலேனோ?என்னையும் அட்சகுமாரனோடும், குமபகர்ணனோடும், நன்றி மறந்த அந்த விபீஷணனுடனும் ஒன்றாகச் சேர்த்து வைத்து நினைத்தீரோ? நான் இப்போதே உம் முன்னாள் சபதம் செய்கிறேன் உமது தம்பி கும்பகர்ணனைக் கொன்ற இராமனைப் பழிவாங்க, அவனது தம்பியை பதிலுக்குக் கொல்வேன். அதன் மூலம் அந்த இராமனுக்கு, அவனும் நடுங்கச் செய்ய வல்ல ஒப்பற்ற கொடும் துயரை உண்டாக்குவேன். அவ்வாறு செய்யாமல் போவேனாயின், இனி, நான் உமக்கு ஒப்பற்ற சிறந்த மகனாவேனோ? நான் இப்போதே போருக்குச் செல்வேன். வானர சேனையையும், அவர்களை வழி நடத்தும் வானர சேனாதிபதிகளையும், லக்ஷ்மணனையும் கொன்று வருவேன். இராமனை வேண்டும் என்றால் உன் பொருட்டு நான் உயிருடன் விட்டு, விட்டு வருகிறேன்.

மேலும் நீர் என்னைத் தனியே போருக்குச் செல்லுமாறு கட்டளையிட்டாலும் சரி, சேனையோடு செல்லக் கட்டளையிட்டாலும் சரி, அவ்வாறே நான் செய்வேன். இக்கணமே உமக்கு விருப்பமானதைச் சொல்வீர். போருக்குச் செல்ல எனக்கு விடை தருவீர்!" என்று வேண்டினான்.

தனது மகன் அதிகாயன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு ஆனந்தம் கொண்டான் இராவணன். அந்த ஆனந்தத்துடன் அதிகாயனைப் பார்த்து," இன்னும் இந்த சபையில் வீரம் செத்துவிட வில்லை என்று உனது வார்த்தைகள் மூலம் அறிந்து கொண்டேன் மகனே. நீ வாழ்க. நீ லக்ஷ்மணன் உயிரைப் போய், உடனே கொண்டு வா. அவ்வாறு நீ செய்தால், நான் அடுத்த நாளே இராமனின் உயிரைப் பறித்து விடுவேன். எனவே, இது வரையில் நான் அனுப்பாத பலம் கொண்ட மூவாயிரம் கோடி காலாட் படைகளையும், அத்துடன் கோடிக்கணக்கான யானை, குதிரை மற்றும் கும்பன், நிகும்பன், அகம்பன் போன்ற மாகாரதிகளையும் உடன் அழைத்துச் செல்வாயாக. இனி நீ திரும்பி வந்தால் லக்ஷ்மணன் இறந்து விட்டான் என்ற செய்தியுடன் மட்டும் வந்து என்னைப் பார்" என்றான் இராவணன்.

தந்தையின் ஆணையை ஏற்று அக்கணமே அதிகாயன் போர் கோலம் புகுந்தான். பிறகு சதுரங்க சேனைகள் தன்னைத் தொடர பெரும் படையுடன் யுத்த களம் சென்றான். அப்போது அந்த அரக்க சேனைகள் செய்த பெரும் ஆராவாரத்தால் சூரிய தேவனே பயந்து மேகத்திற்குள் சென்று மறைந்து கொண்டான். மண் மடந்தையும் நகரும் படி நடந்து சென்ற அந்தப் படையைக் கண்டு, வானர வீரர்கள் சற்றே அச்சம் கொண்டனர்.

மேருவைப் போன்ற மலைகளின் கூட்டம் நெருங்கி மண்ணில் செல்வது போல, பெரிய தேர்கள் தனது தேரைச் சூழ்ந்து வர அதிகாயன் போர்க்களத்தில் புகுந்தான்!

அவ்வாறு போர்க்களத்தில் நுழைந்த அதிகாயன், ஸ்ரீ இராமபிரானால் மாண்ட அரக்கர் சேனையைக் கண்டு மிகுந்த கோபமும் வருத்தமும் அடைந்தான். கும்பகர்ணனைப் தேடிச் சென்றான். ஓரிடத்தில் கும்பகர்ணனின் தலையற்ற முண்டம் மட்டும் புழுதியிலே கிடக்கக் கண்டான். அவனுடைய தலையைக் காணாதது கண்டு வருந்தி, அதனை எங்கும் தேடித் திரிந்தான். அத்தலை போர்க்களத்தில் கிடந்தால் அல்லவோ அவனுக்கு அகப்படுவதற்கு? அது தான் கும்பகர்ணனின் வேண்டு கோள்படி ஸ்ரீ இராமரால் கடலில் மூழ்கடிக்கப்பட்டு விட்டதே!

மீண்டும் அதிகாயன் கும்பகர்ணனின் சடலத்தின் அருகே வந்தான்." இது, வலிமையுடைய அம்புடனே மேடாக உயர்ந்து இருக்கின்ற திடல் இல்லை; திக்கஜத்தின் உடலும் இல்லை; ஒரு திண்ணிய கடலும் இல்லை; மதயானை போன்ற எனது சிறிய தந்தையாகிய கும்பகர்ணனது உடம்பே!" என்று சொல்லி பெருமூச்சுடன் கோபித்தான்.

மேலும் அவன் தனக்குள் " ஐயோ! இந்த நிலையைக் காண்பதற்கோ இங்கு வந்தேன்? இன்னும் உயிருடன் இருக்கும் மனிதர்களைக் கொள்ளாதவனும், என் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் வழியில் செல்லாதவனுமாக நானும் இருப்பேனோ? அப்படி இருப்பேனானால், இவ்விடர் நீங்கப் பெறுவேனோ?" என்று கூறிச் சினந்தான்.

பிறகு அதிகாயன் மயிடன் என்னும் தூதுவனை அழைத்தான் அவனிடம் கும்பகர்ணனின் உடலைக் காட்டி ,"இந்த உடலைப் பார், இது பெரிய மேரு மலையோ இல்லை மத யானையின் உடலோ இல்லை. எனக்கு சிறு வயதில் கதாயுதப் பயிற்சியை சொல்லிக் கொடுத்த எனது குருவும், மற்றொரு தந்தையுமான கும்பகர்ணனின் உடல். எனது இந்த சிறிய தந்தையின் உடலை இவ்வாறு ஆக்கிய இராமனோ களிப்பில் இருக்கிறான். நான் இக் கொடும் செயல் செய்த இராமனை பழி தீர்க்க, அவனது தம்பியையும் இது போலவே நான் செய்ய வேண்டும். எனில், அதற்கு அவன் தம்பி லக்ஷ்மணன் இங்கு வர வேண்டும். ஆதலால், மயிடனே நீ போய் இந்த அதிகாயன், லக்ஷ்மணனை யுத்தம் செய்ய உடனே அழைப்பதாக அவனிடம் போய் தூது கூறு. லக்ஷ்மணனிடம் மட்டும் அல்ல அவனுடன் எத்தனை வானர வீரர்கள் திரண்டு வந்தாலும் அவர்களிடமும் ," அதிகாயன் எதிரே வந்து போர் செய்பவர் யமனார் ஊரிலே புகுந்து வாழப் போகின்றவராவார்கள். இதனை உணர்ந்து போருக்கு வருவோரெல்லாம் வருக என்று சொல்லி விட்டு வருவாயாக" என்றான். அவ்வாறே அதிகாயனின் செய்தியை ஏற்று அவனிடம் இருந்து விடை பெற்று லக்ஷ்மணன் இருக்கும் இடத்திற்கு மயிடன் சென்றான். அப்படிப் போனவன் நேரே ஸ்ரீ இராமன் அருகில் இருக்கும் லக்ஷ்மணனை சந்தித்தான்.

