குகப் படலம்

குகப் படலம்

bookmark

அயோத்தியா காண்டம்

இராமன் அயோத்திக்கு அரசனாக முடிசூடத் தேர்ந்தெடுக்கப்படுவதிலிருந்து அயோத்தியா காண்டம் தொடங்குகிறது. இதனால் இதற்கு அயோத்தியா காண்டம் என்று பெயர். அயோத்தியா காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

குகப் படலம்

(வனம் புகுந்த இராமன் குகனைத் தோழமை கொண்ட செய்தியை உணர்த்தும் பகுதியாதலின் குகப்படலம் எனப் பெயர் பெற்றது. குகன் கையுறை ஏந்தி இராமனைக் காண வருதலும், இலக்குவன் மூலம் இராமனது அழைப்புப் பெற்று அவனைக் காணுதலும், கையுறைப் பொருளைத் தருதலும், தேனும் மீனுமாகிய அவற்றை அன்பினால் இராமன் ஏற்றுக்கோடலும், மறுநாள் நாவாயுடன் வருக என்ற இராமன் வார்த்தையை அவனது தனிமைத் துன்பம் நோக்கிக் கசிந்த மனத்தனாய் மறுத்துக் குகன் அங்கேயே இருத்தலும், அன்றிரவெல்லாம் கண்விழித்து நின்ற குகன் காலைக் கடன் முடித்த இராமன் ஆணையின் வண்ணம் நாவாய் கொண்டு வராது இராமனைத் தன் சிருங்கிபேர நகரிலேயே தங்க வேண்டுதலும், இராமன் மீண்டும் வரும்போது குகனிடத்திற்கு வருவதாகக் கூற, அதனை ஏற்று, குகன் நாவாய கொணர, மூவரும் ஏறிக்கங்கைக் கரையைக் கடத்தலும், சித்திரகூடத்திற்கு வழி வினாவிய இராமனுக்குத் தன்னையும் உடன் கொண்டு செல்லக் குகன் வேண்ட, இராமன் குகனை அவன் குடிகளுடன் இருக்கப் பணிக்க, குகன் விடைபெற, மூவரும் வனத்துள் செல்லுதலும் ஆகிய செய்திகள் இதனுள் கூறப் பெறுகின்றன.)

ஆயிரம் படகுகளுக்குத் தலைவனான குகன், இராமன் கங்கை கரைக்கு வந்து இருக்கும் விவரம் அறிந்து அவரைக் காண வருகிறான். குகனைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், சிறந்த வில்லாளி, கங்கைக் கரையில் நீண்ட காலமாகப் படகோட்டி வாழ்பவன். துடியென்னும் பறையை உடையவன். தோலினால் தைத்த செருப்பை அணிந்த பெரிய கால்களை உடையவன். அவன் மேனி மிகவும் கருமை நிறம் கொண்டது. இருளும் அதைக் கண்டு அஞ்சும். ஆனால், அவன் பெரும் வேடுவர் சேனையின் தலைவன். குகன் அவர்களிடம் , தலையை வெட்டிக் கொடுக்கச் சொன்னாலும் கொடுப்பவர்கள்.

குகன் தனது தொடைகளில் காழம் என்னும் உடையை அணிந்து இருந்தான். கங்கையின் ஆழத்தை அறிந்த அவன் செந்நிறத் தோலை இடுப்பில் உடுத்தி இருந்தான். இரத்தக்கறை படிந்துள்ள வாளை இடையில் கட்டி இருந்தான். அவன் மேனி எங்கும் கேசங்கள் காணப்பட்டன. மிருகங்களின் இறைச்சியையும் மீனையும் தின்று தின்று அவன் வாய் புலை நாற்றம் அடித்தது. மிருகங்களை வேட்டை ஆடி ஆடி அவன் முகத்தில் சிரிப்பை இழந்தவன். ஆனால், அவன் விழிகளில் கொடிய கோபத்தின் சுவடு மட்டும் மறையாமல் இருந்தது. கங்கை நகரில் இருக்கும் சிருங்கிபேரம் என்னும் நகரத்துக்கு அரசனானவன் குகன், தன் கைகளிலே தேன் நிறைந்த குடுவைகளையும், சமைத்த சுவையுள்ள மீன்களையும் எடுத்துக் கொண்டு இராமனைக் காண வந்தான். முனிவரின் பர்ண சாலைக்குள் போக வேண்டி இருந்த காரணத்தால், அவன் மனம் மாமிசங்களுடன் செல்ல விருப்பம் கொள்ளாமல், முனிவர்களின் பர்ண சாலைக்கு சற்று வெளியில் நின்றபடியே, இராமன் இருக்கும் திசையை நோக்கி ,"இறைவா! நாய் போன்றவன் நான். உமது கட்டளையைச் செய்ய இன்றே நான் வந்து விட்டேன்!" என்று உள்ளே இருப்பவர்களுக்குக் கேட்கும் படி உரக்கக் கூவினான்.

