வீடணன் அடைக்கலப் படலம்

bookmark

யுத்தகாண்டம்

இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

வீடணன் அடைக்கலப் படலம்

(விபீஷணன் இராமபிரானை அடைக்கலம் அடைந்த செய்தியைக் கூறும் பகுதியாதலால் இப்பெயர் பெற்றது. இரணியன் கதையைக் கூறி, இராவணனைத் திருத்த முயன்ற விபீஷணனை இராவணன் சினந்து 'என் எதிரில் நில்லாதே' என வெறுத்துரைத்தான், விபீஷணன் இலங்கையை விட்டு வெளியேறினான். தன் அமைச்சர்கள் நால்வரும் கூறிய அறிவுரைப்படி இராமனைச் சரண் அடைந்தான். இராமபிரான் விபீஷணனை ஏற்றுக் கொள்வதற்கு முன் சுக்கிரீவன் முதலான வானரவீரர்களின் கருத்துகளைக் கேட்டு, பின் அனுமன் கூறிய கருத்தைக் கேட்டு 'பேரறிவாள நன்று' என அனுமனைப் பாராட்டி, சுக்கிரீவனையே, விபீஷணனை அழைத்து வர அனுப்புகிறான். இராமனைச் சரணடைந்த விபீஷணனை இலங்கை வேந்தனாக முடிசூட்டி இராமன் ஏற்றுக் கொள்கிறான். "இளையவற் கவித்த மோலி என்னையும் கவித்தி' என்று இராமபிரானது திருவடிகளை முடியில் சூடி மகிழ்கிறான் விபிஷணன் என்பன இப்படலத்தில் கூறப்படும் செய்திகள்)

விபீஷணன் கூறிய கதையைக் கேட்டும் இராவணன் உண்மையை உணரவில்லை. தனக்கு உறுதிப் பொருள் தருவது அந்த ஸ்ரீ இராமனின் திருவடிகளே என்பதை அவன் அறியவில்லை. மாறாக அவன் கண்களில் தீப்பொறி கிளம்ப சினங்கொண்டான்.

கோபத்துடன் விபீஷணனை நோக்கி இராவணன்," இறப்பில்லாத வரம் பெற்ற தவ வலிமை மிகுந்தவனே! எனது தம்பியே! இரணியன் எங்களைப் போன்றவர்களை விட வலிமையில் சிறந்தவன். அவனையே அழித்த திருமால் இப்போது இராமனாக வந்துள்ளதால், எங்களையும் அழித்து ஒழிப்பது நிச்சயம் என்று எண்ணி அவன் மேல் அன்பு கொண்டு இருக்கிறாய்! இப்படிப் பட்ட உனக்கும் அந்தப் பிரகலாதனுக்கும் என்ன வேறுபாடு உள்ளது? இருவருமே குலத் துரோகிகள் தான்.

மேலும் விபீஷணா, உனது மன ஓட்டத்தையும் நான் அறிந்து கொண்டேன். நாங்கள் எல்லோரும் அந்த இராமனால் கொல்லப் பட்ட பிறகு, நீயும் அந்தப் பிரகலாதனைப் போல எனது அரச பதவியையும், செல்வங்களையும் தனி ஒருவனாகவே அனுபவிக்க நினைக்கின்றாய் அல்லவா? ஆனால், உனது அந்த எண்ணம் நிறைவேறாது. காரணம், என்னிடம் உள்ளவர்கள் அனைவரும் விசுவாசிகள், உன்னைப் போன்றவர்கள் அல்ல. எப்போது நீ அந்த மானிடர்களான இராம லக்ஷ்மணர்கள் மீது அன்பை வைத்தாயோ, அப்போதே நீயும் அவர்களைப் போல எனது விரோதியாக மாறிவிட்டாய். இனி, உன்னைப் பற்றி வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை! எனது பகைவர்களிடத்தில் அன்பு கொண்டாய். அதனால் நீ செய்ய வேண்டிய செயலை தனியே சிந்தித்தும் விட்டாய், இனி எனக்கு உன்னை விட வேறு ஒரு பகைவர் இல்லை. என்னை வெல்லும் வழியை நினைத்து உள்ளாய். இலங்கை அரசின் மீது ஆசை வைத்து விட்டாய்.