மயிடனைக் கண்ட வானர வீரர்கள் அவனை சூழ்ந்து கொண்டு தங்களது வலிய கைகளால் பிடித்து அவனைத் தாக்க முயற்சி செய்தார்கள். அப்போது அந்த வானர வீரர்களின் செயலை தனது இனிமையான பேச்சினால் தடுத்து நிறுத்தினார் ஸ்ரீ இராமர். பிறகு அமைதியான முறையில், மயிடனை நோக்கி,"ஆயுதம் இல்லாமல் எங்கள் இடம் வந்து சேர்ந்த அரக்கனே! நீ வந்த காரணம் என்ன?ஒரு வேளை எங்களிடம் ஏதேனும் செய்தி பகிர வந்தாயோ!" என்று கேட்டார்.

அப்போது மயிடன் தனது உயிரை வானர வீரர்களிடம் இருந்து காப்பாற்றிய இராமபிரானை வணங்கி ," ஸ்ரீ இராமா! நான் கொண்டு வந்த செய்தியை லக்ஷ்மணனிடம் தான் சொல்லச் சொல்லி எனக்கு உத்தரவு" என்றான். உடனே லக்ஷ்மணன்," நீ வந்த செய்தியைச் சொல்.நானே நீ சொன்ன அந்த லக்ஷ்மணன்" என்றான்.

உடனே மயிடன் லக்ஷ்மணனிடம்," லக்ஷ்மணனே! எங்கள் அரசரான இராவணின் அன்பு மகன் அதிகாயன் உடனே உங்களை போருக்கு வரும் படி அழைத்தார். மேலும், அவர் தங்களைக் கொன்று, அதன் மூலம் உங்கள் அண்ணன் ஸ்ரீ இராமன், இராவணனின் தம்பியான கும்பகர்ணனை கொன்றதற்கு பழி வாங்க எண்ணுகிறார். அதனால், உடனே யுத்த களம் வரச் சொன்னார் " என்றான்.

மயிடன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட லக்ஷ்மணன் உடனே அதிகாயனுடன் போருக்குப் புறப்பட அண்ணன் இராமனிடம் அனுமதி வேண்டினான். அதன் படி ஸ்ரீ இராமன் லக்ஷ்மணனை வாழ்த்தி," லக்ஷ்மணா ! இது முழுவதும் உனக்கான யுத்தம், அதே சமயத்தில் உனக்கு உதவியாகப் பலம் கொண்ட அனைத்து வானர வீரர்களையும், தலைவர்களையும் அழைத்துச் செல்வாயாக" என்றார்.

அப்போது விபீஷணன் இராமலக்ஷ்மணர்களிடம்," பிரபுக்களே! அதிகாயன் சாதாரண வீரன் அல்ல. இந்தரிஜித்துக்கு நிகரான பலசாலி.அழியாத பெரும் தவத்தைப் பெற்றவன்.பிரம்மனிடம் எத்தனை நாட்கள் கடும் போர் புரிந்தாலும் தனக்கு சோர்வு எற்படாதபடியான வரத்தைப் பெற்று உள்ளான். இந்த அதிகாயன் சக்கரவாள மலையைத் தனது தோள் வலிமையால் பெயர்த்துத் தள்ளியவன். அப்படியிருக்க, இவனது தோள் வலிமைக்கு முன்னே திக்கஜங்களை அவைகளின் இடத்தில் இருந்து தள்ளிய இராவணின் தோள் வலிமை புகழ்வதற்கு உரியதோ? சிவபெருமானே தனது சூலத்தை இவன் மேல் எரிந்தாலும் அதனைப் பற்றிக் கொண்டு, அப்பெருமானின் எதிரே போய் நின்று,' நீ எறிந்த சூலம் இதுவோ?' என்று கேட்கின்ற சொல்லையுடையவன்! மேலும், தன்னோடு பகைமை கொண்ட தேவர்களின் ஊரை எரிக்கத் தொடங்கிய காலத்தில், திருமால் இவன் மேல் எறிந்த சக்கராயுதத்தைத் தனது வில் ஆற்றலால் விளக்கியவன். தேவர்கள் இவன் மேல் போரில் வீசிய வஜ்ஜிராயுதம் முதற்கொண்டு அனைத்து ஆயுதங்களையும் மணல் போல சிதறடித்த மாவீரன். சிவபெருமானிடமே வில் வித்தையை கற்றவன். மேலும், அந்த ஈசன் இவன் மீது கொண்ட கருணையால், எந்த தேவர்களுக்கும் வழங்காத அற்புத ஆயுதங்கள் பலவற்றை இவனுக்கு அளித்து உள்ளார். எனினும், இவன் அதர்ம காரியத்தை மட்டுமே அறிவான். ஒரு போதும் தரும காரியத்தில் ஈடுபட விருப்பம் இல்லாதவன். வலிமை இல்லாத பிராணிகளையும், உயிர்களையும் கொல்ல மாட்டான். பெரும் புகழ் ஒன்றையே பெரும் விருப்பத்துடன் ஒரு முறை அந்த ஆதிஷேசனையே வம்புக்கு இழுத்தவன். அப்போது அந்த ஆதிசேஷன்," அதிகாயனே! உனக்கு என் அவதாரத்தால் தான் சாவு ஏற்படும் " என்று சாபம் கொடுத்தார்.என்றாலும், இவனிடம் உள்ள ஒரே நல்ல குணம் யாதெனில், இவன் அரக்கனாக இருந்தாலுமே கூட போர் நியதிகளை மீறி நடக்க மாட்டான். குறிப்பாக நேருக்கு, நேராக மோதுவானே தவிர ஒரு போதும் மாயப் போர்களை செய்ய மாட்டான். அதற்கு இவனது பூர்ஜன்மமே காரணம் ஆகும்" என்று கூறிய விபீஷணன் மேலும் தொடர்ந்து பிரமன் மூலமாகத் தான் மட்டுமே அதுவரையில் அறிந்த அதிகாயனின் பூர்வ ஜன்ம ரகசியத்தை சொல்லத் தொடங்கினான்.

