வேள்விப் படலம் - 470

bookmark

இராமபிரான் ஏவிய வாளி

470.

திருமகள் நாயகன் தெய்வ வாளிதான்.
வெருவரு தாடகை பயந்த வீரர்கள்
இருவரில் ஒருவனைக் கடலில் இட்டது; அங்கு
ஒருவனை அந்தகபுரத்தின் உய்த்ததே.
 
திருமகள்  நாயகன்  - இலக்குமி கேள்வனாகிய இராமபிரானுடைய;
தெய்வவாளிதான் -  தெய்வத்தன்மை வாய்ந்த அம்பானது வெரு வரு
தாடகை  பயந்த   -   மூவுலகும்  அஞ்சும்படியான  தாடகை  பெற்ற;
வீரர்கள்  இருவரில்  - வீரர்களான சுபாகு. மாரீசன் என்னும் இரண்டு
பேரில்;  ஒருவனைக் கடலில்  இட்டது  -  ஒருவனான  மாரீசனைக்
கடலில்  தள்ளிவிட்டது;  அங்கு  ஒருவனை  -  மற்றவனான  சுபாகு
என்பவனை;  அந்தக புரத்தில்  உய்த்தது  -  எம்புரியில்  கொண்டு
போய்ச் சேர்த்தது.  

திருமகள்  நாயகன்  திருமால்:  திருவின்   அவதாரமான  ராமனை
இப்பெயரால்  குறிப்பிட்டார். முன்பும் ‘’திருமாலின்  கேள்வன்  என்றது
நினைவுகூரத் தக்கது. தெய்வ வாளி:  தெய்வத்தன்மை  வாய்ந்த  அம்பு.
அந்தகன்:  எமன்.  புரம்:  ஊர். உய்த்தல்:  செலுத்துதல்.  ராமபிரானது
தெய்வத்தன்மை   வாய்ந்த   அம்பு    தாடகையின்     பிள்ளைகளில்
ஒருவனைக்கடலில்   சேர்த்தது.    மற்றொருவனை    அந்தகனூர்க்குக்
கொண்டு போய்ச் சேர்த்தது என்பது கருத்து.                     51