வேள்விப் படலம் - 436

bookmark

மாவலி வரலாறு (436-452)

மாவலி மூன்றுலகும் வௌவுதல்

436.

‘ஆனவன் இங்கு உறைகின்ற அந்நாள்வாய்
ஊனம் இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண்
ஏனம் எனும் திறல் மாவலி என்பான்.
வானமும் வையமும் வவ்வுதல் செய்தான்;
 
ஆனவன்  இங்கு  உறைகின்ற  அந்நாள்வாய்  -    அத்தகைய
திருமால்   இங்கு  வாழ்ந்து  வருகின்ற  அந்தக்  காலத்திலே;  ஊனம்
இல்ஞாலம் ஒடுங்கும்  எயிற்று  -  குற்றமற்ற  இவ்வுலகம்  ஒடுங்கத்
தகுந்த   இரு  பற்களை   உடைய;   ஆண்  ஏனம் எனும் திறல் -
ஆதிவராகத்தோடு ஒப்பு  கூறத்தக்கவன்  இவனே  என்னுமாறு; மாவலி
என்பான் - மகா பலி  என்னும் பெயருடைய  அசுரர்குலத்  தலைவன்;
வானமும்  வையமும்   -   விண்ணுலகத்தையும்.  மண்ணுலகத்தையும்.
வவ்வுதல் செய்தான்- கவர்ந்து தனக்குரியதாக்கிக் கொண்டான்.

ஆன+அவன்:  ஆனவன் அகரம்   தொக்கது. ‘அந்நாள்வாய்’ இதில்
‘வாய்’  ஏழனுருபு.  ஊனம்:  குறைபாடு.    ‘எயிறு’ இங்குப் பற்களாகும்.
‘ஞாலம்  ஒடுங்கும் எயிற்று ஆண் ஏனம்’  உலகத்தைத் தனது ஒற்றைக்
கொம்பிலே   தாங்கிய  வராக   மூர்த்தியை  இவ்வாறு  சிறப்பிக்கிறார்.
‘’பன்றியால்  படி  எடுத்த பாழியான்’’  என்பர்; அது உன். வென்றியார்
உன்னெயிற்றின்  மென்துகள்  போன்று  இருந்ததால்’’  என்ற அஷ்டப்
பிரபந்தப் பாடல் ஒப்பிடத் தக்கதாம். வையம்: பூமி.

ஆதிவராகத்தை  ஒத்த   வலிமைபடைத்த  மகாபலி.  விண்ணையும்.
மண்ணையும் கவர்ந்த தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டான் என்க.   17