கைகேயி சூழ்ச்சிப் படலம்

கைகேயி சூழ்ச்சிப் படலம்

bookmark

அயோத்தியா காண்டம்

இராமன் அயோத்திக்கு அரசனாக முடிசூடத் தேர்ந்தெடுக்கப்படுவதிலிருந்து அயோத்தியா காண்டம் தொடங்குகிறது. இதனால் இதற்கு அயோத்தியா காண்டம் என்று பெயர். அயோத்தியா காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது

(இக் காண்டம் அயோத்தியில் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறுவதால் இப்பெயர் பெற்றது. இதில் மந்திரப் படலம் முதலாகத் திருவடி சூட்டு படலம் ஈறாக மொத்தம் பதின்மூன்று படலங்கள் உள்ளன. தயரதன் இராமபிரானுக்கு முடிசூட்டக் கருதுவது தொடங்கி, காடு சென்ற இராமனைப் பரதன் சென்று கண்டு திரும்புவது வரையிலான கதை நிகழ்ச்சிகள் இதில் இடம் பெறுகின்றன. தாய் தந்தையர் சொல் தட்டாத இராமன் பண்புச் சிறப்பும், அரசின்மீது சிறிதும்ஆசையில்லாத பரதன் பெருஞ்சிறப்பும், கைகேயியின் கொடுமையும், ஏழை வேடன் குகன் இராமன் மீது காட்டும் பரிவும் இக் காண்டத்தில் நன்கு வெளிப்படுகின்றன.)

கைகேயி சூழ்வினைப் படலம்

(கூனியினால் மனம் திரிந்த கைகேயி தன் அலங்காரத்தை அழித்துக் கொண்டு தரையில் கிடந்தாள். இராமன் முடிசூட இருப்பதை அவளுக்குத் தெரிவிக்க வந்த தயரதன் அவளை எடுத்து அவளது துயரத்திற்குக் காரணம் கேட்டான். அவள் அவனிடம் இரு வரங்களைக் கேட்க. அவனும் தருவேன் என்றான். கைகேயி அந்த இரு வரங்களைக் கேட்டாள். தயரதன் பெருந்துயர் உற்றான். அவள் காலில் விழுந்து ஒரு வரத்தைப் பெற்று, இராமனைக் காட்டுக்கு அனுப்பும் மற்றொரு வரத்தைக் கேட்காதிருக்குமாறு வேண்டினான். அவள் அதற்கு இணங்க வில்லை. அவன் மண்ணில் விழுந்து புலம்பினான். அவள் வரம் தர மறுத்தால் உயிர்விடுவதாகச் சொன்னாள். அவன் வரத்தை நல்கி மூர்ச்சை அடைந்தான். இரவு கழிந்தது; பொழுது விடிந்தது. இராமன் முடிசூடுவதைக் குறித்து நகர மக்கள் மகிழ்ந்தனர். முடிசூட்டு மண்டபத்துள் அரசர்கள், அந்தணர்கள் முதலியோர் நிறைந்தனர். வஷிஸ்டன் முடி சூட்டுவதற்கு வேண்டுவன செய்தான். மன்னனை அழைத்துவரச் சுமந்திரனை அனுப்பினான். அவனிடம் இராமனை அழைத்துவருமாறு சொன்னாள் கைகேயி. அரண்மனைக்குச் செல்லும் இராமனைக் கண்டு மக்கள் மகிழ்ந்தனர். இராமன் அரண்மனையில் அரசனைக் காணாமல் கைகேயியின் அரண்மனை புகுந்தான். அவன் எதிரே கைகேயி வர, அவளை வணங்கினான். அவள், இராமன் காடு செல்ல வேண்டும் என்பது மன்னன் கட்டளை என்றாள். இராமன் மகிழ்ச்சியோடு அவளிடம் விடைபெற்றுக் கோசலையின் மாளிகைக்குச் சென்றான்.)

