பொழில் இறுத்த படலத்தின் பாடல்கள்

bookmark

சுந்தர காண்டம்

கம்பராமாயணத்துள் மிகவும் போற்றக்கூடிய பகுதியாக விளங்குவது சுந்தர காண்டமாகும். இங்கு சுந்தரன் என்று குறிக்கப் பெறுபவன் அனுமன் ஆவான். சொல்லின் செல்வன் என்று கம்பர் அனுமனது பெருமையை விளக்குகிறார். இராமனைப் பிரிந்த சீதைக்கும், சீதையைப் பிரிந்த இராமனுக்கும் இடையில் பிள்ளையைப் போலத் தூது சென்று அவர்தம் உள்ளக்கருத்தை உள்ளபடி உரைத்தபாங்கினாலேயே இதற்குச் சுந்தர காண்டம் எனப் பெயர் ஏற்பட்டது. சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். இன்றும் கணவன்-மனைவி ஆகிய தம்பதியரிடையே ஏற்படும் உளவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு சுந்தர காண்டம் படிப்பது வழக்கமாக உள்ளது. சுந்தரகாண்டம் பதினான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

பொழில் இறுத்த படலம்

விடைபெற்ற அனுமனின் உள்ள நிலை

நெறிக் கோடு வடக்கு உறும் நினைப்பினில் நிமிர்ந்தான்,
பொறிக் குல மலர்ப் பொழிலிடைக் கடிது போவான்,
சிறுத் தொழில் முடித்து அகல்தல் தீது எனல், தெரிந்தான்;
மறித்தும் ஓர் செயற்கு உரிய காரியம் மதித்தான். 

ஈனம் உறு பற்றலரை எற்றி, எயில் மூதூர்
மீன நிலையத்தின் உக வீசி, விழி மானை
மானவன் மலர்க் கழலில் வைத்தும்இலென் என்றால்,
ஆனபொழுது, எப் பரிசின், நான் அடியன் ஆவேன்? 

வஞ்சனை அரக்கனை நெருக்கி, நெடு வாலால்
அஞ்சினொடு அஞ்சு தலை தோள் உற அசைத்தே,
வெஞ் சிறையில் வைத்தும்இலென்; வென்றும்இலென்; என்றால்,
தஞ்சம் ஒருவர்க்கு ஒருவர் என்றல் தகும் அன்றோ? 

கண்ட நிருதக் கடல் கலக்கினென், வலத்தின்
திண் திறல் அரக்கனும் இருக்க ஓர் திறத்தின்
மண்டவுதரத்தவள் மலர்க் குழல் பிடித்து,
கொண்டு சிறை வைத்திடுதலில் குறைவது உண்டோ? 

மீட்டும் இனி, எண்ணும் வினை வேறும் உளதுஅன்றால்;
ஓட்டி இவ் அரக்கரை உலைத்து, என் வலி எல்லாம்
காட்டும் இதுவே கருமம்; அன்னவர் கடும் போர்
மூட்டும் வகை யாவதுகொல்? என்று முயல்கின்றான். 

இப் பொழிலினைக் கடிது இறுக்குவென்; இறுத்தால்,
அப் பெரிய பூசல் செவி சார்தலும், அரக்கர்
வெப்புறு சினத்தர் எதிர் மேல்வருவர்; வந்தால்,
துப்பு உற முருக்கி, உயிர் உண்பல், இது சூதால். 

வந்தவர்கள் வந்தவர்கள் மீள்கிலர் மடிந்தால்,
வெந் திறல் அரக்கனும், விலக்க அரு வலத்தால்
முந்தும்; எனின், அன்னவன் முடித் தலை முசித்து, என்
சிந்தை உறு வெந் துயர் தவிர்த்து, இனிது செல்வேன். 

அசோக வனத்தை அனுமன் அழித்தல்

என்று நினையா, இரவி சந்திரன் இயங்கும்
குன்றம் இரு தோள் அனைய தன் உருவு கொண்டான்;
அன்று, உலகு எயிற்றிடை கொள் ஏனம் எனல் ஆனான்;
துன்று கடி காவினை, அடிக்கொடு துகைத்தான். 

முடிந்தன; பிளந்தன; முரிந்தன; நெரிந்த;
மடிந்தன; பொடிந்தன; மறிந்தன; முறிந்த;
இடிந்தன; தகர்ந்தன; எரிந்தன; கரிந்த;
ஒடிந்தன; ஒசிந்தன; உதிர்ந்தன; பிதிர்ந்த. 

