முதற் போர் புரி படலத்தின் பாடல்கள்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
முதற் போர் புரி படலம்
ஆசைதோறும் முரசம் அறைந்து, என
பாசறைப் படையின்னிடம் பற்றிய
வாசல்தோறும் முறையின் வகுத்திரால்.
பற்றி,-வீரர்!-பரவையின் மும் முறை
கற்ற கைகளினால், கடி மா நகர்
சுற்றும் நின்ற அகழியைத் தூர்த்திரால்.
தடுமின்; "போர்க்கு வருக!" எனச் சாற்றுமின்;
கடுமின், இப்பொழுதே கதிர் மீச்செலாக்
கொடி மதில் குடுமித் தலைக்கொள்க! என்றான்.
மடங்கல் அன்ன அவ் வானர மாப் படை,
இடங்கர் மா இரிய, புனல் ஏறிட,
தொடங்கி, வேலை அகழியைத் தூர்த்ததால்.
ஆய வெள்ளத்து அகழியைத் தூர்த்தலும்,
தூய வெள்ளம் துணை செய்வது ஆம் என
வாயிலூடு புக்கு, ஊரை வளைந்ததே.
முளையினோடும் களைந்து முடிப்பபோல்,
தளை அவிழ்ந்த கொழுந் தடந் தாமரை
வளையம், வன் கையில், வாங்கின-வானரம்.
புகழும் மேன்மையும் போயினவாம் என,
நிகழும் கள் நெடு நீலம் உகுத்தலால்,
அகழிதானும் அழுவது போன்றதே.
பண் திரிந்து சிதைய, படர் சிறை
வண்டு இரிந்தன; வாய்தொறும் முட்டையைக்
கொண்டு இரிந்தன, அன்னக் குழாம் எலாம்.
பாளை தாது உகு நீர் நெடும் பண்ணைய;
தாள தாமரை அன்னங்கள் தாவிட,
வாளை தாவின, வானரம் தாவவே.
நீறு, நீர்மிசைச் சென்று நெருக்கலான்,
ஏறு பேர் அகழ்நின்றும் எனைப் பல
ஆறு சென்றன, ஆர்கலிமீது அரோ.
சுழிகள்தோறும் சுரித்து இடை தோன்று தேன்
ஒழுகு தாமரை ஒத்தன, ஓங்கு நீர்
முழுகி மீது எழு மாதர் முகத்தையே.
தொன்மைப் பேர் அகழ் வானரம் தூர்த்ததால்;
இன்மைக்கும், ஒன்று உடைமைக்கும், யாவர்க்கும்
வன்மைக்கும், ஒர் வரம்பும் உண்டாம்கொலோ?
சீர்த்த பேர் அணைதன்னையும் சிந்தின;
வார்த்தது அன்ன மதிலின் வரம்புகொண்டு
ஆர்த்த ஆர்கலி காரொடும் அஞ்சவே.
எட்ட நீண்ட மதில்மிசை ஏறி, விண்
தொட்ட வானரம் தோன்றின-மீத் தொக
விட்ட வெண் கொடி வீங்கின என்னவே.
வெறுக்கை ஓங்கிய மேரு விழுக் கலால்
நிறுக்க, நேர்வரும் வீரர் நெருக்கலால்,
பொறுக்கலாது, மதிள் தரை புக்கதால்
மறைந்தவால், நெடு வானகம்; மாதிரம்
குறைந்த, தூளி குழுமி; விண்ணூடு புக்கு
உறைந்தது, ஆங்கு அவர் போர்க்கு எழும் ஓதையே.
ஆடல் அம் பரித் தாரும் அலம்பின;
மாடு அலம்பின, மா மணித் தேர்; மணி
பாடு அலம்பின, பாய் மத யானையே.
வருக்கம் யாவையும் வாழ்வுற, வந்தது ஓர்
கருக் கொள் காலம் விதிகொடு காட்டிட,
தருக்கி உற்று, எதிர் தாக்கின-தானையே.
கல் கொடும், சென்றது-அக் கவியின் கடல்,
வில் கொடும், நெடு வேல்கொடும், வேறு உள
எல் கொடும், படையும் கொண்டது-இக் கடல்.
கொம்புடைப் பணை கூறு உற நூறின;
வம்புடைத் தட மா மரம் மாண்டன,
செம் புகர்ச் சுடர் வேல்-கணம் செல்லவே.
தாக்கி, வஞ்சர் தலைகள் தகர்த்தலால்,
நாக்கினூடும், செவியினும், நாகம் வாழ்
மூக்கினூடும், சொரிந்தன, மூளையே.
விற்கள் ஓடு சரம் பட, வெம் புணீர்
பற்களோடும் சொரிதர, பற்றிய
கற்களோடும் உருண்ட, கவிகளே.
வென்றி வானர வீரர் விசைத்த கல்
சென்று, தீயவர் ஆர் உயிர் சிந்தின,
குன்றின் வீழும் உருமின் குழுவினே.
மதில் புறங் கண்டு, மண்ணில் மறைந்தன;-
கதிர்க் கொடுங் கண் அர்க்கர் கரங்களால்
விதிர்த்து எறிந்த விளங்கு இலை வேலினே.
பிடித்த, வள் உகிரால் பிளவு ஆக்கின,
இடித்த, எற்றின, எண் இல் அரக்கரை
முடித்த-வானரம், வெஞ் சினம் முற்றின.
அறைந்தும், வெவ் அயில் ஆகத்து அழுத்தியும்,
நிறைந்த வெங் கண் அரக்கர் நெருக்கலால்,
குறைந்த-வானர வீரர் குழுக்களே.
துப்பின் செய்தது, போன்றது, சூழ் வரை;
குப்புற்று ஈர் பிணக் குன்று சுமந்துகொண்டு
உப்பின் சென்றது, உதிரத்து ஒழுக்கமே.
அந்தரத்தில் நெருங்கலின், அங்கு ஒரு
பந்தர் பெற்றது போன்றது-பற்றுதல்
இந்திரற்கும் அரிய இலங்கையே.
பொங்கு வெங் குருதிப் புனற் செக்கர் முன்,
கங்குல் அன்ன கவந்தமும் கையெடுத்து,
அங்கும் இங்கும் நின்று, ஆடினவாம் அரோ.
தொல் நிறச் சிறையில் துளி தூவலால்,
பல் நிறத்த பதாகைப் பரப்பு எலாம்
செந் நிறத்தனவாய், நிறம் தீர்ந்தவே.
வழிந்த மா மதில் கைவிட்டு, வானரம்,
ஒழிந்த, மேருவின் உம்பர் விட்டு இம்பரின்
இழிந்த மாக் கடல் என்ன, இழிந்ததே.
கதன வாயிலும், கட்டும் அட்டாலையும்,
முதல யாவையும் புக்குற்று முற்றின-
விதன வெங் கண் இராக்கதர் வெள்ளமே.
நீந்தி ஏகும் நெருக்கிடைச் செல்வன;
சாய்ந்து சாய்ந்து, சரம் படத் தள்ளலுற்று
ஓய்ந்து வீழ்ந்த; சில சில ஓடின.
