மாரீசன் வதைப் படலம்

ஆரணிய காண்டம்
இராமனுக்கு அரசுரிமை மறுக்கப்பட்டு கானகம் சென்று வாழும்நிலை ஏற்பட்டது. இக்கானக வாழ்வைக் குறித்து எழுவதனால் இது ஆரணிய காண்டம் எனப்பட்டது. ஆரணியம் என்றால் கானகம் (வனம், காடு) எனப் பொருள்படும். ஆரணிய காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டுள்ளது.
மாரீசன் வதைப் படலம்
சூர்ப்பணகை ஆகாய மார்க்கமாக இலங்கையை நோக்கிப் பறந்து கொண்டு இருந்தாள். ஒரு புறம் மாவீரன் கரன் உட்பட ஒரு மிகப் பெரிய அரக்கர் சேனையே அழிந்து விட்டதே என்ற வருத்தம். மறுபக்கம் தனது உறுப்புக்களை லக்ஷ்மணன் வெட்டி எறிந்ததால் ஏற்பட்ட பழி உணர்ச்சி. இவை எல்லாவற்றையும் தாண்டி, இப்போதும் கூட இராமன் மீது தான் கொண்ட அதீத காமம் என்ற நிலையில் அனைத்து விதமான எண்ணக் குவியல்களுடன் சூர்ப்பணகை இலங்கை நோக்கி விரைந்து சென்று கொண்டு இருந்தாள்.
அவ்வாறு சென்றவள், சரியாக இலங்கையை ராவணனின் சபை கூடும் நேரத்தில், அடைந்தாள். அங்கு சூர்ப்பணகையின் கோலத்தைக் கண்ட அனைத்து அரக்கிகளும் மார்பில் அடித்துக் கொண்டு அழுதார்கள்.
மறுபுறம் தேவர்கள் அச்சத்துடன் வணங்கி நிற்கவும். அக்கினி தேவன் தேவைப்படும் பொழுது எல்லாம் விளக்குகள் ஏற்றிப் பணி செய்யவும் ராவணன் தனக்கே உரிய சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்தான். அச்சமயம் சூியனும், சந்திரனும், அஷ்டதிக் பாலகர்களும், நவக்கிரகங்களும் ராவணன் முன் பணிந்து நின்றனர்.
அப்போது அவனது தங்கை சூர்ப்பணகை தலையில் அடித்துக் கொண்டு, காதும் மூக்கும் அறுக்கப்பட்ட நிலையில் சபைக்கு ஓடிவந்து ராவணனின் பாதத்தில் விழுந்து கதறினாள். சூர்ப்பணகையின் கோலத்தைக் கண்டு இராவணன் திடுக்கிட்டான். பிறகு ," எனது தங்கையை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் யார்?" என்று கோபாவேசத்தில் கத்தினான். அது கண்ட தேவர்களும்," இவன் அடுத்து என்ன செய்யப் போகிறானோ?" என்று சொல்லிக்கொண்டு பயத்தால் ஒதுங்கி நின்றனர்.
அப்போது சூர்ப்பணகை அண்ணிடம்," அண்ணா! எனது மூக்கையும், காதுகளையும் அறுத்தவர்கள் சத்திரிய குமாரர்கள். அவர்கள், அழகில் மன்மதனை வென்றவர்கள். மகாமேரு மலையையும் அடக்கும் திறமை உடையவர்கள். முனிவர்கள் மீது அதிக பக்தி உடையவர்கள். அதனால், அரக்கர்களை இந்த மண்ணுலகில் இல்லாதபடி அழிப்பேன் என்று சபதம் கொண்டவர்கள். மரவுரி தரித்தவர்கள். நல்ல ஒழுக்கம் கொண்டவர்கள். மார்பிலே அழகிய முப்பரி நூலைத் தரித்தவர்கள். உனக்கு அஞ்சாதவர்கள். உன்னை ஒரு சிறு பொடியளவும் மதியாதவர்கள். வில் வித்தையில் வல்லவர்கள்" என்றெல்லாம் கூற.
