பிரமாத்திரப் படலம்

bookmark

யுத்தகாண்டம்

இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

பிரமாத்திரப் படலம்

(இந்திரஜித்து, இலக்குவன் மற்றும் வானரப்படைகளின் மீது பிரமன் அருளிய அத்திரத்தை ஏவிய செய்தியை விரித்துரைக்கம் பகுதியாதலின் இது பிரமாத்திரப்படலம் எனப்பட்டது)
போர்க்களத்தில் இருந்து விரைந்து சென்ற ஒற்றர்கள் இராவணன் முன்பாகச் சென்று அவனை அடிதொழுது வணங்கினார்கள். பின்பு, அவனிடம் கரனுடைய புதல்வனாகிய மகரக் கண்ணன் இராமனால் இறந்ததையும், அத்துடன் இராக்தாட்சன், சிங்கன் போன்ற திறமை வாய்ந்து அரக்கத் தலைவர்கள் கூட போர்க்களத்தில் மாண்ட விவரத்தையும் தெரிவித்தார்கள். அது கேட்ட இராவணன் கொதிப்படைந்தான். தனது ஒற்றர்களைப் பார்த்து," நீங்கள் எப்போதுமே நல்ல செய்தியை சொண்டு வர மாட்டீர்களா? இது போன்ற செய்திகளை கேட்டுக், கேட்டு நான் அலுத்து விட்டேன்! சரி, போகட்டும், நீங்கள் போய் உடனே எனது மகன் இந்திரஜித்தை அழைத்து வாருங்கள்! " என்றான்.
ஒற்றர்கள் உடனே வாயு வேகத்தில் விரைந்து சென்று, இந்திரஜித்துக்கு இராவணனுடைய கட்டளையைத் தெரிவித்தார்கள். அவ்வாறு, விரைந்து தன்னிடம் வந்த ஒற்றர்களின் பதட்டத்தை கண்ட இந்திரஜித் போரில் நடந்த விவரத்தைக் கேட்டான். ஒற்றர்களும், இந்திரஜித் வினவிய மாத்திரத்தில் போரில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அப்படியே உள்ளபடி சொல்லி முடித்தார்கள்.
அச்சம்பவங்கள் அனைத்தையும் கேள்விப் பட்ட இந்திரஜித்து, தந்தையைப் போலவே, அவனும் கடும் சினம் கொண்டான். அக்கணமே, இராவணனின் மாளிகைக்குச் சென்று, இலங்கேஸ்வரனை சந்தித்து," ஐயனே! நடந்த விவரங்கள் அனைத்தையும் நானும் கூட ஒற்றர்கள் மூலமாகக் கேள்விப் பட்டேன். தாங்கள், இது போன்ற தோல்வியைக் கண்டு மனம் வருந்த வேண்டாம். நான், இதோ இப்போதே போர்க்களம் நோக்கிப் புறப்பட்டுச் செல்கிறேன். அந்த நரர்களையும், வானரர்களையும் எனது ஆசை தீர சித்திரவதை செய்து கொன்று குவிப்பேன். அது கேள்விப்பட்டு நீர் மகிழவும்,தேவர்கள் அச்சம் கொள்ளவும், அத்துடன் சீதை அழவும், இலங்கை நகரம் குதுகளிக்கவும் இவை அனைத்தும் நடக்கத் தான் போகிறது. நிச்சயம் நான் சொன்னதை நடப்பித்துக் காட்டுகிறேன்" என்று கூறி அவனைத் தேற்றினான்.
பிறகு, இந்திரஜித்து தன் தந்தையை வலம் வந்து வணங்கி விட்டு, ஆகாயத்தில் செல்லக் கூடிய ஆயிரம் சிங்கங்கள் பூட்டப்பட்ட தனது ரதத்தில் ஏறிப், பெரும் அரக்க சேனைத் தன்னைப் பின் தொடர, முரசுகளும், பேரிகைகளும் கொட்ட யுத்த களத்தை அடைந்தான்.
