அயோமுகிப் படலம்

bookmark

ஆரணிய காண்டம்

இராமனுக்கு அரசுரிமை மறுக்கப்பட்டு கானகம் சென்று வாழும்நிலை ஏற்பட்டது. இக்கானக வாழ்வைக் குறித்து எழுவதனால் இது ஆரணிய காண்டம் எனப்பட்டது. ஆரணியம் என்றால் கானகம் (வனம், காடு) எனப் பொருள்படும். ஆரணிய காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டுள்ளது.

அயோமுகிப் படலம்

(அயோமுகி என்ற அரக்கியின் செயல்களை விளக்குவது, அயோமுகிப் படலம் ஆகும். இது அயோமுகியைப் பற்றிக் கூறப்பட்ட படலம் என விரிந்து நிற்கும். அயோமுகி என்ற சொல் இரும்பினால் ஆகியது போன்ற முகம் உடையவள் என்று பொருள் தரும். இலக்குவன்பால் காதல் கொண்ட அயோமுகியின் செயல்கள் இப்படலத்தில் விளக்கப்பட்டுள்ளன. இராமன் மேல் காதல் கொண்டு இலக்குவனால் உறுப்பிழந்த சூர்ப்பணகையின் முதல் கதைக்கு ஒத்த இணைக் கதையாக இது விளங்குகிறது.

அயோமுகி ஒரு நிகழ்ச்சிப் பாத்திரமாவாள். கதையில் இராமனும் இலக்குவனும் பிரியும் சிறு பிரிவுக்கு இவள் வழி வகுக்கிறாள். அப்பிரிவின் அவல உணர்வும், பாசப் பிணைப்பும் இப்பகுதியில் கம்பரால் சிறப்பாக விளக்கப்பட்டு உள்ளது.

சடாயுவுக்கு உரிய நீர்க் கடன் செய்த பின் இராமன் இலக்குவனுடன் சீதையைத் தேடிக் கொண்டு செல்லுகிறான். செல்லும் வழியில் நீர் வேட்கை கொண்ட இராமன், இலக்குவனை நீர் கொண்டு வருமாறு வேண்டுகிறான். இலக்குவன் நீர் கொண்டு வரச் சென்ற வழியில் அயோமுகி இலக்குவன் மீது காதல் கொண்டு, தன் மோகனை என்னும் மந்திர வலிமையால் அவனை மயக்கி வலிய எடுத்துச் சென்றாள். மோக மந்திர வலிமை அவள் தழுவி எடுத்த உடனே நீங்கிவிட்டது. இலக்குவன் அவளது உறுப்புக்களைத் துணித்து மீண்டும் இராமனிடம் வந்த செய்தி இப்பகுதியில் கூறப்பட்டுள்ளது.)

ஜடாயுவுக்குச் செய்ய வேண்டிய கடமையை இராமபிரான் செய்து முடித்தார். பிறகு இராம லக்ஷ்மணர்கள் வெகு தூரம் நடந்து ஒரு மலைக்குச் சென்று தங்கினார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் சூரியன் அஸ்தமித்து விட்டான். இருள் அவ்விடத்தை சூழ்ந்தது. அவ்விருள் பார்ப்பதற்கு அரக்கர்களின் நிழல் போலக் காணப்பட்டது.

சீதையைப் பிரிந்த இராமபிரான், அந்த இரவு முழுவதும் சீதையை நினைத்து வேதனையில் கழித்தார். நிலவின் ஒளி கூட அவருக்கு சீதையை நினைவுபடுத்தியது. கடல் அலையைப் போல சீதையின் நினைவுகளில் பெருமூச்சு செறிந்தார். இராமபிரானுக்கு அரக்கன் இராவணன் சீதையை தூக்கிச் சென்றதை நினைத்த போது. அவர் மீதே அவருக்குக் கோபம் வந்தது." இந்த வில்லும், திவ்ய அஸ்த்திரங்களும் இனி எதற்கு?" என மனதில் கூறிக் கொண்டு, கண்ணீர் வடித்தார். " முன்பு தந்தையின் கட்டளைப் படி பல உயிர்களைக் காத்த நான், இப்போது சீதையைக் காக்கத் தவறி விட்டேனே" எனத் தனக்குத் தானே கூறிக் கொண்டார்.