எரிச்சல் அடைந்த ராவணன்," போதும் சூர்ப்பணகை, நான் தேவர்களையும், திக்பாலகர்களையும் பணியாட்களாகக் கொண்டவன். பத்து தலைகளை உடையவன். பிரம்மனிடமும், சிவனிடமும் வரம் பெற்றவன். எனது முன்னாள் ஒரு அற்ப மனிதனைப் இப்படிப் புகழாதே" என்றான்.
அது கேட்ட சூர்ப்பணகை," அண்ணா! அவர்களை அற்ப மனிதர்கள் என்று எண்ணாதே. என்னை பாதுகாக்க உன்னால் நியமிக்கப்பட்ட கரன், தூஷணன், திரிசிரன் போன்ற பெரும் அரக்கர்களையும், பஞ்சவடியில் இருந்த மகா பெரிய அரக்கர் சேனையையும் அழித்து விட்டார்கள்" என்றாள் அழுது கொண்டே.
அதுகேட்ட இராவணன் கோபமும் சோகமும் ஒருங்கே அடைந்தான். அத்துடன் சூர்ப்பணகையைப் பார்த்து," நீ அப்படி அந்த மனிதர்களுக்கு என்ன தீங்கு செய்தாய்?" என்று அவளைக் கேட்டான்.
அதற்கு சூர்ப்பணகை," அண்ணா! என்னிடத்தில் எந்தக் குற்றமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நான் உனக்கு நன்மை செய்யத் தான் நினைத்தேன். அவர்களுடன் ஒரு அழகி வசிக்கிறாள். அவளை உனக்காகக் கொண்டு வர எண்ணி, அந்த முயற்ச்சியில் ஈடுபட்டேன். அதனால் வந்ததே இந்தப் பழிபாவம்!" என்றாள்.
" அப்படியா, அவள் யார்?" என்று கேட்டான் லங்காதிபதி இராவணன்.
" இலங்காதிபதியே! அவள் மிக்க அழகுடையவள். மூவுலகிலும் அவளைப் போன்றதொரு அழகி இல்லை. அவள் பெயர் சீதை. திருமகளைப் போலவே இருப்பாள். அவளுக்கு நிகராக இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. தேவேந்திரன் இந்திராணியை மனைவியாகப் பெற்றான், சிவனோ பார்வதியையும், பிரம்மன் சரஸ்வதியையும், திருமால் திருமகளையும் பெற்றனர். அது போலவே நீ சீதையைப் பெற்றால் அவர்களை விட நீயே சிறப்பு வாய்ந்தவன். அதற்குக் காரணம் அந்த தேவிமார்களை விட சீதை அழகு பெற்றவள். மேலும், நீ சீதையை மணந்து கொண்டால், உனது அத்தனை மனைவிகளுக்கும் கொடுக்க வேண்டிய செல்வத்தை எல்லாம் சீதைக்கே கொடுத்து விடுவாய். திருப்பாற்கடலைக் கடைகையில் திருமகள் பிறந்தாள். அவளை வெல்லவே பூமிதேவி இந்த சீதையைப் பெற்றாள். நீ அளவில்லாத தவத்தையும், குபேரனை விட செல்வத்தையும் பெற்று என்ன பயன்? சீதையைப் பெற்ற பின் தான், நீ உண்மையிலேயே செல்வங்களைப் பெற்றவன் என்று பொருள். ஆதலால், இன்றே நீ அவ்வளவு சிறப்பு வாய்ந்த சீதையைக் கவர்ந்து உனது மனைவி ஆக்கிக் கொள். அண்ணா, அப்படியே ஒரு வேண்டுகோள், அந்த இராமனை மட்டும் எனக்கு உனது அன்புப் பரிசாகக் கொடுத்து விடு" என்றாள்.
