வனம் புகு படலம்

வனம் புகு படலம்

bookmark

அயோத்தியா காண்டம்

இராமன் அயோத்திக்கு அரசனாக முடிசூடத் தேர்ந்தெடுக்கப்படுவதிலிருந்து அயோத்தியா காண்டம் தொடங்குகிறது. இதனால் இதற்கு அயோத்தியா காண்டம் என்று பெயர். அயோத்தியா காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

வனம் புகு படலம்

(குகன் துணையால் கங்கையைக் கடந்து அதன் தென் கரை அடைந்த இராமன், சீதை இலக்குவன் ஆகியோருடன் வனத்திற் புகுந்த செய்தியைத் தெரிவிக்கும் பகுதி என்பது பொருள்.

கங்கையைக் கடந்தபின் இராமன் முதலியோர் காட்டு வழியில் செல்லுதலும், இனிய காட்டுவழியில் இராமன் சீதைக்குப் பல வகைக் காட்சிகளைக் காட்டிக்கொண்டு செல்லுதலும், மாலைநேரத்தில் சித்திரகூட மலை கண்ணுக்குத் தோன்றலும், அவ் வனத்தின்கண் தவம் செய்கின்ற பரத்துவாச முனிவன் இராமனை எதிர்கொள்ளுதலும், முனிவன் இராமனை வந்த காரணம் வினாவ – இராமன் கூறிய பதிலைக் கேட்டு மனம் வருந்திக் கூறுதலும், பரத்துவாச முனிவனது விருந்தோம்பலை இராமன் ஏற்றுக்கொள்ளுதலும், முனிவன் தன்னுடன் தங்கியிருக்குமாறு இராமனை வேண்ட - இராமன் தன் இயலாமையைத் தெரிவித்தலும், முனிவன் சித்திரகூட மலைக்குச் செல்லப் பணித்தலும், முனிவனிடம் விடைபெற்று யமுனைக்கரை அடைதலும், ஆற்றில் நீராடிக் கனி கிழங்கு உண்டு நீர் அருந்தி இளைப்பாறலும், இலக்குவன் தெப்பம் அமைத்து இருவரையும் அக்கரை சேர்த்தலும், மூவரும் பாலைநிலம் புகுதலும், இராமன் நினைவால் பாலை வெப்பம் தணிந்து மாறுதலும், பின்னர் மூவரும்சித்திரகூட மலையைக்காணுதலும் ஆகிய செய்திகள் இப் படலத்தில் கூறப்பெறுகின்றன.)

இளவேனிற் காலம் தன் செம்மை அழகை வனம் முழுவதும் விளையாட விட்டு இருந்தது. அந்த இனிய அழகைப் பார்த்துக் கொண்டே, இராமபிரானும் சீதையும் லக்ஷ்மணனுடன் சென்றார்கள். செறிந்த மரங்கள் அங்கு நிழலைத் தந்து கொண்டு இருந்தன. இளந்தென்றலோ காற்றில் நறுமணமுள்ள மலர்களின் மனங்களைச் சுமந்து கொண்டு மெல்ல மெல்ல வீசியது. அங்கங்கே மயில்கள் நடனமாடிக் கொண்டு இருந்தன.

"உன் சாயலைக்கொண்ட மயில்கள், வண்டுகளின் ரீங்காரம் கேட்டுப் பறை ஒலி என்று அஞ்சி ஆடுவதைப் பார். காந்தள் மலரின் மேல் ஏறி அமர்ந்து இருக்கும் கிளிகள், சீதையே! உன் முன்னங்கையில் ஏறி அமர்ந்து இருக்கும் கிளிகள் போல் இருப்பதைப் பார்! உன்னிடம் தன் சாயலைக் கண்டு மயில்கள், உன்னையும் மயில் என்று நினைத்து வருவதைப் பார். மான்கள் உன் விழிகளைக் கண்டு, மானென்று உன்னை நோக்கி வருகின்றன. அதோ, அவற்றைப் பார்!"