பிறகு நள்ளிரவு ஆரம்பிக்கும் போது, பசுந்தளிர்கள் மீது படித்துக் கொண்டு உறங்க முயற்சித்தார். அப்போது உறக்கத்திலும் கூட சீதையை நினைத்தே புலம்பித் தவித்தார். ஆனால், அந்த இரவோ யாரைப் பற்றியக் கவலையும் இன்றி நீண்டு கொண்டு இருந்தது. ஆனால், இராமபிரானோ " தர்மவான்கள் அழவும், பாவிகள் சிரித்து மகிழவும் இது என்ன காலமோ?" என்று மனதினில் கூறித் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தார்.

இராமபிரானின் அப்புலம்பல்களைப் பார்த்து அந்த இருளுக்கே அவர் மீது பரிதாபம் ஏற்பட. சூரிய கிரணங்களுக்கு வழி விட்டுச் சென்றது. இராமனின் துயரைத் தாங்க சகிக்காத சந்திரனும் அவ்வாரே சூரியனுக்கு இடம் தந்து விட்டு மறைந்தான். அடுத்த நாள் காலைப் பொழுது. விடியற் காலையிலேயே லக்ஷ்மணன் அண்ணி சீதையைத் தேடத் தயாரானான். அவ்வேளையில் அண்ணன் இராமனிடம்," அண்ணா! வாருங்கள் நான் தயார். தாய் சீதையை இன்று கண்டுபிடித்து விடலாம். கொடிய இராவணனையும் தண்டித்து விடலாம். கவலை கொள்ளாதீர்கள்" என்றான்.

இராமபிரான் லக்ஷ்மணனின் சொல் கேட்டு ஆறுதல் அடைந்தவராக, தன் நித்தியக் கர்மங்களை முடித்து விட்டு சீதையை தேடிப் புறப்பட்டார். பல யோசனை தூரம் நடந்தவர்கள். ஒரு சோலையை அடைந்தார்கள். இராமபிரானுக்கு அப்போது தண்ணீர் தாகம் எடுத்தது. ஆனால், அந்தச் சோலையிலோ தண்ணீர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பிறகு தம்பி லக்ஷ்மணனிடம் நீர் கொண்டு வருமாறு வேண்டினார். அந்நேரம் மீண்டும் இரவுப் பொழுது நெருங்கியது. லக்ஷ்மணனுக்கோ எங்கு தேடியும் தண்ணீர் கிடைக்கவில்லை, இருந்தாலும் அண்ணனுக்காக பருக நீரைத் தேடிக் கொண்டு இருந்தான்.

அச்சமயம் அயோமுகி என்னும் கொடுமையான அரக்கி லக்ஷ்மணனைப் பார்த்தாள். பார்த்த உடனேயே அவனது அழகில் மயங்கினாள். " இந்த மனிதனை நான் உண்ணக்கூடாது. மாறாக அவனை கட்டித் தழுவ வேண்டும். அவன் மறுத்தால் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று அவனுடன் சேர்ந்து விட வேண்டும்" என்று இச்சைக் கொண்டாள். மனதில் கொண்ட தனது அந்த இச்சையை நிறைவேற்றிக் கொள்ள, அவள் லக்ஷ்மணை நெருங்கினாள்.

அயோமுகியின் தோற்றமே பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது. மலை போன்று தோற்றத்தை கொண்டு இருந்தாள். கருமை நிறமாகவும். கடலையே முழுங்கும் பெரிய வாயைக் கொண்டும். தலையில் செம்மட்டை நிறத்தில் முடியைக் கொண்டும். ஆண் புலிகளை ஆராமாக அணிந்தும், அனேக யாளிகளைச் சேர்த்துத் தாலியாகக் கட்டிக் கொண்டும் இருந்தாள். அவள் ஒரு ஆண் மகனை தொட்டாலே அவன் நொறுங்கி விடுவான். அப்படிப் பட்டவள் அவள்.

