வேள்விப் படலம் - 472
அரக்கர் படை இரிந்து ஓடுதல்
472.
ஓடின அரக்கரை உருமின் வெங் கணை
கூடின; குநைத் தலை மிறைத்துக் கூத்து நின்று
ஆடின; அலகையும். ஐயன் கீர்த்தியைப்
பாடின; பரந்தன. பறவைப் பந்தரே.
ஓடின அரக்கரை - அவ்வாறு பயந்து ஓடிய அரக்கர்களை;
உருமின் வெங்கணை - அவர்களைக் கொல்லுமாறு ராமபிரானால்
ஏவப்பட்ட கொடிய அம்புகள்; கூடின -உரிய இலக்கைப் போய்ச்
சேர்ந்தன; குறைத்தலை - (அதனால் அரக்கர்கள் கொல்லப்பட
அவர்களது குறையுடல்களான கவந்தங்கள்; மிறைத்து நின்று ஆடின -
விறைத்து நின்று ரத்த வெள்ளத்தில் ஆடலாயின; அலகையும் -
பிணங்களை வாரித்தின்ன வந்த பேய்களும்; ஐயன்கீர்த்தியைப்
பாடின - இராமபிரானது வெற்றிப் புகழைப் பாடலாயின; பறவைப்
பந்தர் பரந்தன - பந்தல் போலப் பறவைக் கூட்டம் வானத்தில்
விரிந்தன.
உருமு: இடி. உருமின் வெங்கணை: இடி போன்ற கொடிய அம்பு.
குறைத்தலை: தலை துணிக்கப்பட்ட முண்டம் (கவந்தம்). மிறைத்தல்:
விறைத்தல். அலகை: பேய். ஐயன்:மேலோன்: கீர்த்தி: புகழ். பரந்தல்:
விரிதல். பந்தர்: பந்தர் ஈற்றுப் போலி. 53