சூர்ப்பணகையின் மூலமாக சீதையைப் பற்றிய வர்ணனனயைக் கேட்ட இராவணன் காமப் பசியில் தவித்தான். லக்ஷ்மணனால், சூர்ப்பணகைக்கு ஏற்பட்ட கதியைக் கூட மறந்தான். சீதையின் மேல் அவனுக்கு ஏற்பட்ட மோகத்தால் அரக்கர்களான கரன், தூஷணன் போன்றவர்கள் இராமனால் கொல்லப்பட்ட விஷயத்தை மறந்தான். தான் பெற்ற வர பலத்தை மறந்தான். இன்னும் சொல்லப் போனால் அவன் தன்னையே மறந்தான். அவன் மனதில் சீதையைப் பற்றிய எண்ணம் மட்டும் தான் ஓடிக் கொண்டு இருந்தது. அவளை எப்படி அடைவது என்ற ஒரே எண்ணம் தான் அவன் மனதை அப்போது ஆட்டி வைத்தது. சீதையின் மேல் கொண்ட மோகத்தால் இராவணனின் மனம் வெய்யிலில் வைத்த வெண்ணை போல, படிப்படியாக காம வெப்பத்தால் உருகியது.
சீதையின் மீது அவனுக்கு ஏற்பட்ட மோகத்தால் அன்று இரவு அவன் படுத்த மலர் படுக்கையும் கூட அவனுக்கு முள்ளாகத் தைத்தது. அவனது உடல் காமத்தால் சூரியனை விட அதிகம் தகித்தது. வீசும் தென்றல் கூட அவனுக்கு பாரமாக இருந்தது. தனது உடல் சூட்டை அந்த நேரத்துக்கு தடுக்க என்ன செய்ய என்று யோசித்தவன். தனது ஏவலர்களை கொண்டு ருதுக்களை மாற்றினான். அதனால் அந்த சித்திரை மாதத்தில் , மார்கழி மாதத்தின் சீதோஷ்ண நிலையை உருவாக்கினான். அப்போதும் அவனது உடல் சூடு தணியவில்லை. பிறகு, காமத்தால் ஏற்பட்ட அந்த உடல் சூடு தனிய சந்திரனை முழு நிலவாக அழைத்தான். சந்திரன் பயந்து கொண்டே நிலவாக இலங்கையின் வானத்தில் ஒளிர்ந்தான். அந்த சந்திர கிரணங்களால் கூட அவனது உடல் சூட்டை தணிக்க முடியவில்லை. அந்த இரவே அவனுக்கு சுமையாக இருந்தது. உடனே, அந்த நள்ளிரவில் தனது அமைச்சர்கள், மந்திரிப் பிரதானிகள் என எல்லோரையும் அழைத்தான்.
இராவணன் மீது கொண்ட பயத்தால் அனைவரும் அங்கு வந்து சேர்ந்தனர். இராவணன் சிறிதும் நாணம் இல்லாமல், அவர்களிடம் தனது நிலையை எடுத்துச் சொல்லி சீதையை கவர்ந்து வருவதற்கான மார்கத்தைக் கேட்க. அதில் இடும்பன் என்ற அமைச்சன் " அரசே! தங்கள் நோக்கம் நிறைவேற தங்களது மாமனான, மந்திர ஜாலங்களில் பெயர் பெற்ற மாரீச்சனிடம் உதவி கேட்கலாம். அவனால் நினைத்த நேரத்தில் எந்த ரூபத்தையும் பெற முடியும். அவன் ஜொலிக்கும் மாய மானாக மாறி இராமனின் பர்ணசாலைக்கு முன் சீதை பார்க்க, அவளது ஆசையைத் தூண்ட அங்கும், இங்கும் நடமாடினால் போதும். அதனால் இராமலக்ஷ்மணர்களின் கவனமும் சிதறுண்டு போகும் .அச்சமயம், சீதையை அபகரித்துக் கொண்டு வந்து விடலாம்" என்று சொல்ல. அது கேட்ட இராவணன் மகிழ்ந்தான்.