வேரொடு மறிந்த சில; வெந்த சில; விண்ணில்
காரொடு செறிந்த சில; காலினொடு வேலைத்
தூரொடு பறிந்த சில; தும்பியொடு வானோர்
ஊரொடு மலைந்த சில; உக்க, சில நெக்க; 

சோனை முதல் மற்றவை சுழற்றிய திசைப் போர்
ஆனன நுகரக் குளரும் ஆன; அடி பற்றா
மேல் நிமிர விட்டன, விசும்பின் வழி மீப் போய்,
வானவர்கள் நந்தன வனத்தையும் மடித்த. 

அலைந்தன கடல் திரை; அரக்கர் அகல் மாடம்
குலைந்து உக இடிந்தன; குலக் கிரிகளோடு
மலைந்து பொடி உற்றன; மயங்கி நெடு வானத்து
உலைந்து விழும் மீனினொடு வெண் மலர் உதிர்ந்த. 

முடக்கு நெடு வேரொடு முகந்து உலகம் முற்றும்
கடக்கும்வகை வீசின, களித்த திசை யானை,
மடப் பிடியினுக்கு உதவ மையின் நிமிர் கை வைத்து
இடுக்கியன ஒத்தன, எயிற்றின் இடை ஞால்வ. 

விஞ்சை உலகத்தினும், இயக்கர் மலைமேலும்,
துஞ்சுதல் இல் வானவர் துறக்க நகரத்தும்,
பஞ்சி அடி வஞ்சியர்கள் மொ�்த்தனர், பறித்தார்,
நஞ்சம் அனையானுடைய சோலையின் நறும் பூ. 

பொன் திணி மணிப் பரு மரன், திசைகள் போவ,
மின் திரிவ ஒத்தன; வெயில் கதிரும் ஒத்த;
ஒன்றினொடும் ஒன்று இடை புடைத்து உதிர, ஊழின்
தன் திரள் ஒழுக்கி, விழு தாரகையும் ஒத்த. 

புள்ளினொடு வண்டும், மிஞிறும், கடிகொள் பூவும்,
கள்ளும், முகையும், தளிர்களோடு இனிய காயும்,
வெள்ள நெடு வேலையிடை, மீன்இனம் விழுங்கித்
துள்ளின; மரன் பட, நெரிந்தன துடித்த. 

தூவிய மலர்த்தொகை சுமந்து, திசைதோறும்,
பூவின் மணம் நாறுவ, புலால் கமழ்கிலாத,
தேவியர்களோடும் உயர் தேவர் இனிது ஆடும்
ஆவி எனல் ஆய, திரை ஆர்கவிகள் அம்மா! 

இடந்த மணி வேதியும், இறுத்த கடி காவும்,
தொடர்ந்தன துரந்தன படிந்து, நெறி தூர,
கடந்து செலவு என்பது கடந்தது, இரு காலால்
நடந்து செலல் ஆகும் எனல் ஆகியது, நல் நீர். 

வேனில் விளையாடு சுடரோனின் ஒளி விம்மும்
வானினிடை வீசிய இரும் பணை மரத்தால்,
தானவர்கள் மாளிகை தகர்ந்து பொடி ஆய-
வான் இடியால் ஒடியும் மால் வரைகள் மான. 

எண் இல் தரு கோடிகள் எறிந்தன செறிந்தே,
தண்ணென் மழைபோல் இடை தழைந்தது; சலத்தால்,
அண்ணல் அனுமான், அடல் இராவணனது, அந் நாள்,
விண்ணினும் ஓர் சோலை உளது ஆம் என, விதித்தான். 

தேன் உறை துளிப்ப, நிறை புள் பல சிலம்ப,
பூ நிறை மணித் தரு விசும்பினிடை போவ,
மீன் முறை நெருக்க, ஒளி வாளொடு வில் வீச,
வானிடை நடாய நெடு மானம் எனல் ஆன. 

சாகம் நெடு மாப் பணை தழைத்தன; தனிப் போர்
நாகம் அனையான் எறிய, மேல் நிமிர்வ-நாளும்
மாக நெடு வானிடை இழிந்து, புனல் வாரும்
மேகம் எனல் ஆய-நெடு மா கடலின் வீழ்வ. 

ஊனம் உற்றிட, மண்ணின் உதித்தவர்,
ஞானம் முற்றுபு நண்ணினர் வீடு என,
தான கற்பகத் தண்டலை விண்தலம்
போன, புக்கன, முன் உறை பொன்னகர். 

