வீடணன் அடைக்கலப் படலத்தின் பாடல்கள்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
வீடணன் அடைக்கலப் படலம்
வீடணன் உரையை மதியாது, இராவணன் சினந்து, அவனைத் துரத்துதல்
கேட்டனன் இருந்தும், அக் கேள்வி தேர்கலாக்
கோட்டிய சிந்தையான், உறுதி கொண்டிலன், -
மூட்டிய தீ என முடுகிப் பொங்கினான் -
ஊட்டு அரக்கு ஊட்டிய அனைய ஒண் கணான்.
"இரணியன் என்பவன் எம்மனோரினும்
முரணியன்; அவன் தனை முருக்கி முற்றினான்,
அரணியன்" என்று, அவற்கு அன்பு பூண்டனை -
மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய்!
ஆயவன் வளர்ந்த தன் தாதை யாக்கையை
மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும்,
ஏயும் நம் பகைஞனுக்கு இனிய நண்பு செய்
நீயுமே நிகர்; பிறர் நிகர்க்க நேர்வரோ?
பாழி சால் இரணியன் புதல்வன் பண்பு என,
சூழ்வினை முற்றி, யான் அவர்க்குத் தோற்றபின்,
ஏழை நீ என் பெருஞ் செல்வம் எய்தி, பின்
வாழவோ கருத்து? அது வர வற்று ஆகுமோ?
முன்புற அனையர்பால் அன்பு முற்றினை;
வன் பகை மனிதரின், வைத்த வன்பினை;
என்பு உற உருகுதி; அழுதி; ஏத்துதி;
உன் புகல் அவர்; பிறிது உரைக்க வேண்டுமோ?
நண்ணின மனிதர்பால் நண்பு பூண்டனை;
எண்ணினை செய்வினை; என்னை வெல்லுமாறு
உன்னினை; அரசின்மேல் ஆசை ஊன்றினை;
திண்ணிது உன் செயல்; பிறர் செறுநர் வேண்டுமோ?
அஞ்சினை ஆதலின், அமர்க்கும் ஆள் அலை;
தஞ்சு என மனிதர்பால் வைத்த சார்பினை;
வஞ்சனை மனத்தினை; பிறப்பு மாறினை;
நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்மையோ?
பழியினை உணர்ந்து, யான் படுக்கிலேன், உனை;
ஒழி, சில புகலுதல்; ஒல்லை நீங்குதி;
விழி எதிர் நிற்றியேல், விளிதி என்றனன்-
அழிவினை எய்துவான், அறிவு நீங்கினான்.
வீடணன் துணைவருடன் வானில் எழுந்து நின்று, நீதி பல கூறுதல்
என்றலும், இளவலும் எழுந்து, வானிடைச்
சென்றனன்; துணைவரும் தானும் சிந்தியா -
நின்றனன்; பின்னரும், நீதி சான்றன,
ஒன்று அல பலப்பல, உறுதி ஓதினான்:
வாழியாய்! கேட்டியால்: வாழ்வு கைம்மிக
ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய்,
கீழ்மையோர் சொற்கொடு கெடுதல் நேர்தியோ?
வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ?
புத்திரர், குருக்கள், நின் பொரு இல் கேண்மையர்,
மித்திரர், அடைந்துளோர், மெலியர், வன்மையோர்,
இத்தனை பேரையும், இராமன் வெஞ் சரம்
சித்திரவதை செயக் கண்டு, தீர்தியோ?
வீடணன் இலங்கை விட்டு ஏகுதல்
எத்துணை வகையினும் உறுதி எய்தின,
ஒத்தன, உணர்த்தினேன்; உணரகிற்றிலை;
அத்த! என் பிழை பொறுத்தருள்வாய் என,
உத்தமன் அந் நகர் ஒழியப் போயினான்.
அமைச்சர் நால்வருடன், வீடணன் இராமன் இருக்கும் கடற்கரைக்கு வருதல்
அனலனும், அனிலனும், அரன், சம்பாதியும்,
வினையவர் நால்வரும், விரைவின் வந்தனர், -
கனை கழல் காலினர், கருமச் சூழ்ச்சியர், -
இனைவரும் வீடணனோடும் ஏயினார்.
