வேள்விப் படலம் - 466
இலக்குவன் இராமபிரானிடம் கூறுதல்
466.
கண்ட அக் குமரனும். கடைக் கண் தீ உக.
விண்தனை நோக்கி. தன் வில்லை நோக்கினான்;
‘அண்டர் நாயக! இனிக் காண்டி. ஈண்டு அவர்
துண்டம் வீழ்வன’ என. தொழுது சொல்லினான்.
கண்ட அக்குமரனும் - இராமபிரான் காட்டக் கண்ட அந்த
இளையவனான இலக்குவனும்; கடைக் கண்ட தீ உக - கடைக்
கண்களிலே தீ சிதறும்படியாக; விண்தனை நோக்கி - வானத்தையும்
பார்த்து; தன் வில்லை நோக்கினான் - தனது வில்லையும் பார்த்தான்
(பின்பு); அண்டர் நாயக - (இராமனைப் பார்த்து) தேவர்களுக்குத்
தலைவனே!; இனி வீழ்வன இவர் துன்டம் - இனி. கீழே வீழ்வது
இவர்களுடைய உடலின் துண்டங்களே; ஈண்டு காண்டி - இப்போதே
காண்பாயாக; என. தொழுது சொல்லினான் - என்று இராமனை
வணங்கிக் கூறினான்.
அக்குமரன்: இளையவன். ‘கடைக்கண்’: கண்கடை சொல் மாற்று.
உக: கக்க. அண்டர்: தேவர்கள். துண்டம்: சிதைந்த துணுக்கு.
‘வீழ்வன’ வினையாலணையும் பெயர். விண்தனை: ‘தன்’ அசை
விண்ணை நோக்கி. வில்லையும் நோக்கினான் என்பது இராமன்
ஆணையை எதிர்நோக்கி நின்றான் என்க. 47