கைகேயி, கூனி சென்ற பிறகு தனது கூந்தலில் சூடி இருந்த மலரை கசக்கித் தரையில் வீசி எறிந்தாள். தலை விரி கோலமாக, கருப்பு ஆடைகளை எடுத்துக் கட்டிக் கொண்டாள். கை வளையல்கள், இரத்தின மாலைகள், பாத கிண்கிணி என அனைத்தையும் தூக்கி எறிந்தாள். அவள் வீசிய பொழுது அவை அனைத்தும் உடைந்து சிதறியது. பின்பு நெற்றியில் உள்ள திலகத்தை துடைத்து எறிந்தாள். தரையில் விழுந்து புரண்டாள். அக்கணம் அவளது அந்த ரூபத்தைப் பார்த்து மூதேவி, தனக்கு அயோத்தியில் இடம் கிடைத்ததை நினைத்து சிரித்தாள்.

மறுபக்கம், கைகேயியிடம் தசரதருக்கு மிகுந்த அன்பு இருந்தது, "பொழுது விடிந்ததும் இராமனுக்குப் பட்டா஭ிஷேகம், இன்னும் இந்தச் செய்தியை கைகேயியிடம் சொல்லவில்லையே, இந்தச் செய்தியை அவள் கேட்டாள், கோசலையை விட அதிகம் சந்தோஷப்படுவாளே!" என்று எண்ணிய தசரதர். அந்த செய்தியை கைகேயியிடம் கொண்டு சேர்க்க அவளது மாளிகைக்கு விரைந்தார்.

அது ஒரு நள்ளிரவு வேளை, கைகேயி எப்போதும் படுத்திருக்கும் அந்த அறையை நோக்கிச் சென்றார் தசரதர். ஆனால், அவள் அங்கு இல்லாதது கண்டு திடுக்கிட்டுப் போனார். பின் கைகேயியை தேடி அரண்மனை முழுவதும் திரிந்தவர், இறுதியாக அரண்மனை அந்தப்புரத்தில் உள்ள ஒரு அறையில் கைகேயியைக் கண்டார். அவளது கோலம் கண்டு அதிர்ந்தார். அவள் வெறும் தரையில் படுத்திருப்பதைக் கண்டு மன வேதனை அடைந்தார். கைகேயி அருகில் வந்தார், உடனே அவர் பெண்மானை தனது துதிக்கையால் யானை தூக்குவது போல, அவளைத் தமது இரு கையாலும் தூக்கத் தொடங்கினார். ஆனால், ஏற்கனவே ஒரு தீர்மானத்தில் இருந்த கைகேயி அவரைத் தூக்க விடவில்லை. தன்னைத் தூக்கத் தொடங்கிய கைகளைத் தள்ளி, ஒரு மின்னல் கொடி போல் துவண்டு தரையில் விழுந்தாள். கணவரிடம் பேசவும் இல்லை. நீண்ட பெருமூச்சை மட்டும் ஆயாசத்துடன் வெளியேற்றினாள். அது கண்ட தசரதர், பல கோணத்தில் சிந்தித்தார்.

தசரதர் அப்போது அவளுடைய கொடிய எண்ணத்தை அறியவில்லை," உனக்கு இப்போது என்ன வந்து விட்டது? ஏன் இவ்வாறு அலங்கோலமாகப் படுத்துக் கிடக்கிறாய்? உடம்பில் ஏதேனும் நோய் வந்து விட்டதா? அப்படி ஏதேனும் வந்து இருந்தால் சிறந்த மருத்துவர்களைக் கொண்டு நான் தீர்க்கிறேன். இல்லை, யாரேனும் உன்னை அவமதித்து விட்டார்களா? அப்படி ஒரு வேளை நடந்து இருந்தால், அக்குற்றத்தை செய்தவர்களை கொன்று விடுகிறேன் சொல் தேவி!" என்று அன்புடன் கேட்டார்.

கைகேயி நீர் கொண்ட மேகம் போல, தன் பெரிய கண்களில் நீர் வழிந்து மேலாடையின் மேல் சிந்தும் படி அழுது கொண்டே, "என் மேல் உங்களுக்கு அன்பு இருக்கின்றதா? உங்களிடத்தில் அந்த அன்பு இருந்தால், நீங்கள் முன்பு எனக்குக் கொடுத்த இரண்டு வரங்களையும் இப்போது கொடுங்கள்!" என்றாள்.