அரக்கனும், ஆங்கண் ஓர் அமைச்சர் நால்வரும்,
குரக்கு இனத்தவரொடும் மனிதர், கொள்ளை நீர்க்
கரைக்கண் வந்து இறுத்தனர் என்ற காலையில்,
பொருக்கென எழுதும் என்று எண்ணிப் போயினார்.
வீடணன் வானரத் தானையைக் கண்டு, வியந்து உரைத்தல்
அளக்கரைக் கடந்து, மேல் அறிந்து, நம்பியும்,
விளக்கு ஒளி பரத்தலின், பாலின் வெண் கடல்
வளத் தடந் தாமரை மலர்ந்ததாம் என,
களப் பெருந் தானையைக் கண்ணின் நோக்கினான்.
ஊனுடை உடம்பின உயிர்கள் யாவையும்
ஏனைய ஒரு தலை நிறுத்தி எண்ணினால்,
வானரம் பெரிது என, மறு இல் சிந்தையான்,
தூ நிறச் சுடு படைத் துணைவர்ச் சொல்லினான்:
மேலே செய்வன குறித்துத் அமைச்சருடன் வீடணன் உசாவுதல்
அறம்தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனென்;
மறந்தும் நன் புகழ் அலால் வாழ்வு வேண்டலென்;
"பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய்" எனாத்
துறந்தனென்; இனிச் செயல் சொல்லுவீர் என்றான்.
இராமனைக் காணுமாறு மந்திரிமார் உரைக்க, வீடணன் மகிழ்ந்து கூறுதல்
மாட்சியின் அமைந்தது வேறு மற்று இலை;
தாழ்சி இல் பொருள் தரும் தரும மூர்த்தியைக்
காட்சியே இனிக் கடன் என்று, கல்வி சால்
சூழ்ச்சியின் கிழவரும், துணிந்து சொல்லினார்.
நல்லது சொல்லினீர்; நாமும், வேறு இனி
அல்லது செய்துமேல், அரக்கர் ஆதுமால்;
எல்லை இல் பெருங் குணத்து இராமன் தாள் இணை
புல்லுதும்; புல்லி, இப் பிறவி போக்குதும்.
முன்புறக் கண்டிலென்; கேள்வி முன்பு இலென்;
அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன்;
என்பு உறக் குளிரும்; நெஞ்சு உருகுமேல், அவன்
புன் புறப் பிறவியின் பகைஞன் போலுமால்.
ஆதி அம் பரமனுக்கு அன்பும், நல் அறம்
நீதியின் வழாமையும், உயிர்க்கு நேயமும்,
வேதியர் அருளும், நான் விரும்பிப் பெற்றனென் -
போது உறு கிழவனைத் தவம் முன் பூண்ட நாள்.
ஆயது பயப்பது ஓர் அமைதி ஆயது;
தூயது, நினைந்தது; தொல்லை யாவர்க்கும்
நாயகன் மலர்க்கழல் நணுகி, நம் மனத்து
ஏயது முடித்தும் என்று இனிது மேயினான்.
இருளில் செல்வது முறை அன்று என எண்ணி, சோலையில் தங்குதல்
இருளிடை எய்துவது இயல்பு அன்றாம் என,
பொருள் உற உணர்ந்த அப் புலன் கொள் கேள்வியார்,
மருளுறு சோலையின் மறைந்து வைகினார்;
உருளுறு தேரவன் உதயம் எய்தினார்.
இராமன் கடற்கரைப் பகுதிகளை நோக்குதல்
அப் புறத்து, இராமன், அவ் அலங்கு வேலையைக்
குப்புறக் கருதுவான், குவளை நோக்கிதன்
துப்பு உறச் சிவந்த வாய் நினைந்து சோர்குவான்,
இப் புறத்து இருங் கரை மருங்கின் எய்தினான்.
