
சித்திரகூடப் படலம்

அயோத்தியா காண்டம்
இராமன் அயோத்திக்கு அரசனாக முடிசூடத் தேர்ந்தெடுக்கப்படுவதிலிருந்து அயோத்தியா காண்டம் தொடங்குகிறது. இதனால் இதற்கு அயோத்தியா காண்டம் என்று பெயர். அயோத்தியா காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
சித்திரக் கூடப் படலம்
(சித்திரகூட மலையில் இராமபிரான் தங்கியிருந்து நோன்பு செய்தலைத் தெரிவிக்கும் பகுதி என்பது பொருள்.
இராமன் இலக்குவனோடும் சீதையோடும் சித்திரகூடத்துக்கு வந்து சேர்கிறான். சித்திரகூடத்தின் இயற்கை வளங்களைக் கண்டு சீதைக்குக் காட்டி மகிழ்கின்றான். அம்மலையில் உள்ள அருந்தவ வேதியர் இராமனைக் காண வருகிறார்கள். அவர்களை வணங்கி அவர்தம் விருந்தினன் ஆகிறான். கதிரவன் மறைய, மாலை நேரம் வருகிறது, மாலை வழிபாடுகளைச் சீதையோடு இராமன் குடி புகுகின்றான். சாலை அமைத்த இலக்குவனது பேரன்பும் திறமையும் கண்டு இராமன் மனம்நெகிழ்ந்து வருந்திப் பாராட்டுகிறான். அதற்குப் பதில் கூறுகின்ற இலக்கு வனை இராமன் தேற்றுகிறான். சித்திரகூடத்தில் விரதம் ஏற்று இனிது இருக்கின்றான் என்கின்ற செய்திகள் இப்படலத்துள் கூறப்பெறுகின்றன.)
சித்திரக் கூட மலையை அடைந்த இராமர், தன் மனையாள் சீதா பிராட்டிக்கு அதன் வளங்களை எல்லாம் காட்டத் தொடங்கினார். மலைச் சாரலில் நீர் கொண்ட மேகமும் யானையும் வேற்றுமை தோன்றாமல் காணப்படுவதையும்; வரையாடுகள் மரக இரத்தினத்தின் ஒளி தம்மீது படியப் பெற்று தாம் சூரியனது பச்சைக் குதிரைகள் போல் தோன்றுவதையும்; யானைகளையும்;பெரிய வயிறு கொண்ட மலை பாம்புகளையும்; பவள மழையின் அருவியைப் போல், பவளம் சிந்திய தரையில் படுத்திருந்த கவரி மானின் வால் ஜொலிப்பதையும் ; மணிச்சுடரைக் கொண்ட மலைமுகடுகள் சிவபெருமானின் சடைக்கற்றைப் போலவும், அந்த மலை முகட்டில் தங்கும் சந்திரன் அவன் மடியில் வைத்த பிறைச் சந்திரனைப் போலவும், அம் மலையில் இருந்து இறங்கிக் குதித்தோடும் அருவி அவன் முடியில் இருந்து இறங்கும் கங்கையைப் போலவும் காணப்படுவதையும் காட்டினார்.
மேலும் கல்லின் மீது கட்டிய தேன் கூடுகளை மூங்கில் தாக்குவதனால், அவைகளில் இருந்து தேனாறு பெருகிக் கவலைக் கிழங்கு தோண்டிய குழிகளில் நிரம்புவதையும்; தன்னோடு நீராடிய பெண் குரங்கு அருவி நீரை எடுத்துத் தன் மீது வீச, ஆண்குரங்கு மலை முகடுகளில் தங்கிய மேகத்தைப் பிடித்து உலுக்க நீர் உதிர்வதையும்; வேங்கைக் கொம்புகளில் வண்டுகள் உட்காரும் போதெல்லாம், அவைகள் தாழ்ந்து மலர் சொரிவதையும்;வேடுவப் பெண்கள் தினைப் புனத்தில் திரியும் குருவிகளைக் குருவிந்தக் கற்களால் துரத்த, அவைகள் வானில் நட்சத்திரம் போல் எழுந்து பறப்பதையும்; விஞ்சை மகளிர் அம்மலையில் உலவும் அழகையும்; நவரத்தினங்கள் எங்கும் சிந்திக் கிடப்பதையும் பார்!" என்று சீதைக்குக் அம்மலையின் அழகைக் காட்டினார் இராமர்.
