கடிமணப் படலம்

கடிமணப் படலம்

bookmark

பாலகாண்டம்

பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

கடிமணப் படலம்

(கடிமணப் படலம் என்பது இராமபிரானுக்கும் ஜானகிக்கும் நிகழ்ந்த திருமணம் பற்றிய நிகழ்வுகளைக் குறிக்கும்பகுதி எனப் பொருள்படும். (கடி- சிறப்பு. உரிச்சொல்).

மிதிலையில் அனைவரும் மகிழ்வில் திளைத்திருக்க. இராமனும் சீதையும் காதல் வேட்கையால் துயர் உறுகின்றனர். மணமுரசு அறைகிறது. நகரம் அணிபெறுகிறது. அழகிய மணமண்டபத்தில் தரசதன் முதலிய அனைவரும் குழுமுகின்றனர். மங்கல நீராடி மணக்கோலம் பூணுகின்றான் இராமபிரான்.தேர்ஏறி மண்டபம் அடையுங்கால். வானத்துத் தேவர்கள் வாழ்த்தெடுக்கின்றனர். சீதையும் மணமண்டபம் அடைய. வஷிஸ்டன் மணச்சடங்குகள் புரிகின்றான். தீவலம் செய்து, அம்மி மிதித்து அருந்ததி பார்க்க மணச்செயல்கள் இனிதே நிறைவுறுகின்றன. மாமியாரைச் சீதை வணங்க. அவர்கள் ஆசியும் அரும் பொருளும் பரிசாக அளிக்கின்றனர். இராமன் சீதையுடன் பள்ளியடைகிறான். வசிஷ்டன் மங்கல நெருப்பினை வளர்க்க. தம்யியர் மூவர்க்கும் மணம் நிகழ்கிறது. தரசதனும் ஜனகனும் விரும்புவார்க்கு விரும்புவன எல்லாம் அள்ளிக் கொடுத்து மகிழ்கின்றனர். தசரதன் சில நாட்கள் மிதிலையிலேயே தங்கிச் சிறப்பிக்கிறான். இவ்வாறு நாட்கள் சில மெல்ல நகர்கின்றன.)

தனது அந்தப்புரத்துக்கு வந்த சீதையால், தூங்க முடியவில்லை, காரணம் அவள் மனதில் இப்போது மீண்டும் அமைதியானது, விடை பெற்றுக் கொண்டு விட்டது. அருகிலே இராமனைக் கண்டும் கூட அவரை அடைய முடியாமல் போய் விட்டதே என்று சீதை ஏங்கி நின்றாள். அப்போது இரவு வரவே, எங்கும் இருள் பரவ, சீதையின் மனம் சஞ்சலத்தால் மேலும் கலங்கியது. இராமனைத் திருமணம் செய்ய அந்த ஒரு இரவை சீதை கழித்து ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள். அந்த இரவின் ஒவ்வொரு மணித் துளிகளும், அவளுக்கு ஒரு யுகம் போலக் காணப்பட்டது. இரவை நோக்கிய சீதை ," இரவே இப்படி அணு, அணுவாகப் பெண் கொலையை புரிகின்றாயே, இது உனக்குப் பாவம் என்று தோன்றவில்லையா? இரவே பகலுக்கு வழி விட்டு இப்போதே நகர்ந்து சென்று விடு! நாளைச் சூரியன் உதித்த மாத்திரத்தில் என் தலைவர் என்னருகில் வந்தருள்வார். அவரில்லாத காலத்தில் என்னை அநீதியாய் வருத்துகிற உன்னை அவர் வந்தால் தண்டித்து விடுவார். அதற்குள் நீ விரைவில் மறைந்து போ!" என்று கூறினாள்.

பின்பு அவள் தனது இதயத்திடம், "இதயமே! நீ கூட இந்த நேரத்தில் என்னை விட்டுப் பிரிந்து ராமனைக் காண செல்வது ஏனோ? இவ்வளவு நாட்கள் நீ என்னுடன் இருந்தாயே! இன்னும் ஒரு இரவு பொறுத்துக் கொள்ளக் கூடாதா? பின்பு இத்தனை நாட்கள் நீ என்னுடன் இருந்ததன் அர்த்தம் தான் என்ன?" என்று கேட்டாள்.