முன்பு இந்த நகரத்துக்கு வந்தக் குரங்கை நான் கொல்லுங்கள் என்று சொன்னபோது,' தூதுவரைக் கொல்வது வெற்றியைத் தருவதாகாது!' என்று சொல்லித் தடுத்தாய். அக்குரங்கு திரும்பிச் சென்று அம்மனிதருக்கு செய்தி உரைக்க, அது கேட்டு அவர்கள் இங்கு வந்து எம்மை எல்லாம் அழிப்பார்கள் என்று எண்ணியே அப்படிச் செய்தாய் என்பது எனக்கு இப்போது நன்கு விளங்குகிறது. அதற்குத் தக்கவாறே அந்த இராமனிடத்தில் நீ அன்பு கொண்டு இருக்கிறாய். அதனால் நீ சிறந்த போர் வீரனாகவும் ஆகமாட்டாய். உனது மனத்தினில் எத்தனை காலமாக இப்படி ஒரு தருணத்தை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தாய்? உட்பகை கொண்டு பிறந்த குலத்திற்கே துரோகம் செய்த உன்னுடன் வாழ்வதற்கு ஆலகால நஞ்சுடன் வாழ்வது நல்லது! உன்னைக் கொல்ல வேண்டும் என்று துடிக்கிறேன். ஆனால், நான் என்ன செய்ய உடன் பிறந்தவனை கொன்றேன் என்ற ஒரு பழி என்னைச் சேர்ந்து விடுமே. அதனால், எங்காவது ஒழிந்து போ. இனி உனக்கு இந்த இலங்கையில் இடம் இல்லை" என்றான்.

அது கேட்ட விபீஷணன், "அண்ணா! நீங்கள் நினைப்பது போல் நான் கொடியவன் இல்லை. மேலும், இப்படி ஒரு பேச்சை தாங்கள் பேசிய பிறகு எனக்கு இலங்கையில் இனி என்ன வேலை உள்ளது? நான் போகிறேன் அண்ணா. எனக்கு விடை கொடுங்கள்" என்று கூறியவாறு இராவணனின் கால்களில் விழுந்தான். அப்போது கோபத்தின் உச்சிக்கே சென்ற இராவணன், தனது கால்களில் விழுந்த விபீஷணனை சபையில் கூடி இருந்த அரக்கர்கள் அனைவரும் பார்க்க எட்டி உதைத்தான். இமயத்தையே ஆட்டி வைத்த அந்தக் கொடிய இராவணன் மிதித்த அந்த மிதியில் விபிஷணன் தனது தலையில் சூடியிருந்த கீரிடம் தெறிக்க எங்கோ ஒரு மூலையில் போய் விழுந்தான். அது கண்ட அவையில் உள்ள அரக்கர்கள் அனைவரும் நகைத்தனர்.

அப்போது தள்ளாடி எழுந்தான் விபீஷணன் அந்த அவையில் தான் பட்ட நிலையைக் கண்டு சிரித்த அரக்கர்களை நோக்கி," பாபத்தின் ரூபமாக இருப்பவர்களே சிரியுங்கள். நன்றாகச் சிரியுங்கள். காரணம் இன்னும் சில நாட்கள் தான் உள்ளது இலங்கையில் சிரிப்பொலி அடங்க. இந்த அவையில் இப்போது என்னைக் கண்டு சிரிக்கின்ற ஒருவரும் எதிர் காலத்தில் இராமபிரானுடன் நேரப் போகும் யுத்தத்தில் உயிருடன் இருக்கப் போவதில்லை. இது எனது எச்சரிக்கை அல்ல, சாபம்" எனக் கூறினான். பிறகு, "இனியும் இராவணனின் இடத்தில் எனக்கு என்ன வேலை உள்ளது?" என்று நினைத்தவாறு ஆகாய மார்க்கமாக புறப்பட்டான் விபீஷணன். அப்போது விபீஷணனை பின் தொடர்ந்து அவனுக்கு மிகவும் விசுவாசிகளான அனலன், அனிலன், அரண், சம்பாதி என்னும் நல்ல மந்திரிகளும் இலங்கையை விட்டுப் போனார்கள்.