"முன்னொரு காலத்தில் விதியினால் தூண்டப்பட்டு பெரும் வஞ்ச அரக்கர்களான மதுகைடபன் என்னும் இருவர், தேவலோகத்தைக் கைப்பற்றிக் கொண்டு தேர்வர்களைக் களைந்து எறிந்தவர்களாக, பாற்கடலில் உள்ள திருமாலைத் தாக்கப் புறப்பட்டனர், அவ்வாறே பாற்கடலையும் அடைந்து திருமாலிடம், 'போருக்கு வருக' என்று அறைகூவல் விடுத்தனர். திருமாலும் போர் செய்யப் புறப்பட்டார். இந்த இரு அசுரர்களுக்கும், திருமாலுக்கும் இடையே கடுமையான போர் ஏற்பட்டது. அந்தப் போர் வெகு காலம் நடந்தது. யார் வெற்றி அடைவார்கள்? என்று தேவர்களாலும் கணிக்க முடியாதபடி யுத்தம் தீவிரமாக நடந்தது. கடைசியில் மதுகைடபர்கள் திருமாலின் வீரத்தைக் கண்டு மெச்சி,' நாங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே ஏழு உலகங்களையும் உண்டு உமிழத்தக்க வலிமை உடையவர்கள். அப்படிப் பட்ட எங்கள் இருவரோடும் நீ தனியாக நின்று, பின் வாங்காமலும் வீரம் குறையாமலும் இத்தனை நாள் போர் செய்தாய். மதிக்கத் தகுந்த பெரும் வலிமை படைத்தவர்கள் உன்னைப் போல் வேறு யார் இருக்கின்றார்கள்? புகழ் உடையவனே! நீ மனம் விரும்பி வேண்டும் வரத்தைக் கேள். அதனைக் கொடுக்க நாங்கள் சித்தம் கொண்டு உள்ளோம்!' என்றார்கள்.

திருமால் அதற்கு உடனே," நான் உங்கள் இருவரையும் எப்போதும் வெல்லும் படியான வரத்தை அளிக்க வேண்டும்!" என்றார். அதனைக் கேட்டு அவர்கள் மறுக்காமல்,' நாங்கள் ஒப்பற்ற உனது தொடையில் சாகின்றோம். வேறிடத்தில் இறக்கமாட்டோம்!' என்று சொல்லித் தம்முயிரை விடத் துணிந்தார்கள். பின்னும் திருமாலை நோக்கி,' உனது தொடையிலே எங்களை அடையச் செய்ய வல்லவனாவாய். இதுவே நாங்கள் உனக்கு பிறப்பிக்கும் கட்டளை!' என்று ஒழுக்கம் தவறாத முறையினரான அந்த மதுகைடபர்கள் கூறினார்கள். உடனே திருமால் எல்லாவுலகங்களும் தஹ்னது இடது தொடையை அடையுமாறு காட்டினான். ஊழின் வலிமையினால் மதுகைடபர்கள் ஒருபட்டவராய் அத்தொடையில் அகப்பட்டுக் கொண்டார்கள். திருமால் அவர்களைத் தனது கதாயுதத்தால் கொன்றார். அப்போது அவர்களுடைய இரத்தம் வெள்ளமென பூமி எங்கும் பரவியது. அதனாலேயே இந்தப் பூமி மேதினி எனப் பெயர் பெற்றது. இது முன்னொரு காலத்தில் நிகழ்ந்தது. நான் கூறிய இப்போரில் உண்மையான வலிமை படைத்த மது என்பவனே எனது தமையனாகிய கும்பகர்ணனாகி, இப்பிறவியில் விதியால் இறந்தான். சூரியனுக்கு ஒப்பாக உள்ள கைடபன் என்பவனோ, இப்பிறவியில் ஒளிபடைத்த வேலாயுதத்தைத் தாங்கிய அதிகாயனாகப் பிறந்துள்ளான். மனத்தில் நன்கு படுமாறு இவ்வுண்மையை நான் உங்களுக்குக் கூறினேன்!" என்று ஸ்ரீ இராமபிரானிடம் தெரிவித்தான்.

விபீஷணனின் வார்த்தைகளைக் கேட்ட இராமர்," விபீஷணா! நீ எனது தம்பியின் போர் திறனைக் கண்டதில்லையே , அவன் முன்னாள் எண்ணாயிரம் கோடி இராவணர்களும், தேவர்களும், மற்றும் உள்ள அனைவரும் ஏன் மும்மூர்த்திகளும் கூட நிற்க முடியுமோ? எனது தம்பி கோபம் கொண்டு நிர்பானானால் அதனைக் கண்டு தேவர்களும் அஞ்சுவார்கள். அந்நிலையில் அவனை திருமால் தான் வெற்றி கொள்ள இயலுமா?இல்லை தேவேந்திரன் தான் என்ன செய்ய முடியும்? அதனால் அதிகாயனுக்கு என் தம்பி ஒருவனே காலனாக இருப்பான். அத்துடன் அவனுடன் வந்த அப்பெரும் படைக்கும் இவனே அழிவைத் தரப் போகின்றவன். அதுமட்டும் அல்ல, இந்த முறையும் அதிகாயனுடனான போர் நமக்கே வெற்றியை பெற்றுத் தரும். அதற்குக் காரணம் லக்ஷ்மணனை மட்டும் நான் தனியாக அனுப்பவில்லையே! அவனுக்குத் துணையாக அரக்கர் படையை அழித்து ஒழிக்க சுக்கிரீவன், வீர அனுமான், அங்கதன், நளன், நீலன் போன்ற அனைவரும் செல்வர். லக்ஷ்மணன் அதிகாயனைப் பார்த்துக் கொள்வான். வானர வீரர்கள் அனைவரும், அசுரர் படையை துவம்சம் செய்வார்கள். அதனால், அரக்கர் குடியும் கெடப் போகிறது" என்றார்.

அக்கணமே லக்ஷ்மணன், அண்ணன் இராமனைத் தொழுது விடை பெற்று விட்டு, அதிகாயன் இருக்கும் இடம் சென்றான். மீண்டும் பயங்கரமான ஒரு யுத்தம் தொடங்கியது. தென் கடலோடு மற்ற கடல்கள் போருக்கு எழுந்தது போல, வானர சேனையுடன் அரக்கர்களின் சதுரங்கச் சேனைகள் யாவும் கை கலந்தது. அப்போது எழுந்த புழுதிப் படலம் விண்ணையும் தொட்டது. வீரர்களின் ஆராவார ஓசையும், விற்களின் நாணொளியும் மிகுதியாக ஒலித்தன. அவ்வொலிகளுக்கு அஞ்சி மகர மீன்களைக் கொண்ட கடல்கள், தம் வாயை மடித்துக் கொண்டு ஒடுங்கின. மறுபுறம் அரக்கர் தம் மேனியில் பட்ட புண்களில் இருந்து இரத்த நீர் பெருகி யானைகளின் மீது படிந்து, மலைகளில் இருந்து இறங்கும் அருவி நீர் போலக் கீழ் இறங்கிற்று.