அவ்வாறு யுத்த களத்தை அடைந்த இந்திரஜித்து தனது வெள்ளக் கணக்கான சேனையை முறையே அணிவகுக்கச் செய்து கிரவுஞ்ச வியூகம் என்னும் வியூகத்தை அமைத்தான். பிறகு, இந்திரனிடம் இருந்து தான் பரிசாகப் பெற்ற வலம்புரிச் சங்கை ஊதி, அந்த சங்கொலியின் மூலமாக வானர சேனையை போருக்கு அழைத்தான். அவ்வாறு இந்திரஜித்து ஊதிய சங்கின் ஒலி வானர வீரர்களுக்குப் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அது அவர்களுக்கு யமனே சங்கொலி எழுப்பித் தங்களை அழைப்பது போலப் பட்டது.
அவ்வாறு இந்திரஜித்து சங்கொலி கேட்டு, அந்த வானர வீரர்கள் சிதறி ஓடினார்கள். அக்காட்சி கொடிய கானகத்தில் சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டு மான் போன்ற விலங்குகள் பதறி அடித்துக் கொண்டு ஓடுவது போல இருந்தது. மேலும், அரக்க வீரர்கள் வானரர்களின் நிலை கண்டு பரிகசித்து, வானவர்களும் அச்சம் கொள்ளுமாறு முரசு, பணவம், தூரி, உறுமை போன்ற வாத்தியங்களை முழங்கி ஆராவாரித்தார்கள். அதனால், அந்த பெரும் ஆரவாரத்தின் காரணமாக வானரர்களின் காதுகள் யாவும் கிழிந்தது. அவர்களது வாய்கள் உலர்ந்தன. மயிர்கள் கூட உதிரப் பெற்றனர். மேலும் அந்த வானரப் படையினர் செய்வது அறியாது செத்தார் நிலையை சில கணம் அடைந்தார்கள். அது கண்டு அரக்கர்கள் மேலும், மேலும் சிரித்து ஆர்பரித்தனர்.
மறுபுறம் அரக்கர்கள் சிரிக்க, அஞ்சி ஓடும் வானர வீரர்களின் பயத்தைப் போக்க நினைத்த ஸ்ரீ ராமர் அனுமனின் தோள் மீது ஏறிக் கொண்டார். இளைய பெருமாள், ஸ்ரீ இராமபிரானைப் பின்பற்றி அங்கதனின் வலுவான தோள் மீது ஏறிக் கொண்டார். அவ்வாறு, ஏறிக் கொண்ட அவ்விருவரும் உடனே போர்க்களத்தில் இந்திரஜித்து இருக்கும் இடம் வந்து சேர்ந்தார்கள்.
அப்போது நீலன் போன்ற வானரப் படைத் தளபதிகள் கைகளில் மரங்களையும், மலைகளையும் ஏந்திய படி போர்களத்தின் முன் வரிசையில் வந்து நிற்பதைக் கண்டார் ஸ்ரீ இராமர். அப்போது நீலன் முதலான வானர வீரர்களைப் பார்த்து," என்ன காரியம் செய்கின்றீர்? இந்த இந்திரஜித்து போன்ற கொடிய அரக்கனை, சாதாரண மலைகளைக் கொண்டும், மரங்களைக் கொண்டும் தாக்கிக் கொல்ல இயலும் என்று நினைத்தீரோ? இவனது வலிய பாணங்களுக்கு முன்னாள் இந்த மலைகளும், மரங்களும் எம்மாத்திரம். அதனால், நான் சொல்வதைக் கேளுங்கள். இந்திரஜித்து என்ற இந்த மாவீரனுடன் போர் செய்யும் போது மட்டும், நீங்கள் அனைவரும் பின்வரிசையில் நில்லுங்கள். நானும்,லக்ஷ்மணனும் முன் வரிசையில் நிற்கிறோம். உங்கள் வீரத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் ஒன்றும் நான் இதைக் கூறவில்லை. என்னைப் பொறுத்தவரையில் லக்ஷ்மணனின் உயிர் எவ்வளவு முக்கியமோ. அதுபோலவே, உங்கள் அனைவரின் உயிரும் எனக்கு முக்கியம். மேலும், எனக்காக யுத்தம் செய்ய வந்து இருக்கும் உங்களைப் பாதுகாப்பது எனது கடமை அல்லவா? "என்றார்.