அவ்வாறு செல்கையில் உடன் வந்த மந்திரிமார்கள்," சுக்கிரீவன் முதலியோருடன் இராமபிரான் கடலின் அக்கரையில் தங்கியுள்ளார்!" என்று கூறினார்கள். அது கேட்டு விபீஷணன் நாம் விரைந்து அங்கு செல்வோம்!" என்றான்.

அப்போது அவர்கள் இராமபிரான் தனது வானர சேனையுடன் முகாமிட்டு இருக்கும் கடலின் மறு கரையை அடைந்தார்கள். அப்போது அங்கு இருக்கும் வானர சேனையின் பெரும் பலத்தைக் கண்டான் விபீஷணன்.

அப்படையைக் கண்டதும், " உலகத்தில் உள்ள மாமிசம் படைத்த உடம்புடைய பிராணிகளை எல்லாம் ஒரு பக்கத்திலும், மற்ற வானர சேனைகளை ஒரு பக்கத்திலும் நிற்க வைத்து எண்ணினால், வானர சாதியே அளவால் அதிகப்பட்டதாகும்!" என்று, தனது மந்திரிகளை நோக்கி வியப்புற்றுச் சொன்னான்.

மீண்டும் அவன் அவர்களை நோக்கி," மந்திரிகளே! அறத்தையே முதலாகக் கொண்டு நிற்கும் இராமபிரானிடத்தில் அன்பு கொண்டு இருக்கிறேன். தீய புத்தியாலும், பழி பாவங்களாலும் வரும் வாழ்வை நான் விரும்பவில்லை. இதனால் நான் எனது தமையனிடத்தில் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். ஆயினும், எனது வார்த்தைகளை அவர் கேட்கவில்லை. மாறாக என்னைக் கடிந்துரைக்க, நான் அவரை விட்டு விலகி வந்து விட்டேன். இந்நிலையில் நான் செய்யத்தக்க செயலை எனக்குக் கூறுங்கள்" என்றான்.

உடனே மந்திரிகள்," தர்மமே வடிவமாகக் கொண்ட ஸ்ரீ இராமனிடத்திலே நாம் சென்று அடைக்கலம் தேடுவதே இப்போதைக்கு நமக்கு உகந்த செயல்" என்று ஒரே குரலில் ஏகமனதாகக் கூறினார்கள்.

மந்திரிகளின் வார்த்தைகளை கேட்டு மகிழ்ந்து அதன் படியே செய்ய சித்தம் கொண்டான் விபீஷணன். ஆனால், அப்போது கரிய இரவுப் பொழுது வந்ததால்," இந்நேரத்தில் நாம் ஸ்ரீ இராமபிரானை தொந்தரவு செய்வது தகாது" என்று சிந்தித்த விபீஷணன். தனது மந்திரிகளுடன் அக்கடற்கரையின் மற்றுமொரு புறத்தில் வந்து இறங்கினான். அது ஒரு அழகான சோலைப் பகுதி. அங்கேயே தனது சகாக்களுடன் சற்று ஓய்வு எடுத்தான் விபீஷணன். ஒருவாறு, இரவுப் பொழுதும் மெல்ல ஓடி ஒழிந்தது. கதிரவன் தனது செங்கதிர்களை பூமி எங்கும் பரப்பினான். அப்போது ஊருக்கு மட்டும் அல்ல, விபீஷணனுக்கும் சேர்த்தே விடிந்தது.