கானலும் கழிகளும், மணலும், கண்டலும்,
பானலும் குவளையும், பரந்த புன்னையும்,
மேல் நிறை அன்னமும் பெடையும், வேட்கை கூர்
பூ நிறை சோலையும், புரிந்து நோக்கினான்.
தரளமும், பவளமும், தரங்கம் ஈட்டிய
திரள் மணிக் குப்பையும், கனக தீரமும்,
மருளும் மென் பொதும்பரும், மணலின் குன்றமும்,
புரள் நெடுந் திரைகளும், புரிந்து நோக்கினான்.
மின் நகு மணி விரல் தேய, வீழ் கணீர்
துன்ன அரும் பெருஞ் சுழி அழிப்ப, சோர்வினோடு
இன் நகை நுளைச்சியர் இழைக்கும் ஆழி சால்
புன்னை அம் பொதும்பரும் புக்கு, நோக்கினான்.
இயற்கை நிகழ்ச்சிகள் சிலவற்றால் இராமன் கவலையோடு நிற்றல்
கூதிர் நுண் குறும் பனித் திவலைக் கோவை கால்,
மோதி வெண் திரை வர, முட வெண் தாழைமேல்,
பாதி அம் சிறையிடைப் பெடையைப் பாடு அணைத்து
ஓதிமம் துயில்வ கண்டு, உயிர்ப்பு வீங்கினான்
அருந்துதற்கு இனிய மீன் கொணர, அன்பினால்
பெருந் தடங் கொம்பிடைப் பிரிந்த சேவலை,
வருந் திசை நோக்கி, ஓர் மழலை வெண் குருகு,
இருந்தது கண்டு நின்று, இரக்கம் எய்தினான்.
ஒரு தனிப் பேடைமேல் உள்ளம் ஓடலால்,
பெரு வலி வயக் குருகு இரண்டும் பேர்கில,
திருகு வெஞ் சினத்தன, தெறு கண் தீ உகப்
பொருவன கண்டு, தன் புருவம் கோட்டினான்.
உள் நிறை ஊடலில் தோற்ற ஓதிமம்
கண்ணுறு கலவியில் வெல்லக் கண்டவன்,
தண் நிறப் பவள வாய் இதழை, தற் பொதி
வெண் நிற முத்தினால், அதுக்கி, விம்மினான்.
அங்கு வந்த சுக்கிரீவன் முதலியோரது சொற்களால் மெலிவு நீங்கி இராமன் தன் இருப்பிடம் திரும்புதல்
இத் திறம் நிகழ்வுறு காலை, எய்திய
வித்தகர் சொற்களால் மெலிவு நீங்கினான்
ஒத்தனன் இராமனும், உணர்வு தோன்றிய
பித்தரின், ஒரு வகை பெயர்ந்து போயினான்.
வீடணன் வருகை
உறைவிடம் எய்தினான், ஒருங்கு கேள்வியின்
துறை அறி துணைவரோடு இருந்த சூழலில்,
முறை படு தானையின் மருங்கு முற்றினான் -
அறை கழல் வீடணன், அயிர்ப்பு இல் சிந்தையான்.
வீடணனைக் கண்ட வானர வீரர்கள் அவனைச் சூழந்து எதிர்த்தல்
முற்றிய குரிசிலை, முழங்கு தானையின்
உற்றனர், நிருதர் வந்து என்ன ஒன்றினார்,
எற்றுதிர்; பற்றுதிர்; எறிதிர் என்று, இடை
சுற்றினர் - உரும் எனத் தெழிக்கும் சொல்லினார்.
தந்தது தருமமே கொணர்ந்துதான்; இவன்
வெந் தொழில் தீவினை பயந்த மேன்மையான்,
வந்தனன் இலங்கையர் மன்னன் ஆகும்; நம்
சிந்தனை முடிந்தன என்னும் சிந்தையார்.
"இருபது கரம்; தலை ஈர்-ஐந்து" எனபர், அத்
திருவிலிக்கு; அன்னவை சிதைந்தவோ? என்பார்,
பொரு தொழில் எம்மொடும் பொருதி, போர் என்பார்,
ஒருவரின் ஒருவர் சென்று, உறுக்கி ஊன்றுவார்
பற்றினம் சிறையிடை வைத்து, பாருடைக்
கொற்றவர்க்கு உணர்த்துதும் என்று கூறுவார்;
எற்றுவது அன்றியே, இவனைக் கண்டு, இறை
நிற்றல் என், பிறிது? என நெருக்கி நேர்குவார்.
