ஶ்ரீதேவி
வாழ்க்கை வரலாறு
ஶ்ரீதேவி இந்திய திரைபடத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். 1967 ஆம் ஆண்டு ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் பிரபலமான இவர், இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தன்னுடைய நடிப்புத் திறமையினால் அனைவருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் ஶ்ரீதேவி.
பிறப்பு:
ஶ்ரீதேவி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் ஆகஸ்ட் 13, 1963 ஆம் ஆண்டு பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை:
ஶ்ரீதேவி தனது தந்தையை ‘லம்ஹே’ திரைப்பட படப்பிடிப்பின் போதும் மற்றும் தாயை ‘ஜூடாய்’ படப்பிடிப்பின்போதும் இழந்தார். அவருடைய பெற்றோர்களை இளம் பருவத்திலேயே இழந்ததால், சமுதாயத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கவேண்டியதாயிற்று. 1986 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் ஶ்ரீதேவியையும், பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியையும் இணைத்து ஒரு சில வதந்திகள் பரவியது. ஆனால், மிதுன் சக்ரவர்த்தி அவரது மனைவி யோகிதா பாலியை விவாகரத்து செய்யவில்லை என்ற முடிவுக்கு வரவே அந்த பிரச்சனையும் அத்துடன் மறைந்தும்போனது. பின்னர், ஜூன் 2, 1996 ஆம் ஆண்டு ஶ்ரீதேவிக்கும், திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது. ஶ்ரீதேவிக்கு, ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவருடைய திருமணத்திற்கு பிறகு, அவருடைய மைத்துனனான(கணவனுடன் பிறந்த) அனில் கபூருடன் நிறைய படங்கள் நடித்துள்ளார்.
திரைப்பட வாழ்க்கை:
தமிழ் நாட்டில் பிறந்து இந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்கிய ஶ்ரீதேவி, 1967 - ல் ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கதாநாயகியாக இவர் நடித்த முதல் திரைப்படம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1976ல் வெளிவந்த ‘மூன்று முடிச்சு’. ஆரம்ப காலத்தில் கமலஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்களுடன் பல திரைப்படங்களில் நடித்த இவர், பின்னர் மலையாளத் திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். ‘ஆலிங்கனம்’, ‘குட்டவும் சிக்க்ஷையும்’, ‘ஆத்யபாடம்’, ‘ஆ நிமிஷம்’ போன்றவை ஶ்ரீதேவியின் சிறந்த மலையாளத் திரைப்படங்கள் ஆகும்.
பத்மஶ்ரீ விருது:
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிபடுத்திய ஶ்ரீதேவிக்கு, 2013 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று மத்திய அரசால் ‘பத்மஶ்ரீ’ விருது வழங்கப்பட்டது.
விருதுகள்:
-
‘பிலிம்பேர் விருது (தெற்கு)’ - ‘மீண்டும் கோகிலா’ என்ற தமிழ் படத்திற்காக வழங்கப்பட்டது.
-
சிறந்த நடிகைக்கான ‘பிலிம்பேர் விருது’, ‘சால்பாஸ்’ திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
-
சிறந்த நடிகைக்கான ‘பிலிம்பேர் விருது’, ‘லம்ஹே’ திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
-
‘பிலிம்பேர் விருது’, ‘க்ஷன க்ஷனம்’ என்ற தெலுங்கு படத்திற்காக வழங்கப்பட்டது.
-
மற்ற விருதுகள்:
-
‘நந்தி விருது’, ‘க்ஷன க்ஷனம்’ என்ற தெலுங்கு படத்திற்காக வழங்கப்பட்டது.
-
‘MAMI விருது’ இந்தி சினிமாவில் இவருடைய சிறந்த பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது.
-
‘வம்சி ஆர்ட்ஸ் தியேட்டர் இன்டர்நேஷனல்’ மூலமாக ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ கிடைத்தது.
-
‘டொராண்டோ’ சிறந்த நடிகைக்கான விருதினை ‘தேவராகம்‘ படத்திற்காக வழங்கியது.