ஸ்ரீ இராமர் எப்போதும் போல அன்றும் அதிகாலையிலேயே எழுந்து தனது சந்தியா கடமைகளை நிறைவேற்றினார். அப்போது அந்த அதிகாலைப் பொழுதில், செந்நிறக் கதிர்களை ஏற்று சுமந்த வண்ணம் வீசிய சமுத்திரத்தின் அலைகளையும் மேலும் அங்கு காணப்பட்ட இயற்கையின் அழகிலும் தனது மனதையே சில கணங்கள் பறிகொடுத்தார் இராமபிரான். இயற்கையின் அந்த அழகிய காட்சிகள் கூட அவருக்கு சீதையின் அழகையே நினைவு படுத்தியது.

அதனால், வருத்தம் தோய்ந்த முகத்துடன் " இனி சீதையை எப்போது காணப் போகிறோம்?" என்று தனக்குள் கேட்டபடி மனம் நொந்தார் ஸ்ரீ இராமர். அவ்வாறு வருந்தி நிற்கையில் அங்கே வந்த சுக்கிரீவன், அனுமன், அங்கதன், ஜாம்பவான் ஆகியோர், அவரது நிலை கண்டு அவரைத் தேற்றி அங்கிருந்து தமது இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அதே சமயம், விபீஷணன் அந்த வானர சேனை தங்கியுள்ள இடத்துக்குத் தனது அமைச்சர்களுடன் வந்து சேர்ந்தான்.

அவ்வாறு வந்த விபீஷணனை வானர வீரர்கள் கண்டார்கள். போர் துவங்குவதற்கு முன்னரே தங்களை அரக்க சேனைகள் தாக்க வந்துள்ளதாக நினைத்தனர். அதனால், மிகுந்த கோபம் கொண்டனர். அனைவரும் ஒன்று கூடினார்கள். விபீஷணனையும் அவனது மதிமிகு அமைச்சர்களையும் சூழ்ந்து நின்றனர். அவர்கள்," இந்த அரக்கர்கள் தப்பிச் செல்லாதவாறு பிடித்துக் கொள்ளுங்கள்! ஆயுதம் கொண்டு இவர்களைத் தாக்குங்கள்!" என்றெல்லாம் கூறினார்கள்.

இன்னும் சில வானர வீரர்கள் உருவத்தில் இராவணன் போலவே காட்சி அளித்த, அவனது தம்பி விபீஷணனை இராவணன் என்றே நினைத்து," ஏ அரக்கனே! உனது பத்து தலைகளும், இருபது கைகளும் இப்போது எங்கே போனது?" என்றார்கள்.

இன்னும் சில வானர வீரர்கள் விபீஷணனை நோக்கி," இவனை சிறையில் தள்ளுங்கள், பிறகு அந்த நல்ல செய்தியை ஸ்ரீ இராமருக்குத் தெரிவிப்போம்" என்றனர். மேலும் சிலர், " இவர்கள் அரக்கர்கள். ஆதலால், இமைப் பொழுதில் ஆகாய மார்க்கமாக பறந்து சென்று விடுவார்கள். ஆதலால், விரைந்து இவர்களைத் தாக்கிக் கொன்று போடுவதே நல்லது" என்றனர்.

அச்சமயம் அந்த வானர கூட்டத்திலேயே புத்தியில் சிறந்த மயிந்தன், துவிந்தன் என்னும் இரு காவலாளிகள், தங்களது வானர சேனைகளில் உள்ள வீரர்களைப் பார்த்து," சற்றே பொறுங்கள். இவர்கள் வந்த தோரணையைப் பார்த்தால் நம்மைத் தாக்க வந்தது போலத் தெரியவில்லை. அதனால், எதையும் ஆலோசித்து, விசாரித்து செய்வது நல்லது. நாம் ஏதேனும் செய்து விட, அது நமது இராமபிரானுக்கு இன்னும் அதிக துக்கத்தையும், சுக்கிரீவ மகாராஜருக்கு கோபத்தையும் ஏற்படுத்தி விடக் கூடாது" என்றான்.