இமைப்பதன்முன் விசும்பு எழுந்து போய பின்,
அமைப்பது என், பிறிது? இவர் அரக்கர் அல்லரோ?
சமைப்பது கொலை அலால், தக்கது யாவதோ?
குமைப்பது நலன் என முடுகிக் கூறினார்.
அனுமன் ஏவலால், மயிந்தனும் துமிந்தனும் வீடணனைச் சார்தல்
இயைந்தன இயைந்தன இனைய கூறலும்,
மயிந்தனும் துமிந்தனும் என்னும் மாண்பினார்,
அயிந்திரம் நிறைந்தவன் ஆணை ஏவலால்,
நயம் தெரி காவலர் இருவர், நண்ணினார்.
விலக்கினர் படைஞரை; வேதம், நீதி நூல்,
இலக்கணம், நோக்கிய இயல்பர் எய்தினார், -
சலக் குறி இலர் என, அருகு சார்ந்தனர் -
புலக் குறி அற நெறி பொருந்த நோக்கினார்.
மயிந்தன் வினாவ, வீடணனது துணைவனான அனலன் விடை பகர்தல்
யார்? இவண் எய்திய கருமம் யாவது?
போர் அது புரிதிரோ? புறத்து ஒர் எண்ணமோ?
சார்வு உற நின்ற நீர் சமைந்தவாறு எலாம்,
சோர்விலீர், மெய்ம் முறை, சொல்லுவீர் என்றான்.
பகலவன் வழி முதல், பாரின் நாயகன்,
புகல் அவன் கழல் அடைந்து, உய்யப் போந்தனன் -
தகவு உறு சிந்தையன், தரும நீதியன்,
மகன் மகன் மைந்தன் நான்முகற்கு, வாய்மையான்.
அற நிலை வழாமையும், ஆதி மூர்த்திபால்
நிறைவரு நேயமும், நின்ற வாய்மையும்,
மறையவர்க்கு அன்பும், என்று இனைய, மா மலர்
இறையவன் தர, நெடுந் தவத்தின் எய்தினான்.
"சுடு தியைத் துகிலிடைப் பொதிந்து, துன்மதி!
இடுதியே, சிறையிடை இறைவன் தேவியை;
விடுதியேல் உய்குதி; விடாது வேட்டியேல்,
படுதி" என்று உறுதிகள் பலவும் பன்னினான்.
மறம் தரு சிந்தையன், மதியின் நீங்கினான்,
"பிறந்தனை பின்பு; அதின் பிழைத்தி; பேர்குதி;
இறந்தனை, நிற்றியேல்" என்ன, இன்னவன்
துறந்தனன் என விரித்து, அனலன் சொல்லினான்.
மயிந்தன் இராமனுக்குச் செய்தி தெரிவிக்கச் செல்லுதல்
மயிந்தனும் அவ் உரை மனத்து வைத்து, நீ
இயைந்தது நாயகற்கு இயம்புவேன் எனா,
பெயர்ந்தனன் - தம்பியும், பெயர்வு இல் சேனையும்,
அயர்ந்திலிர் காமின் என்று அமைவது ஆக்கியே.
தன் அடி பணிந்த மயிந்தனை, செய்தி சொல்லுமாறு இராமன் பணித்தல்
தருமமும் ஞானமும் தவமும் வேலியாய்,
மருவ அரும் பெருமையும் பொறையும் வாயிலாய்,
கருணை அம் கோயிலுள் இருந்த கண்ணனை,
அருள் நெறி எய்திச் சென்று, அடி வணங்கினான்.
உண்டு, உரை உணர்த்துவது, ஊழியாய்! எனப்
புண்டரீகத் தடம் புரையும் பூட்சியான்,
மண்டிலச் சடை முடி துளக்கி, வாய்மையாய்!