அதிகாலை விடியும் நேரம், குபேரனிடம் இருந்து தான் அபகரித்த புஷ்பக விமானத்தில் ஏறி மாரிச்சனை பார்க்கச் சென்றான் இராவணன். இராவணன் சென்ற நேரம் மாரிசன் தவத்தில் அமர்ந்து தனது ஆற்றல்களை அதிகரித்துக் கொண்டு இருந்தான்.
பிறகு அவ்வாறு தவக்கோலத்தில் இருந்த மாரீசன் இராவணனைக் கண்டதும் எழுந்து பணிந்தான். பிறகு இராவணனிடம் வந்த காரணத்தை வினவினான்.
உடனே இராவணன், பெருமூச்சுடன் அவனைப் பார்த்து," மாமா! நான் தளர்ந்து இருக்கிறேன், தேவர்களும் என்னைக் கண்டு பரிகசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன். அதற்குக் காரணம் காட்டில் பரதேசிகளாகத் திரியும் இரண்டு அற்ப மனிதர்கள். மேலும், அந்த அற்பர்கள் உனது மருமகள் சூர்ப்பணகையின் மூக்கையும், காதுகளையும் அறுத்து விட்டார்கள். கரன், தூஷணன் போன்ற அரக்கர்களையும், கடலினும் பெரிய அரக்கர் சேனையையும் அழித்து ஒழித்து விட்டார்கள். ஆனால், இவ்வளவையும் செய்த அந்த மனிதர்கள் இது நாள் வரை சுகமாக ஜீவித்து இருக்கின்றார்கள். அதனால், எனது மனம் கொதிப்படைந்து உள்ளது. ஆயினும் அந்த மனிதர்கள் எனக்குத் தகுதியானவர்கள் இல்லை. அதனால் நானும் அவர்களுடன் போர் செய்ய விரும்பவில்லை. ஆனால், அவர்களுடன் வசிக்கும் திருமகளுக்கு நிகரான பெண்ணை சிறை எடுத்து, அதன் மூலம் அவர்களை நான் அவமானப்படுத்த விரும்புகிறேன்" என்றான்.
அது கேட்ட மாரீசன் மேற்கொண்டு இராவணனின் சொல்லைக் கேட்கப் பிடிக்காமல் காதுகளை பொத்திக் கொண்டான். பிறகு ராவணனிடம்," வேந்தே! நீர் ஏன் இப்படி அறிவு இழந்து சிந்திக்கின்றீர். நான் சொல்வது உமக்கு இனிதாகத் தோன்றாவிட்டாலும், உம்மீது நான் கொண்டுள்ள அக்கறைக்காக சில விஷயங்களை உமக்கு சொல்வது எனது கடமை. நீர் மிகவும் கடினப்பட்டு தவம் செய்து பல வரங்களைப் பெற்றவர். தயை கூர்ந்து ஒரு பெண்ணின் பொருட்டு அந்த வரங்களை இழந்து விடாதீர்கள். மேலும், ஒரு அபலைப் பெண்ணை அநியாயமாகக் கடத்தினால் நிச்சயம் அறக்கடவுளின் கைகளால் தண்டிக்கப்படுவீர்கள். பிறர் மனைவியை கடத்திய அவப்பெயரும் உமக்கு வந்து சேரும்.
