கிங்கரர்வதைப் படலம்

bookmark

சுந்தர காண்டம்

கம்பராமாயணத்துள் மிகவும் போற்றக்கூடிய பகுதியாக விளங்குவது சுந்தர காண்டமாகும். இங்கு சுந்தரன் என்று குறிக்கப் பெறுபவன் அனுமன் ஆவான். சொல்லின் செல்வன் என்று கம்பர் அனுமனது பெருமையை விளக்குகிறார். இராமனைப் பிரிந்த சீதைக்கும், சீதையைப் பிரிந்த இராமனுக்கும் இடையில் பிள்ளையைப் போலத் தூது சென்று அவர்தம் உள்ளக்கருத்தை உள்ளபடி உரைத்தபாங்கினாலேயே இதற்குச் சுந்தர காண்டம் எனப் பெயர் ஏற்பட்டது. சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். இன்றும் கணவன்-மனைவி ஆகிய தம்பதியரிடையே ஏற்படும் உளவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு சுந்தர காண்டம் படிப்பது வழக்கமாக உள்ளது. சுந்தரகாண்டம் பதினான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

கிங்கரர்வதைப் படலம்

(அனுமன், கிங்கரர் என்னும் அரக்க வீரர்களைக் கொன்ற செய்தியைக் கூறுவது, இந்தப் பகுதி)

அசோகவனத்தில் அனுமனால் செய்யப்பட பேராரவாரம் இராவணனின் இருபது காதுகளிலும் நுழைந்தது. அது கேட்ட இரவாணன்," அந்தக் குரங்கு இலங்கைக்கு வந்தா சாக வேண்டும்?" என்று கேட்டபடி புன்முறுவல் செய்தான்.

அரக்கர்களில் கிங்கரர்கள் என்னும் ஒரு வகுப்பினர் உண்டு. அவர்களைப் பார்த்து உடனே இராவணன்," நீங்கள் விரைவில் சென்று அந்தக் குரங்கு தப்பிப் போகாதபடி வான் வழியையும் தடுத்துக் கொண்டு நின்று, அதனைக் கொல்லாமல் மெல்லப் பிடித்துக் கொண்டு வாருங்கள்!" என்று ஆணையிட்டான்.

இராவணனின் கட்டளையை நிறைவேற்ற பல்லாயிரம் கிங்கரர்கள் சூலமும், வாளும், உலக்கையும், தண்டும் ஆகிய பலதரப்பட்ட ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, பிரளய காலத்தில் பூமி முழுவதையும் அழிப்பதற்காகப் பொங்கியெழும் கடலைப் போல விரைந்து சென்றார்கள்.

அந்தக் கிங்கரர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் போர் குணம் கொண்டவர்கள், காட்டைக் காட்டிலும் பெரியவர்கள், கடலை விட அதிக ஆரவாரம் செய்பவர்கள், தங்கள் போர் திறமையால் பெற்ற புகழைக் காட்டிலும் உயர்ந்தவர்கள், மலையை விடப் பெரிய உடலைக் கொண்டவர்கள், இடுப்பில் வாளாயுதத்தையும், உடலில் கவசத்தையும் அணிந்தவர்கள், திசைகளை மூடிய தோள்களைக் கொண்டவர்கள், மேகத்தைத் தொடும் படியான நீண்ட கைகளைக் கொண்டவர்கள், பெரும் மலைகளைக் கூடக் காலால் இடறித் தள்ளும் குணம் கொண்டவர்கள், தேவாசுர யுத்தங்கள் பல கண்டவர்கள், தேவர்களையே அடித்து உதைக்கும் பலம் கொண்டவர்கள், ஆனால் இப்போதோ ஒரு குரங்குடன் யுத்தம் செய்யப் போகும் படி விதி அமைந்து விட்டதே என்று வருந்தும் மனத்தைக் கொண்டவர்கள், சினம் பொங்கும் கண்களைக் கொண்டவர்கள், தெய்வத் தன்மையுள்ள பொன் ஆபரணங்களைக் கொண்டவர்கள், எதற்கும் கலங்காத மனம் கொண்டவர்கள், யுத்தத்தில் தோல்வியை அறியாதவர்கள், வெற்றியை மட்டுமே தங்கள் வாழ்நாளில் சுவைத்தவர்கள், வரபலம் பல பெற்றவர்கள்.

இப்படிப் பட்ட கிங்கரர்கள் மாருதியுடன் போர் செய்வதற்கு ஆராவரம் செய்தபடியும், கொடிய வாட்களை சுழற்றிய படியும், கோபத்துடன் உதடுகளை மடித்துக் கொண்டு, புருவங்கள் நெற்றியில் ஏற வெறித்துப் பார்த்த படியும் விரைந்து வந்தார்கள். அந்தக் கிங்கரர்கள் கிளப்பிய புழுதிப் படலம் தேவலோகத்தையே மறைத்தது.

அவ்வாறு சிங்கக் கூட்டங்கள் போலவும், புலிக் கூட்டம் போலவும் வந்த கிங்கரர்கள் அனுமன் நின்று இருந்த அசோகவனத்தைச் சூழ்ந்தார்கள்.