அந்த நேரத்தில் சந்திரனின் ஒளிக் கதிர்கள் சீதையின் மீது படவே, சீதையின் துயர் மேலும் அதிகரித்தது, சந்திரனை நோக்கி, "சந்திரனே இராமனைக் கண்டும் சேர முடியாமல் துடிக்கும் அபலைப் பெண் நான், அவர் மேல் கொண்ட காதலால் நாளுக்கு நாள் மெலிந்து வருகிறேன், அப்படி இருக்க நீயும் உனது கிரணங்களின் ஒளியால் என்னவரை மேலும் நினைவு படுத்திகிறாயே?. உன்னை விடக் கொடியவர்கள் இவ்வுலகத்தில் தான் உண்டோ?" என்று வெறுத்துச் சொன்னாள் சீதை.

அந்த நேரத்தில் இரவின் இளந்தென்றல் வீசவே, அது கூட சீதையை சுட்டெரித்தது, தென்றலை நோக்கி, "தென்றல் காற்றாகிய புலியே! நீ என் உயிரை இரையாகத் தேடிகிறாயோ?" என்று தென்றலை தன் வார்த்தை கொண்டு பதிலுக்கு சுட்டெரித்தாள் சீதை. தன்னையும் அறியாமல் சிறிது நேரம் கண் அயர்ந்தாள், அப்பொழுது அவள் கனவிலும் ராமர் தோன்ற. தனது கண் விழிகளால் ராமனை அந்நிலையிலும் சுமந்தாள். தீடீரென, எழுந்தவள் தன் தலைவர் உண்மையில் வந்து விட்டாரோ என சுற்றும், முற்றும் பார்த்தாள். பிறகு முன்பு கனவில் தோன்றிய அந்த ராமனின் பிம்பத்தை நினைத்துக் கொண்டு, "இது என்ன முறை? உயர் குலத்தில் தோன்றிய அரசர்களுள் கல்யாணமாகாத இளம் பெண்களிடம் வருபவர் உங்களைத் தவிர வேறு யாராவது உலகத்தில் உண்டோ?" என்று பிதற்றினாள்.

பிறகு மீண்டும் உறங்க நினைத்துக் கண் விழித்தால் அச்சமயத்தில்," பகல் பொழுதோ இன்னும் வரவில்லை, எண்ணங்களோ இன்னும் நீங்கவில்லை, மன வருத்தங்களோ மறையவில்லை, உயிரோ உடம்பை விட்டு நீங்கவில்லை, கண்களோ தூங்கவில்லை, இப்படி வருந்துவதா எனது கடமை?" என்று தனக்குள் நொந்து கொண்டாள்.

தனது பார்வையை சீதை வெளியே ஏவினாள். தொலை தூரத்தில் அலைகள் ஆர்பரிக்க கிடக்கும் கடலைக் கண்டாள். உடனே அதை நோக்கி, "சமுத்திரமே! இரவும் பகலும் தூங்காமல் இருக்கின்றாயே. என்னைப் போல் நீயும் கணவனை அடையாத ஒரு பெண்ணோ? கொல்லும் வலிமை பொருந்திய மன்மதனின் பாணத்துக்குப் பயந்தாயோ?" என்று கேட்டுத் துன்பத்தில் சிரித்தாள்! சீதை இவ்வாறு இராமபிரான் மேல் கொண்ட தீவிர காதலால் வருந்திக் கொண்டிருந்த அதே நேரம். இராமபிரானும் தனது மாளிகையின் பஞ்சணையில் தனித்துப் படுத்திருந்தார்.