வானரர்கள் மலைக்கு மலைப் பாய்ந்து செல்வது போல், அரக்கர்கள் யானைகள் மேல் தாவித் தாவிச் சென்று வீரத்துடன் போர் புரிந்தார்கள். பெரிய, பெரிய மலைகளை எல்லாம் எடுத்து எறிந்து அரக்கர் தம் யானைகளைக் கொன்று தீர்த்தனர் வானரப் படையினர். மேலும், அந்த வானரர்கள் அரக்கர்களின் குதிரைகள் சிலவற்றைக் கைகளாலேயே அடித்துக் கொன்றனர். சிலவற்றை கோபித்தும்; சிலவற்றை பற்களால் கடித்தும் கொன்றார்கள். இதனால், அரக்கர்கள் தங்களது பெரும்பாலான குதிரைப் படைகளை இழந்தனர். வானரர்கள் செய்த அட்டகாசத்தைக் கண்ட அரக்கர்கள் மிகுந்த சினம் கொண்டார்கள். அதனால் வானரப் படையை அதிக உத்வேகத்துடன் தாக்கினர். வானர வீரர்கள் அந்தத் தாக்குதலை சாமாளிக்க முடியாமல் அஞ்சி பின்வாங்கினர்.

அவ்வாறு வானர வீரர்கள் அஞ்சி ஓடியதைக் கண்ட லக்ஷ்மணன் அவர்களை தேற்றினான். பிறகு தனது வலிய வில்லினால் நாணொலி எழுப்பினான். அந்த ஆற்றல் மிக்க நாண் ஒலி ஏழு உலகத்தையும் அச்சுறுத்தியது. அக்கணமே லக்ஷ்மணன் சாரை, சாரையாக அம்புகளை எய்து அரக்கர்களைக் கொன்று குவித்தான். அதனால் போர்கள பூமி எங்கும் அரக்கர்களின் பிணங்கள் மலை போலக் குவிந்தன. அரக்கர்களின் யானைகளும், குதிரைகளும் தத்தமது உறுப்புக்களை இழந்தன. மேலும், அந்தப் போர்க்கள பூமியில் கழுகுகளும், பருந்துகளும் தங்கி மகிழ்ந்து நிணங்களை உண்டன. பேய்கள் கூத்தாடின. உயிர் ஊசலாடும் அரக்கர்கள் அபயக் குரலை எழுப்பினார்கள். பூமிதேவியோ அரக்கர்களின் பிணமலையைத் தாங்க முடியாமல் முதுகு நெளிந்தாள்!

அப்போது, அரக்கர் தம் பக்கத்தின் சேதாரத்தை கண்ட தாருகன் என்னும் கொடிய அரக்கன், கண்களில் தீப்பொறி பறக்க லக்ஷ்மணை எதிர்த்து வந்தான். லக்ஷ்மணனும், அவனைத் துணிச்சலுடன் எதிர்கொள்ள, அப்போது இருவருக்கும் இடையே கடுமையான விற்போர் நடந்தது. தாருகன் எண்ணற்ற பாணங்களை மலை, மலையாக லக்ஷ்மணன் மீது ஏவினான். அந்தப் பாணங்களை லக்ஷ்மணன் திறம்பட தனது பாணங்களால் முறித்து இறுதியில் தாருகனின் தலையைக் கொய்து எறிந்தான்.

தாருகன் இறந்ததைக் கண்ட காலன், குலிசன், காலசங்கன், மாலி, மருத்தன் என்னும் ஐந்து அரக்கர்கள் ஒரே நேரத்தில் லக்ஷ்மணனுடன் போருக்கு எழுந்தார்கள். ஆனால், லக்ஷ்மணனோ அவர்களையும் கணப் பொழுதில் கொன்று அழித்தான். அக்கணமே, அதிகாயனின் சேனாவீரர்கள் பதினாறாயிரம் யானைப் படைகளுடன் அவனை வளைத்துக் கொண்டு, அவன் மேல் பலவிதமான கொடிய ஆயுதங்களை ஏவினார்கள். லக்ஷ்மணனைக் காக்க சிறந்த வானர வீரர்கள் பலர் முன்வந்தார்கள். இரு தரப்புக்கும் இடையே மீண்டும் கடுமையான போர் ஏற்பட்டது. அதனால் பலப்பல வானரர்களும், அரக்கர்களும் இறந்தனர். அவர்கள் எறிந்த ஆயுதங்களால் திசைகளும், வானமும் கூட மறைந்தன.

லக்ஷ்மணன், கோடிக்கணக்கான அம்புகளை பிரயோகித்து அரக்கர்களின் பெரும் சேனையை அழித்து ஒழித்தான். சீறிப் பாய்ந்த லக்ஷ்மணின் கொடிய கணைகளால் மேலும் சில அரக்கர்கள் கண்களையும், கைகளையும், இழந்தனர். அதுபோல அரக்கர் படையில் இருந்த யானைகளும் தந்தங்களையும், கால்களையும், துதிக்கையையும், உயிரையும் கூட இழந்தன. அதனால் , அரக்கர்களின் பிணக் குவியல்களுடன், யானைகளின் பிணக்குவியல்களும் போர்கள பூமியங்கும் காணப்பட்டன. அப்போது அதனால் ஏற்பட்ட இரத்த வெள்ளத்தில் பேய்கள் குதித்து விளையாடி மகிழ்ந்தன.

தான் அனுப்பிய தனது யானைப் படைகள் எல்லாம் அழிந்த விவரத்தைக் கேட்ட இராவணன் , அதிர்ச்சி அடைந்து மீண்டும் ஒரு பெரிய யானைப் படையை அக்ககணமே தயார் செய்து அனுப்பி வைத்தான். அப்படையையும் லக்ஷ்மணன் சலிக்காமல் சின்னாபின்னப்படுத்தி அழித்தான்.

அப்போது லக்ஷ்மணனால் அழியாமல் நின்று இருந்த எஞ்சிய யானைப் படைகளை அழிப்பதற்காகவே அனுமன் அங்கு வந்தான். அவ்வாறு வந்த அனுமான் யானைகளின் கூட்டத்துக்குள் புகுந்து பெரும் யுத்தத்தை விளையாட்டு போலச் செய்தான். அது கண்டு அரக்கர்கள் நடுங்கினர். மேலும் அவ்வாறு யுத்தகளத்தில் வீறு கொண்டு புகுந்த அனுமான், சில யானைகளை வானில் பந்து போல தூக்கி எறிந்து கொன்றான். சில யானைகளை வலிய கைகளாலும், சிலவற்றை கால்களால் மிதித்தும், இன்னும் சில யானைகளை பிடித்து மலையில் மோதியும் கொன்றான். அதனால், இராவணன் இரண்டாவது முறையாக அனுப்பிய பெரும் யானைப் படைகள் அனைத்தும் இம்முறை லக்ஷ்மணனாலும், அனுமானாலும் முற்றிலும் அழிக்கப்பட்டது. அது கண்ட மற்ற அரக்கர்கள் புற முதுகு காட்டி போர்களத்தை விட்டு ஓடினர். எனினும், அக்கணம் எல்லா அரக்கர்களும் ஓடினாலும் தேவாந்தகன் என்னும் பெயர் கொண்ட அரக்கன் மட்டும் பெரும் கோபம் கொண்டு பின்வாங்காமல் யுத்தத்தை மேற்கொண்டான்.