அது கேட்டு வெளியே வந்தான் லக்ஷ்மணன்.லக்ஷ்மணன் குகனை பார்த்து "யார்? நீ !" என்று வினவ. குகன், லக்ஷ்மணனிடம், தனது அறிமுகம் சொல்லி, தான் ராமனைக் காண வந்து இருக்கும் விவரத்தையும் எடுத்துச் சொன்னன். உடனே, லக்ஷ்மணன், குகனை அங்கேயே நிற்க சொல்லி விட்டு, அண்ணன் இராமபிரானிடம் உத்தரவு கேட்கச் சென்றான்.

அப்பொழுது இராமபிரானிடம் லக்ஷ்மணன்," அண்ணலே, தூய உள்ளத்தவன். தாயினும் அன்பு கொண்டவன். கங்கையில் ஒடம்விடும் வேடன். குகன் என்னும் பெயருடையவன். தங்களைக் காணச் சுற்றத்தாருடன் வந்து இருக்கிறான்" என்று செய்தியைத் தெரிவித்தான்.

லக்ஷ்மணனின் இந்தச் செய்தியை கேட்ட இராமபிரான், மிகவும் மகிழ்ந்து லக்ஷ்மணை நோக்கி " தம்பி லக்ஷ்மணா உடனே குகனை அழைத்து வா" என்று பணித்தார். உடனே லக்ஷ்மணன் சென்று அன்புடன் குகனை உள்ளே, ராமனைக் காணும் படியாக அழைத்து வந்தான். இராமனைக் கண்ட குகன், தாயைக் கண்ட பிள்ளை போல ஆனந்தக் கண்ணீர் கொண்டு வணங்கி நின்றான்.

" குகனே, உன் போன்ற ஒரு அன்புடையவனைக் கண்டதில் மனம் மகிழ்ந்தோம், உட்கார்! " என்றார் இராம பிரான். ஆனால், குகனோ இராம பிரானுக்கு முன் தான் அமருவதா? என்று அந்த ஆசனத்தில் அவன் உட்காரவே இல்லை. பிறகு இராம பிரானை நோக்கி," தேவரீர் ! நல்ல இனிய கொம்புத் தேனும், சமைத்த சுவையுள்ள மீனும் தாங்கள் உண்பதற்குக் கொண்டு வந்துள்ளேன். இவற்றை உண்பதில் தேவரீரின் மனக் கருத்து என்னவோ?"என்று கேட்டான்.

குகன் கொண்டுவந்த மீனைக் கொண்டு அவன் தன் மேல் எவ்வளவு ஆழமான ஒரு அன்பை வைத்துள்ளான் என்பதை இராமபிரான் அறிந்து கொண்டார். அத்துடன் அவன் கொண்டு வந்த சுவைமிக்க மலைத்தேன் கொண்டு எவ்வளவு உயர்வாக அந்த அன்பை வெளிப்படுத்துகிறான் என்று கண்டு மகிழ்ந்தார். பிறகு முனிவர்களின் பர்ண சாலையில் மீன் உண்பதை விரும்பாத இராமபிரான். குகனிடத்திலே," மனதில் பெரும் பக்தியுடன் நீ அவற்றைக் கொண்டு வந்து இருக்கிறாய். ஆகவே, அது கிடைத்தற்க்கரியது. அமுதை விடச் சிறந்தது. எனவே நீ கொண்டு வந்த பொருளின் தன்மையை ஆராயாமல், அவற்றை தூய பொருளாகவே அங்கீகரிப்போம். சில காரணங்களால் நீ கொண்டு வந்தவனவற்றை உண்ண முடியாத நிலையில் இருக்கிறோம். இருந்தாலும், நாம் அவற்றை அங்கீகரித்ததே உண்டது போல ஆகும்!" என்று, குகன் மனம் மகிழும்படிச் சொன்னார் ஸ்ரீ ராமபிரான்.

