வேள்விப் படலம் - 449
449.
‘’அடுப்ப வரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர்;
கொடுப்பவர் முன்பு. ‘கொடேல்’ என நின்று.
தடுப்பவரே பகை; தம்மையும் அன்னார்
கெடுப்பவர்; அன்னது ஓர் கேடு இலை’’ என்றான்.
அடுப்ப அரும்பழி செய்ஞ்ஞரும் அல்லர்- பிறர் அழியும்படி
பழிச்செயல் செய்யும் தீத்தொழிலுடையோர் பகைவரல்லர்;
கொடுப்பவர் முன்பு - கொடுப்பவருக்கு எதிரே நின்று கொண்டு;
கொடேல் என நின்று தடுப்பவரே பகை - கொடுக்காதே என்று
கூறித் தடுப்பவரே பகைவராவார்; அன்னார் தம்மையும் கெடுப்பவர்
- அத்தகையோர் கொள்வாரையும் கொடுப்பாரையுமல்லாது தம்மையும்
கெடுத்துக் கொள்பவரே ஆவர்; அன்னது ஓர் கேடு இலை என்றான்
- (ஈவது விலக்கும்) அதனை ஒத்த கேடு வேறில்லை என்றான்.
அடுப்ப: கெட. பழி: பாவச் செயல். செய்ஞ்ஞர்: செய்வோர்.
கொடேல்: எதிர்மறை வியங்கோள். அன்னது: போன்றது. அன்னர்:
அத்தகையோர். இலை: இல்லை என்பதன் இடைக்குறை.
பழிபாவங்களைச் செய்வோர் பகைவரல்லர். கொடுப்பதைத் தடுப்பவரே
பகைவராவார். கொள்வோரையும். கொடுப்போரையும் அல்லாது
தடுப்போர் தம்மையே கெடுத்துக் கொள்வோராவார் என்பது கருத்து. 30