பொழியும் வெம் படைப் போர்க் கடல் ஆர்த்தவால்-
ஒழியும் காலத்து உலகு ஒரு மூன்றும் ஒத்து
அழியும் மாக் கடல் ஆர்ப்பு எடுத்தென்னவே.
உரை செய் காளமும், ஆகுளி ஓசையும்,
விரைசும் பல் இயம், வில் அரவத்தொடும்,
திரை செய் வேலைக்கு ஓர் ஆகுலம் செய்தவே.
நாயகன் முகம் நாலும் நடந்தென,
மேய சேனை விரி கடல், விண் குலாம்
வாயிலூடு புறப்பட்டு வந்ததே.
படிய வாயில் பருப்பதம் பாய்ந்தென,
கொடியொடும் கொடி சுற்றக் கொடுத்த தண்டு
ஒடிய ஊன்றின, மும் மத ஓங்கலே.
ஊழி நாள் நெடுங் கால் என ஓடுவ,
பாழி ஆள் வயிரப் படி பல் முறை
பூழி ஆக்கின, பொன் நெடுந் தேர்களே.
இடித்த மா மதில் ஆடை இலங்கையாள்,
மடுத்த மாக் கடல் வாவும் திரை எலாம்
குடித்துக் கால்வன போன்ற, குதிரையே.
நாளும் நாளும் நடந்தன நள் இரா,
நீளம் எய்தி, ஒரு சிறை நின்றன,
மீளும் மாலையும் போன்றனர்-வீரரே.
முத்தி நாட்டின் முகட்டினை முற்றுற,
பித்தி பிற்பட, வன் திசை பேர்வுற,
தொத்தி, மீண்டிலவால்-நெடுந் தூளியே.
குரக்கு இனப் பெருந் தானை குலைந்து போய்,
அருக்கன் மா மகன், ஆர் அமர் ஆசையால்
செருக்கி நின்றவன், நின்றுழிச் சென்றவால்.
பாய்ந்த தானைப் பெருமையும், பார்த்து, உறக்
காய்ந்த நெஞ்சன், கனல் சொரி கண்ணினன்,
ஏய்ந்தது அங்கு ஒர் மராமரம் ஏந்தினான்.
தேர் முகத்தினில், சேவகர்மேல், செறுத்து,
ஓர் ஒருத்தர்க்கு ஒருவரின் உற்று, உயர்
தோரணத்து ஒருவன் எனத் தோன்றினான்.
ஒளிறு மா மணித் தேரும் உருட்டி, வெங்
குளிறு சோரி ஒழுக, கொதித்து, இடை
வெளிறு இலா மரமே கொண்டு, வீசினான்.
மன்னன் முன் புக, வன் கண் அரக்கரும்
முன் உழந்த முழங்கு பெருஞ் செருத்
தன்னில் வந்து, தலைமயக்குற்றனர்.
இற்று உலந்து முடிந்தவர் எண் இலர்;
வில் துரந்தன வெங் கணையால் உடல்
அற்று உலந்த குரங்கும் அனந்தமே.
மற்கடங்கள் வலிந்து மலைந்திட,
தற்கு அடங்கி உலந்தவர்தம் உயிர்
தெற்கு அடங்க நிறைந்து செறிந்தவால்.
ஆடுகின்ற, அறு குறை; ஆழ் கடற்கு
ஓடுகின்ற, உதிரம்; புகுந்து, உடல்
நாடுகின்றனர், கற்புடை நங்கைமார்.
யானை பட்ட அழி புனல் யாறு எலாம்
பானல் பட்ட; பல கணை மாரியின்
சோனை பட்டது; சொல்ல அரும் வானரச்
சேனை பட்டது; பட்டது, செம் புண்ணீர்.
தேய்ந்த ஆயுளர் ஆனவர் செம் புண்ணீர்
பாய்ந்த தானைப் படு களம் பாழ்படச்
சாய்ந்ததால், நிருதக் கடல்-தானையே.
வெங் கண் வாள் அரக்கன், விரை தேரினை,
கங்க சாலம் தொடரக் கடற் செலூஉம்
வங்கம் ஆம் என வந்து, எதிர் தாக்கினான்.
சிந்தி, வானரச் சேனை சிதைத்தலும்,
இந்திராதியரும் திகைத்து ஏங்கினார்;
நொந்து, சூரியன் கான்முனை நோக்கினான்.
வீக்கு தேரினின் மீது எழப் பாய்ந்து, தோள்
தூக்கு தூணியும் வில்லும் தொலைத்து, அவன்
யாக்கையும் சிதைத்துவிட்டு, எழுந்து ஏகினான்.
நிலை குலைந்து விழுதலின், நின்றுளார்
குலை குலைந்து கொடி நகர் நோக்கினார்;
அலை கிளர்ந்தென, வானரம் ஆர்த்தவே.
ஊழி ஆழி கிளர்ந்தென ஓங்கின,
கீழை வாயிலில் கிட்டலும், முட்டினர்,
சூழும் வானர வீரர் துவன்றியே.
வாலம், வாளி, மழையின் வழங்கியே,
ஆலம் அன்ன அரக்கர் அடர்த்தலும்,
காலும் வாலும் துமிந்த, கவிக் குலம்.
குன்றும் மா மரமும், கொடுங் காலனின்
சென்று வீழ, நிருதர்கள் சிந்தினார்;
பொன்றி வீழ்ந்த, புரவியும் பூட்கையும்.
கொண்டு, சீறி, நிருதர் கொதித்து எழ,
புண் திறந்து குருதி பொழிந்து உக,
மண்டி ஓடினர், வானர வீரரே.
விரிய நின்ற மராமரம் வேரொடும்
திரிய வாங்கி, நிருதர் வெஞ் சேனை போய்
நெரிய, ஊழி நெருப்பு என வீசினான்.
காரும், யாளியும், சீயமும், காண் தகு
பாரின் வீழப் புடைப்ப, பசும் புணின்
நீரும் வாரி அதனை நிறைத்ததே.
வெருக்கொண்டு ஓடிட, வெம் படக் காவலர்
நெருக்க, நேர்ந்து, கும்பானு நெடுஞ் சரம்
துரக்க, வானரச் சேனை துணிந்தவே.
எண் திசாமுகம் எண்ணும் இடும்பன், ஓர்
சண்டமாருதம் என்ன, தட வரை
கொண்டு சீறி, அவன் எதிர் குப்புறா,
எடுத்த குன்றை இடும்பன் எறிதலும்,
ஒடித்த வில்லும் இரதமும், ஒல்லெனப்
படுத்த, வாசியும் பதாகையும் பாழ்பட.
கார் இழிந்த உரும் எனக் காய்ந்து, எதிர்
பார் கிழிந்து உகப் பாய்ந்தனன்-வானவர்
போர் கிழிந்து புறம் தர, போர் செய்தான்.
குத்தி நின்ற கும்பானுவை, தான் எதிர்
மொத்தி நின்று, முடித் தலை கீழ் உற,
பத்தி வன் தடந் தோள் உறப் பற்றுவான்.
பிடித்துத் தோளை, பிறங்கலின் கோடு நேர்
முடித்தலத்தினைக் கவ்வுற மூளைகள்
வெடித்து வீழ்தர, வீழ்த்தினனாம் அரோ.