ஸ்ரீ இராமரின் வார்த்தைகளைக் கேட்ட நீலன் முதலான வானர வீரர்கள், அவ்வாரே இராமர் கூறியபடி பின் வரிசையில் சென்று நின்று கொண்டார்கள். அடுத்த கணமே, ஸ்ரீ இராமரும் இளையபெருமானும், அதர்மத்தின் ரூபமான அரக்கர்களின் பெரும் படையின் மீது மழை போன்ற பாணங்களை எய்தனர். அப்படி அந்த இரு தசரத குமாரர்களும் விடுத்த பாணத்தில் எண்ணற்ற அரக்க வீரர்கள் கணப் பொழுதில் இறந்தனர். அதனை இந்திரஜித்தும் கண்டான். அவ்வாறு இறந்த அரக்க சேனைகளின் உடல் வானம் வரையில் எழுந்து, ஒரு பெரிய மலையை போலக் காணப் பட்டது. மேலும், இந்திரஜித்து அம்பினாலான பெரும் மழையைப் பார்த்தான். இரத்த ஆற்றினைப் பார்த்தான். அந்த இரத்த ஆறு, மீன்களைப் போல அரக்கர்களின் உடலை சுமந்து செல்வதைக் கண்டான். கணப் பொழுதில், பல வெள்ளம் கொண்ட அரக்கர் சேனையை அழித்து விட்டுப் புன்முறுவல் கொண்டு நிற்கும் இராம லக்ஷ்மணரின் ஆற்றலைப் பார்த்தான். அத்துடன் இறந்த அறுபது வெள்ளம் அரக்க வீரர்கள் மேல் விழுந்து புரண்டு அழும் அவர்களது மனைவிமார்களைப் பார்த்தான். அது கண்டு அவனும் வருத்தம் கொண்டான்.
பின்னர், இந்திரஜித்து அரக்கர் சேனை பெரும் பாலும் அழிந்ததைக் கண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கும் வானவர்களைப் பார்த்தான். அக்கணமே அவன் மனம் வருத்தம் நீங்கி கோபம் கொண்டது. அப்போது தீய சகுனமாக அவனது இடத் தோள் துடிப்பதை உணர்ந்தான். மறுபுறம், இராமபாணத்தின் ஆற்றலைக் கண்டு உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடும் அரக்க சேனையைக் கண்டான்.
உடனே மாயையால் அரக்கர் சேனை ஓடும் அவ்விடம் வந்தான். புறமுதுகு காட்டி ஓடிய அரக்கர் கூட்டத்தை தனது நால்வகை சூத்திரங்களான சாம, தான, பேத, தண்டம் முதலியவற்றைப் பயன்படுத்தி வழிக்குக் கொண்டு வந்து, மீண்டும் அவர்களை போர்க்களத்தில் வானர வீரர்களுடன் மோதச் செய்தான். அத்துடன் அரக்க வீரர்களின் பயத்தை தணிக்க குரங்குக் கூட்டத்தின் மீது எண்ணற்ற பாணங்களை சாரை, சாரையாக விடுத்தான். அந்த பாணங்களின் சீற்றத்தால் வானர வீரர்கள் பலர் மாண்டார்கள்.
அது கண்ட லக்ஷ்மணன் தனது தமையன் ஸ்ரீ இராமபிரானை வணங்கி," அண்ணா! முன்பு நாகாஸ்த்திரத்தை வஞ்சகமாக ஏவி இந்திரஜித் என்னை மயங்கும் படிச் செய்தான், அதனால் நான் போரில் ஒருவேளை தோற்று விட்டதாகக் கூட உலகத்தவர் கூறலாம். அதற்கு நான் இந்திரஜித்தை இன்றைய போரில் கொன்று பரிகாரம் தேட விரும்புகிறேன். மேலும், இந்திரனை தோற்கடித்த இவனை,நான் கொன்று தீர்க்கா விட்டால் நான் உங்கள் தம்பியும் அல்ல, இனி நான் சத்திரிய குமாரனும் அல்ல" என்று வீர சபதம் செய்தான்.