தவிர நீ சொல்லும் அந்த இரண்டு மனிதர்களையும் நான் அறிவேன். அவர்கள் வேறு யாரும் அல்ல, நிச்சயம் இராம லக்ஷ்மணர்கள் தான். அவர்களுடன் எனக்கு போர் செய்த அனுபவமும் உண்டு. ஆம்! ஒரு முறை விசுவாமித்திரரின் தவத்தைக் கெடுக்க நானும், சுபாகுவும் பல ஆயிரம் அரக்கர்களுடன் சென்றோம். அப்போது அந்த யாகத்தைக் காத்து வந்த இராமன் மூன்றே பாணங்களில் சுபாகுவை கொன்று, அரக்கர் சேனையையும் அழித்து, மாரீச்சனான என்னையும் கடலுக்கு அப்பால் பல யோசனை தூரம் தூக்கி எறிந்தான்.அவன் ஒரு சிறந்த வில்லாளி. மீண்டும் நான் இரண்டு அரக்கர்களின் துணையுடன் மான் வடிவம் எடுத்து ராமனைக் கொம்புகளால் முட்டிக் கொல்ல நினைத்தேன். அன்றும் அவன் என்னை தூரத்தி, தூரத்தி விரட்டினான். என்னுடன் உதவிக்கு வந்த அரக்கர்கள், இராம பாணத்தால் கொல்லப்பட்டனர். அந்நிலையில் நான் உயிர் பெற்று வந்ததே பெரிய அதிசயம்.ஆக இரண்டு முறை இராமனிடம் இருந்து உயிர் பிச்சை பெற்று வந்து உள்ளேன். இப்போது மூன்றாவது முறை உங்களால் நான் ஏவப்பட்டு அங்கு சென்றால், நிச்சயம் நான் இராமனின் கையால் மரிப்பேன் " என்று சொல்லி முடித்தான் மாரீசன்.
மாரீசனின் வார்த்தைகளைக் கேட்ட இராவணன் கொதித்துப் போனான். பிறகு, மாரீச்சனை நோக்கி," சிவ பெருமானது கைலாய மலையை ஒரு உள்ளங்கையில் எடுத்த எனது ஆண்மை, அந்தச் சிறு மனிதர்களுக்கு மிக எளிது என்றீரே! நடந்த காரியத்தை நான் சொல்லியும், உமக்குப் புரிய வில்லையோ? அச்சமில்லாமல் எனது மனதின் உறுதிநிலையை குறைத்துப் பேசினீர். எனது தங்கை சூர்ப்பணகையின் அழகிய முகம் முழுவதையும் தோண்டியது போலச் செய்தவர்களைப் புகழ்ந்து பேசினீர்! இருந்தாலும், இந்தப் பெருங்குற்றத்தை உம்பொருட்டு நான் பொறுத்தேன்!" என்றான்.
அது கேட்ட மாரீசன், தன்னை மறுபடியும் இலங்கை வேந்தன் கோவிப்பான் என்று நினைக்காமல், மேலும் கூறத் தொடங்கினான்," இலங்கை வேந்தரே! " நீர் என்னை கோபிக்க வில்லை, உமது குலத்தையே உமது வார்த்தைகள் கொண்டு கோபித்தீர்! மேலும் நீர் கைலாய மலையை ஒரு உள்ளங்கையில் எடுத்தீர் என்றால், அந்த ராமன் சிவனின் வில்லையே முறித்தவன். உமக்கு சரி நிகர் சமானமானவன். அது மட்டும் அல்ல, நான் கேள்விப்பட்ட வரை அவனை சில முனிவர்கள் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதுகின்றனர். மேலும் இராவணா யோசித்துப் பார்,விரதான் என்ற கொடிய அரக்கனை யாரால் கொல்ல முடியும்? எனது தாய் தாடகையைத் தான் யார் வதம் செய்ய முடியும்? அவன் கால் பட்டு, ஒரு கல் கூட பெண்ணாக மாறியதாகக் கூறுகின்றனர். அதற்கு என்ன சொல்கிறீர்? அதனால், அப்படிப்பட்ட மாவீரனின் மனைவியை நீர் அபகரித்துச் செல்ல நினைப்பது, மின்மினிப் பூச்சி என்று நினைத்துக் கொண்டு எறியும் சுள்ளியை தனது கூட்டில் வைத்த பறவையின் கதை போல ஆகிவிடும். அந்த எறியும் சுள்ளி கடைசியில் அந்தப் பறவை கூட்டையே பற்ற வைத்ததாம்" என்றான்.