துன்பு அடைத்த மனத்தன், சுமாலி சேய்,
முன் படைத்த முகில் அன்ன காட்சியன்,
வன்பு அடைத்த வரி சிலை வாங்கினான்.
ஏங்க நாண் எறிந்திட்டு, இடையீடு இன்றி,
தூங்கு மாரி என, சுடர் வாளிகள்,
வீங்கு தோளினன், விட்டனனாம் அரோ.
வேறு வேறு படுதலின், வெம்பியே,
ஈறு இல் வானர மாப் படை எங்கணும்
பாற, நீலன் வெகுண்டு, எதிர் பார்ப்புறா,
சென்று எறிந்து, அவன் சேனை சிதைத்தலும்,
வென்றி வில்லின் விடு கணை மாரியால்,
ஒன்று நூறு உதிர்வுற்றது, அக் குன்றமே.
ஈட்டி, வானத்து இடி என எற்றலும்,
கோட்டும் வில்லும், கொடியும், வயப் பரி
பூட்டும் தேரும், பொடித் துகள் ஆயவே.
கார் இழிந்த உரும் எனக் காந்துவான்,
பார் இழிந்து, பரு வலித் தண்டொடும்,
ஊர் இழந்த கதிர் என, ஓடினான்.
போய் அடித்தலும், நீலன் புகைந்து, எதிர்
தாய் அடுத்து, அவன் தன் கையின் தண்டொடும்
மீ எடுத்து விசும்பு உற வீசினான்.
இம்பர் உற்று, எரியின் திரு மைந்தன்மேல்,
செம்புனல் பொழியக் கதை சேர்த்தினான்,
உம்பர் தத்தமது உள்ளம் நடுங்கவே.
எடுத்த தண்டைப் பறித்து எறியா, இகல்
முடித்தும் என்று, ஒரு கைக்கொடு மோதினான்,
குடித்து உமிழ்ந்தெனக் கக்கக் குருதியே.
நிருதன், நீலன் நெடு வரை மார்பினில்
கருதலாத முன் குத்தலும், கைத்து, அவர்
பொருத பூசல் புகல ஒண்ணாததே.
சுற்றி வால்கொடு, தோளினும், மார்பினும்,
நெற்றி மேலும், நெடுங் கரத்து எற்றலும்,
இற்று, மால் வரை என்ன, விழுந்தனன்.
அறிந்து, வானவர் ஆவலம் கொட்டினார்;
வெறிந்த செம் மயிர் வெள் எயிற்று ஆடவர்
முறிந்து, தம்தம் முது நகர் நோக்கினார்.
மல் குலாவு வயப் புயத்து அங்கதன்
நிற்கவே, எதிர் நின்றிலர் ஓடினார்,
பொன் குலாவு சுபாரிசன் பொன்றவே.
ஆற்றல் சால் துன்முகனும், அங்கு ஆர்த்து எழ,
மேல் திண் வாயிலில் மேவினர் வீடினார்,-
காற்றின் மா மகன் கை எனும் காலனால்.
துன்னு போர் கண்ட தூதுவர் ஓடினார்,
மன்ன! கேள் என, வந்து வணங்கினார்;
சென்னி தாழ்க்க, செவியிடைச் செப்பினார்;
குடக்கு வாயிலில் துன்முகக் குன்றமும்,
அடக்க அரும் வலத்து ஐம்பது வெள்ளமும்,
தென் திசைப் பெரு வாயிலில் சேர்ந்துழி,
பொன்றினான், அச் சுபாரிசன்; போயினார்
இன்று போன இடம் அறியோம் என்றார்.
ஊழி நாளினும் வெற்றி கொண்டு உற்ற நின்
ஆழி அன்ன அனீகத் தலைமகன்
பூழியான்; உயிர் புக்கது விண் என்றார்.
சென்று, சிந்தை புகுதலும், சீற்றத் தீ
கன்று கண்ணின்வழிச் சுடர் கான்றிட,
நின்று நின்று, நெடிது உயிர்த்தான் அரோ.
இறுத்துக் கூறும் என்றான்; இசை எங்கணும்
நிறுத்தும் நீலன், நெடும் பெருஞ் சேனையை
ஒறுத்து, மற்று அவனோடும் வந்து உற்றனன்;
கற்ற போர்கள் எலாம் செய்த காலையில்,
நெற்றிமேல், மற்று அந் நீலன் நெடுங் கையால்
எற்ற, வீந்தனன் என்ன இயம்பினார்.
நல் நகர்க்கு வந்தோம், ஐய! நாங்களே
என்ன என்ன, எயிற்று, இகல் வாய்களைத்
தின்னத் தின்ன, எரிந்தன திக்கு எலாம்.
ஓட நோக்கி, உயர் படையான் மற்று அக்
கோடு கொண்டு பொருத குரங்கினால்
வீடினான்! என்று, மீட்டும் விளம்பினான்:
பட்டது, இங்கு ஒர் குரங்கு படுக்க" என்று
இட்ட வெஞ் சொல் எரியினில், என் செவி
சுட்டது; என்னுடை நெஞ்சையும் சுட்டதால்;
பொருப்பை ஒப்பவன் தான் இன்று பொன்றினான்;
அருப்பம் என்று பகையையும், ஆர் அழல்
நெருப்பையும், இகழ்ந்தால், அது நீதியோ?
வற்கம் ஆயின மாப் படையோடும் சென்று,
ஒற்கம் வந்து உதவாமல் உறுக! என,
விற் கொள் வெம் படை வீரரை ஏவியே,
கண்டு நின்று, கயிலை இடந்தவன்,
புண் திறந்தன கண்ணினன், பொங்கினான்,
திண் திறல் நெடுந் தேர் தெரிந்து ஏறினான்-
ஆயிரம் பரி பூண்டது; அதிர் குரல்
மா இருங் கடல் போன்றது; வானவர்
தேயம் எங்கும் திரிந்தது; திண் திறல்
சாய, இந்திரனே பண்டு தந்தது.
ஆற்றினான், தன் அடு சிலை; அன்னதின்
மாற்றம் என் நெடு நாண் ஒலி வைத்தலும்,
கூற்றினாரையும் ஆர் உயிர் கொண்டதே.
இற்றிலாதன, எண்ணும் இலாதன,
பற்றினான்; கவசம் படர் மார்பிடைச்
சுற்றினான்; நெடுந் தும்பையும் சூடினான்.
நீரும் நீர் நுரையும் என நின்றவன்,
ஊரும் வெண்மை உவா மதிக் கீழ் உயர்
காரும் ஒத்தனன், முத்தின் கவிகையான்.
சீர்த்த சங்கக் கடல் உக, தேவர்கள்
வேர்த்து அசங்கிட, அண்டம் வெடித்திட,
ஆர்த்த சங்கம், அறைந்த, முரசமே.