மேலும் அவனைப் பார்த்து," நாங்கள் இன்று இங்குத் தங்கி, நாளைக் கங்கையைக் கடக்க நினைத்து இருக்கிறோம். ஆதலால், நீ சுற்றத்துடன் உன் வீட்டிற்குச் சென்று நாளை விடியலில் மரக்கலத்தோடு வா!" என்றார்.

ஆனால், இராமபிரான் அவ்வளவு பெரிய சக்கரவர்த்தியின் மகன், மரவுரி தரித்து கானகத்தில் மண் தரையில் அதுவும் இப்போது முனிவர்களின் குடிலில் அமர்ந்து இருப்பது கண்டு மனம் வருந்தினான் குகன். அதனால், இராமபிரான் " போய் வா" என்று விடை கொடுத்தப் பின்னும் கூட அவ்விடம் விட்டுச் செல்ல மனம் இல்லாமல், அந்த இரவுப் பொழுதாவது இராமபிரானுக்கு தன்னால் முடிந்த சேவைகள் ஏதேனும் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து, அந்த இடத்திலேயே இராமனின் திருமுகத்தைக் கண்ட படி நின்று கொண்டு இருந்தான் குகன். அவனது அந்த எண்ணத்தைக் குறிப்பால் அறிந்த இராமபிரான். குகனை அன்றைய இரவு மட்டும் அவனுடைய பரிவாரங்களுடன் அவ்விடத்தில் தங்க அனுமதி அளித்தார். அது கேட்டு குகனும் மகிழ்ந்தான். அந்நேரம், அன்றைய தினம் இரவுப் பொழுதின் ஆரம்பமாக இருந்ததால். தன் சேனைகளுடன் இராமபிரானுக்கும், அன்னை சீதைக்கும் காவல் புரியத் தொடங்கினான் குகன்.

அப்படிக் குகன் காவல் புரிந்து கொண்டிருக்கையில், தன்னுடன் இளைய பெருமாளும் காவல் புரிவதைக் கண்டான். அது கண்டு மனம் பொறுக்காத அவன், லக்ஷ்மணனை நோக்கி," இளைய பெருமாளே, மனுக் குலத்தில் உதித்த மாவீரரே! அழகிய அயோத்தியை நகரத்தை விட்டு, விட்டு தாங்கள் இந்த வனம் நோக்கி, மரவுரி தரித்து வந்ததன் காரணத்தை அடியேன் அறியலாமா?"என்று குகன் லக்ஷ்மணனை நோக்கிக் கேட்டான்.

குகனின் விருப்பபடி அவனிடம் லக்ஷ்மணன் தாங்கள் காடுவர நேர்ந்த அந்த வரலாற்றைத் தெரிவித்தான். அது கேட்ட குகன், துன்பம் அவன் மனத்தைக் கவ்வ கண்ணீர் விட்டு அழுதான். பிறகு இராமைப் பார்த்தான், அவரோ நாணல் ஒழுங்காக வளர்ந்துள்ள தரையில் சீதையுடன் படுத்துக் கொண்டு நித்திரையில் இருந்தார். தந்தையின் வாக்கை காப்பாற்ற காடு வந்து சேர்ந்த இராமனை அந்நிலையிலேயே மீண்டும் வணங்கிய குகன் தனது காவல் பணியை மேலும் தொடர்ந்தான்.

கொடிய இரவு மெல்ல மெல்ல விடியத் தொடங்கியது. ஆதவன் மெல்ல எழுந்தான். உதயப் பொழுதை அறிந்த ஸ்ரீ ராமபிரான் துயில் எழுந்தார். உதய காலையில் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடித்தார். பின்பு , கங்கைக் கரையில் வாழும் அந்தணர்கள் தொடரப் புறப்பட்ட இராமர் குகனை அழைத்து, " நண்பனே! எங்களைக் கங்கையின் அக்கரைக்குச் சுமந்து செல்ல நல்ல படகு ஒன்றை சீக்கிரம் கொண்டு வா!" என்று கூறினார்.