குரா மலரும் பிடவ மலரும் சிந்திய தரையில், பாவம் அந்த மயில் படுத்துவிட்டது. அதனால் அதன் மேல் அந்த மலர்களின் வாசம் வீசுகிறது. அதைக் கண்ட பெண்மையில், வேறொரு பெண் மயிலுடன் கலந்ததால் தான் தன் கணவன் மேல் இந்தவாசம் வீசுகிறது என்று எண்ணி, ஆண் மயிலுடன் கோபம் கொண்டு நிற்பதைப் பார்.

"அதோபார் இன்னொரு காட்சியை காந்தளின் முகையை அரவம் என்று நினைத்து, மயில் அதனைக் கவ்வுவதைப் பார்! அந்த மயிலின் அறியாமையைக் கண்டு, முல்லை மலர்கள் பரிகசிப்பதைப் பார்! பெண்கள் குளிக்கையில் நீரில் முழுகுவது போல, பூச்செடிக் கொம்புகள் காற்றின் அசைவால் நீரில் மூழ்கி எழுவதைப் பார்! உன் பாதங்கள் நோகுமென்று மலர் மரங்கள் வழி எங்கும் மலர் மெத்தை விரித்திருப்பதைப் பார்!"

இராமபிரான் காட்டின் அழகைச் சீதைக்கு காட்டிய வண்ணம் சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது சூரியன் மறையத் தொடங்கியது. வெகு தூரத்தில் அவர்கள் அடைய நினைத்த சித்திரக் கூட மலை மெல்ல தனது தலையைக் காட்டத் தொடங்கியது. அக்கணம் மறைகின்ற கதிரவனின் ஒளி பட்டு, அம்மலையே பொன் மலை போல காட்சி தந்தது. அந்த அற்புத காட்சியைக் கண்ட சீதையும், இராமபிரானும் இயற்கையின் அழகு கண்டு பிரமித்துப் போனார்கள்.

மேலும் தனது நடை பயணத்தை அம்மூவரும் தொடர்ந்தார்கள், அப்போது அவர்கள் வருவதை எண்ணி புன்னகை உடன் எதிர்கொண்டார் வேதங்களை நன்கு கற்ற, புகழ் பெற்ற பரத்துவாசமுனிவர். அம்முனிவர் அன்பும், அருளும் ஒன்றிணைந்து சடை முடி கொண்டு காணப்பட்டார். கையில் கமண்டலமும், தண்டமும் வைத்து இருந்தார். அழகிய மரநாரால் செய்த ஆடையை உடுத்தி இருந்தார். பாதையில் உள்ள சிறு உயிர்களை மிதித்து விடாதபடிப் பார்த்து, பார்த்து மெல்ல நடந்து வந்தார்.

அம்முனிவரை எதிர்கொண்டு இராமபிரான் வணங்கி நின்றார். இராமபிரானைக் கண்ட மாத்திரத்தில் அன்புடன் அவரை அணைத்துக் கொண்டார் பரத்துவாச முனிவர். இராமனை மர உரியில் கண்ட அம்முனிவர் பெரும் துன்பம் கொண்டார். "இராமா உனக்கா இந்த நிலை?" என்று நடந்த விவரங்களைக் கேட்டார் முனிவர். இராமன் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் சொல்ல, கண்ணீர் பெருக அம்முனிவர்,"இக்காலத்தில் இப்படியும் கூட நடக்குமா? தசரத சக்கரவர்த்தியா இப்படி?" என்று கேட்டபடி வருத்தம் கொண்டார்.