அவ்வாரத்தைகளைக் கேட்ட தசரதர் மெல்லச் சிரித்தார்." இவ்வளவு தானா உன் பிரச்சனை? நீ அப்படி என்னக் கேட்கப் போகிறாய்? சரி, நீ என்ன கேட்டால் தான் என்ன? இந்த நல் வேளையில் நீ கேட்ட வரத்தை இப்போதே தருகிறேன், இது எனது மகன் ராமன் மீது ஆணை!" என்று வாக்களித்தார் தசரதர்.

தனது முதல் திட்டம் நிறைவேறிய கைகேயி கொஞ்சம் ஆறுதல் அடைந்தாள். இப்போது, முழு திட்டத்தையும் செயல் படுத்தத் தீர்மானித்தவளாக " வேந்தே! நீர் சிபிச் சக்கரவர்த்தி தோன்றிய சூரிய குலத்தில் வந்தவர். நான் ஒன்றும் புதிதாக எதையும் உம்மிடம் கேட்க வில்லை. அன்று நான் உமது உயிரைப் போரில் இரு முறை காத்தேன். அதற்கு ஈடாய் இரு வரங்களைத் தருவேன் என்று வாக்களித்தீர்கள். அவ்வரங்களை, வேண்டிய போது கேட்கலாம் என வைத்து இருந்தேன். இப்போது அவ்வரங்கள் எனக்குத் தேவைப்படுகிறது, ஆதலால் அதனையே இப்போது கேட்கிறேன். நீரும் தருவதாக சற்று முன் ராமனின் மீது ஆணை இட்டுக் கூறி உள்ளீர்கள் .இதற்கு சூரிய சந்திரர்கள், தேவர்கள் என அனைவரும் சாட்சி" என்றாள்.

தசரத சக்கரவர்த்தி," நான் சூரிய குலத்தில் தோன்றியவன்.வாக்கு மாறாதவன். அதனால், நீ மேற்கொண்டு பீடிகை போடாமல், தடுமாற்றமோ வருத்தமோ இல்லாமல், உடனே நீ கேட்க விரும்பிய அந்த வரங்களை கேள். இப்பொழுதே நீ கேட்பதைக் கொடுக்கிறேன்" என்றார் தசரத சக்கரவர்த்தி.

கைகேயி அந்த இரு கொடிய வரங்களையும் கேட்கத் துவங்கினாள் "வேந்தே! நான் கேட்க நினைத்த வரங்கள் இது தான். தாங்கள் கொடுத்த முதல் வரத்தினால், என் மகன் பரதன் நாடாள வேண்டும். இரண்டாவது வரத்தினால் இராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும். இதுவே நான் உங்களிடம் இப்போது வேண்டும் அந்த இரு வரங்கள்" என்றுக் கூசாமல் கேட்டு முடித்தாள் (கைகேயி).

இந்த வரங்களை கைகேயி கேட்டு முடித்ததும், கொடு விஷம் கொண்ட ராஜ நாகம் தீண்டியது போல, தசரதர் துடித்துப் போனார், அவரது உடல் முழுதும் நடுங்கியது, சிறிது நேரத்தில் பாம்பு கடித்த யானை போல தரையில் மயங்கி விழுந்தார். பின்னர் சிறிது நேரத்தில் மூர்ச்சை தெளிந்தார், இருந்தாலும் அவரது மனம் மிகவும் வெதும்பியது. நா வரண்டது. கொஞ்சம், கொஞ்சமாக உயிர் அவரை விட்டுப் போய்க் கொண்டு இருப்பதை உணர்ந்தார். மனம் தளர்ந்தார். அழுதார். அப்போது கண்கள் கண்ணீருக்குப் பதிலாக இரத்தத்தை சிந்தின. பிறகு மீண்டும் மூர்ச்சை அடைந்தார், பின் எழுந்தார், ராமனை நினைத்துப் புலம்பினார், சில சமயம் அவரது சத்திரிய உணர்வு விழித்துக் கொள்ளவே, இவ்வளவு கொடிய வாரத்தையைக் கேட்கத் துணிந்த கைகேயியை தரையில் மோதிக் கொல்லத் துடித்தார். ஆனால், உலகம் தன்னைத் தூற்றுமே என அஞ்சினார். அதன் பொருட்டு தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார். தான் ஏன், இப்படி ஒரு வரத்தை அன்று கைகேயிக்கு அளித்தோம் என்று எண்ணி மனம் கசந்தார். தசரதர் படும் துயரத்தை நினைத்து தேவர்களும் அழுதார்கள்.