கண்டதும் கேட்டதும் கழறுவாய் என்றான்.
மயிந்தன் தான் கண்டதும் கேட்டதும் கூறுதல்
விளைவினை அறிந்திலம்; வீடணப் பெயர்
நளிர் மலர்க் கையினன், நால்வரோடு உடன்,
களவு இயல் வஞ்சனை இலங்கை காவலற்கு
இளவல், நம் சேனையின் நடுவண் எய்தினான்.
"கொல்லுமின், பற்றுமின்" என்னும் கொள்கையான்,
பல் பெருந் தானை சென்று அடர்க்கப் பார்த்து, யான்,
"நில்லுமின்" என்று, "நீர் யாவிர்? நும் நிலை
சொல்லுமின்" என்ன, ஓர் துணைவன் சொல்லினான்:
"முரண் புகு தீவினை முடித்த முன்னவன்
கரண் புகு சூழலே சூழ, காண்பது ஓர்
அரண் பிறிது இல் என, அருளின் வேலையைச்
சரண் புகுந்தனன்" என முன்னம் சாற்றினான்.
"ஆயவன், தருமமும், ஆதி மூர்த்திபால்
மேயது ஓர் சிந்தையும், மெய்யும், வேதியர்
நாயகன் தர, நெடுந் தவத்தின், நண்ணினன்;
தூயவன்" என்பது ஓர் பொருளும் சொல்லினான்.
"கற்புடைத் தேவியை விடாது காத்தியேல்,
எற்புடைக் குன்றம் ஆம் இலங்கை; ஏழை! நின்
பொற்புடை முடித் தலை புரளும் - என்று ஒரு
நற் பொருள் உணர்த்தினன்" என்றும் நாட்டினான்.
ஏந்து எழில் இராவணன், "இனைய சொன்ன நீ
சாம் தொழிற்கு உரியை, என் சார்பு நிற்றியேல்;
ஆம் தினைப் பொழுதினில் அகறியால் - எனப்
போந்தனன்" என்றனன்; புகுந்தது ஈது என்றான்.
இராமன் நண்பர்களிடம் வீடணன் அடைக்கலம் குறித்து ஆராய்தல்
அப் பொழுது, இராமனும், அருகில் நண்பரை,
இப் பொருள் கேட்ட நீர் இயம்புவீர் - இவன்
கைப்புகற்பாலனோ? கழியற்பாலனோ?-
ஒப்புற நோக்கி, நும் உணர்வினால் என்றான்.
சுக்கிரீவனின் உரை
தட மலர்க் கண்ணனைத் தடக் கை கூப்பி நின்று,
இடன் இது; காலம் ஈது என்ன எண்ணுவான்,
கடன் அறி காவலன் கழறினான் அரோ-
சுடர் நெடு மணி முடிச் சுக்கிரீவனே:
நனி முதல் வேதங்கள் நான்கும், நாம நூல்
மனு முதல் யாவையும், வரம்பு கண்ட நீ,
இனையன கேட்கவோ, எம்மனோர்களை
வினவிய காரணம்? - விதிக்கும் மேல் உளாய்!
ஆயினும், விளம்புவென், அருளின் ஆழியாய்!
ஏயினது ஆதலின், அறிவிற்கு ஏற்றன;
"தூய அன்று" என்னினும், "துணிவு அன்று" எண்ணினும்,
மேயது கேட்டியால்; விளைவு நோக்குவாய்.
வெம் முனை விளைதலின் அன்று; வேறு ஒரு
சும்மையான் உயிர் கொளத் துணிதலால் அன்று;
தம்முனைத் துறந்தது, தரும நீதியோ?
செம்மை இல் அரக்கரில் யாவர் சீரியோர்?
தகை உறு தம்முனை, தாயை, தந்தையை,
மிகை உறு குரவரை, உலகின் வேந்தனை,
பகை உற வருதலும், துறந்த பண்பு இது
நகையுறல் அன்றியும், நயக்கற்பாலதோ?