அவ்வாறு அவன் சொன்ன வார்த்தைகளுக்கு மற்ற வானர வீரர்களும் சம்மதித்தனர். உடனே விபீஷணனையும் அவனுடன் காணப்பட்ட மந்திரகளையும் நோக்கி மயிந்தன் ," நீங்கள் யார்? இங்கு வந்த காரணம் என்ன? எதையும் மறைக்காமல் உள்ளதை உள்ளபடிச் சொல்லுங்கள்" என்றான்.

உடனே விபீஷணனின் மந்திரிகளுள் ஒருவரான அனலன் மயிந்தனிடம்," இவர் இராவணனுக்கு இளையவரான விபீஷணர் ஆவார். அரக்க தாய்க்கு மகனாகப் பிறந்து இருந்தாலும் புலஸ்த்திய மக ரிஷியின் மைந்தனும், பிரமனின் கொல்லுப் பேரனுமாவார். பிரம்மனிடம், எப்போதும் தர்ம வழியில் செல்லவும், நீதியின் படி நடக்கவும் வரம் பெற்றவர். மேலும், ஸ்ரீ இராமரின் மனைவியை இராவணன் தூக்கிக் கொண்டு வந்த காரணத்துக்காக, அண்ணனுக்கு நற்புத்தி சொல்ல, அதனால் இராவணனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஸ்ரீ இராமனிடம் அபயம் கேட்டு வந்துள்ளார். அவருடன் சேர்த்து அவரின் மந்திரிகளான நாங்களும் வெளியேறினோம்" என்று கூறி முடித்தான்.

அது கேட்ட மயிந்தன்," சரி! உங்கள் செய்தியை இராமபிரானுக்கு உடனே சென்று தெரிவிக்கிறேன். அதுவரையில் இங்கேயே இருங்கள்" என்றான். பிறகு வானரர்களை நோக்கி," வீரர்களே! இவர்களுக்குக் காவலாக இங்கேயே நீங்கள் இவர்களைச் சுற்றி அமர்ந்து இருங்கள். உங்களுக்குத் துணையாக எனது தம்பி துமிந்தன் இருப்பான்!" என்று சொன்னான். பின்பு , மயிந்தன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று, இராமபிரானை அடைந்து அவரது திருவடிகளில் விழுந்து வணங்கி, " பிரளய காலத்திலும் வாழ்பவரே! தங்களிடம் அறிவிக்க வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது!" என்றான்.

"மயிந்தனே! சத்தியம் பேசுபவனே! நீ நேரில் கண்டதையும் கேட்டதையும் சொல்!" என்று கட்டளை பிறப்பித்தார் ஸ்ரீ இராமர். "இலங்கை வேந்தனின் தம்பியாகிய விபீஷணன், தனது நான்கு அமைச்சர்களுடன் நமது வானர சேனையின் நடுவே வந்து சேர்ந்தான். அவர்களைக் கண்டதும் நமது வீரர்கள் தாக்க முயன்ற போது நான் தடுத்து விட்டு, அந்த அரக்கர்களை," நீங்கள் யார்? உங்கள் நிலையைச் சொல்லுங்கள்" என்று கேட்டேன். அவர்கள் கூறியவற்றைச் சொல்கிறேன்!" என்று கூறிய மயிந்தன், இராமபிரானிடம் அனலன் தெரிவித்த செய்திகளைக் கூறி முடித்தான்.

மயிந்தன் கூறியவற்றைக் கேட்ட ஸ்ரீ இராமர், அப்போது தமது அருகே நின்று கொண்டு இருந்த நண்பர்களைப் பார்த்து, " மயிந்தன் கூறியதை நீங்களும் கேட்டீர்கள். அந்த விபீஷணன் நம்பால் சேர்வதற்கு உரியவனோ? இல்லையோ? என்பதை எனக்குச் சிந்தித்துச் சொல்லுங்கள்!" என்று கேட்டார்.