மூரி வல் நெடுந் தானையில் முற்றினான்;
நீர் ஒர் ஏழும் முடிவில் நெருக்கும் நாள்,
மேரு மால் வரை என்ன, விளங்கினான்,
சூழ் இருந் திசைகளைத் தொடரும் தொல் கொடி,
வாழிய உலகு எலாம் வளைத்து வாய் இடும்
ஊழியின் அந்தகன் நாவின், ஓங்கவே;
அரவு இயல் தறுகண் வன் தாள் ஆள் விழ, ஆள்மேல் வீழ்ந்த
புரவிமேல் பூட்கை வீழ்ந்த; பூட்கைமேல் பொலன் தேர் வீழ்ந்த,
நிரவிய தேரின் மேன்மேல் நெடுந் தலை கிடந்த; நெய்த்தோர்
விரவிய களத்துள் எங்கும் வெள்ளிடை அரிது, வீழ.
கடுப்பின்கண், அமரரேயும், கார்முகத்து அம்பு கையால்
தொடுக்கின்றான், துரக்கின்றான் என்று உணர்ந்திலர்; துரந்த வாளி
இடுக்கு ஒன்றும் காணார்; காண்பது, எய்த கோல் நொய்தின் எய்திப்
படுக்கின்ற பிணத்தின் பம்மல் குப்பையின் பரப்பே; பல் கால்.
கொற்ற வாள், கொலை வேல், சூலம், கொடுஞ் சிலை முதல ஆய
வெற்றி வெம் படைகள் யாவும் வெந் தொழில் அரக்கர் மேற்கொண்டு,
உற்றன, கூற்றும் அஞ்ச ஒளிர்வன, ஒன்று நூறு ஆய்
அற்றன அன்றி, ஒன்றும் அறாதன இல்லை அன்றே.
குன்று அன யானை, மானக் குரகதம், கொடித்தேர், கோப
வன் திறல் ஆளி, சீயம் மற்றைய பிறவும், முற்றும்
சென்றன எல்லை இல்லை; திரிந்தில; சிறிது போதும்
நின்றன இல்லை; எல்லாம் கிடந்தன, நெளிந்து, பார்மேல்.
சாய்ந்தது நிருதர் தானை; தமர் தலை இடறித் தள்ளுற்று
ஓய்ந்தது; ஒழிந்தது ஓடி உலந்ததும் ஆக, அன்றே
வேய்ந்தது வாகை, வீரற்கு இளையவன் வரி வில்; வெம்பிக்
காய்ந்தது, அவ் இலங்கை வேந்தன் மனம் எனும் காலச் செந் தீ.
காற்று உறழ் கலின மான் தேர் கடிதினின் கடாவி, கண்ணுற்று
ஏற்றனன், இலங்கை வேந்தன்; எரி விழித்து, இராமன் தம்பி,
கூற்று மால் கொண்டது என்னக் கொல்கின்றான், குறுகச் சென்றான்;
சீற்றமும் தானும் நின்றான்; பெயர்ந்திலன், சிறிதும் பாதம்.
காக்கின்ற என் நெடுங் காவலின் வலி நீக்கிய கள்வா!
போக்கு இன்று உனக்கு அரிதுஆல் எனப் புகன்றான்; புகை உயிர்ப்பான்,
கோக்கின்றன, தொடுக்கின்றன, கொலை அம்புகள், தலையோடு
ஈர்க்கின்றன, கனல் ஒப்பன, எய்தான்; இகல் செய்தான்.
எய்தான் சரம் எய்தாவகை இற்றீக என, இடையே,
வைதாலென ஐதாயின வடி வாளியின் அறுத்தான்;
ஐது ஆதலின் அறுத்தாய்; இனி, அறுப்பாய்! என, அழி கார்
பெய்தாலெனச் சர மாரிகள் சொரிந்தான், துயில் பிரிந்தான்.
ஆம் குஞ்சரம் அனையான் விடும் அயில் வாளிகள் அவைதாம்
வீங்கும் சரம் பருவத்து இழி மழை போல்வன விலக்கா,
தூங்குஞ் சர நெடும் புட்டிலின், சுடர் வேலவற்கு இளையான்,
வாங்குஞ் சரம் வாங்காவகை அறுத்தான், அறம் மறுத்தான்.
அயர்வு நீங்கிய அனுமனின் வீரவுரை
அப்போதையின் அயர்வு ஆறிய அனுமான், அழல் விழியா,
பொய்ப் போர் சில புரியேல், இனி என வந்து, இடை புகுந்தான்,
கைப் போதகம் என, முந்து, அவன் கடுந் தேர் எதிர் நடந்தான்,
இப் போர் ஒழி; பின் போர் உள; இவை கேள் என இசைத்தான்:
வென்றாய் உலகு ஒரு மூன்றையும், மெலியா நெடு வலியால்;
தின்றாய் செறி கழல் இந்திரன் இசையை; திசை திரித்தாய்;
என்றாலும், இன்று அழிவு உன்வயின் எய்தும் என இசையா,
நின்றான் அவன் எதிரே, உலகு அளந்தான் என நிமிர்ந்தான்.
எடுத்தான் வலத் தடக் கையினை; இது போய், உலகு எல்லாம்
அடுத்தான் குறள் அளந்தான் திருவடியின் வரவு அன்னான்,
மடுத்து ஆங்கு உற வளர்ந்தாலென வளர்க்கின்றவன் உருவம்
கடுத்தான் என, கொடியாற்கு எதிர், காண்பாய் எனக் காட்டா.
வில் ஆயுதம் முதல் ஆகிய வய வெம் படை மிடலோடு
எல்லாம் இடை பயின்றாய்; புயம் நால்-ஐந்தினொடு இயைந்தாய்;
வல்லாய்; செரு வலியாய்; திறல் மறவோய்! இதன் எதிரே
நில்லாய் என நிகழ்த்தா, நெடு நெருப்பு ஆம் என உயிர்ப்பான்.
நீள் ஆண்மையினுடனே எதிர் நின்றாய்; இஃது ஒன்றோ?
வாள் ஆண்மையும், உலகு ஏழினொடு உடனே உடை வலியும்,
தாளாண்மையும், நிகர் ஆரும் இல் தனி ஆண்மையும், இனி நின்
தோளாண்மையும், இசையோடு உடன் துடைப்பேன், ஒரு புடைப்பால்;
பரக்கப் பல உரைத்து என்? படர் கயிலைப் பெரு வரைக்கும்,
அரக்குற்று எரி பொறிக் கண் திசைக் கரிக்கும், சிறிது அனுங்கா
உரக் குப்பையின் உயர் தோள் பல உடையாய்! உரன் உடையாய்!
குரக்குத் தனிக் கரத்தின் புடைப் பொறை ஆற்றுவை கொல்லாம்?
என் தோள் வலி அதனால் எடுத்து யான் எற்றவும், இறவா-
நின்றாய் எனின், நீ பின் எனை, நின் கைத் தல நிரையால்,-
குன்றே புரை தோளாய்!-மிடல்கொடு குத்துதி; குத்தப்
பொன்றேன் எனின், நின்னோடு எதிர் பொருகின்றிலென் என்றான்.
இராவணன் விடை மொழிதல்
காரின் கரியவன், மாருதி கழற, கடிது உகவா,
வீரற்கு உரியது சொற்றனை;-விறலோய்!-ஒரு தனியேன்
நேர் நிற்பவர் உளரோ, பிறர் நீ அல்லவர்? இனி நின்
பேருக்கு உலகு அளவே; இனி உளவோ பிற? என்றான்.