மணி கொள் குட்டிமம் மட்டித்து, மண்டபம்
துணி படுத்து, அயல் வாவிகள் தூர்த்து, ஒளிர்
திணி சுவர்த் தலம் சிந்தி, செய்ற்கு அரும்
பணி படுத்து, உயர் குன்றம் படுத்துஅரோ; 

வேங்கை செற்று, மராமரம் வேர் பறித்து,
ஓங்கு கற்பகம் பூவொடு ஒடித்து உராய்,
பாங்கர் சண்பகப் பத்தி பறித்து, அயல்
மாங்கனிப் பணை மட்டித்து மாற்றியே; 

சந்தனங்கள் தகர்ந்தன-தாள் பட,
இந்தனங்களின் வெந்து எரி சிந்திட,
முந்து அனங்க வசந்தன் முகம் கெட,
நந்தனங்கள் கலங்கி நடுங்கவே. 

காமரம் களி வண்டு கலங்கிட,
மா மரங்கள் மடிந்தன, மண்ணொடு;
தாம், அரங்க அரங்கு, தகர்ந்து உக,
பூ மரங்கள் எரிந்து பொரிந்தவே. 

குழையும், கொம்பும், கொடியும், குயிற்குலம்
விழையும் தண் தளிர்ச் சூழலும், மென் மலர்ப்
புழையும், வாசப் பொதும்பும், பொலன் கொள் தேன்
மழையும், வண்டும், மயிலும், மடிந்தவே. 

பவள மாக் கொடி வீசின, பல் மழை
துவளும் மின் என, சுற்றிட; சூழ் வரை,
திவளும் பொன் பணண மா மரம் சேர்ந்தன,
கவள் யானையின் ஓடையின் காந்தவே. 

பறவை ஆர்த்து எழும் ஓசையும், பல் மரம்
இற எடுத்த இடிக் குரல் ஓசையும்,
அறவன் ஆர்த்து எழும் ஓசையும், அண்டத்தின்
புற நிலத்தையும் கைம்மிகப் போயதே. 

பாடலம் படர் கோங்கொடும், பண் இசைப்
பாடல் அம் பனி வண்டொடும், பல் திரைப்
பாடு அலம்பு உயர் வேலையில் பாய்ந்தன,-
பாடு அலம் பெற, புள்இனம், பார்ப்பொடே.

வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம்,
வண்டல் அம் புனல் ஆற்றின் மடிந்தன;
விண்டு அலம்பு கம் நீங்கிய வெண் புனல்,
விண்தலம் புக நீள் மரம், வீழ்ந்தவே.

தாமரைத் தடம் பொய்கை, செஞ் சந்தனம்-
தாம் அரைத்தன ஒத்த; துகைத்தலின்,
காமரம் களி வண்டொடும், கள்ளொடும்,
காமர் அக் கடல் பூக் கடல் கண்டவே.

சீதை சிறை இருந்த மரம் மட்டும் அழியாது திகழ்தல்

பொய்ம் முறை அரக்கர் காக்கும் புள் உறை புது மென் சோலை,
விம்முறும் உள்ளத்து அன்னம் இருக்கும் அவ் விருக்கம் ஒன்றும்,
மும் முறை உலகம் எல்லாம் முற்றுற முடிவது ஆன
அம் முறை, ஐயன் வைகும் ஆல் என, நின்றது அம்மா!

கதிரவன் தோன்றுதல்

உறு சுடர்ச் சூடைக் காசுக்கு அரசினை உயிர் ஒப்பானுக்கு
அறிகுறியாக விட்டாள்; ஆதலான், வறியள் அந்தோ!
செறி குழல் சீதைக்கு அன்று, ஓர் சிகாமணி தெரிந்து வாங்கி,
எறி கடல் ஈவது என்ன, எழுந்தனன், இரவி என்பான்.

மண்தலம் கிழிந்த வாயில் மறி கடல் மோழை மண்ட,
எண் திசை சுமந்த மாவும், தேவரும் இரியல்போக,
தொண்டை வாய் அரக்கிமார்கள் சூல் வயிறு உடைந்து சோர,
அண்டமும் பிளந்து விண்டது ஆம் என, அனுமன் ஆர்த்தான்.

எனப் பதம் வணங்கி, அன்னார் இயம்பிய வார்த்தை கேளா,
கனக் குரல் உருமு வீழ, கனமலை சிதற, தேவர்
மனத்து அறிவு அழிந்து சோர, மாக் கடல் இரைப்புத் தீர
சினத்து வாய் மடித்து, தீயோன், நகைத்து, இவை செப்பலுற்றான்.