அச்சமயத்தில் கணவரின் வருத்தத்தைக் கண்டால் கைகேயி. ஆனால் அவள் அதனைக் கண்டு மனம் இறங்கவில்லை. இப்படி ஒரு துன்பத்தை கணவருக்கு அளித்து விட்டோமே என நினைத்து அவள் வெட்கப்படவும் இல்லை. காரணம் கோசலையின் மீது பொறாமை வந்ததால், பெண்மையை மறந்த பெண்களின் வரிசையில் அப்போது சேர்ந்த இருந்தாள் கைகேயி. தசரதர் படும் வேதனைகளை எல்லாம் பார்த்தவளாக சிலை போல நின்று கொண்டு இருந்தாள் கைகேயி.

"இறைவா, ஏன் இப்படியும் சில பெண்களைப் படைத்தாய்?" என்று நினைத்துக் கொண்டு, தசரதர் கைகேயியிடன் "அடி, கைகேயி! இப்படி நீ கேட்கிறாயே. தெய்வத்துக்கே இது அடுக்குமா? பாவமாக இல்லையா உனக்கு? நீ இப்படிக் கேட்பவள் அல்லவே, ஒரு வேளை வஞ்சகர்கள் யாராவது உன்னைத் தூண்டி விட்டார்களா? இப்படிக் கேட்கச் சொல்லி சொல்லிக் கொடுத்தார்களா? உண்மையைச் சொல்" என்றார்.

"எனக்கு யாரும் எதையும் சொல்லிக் கொடுக்கவில்லை, வீண் வார்த்தைகள் ஏன்? நீங்கள் எனக்கு வாக்கு அளித்த படி நான் கேட்ட அந்த இரு வரங்களையும் கொடுக்கின்றீர்களா? இல்லை மகா சக்கரவர்த்தி தசரதர் தனது மனைவியிடம் கொடுத்த வாக்கை காப்பாற்ற வில்லை, என்று உலகம் உங்களை தூற்றும் படி, நான் இப்போதே இறக்கவா?" என்றாள் கைகேயி.

அது கேட்ட தசரதர் "ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர் ஒரு தீத் தொழிலைச் செய்தால், அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த எல்லோருக்குமே அதனால் பழி வந்து சேரும். இது உலக இயற்கை. அப்படிப் பெண் இனத்தைச் சேர்ந்த கைகேயி கணவனின் இந்த நிலை கண்டும் மனம் மாறாமல் இருக்கிறாளே, இதற்காக உலகத்தில் பெண்களே இல்லாதபடி செய்து விடலாமா" என்று கூட எண்ணினார். ஆனால், அந்த தருமத்தின் தலைவனுக்கு அது போன்ற காரியங்கள் செய்ய மனம் ஒப்பவில்லை." கைகேயியை தனது வாள் கொண்டு கொள்வதை விட, இராமன் நாடாள்வதற்கு ஒத்துக் கொள்ளும் படி வேண்டுவதே சரி!" என்று எண்ணி மெல்ல எழுந்தார் தசரதர். மீண்டும் கைகேயியிடம் பேசத் தொடங்கினார் தசரதர்," கைகேயி! நீ கேட்டு வாங்கும் அரசை உன் மகன் நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டான். ஒருகால் அவன் ஏற்றுக் கொண்டாலும் உலகத்தவர் உன்னனயே பழிப்பார்கள். அப்படிப்பட்ட பழியை நீ சுமந்து கொள்வதால் உனக்கு என்ன பயன்? இராமன் அரசு புரிய வேண்டும் என்பதில்லை. உன் ஆசையை அறிந்த மாத்திரத்தில் இராமன் தானே பரதனுக்கு அரசைத் தந்து விடுவான். அப்படியிருக்க, இராமன் காடு செல்லவும், பரதன் நாடாளவும் ஏன் ஆசைப்படுகிறாய்? உன் ஆசை விரும்பத் தக்கது அல்ல. இதனை மூவுலகத்தவரும் விரும்ப மாட்டார்கள். மேலும் பெண்ணே! தருமம் செய்வதில் சளைக்காத கேகய நாட்டின் அரசருக்குப் பிறந்தவளே, என் கண்களை நீ வரமாகக் கேட்டு இருந்தாலும் சந்தோஷமாகக் கொடுத்து இருப்பனே. ஆனால் ராமன் என் உயிரினும் மேலானவன் ஆயிற்றே. சரி, உனது விருப்பப்படி நீ வரத்தைப் பெற விரும்பினால். முதல் வரமான இந்த அரசை உன் மகனுக்காகப் பெற்றுக் கொள். அந்த இரண்டாவது வரத்தை மட்டும் கேட்காமல் மறந்து விடு. நான் வாக்கு மாறாதவன் தான், ஆனால் நீ கேட்கும் வரங்களில் ஒன்று எனது உயிரைப் பறிக்கும் வரமாக உள்ளதால், அதனை மாற்றிக் கொள் என்று தான் உன்னிடம் வேண்டுகிறேன். பேய் கூட ஒருவர் தன்னை இரந்தால், தாய் போலக் கருணை கொண்டு வேண்டியதைத் தருகின்றதே. ஆதலால், நீ மனம் இறங்கி நான் வேண்டுவதைத் தரக் கூடாதா? "என்று கண்ணீர் மல்க மன்றாடினார் தசரதர்.