அப்படி யுத்தம் செய்த தேவாந்தகனுடன் அனுமான் யுத்தம் செய்ய முன்வந்தான். இருவருக்கும் இடையே கடுமையான போர் மூண்டது. ஆனால், அப்போரில் அனுமானே வெற்றி அடைந்து இறுதியில் தேவாந்தகனை கொன்றான்.

தேவாந்தகன் இறந்ததைக் கண்ட அதிகாயன், சினத்தோடு கண்களில் தீப்பொறி பறக்க அனுமனின் எதிரே வந்து சேர்ந்தான். அதிகாயனகைக் கண்டதும், முன்பு பயத்தால் பின் வாங்கிய அரக்க சேனை மீண்டும் புத்துயுர் பெற்று வானர சேனையுடன் போர் செய்ய விரைந்து வந்தது. அப்போது அதிகாயன் அனுமனை நோக்கி," முன்பு எனது தம்பி அட்சகுமாரனை அநியாயமாகக் கொன்று, இலங்கையையும் கொளுத்தி விட்டு பெரும் கடலைத் தாண்டி தப்பிச் சென்றாய். இப்போதோ தேவாந்தகனைக் கொன்றாய். இனியும் நான் உன்னை விடப் போவதில்லை. உனது வாழ்வும் முடியப் போகிறது. இன்றைக்கே உன்னைக் கொல்வேன். இல்லாவிட்டால் இனி என்றைக்கும் உன்னை நான் எதிர்க்க மாட்டேன்" என்று வீர சபதம் செய்தான்.

அது கேட்ட அனுமான்," அதிகாயனே! நான் இன்றைய யுத்தத்தில் உன்னை மட்டும் அல்ல, உன்னுடன் சேர்ந்து போர் செய்ய வந்திருக்கும் கொடிய திரிசிரனையும் கொல்வேன்" என்றான்.

அவ்வாறு அனுமான் சொன்னதைக் கேட்டு , மூன்று தலைகளைக் கொண்ட திரிசரன் அதிக கோபம் கொண்டு. அக்கணமே அனுமனைத் தாக்க முன்வந்தான். அப்போது திரிசனின் தேரில் அனுமான் பாய்ந்தான். இருவருக்கும் இடையே கடுமையான யுத்தம் நடந்தது. அப்போது திரிசரனின் மூன்று தலைகளையும் அனுமான் தரையில் மோதியே கொன்றான். திரிசரன் இறந்ததும், மேற்கு வாயிலில் போர் அதிகமாக நடப்பதைக் கண்டு அனுமன், அங்குப் புறப்பட்டுக் கணப்பொழுதில் சென்று சேர்ந்தான்.

அனுமனின் போர் திறனையும், வேகத்தையும் கண்ட அதிகாயன் மிகவும் வியப்புற்றான். அதேசமயம் அனுமான் எண்ணற்ற பல அரக்கர்களைக் கொன்றதால் கோபமும், திரிசரன் இறந்ததால் கண்ணீரும் கொண்டான். ஒரே சமயத்தில் அதிகாயனின் கண்களில் இருந்து கோபத்தால் நெருப்புக் கனலும்,வருத்தத்தால் கண்ணீரும் பெருகிற்று. அப்போது அதிகாயன் தனது மனதினில், ' லக்ஷ்மணனைக் கொல்வதற்காக போர் களத்தில் புகுந்த நான், வேறொரு செயலிலே நின்று தாமதிப்பது வீரமில்லை. இப்போதே அந்த லக்ஷ்மணனது வீரத்தை நான் மீண்டும் காணப்போகிறேன்' என்று சொல்லி, தனது படையுடன் லக்ஷ்மணனை நோக்கிப் புறப்பட்டான். அதிகாயனைத் தொடர்ந்து அவனது வீரர்களும் லக்ஷ்மணனை எதிர்த்து நின்றார்கள்.

தன்னை நோக்கி வந்த அதிகாயனையும் அவனது வீரர்களையும் எதிர்த்து, லக்ஷ்மணனும் அவர்கள் முன்னே சென்று வீரத்துடன் நின்றான். அப்போது லக்ஷ்மணன் அருகில் சென்ற வாலியின் மைந்தன் அங்கதன்," ஐயனே! அந்த அதிகாயனோ, பெரும் வலிமை படைத்த மாயத் தேரில் நின்று போர் செய்கிறான். அப்படி இருக்கத் தாங்கள் பூமியில் நின்று போர் செய்வது அழகோ? அதனால், எனது தோளின் மீது தாங்கள் ஏறிக் கொள்ள வேண்டுகிறேன்" என்றான்.

அங்கதனின் வார்ததைகளை செவிமடுத்த லக்ஷ்மணன் ‘அதுவே சரி’ என்ற முடிவுக்கு வந்தான். அதன் படி அங்கதனின் தோள் மீது ஏறிக் கொண்டு அதிகாயனுடனான கடும் யுத்தத்தை துவக்கினான். அதிகாயனின் தேர் சென்ற இடங்கள் எல்லாம் அங்கதன் லக்ஷ்மணனை ஏந்திச் சென்றான். அத்தேர் வளைந்த திசை எல்லாம் தானும் காற்றாடி போல அங்கதன் வளைந்தான். மேலே அதிகாயனின் தேர் எழுந்து சென்றால்; அங்கதனும் லக்ஷ்மணனை சுமந்து கொண்டு மேலே செல்வான்; அவ்வாறு அந்தத் தேர் கீழே சென்றால் அங்கதனும் லக்ஷ்மணனை சுமந்து கொண்டு கீழே செல்வான். அப்போது அங்கதன் தேவர்களின் கண்களுக்கு பெருமாளை தாங்கிச் செல்லும் கருடன் போலக் அளித்தான். அவ்வாறு அவன் சென்ற வேகத்தைக் கண்டு தேவர்களும் வியந்து நின்றாகள்.