ஒன்று ஆயுதம் உடையாய் அலை; ஒரு நீ எனது உறவும்
கொன்றாய்; உயர் தேர்மேல் நிமிர் கொடு வெஞ் சிலை கோலி,
வன் தானையினுடன் வந்த என் எதிர் வந்து, நின் வலியால்
நின்றாயொடு நின்றார் இனி நிகரோ? உரை, நெடியோய்!
முத் தேவர்கள் முதலாயினர்; முழு மூன்று உலகிடையே
எத் தேவர்கள், எத் தானவர், எதிர்வார் இகல், என் நேர்,
பித்து ஏறினர் அல்லால்? இடை பேராது, எதிர், "மார்பில்
குத்தே" என நின்றாய்; இது கூறும் தரம் அன்றால்.
பொரு கைத்தலம் இருபத்துள; புகழும் பெரிது உளதால்;
வரு கைத்தல மத வெங் கரி வலி கெட்டென வருவாய்!
இரு கைத்தலம் உடையாய்; எதிர் இவை சொற்றனை; இனிமேல்,
தருகைக்கு உரியது ஒர் கொற்றம் என்? அமர் தக்கதும் அன்றால்.
திசை அத்தனையையும் வென்றது சிதைய, புகழ் தெறும் அவ்
வசை மற்று இனி உளதே? எனது உயிர்போல் வரும் மகனை
அசையத் தரை அரைவித்தனை; அழி செம் புனல் அதுவோ
பசையற்றிலது; ஒரு நீ, எனது எதிர் நின்று, இவை பகர்வாய்.
பூணித்து இவை உரைசெய்தனை; அதனால், உரை பொதுவே;
பாணித்தது; பிறிது என் சில பகர்கின்றது? பழியால்
நாணித் தலை இடுகின்றிலென்; நனி வந்து, உலகு எவையும்
காண, கடிது எதிர் குத்துதி என்றான், வினை கடியான்.
அனுமன் இராவணனைக் குத்துதலும் அதன் விளைவும்
வீரத் திறம் இது நன்று! என வியவா, மிக விளியா,
தேரின் கடிது இவரா, முழு விழியின், பொறி சிதறா,
ஆரத்தொடு கவசத்து உடல் பொடி பட்டு உக, அவன் மா
மார்பில் கடிது எதிர் குத்தினன், வயிரக் கரம் அதனால்.
அயிர் உக்கன, நெடு மால் வரை; அனல் உக்கன, விழிகள்;
தயிர் உக்கன, முழு மூளைகள்; தலை உக்கன; தரியா
உயிர் உக்கன, நிருதக் குலம்; உயர் வானரம் எவையும்,
மயிர் உக்கன, எயிறு உக்கன; மழை உக்கன, வானம்.
வில் சிந்தின நெடு நாண்; நிமிர் கரை சிந்தின, விரி நீர்;
கல் சிந்தின, குல மால் வரை; கதிர் சிந்தின, சுடரும்;
பல் சிந்தின, மத யானைகள்; படை சிந்தினர், எவரும்;
எல் சிந்திய எரி சிந்தின, இகலோன் மணி அகலம்.
கைக் குத்து அது படலும், கழல் நிருதர்க்கு இறை கறை நீர்
மைக் குப்பையின் எழில் கொண்டு ஒளிர் வயிரத் தடமார்பில்
திக்கில் சின மத யானைகள் வய வெம் பணை செருவில்
புக்கு இற்றன, போகாதன, புறம் உக்கன, புகழின்.
அள் ஆடிய கவசத்து அவிர் மணி அற்றன, திசை போய்
விள்ளா நெடு முழு மீன் என; விழி வெம் பொறி எழ நின்று,
உள் ஆடிய நெடுங் கால் பொர ஒடுங்கா, உலகு உலைய,
தள்ளாடிய வட மேருவின் சலித்தான், அறம் வலித்தான்.
ஆர்த்தார், விசும்பு உறைவோர்; நெடிது அனுமான்மிசை அதிகம்
தூர்த்தார், நறு முழு மென் மலர்; இசை ஆசிகள் சொன்னார்;
வேர்த்தார் நிருதர்கள்; வானரர் வியந்தார், இவன் விசயம்
தீர்த்தான் என உவந்து ஆடினர், முழு மெய்ம்மயிர் சிலிர்த்தார்.
இராவணன்-அனுமன் உரையாடல்
கற்று, அங்கியின் நெடு வாயுவின் நிலை கண்டவர், கதியால்
மற்று அங்கு ஒரு வடிவு உற்று, அது மாறாடுறு காலை,
பற்று அங்கு அருமையின், அன்னது பயில்கின்றது ஒர் செயலால்,
உற்று அங்கு அது புறம் போய், உடல் புகுந்தால் என உணர்ந்தான்.
உணரா, நெடிது உயிரா, உரை உதவா, எரி உமிழா,
இணை ஆரும் இல் அவன் நேர் வரவு எய்தா, வலி செய்தாய்!
அணையாய்; இனி, எனது ஊழ் என அடரா, எதிர் படரா,
பணை ஆர் புயம் உடையானிடை, சில இம் மொழி பகர்வான்:
வலி என்பதும் உளதே? அது நின் பாலது; மறவோய்!
அலி என்பவர், புறம் நின்றவர்; உலகு ஏழினும் அடைத்தாய்;
சலி என்று எதிர் மலரோன் உரைதந்தால், இறை சலியேன்;
மெலிவு என்பதும் உணர்ந்தேன்; எனை வென்றாய், இனி, விறலோய்!
ஒன்று உண்டு இனி உரை நேர்குவது; உன் மார்பின், என் ஒரு கை,
குன்றின்மிசை கடை நாள் விழும் உரும் ஏறு எனக் குத்த,
நின்று, உன் நிலை தருவாய் எனின், நின் நேர் பிறர் உளரோ?
இன்றும் உளை; என்றும் உளை; இலை, ஓர் பகை என்றான்.
இராவணனைப் புகழ்ந்து அனுமன் தன் மார்பு காட்டுதல்
என்றான் எதிர் சென்றான், இகல் அடு மாருதி; எனை நீ
வென்றாய் அலையோ? உன் உயிர் வீடாது, உரை செய்தாய்;
நன்றாக நின் நிலை நன்று என நல்கா, எதிர் நடவா,
குன்று ஆகிய திரள் தோளவன், கடன் கொள்க எனக் கொடுத்தான்.
இராவணன் குத்த அனுமன் சலித்தல்
உறுக்கி, தனி எதிர் நின்றவன் உரத்தில், தனது ஒளிர் பல்
இறுக்கி, பல நெடு வாய் மடித்து, எரி கண்தொறும் இழிய
முறுக்கிப் பொதி நிமிர் பல் விரல் நெரிய, திசை முரியக்
குறுக்கிக் கரம், நெடுந் தோள் புறம் நிமிரக் கொடு குத்த,
பள்ளக் கடல் கொள்ளப் படர் படி பேரினும் பதையா
வள்ளல், பெரு வெள்ளத்து எறுழ் வலியாரினும் வலியான்,
கள்ளக் கறை உள்ளத்து அதிர் கழல் வெய்யவன் கரத்தால்
தள்ள, தளர் வெள்ளிப் பெருங் கிரி ஆம் எனச் சலித்தான்.
