வேள்விப் படலம் - 434
சித்தாச்சிரமத்தின் பெருமை
434.
‘தங்கள் நாயகரின் தெய்வம்
தான் பிறிது இலை’ என்று எண்ணும்
மங்கைமார் சிந்தை போலத்
தூயது; மற்றும் கேளாய்;
எங்கள் நான்மறைக்கும். தேவர்
அறிவிற்கும். பிறர்க்கும். எட்டாச்
செங் கண் மால் இருந்து. மேல்நாள்
செய் தவம் செய்தது அன்றே.
தங்கள் நாயகரின் தெய்வம் தான்பிறிது இலை - தங்களது
கணவரைக் காட்டிலும் தெய்வம் வேறுஇல்லை; என்றெண்ணும்
மங்கைமார்- என்று கருதும் பெண்ணரசிகளது; சிந்தை போலத் தூயது
- மனத்தைப்போல (இச்சோலை) தூய்மையானது; மற்றும் கேளாய் -
பின்னும் சொல்லுகிறேன் கேட்பாயாக; எங்கள் நான் மறைக்கும் -
எங்களுடைய நான்கு வேதங்களுக்கும்; தேவர் அறிவிற்கும் -
தேவர்களின் நுட்பமான அறிவுக்கும்; பிறர்க்கும் எட்டாச்
செங்கண்மால் - மற்றவர்களுக்கும் (உள்ளம். உரை) செயல்களால்
எட்டமுடியாத திருமால்; இருந்து மேல் நாள் - இங்குத் தங்கி முன்
ஒரு காலத்திலே; செய்தவம் செய்ததன்றே - செம்மையான தவத்தைச்
செய்த இடமல்லவா?
நாயகன்: தலைவன். கணவன். ‘மங்கை’ பருவப் பெயரேயாயினும்
பெண்களைப் பொதுவாக இப்பெயரில் குறிப்பிடுவது மரபு. மார்:
பலர்பால் விகுதி. சிந்தை: மனம். ‘எங்கள் நான்மறை’ என்றது.
அறநெறி நிற்கும் அறிவுடையோர்க்கு உரியது என்பதை உணர்த்தி
நின்றது. எட்டா: எட்டாத (ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்).
எட்டு: பகுதி. செங்கண்மால் தவம் செய்த சிறப்புடையது இச்சோலை
என்றானென்க. அன்றே: அல்லவா என்பது பொருள். அசை எனினும்
பொருந்தும். 15