இளையபெருமாளின் வில்லில் இருந்து புறப்பட்டுச் சென்ற கொடிய அம்புகள் அரக்கர்களின் உடம்பிலும், அவர்களது யானைகளின் மீதும் குதிரைகளின் மீதும் சென்று தைத்தன. அவ்வாறு, ஸ்ரீ இராமபிரானின் உயிர்த் தம்பியான லக்ஷ்மணன் கருணை காட்டாது, கொடிய அரக்கர்கள் மேல் தொடர்ந்து பாண மலை பொழிந்தான். அவனது வில்லில் இருந்து பாய்ந்து சென்று அம்பின் வேகத்தைக் கண்ட யமனும் அச்சம் கொண்டான். அவ்வாறு சீறிப் பாய்ந்த லக்ஷ்மணின் பாணங்களைக் கண்டு திருமாலின் கைகளில் இருந்த சக்கரத்தாழ்வானும் ஆச்சர்யம் கொண்டான். அப்படிப் பாய்ந்த இளைய பெருமாளின் பாணங்கள் அரக்க சேனையை முற்றிலும் அழித்துக் கொண்டு இருக்க, மறுபுறம் லக்ஷ்மணன் அதிகாயனிடம்," உன் விருப்பம் என்ன? உனது படைகள் யாவும் சின்னாபின்னமாக அழிந்த பிறகே நீ என்னுடன் போர் செய்வாயோ? இல்லை. இப்போதே என்னுடன் போர் செய்வாயோ? இந்த இரண்டில் நீ விரும்புவது யாது? எனக்குச் சொல்வாயாக!" என்று கேட்டான்.

அதற்கு அதிகாயன்," தேவர்களும் அஞ்ச இப்போதே நீயும், நானும் போர் செய்வோம். போரில் உன்னைப் பாதுகாக்க எத்தனை வானர வீரர்கள் வந்தாலும் எனக்குக் கவலை இல்லை. ஆட்சேபனையும் இல்லை. வா மோதிப் பார்க்கலாம். உன்னை என்னிடம் இருந்து இன்று யாரும் காப்பாற்ற முடியாது. ஏன் உனது அண்ணனோ! இல்லை அந்த உமாபதியே இறங்கி வந்தாலும் கூட உனது உயிரை எனது பாணங்களில் இருந்து காக்க இயலாது" என்றான்.

அதிகாயனின் வார்த்தைகளைக் கேட்ட லக்ஷ்மணன் புன்முறுவல் கொண்டான். பிறகு அதிகாயனிடம்," என்னைக் காக்க நீ மேற்சொன்ன யாரும் வரவேண்டாம். எனக்கு என்னைக் காத்துக் கொள்ளத் தெரியும். இப்போது நீ உன்னை என்னிடம் இருந்து காத்துக் கொள்ளும் வழியைத் தேடுவாயாக" என்றான்.

பிறகு லக்ஷ்மணன் தனது முதல் கணையை அதிகாயன் மீது தொடுத்தான். அது அவனது தேரின் கொடியை முறித்தது. அது கண்டு கோபம் கொண்ட அதிகாயன் கொடிய நாகம் போன்ற பதினாறு பாணங்களை லக்ஷ்மணன் மீது ஏவினான். அந்த அம்புகளை இமைப் பொழுதில் லக்ஷ்மணன் முறித்து எறிந்தான். பிறகு லக்ஷ்மணன் நூறு பாணங்களை அதிகாயன் மீது செலுத்தினான். அந்த வலிமை மிகுந்த பாணங்களால் அதிகாயன் நிலை தடுமாறினான், அந்த பாணங்களில் சில அவனது தேர் பாகனைக் கொன்றது, இன்னும் சில அவனது கவசத்தை கிழித்தெறிந்தது. இன்னும் சில அவனது தோல் மீது பட்டு எண்ணற்ற காயங்களை ஏற்படுத்தியது. இன்னும் சில, அவனது வில்லின் நாணெய் அறுத்தது. அதனால், அதிகாயன் சில கணங்கள் தடுமாறிப் போனான். அவன் சுதாரித்து யுத்தம் செய்ய முற்படும் அந்த இடை பட்ட வேளையில், லக்ஷ்மணன் மேலும் பல அரக்கவீரர்களைக் கொன்று குவித்தான். அப்படி இறந்த அரக்கர்களின் எண்ணிக்கை கோடிக்கும் மேற்பட்டதாகும்.

பிறகு மீண்டும் அதிகாயன் யுத்தம் செய்யத் தொடங்கினான். மிகுந்த கோபத்துடன் வில்லில் அம்புகளை சர மாரியாகத் தொடுத்தான். அதிகாயனின் அம்புகள் அப் போர்கள பூமி எங்கும் பரவியது. ஏன்? வானத்தையும் கூட அவனது வலிமை வாய்ந்த அம்புகள் மூடியது. அதனால், திசைகள் மறைந்தது, அந்த பாணங்களால் சூரியனும், சந்திரனும், நட்சத்திரமும் கூட ஒளி குன்றியது. மேலும், அதிகாயன் செலுத்திய அந்த பாணங்கள் காற்றில் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து நெருங்கியபடிச் சென்றதால் எங்கும் நெருப்புக் கற்றைகள் எழுந்து உலவின! அதனால், வானத்தில் இருந்து நெருப்பு மலையாகக் கீழ் இறங்க பூமி எங்கும் பெரும் ஓசை எழுந்தது.

தேர்வர்கள் அதிகாயனின் வீரத்தையும், செயலையும் அப்போது கண்டு, " இன்றைக்கே வானர சேனை அழிந்து விடுமோ? ஸ்ரீ இராமரது தம்பி, இவனை வெல்ல வல்லவனோ? இப்படிப் போர் புரியும் இந்த அதிகாயன், இப்போர்கலையை கற்றது எமனிடமோ?" என்று கூறி அஞ்சினார்கள்.

அதேசமயம் அதிகாயனின் அம்புகளை எதிர்த்து லக்ஷ்மணன் வலிமையான அம்புகள் பலவற்றை பிரயோகித்தான். அவைகள் அதிகாயனின் அம்புகளை சேதப்படுத்தி அழித்தன. இறுதியில் அதிகாயன் எய்த எண்ணற்ற பாணங்கள் லக்ஷ்மணனை சுமந்து கொண்டு இருக்கும் அங்கதனின் மீது பாய்ந்து கடும் ரணங்களை ஏற்படுத்தியது. அது கண்டு கோபம் கொண்ட லக்ஷ்மணன் திவ்ய அஸ்த்திரங்கள் பலவற்றை அதிகாயன் மீது ஏவினான். அதனால், அதிகாயன் தனது வலிமை வாய்ந்த ரதத்தை இழந்தான். எனினும், வேறு ஒரு ரதத்தில் ஏறிக் கொண்டு லக்ஷ்மணனுடனான யுத்தத்தை இன்னும் அதீத திறனுடன் தொடர்ந்து மேற்கொண்டான். காலை தொடங்கி நண்பகல் வரையில் இருவருக்கும் கடுமையான யுத்தம் நடந்தமையால் லக்ஷ்மணன் மிகவும் சோர்ந்தான்.