சலித்த காலையின், இமையவர் உலகு எலாம்சலித்த;
சலித்ததால் அறம்; சலித்தது, மெய்ம் மொழி; தகவும்
சலித்தது; அன்றியும், புகழொடு சுருதியும் சலித்த;
சலித்த நீதியும்; சலித்தன கருணையும் தவமும்.
வானரத் தலைவர் இராவணனுடன் மோதல்
அனைய காலையின், அரிக் குலத் தலைவர், அவ் வழியோர்
எனையர் அன்னவர் யாவரும், ஒரு குவடு ஏந்தி,
நினைவின் முன் நெடு விசும்பு ஒரு வெளி இன்றி நெருங்க,
வினை இது என்று அறிந்து, இராவணன்மேல் செல விட்டார்.
ஒத்த கையினர், ஊழியின் இறுதியின் உலகை
மெத்த மீது எழு மேகத்தின் விசும்பு எலாம் மிடைய,
பத்து நூறு கோடிக்கு மேல் பனி படு சிகரம்,
எத்த, மேல் செல எறிந்தனர்; பிறிந்தனர், இமையோர்.
தருக்கி வீசிட, விசும்பு இடம் இன்மையின், தம்மின்
நெருக்குகின்றன, நின்றன, சென்றில, நிறைந்த;
அருக்கனும் மறைந்தான்; இருள் விழுங்கியது, அண்டம்;
சுருக்கம் உற்றனர், அரக்கர் என்று, இமையவர் சூழ்ந்தார்.
ஒன்றின் ஒன்று பட்டு உடைவன, இடித்து உரும் அதிரச்
சென்ற வன் பொறி மின் பல செறிந்திட, தெய்வ
வென்றி வில் என விழு நிழல் விரிந்திட, மேன்மேல்
கன்றி ஓடிட, கல்-மழை நிகர்த்தன-கற்கள்.
இரிந்து நீங்கியது இராக்கதப் பெரும் படை; எங்கும்
விரிந்து சிந்தின, வானத்து மீனொடு விமானம்;
சொரிந்த வெம் பொறி பட, கடல் சுவறின; தோற்றம்
கரிந்த கண்டகர் கண்-மணி; என் பல கழறி?
இறுத்தது இன்று உலகு என்பது ஓர் திமிலம் வந்து எய்த,
கறுத்த சிந்தையன் இராவணன் அனையது கண்டான்;
ஒறுத்து, வானவர் புகழுண்ட பார வில், உளைய
அறுத்து நீக்கினன், ஆயிர கோடி மேல் அம்பால்.
காம்பு எலாம் கடுந் துகள் பட, களிறு எலாம் துணிய,
பாம்பு எலாம் பட, யாளியும் உழுவையும் பாற,
கூம்பல் மா மரம் எரிந்து உக, குறுந் துகள் நுறுங்க,
சாம்பர் ஆயின, தட வரை-சுடு கணை தடிய.
உற்றவாறு! என்றும், ஒன்று நூறு ஆயிரம் உருவா
இற்றவாறு! என்றும், இடிப்புண்டு பொடிப் பொடி ஆகி
அற்றவாறு! என்றும், அரக்கனை, அடு சிலை கொடியோன்
கற்றவாறு! என்றும்-வானவர் கைத்தலம் குலைந்தார்.
அடல் துடைத்தும் என்று அரிக் குல வீரர் அன்று எறிந்த
திடல் துடைத்தன, தசமுகன் சரம்; அவை திசை சூழ்
கடல் துடைத்தன; களத்தின் நின்று உயர்தரும் பூழி
உடல் துடைத்தன; உதிரமும் துடைத்தது, ஒண் புடவி.
வானரர் நிலைகுலைதல்
கொல்வென், இக் கணமே மற்று இவ் வானரக் குழுவை;
வெல்வென், மானிடர் இருவரை எனச் சினம் வீங்க,
வல் வன் வார் சிலை பத்து உடன் இடக் கையின் வாங்கி,
தொல் வன் மாரியின் தொடர்வன சுடு சரம் துரந்தான்.
அய்-இரண்டு கார்முகத்தினும், ஆயிரம் பகழி,
கய்கள் ஈர்-ஐந்தினாலும், வெங் கடுப்பினில் தொடுத்துற்று
எய்ய, எஞ்சின, வானமும் இரு நில வரைப்பும்;
மொய் கொள் வேலையும் திசைகளும் சரங்களாய் முடிந்த.
அந்தி வானகம் ஒத்தது, அவ் அமர்க் களம்; உதிரம்
சிந்தி, வேலையும் திசைகளும் நிறைந்தன; சரத்தால்
பந்தி பந்தியாய் மடிந்தது, வானரப் பகுதி;
வந்து மேகங்கள் படிந்தன, பிணப் பெரு மலைமேல்.
நீலன் அம்பொடு சென்றிலன்; நின்றிலன், அனிலன்;
காலனார் வயத்து அடைந்திலன், ஏவுண்ட கவயன்;
ஆலம் அன்னது ஓர் சரத்தொடும் அங்கதன் அயர்ந்தான்;
சூலம் அன்னது ஓர் வாளியால் சோம்பினன், சாம்பன்.
வானரர் நிலைகண்டு இலக்குவன் வெகுண்டு போர் புரிதல்
மற்றும் வீரர்தம் மருமத்தின் அயில் அம்பு மடுப்ப,
கொற்ற வீரமும் ஆண்தொழில் செய்கையும் குறைந்தார்;
சுற்றும் வானரப் பெருங் கடல் தொலைந்தது; தொலையாது
உற்று நின்றவர் ஓடினர்; இலக்குவன் உருத்தான்.
அறத்தினால் அன்றி, அமரர்க்கும் அருஞ் சமம் கடத்தல்
மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி;
பறத்தி, நின் நெடும் பதி புகக் கிளையொடும்; பாவி!
இறத்தி; யான் அது நினைக்கிலென், தனிமை கண்டு இரங்கி.
உடைப் பெருங் குலத்தினரொடும், உறவொடும், உதவும்
படைக்கலங்களும், மற்றும் நீ தேடிய பலவும்,
அடைத்து வைத்தன திறந்துகொண்டு ஆற்றுதி ஆயின்,
கிடைத்தி; அல்லையேல், ஒளித்தியால்; சிறு தொழில் கீழோய்!
சிறையில் வைத்தவள் தன்னை விட்டு, உலகினில் தேவர்
முறையில் வைத்து, நின் தம்பியை இராக்கதர் முதல் பேர்
இறையில் வைத்து, அவற்கு ஏவல் செய்து இருத்தியேல், இன்னும்,
தறையில் வைக்கிலென், நின் தலை வாளியின் தடிந்து.
அல்லையாம் எனின், ஆர் அமர் ஏற்று நின்று ஆற்ற
வல்லையாம் எனின், உனக்கு உள வலி எலாம் கொண்டு,
"நில், ஐயா!" என நேர் நின்று பொன்றுதி எனினும்,
நல்லை ஆகுதி; "பிழைப்பு இனி உண்டு" என நயவேல்.
ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா என நல்கினன் -நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.
ஆதி நாயகன் அங்கு அது கூறு முன்;
பாத மீது பணிந்து, அருள் பற்றியே,
காது வெம் படைக் காவலர் ஆதியோர்
மோது போரை முயலுதல் மேயினார்.
அந்த வேலை, அரக்கர் அழன்று கண்,
சிந்து தீயில் திசை எரி சேர்த்தவன்
முந்து உரைத்த முறைமையின் முந்துற
வந்து எதிர்த்தனர், வாயில்கள் தோறுமே.
அன்ன போது அங்கு அரக்கர் பிரான் படை
உன்னும் ஆயிர வெள்ளம் உடன்று எழா,
கன்னி மா மதிலின் புறம் காத்து, உடன்
முன்னி வெஞ் சமர் மூண்டு எழுந்துற்றதே.
ஆனை பட்ட; அடு பரி பட்டன;
தானை பட்ட, தார் இரதம்; கணை
சோனைபட்டது; துன் அரும் வானரச்
சேனை பட்டது; பட்டது செங்களம்.
சூர்த்த நோக்குடைச் சூரனும், துற்கனும்,
கூர்த்த வெங் கதிர்க் கோபனொடு ஆதியாய்,
வேர்த்து, அரக்கர் வியன் படை வீசினார்.
போர் செய் காலை, இடும்பனும் பொங்கி, அக்
கார் செய் மேனி அரக்கனைக் கைகளால்
மேரு மீது இடி வீழ்ந்தெனத் தாக்கலும்;
சோர்வு இலாத அரக்கனும் துள்ளினான்.
வரு சுமாலி மகன் பிரகத்தன் அங்கு
இரதம் ஒன்றதின் ஏறினன்; பின்னரும்
வரி நெடுஞ் சிலை வேறு ஒன்று வாங்கியே,
சொரியும் மா மழைபோல், சரம் தூவினான்.
வால் அறுந்து, வயிறு துணிந்து, இரு
கால் அறுந்து, கழுத்து அறுந்து, அங்கம் ஆம்
மேல் அறுந்து விளிந்தன-வெஞ் சமர்
ஆலும் வானரச் சேனை அனேகமே
நீலன் நெஞ்சிடை அஞ்சு நெடுஞ் சரம்
ஆலம் அன்ன அரக்கன் அழுத்தலும்,
சால நொந்தனன்; நொந்து, தருக்கு அறா,
கால வெங் கனல்போல் கனன்றான் அரோ.
கனலும் வெங் கண் அரக்கன், கடுஞ் சிலை
புனையும் தேர் பரி பாகொடு போய் அற,
நினைவதற்குமுன் நீலன் அங்கு ஓர் நெடுந்
தனி மராமரம் தான் கொண்டு, தாக்கினான்.
நிருதர் தானை உடைந்தது; நேர்கிலாத்
தரும கோபன், சதமகன், சண்டியோடு
எரிமுகன் இவர் ஆதி இராக்கதர்
செருவின், வெற்றி திகழ, வந்து எய்தினார்.
ஏவி, மற்று அயல் நின்ற அரக்கரை,
தா இல் என் ஒரு தேரினைத் தம் எனக்
கூவ, மற்று அவர் கொண்டு உடன் நண்ணினார்,
தேவர் ஆதியர் நெஞ்சம் திடுக்கென.
ஆய்வு அருஞ் சத கோடி அடல் பரி
மாய்வு அருந் திரைபோல் வரப் பூண்டது;
தேயம் எங்கும் திரிந்தது; திண் திறல்
சாய, இந்திரனே பண்டு தந்தது.
ஏறினான் இடத் தோள் துடித்தே; அறக்
கூறினான், குரங்கொடு மனிதரை
நீறது ஆக்குவென் என்று, நெருப்பு எழச்
சீறினான், சிவன் போல அத் தேரின் மேல்
அண்ட கோடி அகிலமும் இன்றொடே
விண்டு நீங்குறும் என்று உயர் விண்ணவர்
கொண்ட ஆகுலத்தால், மனம் கூசியே,
புண்டரீகன் பதியிடைப் போயினார்.
வெள்ளம் ஆங்கு அளப்பில; வெள்ளம், வாம் பரி;
கொள்ளை யார் அதன் கணக்கு அறிந்து கூறுவார்?
உள்ளம் ஆய்ந்து ஓது இரு நூறு வெள்ளம் ஆம்
கள்ள வாள் அரக்கர்கள் கடலின் சூழவே.
நிருதர்கள் எவருமே நோக்கி நின்று போர்
பொருதனர், அயில் முதல் படைகள் போக்கியே;
மரமொடு மலைகளைப் பிடுங்கி, வானரர்
செருவிடைத் தீயவர் சிதறத் தாக்கினார்.
அண்ட கோளகை வெடித்து, அவனி கீண்டுற,
எண் திசாமுகங்களும் இடிய, ஈசனைக்
கொண்ட வான் கயிலையும் சிகர கோடிகள்
விண்டு நீங்கியதுஎனில், விளம்ப வேண்டுமோ?
வச்சிர வரைப் புயத்து அரக்கன் வாங்கிய
கைச் சிலை நாண் ஒலி கலந்த காலையில்,
அச்சம் இல் புரந்தரன் ஆதி தேவர்கள்,
உச்சிகள் பொதிர் எறிந்து, உரம் மடங்கினார்.
இப் புறத்து உயிர்கள் எல்லாம் இரிந்திட, அரக்கர் கோமான்
கைப் படு சிலையை வாங்கி, கால மா மழையும் எஞ்ச,
முப் புறத்து உலகம் எல்லாம் மூடியது என்ன, மூளும்
அப்பு மா மாரி சிந்தி, அண்டமும் பிளக்க ஆர்த்தான்.
ஆர்த்தவன் பகழி மாரி சொரிந்து, அரிச் சேனை எல்லாம்
தீர்த்து, ஒரு கணத்தில் போக்க, செங் கதிர்ச் சிறுவன் தானும்
பார்த்து, உளம் அழன்று பொங்கி, பரு வலி அரக்கனோடும்
போர்த் தொழிற்கு ஒருவன் போலப் பொருப்பு ஒன்று ஆங்கு ஏந்திப் புக்கான்.
அலக்கணுற்று அனுமன் சோர, அங்கதன் முதலாம் வீரர்
மலைக்குற மரங்கள் வாங்கி வருதல் கண்டு, அரக்கன், வாளி
சிலைக்கிடை தொடுத்து, அங்கு ஏந்து மா மலை சிதைத்திட்டு, அன்னோர்
கலக்கமுற்று இரிய, ஒவ்வோர் பகழியின் காய்ந்து கொல்வான்.
நகைத்து, இது புரிந்தான்கொல்லோ? என்பதன் முன்பு, நாண்வாய்த்
துகைத்து ஒலி ஒடுங்காமுன்னம், சோனை அம் புயலும் எஞ்ச,
மிகைப் படு சரத்தின் மாரி வீரனுக்கு இளையோன் மேவும்
பகைப் புலத்து அரக்கன் சேனைப் பரவை மேல் பொழிவதானான்.
