வேள்விப் படலம் - 477
இராமபிரான் முனிவன்பால் இன்று
யான்செய்யும் பணி என் எனல்
477.
‘அரிய யான் சொலின். ஐய! நிற்கு
அரியது ஒன்று இல்லை;
பெரிய காரியம் உள; அவை
முடிப்பது பின்னர்;
விரியும் வார் புனல் மருதம் சூழ்
மிதிலையர் கோமான்
புரியும் வேள்வியும். காண்டும் நாம்;
எழுக! என்று. போனார்.
ஐய! அரிய யான்சொலின் - மேலோனே! அரிய செயல் என்று
நான் சொல்வேனானால்; நிற்கு அரியது ஒன்று இல்லை - உனக்குச்
செய்வதற்கு அரியசெயல் எதுவுமே இல்லை (ஆயினும்); பெரிய
காரியம் உள - அரியபெரிய செயல்களும் உள்ளன; அவை முடிப்பது
பின்னர் - அவற்றைச் செய்து முடிக்கத் தக்க காலம் பின்னால் வரப்
போகிறது. (எனவே); வார்புனல் விரியும் - பெருகிவரும்
நீர்நிறைந்துள்ள; மருதம் சூழ்மிதிலையர் கோமான் - மருத நிலங்கள்
சூழ்ந்துள்ள மிதிலை நாட்டின் மன்னனான சனகன்; புரியும்
வேள்வியும் காண்டும் நாம்- செய்கின்ற வேள்வி ஒன்றினையும் நான்
சென்று பார்ப்போம்; எழுக - எழுந்து என்னுடன் வருவீர்களாக;
என்று போனார் - (என்று கூறி அழைத்தேக) மூவரும் சென்றனர்.
சொலின்: சொல்லியன் என்பது தொகுக்கப்பட்டது ‘ஐ’ என்பதற்கு
அழகு என்பதும் பொருள். எனவே ‘ஐய’ என்பதற்கு ‘அழகனே’
என்பதும் பொருந்துவதே. ஒன்று: ஒரு சிறிதும் எனவும் கூறுவர்.
வார்புனல்: பெருகிவரும் நீர். 58