அவருக்கும் ஓயாமல் சீதையின் நினைப்பு தான் வந்து கொண்டு இருந்தது. படுக்கையோ அவருக்கு முள்ளாக தைத்தது. "சீதை இயற்கையிலேயே பேரழகு உடையவள். இருதரம் அவளை நான் பார்த்து இருந்தும், அவளையே எப்பொழுதும் நினைத்து இருந்தும் கூட அவளுடைய அழகின் எல்லையை என்னால் அறிய முடியவில்லையே" என்று தனக்குள் கூறிக் கொண்டார்.

சந்திரனின் ஒளிக் கதிர்கள் சாளரத்தின் வழியாக உள்ளே நுழைந்தது கண்டு அவர் "சந்திரனே! லக்ஷ்மி போன்ற சீதையின் முகம் போன்றவனே! காமமாகிய விதை செழித்து வளர நல்ல எருவாக இருப்பவனே! நீ என்ன காரியம் செய்கின்றாய்? இஷ்டமான மங்கையைப் பெற்றுக் கூடாமல் தனித்துள்ள எனக்கு நீ நண்பனாக மாட்டாயோ?" என்று கூறி சீதையின் மேல் கொண்ட காதலால் பித்துப் பிடித்தது போல் சந்திரனைப் பார்த்துக் கேட்டார்.

பிறகு தனக்குள்ளேயே "பாம்பின் விஷம் வேறு எங்கேயும் இல்லை. தன் கண் பார்வையால் எனக்குக் காதல் நோயைத் தந்து என்னை மரண வேதனை படச் செய்யும் சீதையின் கண்களில் தான் அது இருக்கிறது!" என்றவர், மேலும் தொடர்ந்து," சோலைகளும் அதனைச் சுற்றிய கழிக் கரையிடங்களும், மற்றும் பல இடங்களும், இருக்கின்றனவே. அங்கெல்லாம் கரிய கூந்தலாள் சீதை விளையாடக் கூடாதா? அவள் விளையாடுவதற்கு என் மனம் தானா கிடைத்தது?" என்று கூறித் துன்பத்தின் எல்லையைக் கடந்து அன்று இரவுப் பொழுதைக் கழித்தார் ஸ்ரீ ராமர்.

சிறிது நேரத்தில் சூரிய பகவான், தன்னுடைய வமிச பரம்பரையில் தோன்றிய இராமரின் திருமணத்தைப் பார்பதற்காக விரைந்து கீழ்க் கடலில் எழுந்தான்! காலைப் பொழுதின் இனிமையில் நகரத்து மக்கள் ஒவ்வொருவரும் தங்கள், தங்கள் வீடுகளின் முன்பு பல வகை தோரணங்களையும், பட்டுக் கொடிகளையும் கட்டினார்கள்; வாழை மரங்களையும், கமுகு மரங்களையும் நட்டார்கள். சீதையின் திருமணத்தால் அந்நகரமே மகிழ்ச்சிக் கடலில் துள்ளியது. ஆண்களும் பெண்களும் பட்டுப் புத்தாடைகளையும் நல்லணிகளையும் அணித்து கொண்டார்கள்.

சந்தனக் குழம்பையும் அகிற் குழம்பையும் வீதியெங்கும் தெளித்து, வாசனைப் பொடியால் அழகிய சித்திர வேலைப்பாடு கொண்ட கோலங்களைத் தீட்டினார்கள் பெண்கள். அத்துடன் அல்லாமல் அவர்கள் மலர்களைச் சொரிந்தார்கள்; வீட்டுத் திண்ணைகளின் மேல் தீ பந்தங்களையும், குளிர்ந்த இளமையான விதை முலைகள் கொண்ட பாலிகைக் கிண்ணங்களையும் வரிசையாக அழகுடன் வைத்தார்கள்.

நகரமே அலங்காரத் தோரணங்களுடன் காணப் பட்டது. ஜனக மகாராஜர் தம்முடைய மகளின் திருமணத்தை நடத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். முந்தைய தினமே சீதையின் திருமணத்தை முரசு மூலம் அறிவித்து இருந்ததால், பொதுமக்கள் அனைவரும் மண்டபம் நோக்கி விரைந்து கொண்டு இருந்தார்கள். எங்கும் மக்களின் தலைகள் தான் காணப்பட்டது.