லக்ஷ்மணன் செய்த சபதத்தை கேட்டு தேவர்கள் மிகவும் மகிழ்ந்தனர். ஆனால் ஸ்ரீ இராமரோ புன்னகை கொண்டு லக்ஷ்மணனிடம்," தம்பி நீ ஒரு முடிவை எடுத்து விட்டால் உன்னைத் திருமாலாலும் தடுக்க இயலாதே! அதனால் உனது விருப்பத்தின் படி நடக்கட்டும்" என்றார்.
அண்ணனின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்த லக்ஷ்மணன் அவரது திருவடி தொழுதான். பிறகு ஸ்ரீ இராமரிடம்," அண்ணா! நான் சென்று பிராட்டியைக் கவர்ந்து சென்ற அரக்கர்களைக் கொன்று வருகிறேன். தாங்கள் சிரமம் கொள்ள வேண்டாம், இங்கிருந்த படியே அரக்கர்கள் அனைவரும் எனது பாணத்தால் அழிவதைப் பாருங்கள்" என்று கூறிச் சென்றான்.
லக்ஷ்மணன் தங்கள் மேல் போருக்கு எழும்பியதைக் கண்ட அரக்கர்கள், உடனுக்குடன் அவன் மீது தோமரம், கன்னகம், வேல், தண்டு, முசுண்டி போன்ற ஆயுதங்களை மழையாகப் பொழிந்தனர். அந்த ஆயுதங்களை எல்லாம் இளையபெருமாள் கணத்தில் துண்டாக்கினார். பின்பு, அரக்கர் சேனையை குறிவைத்துப் பல்லாயிரக் கணக்கான ஆயுதங்களை லக்ஷ்மணன் ஏவினான். அவ்வாறு ஒவ்வொரு முறையும் லக்ஷ்மணன் தொடுத்த அம்பில் ஆயிரம் தேர்கள் அச்சாணி இழந்து விழுந்தன; அரக்கர்களின் குதிரைக் கூட்டங்கள் இறந்தன; அரக்கத் தலைவர்களின் தலைகள் அனைத்தும் துண்டு பட்டன. மேலும் லக்ஷ்மணன் ஏவிய அம்புகள் அனைத்தும் காற்றின் உராய்வினால் நெருப்பை கக்கிக் கொண்டு அரக்கர்களின் உடலில் பாய்ந்தன. அதனால், அரக்க சேனை அனைத்தும் கத்துவதற்கும் நேரம் இன்றி கணப் பொழுதில் மாண்டனர். மேலும் லக்ஷ்மணின் கூறிய பாணங்கள் அரக்கர்கள் கைகளில் இருந்த விற்களை முறித்தன, அவர்கள் தேரில் இருந்த வீரக் கொடியை ஒடித்தன; அவர்களின் முரசுகள் தோல் கிழிந்தன; இன்னும் பல அரக்கர்கள் தங்கள் கைகள், கால்கள் போன்ற உறுப்புகளை இழந்து படுகாயம் அடைந்தனர்.
இவ்வாறு போர்க்களத்தில் இளையபெருமாள் கொண்ட வீரத்தால் எங்கும் பயங்கரக் காட்சிகளே தோன்றலாயின. கழுகுகளும், பருந்துகளும் வானில் ஊனுண்ணச் சுற்றித் திரிந்தன. மறுபுறம், பசிக்கு லக்ஷ்மணனின் பாணத்தால் நிறைய ஆகாரம் கிடைத்ததைக் கண்ட பேய்கள் கூத்தாடின.