அப்படி மலை வளத்தை சீதைக்கு ஸ்ரீ ராமபிரான் காட்டிக் கொண்டு இருக்கையில், அம்மலையில் வாழும் முனிவர்கள் அம்மூவரையும் கண்டு வரவேற்றார்கள். இராமபிரான் அம்முனிவர்களைக் கண்டதும் பணிவுடன் வணங்க. அம்முனிவர்களும் பதில் வணக்கம் செலுத்திய பின் , இராமபிரான் உட்பட எல்லோரையும் அழைத்துச் சென்று நல் விருந்து படைத்தார்கள். அச்சமயம் ஆதவன் தனது பொற் கதிர்களை மெல்லச் சுருட்டத் தொடங்கினான். சந்திரோதயமும் வந்தது. இராமருடன் லக்ஷ்மணனும், சீதையும் கைகளைக் குவித்துக் கண்களை மூடிய வண்ணம் தமது குலதெய்வத்தை பிரார்த்தித்தார்கள்.
இனிய இரவுப் பொழுதும் வந்தது. லக்ஷ்மணன், அண்ணனும் அண்ணியும் தங்க உடனே ஒரு பர்ண சாலையை அமைத்தான். அதிலே, இராமபிரானும், சீதா தேவியும் தங்கினார்கள். இராமபிரான், லக்ஷ்மணன் அமைத்த அந்த பர்ண சாலையில் தங்கினாலும், " அரச குமாரனாக வாழ வேண்டிய தம்பி பணியாளர் போல பர்ண சாலை அமைத்தானே!" என்று தம்பி லக்ஷ்மணன் படும் கஷ்டங்களை நினைத்து மனதினில் வேதனை அடைந்தார் . தான் தம்பியை நினைத்து வருத்தியதை வெளிப்படையாகவே தம்பி லக்ஷ்மணனிடம் தெரிவித்தார் இராமபிரான்.
மறுகணமே லக்ஷ்மணன், "அண்ணா! தாங்கள் இப்பொழுது வருந்துவது சரி இல்லை. தங்களுக்குப் பணி செய்வதே எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அதனால் எனக்கு எந்தவிதத் துன்பமும் இல்லை. ஆனால், என்று மன்னர் சிற்றன்னைக்கு வரம் தந்தாரோ, அன்றே தங்களது துன்பத்துக்கு வழி வகுத்ததாயிற்று!" என்று கூறினான்.
அது கேட்ட இராமபிரான் தம்பி லக்ஷ்மணனிடம்," தம்பி அரசாட்சி என்றுமே சாசுவதம் இல்லாதது. பகைவர் முதலியோரால் கவர்வதற்கு உரியது. மேலும், பேரின்பத்தைக் கொடுக்காதது. இப்பொழுது தவக் கோலங் கொண்டு வனத்தில் வசிக்கின்ற இந்த வாழ்க்கையை நாமே கைவிட்டாலன்றி, அரசாட்சிபோலக் கவரக் கூடியது இல்லை. மேலும் இந்த வன வாழ்க்கையில், எல்லை இல்லாத இன்பத்தைப் பெறலாம். ஆதலால், பெரூதியமும் உண்டு. ஆகவே , அரசு புரிந்து வாழ்வதை விட, இந்த வனவாச வாழ்க்கை தான் மிகவும் சிறந்தது" என்று கூறி லக்ஷ்மணனை சமாதானப் படுத்தினார் ராமபிரான்.