அது மட்டும் அல்ல, பல்வேறு நாட்டு அரசர்களும் சீதா, ராமன் திருமணத்தைக் காண வந்த படி இருந்தனர். இத்துடன், அறுபத்தி நான்கு கலைத் தொழில்களில் பழகுபவர்கள் அனைவரும் யானை மீதும், குதிரை மீதும், பல்லக்கிலும், வண்டிகளிலும், நடந்தும் சீதா, ராமன் திருமணத்தைக் காண வந்த படி இருந்தனர். அவர்கள் அனைவரும் பல்வேறு விதமான ஆடைகளையும், அணிகலன்களையும் அணிந்த படி இருந்தனர். அவர்களில் சிலர் விசித்திர வேலைப்பாடுகள் கட்டிய பூமாலையைக் கூந்தலிலே அணிந்து இருந்தார்கள், சிலர் சித்திரம் பொறித்த செந்நிறப் பட்டாடைகளை உடுத்தி இருந்தனர்.

மண்டபத்திற்கு தசரத சக்கரவர்த்தி வந்து சேர்ந்தார். அந்த மண்டபமே தேவேந்திரப் பட்டணம் போல விளங்கியது. ஆதிகாலத்தில் கட்டப்பட்ட அந்த இரத்தின மண்டபத்தில் தசரதரும், ஜனகரும் அமர்ந்து இருந்த காட்சியைப் பார்க்கும் போது, சந்திர சூரியரே அங்கு இருப்பது போலத் தோன்றியது. மற்ற அரசர்கள் தாரகை போலவும், பெண்கள் மின்னலைப் போலவும் மேகம் போலவும் அமர்ந்து இருந்தார்கள். அப்போது அந்த மண்டபம் மேகங்களையும், மின்னல்களையும், நட்சத்திரங்களையும், சூரிய சந்திரர்களையும், தன்னிடத்தில் கொண்ட பிரம தேவனால் ஆதி காலத்தில் அழகாகப் படைக்கப்பட்ட அண்ட கோளத்தைப் போலத் தோன்றியது!

இராமபிரான் கங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட நீரினால் சாஸ்திர விதிப்படி மங்கள நீராடித் திருமண் தரித்துக் குல தெய்வமான ஸ்ரீ ரங்கநாதனை வணங்கினார். பின்பு, கலவை சந்தனத்தை திருமேனி முழுவதும் பூசிக் கொண்டார். பலதரப்பட்ட வண்ண மாலைகள் அவர் கழுத்தை அலங்கரித்தன. அந்த மாலைகள் ராமனுக்கு அழகா? இல்லை ராமனால் அந்த மாலைகளுக்கு அழகா? என்று கூறிக் காண்பவர்கள் அனைவரும் வியந்தனர்.

காதுகளில் சூரிய சந்திரனை போல காட்சி தரும் இரண்டு மகர குண்டலங்களை அணிந்து கொண்டார். நெற்றியில் வீரபட்டமும், திலகமும் சூடிக் கொண்டார். கழுத்தில் முத்துமாலையையும், திருக்கைகளிலே கடகங்களையும் அணிந்தார். அத்துடன் ஒற்றைப் பூணும், வெண்பட்டு மேலாடையையும் தரித்துக் கொண்டார். பிறகு உத்தரபந்தனமும், இடுப்பில் வெண்பட்டாடையும் கட்டிக் கொண்டார். உடைவாளை இடுப்பில் முத்தும் நீல மணியும் பதித்த பொற் கச்சினால் கட்டிக் கொண்டார். பின்னர், செந்தாமரைப் பாதங்களின் கணுக்கால்களில் சிலம்பும் கழலும் அணிந்தார். அப்பொழுது இராமனைப் பார்க்கும் போது அந்த ஆழியுடையான் திருமாலைப் போலவே தோன்றினார். அவரது அழகை வர்ணிக்க பெரும் பூலவர்களும் வார்த்தைகள் இன்றித் தவித்தனர்.