இளையபெருமாளால் அரக்க வீரர்கள் பலர் அழிய, மறுபுறம் ஸ்ரீ இராமர் தன்னை சுமந்து கொண்டு இருக்கும் அனுமனிடம், இந்திரஜித்தின் அருகே செல்லுமாறு கட்டளை பிறப்பித்தார். அனுமனும் உடனே ஸ்ரீ இராமபிரானின் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு இந்திரஜித்தின் அருகே சென்றான். அக்கணம், இந்திரஜித்து யுத்தம் செய்யும் இடத்துக்கு வந்து சேர்ந்த ஸ்ரீ ராமர் சாரை, சாரையாகப் பாணங்களை அரக்க வீரர்கள் மீது தொடுக்க, அதனால் எண்ணற்ற அரக்க வீரர்கள் மாண்டனர். சில கணங்களில் இந்திரஜித்து, தன்னை சுற்றி இருந்த அரக்கர்களின் பெரும் சேனை மாண்டதால் மிகவும் தனிமைப் படுத்தப் பட்டான். அக்கணம் லக்ஷ்மணனும் அவ்விடம் வந்து சேர்ந்தான். இருவரையும் கண்டான் இந்திரஜித். அக்கணமே பெரும் கோபம் கொண்டான்.
கண்களில் தீப்பொறி பறக்க அவன் இராம லக்ஷ்மணர்களிடம்," நீங்கள் இருவரும் சேர்ந்து என்னைத் தாக்க தீர்மானித்து இருக்கின்றீர்களா? இல்லை உங்களில் யாரேனும் ஒருவர் என்னுடன் போர் செய்து மடிய சித்தம் கொண்டு இருக்கின்றீர்களா? எது எப்படி இருந்தாலும் நான் எல்லா வற்றிற்கும் தயாராகத் தான் வந்து உள்ளேன்" என்றான்.
அவ்வார்த்தைகளைக் கேட்ட லக்ஷ்மணன்," அடே! இராவண குமாரா, இனி நடக்க விருக்கும் யுத்தத்தில் உன்னைக் கொல்வேன் என்று வீர சபதம் செய்துள்ளேன். அதை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்" தாமதம் செய்யாதே வா யுத்தத்திற்கு" என்றான்.
உடனே இந்திரஜித்து லக்ஷ்மணனைப் பார்த்து," அடே லக்ஷ்மணா! நானும் உன்னைக் கொல்வதாகத் தான் எனது தந்தையிடம் சபதம் செய்து வந்து இருக்கிறேன். மேலும், சகோதரர் உங்கள் இருவர் கைகளாலும் இறக்க நான் ஒன்றும் சிறிய தந்தையான கும்பகர்ணனோ, அதிகாயனோ இல்லை. நான் இந்திரனை தோற்கடித்து, நிகும்பலா தேவியிடம் இருந்து அதீத வரங்களைப் பெற்ற இந்திரஜித்! மேலும், இராமா லக்ஷ்மணா, உங்கள் இருவரது உடலில் உள்ள குருதியைக் கொண்டு தான் இறந்த எனது சகோதரர்களுக்கும், சிறிய தந்தைக்கும் தர்ப்பணக் கடனை (நீர் கடன்) செலுத்தப் போகிறேன்.ஆதலால், இனியும் ஏனடா வாயினால் பேச்சு! நான் உன்னுடன் கணைகள் கொண்டு எனது வில்லின் நாணினால் பேச விரும்புகிறேன். நீயும் அதற்குத் தயார் என்றால் இன்று இரண்டில் ஒன்றைப் பார்ப்போம் வா! " என்று அறைகூவல் விடுத்து, உலகம் நடுங்க சிரித்தான்.
இந்திரஜித்தின் அரைகூவல் கேட்டும் சும்மா இருப்பானா லக்ஷ்மணன்? " இனி இவனுடன் பேச ஒன்றும் இல்லை" எனக் கருதியவன் அடுத்த நொடி தனது வில்லில் இருந்து பாணத்தை மழைபோலத் தொடுக்கத் தொடங்கினான். லக்ஷ்மணனின் பாணங்களுக்கு இணையாக இந்திரஜித்தும் பாணங்களை தொடுக்கத் தொடங்கினான். அத்துடன், மாயக் கலைகளில் கைதேர்ந்த இந்திரஜித்து ஒவ்வொரு திசையிலும் தோன்றி லக்ஷ்மணன் மீது பாணங்களை எய்தான். இந்திரஜித்து தொடுத்த பாணங்கள் பல லக்ஷ்மணனின் உடலைக் கீறிக் கிழித்தது. அவன் லக்ஷ்மணன் மீது மட்டும் அல்ல, ஆயிரக்கணக்கான பாணங்களை அனுமன் மீதும், அங்கதன் மீதும் கூடப் பிரயோகித்தான்.