வெகுவாக லக்ஷ்மணன் மனதில்," இந்த அரக்கனை நம்மால் கொல்ல இயலுமா? விபீஷணர் சரியாகத் தான் இவனை கணித்து உள்ளார்" என்று சொல்லிக் கொண்டான். அந்த நினைப்பால் அவன் மனம் நொந்து பெருமூச்சு விட்டான். அவ்வாறு லக்ஷ்மணன் அதிகாயனுக்கு எதிராக பல திவ்விய அஸ்த்திரங்களைப் பயன்படுத்தியும் பயன் இல்லாமல் அவைகள் அழிந்தது.

அக்கணம் மாருதி அப்போர்களத்தில் சென்ற இடமெல்லாம் வெற்றி வாகை சூடிய பின்னர். லக்ஷ்மணனிடம் திரும்பி வந்தான். அக்கணம், அதிகாயனிடம் லக்ஷ்மணன் படும் பாட்டை கண்ட மாருதி, அதற்கு ஒரு நல்வழி வேண்டி தனது தந்தையான வாயுதேவனை வேண்டி நின்றான்.

அப்போது, அனுமனின் பிரார்த்தனையை ஏற்று லக்ஷ்மணன் முன்னே வாயுதேவன் தோன்றி," நண்பனே! பிரம்மாஸ்த்திரம் ஒன்றாலன்றி வேறொன்றால் இவன் இறக்க மாட்டான்!" என்னும் சத்தியத்தைக் கூறி மறைந்தார்.

வாயு தேவனின் வார்த்தைகளைக் கேட்ட லக்ஷ்மணன், உடனே பிரம்மாஸ்த்திரத்தை அதிகாயன் மேல் ஏவினான். அந்த அஸ்த்திரம் விரைந்து சென்று அதிகாயனின் தலையைத் துண்டித்து வான் வழியே கொண்டு சென்றது. அவ்வாறு அதிகாயன் இறந்த காட்சியைக் கண்ட தேவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். " எங்களுடைய துன்பம் தொலைந்தது என்று கூறி ஆரவாரம் செய்தார்கள். அதேசமயம் அரக்கர்கள் அபயக் குரல் எழுப்பி செய்வது அறியாது ஓடி ஒளிந்தனர். அச்சமயம் லக்ஷ்மணனும் அங்கதனின் தோளில் இருந்து இறங்கினான்.

மறுபுறம் விபீஷணன், அதிகாயன் இறந்ததையும், அதனால் வானத்தில் தேவர்கள் மகிழ்வதையும் கண்ட போது உடனே தனது மனதில்," லக்ஷ்மணனால், அதிகாயன் போன்ற வீரனைக் கொல்ல முடியும் என்றால். அதே லக்ஷ்மணனால், நிச்சயம் இந்திரஜித்தையும் கொல்ல முடியும்! எனில் அண்ணன் இராவணனின் நிலை? அய்யோ அண்ணா! நான் சொல்லியும் கேட்காமல் போனாயே!" என்று சொல்லி சற்றே கலங்கினான் .

அதேசமயம், நராந்தகன் என்னும் கொடிய அரக்கன், அப்போது போர்களத்துக்கு வந்து சேர்ந்தான். லக்ஷ்மணனால் தனது தமையன் அதிகாயன் கொல்லப்பட்டதைக் கண்டு அந்த நராந்தகன் மிகுந்த கோபம் கொண்டான். அவன் கண்களிலே தீப்பொறி பறந்தன. அவன் வலது கையில் மின்னலைப் போன்ற வாளையும், இடது கையில் கேடயத்தையும் எடுத்துக் கொண்டு லக்ஷ்மணனை நோக்கி போர் செய்ய விரைந்தான்.

லக்ஷ்மணனை நோக்கி கோபத்துடன் வந்த நராந்தகன் மீது வானரர்கள் மரங்களையும், கற்களையும், மலைகளையும் வீசி எறிந்தார்கள். ஆனாலும், அவை எல்லாம் அந்த அரக்கனுக்கு எம்மாத்திரம்! அவை அனைத்தையும் தவுடு பொடியாக்கி இன்னும் விரைவாக லக்ஷ்மணனை நெருங்கினான் நராந்தகன். அவ்வாறு அவன் வருவதை அங்கதன் பார்த்தான். அவ்வாறு பார்த்தகணத்திலேயே நராந்தகன் மீது பாய்ந்தான், வாலியின் புத்திரன் வலிய அங்கதன். பிறகு அங்கதன் அவனை குமைத்து எடுத்தான். அங்கதனின் அடி ஒவ்வொன்றும் இடி போல நராந்தகனுக்கு விழ, இறுதியில் நராந்தகன் இறந்தான்.

நராந்தகனை ஆயுதமே இல்லாமல் ஒரு அற்ப குரங்கு கொன்றதை கேள்விப்பட்ட போர்மத்தன் என்னும் பெயர் உடைய கொடிய அரக்கன் மதயானையின் மீது ஏறி போர்களத்துக்கு வந்து சேர்ந்தான். அவன் கொடிய போர் செய்து வானர வீரர்களைக் கொன்று அழித்தான். அவன் ஏறிவந்த யானையின் கால்களில் அகப்பட்டே ஆயிரக்கணக்கான வானர வீரர்கள் இறந்தனர். வானரர்கள் அக்கொடிய அரக்கனின் தாக்குதலுக்கு, முன் லக்ஷ்மணனது அம்புகளிடத்தில் அரக்கர்கள் பட்ட பாட்டை எல்லாம் இப்போது அடைந்தார்கள்.

வானரர்கள் அந்த அரக்கனால் பட்ட வேதனையை அக்னி குமாரனும், வானர வீரர்களின் சேனாபதியுமான நீலன் கண்டான். உடனே அவன் விரைந்து வந்து போர்மத்தனை பெரும் வலிமையுடன் எதிர்த்துத் தாக்கி கடும் போர் புரிந்து இறுதியில் கொன்றான்.

பின்பு, அதே போர்க்களத்தில் இடபனுக்கும், வயமத்தனுக்கும் இடையே கடும் போர் தொடங்கிற்று. வயமத்தன் பெரிய உருவத்தைக் கொண்டவன். மலை போன்ற தோளை உடையவன்; கொடியவன் என்று சொல்லும் படியான வலிமை படைத்தவன். அப்படிப் பட்ட அரக்கனுடன் இடபன் கடுமையாகப் போர் செய்தான். இறுதியில் இடபன் வயமத்தனைக் கொன்று வெற்றி வாகை சூடினான்.

மறுபக்கம், சுக்கிரீவனுக்கும் கும்பனுக்கும் இடையே கடுமையான போர் நடந்தது. அப்போரில் சுக்கிரீவனின் வலிமைக்கு முன்னாள் நிற்கமுடியாமல் கும்பன் இறந்தான். அதேபோல அங்கதனுக்கும் நிகும்பனுக்கும் கடும் போர் மூண்டது. நிகும்பன் வலிய சூலத்தை அங்கதன் மீது எறிந்தான். அவ்வாறு அங்கதனை நோக்கி நெருப்பை கக்கிக் கொண்டு வந்த அந்த வலிய சூலத்தை அனுமான் இடையில் புகுந்து மிக எளிதாகத் தமது கரம் கொண்டு பிடித்து உடைத்தெறிந்தான். அது கண்ட நிகும்பன் அங்கதனை விட்டு, விட்டு அனுமனைத் தாக்கத் தொடங்கினான். அப்போது அனுமான் கோபம் கொண்டு ஓங்கி அடித்த ஒரே அடியில் நிகும்பன் தனது உயிரைப் பரிதாபமாக விட்டான்.