ஸ்ரீ ராமர் தனது அலங்காரத்தை முடித்துக் கொண்டு பல பதினாயிரக் கணக்கான பசுக்களையும், பசும் பொன்னையும், வரம்பில்லாத நிலங்களையும், நவரத்தினங்களையும் நல்லொழுக்கமுடைய அந்தணர்களுக்கு தானம் செய்தார். பின்பு பொன் அச்சையும், வெள்ளிச் சக்கரங்களையும், வயிர தட்டையும் கொண்டு சுற்றிலும் ரத்தினங்கள் பதித்த தேரின் மேல் ஏறி சூரிய பகவானைப் போலக் காட்சி அளித்தார். பின்னர், ராமபிரானுடன் அவரது தம்பிகளான பரதனும், லக்ஷ்மணச் சத்துருக்கனும் தேரில் ஏறிக் கொண்டனர். இராமர் அத்தேரில் உள்ள பொன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். பரதன் தேர் ஓட்ட, லக்ஷ்மணச் சத்துருக்கனும் தேரில் இருந்தபடி, அண்ணன் ராமனுக்கு சாமரம் வீச, தேர் வெகுவாக மண்டபம் நோக்கிப் புறப்பட்டது. தம்பிகளுடன் ராமரின் தேர் புறப்பட்டு வந்த காட்சியை நகர மக்கள் அனைவரும் கண் கொட்டாமல் ரசித்தார்கள். தேவர்களும் கூட அந்த இனிய காட்சியைக் கண்டு தேவ மாதர்களுடன் கூத்தாடினார்கள். ராமரின் தேர் சென்ற இடங்கள் எல்லாம், மழை என மக்கள் மலர்களை சொரிந்தார்கள். பின்னர் பவனி முடிந்து மண்டபத்திற்குள் வந்த ராமர் முனிவர்களையும், தந்தையையும் வணங்கி எழுந்தார்.

அந்த நேரத்தில் சீதை மண்டபத்துக்குள் மின்னல் போல வந்தாள். " அலைமகளோ? கலைமகளோ? மலைமகளோ? இல்லை… இல்லை பெரும் பேர் எழிலோ?" என்று யாவரும் அவளைக் கண்டு அம்மண்டபத்தில் வியந்தனர். திருமணத்தைக் காண இந்திரன் தலைமையில் தேவர்களும், மும்மூர்த்திகளும் கூட அம்மண்டபத்துக்குள் எழுந்து அருளி இருந்தனர். திருமணத்துக்கான நேரம் நெருங்கவே, வஷிஸ்டர் திருமணத்துக்கான வைதீக ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார். ஓம அக்கினி வளர்க்கப்பட்டது.

இராமரும், சீதையும் வஷிஸ்டர் அழைக்க, மண மேடையில் வந்து அமர்ந்தார்கள். அதனைக் கண்ட சிலர், அந்த ஜோடிகளை ரதி, மன்மதன் என்றார்கள். சிலர், இல்லை...இல்லை திருமாலும், திருமகள் போலவும் இவர்கள் ஜோடி அமைந்துள்ளது என்றார்கள். அந்நேரத்தில் ஜனகர் ஸ்ரீ ராமரின் முன்பாக வந்து நின்று," நீ திருமாலும் திருமகளும் போல என் மகள் சீதையுடன் நீடுழி காலம் வாழ்க!" என்று ஆசி கூறி குளிர்ந்த நல்ல நீரைத் தாரை வார்த்து, இராமரின் வலத்திருக் கையிலே கொடுத்தார். அந்தக் கணத்தில் அந்தணர்களின் ஆசிர்வாத வொலியும்,பெண்கள் பல்லாண்டு பாடும் ஓசையும், அரச புலவர்களின் வாழ்த்தொலியும், சங்க வாத்தியங்களின் ஒலியும் எழுந்து எங்கும் பரவின. தேவர்கள் கற்பக மலர் மழை பொழிந்தும், மன்னர்கள் பொன் மலர் தூவியும், முனிவர்கள் அட்சதைத் தூவியும், மற்றையோர் முத்துக்களையும், மலர்களையும் வீசியும் மணமக்களை வாழ்த்தினார்கள்.

