வேள்விப் படலம் - 469
இராமபிரான் அரக்கரொடு பொருதல்
469.
கவித்தனன் கரதலம்; ‘கலங்கலீர்’ என.
செவித்தலம் நிறுத்தினன். சிலையின் தெய்வ நாண்;
புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினன்;
குவித்தனன். அரக்கர்தம் சிரத்தின் குன்றமே.
கலங்கலீர் என - முனிவர்களே! கலக்கமுறாதீர்கள் என்று கூறி;
கரதலம் கவித்தனன் - கைகளைக் கவித்து அவர்களை அமர்த்திய
இராமபிரான்; சிலையின் தெய்வ நாண் - தனது வில்லின்
தெய்வீகமான நாணை; செவித்தலம் நிறுத்தினன் - காதுவரை இழுத்து
நிறுத்தினவனாய்; புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினான் -
அந்தக் காட்டினையே இரத்தக் கடலாக்கினவனாய்; அரக்கர் தம்
சிரத்தின் குன்றம் குவித்தனன் - அரக்கர்களின் தலைகளை
மலையாகக் குவித்து விட்டான்.
கவித்தல்: அமர்த்தல். கரதலம்: உள்ளங்கை. செவித்தலம்: இரு
பெயரொட்டுப் பண்புத் தொகை. நாண்: கயிறு. குருதி: இரத்தம். புணரி:
கடல். சிரத்தின் குன்றம்: உருவகம் கலங்காதீர்கள் எனக் கூறி.
கையமர்த்தி வில்லின் நாணைக் காதுவரை இழுத்து நிறுத்தி - அந்தக்
காட்டையே இரத்தக் கடலாக்கி - அரக்கர்களின் தலை மலைகளைக்
குவித்துவிட்டான் இராமபிரான் என்பது கருத்து. 50