அவ்வாறு வானரர்களால் அரக்கர்கள் பெரும்பாலும் அழிந்து போனார்கள். அரக்கசேனை வெகுவாகக் குறைந்து விட்டது. வானரர்களின் தாக்குதலுக்கு அஞ்சி ஓடிய அரக்கர்களில் கோடிக்கணக்கானவர்கள் ஓடும் பொழுதே இறந்தார்கள்; வானரர்களின் குத்தினால் ஏற்பட்ட புண்ணுடனே படைவீட்டில் போய் இறந்தவர்கள் கணக்கற்றவர்கள்; தாகவிடாயால் இறந்தவர்கள் கோடிக்கணக்கானவர்கள்; கண்ணீருடனே இறந்தவர்கள் அதை விட அதிகமானவர்கள். அப்படியாக பலர் பலவிதமாக இறந்தார்கள்.

அரக்க சேனையின் நிலையைக் கண்ட இராவணனின் ஒற்றர்கள் ஓடிச் சென்று, இராவணனின் பாதம் பணிந்து," வேந்தர் வேந்தே! தாங்கள் அனுப்பிய மாபெரும் சேனையில் சிறிதே திரும்பி வந்து இருக்கிறது. நடந்த போரில் அதிகாயன் முதலான அரசகுமாரர்கள் எல்லோரும் இறந்து போனார்கள்!" என்று உள்ளதை உள்ளபடி சொன்னார்கள்.

அது கேட்டு, இராவணன் சிந்தை கலங்கினான். அதனால், அவன் கண்கள் கலங்கின. அழுகை, மானம், இரக்கம், வீரம் , வெகுளி, துன்பம் ஆகியவைகள் நெஞ்சில் கவலையிட, அவன் கடல் போல நின்றான். தனது இருபது கைகளையும் பிசைந்தான். புழுங்கினான். 'இனியும் என்ன செய்ய? யாரை அனுப்ப? அப்படி அனுப்பத் தான் யார் இருக்கிறார்கள்?' என்று தனக்குள் கேட்டுக் கொண்டான். வானவர்கள் கூட தனக்கு அளிக்காத ஒரு பெரிய தோல்வியை வானரர்கள் அளித்ததால் நாணம் கொண்டான். நாணத்தால் அவன் கொண்ட கோபத்தில் வானத்தை இடிக்க எண்ணினான். நிலைபெற்று உள்ள உயிர்களை எல்லாம் ஒரு கணத்தில் அழிக்க நினைத்தான். ஆனால், மகன் இறந்த துக்கம் மீண்டும் நெஞ்சில் நிழலாட செய்வதறியாது மீண்டும் பிணம் போல அமர்ந்தான்.

இராவணனின் நிலையைக் கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் வாய் பேசாதவர்கள் ஆனார்கள்; மூச்சு விடாதவர்களும் ஆனார்கள்; மனம் ஓய்ந்து போனார்கள்.

அப்போது தனது மகன் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு ஓடிவந்த இராவணனின் மனைவியான தானியமாலினி, நிலைகெட்டு அலறி ஓயாத பேராரவாரம் செய்து அழுது கொண்டு அங்கே வந்தாள். அவ்வாறு வந்து சேர்ந்தவள் தனது மார்பிலே அடித்துக் கொண்டு அழுதாள்.மீண்டும், கூந்தல் அவிழ தரையில் புரண்டு அழுதாள். அவளுடைய கண்களில் இருந்து உலைக்களத்தில் இட்டு உருக்கிய செம்பைப் போன்ற இரத்த நீர் வழிந்தது அது பின் கீழிறங்கித் தரையெங்கும் பரவிற்று. அவள் இராவணனின் பாதங்களில் தலையை மோதிக் கொண்டு அழுதாள். வாயைப் பிளந்து கொண்டு பெரும் பாம்பு போலப் புரண்டு," கொடியவனே! எனக்குக் கேடு புரிந்தாயே! இப்படி உனது காமப் பசியின் காரணமாக எனது மகனை சாய்த்து விட்டாயே! இந்திரனுக்கும் தோற்காத மகனைப் பெற்றேன் என்று வானவர்களால் புகழப்பட்ட நான், இன்று அந்த மகனை மானிடன் ஒருவனுடைய வில்லம்புக்கு உண்ணுமாறு பறி கொடுத்து விட்டேனே! முன்பே அட்சகுமாரன் இறந்து விட்டான். இப்போதோ அதிகாயனும் உயிர் விட்டான். அதிக வலிமை பெற்ற எல்லோரும் இறந்தார்கள். இன்னும் இறவாமல் உன்னுடன் இருப்பன் மண்டோதரியின் மகன் இந்திரஜித் ஒருவனே ஆவான். இனி, அவனையும் காலனுக்குப் பலி கொடுத்து விட்டு இனி யார் துணையுடன் திக்விஜயம் செய்வீரோ? அய்யோ! சீதையால் வரவேண்டிய இன்னும் சில தீங்குகள் இருக்கின்றனவோ? அன்றே நீ உணர்வுடைய உமது தம்பி கும்பகர்ணனின் வார்த்தையைக் கேட்டு இருந்தால் இப்படியும் நடந்து இருக்குமோ? இப்போதோ கும்பகர்ணனையும் கொல்வித்து, எனது சிறந்த புதல்வனையும் அம்புக்கு இரையாக்கினீர். ஐயனே! நீர் நன்கு அரசு புரிந்தீர்!" என்று பலவாறு கூறி இராவணனை இகழ்ந்து, கன்று இறக்கப் பிழைத்து இருக்கின்ற தாய்ப்பசு போல அழுது புரண்டாள்.

அவளுடைய நிலையைப் பார்த்துக் கொண்டு நின்ற ஊர்வசியும் மேனகையும், அவளை மிக்க ஆதரவுடன் அழைத்துக் கொண்டு அந்தப்புரத்துக்குச் சென்றார்கள். அதிகாயனின் மரணத்தால் இலங்கை மாநகரமே அழுதது. எங்கும் சோகமயமாகக் காட்சி அளித்தது. நகரெங்கும் பெரும் துன்பத்தால் எழுந்த அழுகுரலோசை, பூரண சந்திரனைக் கண்ட கடலின் ஓசையைப் போல விளங்கிற்று! இன்னும் சொல்லப் போனால், முன்பு ஸ்ரீ இராமபிரான் அயோத்தியை விட்டு காடு செல்ல உலகு அடைந்த வருத்தத்தை இன்று இலங்கை மாநகரம் அடைந்தது.