ஆயினும் கைகேயி சிறிதும் மனம் இறங்கவில்லை. அவரின் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கவும் இல்லை. "மணாளரே! இந்த வரங்களை முன்னே வாயால் கொடுத்தீர்கள். இப்பொழுது கொடுக்க மறுக்கிறீர்களே. நீங்களே இப்படிச் செய்தால் உலகத்தில் உண்மையை நிலை நாட்டுவதற்கு யார் இருக்கிறார்கள்?" என்றாள்.

கைகேயியின் வார்த்தைகளில், தசரதர் அவளின் கெடு மனதைக் கண்டார். பின்னர், அப்படிப் பட்டவளிடம் பேச நேர்ந்ததற்காக வெட்கி மீண்டும் மூர்ச்சை அடைந்தார். பின்னர் மீண்டும் சுய உணர்வு பெற்று கடைசியாக கைகேயியிடம்,"கோசலை மீது பொறாமை கொண்டவளே, நீ அதிகாரம் செலுத்தும் படி பரதனே முடி சூடி அரசு ஆளட்டும். அந்த வரத்தைப் பின் வாங்காமல் கொடுத்தேன். ஆனால், என் கண்மணி இராமனைக் காட்டுக்குச் செல்ல விடாமல் இந்த நகரத்திலேயே இருக்க மட்டும் அருள் புரிய வேண்டும்!" என்றார்.

"பெரும் வீரரான நீங்கள், ஒரு பெண்ணிடம் இப்படிக் கெஞ்சிக் கொண்டு இருக்கின்றீர்களே! ஆனால், நீங்கள் எப்படிக் கெஞ்சினாலும் எனது முடிவில் மாற்றம் இல்லை. நீங்கள் எனக்குச் செய்த சத்தியத்தை நிறைவேற்றாவிட்டால், உங்கள் முன் நானே உயிரை விட்டு விடுவேன். என் மகனுக்குப் பட்டங்கட்டி, இராமனைக் காட்டுக்கு அனுப்பி, எனக்கு எதிரிகள் இல்லாமல் செய்யுங்கள். இல்லாவிட்டால் சத்தியம் தவறிய நீங்கள் கடைத்தேற முடியாது. "என்றாள் கைகேயி.