கிங்கரர்கள் பேரிகைகளும், சங்கங்களும் முழங்கவரும் கோலத்தைக் கண்டான் அனுமான். அவர்களைக் கண்ட மாத்திரத்தில், தனது எண்ணம் பலித்து விட்டதை நினைத்து மகிழ்ந்தான். தாங்கள் கொண்டு வந்த ஆயுதங்களை எல்லாம் அனுமனின் மீது வீசி எறிந்தபடி கிங்கரர்கள் அனுமனை நெருங்கினார்கள்.

உடனே அனுமன் ஒரு மரத்தைக் கைகளில் எடுத்துக் கொண்டான். அந்த மரத்துடன் மந்திர மலையைப் போல அந்தக் கொடிய கிங்கரர்கள் மத்தியில் நின்றான். அவர்கள், அனுமனை தாக்க முற்பட்ட அந்தச் சமயத்தில், கையில் வைத்து இருந்து அந்தப் பெரிய மரத்தையே ஆயுதமாக்கிக் கிங்கரர்களைத் தாக்கத் தொடங்கினான். அடி பலமாக கிங்கரர்களுக்கு விழுந்தன. அனுமன் மரத்தைக் கொண்டு அடித்த ஒரு அடியைக் கூடத் தாங்க முடியாமல் பல கிங்கரர்கள் மண்ணில் சுருண்டு விழுந்து உயிரைத் துறந்தனர். இன்னும் பல கிங்கரர்கள், போரைத் தொடங்க அவர்கள் பலர் கபாலம் பிளந்தும், முதுகு பிளந்தும் இறந்தார்கள். அனுமன் பல கிங்கரர்களை மலையின் மீது வீசி எறிந்தான். இன்னும் சிலரை அனுமன் வானத்தில் தூக்கி ஏறிய அவர்கள் கடலிலும், நரகத்திலும், ஹிமயத்திலும் போய் விழுந்தார்கள், இன்னும் பலர் வானில் போன இடம் தெரியவில்லை. எனினும், தொடர்ந்து தாங்கள் இறப்போம் என்று தெரிந்து இருந்தும் மிகத் தீரத்துடன் போர் செய்தனர் அந்தக் கிங்கரர்கள். அவர்களது போர் குணத்தை அனுமனே பாராட்டினான்.

எனினும் அனுமனும், அவர்களை பந்தாடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. சிலரை அனுமன் விசை கொண்டு பலமாகத் தூக்கி ஏறிய உடல் சிதைந்து இறந்தனர். அக்கிங்கரர்கள் கொண்டு வந்த ஆயுதங்களும் முறிந்து போயின. இவ்வாறாக அனுமான் தீரத்துடன் போர் செய்து தன்னை எதிர்த்து வந்த கிங்கரர்கள் அனைவரையும், அதில் ஒருவர் கூட எஞ்சாதபடி கொன்று குவித்தான்.

அனுமனின் வீரத்தைக் கண்ட வானவர்கள் மிகவும் மகிழ்ந்து அனுமனின் மீது மலர்களை மழை எனப் பொழிந்தார்கள். மனப்பூர்வமாக ஆசி கூறி அனுமனை வாழ்த்தினார்கள். மறுபுறம், அனுமன் கிங்கரர்களுடன் வெகு நேரம் போர் செய்தும் கூட அவன் சோர்ந்து போக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனுமனால் கிங்கரர் கூட்டமே அழிந்ததைக் கண்ட அந்த நந்தவனத்தைப் பாதுகாக்கும் காவலர்கள் உடனே அந்தச் செய்தியை இராவணனிடம் தெரிவித்தனர். அது கேட்ட இராவணன் மிகுந்த சீற்றம் கொண்டான். வெகு காலமாக ருசிக்காத தோல்வியை மீண்டும் ருசிக்கத் தொடங்கினான். இந்தத் தோல்வியை ஜீரணிக்க முடியாத இராவணன். உடனே அருகில் இருந்த சம்புமாலி என்னும் அரக்கனை அழைத்து " நீ உடனே நமது குதிரைப் படைகளுடன் சென்று அந்தக் குரங்கைச் சூழ்ந்து கொண்டு, அதனை தோற்கடித்து கயிற்றால் கட்டி சபைக்கு இழுத்து வா!" என்று ஆணையிட்டான்.

உடனே இராவணனின் அந்த ஆணையை செவி மடுத்த சம்புமாலி மிகவும் மகிழ்ந்து," ஐயனே! தங்களது ஆணைக்கு கட்டுப்பட்ட பல வலிய அரக்கர்கள் இருக்கும் போது, என்னை நோக்கித் தாங்கள் இப்படிக் கட்டளையிட்டீர்கள். தங்களின் கட்டளையால் நான் சிறந்தவனானேன்!" என்று மகிழ்ந்து கூறிவிட்டு, இராவணனின் சபையை விட்டு, அனுமனை பிடிக்க ஆவல் கொண்டு புறப்பட்டான்.