ராமன் கங்கைக் கரையை கடந்து செல்லத் துடிப்பதை நினைத்து குகன் தவித்தான். அவனுக்கு இராமனைப் பிரிய மனம் இல்லை. அதன் காரணமாக ஸ்ரீ ராமனிடம் ," ஐயனே, நாங்கள் உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் கூட்டம் அல்ல. நாங்கள் வாழும் சிருங்கிபேரம் தங்களின் வனவாசத்துக்கு ஏற்ற இடம் தான், வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தும் இவ்விடத்தில் உள்ளது. மிக்க வலிமை எங்களிடம் உள்ளது, எங்களை உங்கள் சுற்றத்தாராக நினைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் நீங்கள் ஆணையிடும் அந்த ஒரே வார்த்தையில் கொண்டு வந்து சேர்கிறோம். எங்களிடம் தேனும், தினையும் நிறைய இருக்கிறது. மேலும், இங்கு மகிழ்ச்சிக்கும் குறைவு இருக்காது. சந்தோஷத்துடன் சுற்றிப் பார்க்க காடுகள், நீராட எல்லா நதிகளையும் விட புண்ணியத்தில் சிறந்த கங்கை நதி, தாங்கள் உடுத்திக் கொள்வதற்கு பட்டாடை போன்ற மெல்லிய தோல்கள் , உண்பதற்கு சுவையான தின் பண்டங்கள் , இனிதாகத் தூங்குவதற்குப் பிணித்துத் தொங்கவிடப்பட்ட தூங்கு மஞ்சம் போன்றுள்ள பரண்கள் என எங்களிடம் அனைத்தும் உள்ளன. தங்களைப் பாதுகாக்க எங்களிடம் வில்லும், அம்பும் கூட உள்ளது. இப்பொழுது ஒரு வார்த்தை சொல்லுங்கள் நான் உட்பட ஐயாயிரம் வேடர் இன வீரர்கள் உங்களை சுற்றி அரண் போல நிற்கிறோம். ஆகவே, சஞ்சலம் கொள்ளாமல் தாங்கள் எங்களுடனேயே இங்கு தங்கி விடுங்கள் பிரபு. தாங்கள் இங்கு தங்குவதால் எங்களுக்கு எந்த விதச் சிரமமும் இல்லை. எங்களுக்கு அது மிகுந்த சந்தோசம் தான் தரும். எனது வேண்டுகோளை தயை கூர்ந்து மறுக்காதீர்கள்" என்று இராமனிடம் மிகவும் அன்புள்ளவனாய் வேண்டி நின்றான்.

குகன் சொல்லிய வார்த்தைகளைக் கேட்ட ராமபிரான் அவனிடம்," வீரனே ! உன்னுடைய வேண்டுகோளுக்கு மிக்க மகிழ்ச்சி. நாங்கள் பல புண்ணிய நதிகளில் நீராடி, அங்குள்ள தூய பெரியவர்களுக்குப் பணிவிடை செய்து, குறித்த நாளில் திரும்பி வருவோம். அப்போது மகிழ்ச்சியுடன் உன்னிடத்தில் தங்குகிறோம்!" என்று சிரித்தபடி குகனுக்குக் கூறினார் இராமபிரான்.

இராமபிரானுடைய கருத்தை அறிந்த குகன், மேலும் மறுத்துப் பேச முடியாமல் விரைந்து சென்று ஓடம் கொண்டு வந்தான். இராமர் அந்தணர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, பிராட்டியோடும் தம்பியோடும் அந்த ஓடத்தில் களிப்புடன் ஏறி அமர்ந்தார். ஓடத்தை அக்கறை நோக்கிச் செலுத்தினான் குகன்.

இராமரைச் சுமந்து கொண்டு சென்ற அந்த ஓடத்தையே கண்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் அங்கு வாழ்ந்த முனிவர்களும், அந்தணர்களும். அவர்களால் சக்கரவர்த்தித் திருமகனின் அந்தப் பிரிவைத் தாங்க முடியவில்லை. அனலில் போட்ட மெழுகு போல உருகினர். மறுபுறம் ஓடத்தில் பயணம் செய்த சீதையும் ராமரும், ஓடத்தில் இருந்தபடியே கைக்கு எட்டுகின்ற கங்கையின் நீரை அள்ளி எடுத்து வீசியெறிந்து விளையாடினார்கள். அந்த இனிய காட்சியைக் கண்டு மகிழ்ந்த வண்ணம், குகன் ஓடத்தை விரைவாகச் செலுத்திக் கொண்டு இருந்தான்.

