வேள்விப் படலம் - 450

bookmark

450.

‘’கட்டுரையின். தம கைத்து உள போழ்தே
இட்டு. இசைகொண்டு. அறன் எய்த முயன்றோர்
உள் தெறு வெம் பகைஆவது உலோபம்;
‘விட்டிடல்’ என்று விலக்கினர் தாமே.’
 
தமகைத்து உள போழ்தே- தமது செல்வம் இருக்கும்  காலத்திலே;
இட்டு  இசை  கொண்டு - இரப்போர்க்கு ஈந்து புகழ் பெற்று:  அறன்
எய்த  முயன்றோர் - அறத்தை அடைய முயல்பவர்களான அறவாளர்;
உள்தெறு வெம்பகை  யாவது  உலோபம்  -   மனத்தை  அழிக்கும்
கொடிய பகையாய் இருப்பது உலோப குணமாகும்;  விட்டிடல் என்று -
(அதனை) விட்டுவிட வேண்டும் என்று; தாம் கட்டுரையின் விலக்கினர்
- (மேலோர்) நீதி நூல்களில் விளக்கிக் கூறியுள்ளனர். 

கட்டுரை:  நீதி  நூல்  (வரையறுத்த  உரைகள்  என்பது  பொருள்.)
கைத்து: பொருள் (செல்வம்). இட்டு: இரப்போர்க்குக் கொடுத்து.    இசை:
புகழ். முயன்றோர்: வினையாலணையும் பெயர். உள்தெறு:   உள்ளத்தை
அழித்து.   உலோபம்:   ஈகையின்மை  (உளப்பரும்    பிணிப்பு  அரு
உலோபம்  ஒன்றுமே  அளப்பருங்குணங்களை அழிக்குமாறு   போல் -
எனத் தாடகை  வதைப்படலத்தும்  கூறுவது  நினைவு     கூரத்தக்கது.
விட்டிடல்:   விட்டு   விடுக.  அல்லீற்று  வியங்கோள்    வினைமுற்று.
செல்வம்  இருக்கும்  போதே  ஏற்பவர்களுக்கு ஈந்து புகழ்   பெற வாழ
வேண்டும்.  உள்ளத்தை அழிக்கும் கொடிய பகை உலோபம்.   அதனை
விட்டொழிக்க  வேண்டும்  என்பதே  நீதி நூல்களின் துணிவு   என்பது
கருத்து.                                                   31