லக்ஷ்மணன் அவளது தோற்றத்தைக் கண்ட உடனேயே அவள் ஒரு அரக்கி என்பதை அறிந்து கொண்டான். அவளோ, சிரித்தபடி லக்ஷ்மணனை கட்டித் தழுவிக் கொள்ளும் எண்ணத்தில் நெருங்கிக் கொண்டு இருந்தாள். லக்ஷ்மணன் அந்த அரக்கியைக் கண்டதும் அவள் எண்ணத்தைப் புரிந்து கொண்டவனாக," பாவிகளாகிய இந்த அரக்கிகள், வேறு காரணமில்லாமல் காம விருப்பத்தையே கொண்டு நம்மிடம் வருகிறார்கள்" என்று நினைத்தான். உடனே கோபத்துடன் அவளைப் பார்த்து," நீ யார்? எங்கேயடி வந்தாய்?" என்று கேட்டான்.

அவன் தன்னை பார்த்தும் பயப்படாத அந்த தைர்யத்தைக் கண்ட அரக்கி மேலும் அவனை விரும்பினாள். லக்ஷ்மணனிடம் தனது விருப்பத்தைக் கூறினாள். ஆனால், லக்ஷ்மணனோ அவளது இச்சைக்கு மறுப்பு தெரிவித்து அவளைக் கடிந்து கொண்டான். ஆனால், அவளோ லக்ஷ்மணனின் கோபத்தை பொருட்படுத்தாமல் அவனைக் கட்டி அணைத்தபடி தூக்கிச் சென்றாள்.

மறுபக்கம், லக்ஷ்மணன் சென்று வெகு நேரம் ஆகியும் வராத காரணத்தால் மிகுந்த வருத்தம் கொண்டார் இராமபிரான். அவனைத் தேடி கொண்டு புறப்பட்டார், எங்கெல்லாமோ அலைந்தார். அச்சோலை முழுக்கத் தேடியும் கண்ணில் லக்ஷ்மணன் எங்கும் படவில்லை. அதனால், அளவற்ற துன்பம் அடைந்தார். அவன் எங்கு இருப்பான் என்று சிந்திக்கத் தொடங்கினார். லக்ஷ்மணனைக் காணாது," லக்ஷ்மணா, நீயும் இப்போது என்னை விட்டுப் போய் விட்டாயா? நீ மிக விரைவில் எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் கொண்டவன் ஆயிற்றே, பிறகு இவ்வளவு நேரம் கழித்தும் நீ ஏன் இன்னும் வரவில்லை? ஒரு வேளை உனக்குத் தண்ணீர் கிடைக்கவில்லையா? இராவணனுடன் போர் செய்து சீதையை அழைத்து வர நீயே தனியாக சென்று விட்டாயா? இல்லை சீதையை சிறை பிடித்த இராவணன், உன்னால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்து உன்னைக் கொன்று விட்டானா? அய்யோ,அப்படி உனக்கு ஏதாவது நேர்ந்து இருந்தால் நானும் எனது உயிரை மாய்த்துக் கொள்வேன். லக்ஷ்மணா, எங்கு இருந்தாலும் வந்து விடு.அண்ணன் நான், உனக்கு ஏதேனும் தவறு இழைத்து இருந்தால் மன்னித்து விடு, ஆனால் இப்படி எல்லாம் விளையாடாதே. நீ எனது கண் மணி அல்லவா?" என்றெல்லாம் புலம்பித் தவித்தார்.