இது கேட்ட தசரதர் "ஒரு பெண்ணின் சாவுக்கு நான் காரணமாகக் கூடாது, வாக்கு தவறிய பெயரும் என்னை வந்து அடையக் கூடாது, அதனால் இவள் கேட்டபடி வரத்தை கொடுத்தலே சரி" என்று உறுதி கொண்டார். பிறகு கைகேயியைப் பார்த்து,"நீ கேட்ட வரத்தை தந்தேன்...தந்தேன்! ஆனால் சிலவற்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், கற்புடைய பெண்கள் கணவருக்கு முன் இறந்தனர். அப்படியில்லாமல் தமக்கு முன் கணவர் இறப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தவர் யாருமே இல்லை! ஆனால், நீயோ அந்த நிலையை அடையப் போகிறாய். உன்னை விடப் பாவி உலகில் யாரும் இல்லை. இராமன் காடு செல்லப் போகிறான். அவன் நகரை விட்டுப் பிரியும் பொழுது என் உயிரும் பிரிந்து விடும். இது சத்தியம்.ஆனால், நீயோ இந்த மண் உலகில் இருந்து சீரழியப் போகிறாய். குற்றம் செய்கிறோமே, என்ற உணர்வே இல்லாமல் குற்றம் செய்யும் பெண்ணே, கேள், நான் சாபம் இடுகிறேன், இனி இந்த உலகத்தில் கைகேயி என்ற பெயர் எந்தப் பெண்ணுக்கும் வைக்கப் பட மாட்டாது. நெஞ்சம் தனில் கருணையை அழித்து விட்டப் பேயே, உனது சொல்லம்பால் என் உயிர் பிரியப் போகிறது. அதனால் நீ உலகத்தின் பழிச் சொல்லுக்கு ஆளாவாய். ஆனால், நான் என் செய்ய, அரசர்களையும், அரக்கர்களையும் போரில் வென்ற நான், இப்போது எனது வீட்டில் வாழும் ஒரு பெண்ணினால் உயிர் விட்டேன் என்ற நிலையை அடையப் போகிறேன். இது நான் செய்த பாவம், அதனால் விதி செய்த கோலம், ஆனால் நீயோ, கணவனைக் கொன்ற பெரும் பழி நிலைத்து இருக்க உனது மகனுடன் இனிது அரசு புரிவாய் " என்று நொந்து கூறினார் தசரதர். பின்பு மீண்டும் மூர்ச்சை அடைந்தார்.

ஆனால், தசரதர் சொல்லிய வார்த்தைகளைப் ஒரு பொருட்டாகவே மதிக்காத கைகேயி. தான் கேட்ட வரம் கிடைத்த சந்தோஷத்தில் அந்த நள்ளிரவில் தூங்கச் சென்றாள். சில, கணப் பொழுதில், இந்தக் கேடு கெட்டப் பெண்ணின் முகத்தை இனியும் பார்க்க வேண்டுமா? என்று நினைத்த இரவுப் பெண், ஓடி ஒளிந்தாள். அந்நேரம் சேவல் கூவியது. தன் குலத்தில் பிறந்த தசரதரின் உயிரை எடுக்கும் படிப் பாவத் தொழில் புரிந்த கைகேயியின் மீது கோபம் கொண்டவன் போலச் சூரியன் செந்நிறத்துடன் கீழ்த்திசையில் எழுந்தான்!