ஆனால்,சற்றே விழித்துக் கொண்ட லக்ஷ்மணன் தன் மீது பாய்ந்த இந்திரஜித்தின் கணைகள் இனி யாரையும் தாக்கக் கூடாது என்று முடிவு செய்து, அக் கொடிய அசுரன் பிரயோகித்த கணைகளை விடக் கொடிய கணைகளை பிரயோகித்து, அங்கதன் மீதும் அனுமன் மீதும் இந்திரஜித்து செலுத்திய மேலும் பல பாணங்களை ஆகாயத்திலேயே வைத்து முறித்து எறிந்தான்.
இந்திரஜித் தனது தவ வலிமையால் பெற்ற அனைத்து பாணங்களையும் லக்ஷ்மணன் மீது ஏவ. அவற்றை எல்லாம் லக்ஷ்மணன் அறிவில்லாதவன் சொல்லிய பொய்யைப் போல வீணாகப் போகும் படிச் செய்தான்.
அவ்வாறாகத், தொடர்ந்து தனுர் வித்தையில் கைதேர்ந்த அவ்விருவரும் பிரயோகித்த பாணங்கள் வானில் ஒன்றுடன், ஒன்று மோதியதால் பூமி எங்கும் நெருப்புப் பொறிகள் பறந்தன. அதனால் காடுகள் பல தீய்ந்தன. விலங்கினங்கள் பல எரிந்தன. ஊழிக் காலம் போல உலகமும் ஆட்டம் கண்டது. மேலும், லக்ஷ்மணன் கண் இமைக்கும் நேரத்தில் பல பாணங்களைத் தொடுத்து இந்திரஜித்தின் கவசத்தை சிதைத்தான். அவனது ரதத்தை உடைத்தான். அவன் சாரதியைக் கொன்றான். அது கண்டு இந்திரஜித்தே லக்ஷ்மணனின் வீரத்தைப் புகழ்ந்தான்.
ஸ்ரீ இராமரும், அனுமனும் கூட லக்ஷ்மணனின் வீரத்தைக் கண்டு மகிழ்ந்தனர். எனினும் இந்திரஜித்து மனதினில்,' இனியும் இங்கு நின்றால் தனக்கு ஆபத்து நேரும்' என்பதை எண்ணி வானத்தில் சென்று மறைந்தான்.
கொடிய இந்திரஜித்து, தனது கண்களில் இருந்து மறைந்தான் என்பதைக் கண்ட லக்ஷ்மணன். பிரம்மாஸ்த்திரத்தை இந்திரஜித்தின் மேல் தொடுக்க சித்தம் கொண்டு, அந்த அஸ்த்திரத்தை தனது வில்லில் ஆவாகனம் செய்யத் தொடங்கினான். அது கண்ட ஸ்ரீ இராமர்," நில் லக்ஷ்மணா! இவ்வாறு செய்யாதே, நீ பிரம்மாஸ்த்திரத்தை இவன் மீது பிரயோகித்தால் அந்த அஸ்த்திரத்தின் சீற்றம் இவனைக் கொல்வதுடன் மட்டும் தணியாது. படைப்புக் கடவுளின் அந்த அஸ்த்திரம் சுற்றுப் புறத்தில் உள்ள அணுக்களையும் பாதிக்கும். பேரழிவை அதனால் உலகம் சந்திக்கும்" என்று கூறி லக்ஷ்மணனை தடுத்தார். அதனால், தனது அன்புத் தமயனின் விருப்பப்படி லக்ஷ்மணன் இந்திரஜித்தின் மீது பிரம்மாஸ்த்திரத்தை பிரயோகிக்கும் எண்ணத்தைக் கைவிட்டான்.