இது எல்லாவற்றையும் கேட்ட இராவணன், மேலும் கோபத்தின் உச்சிக்கே சென்றவனாக மாரீசனை மாமன் என்ற உறவு முறை சொல்லி அழைக்காமல்," அடே மாரீசா, இப்போது நீ எனது திட்டத்துக்கு சம்மத்திப்பாயா? மாட்டாயா? ஒரு வேளை நீ சம்மதிக்க மறுத்தால். உனது உயிர் உன்னிடத்தில் இருக்காது" என்று கையில் இருந்த கொடும் வாளை உருவினான்.
அது கண்ட மாரீசன்," இந்தக் கொடிய அரக்கணனின் கையால் இறப்பதை விட ஸ்ரீ ராமனின் கைகளால் இறப்பது எவ்வளவு பெரிய பாக்கியம். எப்படியோ நமக்கு மரணம் நிச்சயம் போகிற உயிர் ராமனின் கையால் போகட்டுமே " என்று யோசித்தான். பிறகு இராவணனிடம் " உனது திட்டத்துக்கு நான் உடன்படுகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்" என்றான்.
அது கேட்ட இராவணன் மகிழ்ந்தான், பிறகு நடந்ததை மறந்தவனாக, மாரீசனை கட்டித் தழுவிக் கொண்டு, " மாரீசா நீ பொன் மானாக மாறி சீதை பார்க்கும் படி நடமாடு. சீதைக்கு ஆசையை தூண்டு. சீதை உடனே உன்னை பிடிக்க தனது கணவனை ஏவி விடுவாள். ஆனால், அவள் கணவனான இராமனின் கைகளில் நீ எளிதில் அகப்படாதே. வெகு நேரம் அவனை அங்கும், இங்கும் என அலையவிடு. கணவன் வெகு நேரமாக ஆகியும் வராத காரணத்தால் லக்ஷ்மணனையும் சீதை, ராமனைத் தேடும் படி அனுப்புவாள். அச்சமயம், அவள் தனியாக இருக்கும் நேரமாகப் பார்த்து நான் அவளை கவர்ந்து வருகிறேன்" என்று தனது திட்டத்தை கூறி முடித்தான்.
அது கேட்டு மாரீசனும் அத்திட்டத்திற்கு சம்மதித்தான்.
பிறகு இராவணன் இலங்கை செல்லாமல் உடனே அத்திட்டத்தை செயல் படுத்த மாரீசனுக்கு ஆணை பிறப்பித்துவிட்டு, அவன் வேறு வழியாக சீதை இருக்கும் பஞ்சவடி அடைந்தான். மாரீசனும், அச்சமயம் பொன் மானாக உருவெடுத்து சீதை பார்க்க இங்கும், அங்கும் ஓடத் தொடங்கினான்.
அந்தப் பொன் மானின் தோற்றத்தைக் கண்டாள் சீதை, உடனே இராமலக்ஷ்மணர்களுக்கும் அந்தப் பொன் மானைக் காட்டி வியப்புற்றாள். அது கண்ட லக்ஷ்மணன், " பொன்னினால் வார்த்தது போல, இப்படி ஒரு அழகான மானை நான் கண்டதில்லை. இது இயற்கையின் விதிக்கு மாறாக காணப்படுவதால். எனக்கு ஏதோ, இது அரக்கர்களின் மாயத் தோற்றம் என்றே தோன்றுகிறது" என்றான்.
அது கேட்ட சீதை லக்ஷ்மணனிடம்," தம்பி உங்களுக்கு எல்லாவற்றிலும் ஒரே சந்தேகம் தான். ஆனால், நான் முடிவு செய்து விட்டேன், எனக்கு அந்தப் பொன் மான் வேண்டும்" என்றாள்.