வேண்டுழி இனியன விளம்பி, வெம் முனை
பூண்டுழி, அஞ்சி, வெஞ் செருவில் புக்கு உடன்
மாண்டு ஒழிவு இன்றி, நம் மருங்கு வந்தவன்
ஆண்தொழில் உலகினுக்கு ஆணி ஆம் அன்றே?
மிகைப் புலம் தருமமே வேட்ட போது, அவர்
தொகைக் குலம் துறந்து போய்த் துறத்தல் இன்றியே,
நகைப் புலம் பொதுவுற நடந்து, நாயக!
பகைப் புலம் சார்தலோ? பழியின் நீங்குமோ?
வார்க்குறு வனை கழல் தம்முன் வாழ்ந்த நாள்,
சீர்க்கு உறவு ஆய், இடைச் செறுநர் சீறிய
போர்க்கு உறவு அன்றியே போந்த போது, இவன்
ஆர்க்கு உறவு ஆகுவன்? - அருளின் ஆழியாய்!
ஒட்டிய கனக மான் உருவம் ஆகிய
சிட்டனும், மருமகன் இழைத்த தீவினை
கிட்டிய போதினில், தவமும் கேள்வியும்
விட்டது கண்டும், நாம் விடாது வேட்டுமோ?
கூற்றுவன் தன்னொடு எவ் உலகும் கூடி வந்து
ஏற்றன என்னினும், வெல்ல ஏற்றுளேம்;
மாற்றவன் தம்பி நம் மருங்கு வந்து, இவண்
தோற்றுமோ? அன்னவன் துணைவன் ஆகுமோ?
"அரக்கரை ஆசு அறக் கொன்று, நல் அறம்
புரக்க வந்தனம்" எனும் பெருமை பூண்ட நாம்,
இரக்கம் இல் அவரையே துணைக் கொண்டு ஏற்றும் ஏல்,
"சுருக்கம் உண்டு அவர் வலிக்கு" என்று தோன்றுமால்.
விண்டுழி, ஒரு நிலை நிற்பர்; மெய்ம் முகம்
கண்டுழி, ஒரு நிலை நிற்பர்; கைப் பொருள்
கொண்டுழி, ஒரு நிலை நிற்பர்; கூழுடன்
உண்டுழி, ஒரு நிலை நிற்பர் - உற்றவர்.
வஞ்சனை இயற்றிட வந்தவாறு அலால்,
"தஞ்சு" என நம்வயின் சார்ந்துளான் அலன்;
நஞ்சினின் கொடியனை நயந்து கோடியோ?-
அஞ்சன வண்ண! என்று, அறியக் கூறினான்.
சாம்பனின் கருத்து
அன்னவன் பின்னுற, அலகு இல் கேள்வியின்
தன் நிகர் பிறர் இலாத் தகைய சாம்பனை,
என்னை உன் கருத்து? என இறை வினாயினான்;
தொன் முறை நெறி தெரிந்து, அவனும் சொல்லுவான்
அறிஞரே ஆயினும், அரிய தெவ்வரைச்
செறிஞரே ஆவரேல், கெடுதல் திண்ணமால்;
நெறிதனை நோக்கினும், நிருதர் நிற்பது ஓர்
குறி நனி உளது என உலகம் கொள்ளுமோ?
வெற்றியும் தருகுவர், வினையம் வேண்டுவர்,
முற்றுவர், உறு குறை முடிப்பர், முன்பினால் -
உற்றுறு நெடும் பகை உடையர், அல்லதூஉம்,
சிற்றினத்தவரொடும் செறிதல் சீரிதோ?
வேதமும் வேள்வியும் மயக்கி, வேதியர்க்கு
ஏதமும், இமையவர்க்கு இடரும், ஈட்டிய
பாதகர் நம்வயின் படர்வராம் எனின்,
தீது இலராய், நமக்கு அன்பு செய்வரோ?
கைப் புகுந்து, உறு சரண் அருளிக் காத்துமேல்,
பொய்க் கொடு வஞ்சனை புணர்த்த போதினும்,
மெய்க் கொள விளியினும், "விடுதும்" என்னினும்,
திக்கு உறும், நெடும் பழி; அறமும் சீறுமால்.
