வேள்விப் படலம் - 473

bookmark

போர்க்களத்தில் நிகழ்ந்தவை

473.

பந்தரைக் கிழித்தன. பரந்த பூ மழை;
அந்தர துந்துமி முகிலின் ஆர்த்தன;
இந்திரன் முதலிய அமரர் ஈண்டினார்.
சுந்தர வில்லியைத் தொழுது வாழ்த்தினார்.
 
பரந்த பூ மழை- தேவர்கள் பொழிந்த மலர்; பந்தரைக்  கிழித்தது
-   பறவைக்  கூட்டப்   பந்தலைக் கிழித்துக் கொண்டு கீழே வீழ்ந்தது;
அந்தர துந்துமி முகிலின்  ஆர்த்தன  -   வானத்திலிருந்து துந்துமி
வாத்தியங்கள்  மேகங்களைப்  போல  முழங்கின;   இந்திரன் முதலிய
அமரர்  ஈண்டினர்  -  இந்திரன் முதலான தேவர்கள்  வானவீதியிலே
வந்து  திரண்டனராய்; சுந்தர  வில்லியைத் தொழுது வாழ்த்தினார் -
அழகிய வில்லாளனாகிய ராமனைத் தொழுது வாழ்த்தினார்கள்.  

கிழித்தன:   கிழித்துக்  கொண்டு  கீழே இறங்கின என்பது பொருள்.
பூமழை:  மழை  மிகுதிப்   பொருளைத்   தந்து  நின்றது.  துந்துமி  -
தேவர்கள்  இசைக்கருவி.   ஈண்டுதல்:   கூடுதல்  (திரள்தல்).  சுந்தரம்:
அழகு. வில்லி: வில்லை உடையவன்.  தொழுது:  வணங்கி. வாழ்த்தினர்:
துதித்தனர்:   அரக்கர்களால்   அல்லலுற்ற   தேவர்கள்   அவ்வல்லல்
தீர்ந்தமையால்  மகிழ்ந்து.  ராமனை  வணங்கி   வாழ்த்தினர்  என்பது
கருத்து.                                                  54