இது ஒரு புறம் இருக்க, அயோமுகியின் கைகளுக்குள் சிக்கிய லக்ஷ்மணன். அந்தச் சோலையின் இன்னொரு பகுதியை அடைந்து, அந்தக் கொடிய அரக்கியின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். அவளது கெடு நடத்தையால் கோபம் கொண்டவன். தனது வாள் கொண்டு, அவளது காதுகள், மூக்கு போன்ற ஏனைய உறுப்புக்களை பிடித்து அறுத்து எறிந்தான். ரத்த வெள்ளத்தில் அந்த அரக்கி தனது உறுப்புக்கள் இழந்த நிலையில் துடித்து அந்த சோலையே அதிரும் படி அலறினாள். அந்தக் குரல் இராமபிரானின் காதுகளிலும் விழுந்தது.

அது கேட்ட இராமபிரான் அதிர்ச்சி அடைந்து அந்தக் குரல் வந்த திசையை நோக்கி நகர்ந்தார். அவ்விடம் லக்ஷ்மணனை இராமர் கண்டார். அதுபோல, தன்னைப் பிரிந்து அதனால் ஸ்ரீ ராமரின் முகத்தில் தோன்றிய கவலையின் குறிகளை லக்ஷ்மணன் கண்டான். உடனே இராமபிரானைப் பார்த்து," ஐயனே வருந்தாதீர்கள்! எனக்கு ஒன்றும் இல்லை" என்று கூறிக் கொண்டு இராமபிரானின் பாதம் பணிந்தான். அவனைக் கட்டித் தழுவிக் கொண்டு," தம்பி! தண்ணீர் எடுக்கச் சென்ற நீ, வெகு நேரமாகியும் திரும்பி வராததால் பலவாறு நினைத்தேன், தவறிப் போய் விட்டாய் என்றே எண்ணி அச்சமுற்றேன். கலங்கித் தவித்தேன். என்னைப் பிரிந்து உன்னால் ஒரு நொடி கூட இருக்க முடியாதே. அப்படிப் பட்ட நீ எங்கே சென்றாய்? " என்றார்.

அது கேட்ட லக்ஷ்மணன் அயோமுகி வந்ததையும், தன்னைக் கவர்ந்து சென்றதையும், அவளது உறுப்புக்களை தான் வெட்டி எரிந்ததையும் உட்பட அனைத்து விவரங்களையும் இராமபிரானிடம் கூறி முடித்தான். அது கேட்டு ஸ்ரீ ராமர் மகிழ்ந்தார்.

பின்பு மீண்டும் தண்ணீர் தாகம் அந்த இருவரையும் தொடர்ந்தது. அப்போது இராமபிரான் வேறு வழி இல்லாமல் அஸ்த்திர தேவதைகளை வணங்கி வாருணாஸ்த்திரத்தைப் பிரயோகித்தார். அந்த அஸ்திரத்தால் இடி முழக்கம் ஏற்பட அந்தச் சோலை முழுவது மழை பொழியத் தொடங்கியது. அதனால் வறண்ட நீர் பகுதிகள் அனைத்தும் நிரம்பியது. அந்நீர் கொண்டு தங்கள் தாகத்தை தீர்த்துக் கொண்டனர், தசரதச் சக்கரவர்தியின் மைந்தர்கள்.

பின்னர், இரவு வேளை இன்னும் இருளை சேர்க்க, லக்ஷ்மணன் சென்று அண்ணன் இராமபிரான் படுத்து உறங்க தளிர்களையும், பூக்களையும் பறித்து வந்து படுக்கை அமைத்தான். அதில் ஸ்ரீ ராமர் படுத்தார். லக்ஷ்மணன் அண்ணனின் திருவடிகளைப் பிடிக்கத் தொடங்கினான். ஆனால், இராமபிரான் சீதையைப் பிரிந்த துயரத்திலேயே சரியாகத் தூங்க முடியாமல் அந்த இரவையும் கழித்தார். அது கண்ட லக்ஷ்மணனும் துயர் கொண்டான். அப்போது அடுத்த நாள் பொழுதும் விடியத் தொடங்கியது.