நள்ளிரவில் நடந்த இவ்விஷயங்கள், ஏதும் அறியாத அயோத்தியை மக்கள் இராமரின் முடிசூட்டு விழா நடக்கப் போவதாகக் கருதி, அந்நாளைப் பொன் நாளாக நினைத்து எழுந்தார்கள். பெண்கள் சிலர், ராமனின் முடி சூட்டு விழாவைக் காணப் போகிறோம், என்ற எண்ணத்தில் இரவு முழுக்கப் பொய்த் தூக்கம், தூங்கி எழுந்தார்கள். மறுபுறம் அரசர்கள், அந்தணர்கள் மற்றும் வஷிஸ்டர் உட்பட முனிவர்கள் பலரும் இராமனின் பட்டா஭ிஷேகம் காண அவைக்கு வந்து சேர்ந்தார்கள். பிறகு, புரோகிதரான வஷிஸ்டர் அன்று காலை செய்ய வேண்டிய சடங்குகளை முறைப்படி வேதங்கள் ஓத செய்து முடித்தார். பின்பு சடங்குகள் யாவும் முடிந்தவுடன் அமைச்சர் சுமந்திரரிடம் தசரத சக்கரவர்த்தியை அழைத்து வருமாறு பணித்தார் (வஷிஸ்டர்). அதன் படி சுமந்திரரும் தசரதரைக் காண அரண்மனை முழுதும் தேடினார். பின் காணக் கிடைக்காமல், மகாராணி கைகேயியின் ராஜ மாளிகைக்கு வந்து சேர்ந்தார். அங்கு நிலை குலைந்து கிடக்கும் தசரதரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஏன்? என்ன? என்று சக்கரவர்த்தியிடம் விஷயத்தை கேட்பதற்குள், கொடிய தேள் போல அவ்விடம் வந்தாள் கைகேயி, அவளைப் பார்த்த சுமந்திரர் வணக்கம் தெரிவிக்க, கைகேயியோ பதில் வணக்கம் கூட கூறாமல், இராமனை உடனே அழைத்து வருமாறு சுமந்திரரிடம் கூறினாள். புறாவைப் போன்ற வெண்மை மனம் கொண்ட சுமந்திரரோ, விஷயம் ஏதும் அறியாதவராக, " ராணி கைகேயி, முடி சூடப் போகும் ராமரை வாழ்த்துவதற்காகத் தான் அழைக்கிறார் போல" என்று நினைத்துக் கொண்டு, ராமனைத் தேடித் போக, ராமனே சுமந்திரருக்கு எதிராக தந்தை தசரதரைத் தேடி வந்து கொண்டு இருந்தார். இராமபிரானைக் கண்ட சுமந்திரர் கைகேயி அவரை அழைத்த விஷயத்தைக் கூற, இராமபிரான் மிகவும் சந்தோஷத்துடன் அன்னை கைகேயியை பார்க்க அவர்களது மாளிகைக்குச் சென்றார். பின்னர், மாளிகையினுள் அன்னை கைகேயியை வணங்கி நின்றார் ஸ்ரீ ராமர். தன்னை வணங்கி நிற்கும் இராமரிடம் " உனது தந்தை உனக்குச் சொல்லச் சொல்லி கட்டளையை என்னிடம் கூறினார். அதனைக் கேட்கச் சம்மதமானால் சொல். உடனே கூறுகிறேன்!" என்றாள்.

"அப்படியா தாயே! மிக்க நன்று. தந்தையின் கட்டளையைத் தாங்கள் சொல்லக் கேட்பது எனக்கு வாய்த்த பெரும் பேறு அல்லவா? உடனே அந்தக் கட்டளையைத் தெரிவித்தால் சிரமேற் கொண்டு செய்வேன்!" என்று பதில் மொழிந்தார் இராமர்.

"சரி, சொல்கிறேன். பரதன் இந்த உலகத்தை அரசாள வேண்டும். நீ மரவுரி தரித்து காடு சென்று புண்ணிய நதிகளிலே நீராடி பதினான்கு ஆண்டுகள் கழித்த பின்பு திரும்பி வர வேண்டும். இதுவே தந்தை உனக்கிட்ட கட்டளை!" என்று கூறி முடித்தாள் கைகேயி.

இதனைக் கேட்டு இராமர் வார்த்தைகள் ஏதும் பேசாமல், வருத்தங்கள் கூட இல்லாமல், ஏதோ ஒரு வகையில் இதனைத் தான் பெற்ற பாக்கியமாகவே கருதி தந்தையின் அந்தக் கட்டளையை ஏற்றுக் கொண்டார். "ராஜ்யமே ஒரு சுமை தான், இப்போது அது தம்பி பரதனுக்கு அளிக்கப் படுவது பெரும் மகிழ்ச்சியே" என்று மனதில் கூறிக் கொண்டு. வண்டிச் சுமை நீங்கிய எருது போல மகிழ்ந்தார். உடனே கைகேயியிடம்," தாயே இதற்கு அரசர் கட்டளையிட வேண்டும் என்பதில்லை. தாங்களே கூறினாலும் அதைச் செய்யக் காத்துக் கொண்டு இருக்கிறேன். மேலும், என் தம்பி பெற்ற அரசு நான் பெற்றது போலத் தான். ஆகவே, உங்கள் கட்டளையை ஏற்றுக் கொண்டு இன்றே கானகம் புறப்படுகிறேன்" என்று கூறி கைகேயியிடம் விடை பெற்றுக் கொண்டு, தனது தாய் கோசலையிடமும் விடை பெற்று செல்ல, கோசலையின் மாளிகைக்குச் சென்றார்.