ஆனால், இதனை ஆகாயத்தில் இருந்து நுண்ணிய வடிவம் கொண்டு கவனித்துக் கொண்டு இருந்த இந்திரஜித்து, லக்ஷ்மணன் அண்ணனின் பேச்சைக் கேட்டுக் கைவிட்ட அந்தத் திட்டத்தை, தான் நிறைவேற்ற சித்தம் கொண்டான். ஆம், பிரம்மாஸ்த்திரத்தை அவர்கள் மேல் தொடுப்பதேன்று இந்திரஜித்து முடிவு செய்தான். அதற்கு உண்டான சடங்குகளை விரைவில் செய்து முடிப்பதற்காக, இலங்கைக்கு உடனே செல்லக் கருதி அப்பால் சென்றான். அவனுடைய கருத்தை அறியாது வானத்தில் நெருங்கி நின்ற தேவர்கள், ' இந்திரஜித்து அஞ்சி ஓடினான்' என்று சொல்லி, அவலங்கொட்டிச் சிரித்தார்கள். வானரர்களும் கூட 'இந்திரஜித்து தப்பி ஓடி விட்டான் போலும்!' என்றே சொல்லிக் கொண்டு, ஆர்பரித்தனர்.
அதனால், அனைவரது எண்ணமும் இந்திரஜித்து ஓடி விட்டான் என்றே இருக்க, இராமலக்ஷ்மணர்களும் கூட அனைவரது கூற்றையும் உண்மை என்றே நம்பினார்கள். அதனால், சகோதர்கள் இருவரும், இந்திரஜித்து அடுத்து செய்யப் போகும் கொடுமையான செயலை அறியாத வண்ணம் இருந்தனர். அதன் காரணமாக, சில கணங்களில், ஸ்ரீ இராமர் அனுமனின் தோளில் இருந்தும், லக்ஷ்மணன் அங்கதனின் தோளில் இருந்து இறங்கினார்கள். தொடர்ந்து யுத்தம் செய்ய அரக்கர்களின் படைகளும் அவ்விடத்தில் இல்லாததால், அந்த சத்திரிய சகோதரர்கள் இருவரும் அவர்கள் விற்களையும், அம்புராத்தூணிகளையும், கவசங்களையும், கையுறைகளையும் களைந்தார்கள். வானவர்கள் 'இன்றும் ஸ்ரீ இராமரே வெற்றிக் கனியை பறித்தார்' என்று கூறி கற்பக மலர்களை வானத்தில் இருந்தவாறு அவர் மீது தூவி அவரை வாழ்த்தினார்கள். அக்கணம் சூரியனும் அஸ்தமித்தான்.
ஸ்ரீ இராமர் அச்சமயத்தில் விபீஷணனிடம்," வழிய நமது சேனை இரவிலும், பகலிலும் அதிகமானப் பெரும் போரைச் செய்து உள்ளதால் பெரிதும் சோர்ந்து இருக்கிறது. இச்சேனை உண்பதற்கு உரிய உணவு வருவதற்கும் நேரம் கடந்து விட்டது. விபீஷணா! எனவே, நீ உடனே விரைந்து சென்று அவ்வுணவைக் கொண்டு வருவாயாக!" என்றார்.
பொற்கிரீடம் அணிந்த விபீஷணன், அப்படியே செய்வதாகச் சொல்லி உடன்பட்டு, இராமபிரானைத் தொழுது எழுந்து தமது வீரர்களுடன் சென்றான். அங்ஙனம் சென்றவன், ஒரு நாழிகைப் பொழுதிற்குள் ஒப்பற்ற வாயுபகவானைப் போலக் கடலைக் கடந்து சென்றான்.
விபீஷணன் கடலைக் கடந்த பொழுது, ஸ்ரீ இராமபிரான், இளையவனான லக்ஷ்மணனைப் பார்த்து," ஐயனே! நான் தெய்வ அஸ்த்திரங்களுக்கு உரிய பூஜையைச் செய்ய வேண்டும்.