உடனே சுக்கிரீவன் ஸ்ரீ இராமபிரானிடம்," விதிக்கும் மேம்பட்டவரே! வேதங்களை உணர்ந்தவரே. தாங்கள் இந்தக் கேள்வியை எங்களை சோதிக்கத் தான் கேட்கின்றீர்களோ? எங்களைக் கேட்டுத் தான் தாங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. இருந்தாலும் தாங்கள் எங்களைக் கேட்டதால் சொல்கிறேன். நான் சொல்வதை தாங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் என்பதை நான் அறியேன். அது போல, நான் சொல்வதைக் கேட்டுத் தாங்கள் என்ன சொல்வீர்கள்? என்பதையும் நான் அறியேன்! இருந்தாலும் நான் எனது மனதில் பட்டதை சொல்கிறேன் கேளுங்கள். நேர்மை குணம் இல்லாத அரக்கர் கூட்டத்தில் நல்லவர்கள் யார் தான் உள்ளார்கள்? இதில் இந்த விபீஷணன் மட்டும் விதி விலக்கா என்ன? இதுவரையில், இராவணனின் உப்பை தின்று விட்டு, இப்போது பகைவர்கள் இலங்கையை நெருங்கி விட்டனர் என்றவுடன், ஏதோ ஒரு சாக்கு, போக்கு சொல்லி அண்ணனுடன் சண்டையிட்டு வந்து, நாம் தான் வெற்றி அடையப் போகிறோம் என்று அறிந்து நம்மிடம் தஞ்சம் கொள்ளும் செயல் நல்ல குணமில்லை. மேலும், அது ஏளனம் செய்யத் தகுந்த, முறையற்ற செயலும் கூட. தமையனால் தனக்குக் காரியம் ஆக வேண்டிய காலத்தில் அவனுடன் இனிய மொழி பேசி உறவாடிவிட்டு, அவனுக்குப் பகைவருடன் போர் நேர்ந்த காலத்தில் அவனைப் பிரிந்து வரும் இந்த ஆண்மையற்ற செயல் விபீஷணனின் இழிந்த குணத்தைத் தான் நன்கு எடுத்துக் காட்டுகிறது! தமயனுடன் ஒன்று பட்டு பகைவரோடு போர் செய்ய வேண்டிய கடமை தனக்கிருக்க, அதனைச் செய்யாது வந்த விபீஷணன் குணத்திலோ, வீரத்திலோ, பண்பிலோ சிறந்தவன் ஆக மாட்டான். அவன் நம்பிக்கைக்கும் பாத்திரன் அல்ல. நமக்கு இவனது துணை வேண்டுவதும் இல்லை" என்றான்.

சுக்கிரீவன் அவ்வாறு கூறி முடித்ததும் ஸ்ரீ இராமபிரான் ஜாம்பவானைப் பார்த்து," இதில் உனது கருத்து யாது?" என்று கேட்டார்.

"ஐயனே! ஒருவன் எத்தனை அறிவாளியானாலும் கூட பகைவருடன் சேர்ந்தால் அவனுக்கு அழிவு நிச்சயம், அந்த வகையில் விபீஷணன் அரக்க குலத்தை சேர்ந்தவன். நம்பத் தகுந்தவன் இல்லை என்று தான் தோன்றுகிறது. மேலும், பகைவர்களே கூட, நம்முடன் உறவாடிக் கெடுக்க விபீஷணனை அனுப்பி இருக்கலாம். அதனால், இவனுக்கு நாம் அபயம் அளிப்பது தகாது. அப்படிச் செய்தால் பிற்காலத்தில் நமக்குத் தீமை தான் மிஞ்சும். ஆதலால், நான் இந்த விஷயத்தில் சுக்கிரீவனின் கூற்றையே ஏற்கிறேன்" என்றான் ஜாம்பவான்.