மேல் நனி விளைவது விளம்ப வேண்டுமோ?
கானகத்து இறைவியோடு உறைந்த காலையில்,
மான் என வந்தவன் வரவை மானும், இவ்
ஏனையன் வரவும் என்று இனைய கூறினான்.
நீலன் தன் கருத்தைத் தெரிவித்தல்
பால்வரு பனுவலின் துணிவு பற்றிய
சால் பெருங் கேள்வியன், தானை நாயகன்,
நீலனை, நின் கருத்து இயம்பு, நீ என
மேலவன் விளம்பலும், விளம்பல் மேயினான்:
பகைவரைத் துணை எனப் பற்றற்பால ஆம்
வகை உள; அன்னவை - வரம்பு இல் கேள்வியாய்! -
தொகையுறக் கூறுவென்; "குரங்கின் சொல்" என
நகையுறல் இன்றியே, நயந்து கேட்டியால்!
தம் குலக் கிளைஞரைத் தருக்கும் போரிடைப்
பொங்கினர் கொன்றவர்க்கு எளியர் போந்தவர்,
மங்கையர் திறத்தினில் வயிர்த்த சிந்தையர்,
சிங்கல் இல் பெரும் பொருள் இழந்து சீறினோர்
பேர் அபிமானங்கள் உற்ற பெற்றியோர்,
போரிடைப் புறங்கொடுத்து அஞ்சிப் போந்தவர்,
நேர் வரு தாயத்து நிரப்பினோர், பிறர்
சீரிய கிளைஞரை மடியச் செற்றுளோர்
அடுத்த நாட்டு அரசியல் உடைய ஆணையால்
படுத்தவர் நட்டவர், - பகைஞரோடு ஒரு
மடக்கொடி பயந்தவர் மைந்தர் ஆயினும்,
உடன் கொளத் தகையர், நம்முழை வந்து ஒன்றினால்.
தாம் உற எளிவரும் தகைமையார் அலர்,
நாம் உற வல்லவர், நம்மை நண்ணினால்,
தோம் உற நீங்குதல் துணிவர் ஆதலின்,
யாம் இவன் வரவு இவற்று என் என்று உன்னுவாம்.
காலமே நோக்கினும், கற்ற நூல்களின்
மூலமே நோக்கினும், முனிந்து போந்தவன்
சீலமே நோக்கி, யாம் தெரிந்து தேறுதற்கு
ஏலுமே? என்று எடுத்து இனைய கூறினான்.
ஏனைய மந்திரக் கிழவரும் ஏற்றுக்கொள்ளுதல் குற்றமாகும் எனக் கூறுதல்
மற்றுள மந்திரக் கிழவர், வாய்மையால்,
குற்றம் இல் கேள்வியர், அன்பு கூர்ந்தவர்,
பற்றுதல் பழுது என, பழுது உறா ஒரு
பெற்றியின் உணர்வினார், முடியப் பேசினார்.
அனுமனின் கருத்தை உரைக்குமாறு இராமன் குறிப்பினால் வினவுதல்
உறு பொருள் யாவரும் ஒன்றக் கூறினார்
செறி பெருங் கேள்வியாய்! கருத்து என்? செப்பு என,
நெறி தரு மாருதி என்னும் நேர் இலா
அறிவனை நோக்கினான், அறிவின் மேல் உளான்.
சிரத்தொகை அனைத்தையும் துளக்கி, தீ எழக்
கரத்தொடு கரம் பல புடைத்து, காளை! நீ
உரைத்திடும் உறுதிகள் நன்று, நன்று! எனாச்
சிரித்தனன், கதம் எழுந்து இனைய செப்புவான்:
வானவர் இதனைக் கூற, வலங்கொடு தானை வைப்பை,
தானை அம் தலைவரோடும் சார்ந்த வீடணனும், தாழாது
ஊனுடைப் பிறவி தீர்ந்தேன் என மனத்து உவந்து, ஆங்கு அண்ணல்
தேன் உகு கமல பாதம் சென்னியால் தொழுது நின்றான்.