ஓடம் கங்கையின் மறுகரையை அடைந்ததும் நால்வரும் ஓடத்தை விட்டு இறங்கினார்கள். இராமன் அன்புடன் குகனிடம்," சித்திரக்கூடம் மலைக்குப் போகும் வழியைச் சொல்!" என்றார்.

அப்பொழுது அவருடனேயே சென்று விட வேண்டும் என்ற ஆசை குகனின் மனதில் ஏற்பட்டது. உடனே அவன் அவருடைய திருவடிகளை வணங்கி," உத்தமருள் உயர்ந்தவரே, தங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நான் தங்களை விட்டுப் பிரிந்து இருக்க மாட்டேன். என்னையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். தங்களுக்கு வேண்டிய பணிவிடைகள் எல்லாம் செய்கிறேன். இரவிலும் வெளியே சென்று தாங்கள் கேட்கும் பொருளை எவ்வளவு தூரத்தில் அது இருந்தாலும் உங்களுக்காக கொண்டு வந்து தருகிறேன். தங்களை எப்போதும் பாதுகாப்பேன். ஒரு வேளை, என்னிலும் எதிரி பலவானாக இருந்தால் எனது இந்த உயிரையும் உங்களுக்காக விடுவேன். மொத்தத்தில், உங்களுக்கு தீங்கு நேராமல் பாதுகாப்பேன்" என்றான்.

குகனின் அன்பு நெஞ்சத்தில் இருந்து புறப்பட்ட அந்த வார்த்தைகளைக் கேட்ட ஸ்ரீ ராமபிரான் பெரும் உவகை கொண்டு குகனிடம்," குகனே! நீ என் உயிர்! எனது தம்பி உனக்கும் தம்பி. சீதை உனக்குத் தோழி. இந்தப் பூமி முழுவதும் உன்னுடையது. உனது பணிவிடையில் நான் அடங்கி விட்டேன். துன்பத்துக்குப் பின் தானே இன்பம்? அதுபோல, நாம் இப்போது பிரிகிற நேரம் வரும் இந்தத் துன்பத்தை நீ எனது பொருட்டு சகித்துத் தான் ஆக வேண்டும். ஆனால், மீண்டும் நாம் சந்திப்போம், அது இன்பமாய் இருக்கும் ஆதலால் நீ வருந்தாதே.

குகனே! ஒன்றை மட்டும் உன்னிடத்திலே சொல்லிக் கொள்கிறேன், உன்னுடன் நட்பு கொள்வதற்கு முன்னர், நாங்கள் உடன் பிறந்தவர் நால்வர். ஆனால் இப்போது உன்னைக் கண்ட பிறகு நாங்கள் ஐவர். ஆம், இனிமேல் நீயும் எனக்கு ஒரு தம்பி தான். நீ கவலைப் படாதே, நான் காட்டில் இருக்கும் காலமெல்லாம் என் தம்பி லக்ஷ்மணன் எனக்குத் துணை நிற்பான். ஆதலால், எனக்குத் துன்பமே ஏற்படாது. மேலும், நீயே நான்! நானே நீ! எனது சொல் படி நீ ஊர் சென்று உனது குடிமக்களைக் காத்திடு! நான் திரும்பி உன்னிடத்தில் வருவேன்! நீ இப்பொழுது செல்!" என்று அவனுக்கு ஆறுதல் சொன்னார்.

குகனும், இராமனின் கட்டளையை பணிவன்புடன் ஏற்றுக் கொண்டான், பின்பு அவரிடம் விடை பெற்றுக் கொண்டு மீண்டும் ஓடத்தில் ஏறித் திரும்பினான். என்றாலும் இப்பொழுது ராமனின் பிரிவால் அவன் கால்களிலே முன்பு இருந்த வலு இல்லை; கைகளிலேயே தெம்பு இல்லை; உள்ளத்திலோ துன்பத்தின் அழுத்தம்; கண்களில் நீர் பெருக்கெடுக்க அவன் பார்வையை அது மறைத்து நின்றது; திரும்பிப் பார்த்தான். ஸ்ரீ ராமனைத் தொடர்ந்து, இளைய பெருமாளும், சீதா பிராட்டியும் காடு நோக்கிச் செல்வது, பனி மூட்டத்தில் தெரியும் மலை முகடுகளாக அவனுக்குத் தெரிந்தது.