எரி முகப் பகழி மாரி இலக்குவன் சிலையின் கோலிச்
சொரிதர, களிறு, பொன் தேர், துரங்கமோடு இசைந்த காலாள்
நிருதர்கள் அளப்பு இல் கோடி நெடும் படைத் தலைவர், வல்லே
பொரு களமீதில் சிந்திப் பொன்றினர் என்ப மன்னோ.
எதிர் வரும் அரக்கர் கோமான் இலக்குவன் தன்னை நோக்கி,
மதியிலி! மனிதன் நீயும் வாள் அமர்க்கு ஒருவன் போலாம்!
இது பொழுது என் கை வாளிக்கு இரை என நகைத்தான்; வீரன்
முதிர்தரு கோபம் மூள, மொழிந்து அமர் முடுக்கலுற்றான்.
அரக்கன் மனம் கொதித்து, ஆண்தகை அமலன் தனக்கு இளையோன்
துரக்கும் பல விசிகம் துகள்பட நூறினன்; அது கண்டு,
அருக்கன் குல மருமான், அழி காலத்திடை எழு கார்
நெருக்கும்படி, சர தாரையின் நெடு மா மழை சொரிந்தான்.
மாயத்து உரு எடுத்து, என் எதிர் மதியாது, இது பெரிது என்றே
இத் தரை நின்றாய்; எனது அடல் வாரி சிலையிடையே
தீ ஒத்து எரி பகழிக்கு இரை செய்வேன் இது பொறுத்தேன்;
ஞாயத்தொடும் ஒரு குத்து அமர் புரிதற்கு எதிர் வரும் நீ.
கல் தங்கிய முழுமார்பிடைக் கவியின் கரம் அதனால்
உற்று ஒன்றிய குத்தின வலி அதனால் உடல் உளைவான்,
பற்று இன்றிய ஒரு மால் வரை அனையான், ஒரு படியால்
மல் தங்கு உடல் பெற்று ஆர் உயிர் வந்தாலென உய்ந்தான்.
கொதித்து ஆங்கு அடல் அரக்கன் கொடுங் கரம் ஒன்றதின் வலியால்
மதித்தான் நெடு வய மாருதி மார்பத்திடை வர, மேல்
புதைத்து ஆங்குறும் இடிஏறு எனப் பொறி சிந்திய புவனம்;
விதித்தான் முதல் இமையோர் உளம் வெள்கும்படி விட்டான்.
உருத்து, வெஞ் சினத்து அரக்கன் அங்கு ஒரு கையின் புடைப்ப,
வரைத் தடம் புய மாருதி மயங்கியது அறிந்து, ஆங்கு
இரைத்த திண் பரித் தேர்நின்றும் இரு நிலத்து இழியச்
சரித்து, வானரம் மடிந்திட, சர மழை பொழிந்தான்.
உருத்து இலக்குவன் ஒரு கணத்து அவன் எதிர் ஊன்றிக்
கரத்தின் வெஞ் சிலை வளைக்குமுன், கடுஞ் சினத்து அரக்கன்
சிரித்து, வெம் பொறி கதுவிட, திசைமுகம் அடையப்
பொருத்தி, வெஞ் சரம் பொழிந்து, இவை விலக்கு எனப் புகன்றான்.
பண்டை நாள் தரு பனித் திரைப் புனல் சடை ஏற்றுக்
கொண்ட தூயவன், கொடுந் தொழில் நிருதர்கள் குழுமி
மண்டு வாள் அமர்க் களத்தில், அம் மலர்க் கழல் சேறல்
கண்டு, கூசலன் நிற்கும் என்றால், அது கடனே?
அனைய கண்டு, இகல் அரக்கருக்கு, இறைவன், அப் பொழுதில்,
மனம் நெருப்பு எழக் கொதித்து, ஒரு மனிதன் என் வலியை
நினையகிற்றிலன்; நெடுஞ் சமர் என்னொடும் துணிந்த
வினையம் இன்றொடும் போக்குவென் என விழி சிவந்தான்.
அடுக்கி நின்றிடு பகிரண்டப் பரப்பு எலாம் அதிர,
துடிக்கும் நெஞ்சகத்து இமையவர் துளங்குற, கூற்றும்
நடுக்கம் உற்றிட, நல் அறம் ஏங்கிட, கயிலை
எடுக்கும் திண் திறல் அரக்கனும் சிலையை நாண் எறிந்தான்.
எறிந்து அடல் சிலை வளைத்து, ஒரு கணத்திடை, எரியின்
நிறம் தகும் பல நெடுஞ் சுடர்ப் பகழிகள், நெறியின்
அறிந்திடற்கு அரிது ஆகிய அளப்பு இல் பல் கோடி
செறிந்திட, திசை வானகம் வெளி இன்றிச் செறித்தான்.
ஐயன் நோக்கினன், நன்று! என நகைத்து, அவன் சிலைவாய்
எய்த வெஞ் சரம் பொடிபட, யாவையும் முருக்கி,
வெய்தின் அங்கு அவன்மேற் செல, எழு கணை விடுத்தான்;
கைதவன், கணை ஏழு கொண்டு, அக் கணை கடிந்தான்.
எய்து வெள்ளம் நூற்று-இரண்டு எனத் திரண்ட கால் வயவர்,
மொய் கொள் சேனை அம் தலைவர்கள், முரண் கரி, பரி, தேர்,
வெய்ய வீரர்கள், அளப்பிலர் கோடியர், விறல் சேர்
ஐயன் வெஞ் சரம் அறுத்திட, அனைவரும் அவிந்தார்.
அறுத்த வில் இழந்து அழியுமுன், ஐ-இரு கரத்தும்
பொறுத்து வெஞ் சிலை, நாண் ஒலி புடைத்து, அடற் பகழி
நிறுத்தி வீசினன்-நெடுந் திசை விசும்பொடு நிமிரக்
கறுத்த வான் முகில் கல் மழை பொழிதரும் கடுப்பின்.
நிரைக்கும் ஐ-இரு சிலையிடைச் சர மழை நிருதன்
துரக்க, மாருதி, உடல் உறு குருதிகள் சொரிந்த;
குரக்கு வான் படை குறைந்தன; கூசி வானவர்கள்
இரக்கமுற்று உலைந்து ஓடினார்; இருண்டது எவ் உலகும்.
எறுழ் வலிப் புயத்து இராகவன் இள நகை எழும்ப,
முறுவலித்து, அவன் பகழிகள் யாவையும் முருக்கி,
பிறை முகச் சரம் ஐ-இரண்டு ஒரு தொடை பிடித்து, ஆங்கு
உறுதி அற்றவன் சிலை ஒரு பத்தையும் ஒறுத்தான்.
வளைத்த வில்லும் இரதமும் மற்றும் நின்
கிளைத்த யானையும் சேனையும் கெட்டது; இங்கு
இளைத்து நின்றனை; இன்று போய் நாளை வா,
விளைக்கும் வெஞ் சமர் செய் விருப்பு உள்ளதேல்.
என்று இராமன் இயம்ப, இராவணன்
ஒன்றும் ஓதலன்; உள்ளத்தின், என் வலி
நின்ற நேர்மை நினைத்திலன், மானிடன்;
நன்று சொன்னது! என நகைத்து ஏகினான்.