பிறகு தசரதரின் மரணம் அறியா அம்முனிவர், மனதில் எவ்வாறு "தசரதரால் இராமபிரானைப் போன்ற தவப் புதல்வனை பிரிந்து இன்னும் உயிர் வாழ முடிகிறது" என்றபடி சிந்தித்தார். பின்னர் ராமபிரானிடம் "எல்லாம் ஊழ்வினையின் பலன் தான் ராமா. விதி யாரைத் தான் விட்டு வைத்து உள்ளது" என்று கூறி தேற்றினார். பின்னர் இராமருடன் மற்ற இருவரையும் தம் தவச்சாலைக்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்கு இனி காய் கனிகளை உண்ணக் கொடுத்து, தந்தையைப் போல் உபசரித்தார். அந்த உபசரிப்பில் தனது தந்தை தசரதரையே, முனிவர் ரூபத்தில் கண்டார் ராமபிரான்.

பின்னர் அம்முனிவரின் பேரன்பைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த அம்மூவரையும் பார்த்து பரத்துவாசமுனிவர் அவ்விடத்திலேயே தன்னுடன் தங்கிக் கொள்ளுமாறு வேண்ட. அதற்கு இராமபிரான்,"முனிவர் பெருமானே, உங்கள் விருப்பத்தை மறுக்க வேண்டும் என்பதல்ல எங்கள் நோக்கம். நாங்கள் இவ்விடத்தில் தங்க விரும்பவில்லை அதற்குக் காரணம் உண்டு, அது யாதெனில், இவ்விடம் கோசல நாட்டுக்கு அருகில் இல்லை தான். ஆனால், அதிக தூரத்திலும் இல்லை. ஆகையால் நாங்கள் இங்கு இருப்பதை அறிந்தால் கோசல நாட்டவர் யாவரும் இங்கு திரண்டு வரக் கூடும். இதனால் இங்கு இருக்க விரும்ப வில்லை. முனிவர் பெருமானே எங்களுக்கு வசிப்பதற்கு ஏற்ற இடத்தைத் தாங்களே ஆராய்ந்து சொல்வீராக" என்று வேண்டினார் இராமபிரான்.

அதற்கு பரத்துவாசமுனிவர் "ஐயனே! நீர் கூறுவது உண்மையே. நான் சொல்வதைக் கேட்பீராக. பத்துக்காத தூரமுள்ள இந்தச் சோலையைத் தாண்டிச் சென்றால் சித்திரக் கூட மலை இருக்கிறது. அது தேர்வர்களும் கை கூப்பித் தொழக் கூடியது. தேவலோகத்தைக் காட்டிலும் மிகவும் இனிமையானது. அதுவே உமக்கு ஏற்ற இடம். அவ்விடம் போய் நீவிர் தங்கி வாழ்க" என்றார்.

பிறகு ராமர் அம்முனிவரிடம் விடைபெற்றுக் கொண்டு, தம்பி லக்ஷ்மணனும், சீதையும் பின் தொடர்ந்து செல்ல யமுனை நதியின் கரைக்கு வந்தார். அச்சமயம் சூரியன் உச்சி வேளையை நெருங்கி இருந்தான். பின்னர் வந்த களைப்பு தீர யமுனை நதியிலேயே நீராடினார்கள் அவர்கள். கனி,கிழங்குகளை உண்டு யமுனையின் நீரைப் பருகினார்கள்.

பின்னர் அந்த நதியைக் கடந்து சென்றால் தான் சித்திரக் கூடம் அடைய முடியும் என்ற நிலையில்,"நதியை எவ்வாறு கடக்கப் போகிறோம்" என்று சிந்தனை வயப் பட்டார் இராமபிரான். அவரது சிந்தனையை அவரது முகக் குறிப்பிலேயே அறிந்து கொண்டவனாக தம்பி லக்ஷ்மணன் உடனே மூங்கில் கழிகளை வெட்டி, மாணைக் கொடிகளால் அவற்றைப் பிணைத்துத் தெப்பம் கட்டினான். கட்டிய தெப்பத்தை நீரில் மிதக்க விட்டு, அண்ணலையும் அண்ணியையும் அதன் மேல் ஏறிக் கொள்ளச் செய்தான். தானும் அதில் ஏறிக் கொண்டான். பின்பு, தனது இரண்டு கைகளாலும் நீந்துவது போல அந்நதி நீரைத் தள்ளிக் கொண்டு அந்தப் பெரிய நதியைக் கடந்து சென்றான்.