இராமபிரான் அப்பொழுது திருமண மந்திரங்கள் அனைத்தையும் முறைப்படி உச்சரித்து ஓமத்தில் ஆகுதிகளை எல்லாம் சேர்த்தார். பின்பு, ஜானகியின், மெல்லிய கைகளை, தன்னுடைய பெரிய கைகளைக் கொண்டு பிடித்தபடி ஓமகுண்டத்தைச் சுற்றி அக்னி வலம் வந்தார். அத்துடன் அவர் செய்ய வேண்டிய சடங்குகளையும் முறைப்படி செய்து முடித்தார். பிறகு, சீதையின் வலப் பாதத்தை இராமர் தூக்கி அம்மி மேல் வைக்க, அவள் அம்மி மிதித்து, கற்புச் செல்வியான அருந்ததி நட்சத்திரத்தைப் பார்த்தாள்.

திருமணம் ஆனவுடனே மணமகன் மணமகளோடு தனது இல்லம் சென்று சில சடங்கை முடிக்க வேண்டும் என்பது வழக்கம். அதனால் இராமர், வஷிஸ்டர், விசுவாமித்திரர், தசரதர், ஜனகர் போன்ற பெரியோர்களை வணங்கி சீதையுடன் தனது மாளிகைக்குச் சென்றார்.

மங்கல பேரிகை ஒலிக்க, சங்க வாத்தியங்கள் முழங்க, பெண்கள் பல்லாண்டு பாட, அந்தணர்கள் வேதம் ஓத, மாளிகைக்கு வந்து சேர்ந்தார்கள் மண மக்கள். அங்கே அவர்களுடைய வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தார்கள் தசரதனின் தேவி மார்கள். மணமக்கள் அந்த தேவி மார்களின் பாதம் பணிந்து அவர்களின் வாழ்த்துக்களைப் பெற்றனர்.

ராமனின் மூன்று அன்னைகளும், சீதையின் அழகைக் கண்டு "இவள் ராமனுக்கு ஏற்ற பெண் தான்" என்று கூறி மகிழ்ந்தனர். பிறகு சீதைக்கு அவர்கள் கோடிக் கணக்கான பொற் காசுகளையும், கோடிக் கணக்கான ஆபரணங்களையும், பணிப் பெண்களையும், பெரிய நாடுகளையும், விலை மிக்கப் பட்டாடைகளையும் கொடுத்தார்கள். எல்லாச் சடங்குகளும் ஒரு வழியாக முடிந்தது. பின்னர் ஸ்ரீ ராமர் சீதையை அழைத்துக் கொண்டு திருப்பள்ளி அறைக்குச் சென்று சேர்ந்தார்.

இப்படியாக சிறப்போடு வசிஷ்டர் நடத்த பங்குனி உத்திரத்தில் சீதா விவாகம் இனிதாக நிறைவேறியது. இராமபிரான் சீதையை மணந்து கொண்ட பிறகு, ஜனகராஜரின் விருப்பப்படி அவரது தம்பி குசத்துவசன் தனது மகள்கள் மூவரையும் தசரத மைந்தர்களான மற்ற மூவருக்கும் மணம் செய்து கொடுத்தான். இவ்வாறாக நான்கு புதல்வியரின் திருமணமும் நன்கு நடந்ததை எண்ணி மகிழ்ந்த ஜனக மகாராஜர் வறியவர்க்கு செல்வங்களை வாரி இறைத்தார். அது போலவே தசரத சக்கரவர்த்தியும் செய்தார். பின்னர், ஜனகரின் விருப்பப்படி, சில நாட்கள் முனிவர் பெரு மக்களுடன் தசரதர் மிதிலா நகரில் வசித்தார்!