அப்போது நீலன் ஸ்ரீ இராமரை நோக்கி,"எல்லை அற்ற கேள்விஞானம் கொண்டவரே! பகைவரைத் துணையாகக் கொள்வதற்கு சில முறைகள் உள்ளன. நான் அவைகளைத் தங்களுக்கு கூறக் கடமைப் பட்டு இருக்கிறேன். எனவே, தாங்கள் அதனை ஒரு குரங்கின் சொல் என்று இகழாமல் எப்போதும் போல கேட்டருள வேண்டுகிறேன் அது யாதெனில், தனது சுற்றத்தாரைக் கொன்ற பகைவரை எதிர்க்க வல்லமை இல்லாமல் வந்தவர்கள், தமது மனைவியைப் பகைவன் கெடுத்ததால் கோபம் கொண்டு வந்தவர்கள், பெரும் பொருளை இழக்கச் செய்ததால் கோபம் கொண்டு வந்தவர்கள், தன்நாட்டு அரசாங்கத்தால் துன்பம் அடைந்து வந்தவர், போரிலே புற முதுகு காட்டி ஓடிவந்தவர் என மேற்கண்ட வகையினர் பகைவர்களின் சகோதரராக இருந்தாலும், நம்மைச் சரண் புகுந்தால், அவர் நம்மால் பாதுகாக்கப் பட வேண்டியவர். ஆனால், விபிஷணனின் வரவோ இப்படிப் பட்டதாக இல்லை. தனது சொந்த சகோதரனையே வெறுத்து வந்துள்ளான். அதனால், இவனை நம்புவதற்கு நல்லதில்லை" என்றான்.

மற்றவர்களும் விபீஷணன் போன்ற ஒருவனை துணையாகக் கொள்வது தகாது என்று ஒரு முகமாகவே சொன்னார்கள்.

ஸ்ரீ இராமபிரான் கடைசியான அனுமனை நோக்கி," மாருதி! இந்த விஷயமாய் உனது கருத்து என்ன?" என்று கேட்டார்.

மாருதி உடனே ஸ்ரீ இராமபிரானுக்குத் தனது கருத்தை கூறத் தொடங்கினான். "ஐயனே! சிந்தித்துப் பார்த்தால், யார் அடைக்கலம் என்று தேடி வந்தாலும் அபயம் அளிக்கும் இயல்புடையவர் தாங்கள். அவ்வாறு, அடைக்கலம் தருவது உங்களது ரகு வம்சத்தின் பரம்பரை குணமும் கூட. அப்படிப் பட்ட குலத்தில் பிறந்த தங்களுக்கு நான் சொல்ல வேண்டியது ஒன்றும் இல்லை. ஆயினும், தாங்கள் இவ்வளவு தூரம் கேட்டதால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லக் கடமைப் பட்டு உள்ளேன். அது யாதெனில், என்னால் மற்றவர்களைப் போல விபிஷணனை கெட்டவன் என்று தீர்மானிக்க முடியவில்லை. அதற்கு சில காரணங்கள் உள்ளன. அதையும் கேட்பீராக, வஞ்சக குணம் கொண்டவர்களை அவர்களது முகமே காட்டிக் கொடுத்து விடும். ஆனால், இந்த விஷயத்தில் விபீஷணனின் முகம் பொய் சொல்லவில்லை. அவன் தங்களது தயாள குணத்தையும், ஆற்றலையும் கேள்விப் பட்டு தான் இங்கு வந்து உள்ளானே தவிர, அவனது மனதில் வேறு எந்த ஒரு உள்நோக்கமும் காணப்படவில்லை என்பதை அவனது முகத்தில் வீசும் தெய்வீக ஒளி கொண்டு என்னால் உணர முடிகிறது. அதனால், அவனை சந்தேகிக்க வேண்ட