தெப்பம் இப்போது கரையைச் சேர்ந்தது. மூவரும் இறங்கி நடந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு பாலை வனத்தை அடைந்தார்கள். அந்தப் பாலை வனத்தைக் கண்ட இராமர்,"இந்தக் கொடிய பாலை வனத்தை சீதை எப்படிக் கடப்பாள்? காற்று பட்டாலே வெடிக்கும் இயல்புடையது நீர் குமிழி, அந்த நீர்குமிழியை விட மென்மை கொண்டது சீதையின் பாதம். அவளால் இந்தப் பாலைவனச் சூட்டை தாங்கத் தான் முடியுமோ?" என்றெல்லாம் தனக்குள் கேட்டுக்கொண்டவராக தொடர்ந்து நடந்து சென்றார்.

ஸ்ரீ ராமரின் வருத்தமான எண்ணங்களை சூரியன் கேட்டு விட்டானோ? இல்லை அவனே சீதையின் பாதங்களைக் கண்டு உணர்ந்தானோ? ஆனால் இவ்விரண்டில் நிச்சயம் ஒன்று நடந்து இருக்க வேண்டும். இல்லை என்றால், எப்படி வெப்பம் மிகுந்தவனாகிய ஆதவன், நட்சத்திரங்களுக்குத் தலைவனாகிய சந்திரன் போலக் குளிர்ச்சியாக தனது கிரணங்களைச் சொரிந்தான்? அவ்வனத்தில் பட்டுப்போய் இருந்த மரங்கள் கிரணக் குளுமையால் உடனே தளிர்விட்டுத் தழைத்தன. அக்கணமே வெண்மேகங்கள் சூழ் கொண்டு ஒன்றுகூடி மெல்ல இடி இடித்து குளிர்ந்த நீர்த்துளிகளைச் சிந்தின. வேடர்கள் முனிபுங்கவர் போல் விலங்குகள் மேல் அன்பு கொண்டு சாந்தம் அடைந்தனர். கொடிய விஷத்தால் வெந்து போய் பாறை இடுக்குகளில் வருந்தும் கொடும் சினம் கொண்ட பெரிய பாம்புகள் நீரில் கிடந்தது போல் வெப்பம் நீங்கின.

கொடிய வெப்பத்தால் கூட்டமாக எரியும் மூங்கில்கள் பசுமைக் கொண்டு, முத்துக்கள் சிந்தும் இளமைங்கையரின் தோள் போல் பொலிந்தன. கம்பளம் பரப்பிய தளத்தில் மங்கையர்கள் நடனம் செய்ய பாணர்கள் பாடுவது போல, அந்தக் காட்டின் பசும்புற் பரந்த இடத்தில் மயில்கள் ஆட வண்டுகள் பாடின. வேடர்கள் வாழும் எயினச் சேரிகள், முனிவர்கள் வாழும் தபோவனங்கள் போல ஆயின. நெருங்கிய மரங்களில் எல்லாம் தம்மைப் பிரிந்து வருந்தும் பெண் குயில்களை, இனிய ஓசையுடன் கூவி அழைத்த வண்ணம் ஆண் குயில்கள் இச்சை கொண்டு கூடின. குறுந்த மரங்கள் இளந்தளிர்கள் தோன்றச் சிரித்தன.

ஸ்ரீ ராமரின் திருப்பாதம் பட்ட மாத்திரத்தில் மாறிய அந்தப் பாலைவனத்தை மகிழ்ச்சியுடன் அம்மூவரும் கடந்து சென்று, கடைசியில் சித்திரக் கூட மலையை அடைந்தார்கள்! அப்பொழுது ஜானகி தேவியும் ஸ்ரீ ராமபிரானும் இளைய பெருமாளும் கொண்ட உவகைக்கு அளவே இல்லை!