அது கேட்ட லக்ஷ்மணன், அண்ணி சீதையிடம் அந்த மானைப் பற்றி எவ்வளவோ புரிய வைக்க முயற்சி செய்தான். ஆனால்,விதி சீதையின் மதியை மயக்கியது. பிறகு, இது குறித்து தம்பி லக்ஷ்மணனிடம் பேசுவது வீண் என்று கருதிய சீதை ராமனை நோக்கி," மணாளரே! எனக்கு அந்தப் பொன் மானைப் பிடித்துக் கொடுங்கள். நாம் இன்னும் சில காலத்தில் அயோத்தியைக்கு போகும் போது, நான் அதனை உடன் கொண்டு சென்று விளையாடுவேன்" என்றாள்.
சீதையின் வேண்டுகோளை ராமன் ஏற்கும் சமயத்தில், லக்ஷ்மணன் ராமனிடத்தில்," அண்ணா, நாம் இன்னும் சில மாதங்களில் அயோத்தியை செல்லப் போகிறோம். அங்கு கிடைக்காத மான்கள் உண்டோ? மேலும், அண்ணா, அண்ணியின் சிறுபிள்ளைத் தனமான பேச்சைக் கேட்டு மோசம் போகாதீர்கள். இது போன்ற மான், இந்த உலகத்திலேயே இல்லை. அதனால் இது நிச்சயம் அரக்கர்கள் சதியாகத் தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. மேலும், இதற்குப் பின்னால், ஒரு பெரும் சதிச் செயலே மறைந்து உள்ளதாக எனது உள்ளத்தில் தோன்றுகிறது. அதனால் நீங்கள் போகாதீர்கள். அப்படி அண்ணிக்கு அந்தப் பொன் மான் தான் வேண்டும் என்றால் நான் போய் அதனைப் பிடித்து வந்து தருகிறேன்" என்றான்.
அது கேட்ட சீதை மீண்டும் ராமனை நோக்கி," மணாளரே! எந்தப் பெண்ணும் ஒரு அரிதான பொருளை, தான் விரும்பும் கணவரின் கைகளால் தான் பெற வேண்டும் என்று நினைப்பாள். அதனால் தாங்கள் சென்று அந்த மானைப் பிடித்துக் கொடுங்கள். மேலும், எனக்காக இது கூடத் தாங்கள் செய்ய மாடீர்களா? என்னைக் கை பிடிக்கும் அந்த இரவில், எனக்காக எதையும் செய்வேன் என்று சொன்னீர்களே அந்த வாக்கு பொய்யா? " என்று கூறினாள்.
" சீதை என்னிடம் இது நாள் வரைப் பெரிதாக எதையும் கேட்டு விடவில்லை. இப்போதும் கூட இந்தப் பொன்மானைத் தானே கேட்கிறாள். அதனால் நான் அவள் விருப்பத்தை நிறைவேற்றுவதில் என்ன தவறு உள்ளது?" என்று யோசித்தார் இராமர்.
உடனே தனது வில்லையும், அம்பையும் எடுத்துக் கொண்டார். அப்போதும் கூட லக்ஷ்மணன் " வேண்டாம் அண்ணா! இது அரக்கர்களின் சதி. நாம் இந்த வனத்தில் பல அரக்கர்களைக் கொன்று குவித்தோம் அல்லவா? அதற்குத் தான் அரக்கர்கள் நம்மைப் பழி வாங்கத் துடிக்கின்றார்கள். நீங்கள் எனது சொல்லை மீறினால் விபரீதம் கூட விளையலாம் " என்றான்.
ஆனால், இராமபிரானையும் கூட விதி விட்டு வைக்கவில்லை, அவரது மதியை மயங்கச் செய்தது," லக்ஷ்மணா, நீ பயப்படாதே. அப்படியே அரக்கர்கள் என்னைக் கொல்ல வலை விரித்தாலும், என்னை அவர்களால் என்ன செய்ய இயலும்? அதனால் நீ சீதையைப் பாதுகாத்துக் கொள். நான் போய் ஒரு வேளை, அது உண்மையான மானாக இருந்தால் பிடித்து வந்து சீதைக்குத் தருவேன். அப்படி அரக்கன் செய்த மாயை என்று தெரிந்தால், அந்த அரக்கனுக்கு எனது பாணம் கொண்டு பதில் சொல்கிறேன்" என்று லக்ஷ்மணிடம் கூறி விரைவாகச் சென்றார் இராமபிரான்.
பொன் மானை தொடர்ந்து இராமன் போக, அந்தப் பொன் மானோ இராமன் கண்களில் இருந்து மறைந்து மறைந்து சென்றது. தீடீர் என்று ராமனுக்கு மிக அருகில் வரும், அருகில் தான் அந்த மான் உள்ளது, என்று நினைத்து ராமர் சென்றாள், உடனே அந்த மான் அவரது பார்வைக்குத் தப்பி பல தூரம் சென்று இருக்கும். பிறகு தீடீர் என்று இன்னொரு திசையில் இருந்து வரும். ஒரே சமயத்தில் பல இடங்களில் இருப்பதாகக் காட்சி தரும்.
" இது நிச்சயம் லக்ஷ்மணன் சொன்னபடி ஒரு அரக்கனாகத் தான் இருக்க முடியும். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், தம்பி லக்ஷ்மணன் புரிந்து கொண்டான். எனது தம்பி நல்ல அறிவுத் திறன் கொண்டவன். ஆனால், அதே சமயத்தில் அரக்கன் என்று தெரிந்தும் இவனை நான் விட்டு வைப்பது நல்லதல்ல. இவனைக் கொல்வதே சரி " என்ற யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார் இராமபிரான். பிறகு குறி தவறாத இராம பாணத்தை எடுத்தார், நாண் ஏற்றினார்.
ராமபிரான், ராம பாணத்தை நாண் ஏற்றியது கண்ட மாரீசன் " ராமனுக்கு நாம் யார் என்று தெரிந்து விட்டது. இனி நாம் பிழைக்கப் போவதில்லை" என்று எண்ணிக் கொண்டான்.
பிறகு ராமபிரான் பாணத்தைப் பிரயோகித்தார். அது நேராக மாய மானாக மாறிய மாரிச்சனை குறி தவறாமல் சென்று தாக்கியது. மாரீசன் விழுந்தான். அவன் இறக்கும் தருவாயில் ஸ்ரீ ராமனின் குரலில் " ஹா சீதே! லக்ஷ்மணா" என்று அந்த வனமே எதிரொலிக்கும் படியான அபயக் குரலை எழுப்பினான்.
அது கண்ட இராமபிரான்," இந்த அரக்கன் ஏன்? எனது குரலிலேயே அவனது அபயக் குரலை எழுப்புகிறான். மேலும், இந்த அரக்கன் அனாவசியமாக இறக்கும் நோக்கத்துடன் இங்கு வந்து இருக்கமாட்டான். இவனது மரணத்துக்கு பின்னால், தந்திரமாக ஆலோசித்த திட்டம் ஒன்று மறைந்து உள்ளது போலத் தெரிகிறது. தவிர, இவனது கடைசி கூக்குரலில் தீமையை உண்டாக்கும் நிகழ்வு ஒன்று மறைந்து உள்ளதாகவும் தெரிகிறது. அதனால், இதனை எல்லாம் ஆலோசித்துப் பார்த்தால், உடனே நான் பர்ண சாலைக்குப் போவது தான் நன்று" என்று சிந்தித்தபடி. பர்ண சாலையை நோக்கி விரைந்தார் இராமபிரான்.